அத்தியாயம் 13
ஒன்றரை வருடங்களுக்கு முன்… சரியாக சொல்ல வேண்டும் என்றால் பிரகதீஷ்வரன், வல்லபியின் ஈஷுவாகவும், வல்லபி, பிரகதீஷ்வரனின் லபியாகவும் இருந்த சமயம் அது. இருவரும் அப்போதெல்லாம் ஒன்றாக தான் சுற்றித் திரிவர். சண்டையும் நக்கலுமாக அவர்களின் நாட்கள் அழகாகவே சென்றன.
இருவரின் போக்கை பார்த்த பெற்றவர்கள், அவர்களை நிரந்தரமாக சேர்ப்பதற்கான வேலையை ஆரம்பிக்க, விதி இருவரையும் தற்காலிகமாக பிரிக்க, கட்டம் கட்டியது.
அப்போது, பிரகதீஷ்வரன் உதவி காவல் ஆணையராக பொறுப்பேற்று சில மாதங்கள் கழிந்திருக்க, வல்லபி தேர்வுகளை முடித்துவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தாள்.
பிரகதீஷ்வரன் வழக்கு ஒன்றில் மூழ்கிப் போக, வல்லபியும் எப்போதும் போல அவனுக்கு தன்னாலான சிறு சிறு உதவிகளை செய்தாள்.
அந்த வழக்கு, ஒரு பெண்ணின் தற்கொலை வழக்காகும். தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் அவளின் காதலன் தான் என்று கடிதத்தில் குறிப்பிட்டே இறந்திருந்தாள் அந்த பெண்.
அந்த காதலனை கைது செய்வது அத்தனை கடினமானதாக இல்லை. அதுவும், இதற்கு முன்னர், சிக்கலான வழக்கை முடித்து மேலதிகாரியிடம் இருந்து பாராட்டு பெற்றிருந்த பிரகதீஷ்வரனுக்கு, வெகு சுலபமாகவே இருந்தது இந்த வழக்கு.
ஆனால், ஏதோ குழப்பத்தில் இருப்பதை போல, தலையில் கைவைத்து அவன் அமர்ந்திருக்க, அங்கு வந்த வல்லபியோ, “ஈஷு, இதெல்லாம் ஒரு கேஸா? இதோ விக்டிம் எழுதி வச்ச லெட்டர் ஆதாரமா இருக்கு. அது போக, அக்யூஸ்ட்டை பிடிச்சாச்சு. வேற என்ன? ஏன் இந்த குழப்பம்?” என்று வினவினாள்.
தனக்கே தெளிவாக தெரியாத விஷயத்தை அவளிடம் பகிர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த பிரகதீஷ்வரனோ, “ம்ம்ம், ஒன்னுமில்ல லபி. கீழ என்ன சத்தம்? திரும்ப அம்மா கூட சண்டையா?” என்று பேச்சை மாற்றினான்.
அப்போதே அவளிடம் சொல்லியிருந்தால், பின்னால் ஏற்படப்போகும் சண்டை இல்லாமல் இருந்திருக்குமோ?
“அது எனக்கும் அத்தைக்கும் இருக்க சண்டை. யாரும் குறுக்க வர வேண்டாம்.” என்று குறும்பாக கூறியவள், சில நிமிடங்கள் பேசி விட்டே சென்றாள்.
அடுத்து அவர்களின் சந்திப்பே சண்டையில் தான் துவங்கியது.
காரணம், அந்த பெண் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்து விட்டான் பிரகதீஷ்வரன். அப்பெண்ணின் காதலன் பற்றி எந்த இடத்திலும் அவன் குறிப்பிடவில்லை என்பதே அவர்களின் சண்டைக்கான மூலக்காரணம்.
“ஈஷு, என்ன இது? அதான் சூசைட் லெட்டர்ல தெளிவா இருந்துச்சே, அந்த பொண்ணோட லவர் தான் காரணம்னு. என்ன விஷயம்னு விசாரிக்காம, இப்படி டிப்ரெஷனால சூசைட்னு எதுக்கு கேஸை க்ளோஸ் பண்ணியிருக்கீங்க.” என்று கோபமாக கேட்டாள் வல்லபி.
