Loading

அத்தியாயம் 12

 

மகதியின் அலைபேசியை சோதித்து பார்த்து குழப்பங்களுக்கு விடை காணலாம் என்று வல்லபியும் பிரகதீஷ்வரனும் நினைத்திருக்க, மகதி மற்றும் ஆராதியாவின் செய்தி பரிமாற்றங்கள் மேலும் குழப்பங்களையே தந்தன.

 

சில நொடிகள் அங்கு மௌனமே நிலவ, அதைக் கலைத்தது வல்லபி தான்.

 

“அப்போ மகதி தான் ருத்ராவா நடிச்சுருக்காளா? இது ஆராதியாக்கு தெரிஞ்சுருக்குமா?” என்று வல்லபி வினவ, “ம்ம்ம், ஆராதியா இறந்த அன்னைக்கு குழப்பத்துல இருந்ததா அவங்க ஃபிரெண்ட்ஸ் சொல்லிருந்தாங்களே, மேபி இதனாலையா இருக்கலாம். ரெண்டு பேருக்கும் இடையில இருக்க மெஸேஜஸ் பார்த்தா, இறந்ததுக்கு முதல் நாள், ருத்ராவை மீட் பண்ண போனப்போ தான், இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சுருக்கணும்.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

மகதியின் லாக்கரிலிருந்த பொருட்களை எல்லாம் காவல் நிலையத்துக்கு கொண்டு வருமாறு ஜெகதீஷுக்கும் பிரகாஷுக்கும் பணித்துவிட்டு மற்ற இருவரும் முன்னே சென்றனர்.

 

அவர்களை பின்தொடர்ந்த அந்த கல்லூரி முதல்வரோ, “ஹ்ம்ம், இன்னும் எத்தனை நாள் இந்த கேஸ் இழுக்கப் போகுதோ. ஏற்கனவே, காலேஜ் பேரு கெட்டு போயிருக்கு. இதுல, போலீஸ் விசாரணைன்னு வந்துட்டு போனா, இருக்க கொஞ்ச நஞ்ச பேரும் போயிடும் போல.” என்று மெல்ல முணுமுணுத்தார்.

 

என்னதான் மெல்லிய குரலில் பேசினாலும், முன்னே சென்ற காவலர்களுக்கு கேட்காமலா இருக்கும்?

 

விடைபெறும் சமயம், “இறப்பெல்லாம் அவங்கவங்க வீட்டுல நடந்தா தான் அதோட கஷ்டம் தெரியும் போல, இல்லையா சார்?” என்று முதல்வருக்கு குட்டிவிட்டே சென்றான் பிரகதீஷ்வரன்.

 

வாகனத்தில் செல்லும்போதே வல்லபி மகதியின் லாக்கரிலிருந்து கிடைத்த அலைபேசியை சோதித்து பார்த்தாள்.

 

சந்தோஷ் கூறியது போல, அது ஆராதியாவின் அழைப்புகளையும் செய்திகளையும் மட்டுமே தாங்கி இருந்தது.

 

தேதி வாரியாக பார்த்தபோது, ஆறு மாதத்திற்கு முன், முகநூலின் மூலம் தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்பது உறுதியானது.

 

அதன்பிறகு, இருவருக்கும் இடையே தோன்றிய நட்பை கடந்த மூன்று மாதங்களின் காதலாக மாற்றியிருந்தனர்!

 

இப்போது மகதியின் ஆசிரியரும் சந்தோஷும் கூறிய அந்த ஆறு மாத கணக்கு புரிந்தது போலிருந்தது.

 

அதனை பிரகதீஷ்வரனிடமும் பகிர்ந்த வல்லபி, “வேற எந்த க்ளூவும் கிடைக்கல.” என்றாள்.

 

“ஹ்ம்ம், அந்த மொபைல் யாரு பேர்ல வாங்கி இருக்காங்கன்னு செக் பண்ண சொல்லு லபி.” என்று யோசனையுடன் கூறினான்.

 

“ஹ்ம்ம், அடுத்து என்ன ஈஷு? இப்போ இந்த விஷயம் தெரிஞ்சதால எந்த யூஸும் இருக்க மாதிரி இல்லையே. கேஸ் அதே இடத்துல தேங்குனது போல தான் இருக்கு.” என்று குறைபட்டாள் வல்லபி.

