Loading

அத்தியாயம் 11

 

இரவில் மகதி வீட்டிற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள உணவக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபடியே உறங்கியிருந்த வல்லபியின் முகத்தில் தான் விடிந்தது பிரகதீஷ்வரனுக்கு. அவனுமே சோர்வில் கண்ணசந்திருந்தான்.

 

சிறு உதட்டு நெளிவுடன் சோம்பல் முறித்தவன், அந்த அறையிலிருந்த கழிவறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.

 

அத்தனை சத்தத்திற்கு கூட விழிக்காமல் உறங்கிக் கொண்டிருந்தாள் வல்லபி.

 

“தூங்குமூஞ்சி! இதுக்கு தான் நைட்டே வீட்டுக்கு போக சொன்னேன். கேட்காம, சிசிடிவி செக் பண்ண போறேன்னு வீராப்பா உட்கார்ந்து பாதியிலேயே தூங்குனது தான் மிச்சம்!” என்று மெல்லிய குரலில் சலித்துக் கொண்டான்.

 

அவன் மெல்லிய குரல் கேட்டதினாலோ, இல்லை தானாகவே உறக்கம் கலைந்ததாலோ, வல்லபி கண்களை மெல்ல திறக்க, அங்கு வெகு அருகில் பிரகதீஷ்வரனை பார்த்து திகைத்து தான் போனாள்.

 

அவனோ அவளின் அதிர்ச்சியை கண்டு கொண்டாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “மேடம், சிசிடிவி முழுசா பார்த்து முடிச்சாச்சுல, உங்க அப்சர்வேஷனை சொல்லுங்க பார்ப்போம்.” என்றான்.

 

அவள் முழுதாக பார்த்திருந்தால் தானே!

 

என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் விழிக்க, அவளின் முக பாவனையில் எப்போதும் எழும் சிரிப்புடன், “வீட்டுக்கு போய் ஃப்ரெஷ்ஷாகிட்டு வா லபி.” என்றான்.

 

அவளும் தலையாட்டிவாறே கிளம்ப, “தூங்குமூஞ்சி, பார்த்து போ. எங்கயாச்சும் மோதி, உடைச்சு வச்சுடாத!” என்று அவன் கூற, அதற்கு முறைத்து விட்டு சென்றாள்.

 

‘தூக்கத்துல இருந்து முழிச்சுட்டா முட்டக்கண்ணி!’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டவன், தானும் தன் வீட்டிற்கு சென்றான்.

 

செல்லும் வழியில் இருவருமே முந்தின இரவு மதுமதி கூறியதை தான் நினைத்துக் கொண்டிருந்தனர்.

 

*****

 

“உங்க ஃபிரெண்டு இன்னும் எதையும் சொல்லலேயே?” என்ற பிரகதீஷ்வரனின் கேள்விக்கு ஜோஸ்ஃபின் மதுமதியை நோக்க, அவளோ பதற்றத்துடன் காணப்பட்டாள்.

 

“மது என்ன இது? நீ ஏன் டென்ஷனா இருக்க? உனக்கு நம்ம தியாவை பத்தி தெரியும்ல. சொல்லு அவ அப்படிப்பட்டவ இல்லன்னு.” என்றாள் ஜோஸ்ஃபின்.

 

“இல்ல ஜோஸ், உனக்கு தான் தியாவை பத்தி தெரியல.” என்று மெல்லிய குரலில் மதுமதி கூற, அதில் திகைப்புற்று நின்று விட்டாள் ஜோஸ்ஃபின்.

 

ஜோஸ்ஃபினின் அதிர்ச்சியை கண்ட மதுமதி, அவளை ஆறுதலாக அணைத்து, “எனக்கு தெரியும் ஜோஸ், இப்போ நான் சொல்ல போறது, உனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கும். ஏன், இவ்ளோ நாள் இதை வெளிய சொல்லாததுக்கு காரணம் கூட, இதை யாரும் நம்ப மாட்டிங்கன்னு தான்.” என்று மதுமதி கூற, “மது, அப்போ நம்ம தியா..?” என்று கேள்வியை முடிக்காமல் நிறுத்தினாள் ஜோஸ்ஃபின்.

 

“ஆமா ஜோஸ். ஷீ லைக்ஸ் கேர்ள்ஸ்.” என்று தோழி கேட்க விரும்பாததை வேறு விதத்தில் கூறினாள் மதுமதி.

 

எப்படி கூறினாலும், செய்தி ஒன்று தானே! அது ஜோஸ்ஃபினின் நம்பிக்கை ஆட்டம் காணச் செய்தது என்று கூறினால் மிகையாகாது.