“லெட்டர்ல இருக்க எல்லாமே உண்மையாகிடுமா லபி? சூசைட் கேஸா இருந்தா, அது லவ் ஃபெயிலரா தான் இருக்கணும்னு அவசியம் இல்ல. அதே மாதிரி, ஒரு பொண்ணு இறந்தா, அதுக்கு காரணம் பையனா தான் இருக்கணும்னும் இல்ல.” என்று ஏதோ கூற வருவதற்கு முன், அவனை தடுத்த வல்லபி ஆத்திரத்தில், “போதும் ஈஷு, நீங்களும் மத்தவங்க மாதிரி காசு வாங்கிட்டு அக்யூஸ்ட்டை வெளிய விட ஆரம்பிச்சுட்டீங்களோ? எவ்ளோ கொடுத்தான் அவன்?” என்று பேச, “ஸ்டாப் இட்! இது என் கேஸ். என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.” என்று பிரகதீஷ்வரனும் கோபத்தில் வாயை விட்டான்.
“ஓஹ், நீங்க இப்போ ஏசிபி பிரகதீஷ்வரனோ? சாரி சார், உங்களை கேள்வி கேட்க நான் யாரு?” என்று விரக்தியாக கூறியவள், அங்கிருந்து வெளியேற முற்பட, “ப்ச், லபி, நில்லு. நான் என்ன நடந்துச்சுன்னு சொல்றேன். என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று பலவாறு கேட்டும், பதில் சொல்லாமல் சென்று விட்டாள்.
வீட்டிற்கு சென்றவள், இதில் அவளின் தந்தைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து, அவரிடமும் சண்டையிட்டு, இதுவரையிலும் சரியாக பேசாமல் இருக்கிறாள்.
*****
இப்போது நினைத்து பார்க்கும்போது, அன்று தான் அவன் கூற வந்ததை கேட்டிருக்க வேண்டுமோ என்று தோன்றியது.
மேலும், இந்த இடைபட்ட காலத்தில், சில வழக்குகளை கையாண்டியருந்ததால், ஒருவேளை அந்த கடிதத்தில் இருந்தது பொய்யாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் இப்போது எழுந்தது.
அவளின் சிந்தனையை கலைக்கும் விதமாக அலைபேசி ஒலிக்க, பிரகாஷிடம் இருந்து வந்திருந்த அழைப்பை ஏற்றவளுக்கு மறுமுனையில் அவன் கூறிய செய்தி அதிர்ச்சியாக தான் இருந்தது.
உடனே, கலந்துரையாடல் அறைக்கு சென்றவள், அங்கு பிரகதீஷ்வரனும் நிர்மலமான முகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவன் புறம் பார்வையை திருப்பாமல் அமர்ந்து கொண்டாள்.
“மேம், அந்த வெப்சைட் டீடெயில்ஸ் குடுத்துட்டாங்க. கிராஸ்-வெரிஃபை பண்ணப்போ, மகதியை பத்தி அதிகமா கேட்டது சாத்விக்னு தெரிஞ்சுது.” என்றான் பிரகாஷ்.
“மகதி தான்னு தெரிஞ்சு கேட்டானா? அவனுக்கு முன்னாடியே மகதியை தெரியுமா?” என்று வல்லபி வினவ, “அது தெரியல மேம். ஆனா, அவனை விசாரணைக்கு கூட்டிட்டு வர டான்ஸ் ஸ்டுடியோக்கு போனவங்க, அவன் அங்க இல்லன்னு இப்போ தகவல் குடுத்துருக்காங்க.” என்றான்.
“சோ, சந்தோஷ் கைது செய்யப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் அவன் தலைமறைவாகிட்டானா?” என்று வல்லபி வினவ, “சந்தோஷ் அனுப்புன மெசேஜ் பார்த்தே அவன் எஸ்கேப்பாகிட்டான்.” என்ற பிரகதீஷ்வரனோ அப்போதும் வல்லபியை நேராக பார்க்கவில்லை.
சந்தோஷின் அலைபேசியையும் தனக்கு எதிரே இருந்த அவளிடம் தராமல், அருகே இருந்த ஜெகதீஷிடம் கொடுத்து கண்ணைக் காட்ட, அவனும் ஒன்றும் புரியாமல், அதை வாங்கி வல்லபியிடம் கொடுத்தான்.