 

“ஹ்ம்ம், எப்போ கேஸ்ல எந்த லீடும் கிடைக்கலையோ, அப்போ நம்மளே சஸ்பெக்ட்ஸை வச்சு அதை உருவாக்கணும்.” என்ற பிரகதீஷ்வரன், “ஜெகாவும் பிரகாஷும் வரட்டும். சஸ்பெக்ட்சை ஷார்ட்-லிஸ்ட் பண்ணலாம்.” என்றான்.

 

*****

 

காவல் நிலையம்…

 

ஜெகதீஷும் பிரகாஷும் வந்துவிட, “கம்மான் பாய்ஸ், ஏன் இவ்ளோ நேரம்?” என்றான் பிரகதீஷ்வரன்.

 

“சார், மகதியோட லாக்கர்ல சில இலைகளும், பூக்களும் காஞ்சு போய் இருந்தது. அதைப் பார்க்க சந்தேகமா இருந்துச்சு. அந்த காலேஜ் பிரின்சிபல் கூட, ட்ரக் பத்தி பேசுனது இன்னும் சந்தேகத்தை அதிகமாக்க, அந்த இலைகளையும் பூக்களையும் லேப்ல டெஸ்ட் பண்ண கொடுத்துட்டு வந்ததுல லேட்டாகிடுச்சு.” என்றான் ஜெகதீஷ்.

 

வல்லபி, முதல்முறை மகதியின் வீட்டிற்கு சென்ற போதே சில செடி வகைகளை அங்கு பார்த்தது அப்போது தான் நினைவு வந்தது.

 

அதை அவளும் பகிர, “ஹ்ம்ம், அதையும் டெஸ்ட் பண்ண சொல்லு.” என்ற பிரகதீஷ்வரன், “ஆனா, இப்போ நம்ம டெஸ்ட் ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ண போறதில்ல. ஏற்கனவே, நேரம் போயிட்டே இருக்கு. நாம இப்போ கழிக்கிற ஒவ்வொரு நிமிஷமும், கொலையாளி நம்மகிட்ட இருந்து தப்பிக்க நிறைய வாய்ப்புகளை தான் குடுக்கும். சோ, இப்போ நமக்கு கிடைச்ச தகவல்களை வச்சு, உங்களுக்கு யார் மேல சந்தேகம் இருக்குன்னு சொல்லுங்க.” என்றான்.

 

“எனக்கு சந்தோஷ் மேல தான் டவுட்டா இருக்கு. இறந்த அன்னைக்கு அவன் ஊர்ல இல்லாதது, விசாரணைல எதையும் முழுசா சொல்லாதது, முக்கியமா அந்த டான்ஸ் ஸ்டுடியோக்கும் அவனுக்கும் இருக்க கனெக்ஷனை அவனா சொல்லாதது – இதெல்லாம் தான் என் சந்தேகத்துக்கான காரணங்கள்!” என்றாள் வல்லபி.

 

“ஹ்ம்ம், மேபி, உண்மையிலேயே அவனுக்கு உடம்புக்கு முடியாம சொந்த ஊருக்கு போயிருக்கலாம். நார்மலாவே, விசாரணைல பலருக்கு என்ன சொல்றோம், எதை விட்டோம்னே தெரியாது. டென்ஷன்ல இட் ஹேப்பன்ஸ்! ஆனா, அந்த டான்ஸ் ஸ்டுடியோ விஷயம் எனக்குமே சந்தேகத்தை குடுக்குது தான்.” என்ற பிரகதீஷ்வரன், அடுத்து ஜெகதீஷை பார்த்தான்.

 

“சார், எனக்கு அந்த சாத்விக் மேல தான் சந்தேகமா இருக்கு. டான்ஸ் ஸ்டுடியோல அவனோட பிஹேவியர் வித்தியாசமா இருந்துச்சு. நம்ம அங்க கண்டுபிடிச்ச கத்தியை தான் அவனும் தேடியிருப்பான்னு தோணுது.” என்று ஜெகதீஷ் கூறும்போதே, “அந்த கத்தியோட ஃபிங்கர்பிரிண்ட் அனாலிஸிஸ் என்னாச்சு ஜெகா?” என்றான் பிரகதீஷ்வரன்.