 

இருப்பினும் இறுதி முயற்சியாக, “எப்படி சொல்ற மது? யாரு சொன்னா உன்கிட்ட?” என்று ஜோஸ்ஃபின் வினவ, “அவளே தான் என்கிட்ட சொன்னா ஜோஸ். முதல்ல சும்மா பிராங்க் பண்றான்னு தான் நினைச்சேன். ஆனா, மகதியோட அவ ரிலேஷன்ஷிப் வச்சு பார்த்தா, அது உண்மைன்னு தான் தோணுது.” என்றாள் மதுமதி.

 

அப்போதும் நம்பாமல், “அவ சும்மா தான் சொல்லிருப்பா மது. மகதி… அது அவங்க ஃபிரெண்ட்ஸ் தான். நம்மகிட்டயே எத்தனை முறை சொல்லியிருப்பா?” என்று ஜோஸ்ஃபின் கூற, “ஃபிரெண்ட்ஷிப்பை தாண்டிய பொஸஸிவ்நெஸை அவங்க கிட்ட நீ பார்த்தது இல்லையா ஜோஸ்?” என்று சற்று கோபமாகவே கேட்டாள் மதுமதி.

 

அதற்கு பதில் சொல்ல தெறியவில்லை ஜோஸ்ஃபினுக்கு. ஏனென்றால், அவளே பலமுறை மதுமதியிடம், “ஊரு உலகத்துல இல்லாத ஃபிரெண்ட்ஸ் மாதிரி தான் பண்றாங்க!  ஃபிரெண்ட்ஷிப்ல என்ன பொஸஸிவ்நெஸோ?” என்று கூறியிருந்தாளே.

 

ஆனாலும், “ஷீ லவ்ஸ் ருத்ரா. அப்போ எப்படி?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் ஜோஸ்ஃபின்.

 

“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு தான் ஜோஸ். ஆனா, இப்போ தெரிய வர விஷயமெல்லாம், தியா – மகதி ரிலேஷன்ஷிப்பை நோக்கி தான் இருக்கு. நான் எதையும் யோசிக்காம, தியா மேல வீண்பழி போடுவேனா ஜோஸ்? அப்படின்னா, எப்போ தியா – மகதி கொலை விஷயம் தெரிய வந்துச்சோ, அப்போவே அவங்க ரிலேஷன்ஷிப் இப்படி தான்னு சொல்லியிருப்பேனே.” என்ற மதுமதி, கொஞ்சம் தணிந்து, “எனக்கு புரியுது ஜோஸ். உன்னால இதை ஏத்துக்க முடியல. ஆனா, இப்படி இருக்குறது ஒன்னும் குற்றம் இல்ல. அண்ட், இந்த விஷயம் எப்படியாச்சும் இந்த கேஸுக்கு யூஸானா, அது மூலமா நம்ம தியாவை கொலை பண்ண கில்லரை கண்டுபிடிச்சு தண்டிக்கலாம்ல.” என்று சமாதானப்படுத்தினாள்.

 

அதுவரை தோழிகள் இருவரின் உரையாடல்களை கேட்ட பிரகதீஷ்வரன், “டோன்ட் வொரி. இந்த விஷயத்தை நாளைக்கு நாங்களே கன்ஃபார்ம் பண்ணி சொல்றோம். இப்போ நீங்க சேஃபா கிளம்புங்க.” என்று இருவரையும் அனுப்பி வைத்தான்.

 

செல்லும் இருவரையும் பார்த்த வல்லபி, “பாவம்,  நமக்கே இந்த தகவல் அதிர்ச்சியை குடுக்கும்போது, அந்த பொண்ணோட ஃபிரெண்டுஸுக்கு எவ்ளோ ஷாக்கிங்கா இருக்கும்?” என்றவள், “நாம வேணா, இப்பவே அந்த காலேஜ்ல போய் செக் பண்ணலாமே?” என்று வினவினாள்.

 

“மணி என்னன்னு பார்த்தியா? இந்த நைட் நேரத்துல அங்க போறதுக்கு பதிலா, மகதி வீட்டுக்கு போற ஹைவேல இருக்க ஹோட்டல் சிசிடிவியை செக் பண்ணலாம். கண்டிப்பா, கில்லர்ஸ், ரெண்டு பேருக்கும் ஏதாவது ஒரு விதத்துல சம்பந்தப்பட்டவங்களா தான் இருக்கணும்.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

இப்படி தான் அந்த இரவை சிசிடிவி காட்சிகளுடன் கழித்தனர்.

 

இடையே, ஒருமுறை வல்லபி சோர்வாக இருப்பதைக் கண்டவன், அவளை வீட்டிற்கு செல்லுமாறு கூறினான் தான். அதை கேட்பாளா அவள்?

