Loading

அத்தியாயம் 10

 

குளத்தில் எரியப்படும் கல்லால் சிறுசிறு அலைகள் உருவாவது இயல்பு. அந்த கல் எரியப்படும் இடத்திலிருந்து, அதன் விசையை பொறுத்து, குளத்தின் கரைகளை கூட தொடலாம் அந்த அலைகள்.

 

அந்த கல்லை போல தான் இந்த இரட்டை கொலைகளும், பிரகதீஷ்வரனையும் வல்லபியையும் எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது.

 

முதலில் சாதாரண கொலை வழக்காக ஆரம்பித்தது, தொடர் கொலைகளாக தோன்றி, பின் இரட்டை கொலைகளாக மாறி, ஒன்றோடொன்று தொடர்பு இருப்பதை உறுதிபடுத்தி, இரு கொலையாளிகளின் கைவரிசையாக உருவெடுத்து, அதன் காரணங்களாக கொலையுண்டவர்களின் ரகசியங்கள் தெரிய வர, இப்போது அதில் சிறு முரணாக தெரிய வந்துள்ள தகவல் இருவரையும் திகைப்பில் ஆழ்த்தின என்றால் அது மிகையாகாது.

 

பெண் – பெண் உறவு பற்றிய இருவேறு வாதங்களும் கருத்துக்களும் இப்போது பொதுவெளியில் சாதாரணமாக பகிரப்பட்டாலும் கூட, அப்படியான உறவில் இருப்பவர்களை நேரில் காணும்போது, ‘என்னடா இது?’ என்ற ஒரு உணர்வு தோன்றுவதை நம்மால் தடுக்க முடியாது.

 

அதே மனநிலையில் தான் இரண்டு காவலர்களுமே இருந்தனர்.

 

வாகனம் ஆராதியாவின் வீட்டை விட்டு நெடுந்தொலைவு வந்து விட்டாலும், சிவகுருவின் வாக்குமூலத்தை விட்டு எளிதில் வெளிவர முடியவில்லை.

 

அங்கு நடந்ததை எல்லாம் மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்த வல்லபி, “அப்போ ஆராதியாக்கும் மகதிக்கும் ஃபிரெண்ட்ஷிப்பை தாண்டிய ரிலேஷன்ஷிப் இருந்துருக்குமா?” என்று வினவ, தன் யோசனையிலிருந்து வெளிவந்த பிரகதீஷ்வரனோ, “ஹ்ம்ம், அப்போ ஆராதியாவோட லவர் என்னவானான்? அவ ஃபிரெண்ட்ஸ் சொன்னதை தாண்டி, மகதியோட மொபைல்ல இருந்து கிடைச்ச டெலீட்டட் மெசேஜ்ஜும் அதுக்கு ஆதாரமா இருக்கே.” என்றான்.

 

“ஹ்ம்ம், அதான் இடிக்குது. ஆராதியாக்கு லவர் இருந்தா, எப்படி அவளால இப்படியொரு ரிலேஷன்ஷிப்ல இருக்க முடியும்?” என்று சிந்தித்தவளுக்கு ஏதோ பொறி தட்ட, அதிர்ந்த முகத்தோடு பிரகதீஷ்வரனை நோக்க, அவனும் அதே யோசனையில் தான் இருந்தான் போல.

 

“அப்போ ஆராதியா மல்டிபில் ரிலேஷன்ஷிப்ல இருந்துருக்காளா?” என்று வல்லபி திகைப்புடன் வினவ, “மேபி…” என்ற பிரகதீஷ்வரன் சிந்தனையை விட்டு வெளிவராமல் இருந்தான்.

 

“ப்ச், இந்த ரெண்டு பொண்ணுங்களுக்குள்ள இன்னும் எவ்ளோ ரகசியம் இருக்குமோ? ஆனா, இவங்களை பார்த்தா அப்படி தெரியலையே.” என்றாள் வல்லபி.

 

அதைக் கேட்டவனோ, “யாரையும் பார்த்ததும் ஜட்ஜ் பண்ணாத லபி. அதுவும் ஒரு போலீஸா அதை பண்ணவே கூடாது.” என்று அழுத்தமாக கூறிவிட்டு கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

 

அவன் கூறியது இப்போதைய வழக்கிற்காக மட்டுமில்லை என்பது அவளுக்கும் புரிந்து தான் இருந்தது.