அதை முறைப்புடனே வாங்கி பார்வையிட்டாள் வல்லபி.
இப்போது ஜெகதீஷுக்கும் பிரகாஷுக்கும் வழக்கின் போக்கை விட, தங்களின் மேலதிகாரிகளின் நடவடிக்கை தான் குழப்பத்தை தந்தது.
‘இவ்ளோ நேரம் நல்லா தான பேசுனாங்க. இப்போ என்னாச்சு?’ என்று இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தனர்.
சந்தோஷ் சாத்விக்குக்கு அனுப்பியிருந்த செய்திகளை பார்வையிட்ட வல்லபியோ, “இப்போ என்ன சொல்லி தப்பிக்குறான்னு பார்க்குறேன்.” என்றபடி மீண்டும் சந்தோஷை விசாரிக்க சென்றாள்.
*****
அந்த அறையின் நடுவே போடப்பட்டிருந்த நாற்காலியில் தலை குனிந்து அமர்ந்திருந்த சந்தோஷ், உள்ளே வல்லபி நுழையும் அரவத்தில் நிமிர்ந்து பார்த்தான்.
“அடுத்து என்ன கதை சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா சந்தோஷ்?” என்றபடி அவனுக்கு எதிரே அமர்ந்த வல்லபி, “இப்போ பழைய கேள்விகளையும் அதுக்கு நீங்க சொன்ன கதையையும் மறந்துடுவோம். புதுசா ஆரம்பிப்போம். சாத்விக்குக்கும் உங்களுக்கும் எவ்ளோ தூரம் பழக்கம்?” என்று கேட்டாள்.
அதைக் கேட்டதும் சந்தோஷின் உடலில் அதிர்வு தோன்றி மறைய, அதை வல்லபியும் வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த பிரகதீஷ்வரனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.
தன்னை நிலைப்படுத்திக் கொண்ட சந்தோஷ், “மேம், எவ்ளோ தூரம்னா என்ன சொல்ல? நான் அந்த இடத்தோட ஓனர். சோ, ரென்ட் வாங்க போறப்போ பேசிப்போம். அதை தவிர, நானும் அவங்க கூட அப்பப்போ டான்ஸ் ஆடுவேன். அப்படி தான் பழக்கம். ரொம்ப க்ளோஸ் எல்லாம் இல்ல.” என்று கூறினான்.
“ஓஹ், ரொம்ப க்ளோஸ் இல்ல. ஆனா, போலீஸ் உங்களை விசாரிக்க வருவாங்கங்கிறதை சாத்விக்குக்கு மட்டும் சொல்ற அளவுக்கு க்ளோஸ், அப்படி தான?” என்றவள் அவன் அலைபேசியை அவனிடம் காட்ட, தான் அனுப்பிய செய்தியை அழிக்க மறந்த மடத்தனத்தை எண்ணி மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.
“போலீஸ் நியரிங் அஸ்!” என்ற மூன்றே வார்த்தைகளில் மாட்டிக் கொண்டான் சந்தோஷ்.
“இப்போ சொல்லலாமே!” என்று வல்லபி கூற, அவன் எதுவும் கூறாமல் தலை குனிந்து கொண்டான்.
“சந்தோஷ், நீங்க அமைதியா இருந்து யாரைக் காப்பாத்த போறீங்க? ஸ்பீக் அவுட்! சாத்விக்கும் நீங்களும் சேர்ந்து தான இந்த ரெண்டு கொலைகளையும் செஞ்சீங்க?” என்றாள்.
அதற்கு மட்டும் உடனே, “நான் மகதியை கொலை செய்யல.” என்று மீண்டும் அதே பல்லவியை பாட, அப்போது பிரகதீஷ்வரன், வல்லபியின் செவிகளில் பொருத்தியிருந்த ஊடலையின் வழியே, “அப்போ ஆராதியாவை கொன்னது இவன் தானான்னு கேளு.” என்றான்.
அதைக் கேட்ட வல்லபி ஒருநொடி அதிர்ந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “சரி, நீங்க மகதியை கொல்லல. அப்படின்னா, ஆராதியாவை கொன்னது நீங்க தான?” என்று வினவ, அப்பட்டமான திகைப்பு சந்தோஷிடம்.
