Loading

சாபம் – 8

“என்ன மதி சொல்கிறாய்” என புரியாமல் கேட்க அவளோ பின்னே படர்ந்திருந்த தன் கூந்தலை முன்னே வாரி போட்டுக்கொண்டு அவளின் முதுகில் இருந்த பிறைமதி போன்ற மச்சத்தினை அவனிடம் காண்பித்தாள். அதனைக் கண்டவனுக்கு அதிர்ச்சியில் விழிகள் பிதுங்கின.

‘என்ன இது மதிக்கு என் மச்சக்காரியின் மச்சம். அப்படியென்றால் என் மச்சக்காரி மதி தானா. இல்லை இவள் ஒரு மானிட பெண். இவள் எவ்வாறு என்னவள் ஆக முடியும். இது இயற்கைக்கு புறம்பான விதி ஆயிற்றே. ஒருவேளை இது தான் என் விதியா. இவளை சந்திக்க தான் நான் பூலோகம் வந்தேனா.’ என பலவாறு சிந்தனைகள் மாறனின் மனதில் ஓட அவன் புறம் திரும்பிய மதி,

“இப்போ சொல்லு மாறா. இது காதல் இல்லன்னு. உன் மச்சக்காரி நான் தான் இப்போ தெரிஞ்சுட்டு தான. எனக்காக தான இத்தனை நாள் காத்திருந்த. என்னைப் பாக்க தான் இங்க வந்துருக்க நீ.” என அவள் கேட்க அவனோ பதில் கூற முடியாமல் தவித்தான்.

“மதி நீ என் மச்சக்காரியாகவே இருந்தாலும் என்னால் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது மதி. நான் அப்படிப்பட்ட சூழலில் சிக்கிக்கொண்டேன்.” என மாறன் வருத்தமாக கூற மதியோ,

“என்ன சொல்ற மாறா. நான் தான்  உன் மச்சக்காரின்னு தெரிஞ்ச அப்புறமும் உன்னால என்னை ஏத்துக்க முடியாதா. ஏன்..?” என அவள் புரியாமல் கேட்க மாறனோ உண்மையை கூறிவிடலாம் என முடிவு செய்து கூற ஆரம்பித்தான்.

“மதி. உன்னிடம் நான் ஒரு உண்மையை மறைத்துவிட்டேன். நான் கூறப்போவதை நினைத்து பயம்கொள்ளதே. மனதினைத் திடப்படுத்திக்கொள். நான் மனிதனல்ல. நான் ஒரு பூதம். என் பெயர் பூதமாறன்.” என அவன் கூற அதனைக் கேட்டு பயம் கொள்வாள் என நினைத்து மாறன் அவளைப் பார்க்க அவளோ இவன் கூற்றினைக் கேட்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.

“யோவ் யாரு யா நீ. ஹையோ அம்மா முடியல. என்னைப் பிடிக்கலனா பிடிக்கலன்னு சொல்லுயா. இப்படி சிரிப்பு காட்டாத. இவர் பூதமா அத சொன்னா நாம நம்பணுமாம். நல்ல கதையா இருக்கே. வேற ஏதாச்சும் நம்புற மாதிரி சொல்லு.” என அவள் நம்பாமல் சிரித்துக்கொண்டே கூற மாறனோ தன் கையில் கட்டியிருந்த அந்த மந்திர கயிற்றினை அவிழ்த்தான்.

அவிழ்த்த அடுத்த கணமே அவனின் தலையில் இரு கொம்புகளும் கண்களில் பச்சை நிறமும் தென்பட்டது. அவன் ஏதோ செய்கிறான் என பார்த்த மதிக்கு இந்த காட்சி அதிர்ச்சியளித்தது. அதனைக் கண்டவள் அதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள். மீண்டும் ஓடி சென்று அவளைத் தாங்கிப்பிடித்தவன் அருகிலிருந்த குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்து கொண்டுவந்து அவளின் முகத்தில் தெளித்தான். லேசாக கண் விழித்தவள் அவனைப் பயத்தோடு பார்த்து விழிகள் விரிய,

“யோவ் என்னயா ஆச்சு உனக்கு. திடிர்னு கொம்பு முளைக்குது. கண்ணு நிறம் மாறுது” என பயந்தவாறும் பதறியவாறும் அவள் கேட்க அவனோ,

“ஆம் மதி. இது தான் எனது சுயரூபம். யாம் தேவர்கள் கூறும் கடமையை நிறைவேற்ற படைக்கப்பட்ட பூதஉலகில் பிறந்த பூதம். இதுவே எனது தோற்றம். பலகாலங்களாக விடுபட முடியாத ஒரு சாபத்தில் சிக்கியுள்ள எமது பூத உலகத்தை விடுவிக்க எமக்கு எங்களது இரண்டாம் சாஸ்திரம் வேண்டும். அதனைக் கொணர்ந்து சென்றால் தான் எமது பூத உலகிற்கு விடுதலை கிட்டும். அதற்காக தான் யாம் மானிட உலகத்திற்கு வந்துள்ளோம். யாம் பூதமாக இருப்பதால் தான் எம்மால் மந்திரங்கள் கூறி மாயங்கள் செய்ய இயலுகிறது.” என மாறன் அனைத்தையும் கூறிமுடிக்க மதிக்கோ தலை சுற்றாத குறை தான். அவளின் கண்களையும் செவிகளையும் அவளாலேயே நம்ப முடியவில்லை.