 

இந்த வழக்கிற்கு முன் இதை சொல்லியிருந்தால், அவன் தவறுக்காக சப்பை கட்டு காட்டுவதாக தான் நிச்சயம் எண்ணி இருப்பாள்.

 

ஆனால், இப்போது யோசிக்கும் போது, அவன் செய்ததில் நியாயம் இருக்குமோ என்றே எண்ண தோன்றியது.

 

‘ம்ச், அன்னைக்கே எக்ஸ்ப்ளெயின் பண்றதா சொன்னான். நான் தான் கோபத்துல வேண்டாம்னு சொல்லிட்டேன். இப்போ கேட்டா, நிச்சயம் சொல்ல மாட்டானே!’ என்று நினைத்தபடி, அருகில் அமர்ந்திருந்தவனை ஓரக்கண்ணில் பார்க்க, அவள் எண்ணத்தை பொய்யாக்காதபடி இறுக்கமான முகத்துடன் தான் இருந்தான் பிரகதீஷ்வரன்.

 

‘இந்த கேஸ் முடியட்டும். அதுக்கு அப்பறம் கேட்டுக்கலாம்.’ என்ற முடிவுக்கு வந்தவள், வாகன ஓட்டியிடம் தன்னை சந்தோஷின் வீட்டில் இறக்கி விடுமாறு கூறினாள்.

 

அதற்கும் பார்த்தானே அன்றி பதில் பேசவில்லை.

 

இறுக்கமான சூழலுடனே அந்த பயணம் தொடர்ந்தது.

 

*****

 

சந்தோஷின் வீட்டின் முன்னே வாகனம் நிற்க, வல்லபியுடன் பிரகதீஷ்வரனும் இறங்கிக் கொண்டான்.

 

இப்போது பார்ப்பது பாவையின் முறையாகிற்று!

 

சிறு தோள் குலுக்கலுடன் அவள் முன்னே நடக்க, அவளைப் பின்தொடர்ந்தான் அவன்.

 

இருவரும் சந்தோஷின் வீட்டை விசாரித்து அடைவதற்கும், அவன் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

 

வல்லபியை பார்த்ததும், அவன் உடல்மொழியில் சிறு நடுக்கம் தென்பட, அதை இருவருமே குறித்துக் கொண்டனர்.

 

“என்ன சந்தோஷ், வெளிய கிளம்பியாச்சு போல?” என்று சாதாரணமாக விசாரிப்பதை போல வல்லபி கேட்க, அதற்கு சந்தோஷோ, “சாப்பிட போறேன் மேம்.” என்றவன், “என்கிட்ட இன்னும் விசாரிக்கணுமா?” என்றும் கேட்டான்.

 

“ஹ்ம்ம், முன்னாடி கேட்டப்பவே முழுசா சொல்லியிருந்தா, இப்போ நீங்களும் சாப்பிட போயிருக்கலாம். நாங்களும் அடுத்த வேலையை பார்க்க போயிருப்போம்.” என்று போலியாக சலித்துக் கொண்ட வல்லபி, “உள்ள போய் பேசலாமா?” என்றாள்.

 

அவளின் பேச்சில் திகில் உண்டானாலும், காவலர்கள் இருவருக்கும் வழிவிட்டு, அவர்களை வீட்டினுள் அழைத்துச் சென்றான் சந்தோஷ்.

 

‘பேச்சுலர்கள் வாழும் வீடு’ என்று எளிதாக கண்டு கொள்வது போல தான் இருந்தது சந்தோஷின் வீடு. அதில் அவனும் அவன் நண்பர்கள் இருவரும் தங்கியிருப்பதாகவும், அவர்கள் இருவரும் வெளியே சென்று விட்டதாகவும் கூறினான் சந்தோஷ்.

 

ஒரு பெருமூச்சுடன், “ஓகே சந்தோஷ், இப்போ விஷயத்துக்கு வருவோம். இது ஞாபகம் இருக்கா?” என்று வினவியவள் அவன் முன்பு ஒரு புகைப்படத்தை காட்டினாள்.