 

“நானும் ஏ.சி.பி தான். நைட்டு ஃபுல்லா கண்ணு முழிச்சு வேலை பார்க்க எனக்கும் தெரியும்.” என்று வீராப்பாக கூறியவள், அடுத்த ஒரு மணி நேரத்தில், முழுவதுமாக தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

 

அவளை சொல்லியும் குற்றமில்லை. இந்த வழக்கிற்கு முன்பாக தான், நகை திருட்டு வழக்கை இரவு பகலாக கண்விழித்து முடித்திருந்தாள். அந்த சோர்வுடன், இவ்வழக்கின் குழப்பங்களும் சேர்ந்து கொள்ள, அதன் விளைவே இந்த உறக்கம்!

 

அதை தான் வல்லபியும் நினைத்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

 

இருப்பினும் மனதிற்குள், ‘ச்சு, என்னை என்ன நினைச்சுருப்பான் அவன்?’ என்று சிணுங்கவும் மறக்கவில்லை!

 

*****

 

பிரகதீஷ்வரனின் கண்களோ உறக்கம் தொலைத்ததால் சிவந்திருந்தன. அவன் இரவு முழுவதும் அந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்திருந்தானே!

 

ஆனால், அத்தகைய பலன் ஒன்றும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

 

அந்த உணவகத்திலிருந்த சிசிடிவி சாலையை பக்கவாட்டாக தான் காட்டியிருக்க, அதன் மூலமாக தெரிந்த காட்சிகள் அத்தனை தெளிவாக இல்லை.

 

இருப்பினும், மகதி இறந்த நேரத்தையும், ஆராதியா இறந்த நேரத்தையும் கணக்கில் கொண்டு உற்று நோக்கியவனின் கண்களில், அந்த ஒரு வாகனம் இருமுறை மகதியின் வீட்டை நோக்கிய பாதையில் பயணித்திருப்பது பட்டது.

 

ஆனால், அந்த நபரோ, இல்லை வாகன எண்ணோ தெளிவாக தெரியவில்லை.

 

அப்போது அலுவலகத்திற்கு வந்த ஜெகதீஷை அழைத்தவன், “ஜெகா, இதோ இந்த ரெண்டு கிளிப்பிங்ல இருக்க ஃபேஸும், வண்டி நம்பரும் கிளியரா வேணும்.” என்றவன், “இதை சம்பந்தப்பட்ட ஆளுங்க கிட்ட சொல்லிட்டு, நீயும் பிரகாஷும் ஏ.ஆர் இன்ஜினியரிங் காலேஜ் போயிடுங்க. நானும் வல்லபியும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்.” என்று கூறிவிட்டே தன் வீட்டை நோக்கி பயணித்தான்.

 

*****

 

அடுத்த முக்கால் மணி நேரத்தில் மீண்டும் வேலைக்கு கிளம்பி இருந்தாள் வல்லபி.

 

ஏதோ பேச வந்த அன்னையிடம் கூட சரியாக பேசாமல், சாப்பிட்டும் சாப்பிடாமலும் வல்லபி கிளம்பி விட்டாள்.

 

நேரே, பிரகதீஷ்வரனின் அலுவலகத்திற்குள் நுழைய, அங்கு பிரகதீஷ்வரனின் அறையிலிருந்து வெளியே வந்து, தன்னை கடந்து சென்றவனை பார்த்து அதிரத்தான் செய்தாள் அவள்.

 

‘இது அவன் தான?’ என்ற யோசனையில் இருந்தவளை, “காலேஜுக்கு போலாமா?” என்ற பிரகதீஷ்வரனின் குரல் கலைத்தது.

 

அப்போது தலையாட்டிக் கொண்டு சென்றாலும், வாகன பயணத்தில் அந்த ‘அவனை’ பற்றி விசாரிக்க தான் செய்தாள்.

 

அவளை ஆழ்ந்த பார்வை பார்த்துக் கொண்டே, “அவன் சிவில் சர்வீஸ் எக்ஸாம்ல பாஸ் பண்ண விஷயத்தை ஷேர் பண்ண வந்தான்.” என்றதோடு நிறுத்திக் கொண்டான் அவன்.

 

அவள் மனம் அவ்வாறு நினைக்கக் கூடாது என்று எண்ணினாலும், அவளால் அப்படி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

‘அப்போ இன்னமும் அந்த அக்யூஸ்ட் கூட டச்ல தான் இருக்கானா? அவனெல்லாம் போலீஸா?’ என்ற திசையில் எண்ணம் செல்ல, நல்லவேளையாக இதை வெளியில் கேட்டு, இருவருக்கும் இடையே இருக்கும் நல்ல மனநிலையை கெடுத்துக் கொள்ளவில்லை.

 

*****

 

ஏ.ஆர் பொறியியல் கல்லூரி… கல்லூரி ஆரம்பிப்பதற்கு முன்பே, பிரகதீஷ்வரனும் வல்லபியும் வந்திருக்க, அங்கிருந்த ஜெகதீஷும் பிரகாஷும் அவர்களருகே வந்தனர்.