“சொல்லுங்க சந்தோஷ், ஆராதியாவை கொன்னது நீங்க தான?” என்று மீண்டும் வல்லபி கேட்க, இப்போதும் மௌனத்தை துணைக்கு அழைத்துக் கொண்டான் சந்தோஷ்.
அவள் மேலும் விசாரிக்கும் முன், “கம் அவுட்.” என்று பிரகதீஷ்வரனிடம் இருந்து கட்டளை வர, ‘ப்ச், என் இன்வெஸ்டிகேஷனை இன்ட்ரப்ட் பண்றதே இவனுக்கு வேலையா போச்சு!’ என்று மனதிற்குள் அவனை திட்டியபடி வெளியே வந்தாள் வல்லபி.
*****
அங்கே மற்ற மூவரும் குழுமியிருக்க, உள்ளே நுழைந்த வல்லபி, “இப்போ என்னாச்சு?” என்றாள்.
“மேம், மகதியோட மொபைல் பர்சேஸ் பத்தி விசாரிக்க சொல்லியிருந்தேன். அது, சந்தோஷோட சொந்த ஊர்ல இருக்க ஷோ-ரூம்ல தான் பர்சேஸ் பண்ணியிருக்காங்க. அப்பறம், அந்த மொபைல்ல இருந்து போன கால்ஸோட லொகேஷன் டிராக் பண்ணதுல, சில கால்ஸ் மகதியோட காலேஜ்ல இருந்து போயிருந்தாலும், பல கால்ஸ் சந்தோஷ் கரண்ட்டா இருக்க அட்ரஸ்ல இருந்து தான் போயிருக்கு.” என்று விளக்கினான் ஜெகதீஷ்.
“என்ன? அப்போ அந்த மொபைல் மகதியோடது இல்லையா? அப்போ இந்த சந்தோஷ் தான் ருத்ராவா ஆராதியாவோட பேசியிருக்கானா?” என்று அதிர்ந்தாள் வல்லபி.
சற்று நேரம் அங்கு அமைதி நிலவ, “சந்தோஷ் ஆராதியாவை பெயரை மறைச்சு லவ் பண்ணியிருந்தா, எதுக்கு கொலை செய்யணும்?” என்று வல்லபி சத்தமாகவே யோசித்தாள்.
“மேபி, சந்தோஷ் தான் ருத்ரான்னு தெரிஞ்சதும், ஆராதியா அவனோட லவ்வை அக்செப்ட் பண்ணியிருக்க மாட்டா. அதனால, இந்த கொலை நடந்திருக்கலாம். ஆனா, இது அசம்ப்ஷன் மட்டும் தான். உண்மையான காரணத்தை சந்தோஷ் தான் சொல்லணும்.” என்றான் பிரகதீஷ்வரன்.
“ஷிட், அப்போ அந்த பொண்ணுங்க லெஸ்பியன்ஸ்னு ஆதாரம் காட்டுனதெல்லாம் பொய்யா? அவங்க பக்கம் கேஸ் திரும்பக் கூடாதுன்னு எவ்ளோ தெளிவா, இப்படி செட் பண்ணி நம்மள குழப்ப முயற்சி செஞ்சுருக்காங்க!” என்று பொறுமினாள் வல்லபி.
இன்னமும், அவளுக்கு அந்த பெண்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லையே!
இப்போது அதுவே பொய் என்று தெரிய வரும்போது?
‘நல்லவேளை, இந்த விஷயம் மீடியாக்கு தெரியல. இல்லன்னா, இதையும் டிரெண்ட்டாக்கி, அந்த பொண்ணுங்க மட்டுமில்லாம அவங்க பெத்தவங்க மானத்தையும் வாங்கியிருப்பாங்க.’ என்ற நிம்மதி மட்டுமே அவளுக்கு!