 

அது சந்தோஷ், மாடர்ன் டான்ஸ் குழுவினருடன் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படமே ஆகும்.

 

அதை பார்த்த சந்தோஷ் அதிர்ச்சியில் எச்சில் விழுங்கியபடி இருக்க, அவனை தான், தன் கூர்ப்பார்வை கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் பிரகதீஷ்வரன்.

 

“பதில் சொல்லாம இருந்தா, நாங்க என்ன நினைக்கிறது சந்தோஷ்? இதை எங்ககிட்ட இருந்து வேணும்னே மறைச்சுருக்கீங்கன்னு எடுத்துக்கவா?” என்று வல்லபி வினவ, அதில் பதறியவன், “நோ மேம். அப்படியெல்லாம் இல்ல.” என்று வேகமாக கூறினான்.

 

பின், அவனே, “மேம், சத்தியமா சொல்றேன், நீங்க என்னை விசாரிச்சப்போ, இதை சொல்லணும்னு எனக்கு தோணவே இல்ல. ஏன்னா, ஆரா இறந்தது எனக்கு அப்போ தெரியாது. மகியோட டெத்ல இருந்தே வெளிய வராததாலயோ என்னவோ, வேற எந்த நியூஸும் எனக்குள்ள பதியவே இல்ல. அதுக்கப்பறம் தான் சாத்விக் கிட்ட இருந்து நிறைய மிஸ்ட் கால்ஸ் வந்ததை பார்த்து, அவனோட பேசுனப்போ, அங்க ஆராவும் இறந்தது தெரிய வந்துச்சு. அதுவும், ரெண்டு மர்டரும் ஒரே மாதிரி இருக்குறதாவும், ரெண்டுமே ஒரே ஆள் செஞ்சதா போலீஸ் சந்தேகப்படுறதாவும் அங்க இருக்குறவங்க பேசிக்கிட்டாங்க. அப்போ தான், உங்ககிட்ட, எனக்கும் அந்த டான்ஸ் ஸ்டுடியோக்கும் இருக்க கனெக்ஷனை சொல்லலன்னு புரிஞ்சுது.” என்று நிறுத்தினான்.

 

“ஓஹ், அதுக்கப்பறம் இவ்ளோ நேரம் இருந்துச்சே சந்தோஷ். அப்போ கூட சொல்ல தோணல அப்படி தான?” என்று வல்லபி கோபமாக கேட்க, அவன் மௌனமாக தலை குனிந்து கொண்டான்.

 

“நாங்க தலையை சுத்தி மூக்கை தொடுற மாதிரி, எங்கெங்கோ அலைஞ்சு விசாரிச்சு உங்ககிட்ட வந்தா, நீங்க சாதாரணமா மறந்துட்டேன்னு சொல்லுவீங்க, அப்படி தான? இதுல, போலீஸ், கேஸை ஸ்லோவா விசாரிக்கிறாங்கன்னு எங்க மேலேயே பழியை போடுவீங்க!” என்று தன் கோபத்தை கொட்டியவள், பின் சூழ்நிலை புரிந்தவளாக அமைதியானாள்.

 

இதில், என்ன ஆச்சரியம் என்றால், எப்போதும் வல்லபியின் இந்த அவசரத்தை தடுக்கும் பிரகதீஷ்வரன் கூட அவன் சிந்தனையில் ஆழ்ந்து, எப்போதும் செய்யும் செயலை செய்ய மறந்திருந்தான் என்பது தான்.

 

வல்லபி ஒரு பெருமூச்சுடன், “சரி, இப்போயாவது சொல்லுங்க, உங்களுக்கும் அந்த டான்ஸ் ஸ்டுடியோக்கும் என்ன சம்பந்தம்?” என்று வினவ, சந்தோஷும் மெல்லிய குரலில் கூற ஆரம்பித்தான்.