 

“நோ ஃபிங்கர்பிரண்ட்ஸ் சார். ரெண்டு கத்திலயும் எதுவும் இல்லன்னு சொல்லிட்டாங்க.” என்ற ஜெகதீஷ், “ஆனா சார், அன்னைக்கு சாத்விக் யாருக்கோ கால் பண்ணதை பார்த்து, அவன் கால் ஹிஸ்டரி செக் பண்ண சொல்லிருந்தேன். அந்த கால் சந்தோஷுக்கு போயிருக்கு.” என்ற கூடுதல் தகவலை கூறினான்.

 

“சோ, இவங்க ரெண்டு பேரும் தான் நாம தேடிட்ட இருக்க கில்லர்ஸா?” என்று பிரகதீஷ்வரன் கூற, அப்போது பிரகாஷின் அலைபேசி ஒலியெழுப்பியது.

 

சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தவன், “மேம், அந்த வெப்சைட் ஆளுங்களை ஹைதராபாத்ல பிடிச்சுருக்காங்க.” என்று பிரகாஷ் கூறியதும் பரபரப்பானாள் வல்லபி.

 

“எப்படி பிரகாஷ்?” என்று வல்லபி வினவ, “அது தெரியல மேம். ஆனா, இது சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் போல. டார்க் வெப் சம்பந்தப்பட்டத்தால பப்லிக்கா எந்த விஷயமும் வெளிவராது. மகதி பத்தி அவங்களுக்கு தெரிய வந்ததாலயும், அவங்க இன்வெஸ்டிகேஷன்ல மகதி சம்பந்தப்பட்ட தகவல் கிடைச்சதாலயும் தான், அதை நமக்கு சொல்லியிருக்காங்க.” என்றவன், ஏதோ சொல்ல வந்து பின் தடுமாற, “பரவால்ல பிரகாஷ், சொல்லுங்க.” என்று ஊக்கினான் பிரகதீஷ்வரன்.

 

“அது… மகதிக்கு தான் அந்த வெப்சைட்ல அதிகமா டிமாண்ட் இருந்ததுன்னும், அவங்க அதை விட்டு வெளியே வந்ததால, நிறைய பேர் அவங்களை கேட்டு மெசேஜ் பண்ணிட்டே இருந்ததா சொன்னானுங்களாம். அதான், அவங்க கிட்ட அந்த மெசேஜ் வந்த ஐடிக்களை அனுப்ப சொல்லிருக்கேன். எனக்கு என்னமோ, இதுக்கும் கொலையாளிக்கும் சம்பந்தம் இருக்கும்னு தான் தோணுது.” என்றான் பிரகாஷ்.

 

“ம்ம்ம் ஓகே பிரகாஷ், அந்த தகவல் கிடைச்சதும், நம்ம சைபர் டீம் கிட்ட சொல்லி, ஹை-ப்ரையாரிட்டியா இதை பார்க்க சொல்லுங்க.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

“சோ, இப்போதைக்கு நம்ம சந்தேகம் எல்லாம் சந்தோஷ் அண்ட் சாத்விக் மேல தான். நாம ஏன் அவங்களை கஸ்டடில எடுத்து விசாரிக்க கூடாது.” என்றாள் வல்லபி.

 

“ஃபியூச்சர்ல இதனால பிரச்சனை வரலாம். சோ, அவங்களுக்கு எதிரா சாலிட்டான எவிடன்ஸ் வேணும்.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

அப்போது ஜெகதீஷின் அலைபேசி செய்தி வந்ததற்கு அறிகுறியாக சத்தமிட்டது.

 

அதை எடுத்து பார்த்த ஜெகதீஷ், “சார், அந்த சிசிடிவி இமேஜ் க்ளியர் பண்ணியாச்சு.” என்று கூற, உடனே அனைவரும் அவ்விடம் விரைந்தனர்.

 

அங்கு அவர்கள் தேடிய ஆதாரம் சிக்கியது!

 

ஆம், அந்த காணொளியில் தெரிந்தது சந்தோஷின் முகமே!