 

“சார், பிரின்சிபால் கிட்ட விஷயத்தை சொல்லியாச்சு. மகதி லாக்கர் ஸ்பேர் கீ எடுக்க ஸ்டாஃப் போயிருக்காங்க.” என்றான் ஜெகதீஷ்.

 

வல்லபி பிரகாஷிடம், “சந்தோஷை கண்காணிக்க சொன்னவங்க, இன்னும் அந்த வேலையை செஞ்சுட்டு தான இருக்காங்க. நான் சொல்றவரை இது தொடரட்டும்.” என்று கூற, பிரகாஷும் அதை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவித்தான்.

 

அதற்குள் லாக்கர் சாவி கிடைத்துவிட, காவலர்கள் நால்வருடன், கல்லூரி முதல்வர் மற்றும் உதவியாளர் அனைவரும் அந்த லாக்கர் இருக்கும் அறையை நோக்கி சென்றனர்.

 

செல்லும்போதே, “ஸ்டுடெண்ட்ஸ் லாக்கருக்கு எப்படி ஸ்பேர் கீ?” என்று வல்லபி கல்லூரி முதல்வரிடம் வினவ, “மேம், இந்த ஸ்பேர் கீ சிஸ்டம் இப்போ தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி கொண்டு வந்தது. அதுக்கு முன்னாடி, ஒரு கேஸ் ஆகிடுச்சு. இல்லீகல் ட்ரக்ஸை இங்க ஸ்டோர் பண்ணி, டிஸ்ட்ரிபியூட் பண்ணியிருந்தாங்க சில ஸ்டுடெண்ட்ஸ். அதை போலீஸ் வந்து தான் கண்டுபிடிச்சாங்க. இந்த மாதிரி இல்லீகல் ஆக்ட்டிவிட்டிஸை தடுக்க தான் இந்த ஸ்பேர் கீ சிஸ்டம் கொண்டு வந்தோம். அட்லீஸ்ட் எப்போ வேணும்னாலும் செக் பண்ணுவாங்கங்கிற பயம் இருக்கும்ல.” என்றார் முதல்வர்.

 

அதற்குள் அந்த லாக்கர் வந்திருக்க, உதவியாளரே மகதியின் லாக்கரை திறந்தார்.

 

உள்ளே மகதியின் விளையாட்டு ஆடைகள், சில உபகரணங்கள் இருக்க, அதனுடன் சில காகிதங்களும், அவர்கள் தேடி வந்த அலைபேசியும் இருந்தது.

 

அந்த காகிதங்களை எடுத்த வல்லபி பிரித்து பார்க்க, அவற்றிலும் ஓவியங்கள் தான் இருந்தன. ஆனால், அவற்றில் இருந்தவை முழுக்க ஆராதியாவின் முகமே!

 

அதைக் கண்ட வல்லபி பிரகதீஷ்வரனை பார்க்க, அவனோ தன் கையிலிருந்த அலைபேசியை பார்த்தான்.

 

இதோ, முன்தினம் மாலையிலிருந்து தலையை உருட்டும் கேள்விகளுக்கு பதிலாக அலைபேசி இருக்க, அதை பார்க்கும் முன்பே பதில் தெரிவது போல தான் இருந்தது இருவருக்கும்.

 

ஒரு பெருமூச்சுடன், அணைந்து கிடந்த அலைபேசியை அங்கிருந்த ஸ்விட்ச் போர்டில் சார்ஜ் போட்டபடி உயிர்ப்பித்தான் பிரகதீஷ்வரன்.

 

கால் ஹிஸ்டரியிலும், மெசேஜ்ஜிலும் அவர்கள் எதிர்பார்த்தபடியே ஆராதியாவின் பெயர் தான் ‘ராதி’ என்ற செல்லப் பெயராக சுருங்கியிருந்தது.

 

ஆனால், அவர்கள் எதிர்பாராதது, அந்த ‘ராதி’யின் செய்திகள் அனைத்திலும் ‘ருத்’ என்று அழைத்திருந்தது!

 

இது நிச்சயமாக முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சி தான்!

 

வல்லபியோ தான் கையோடு எடுத்து வந்திருந்த ஆராதியாவின் அலைபேசியை வெளியே எடுக்க, பிரகதீஷ்வரன் அதே சமயம் மகதியின் புது அலைபேசியில் சேமிக்கப்பட்டிருந்த ராதியின் எண்ணுக்கு அழைப்பு விடுக்க, அப்போது சரியாக ஆராதியாவின் அலைபேசி, ‘ருத் மை லவ்’ என்ற பெயருடன் ஒலித்தது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்