 

“மேம், அந்த டான்ஸ் ஸ்டுடியோ இருக்க இடம் எங்களுக்கு சொந்தமானது. ரென்ட்டுக்கு விட்டுருக்கோம். நான் இங்க தங்கி படிக்கிறதால, நான் தான் அந்த ரென்ட் விஷயத்தை கவனிச்சுக்குவேன். அப்படி தான் பழக்கம். அது மட்டுமில்லாம, எனக்கும் டான்ஸ்னா இஷ்டம். அவங்க ட்ரூப்ல இல்லன்னாலும், அப்பப்போ அங்க போய் அவங்க கூட ஜாலியா டான்ஸ் ஆடிட்டு வருவேன். டைம் பாஸ் மாதிரி! சோ, அந்த குரூப்ல இருக்க எல்லாரையும் எனக்கு நல்லா தெரியும்.” என்றான்.

 

இதை எல்லாம் அலைபேசி வழியே கேட்டுக் கொண்டிருந்த ஜெகதீஷும் பிரகாஷும், சந்தோஷ் கூறுவது உண்மையா என்று ஆராயும் வேலையை ஆரம்பித்தனர்.

 

“ஹ்ம்ம், அங்க இருக்குறவங்களை தெரியும்னா, அப்போ மகதி – ஆராதியா ஃபிரெண்ட்ஷிப் பத்தியும் தெரிஞ்சுருக்குமே?” என்றாள் வல்லபி.

 

அதற்கு சந்தோஷோ தயங்கியபடி, “முதல்ல தெரியாது மேம். ஆனா, ரீசண்ட்டா ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் தெரியும்.” என்று கூற, “உங்க தயக்கமே, நீங்க திரும்ப ஏதோ மறைக்குறீங்கன்னு சொல்லிடுச்சு சந்தோஷ்.” என்று அங்கு வந்ததிலிருந்து முதல்முறையாக பேசினான் பிரகதீஷ்வரன்.

 

தனக்கு புதிதாக அறிமுகமான அந்த காவலனை பார்த்த சந்தோஷ், “எனக்கே உறுதியா தெரியாததை எப்படி சொல்லன்னு உண்டான தயக்கமே தவிர, அதை மறைக்கணும்னு இல்ல சார்.” என்றான்.

 

“பரவால சந்தோஷ், உங்க டவுட் என்னன்னு எங்ககிட்ட சொல்லுங்க. அது உண்மையா பொய்யான்னு நாங்க கண்டுபிடிச்சுக்குறோம்.” என்றாள் வல்லபி.

 

“லாஸ்ட்டா ஒரு ஆறு மாசமாவே, அதாவது என்கிட்ட பேச ஆரம்பிச்சப்போல இருந்து, மகி சோசியல் மீடியால நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ண ஆரம்பிச்சா. அப்போ நானும் அவளை எதுவும் கேட்கல. எங்க நான் கேட்டு, அவ திரும்ப அவளோட கூட்டுக்குள்ள சுருண்டுக்குவாளோன்னு நினைச்சு நான் அமைதியா இருந்தேன். கொஞ்ச நாள்ல, நான் அந்த டான்ஸ் ஸ்டுடியோக்கு போறது அவளுக்கு தெரிஞ்சதும், அங்க இருக்கவங்களை பத்தி நிறைய கேட்பா. நான் கூட அவளுக்கு டான்ஸ்ல இன்ட்ரெஸ்ட்னு நினைச்சேன். ஆனா, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான், அவ ஆராதியாவோட சாட் பண்றது தெரிஞ்சுது. என்கிட்ட டான்ஸ் ஸ்டுடியோவை பத்தி விசாரிச்சதும், ஆராதியாக்காகன்னு புரிஞ்சுது.” என்றான்.

 

அதுவரை அவன் கூறுவதைக் கேட்ட வல்லபியோ, “இதை சொல்றதுக்கு என்ன தயக்கம்?” என்று கேட்டுக் கொண்டே பிரகதீஷ்வரனை பார்க்க, அவனோ எதையோ கண்டு கொண்டதை போல நின்றிருந்தான்.

 

“அது மேம்… இப்போ சொல்லப் போறது என்னோட டவுட் தான். இது கண்டிப்பா உண்மையா இருக்காது… இருக்கக் கூடாது!” என்று ஆரம்பித்தவன், “அன்னைக்கு தான், மகி ரெண்டாவதா இன்னொரு மொபைல் வச்சுருந்தது தெரிய வந்துச்சு. அது ஆராக்கு மெசேஜ் பண்ண மட்டுமே யூஸ் பண்றதாவும், மத்ததெல்லாம் அவளே இன்னொரு நாள் சொல்றதாவும் மகி என்கிட்ட சொன்னா.” என்று இப்போதும் அவன் சந்தேகத்தை முழுதாக கூறாமல் கூறி முடித்தான்.