பிரகதீஷ்வரனும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
அப்போது கோபம் குறையாத வல்லபியோ, “பிரகாஷ், உள்ள இருக்க சிசிடிவியை ஆஃப் பண்ணுங்க.” என்று கூறிக் கொண்டே சந்தோஷ் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
“ராஸ்கல், எவ்ளோ தைரியம் இருந்தா, கொலையும் பண்ணி, அதை மறைக்க ரெண்டு பொண்ணுங்க பேரையும் கெடுக்குற மாதிரி தடயங்களை மாத்தி வச்சு எங்களையும் குழப்பி இருப்பீங்க?” என்று கேட்டபடி எதிரிலிருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
அதைக் கண்ட பிரகதீஷ்வரன் இம்முறை அவளை தடுக்கவில்லை.
ஏனெனில், அதே கோபம் அவனுக்குள்ளும் இருக்கிறதே!
அறையை வாங்கிக்கொண்ட சந்தோஷோ, இப்போதும் பேசாமல் மௌனம் சாதிக்க, “வாயை திறந்து பதில் சொல்லு டா.” என்று கத்தினாள் வல்லபி.
அவன் ஏதோ சொல்லப் போக, அப்போது தான் அந்த அறையின் கதவிலிருந்த சிறு கண்ணாடி வழியே எதையோ பார்த்தவன், “ஆமா, நான் தான் ருத்ராவா நடிச்சு ஆராதியாவை லவ் பண்ணேன். அதுக்காக நான் அவளை கொலை பண்ணேன்னு எப்படி சொல்லுவீங்க? உங்க கிட்ட ஆதாரம் இருக்கா?” என்று கேட்டான்.
அவன் உடல்மொழியில் திடீரென்று ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் தெரியாமல் வல்லபி குழம்ப, அவன் மீதே பார்வை செலுத்தியிருந்த பிரகதீஷ்வரன், சந்தோஷின் பார்வை கதவில் படிந்து மீண்டதை கணித்து, சிசிடிவியில் பார்க்க, அங்கு சாத்விக் உள்ளே அழைத்து வரப்படும் காட்சி தெரிந்தது.
ஏதோ யோசித்தவன், “ஜெகா, மகதி வீட்டுக்கு போற வழியில இருக்க சிசிடிவியை மறுபடி செக் பண்ணுங்க. ஏதாவது வெஹிக்கில், ரெண்டு முறைக்கு மேல அப் அண்ட் டவுன் போகுதான்னு.” என்ற பிரகதீஷ்வரன் சாத்விக்கை விசாரிக்க சென்றான்.
*****
சாத்விக் அவனின் நண்பனின் வீட்டில் தான் பதுங்கியிருந்தான். துரதிர்ஷ்டவசமாக, அத்தனை நேரம் அணைத்து வைத்திருந்த அலைபேசியை உயிர்ப்பித்து தான் இருக்கும் இடத்தை யாருக்கோ கூற, அதற்காகவே காத்திருந்த காவலர்கள் அவன் அலைபேசியை டிராக் செய்து அவன் இருப்பிடத்தை கண்டு கொண்டனர்.
இப்படி அழைத்து வரப்பட்ட சாத்விக்கோ, தான் அந்த கொலைகளுக்கு காரணம் இல்லை என்று கூறியபடியே இருந்தான்.
“ப்ச், என்னை எதுக்கு இங்க இழுத்துட்டு வந்துருக்கீங்க? எனக்கும் இந்த கொலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்லிட்டே இருக்கேனே.” என்று கத்தியபடி இருந்த சாத்விக்கை நோக்கி நடந்து வந்த பிரகதீஷ்வரனோ, “உங்களுக்கு சம்பந்தம் இல்லன்னா, அது விசாரணைல தெரியப் போகுது. அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷனாகுறீங்க, சாத்விக்?” என்று வினவினான்.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சாத்விக் விழிக்க, அவனை வேறொரு அறைக்கு தனியே அழைத்துச் சென்றான் பிரகதீஷ்வரன்.
சாத்விக்கை நாற்காலியில் அமர சொன்னவன், “சொல்லுங்க சாத்விக், எங்களுக்கு தெரியாம நீங்க இன்னும் என்னென்ன செஞ்சுருக்கீங்க?” என்று வினவினான்.
“சார், எனக்கு புரியல. எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிட்டேனே. இப்போ எதுக்கு இந்த இன்வெஸ்டிகேஷன்? நான் கொலை செஞ்சேன்னு போலீஸ் சொல்லி என்னை கூட்டிட்டு வந்துருக்காங்க. அதுக்கு என்ன ஆதாரம் உங்ககிட்ட இருக்கு?” என்று எரிச்சலாக வினவினான் சாத்விக்.