 

“ஓகே கைஸ், இது கோர்ட்ல ப்ரூவ் பண்ண போதிய ஆதாரம் இல்லைன்னாலும், இதை வச்சு நம்ம விசாரணையை நம்ம ஸ்டைல்ல ஆரம்பிக்கலாம்.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

*****

 

அதே சமயம், சந்தோஷின் வீட்டில்…

 

கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த சந்தோஷுக்கு படபடப்பாக இருந்தது.

 

தன் நண்பனின் மூலம், கல்லூரியில் காவலர்கள் மகதியின் லாக்கரிலிருந்து பொருட்களை எடுத்துச் சென்றது தெரிந்து தான் இருந்தது அவனுக்கு.

 

தான் கூறியதால் தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்று மூளைக்கு தெரிந்தாலும், மனமோ ஏனோ பயத்தில் துடித்துக் கொண்டு இருந்தது.

 

சிறிது யோசித்தவன், அவனுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி, “மகி’ஸ் லாக்கர் ஓப்பன்ட். தே வில் கம் டூ அஸ் சூன். டூ சம்திங்.” என்று செய்தியை அனுப்பினான்.

 

*****

 

தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த சாத்விக்கின் முகம் கோபத்தில் சிவந்தது.

 

“இடியட், இவன் மாட்டுறது மட்டுமில்லாம, என்னையும் மாட்டி விடுவான் போல!” என்று முணுமுணுத்தவன், பாதி பயிற்சியில் வேகமாக வெளியே செல்ல, அங்கிருந்த மற்றவர்கள் தான் ஆச்சரியமாக அதை பார்த்தனர்.

 

எப்போதும் இப்படி இடையில் செல்பவன் இல்லை சாத்விக். அதுவும், என்ன ஏதென்று சொல்லாமல் கொள்ளாமல் பொறுப்பில்லாமல் சென்றதே இல்லை.

 

அடுத்த ஒரு மணி நேரத்தில், இரட்டை கொலை வழக்கில் சந்தேகப்படும் நபராக சாத்விக்கை விசாரணைக்கு அழைத்துச் செல்ல காவலர்கள் வந்தது, அவர்களின் ஆச்சரியத்தை அதிர்ச்சியாக மாற்றியிருந்தது.

 

*****

 

ஒரு மணி நேரத்திற்கு முன்… சந்தோஷ் செய்தி அனுப்பிய பத்து நிமிடங்களில் அவன் வீட்டை அடைந்திருந்தனர் காவலர்கள்.

 

அவர்கள் வந்ததற்கான காரணத்தை விசாரித்தவன், “என்ன நானா? நான் எப்படி என் மகியை… நோ நான் இல்ல.” என்று மறுத்தவன், பின் காவலர்களின் வற்புறுத்தலால் அவர்களுடன் காவல் நிலையம் வந்திருந்தான்.

 

அவன் விசாரணை அறையில் அமர வைக்கப்பட்டிருக்க, அவன் முக பாவனைகளையும், உடல் மொழியையும் வெளியிலிருந்தே ஆராய்ந்த பிரகதீஷ்வரன், பத்து நிமிடங்கள் கழித்தே வல்லபியை விசாரிக்க அனுப்பி வைத்தான்.

 

உள்ளே நுழைந்த வல்லபி, “ஹாய் சந்தோஷ். ஹவ் ஆர் யூ ஃபீலிங் ரைட் நவ்?” என்று நக்கலான கேள்வியை அந்த நக்கல் வெளியே தெரியாதபடி கேட்டு வைக்க, ‘இவளை..’ என்று வெளியே இருந்த பிரகதீஷ்வரனால் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது.

 

அவளின் கேள்விக்கு பதில் அளிக்காமல், “மேம், என்னது இது? நான் எப்படி மகியை… நான் தான் எனக்கு தெரிஞ்சது எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டேனே!” என்று பதறினான் சந்தோஷ்.