 

அதைக் கேட்ட வல்லபிக்கு பெரிதாக அதிர்ச்சி எல்லாம் இல்லை. அவள் மூளையும் மனமும் இதற்கு தயாராக தான் இருந்தது போலும்.

 

“சோ, மகதியும் – ஆராதியாவும் ரிலேஷன்ஷிப்ல இருந்ததா நீங்க சந்தேகப்படுறீங்க அப்படி தான?” என்று வல்லபி வினவ, “கம்ப்ளீட்டா அப்படி சொல்லிட முடியாது மேம். மகி தனி மொபைல் வச்சுருந்ததை பார்த்தா, அப்படி தோணுறதை தடுக்க முடியல. ஆனா, இன்னொரு பக்கம், ஆரா லவ் பண்றது எனக்கும் தெரியும். ஏன், மகிக்கும் தெரியும். இன்ஃபேக்ட், அதை பத்தி மகி கிட்ட தான் நிறைய ஷேர் பண்ணதா ஆராவே என்கிட்ட ஒருமுறை சொல்லியிருக்கா.” என்றான்.

 

இடையில், மகதியின் உடைமைகளில் இரண்டாவது அலைபேசி எதுவும் இருக்கிறதா என்று பார்க்க சொல்லி பிரகாஷுக்கு செய்தி அனுப்ப, இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஒரு அலைபேசி தான் இருப்பதாக மறுமொழி வந்திருந்தது.

 

“அந்த செகண்ட் மொபைல் எங்க இருக்குன்னு ஏதாவது ஐடியா இருக்கா சந்தோஷ்?” என்று வல்லபி வினவ, சிறிது யோசித்தவன், “அவ வீட்டுல இல்லன்னா, மேபி காலேஜ் லாக்கர்ல இருக்கலாம்.” என்றான்.

 

“லாக்கர்?” என்று வல்லபி புருவம் சுருக்கி வினவ, “ஆமா மேம். அவ வாலிபால் பிளேயர். சோ, அவ ஸ்போர்ட்ஸ் திங்ஸ் வைக்க தனி லாக்கர் இருக்கும். அதை யாரையும் அக்சஸ் பண்ண விடமாட்டா.” என்றான் சந்தோஷ்.

 

அதில் பிரகதீஷ்வரனும் வல்லபியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

பின், சந்தோஷிடம், “ஓகே சந்தோஷ், நாளைக்கு உங்க காலேஜ்ல பார்க்கலாம்.” என்று அங்கிருந்து விடைபெற்றனர்.

 

*****

 

மீண்டும் ஒரு பொலீரோ பயணம்!

 

“சோ, நாளைக்கு அந்த லாக்கர் திறந்தா, ஏதாவது க்ளூ கிடைக்கலாம்.” என்று வல்லபி கூற, அதுவரை அமைதியை குத்தகைக்கு எடுத்தவனாக இருந்த பிரகதீஷ்வரனோ, “ஹ்ம்ம், இருக்கலாம். இல்ல இன்னும் புது குழப்பங்கள் ஏற்படலாம்.” என்றான்.

 

‘இவனுக்கு பாசிட்டிவ்வாவே பேச வராதா!’ என்று வல்லபி தான் மனதிற்குள் புழுங்கினாள்.

 

இருவரும் காவல் நிலையம் வந்து சேர, அங்கு பிரகதீஷ்வரனுக்காக காத்திருந்தனர் ஜோஸ்ஃபின் மற்றும் மதுமதி.

 

ஜோஸ்ஃபினை பார்த்ததும், அவள் தன்னிடம் கேட்டதும், அதில் தான் தவறியதும் ஞாபகம் வர, தன்னையே நொந்து கொண்டவன், வெளியே அது தெரியாதவாறு, “நீங்க இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க?” என்று அவர்களிடம் கேட்டான்.