கிட்டத்தட்ட சந்தோஷ் உதிர்த்த அதே வார்த்தைகள், தோரணையில் மட்டுமே மாற்றம் இருந்தது.
‘சோ, இப்படி கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லணும்னு ஏற்கனவே பிளான் பண்ணியிருக்காங்க. இவங்க ரெண்டு பேரு மட்டுமா, இல்ல வேற யாரும் இருக்காங்களா? அப்படி இருந்தா, இவங்க ரெண்டு பேரும் யாரைக் காப்பாத்த இவ்ளோ முயற்சி பண்றாங்க?’ என்று உள்ளுக்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தாலும், வெளியே விசாரணையை தொடர்ந்து கொண்டு தான் இருந்தான் பிரகதீஷ்வரன்.
“ஓஹ், அப்போ எங்ககிட்ட ஆதாரம் இல்லன்னு உங்களுக்கு தெரியும். அவ்ளோ தெளிவா பிளான் பண்ணி கொலைகளை பண்ணியிருக்கீங்க, அப்படி தான? உங்க டான்ஸ் ஸ்டுடியோல கிடைச்ச கத்தில ஃபிங்கர்பிரிண்ட்ஸை துடைச்சு பதுக்கி வச்சது மாதிரி!” என்று பிரகதீஷ்வரன் கூற, சாத்விக்குக்கு வியர்க்க ஆரம்பித்தது.
எனினும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியல.” என்றான்.
“போக போக புரியும். சரி, மகதியை உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று வினவினான்.
“மகதியா… அது வந்து… சந்தோஷ் ஃபிரெண்டு… அப்படி தெரியும்.” என்று திக்கினான் சாத்விக்.
ஆராதியாவை பற்றி வினவியிருந்தால் தடுமாறாமல், மனப்பாடம் செய்து வைத்தது போல ஒப்பித்திருப்பானோ என்னவோ!
“என்ன சாத்விக் இவ்ளோ தடுமாற்றம்? என்ன சொன்னீங்க சந்தோஷட ஃபிரெண்டா தெரியுமா? சந்தோஷ் கிட்ட விசாரிச்சா, நீங்க ரொம்ப எல்லாம் க்ளோஸ் இல்லன்னு சொல்றாரு. நீங்க என்னன்னா, அவரோட ஃபிரெண்டான மகதியை தெரியும்னு சொல்றீங்க?” என்று பிரகதீஷ்வரன் கிடுக்குப்பிடி போட, பயத்தில் எச்சில் விழுங்கினான் சாத்விக்.
அவனை நோக்கி கேலிச்சிரிப்பை வெளியிட்ட பிரகதீஷ்வரனோ, “நான் சொல்லவா எப்படி தெரியும்னு?” என்று பல்லைக் கடித்துக் கொண்டே கூறியவன், சாத்விக் அந்த அடல்ட் வெப்சைட்டுக்கு ‘மகதி தான் வேண்டும்’ என்று அனுப்பியிருந்த செய்தியை காட்டினான்.
அதைக் கண்டதும், ‘இது எப்படி வெளியே தெரிந்தது?’ என்று விதிர்விதிர்த்து போன சாத்விக் பயத்தில் விழிக்க, “பரதேசி நாயே, பார்க்குறது கருமம், இதுல உனக்கு டிமாண்ட் வேறயா?” என்று கேட்டு கன்னம் பழுக்க அடித்தான் பிரகதீஷ்வரன்.
இதை வெளியே இருந்து பார்த்த ஜெகதீஷோ அவசரமாக சிசிடிவியை அணைத்து வைத்தபடி, “உன் மேம் ஆச்சும் சொல்லிட்டு போனாங்க. சாரை பார்த்தியா?” என்று பிரகாஷிடம் கூறினான்.
இங்கு சாத்விக்கோ, “சார் பிளீஸ் சார், தெரியாம பண்ணிட்டேன்.” என்று கதறினான்.
அடிப்பதை நிறுத்திய பிரகதீஷ்வரன், “சொல்லுங்க மிஸ்டர். சாத்விக். மகதியை உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக கேட்டான்.