 

“ஷ், ரிலாக்ஸ் சந்தோஷ். என்ன சொன்னீங்க? உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லிட்டீங்களா? த்ச்சு, உங்களுக்கு எதனால எல்லாம் பாதிப்பு வராதோ, அந்த தகவல்களை மட்டும் தான் சொல்லியிருக்கீங்க. சொல்லப்போனா, இந்த கொலை மேட்டர் தெரிஞ்சதும், போலீஸ் உங்ககிட்ட தான் வருவாங்கன்னு நல்லா தெரிஞ்சு, எங்களை சுத்தல்ல விட, மகதியோட கடந்த காலத்தை உள்ள இழுத்து விட்டுருக்கீங்க. அந்த அடல்ட் வெப்சைட் பத்தி சொன்னா, அது டார்க் வெப்னு புது ரூட்ல போகும்னு நல்லா பிளான் பண்ணி எங்களை குழப்ப முயற்சி செஞ்சுருக்கீங்க, ரைட்?” என்று நிறுத்தி நிதானமாக பேசிய வல்லபி, “மேபி, நீங்க சொன்னதெல்லாம் கேஸை திசை திருப்ப, உங்களோட பொய்யா கூட இருக்கலாம்.” என்று கூறினாள்.

 

அவளின் கேள்விகளில் ஆடிப்போன சந்தோஷோ, “நோ மேம். சத்தியமா நான் மகியை கொல்லல. அண்ட், நான் மகியை பத்தி சொன்னதெல்லாம் உண்மை தான். ஷீ ஹாஸ் அ டார்க் பாஸ்ட். அது… அந்த சைட் மட்டுமில்ல… அவளுக்கு ட்ரக் பழக்கமும் இருக்கு.” என்று அவன் கூற, “வாட்?” என்று அதிர்ச்சியாக வினவினாள் வல்லபி.

 

“ஆமா மேம். ஷீ வாஸ் அ ட்ரக் அடிக்ட். இப்போ அதுலயிருந்து மெல்ல வெளி வந்தாலும், முழுசா அவளால விட முடியல.” என்றான் சந்தோஷ்.

 

“என்ன புது பொய்யா சந்தோஷ்? அவங்க ட்ரக் எடுத்திருந்தா, அது அட்டாப்சில தெரிஞ்சுருக்காதா என்ன?” என்றாள் வல்லபி

 

“அது எனக்கு தெரியாது மேம். ஆனா, இது நார்மலா கன்ஸ்யூம் பண்ற ட்ரக் மாதிரி இல்ல. அவ வீட்டுல இருக்க செடிகள்ல சிலது ஹாலுசினோஜென்னு சொல்லுவா. அதை ரொம்ப நேரம் ஸ்மெல் பண்ணா அவளுக்கு ஹாலுசினேஷன்ஸ் வரும்னும், அந்த ஹாலுசினேஷன்ஸ் தான் அவளோட கவலைகளை மறக்க வச்சதுன்னும் சொல்லிருக்கா. இதுக்காக தான், நான் அவளோட வீட்டுக்குள்ள போனதே இல்ல.” என்று கூறினான் சந்தோஷ்.

 

வல்லபிக்கு மகதியின் வீட்டிலிருந்து செடிகள் ஞாபகம் வர, ‘ஒருவேளை சந்தோஷ் கூறுவது உண்மையாக இருக்குமோ!’ என்ற சந்தேகம் எழுந்தாலும், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், “இப்போ எதுக்கு இந்த கதை சந்தோஷ்? இதுவரை நீங்க சொன்னதை நம்பாம, உங்களை விசாரிக்குறதால, புதுசா கதை சொல்றீங்களா? ஆமா, இப்போ இந்த ட்ரக் விஷயம் தெரிஞ்சதால, எது மாறப் போகுது? உங்க ஃபிரெண்ட் மகதி கொல்லப்பட்டதா? இல்ல, அதுக்கு நீங்க சஸ்பெக்ட்டா இருக்குறதா?” என்றாள்.

 

“நோ மேம், அவளை யாரும் கொல்லலன்னு நினைக்கிறேன். அந்த ஹாலுசினேஷன் ஓவராகி அவளே அவளை தாக்கியிருக்கலாம்.” என்று தயங்கியபடி சந்தோஷ் கூற, “ஓஹ், அப்போ உங்களோட தியரி படி, இது தற்கொலைன்னு சொல்றீங்களா சந்தோஷ்? மகதியோட உடம்புல இருந்த மத்த காயங்கள் கூட, அவங்களோட ஹாலுசினேஷனால தான், இல்ல?” என்றாள் வல்லபி.