 

*****

 

அதே நேரம் உள்ளே வந்த வல்லபியை தனியே அழைத்துச் சென்ற பிரகாஷோ, “மேம், சந்தோஷ் சொன்னது உண்மை தான். அவங்க அம்மா பேர்ல தான் அந்த இடம் இருக்கு. அதை ரென்ட்டுக்கு விட்டுருக்காங்க.” என்றான்.

 

“ஓஹ், ஓகே, வேறெதாவது அப்டேட்ஸ் இருக்கா?” என்று வல்லபி வினவ, “எஸ் மேம். அந்த அடல்ட் சைட் பத்தி விசாரிக்க சொன்னீங்களே, சைபர் டீம் ஹெல்ப்போட அதை பார்த்துட்டு இருக்கோம். ஆனா, இதுவரை அந்த சைட் பத்தி எந்த டீடெயில்ஸும் தெரியல மேம். ஆனா, விஷயம் ரொம்ப பெருசு. ஏன்னா, தோண்ட தோண்ட எல்லாம் டார்க் வெப்புக்குள்ள போகுது. அதுக்குள்ள அவ்ளோ ஈஸியா எதுவும் கண்டுபிடிச்சுட முடியாதுன்னு சொல்றாங்க.” என்று விளக்கினான் பிரகாஷ்.

 

“ஹ்ம்ம், எனக்கென்னவோ இந்த கொலைக்கும் அந்த வெப்சைட் ஆளுங்களுக்கும் சம்பந்தம் இல்லன்னு தோணுது. எனிவேஸ், அவங்களை கன்டினியூ பண்ண சொல்லுங்க.” என்று கூறிவிட்டு பிரகதீஷ்வரனுடன் இணைந்து கொண்டாள்.

 

‘அவன் என் இன்வெஸ்டிகேஷனுக்கு வந்தான்ல!’ என்னும் அதே எண்ணம் தான் இப்போது. மனநிலையில் மட்டும் மாற்றம் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமோ?

 

*****

 

“சார், உங்க பேட்டி பார்த்து கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. அதான், ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்னு வந்தோம்.” என்றாள் மதுமதி.

 

“அதுக்கு இவ்ளோ தூரம் வரனுமா?” என்று பிரகதீஷ்வரன் வினவ, “அது மட்டுமில்ல சார், டிவில தியா அப்பா பேட்டியும் பார்த்தோம். சார், தியா அப்பாக்கு அவ டான்ஸ் ஆடுறது பிடிக்காது. அதுக்கே ரொம்ப திட்டுவாரு. இதுல, அவ லவ் மேட்டர் தெரிஞ்சுடுச்சுன்னும், அதுக்கு அவ அப்பா ரொம்ப திட்டுனதாவும் சொன்னா சார். சோ, இன்னைக்கு அவரோட கோபம் கூட, அவ லவ் பத்தி தெரிஞ்சதாலன்னு தான் நினைக்கிறேன். திரும்ப சொல்றேன் சார், இதை வச்சு, அவ கேரக்டரை ஜட்ஜ் பண்ணாதீங்க.” என்றாள் ஜோஸ்ஃபின்.

 

பிரகதீஷ்வரனோ அதற்கு பதில் சொல்லாமல், “ஆக்சுவலா நானே நாளைக்கு உங்ககிட்ட விசாரிக்கணும்னு நினைச்சேன். இப்போ நீங்களே வந்ததால, கேன் வீ ப்ரோசீட்?” என்று வினவ, இரு தோழிகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, சம்மதமாக தலையசைத்தனர்.

 

“நாங்க இப்போ ஆராதியாவோட அப்பாவை விசாரிச்சுட்டு தான் வரோம். நீங்க சொன்ன மாதிரி அவருக்கு அவங்க லவ் மேட்டர் மட்டுமில்ல, வேறொன்னும் தெரிஞ்சுருக்கு.” என்றவன் வல்லபியை பார்க்க, அவளே அங்கு நடந்ததை பற்றி மற்ற இருவருக்கும் விளக்கினாள்.

 

வல்லபி கூறியதைக் கேட்ட ஜோஸ்ஃபினோ, “நோ நோ! இதென்ன முட்டாளத்தனமா குற்றச்சாட்டு? தியா அப்படியெல்லாம் இல்ல.” என்று வேகமாக மறுத்தாள்.