“சந்தோஷ்… சந்தோஷ் தான் சார், சொன்னான். ஒருநாள் குடிச்சுட்டு இருக்கும்போது, அவனுக்கே தெரியாம, அந்த பொண்ணு ‘ஃபேன்டசி நைட்ஸ்’ வெப்சைட்ல இருந்ததா சொன்னான். நான்… நான் அதுக்கு முன்னாடி இருந்தே அந்த சைட் யூசர் தான். அவன்கிட்ட அந்த பொண்ணோட ஐடி என்னன்னு கேட்டு, அப்பறம் தான் இந்த மெஸேஜ் அனுப்புனேன். ஆனா, அதுக்கு அப்பறம் அந்த ஐடி ஆக்டிவ்வா இல்லன்னு சொல்லிட்டாங்க.” என்று மெல்லிய குரலில் கூறி முடித்தான்.
அதில் சந்தோஷ் மீதும் கோபம் உண்டாக, சாத்விக்கை இழுத்துக் கொண்டு, சந்தோஷ் இருந்த அறைக்குள் வேகமாக நுழைந்தான் பிரகதீஷ்வரன்.
‘ப்ச், இவனுக்கு இதே வேலையா?’ என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்ட வல்லபி ஏதோ கூற வர, அதற்குள் சந்தோஷை போட்டு அடி வெளுத்துக் கொண்டிருந்தான் பிரகதீஷ்வரன்.
‘என்னாச்சு இவனுக்கு? எப்பவும் பொறுமை, கடமைன்னு டயலாக் பேசிட்டு இருப்பான், இன்னைக்கு இந்த அடி அடிக்குறான்.’ என்று எண்ணியவள், அங்கு அழைத்து வரப்பட்டிருந்த சாத்விக்கின் முகம் பார்க்க, அவன் கன்னம் இரண்டும் வீங்கி இருந்தது.
‘இவனுக்கு இது தேவை தான்!’ என்று எண்ணியவள், பிரகதீஷ்வரன் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.
“ஏன்டா நாயே, உன்னை நம்பி அந்த பொண்ணு, அதோட பழைய கசடுகளை சொன்னா, நீ குடி போதைல அதை இந்த *****க்கு சொல்லியிருக்க. அவன் நாக்கை தொங்க போட்டு அலைஞ்சுருக்கான்! நீங்க எல்லாம் ஃபிரெண்ட்ஸா?” என்று பிரகதீஷ்வரன் நடந்ததைக் கூற, சந்தோஷ் அதிர்ந்து தான் போனான்.
அவனுக்கு சாத்விக்கின் இந்த முகம் தெரியாது அல்லவா!
அப்போதும் அவன் நம்பாமல் சாத்விக்கை பார்க்க, அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாத சாத்விக்கோ கீழே குனிந்து கொண்டான்.
தோழிக்கு இதனால் பாதிப்பில்லை என்றாலும், தன்னை நம்பி கூறியதை இப்படி தன் சுயநினைவே இல்லாமல் வெளியே கூறியதை எண்ணி வெட்கினான் சந்தோஷ்.
மகதி உயிரோடு இருக்கும் வரை நல்ல நண்பனாக இருந்ததாக தான் இத்தனை நாட்கள் மனதை தேற்றி வைத்திருந்தான் சந்தோஷ். ஆனால், இப்போது தெரிந்த தகவல், அவனைக் கூனி குறுக வைத்தது.
உள்ளுக்குள் ஏதோ முடிவெடுத்தவனாக, “இந்த கொலைகள்ல என்னோட பங்கும் இருக்கு.” என்று கூற, பிரகதீஷ்வரனும் வல்லபியும் அவனை புருவம் சுருக்கி பார்க்க, சாத்விக்கோ பயத்துடன் பார்த்தான்.
“இதுக்கு பின்னாடி, யாரெல்லாம் இருக்காங்கன்னும் நானே சொல்றேன்.” என்று உறுதியாக கூற, சாத்விக்கோ ‘வேண்டாம்’ என்பது போல தலையை அசைத்தான்.
வினை விதைத்தவன், அதை அறுக்கத் தானே வேண்டும்! அறுப்பானா?
தொடரும்…