 

அதற்கு சந்தோஷ் பதில் கூறாமல் விழிக்க, “உங்க கதை எல்லாம், திரில்லர் மூவிக்கு சமமா அருமையா தான் இருக்கு. ஆனா, எங்ககிட்ட அட்டாப்சி ரிப்போர்ட் இருக்குறதை மறந்துட்டீங்கன்னு நினைக்குறேன் சந்தோஷ்.” என்று நக்கலாக கூறியவள், “ஓகே ஃபைன், இவ்ளோ நேரம் நீங்க பேசுனதை கேட்டது, நீங்க உங்களை டிஃபண்ட் பண்ண எவ்ளோ தூரம் போறீங்கன்னு செக் பண்ண தான். இப்போ உங்க கதையை திரும்ப கேட்க எல்லாம் டைம் இல்ல. சோ, இந்த வீடியோவை பார்த்து, இதுக்கு என்ன சொல்லலாம்னு யோசிங்க.” என்ற வல்லபி, அந்த சிசிடிவி காட்சியை காட்டினாள்.

 

அதில் தன் முகம் தெளிவாக தெரிந்ததை கண்டு அதிர்ந்தவன், ஒரு பெருமூச்சை வெளியிட்டு, “இதை மட்டும் வச்சு எப்படி நான் தான் கொலை பண்ணியிருக்கேன்னு சொல்றீங்க?” என்றான்.

 

“மகதி இறந்த நேரத்தோட, நீங்க இந்த வழியா கிராஸ் பண்ற நேரம் ஒத்துப்போகுது. இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை சந்தோஷ். இல்ல, இந்த ஆதாரம் பத்தாதுன்னு நீங்க நினைச்சா, இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு எதிரான ஸ்ட்ராங்கான ஆதாரம் கிடைச்சுடும். அப்பறம், எங்களோட விசாரிக்கிற ஸ்டைலும் மாறிடும். அதுக்கு முன்னாடியே, உண்மையை ஒத்துக்கிட்டா உங்களுக்கும் நல்லது.” என்றாள் வல்லபி.

 

“என்ன மேம் மிரட்டுறீங்களா? அதெப்படி நான் அந்த வழியா கிராஸ் பண்ணா அவ வீட்டுக்கு தான் போகணுமா? அப்படியே நான் போயிருந்தாலும், நான் தான் அவளை கொலை பண்ணேன்னு சொல்ல உங்ககிட்ட என்ன ஆதாரம் இருக்கு? ஃபிங்கர்பிரண்ட்ஸ் இருக்கா? நோ, அப்படி எதுவும் இல்ல. இனிமே, கிடைக்கப் போறதும் இல்ல.” என்றவன் ஒருநொடி நிறுத்தி, “அது உண்மையா இருந்தா தான, ஆதாரம் கிடைக்கும்.” என்று கூறினான்.

 

அவன் உளறியதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தவள், “அட, உங்களுக்கே தெரியாம உண்மை வெளி வந்துடுச்சே! அப்போ அந்த தடயங்களை எல்லாம் நீங்க தான் மறைச்சுருக்கீங்க, அப்படி தான?” என்று வினவ, அவனோ மௌனமாக இருந்தான்.

 

“ஹ்ம்ம், முழு உண்மையை ஒத்துக்க ரொம்ப நேரம் எடுக்காது போலயே!” என்றவள், அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

 

*****

 

நேரே பிரகதீஷ்வரனிடம் சென்ற வல்லபி, “இன்னும் கொஞ்ச நேரம் இப்படி மாத்தி மாத்தி இன்வெஸ்டிகேட் பண்ணா, அவனே ஒத்துக்குவான்.” என்றாள்.

 

பிரகதீஷ்வரனோ யோசனையுடன், “இல்ல, அவன் மகதியை கொலை பண்ணல.” என்றான்.