“யோவ் என்னயா சொல்ற. நம்பவே முடியல என்னால. அப்போ நிஜமா நீ பூதமா. ஒரு பூதத்தையா நான் காதலிச்சேன். யோவ் உண்மைய சொல்லுயா. நீ சொன்னதெல்லாம் நிஜமா. இல்ல என்னை ஏமாத்த இப்போவும் மாயமந்திரம் செய்யுறியா” என அவள் சந்தேகமாக கேட்க,

“நான் கூறிய அனைத்தும் சத்தியம் மதி. முன்னமே கூறியிருந்தால் நீ என்னுடன் வந்திருக்க மாட்டாய் அல்லவா. அதனால் தான் நான் உண்மையை மறைத்தேன். பூதம் மானிடத்தை மணம் செய்ய இயலாது மதி. நான் மனிதனாய் பிறந்திருக்கலாம் என இப்பொழுது வருந்துகிறேன். என் மச்சக்காரி என் கைவரை எட்டியும் எனக்கு கிடைக்காத நிலை. நான் துரதிர்ஷ்டசாலி போலும்” என கண்கலங்கி கூற இப்பொழுது தான் மதி நம்பினாள்.

“அப்போ என்னோட காதல் உனக்கு புரிஞ்சுதாயா. என் காதல நம்புறியா நீ” என மதி கேட்க அவனோ,

“ஆம் மதி. நீ சொல்லும் விதத்திலேயே உன் காதலின் ஆழம் எனக்கு புரிந்துவிட்டது. ஆனால் உன் காதலைப் பெற்றுக்கொள்ள முடியாத பாவி ஆகிவிட்டேன் நான்.” என அவன் வருந்த அவளோ,

“யோவ் எனக்கொரு சந்தேகம். எனக்கென்னமோ காரணமில்லாம நாம சந்திச்சுருக்க மாட்டோம்னு தோணுது. உன் கோரிக்கை நிறைவேற்றப்படும்னு உனக்கு தேவர்கள் சொன்னாங்க தான” என மதி கேட்க,

“ஆம் சொன்னார்கள் தான். ஒருவேளை வேண்டுதலைத் தவறாக வைத்துவிட்டேன் போலும். என் மச்சக்காரியை சந்திக்க வேண்டும் என்று மட்டும் தானே கேட்டேன். அதனால் தான் சந்திக்க மட்டும் செய்துவிட்டு உடன் வாழ முடியாதபடி செய்துவிட்டார்கள் போல்.” என அவன் கூற மதிக்கோ அவன் கிடைக்கமாட்டான் என நினைக்கவே மனம் பாரமாக இருந்தது. கண்கள் கரித்துக்கொண்டு வர ஏங்கி ஏங்கி அழுக ஆரம்பித்துவிட்டாள்.

மாறனுக்கும் மிகவும் வலித்தது. இத்தனை நாள் யாருக்காக காத்திருந்தோமோ அவள் கண்முன்னே இருந்தும் அவளை மணக்க முடியாது என நினைக்க நினைக்க கோபமும் ஏக்கமும் ஒருசேர தோன்றியது. அழுது கொண்டிருந்தவள் திடீரென கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து,

“இல்லையா எனக்கு நம்பிக்கை இருக்கு. நாம சேருவோம். என்னால உன்ன விட்டு கொடுக்க முடியாது. நாம சேருறதுக்கு ஏதாவது வழி இருக்கா பாருயா உன் கைல இருக்குற அந்த சாஸ்த்திரத்துல.” என முடிவோடு அவள் கூற மாறனும் தேவர்களிடம்,

‘தேவர்களே. இதென்ன எனக்கு வந்த சோதனை. என் மச்சக்காரி கிடைத்துவிட்டாள். ஆனால் அவள் என்னவள் ஆக முடியாதபடிக்கு செய்துவிட்டிர்களே. இதென்ன நியாயம். எனக்கு என் மதி வேண்டும். உதவி செய்யுங்கள்” என வேண்டிவிட்டு சாஸ்திரத்தைத் திறக்க அதில்,

‘மங்கல சாட்சியாக எம் தொடர்ச்சி
மாங்கல்யமாக மந்திரக்கயிறு
மந்திரம் உச்சரித்து கட்டுவாயாக
மதியின் கரத்தில்’

என எழுதிருக்க இருவரும் புரியாமல் நோக்கினர். ஏற்கனவே மதி நமக்கு கிடைக்கமாட்டாள் என்ற சோகத்தில் மாறனிருக்க இப்பொழுது அவனால் ஏதும் சிந்திக்க கூட முடியவில்லை. ஆனால் மதியோ எப்படியாவது மாறனுடன் நாம் சேர வேண்டும் என்ற ஒன்றை மட்டும் தாரக மந்திரமாய் மனதில் நினைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் தோன்றிய வரிகளை முனைப்புடன் மீண்டும் மீண்டும் படித்தாள்.