 

“ரிலாக்ஸ் ஜோஸ்ஃபின். நாங்க அதை உண்மைனு சொல்லல. ஆனா, இப்படி ஒரு சந்தேகம் அவங்க மேல வந்துருக்கு. அதை உங்ககிட்ட விசாரிக்கிறோம், அவ்ளோ தான்.” என்று சமாதானப்படுத்தினாள் வல்லபி.

 

அதில், சிறிது ஆசுவாசமடைந்த ஜோஸ்ஃபின், “மேம், அவ அப்பா ஏன் இப்படி நினைச்சாருன்னு எனக்கு தெரியல. ஆனா, அவரு அதுக்கு எக்ஸாம்பில்லா சொன்ன இன்சிடெண்ட் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அன்னைக்கு, அவ லவ் சொன்னதும், கிஸ் குடுத்ததும் எனக்கு தான்.” என்றாள்.

 

அதில் மற்ற மூவரும் அதிர்ச்சியாக ஜோஸ்ஃபினை பார்க்க, அவ்ளோ அன்றைய தினத்திற்கு சென்றாள்.

 

*****

 

தியா எரும, நேத்து ஏன் திடீர்னு ஐ லவ் யூனு சொல்லி கிஸ் வேற குடுத்த? எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு! இதுல, அதுக்கப்பறம் ஃபோனே எடுக்கல.”

 

ஜோஸ், கொஞ்சம் மெதுவா பேசு. எல்லாரும் நம்மள தான் பார்க்குறாங்க. அப்பறம், நீ சொன்னதை வச்சு என்னை தப்பா நினைச்சுட போறாங்க.”

 

நீ பண்ண வேலைக்கு தப்பா நினைக்கலன்னா தான் தப்பு!”

 

அது வந்து ஜோஸே, நேத்து எங்க அப்பா ஃபோன்ல யாரோட பேசுற, என்ன பேசுறன்னு ரொம்ப படுத்திட்டே இருந்தாரா, அதான் அவருக்கு ஷாக் டிரீட்மெண்ட் குடுக்கலாம்னு, உனக்கு உம்மா குடுத்துட்டேன். இப்போ அவரு என்னை அந்த மாதிரி பொண்ணா நினைச்சுட்டு இருக்காரு. நீ வேணும்னா பாரு, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நான் ருத் பத்தி சொன்னா, ‘நல்ல வேளை பையனை தான் லவ் பண்ணியிருக்கான்னு நிம்மதியா ஓகே சொல்லிடுவாரு.”

 

லூசு லூசு! உன் லவ்வுக்காக என் வாழ்க்கை தான் கிடைச்சுதா? ஆமா, இந்த கேனத்தனமா ஐடியாவை எங்க இருந்து பிடிச்ச?”

 

அதுவாஎல்லாம் படத்துல இருந்து தான்!”

 

******

 

ஆராதியாவின் குறும்பு பேச்சு இப்போது நினைவுக்கு வர, அவள் அனுமதியின்றியே கண்கள் கரித்தன ஜோஸ்ஃபினுக்கு.

 

நடந்ததை கூறிய ஜோஸ்ஃபின்னோ, “அன்னைக்கு விளையாட்டுக்கு பண்ணது, இப்போ அவளுக்கு எதிரா திரும்பும்னு நிச்சயம் நினைச்சுருக்க மாட்டா.” என்று விரக்தியாக கூறினாள்.

 

“சோ, உங்க ஃபிரெண்டு லெஸ்பியன் இல்லன்னு சொல்றீங்க, ரைட்?” என்று பிரகதீஷ்வரன் வினவ, மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையை கேட்க ஏதோ போல இருந்ததால், “சார் பிளீஸ், திரும்ப திரும்ப அதையே ஏன் கேட்குறீங்க? அதான் சொல்லிட்டேனே.” என்றாள் ஜோஸ்ஃபின்.

 

“நீங்க சொல்லிட்டீங்க ஜோஸ்ஃபின். ஆனா, உங்க ஃபிரெண்டு சொல்லலையே.” என்று பிரகதீஷ்வரன் கண்களால் மதுமதியை சுட்டிக்காட்ட, மதுமதியோ பதற்றத்துடன் துப்பட்டாவை கைகளில் சுற்றிக் கொண்டிருந்தாள்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்