 

அதைக் கேட்டு அதிர்ந்த வல்லபியோ, “வாட்? எப்படி சொல்றீங்க?” என்று வினவ, “அவனோட பாடி லேங்குவேஜ் வச்சு தான் சொல்றேன். அவன் மகதியை கொலை செய்யல்லன்னு சொல்லும்போது, அவன் உடல்மொழில பொய் சொல்ற மாதிரி தெரியல.” என்று கூறினான் பிரகதீஷ்வரன்.

 

அதைக் கேட்ட வல்லபிக்கு தான் எரிச்சலாக வந்தது. அன்று அந்த வழக்கில் கூறிய அதே வாக்கியங்ளை தான் இப்போதும் பயன்படுத்தினான் பிரகதீஷ்வரன். அவன் தெரிந்து கூறினானோ என்னவோ, ஆனால், வல்லபிக்கு நன்கு தெரிந்தது.

 

என்னதான், முந்தைய வழக்கில் பிரகதீஷ்வரனின் பக்கம் நியாயம் இருக்கும் என்று ஒருமனம் இப்போது நம்பினாலும், ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக அவ்வழக்கை பார்த்த வல்லபிக்கு, அந்த எண்ணத்தை மட்டும் மாற்றி விட முடியவில்லை.

 

அதனால் அன்று உள்ளே கனன்ற கோபம் இப்போதும் எரிச்சலாக வெளிப்பட்டது.

 

“ஓஹ், உங்க உள்ளுணர்வு அப்படி சொல்லுது, அப்படி தான, மிஸ்டர். பிரகதீஷ்வரன்?” என்று வல்லபி வினவ, ‘ஈஷு’ ‘மிஸ்டர். பிரகதீஷ்வரன்’ ஆனதை உணர்ந்து குழப்பமாக அவளைக் கண்டான் பிரகதீஷ்வரன்.

 

அவள் முகத்திலிருந்த பாவத்தை வைத்தே அவளின் மனமொழியை கண்டு கொண்டவனுக்கும் இப்போது கோபம் உண்டானது.

 

‘இவளுக்கு என்மேல நம்பிக்கையே வராது போல!’ என்ற கோபம் அது!

 

“ஆமா, மிஸ். வல்லபி, என் உள்ளுணர்வே தான்! அது எப்பவும் தப்பாகாது.” என்றும் சேர்த்து கூறினான் பிரகதீஷ்வரன்.

 

“அப்போ இந்த கேஸ்லையும் குற்றவாளியை காப்பாத்த போறீங்க, அப்படி தான?” என்று வல்லபி சூடாக கேட்க, “ஜஸ்ட் ஸ்டாப் யுவர் இடியாட்டிக் அக்யூசேஷன்!” என்று கத்திய பிரகதீஷ்வரன், சற்று அமைதியாகி, “நான் எப்பவும், எந்த சூழ்நிலைலையும் குற்றவாளியை காப்பாத்துனது இல்ல. அப்படி செஞ்சுருந்தா, அவன் குற்றவாளியே இல்லன்னு அர்த்தம்! என்மேல உனக்கு நம்பிக்கை இல்லன்னாலும் சரி. ஆனா, நீ ஒரு போலீஸ். கிடைச்ச தகவலை அப்படியே நம்பக்கூடாதுன்னு தெரியாதா உனக்கு?” என்று வினவ, அவளிடம் மௌனம் மட்டுமே!

 

அவளின் மௌனம் கண்டவன், என்ன நினைத்தானோ, “ஐ நீட் அ பிரேக். கால் மணி நேரம் கழிச்சு வரேன்.” என்று அவளை தனியே விட்டு வெளியே சென்று விட்டான்.

 

தனியே விடப்பட்ட வல்லபியின் நினைவுகளோ பின்னோக்கி செல்ல, அன்றும் இதே போல அவன் கூறிய வார்த்தைகள், இம்முறை மனதிற்குள் அல்லாமல் மூளைக்குள் ஒலித்தன.

 

சூசைட் கேஸா இருந்தா, அது லவ் ஃபெயிலரா தான் இருக்கணும்னு அவசியம் இல்ல. அதே மாதிரி, ஒரு பொண்ணு இறந்தா, அதுக்கு காரணம் பையனா தான் இருக்கணும்னும் இல்ல.”

 

உண்மை தானே அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்!

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்