ஒருவாறு படித்து புரிந்து முதல் வரியை தவிர மற்ற வரிகளுக்கு அர்த்தம் கண்டுபிடித்துவிட்டாள்.

‘முதல் வரிக்கு மட்டும் அர்த்தம் புரியலையே…’ என மனதினுள் நினைத்தவள் மீண்டும் முதல் வரிக்காக சிந்திக்க அவளின் கண்களில் அவனின் சாஸ்திரம் பட்டது. அதன் முகப்பு பக்கத்தில் “தேவசாஸ்திரம் பாகம் ஒன்று” என எழுதிருக்க அதனைக் கண்டவளுக்கு ஓர் யோசனை தோன்றியது.

‘இது முதல் பாகம்னா அப்போ இதோட தொடர்ச்சி இரண்டாம் பாகம். அதாவது மாறன் தேடி வந்துருக்குற அந்த ரெண்டாவது சாஸ்திரம். ஆமா இதே தான் நான் கண்டுபிடிச்சுட்டேன்’ என மனதில் நினைத்து குதூகலித்தவள் மாறனிடம்,

“யோவ் மாறா நான் கண்டுபிடிச்சுட்டேன். இந்த வரிகளுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சுட்டேன் யா” என மகிழ்ச்சியாக கூற அவனுக்கோ ஆச்சர்யம். அப்பொழுது தான் அவன் சிந்தித்தான். இவ்வளவு நேரம் அதனை சிந்திக்காமல் நடந்ததை எண்ணி வருந்தியிருக்கிறோம் என. பிறகு அவளிடம்,

“என்ன மதி சொல்கிறாய். நீ இவ்வரிகளுக்கு அர்த்தம் கண்டுபிடித்துவிட்டாயா. எவ்வாறு” என கேட்க அவளோ,

“யோவ் நீ யோசிக்குற மாதிரி யோசிச்சு பாத்தேன் யா வந்துருச்சு. சரி இப்போ அதுவா முக்கியம் என்ன கண்டுபிடிச்சேன்னு கேளு.” என அவள் கூற,

“சரி கூறு மதி” என்றான்.

“அதாவது முதல் வரி ‘மங்கல சாட்சியாக எம் தொடர்ச்சி’ அப்படினா இந்த சாஸ்திரத்தோட தொடர்ச்சி எது. நீ தேடி வந்த அந்த ரெண்டாவது சாஸ்திரம். அத சாட்சியா வச்சு… ரெண்டாவது வரி ‘மாங்கல்யமாக மந்திரக்கயிறு’ அதாவது இப்போ நீ உன் கைல இருந்து கழட்டுனல அது தான மந்திர கயிறு” என அவனிடம் கேட்க அவனும் ஆமென்றான். பிறகு, “மூன்றாம் வரி ‘மந்திரம் உச்சரித்து காட்டுவாயாக’ மந்திரம் சொல்லி கட்டணும். நான்காவது வர ‘மதியின் கரத்தில்’ என்னோட கையில” என அவள் தெள்ள தெளிவாக கூறிவிட்டு அவனிடம்,

“என்னயா புரிஞ்சுது தானே. சரி தானே” என அவள் கேட்க அவனோ,

“மதி அருமையாக கண்டுபிடித்துவிட்டாய். அஃதாவது முதலில் நாம் அந்த இரண்டாவது சாஸ்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதனை சாட்சியாக வைத்து என் மந்திர கயிற்றினை மாங்கல்யமாக பாவித்து மந்திரம் உச்சரித்து உன் கையில் நான் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால் நம் வாழ்க்கைக்கான விடை கிடைக்கும். அது தானே” என அவன் உற்சாகமாக கேட்க மதியும் மகிழ்ச்சியாக ஆமென தலையசைத்தாள்.

“ஆமா யா. வா சீக்கிரம். அந்த சாஸ்திரம் எங்க இருக்குன்னு தேடுவோம். கண்டிப்பா நம்ம காதல் நிறைவேறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மாறா.” என அவள் கூற இருவரும் முனைப்புடன் சாஸ்திரத்தைத் தேடி கண்டுபிடிக்க சென்றனர்.

அந்த நான்காவது வழி எதுவரை நீண்டு கொண்டு செல்கிறதோ அதுவரை இருவரும் கைகோர்த்தபடி நடந்து சென்றனர். இடையிடையே கிடைக்கும் இடங்களில் எல்லாம் மரத்திலோ பாறையிலோ எதிலாவது “மதிமாறன் மதிமாறன்” என எழுதி கொண்டே வந்தாள் மதி. அதனைக் கண்டவன் அவளிடம்,

“மதி என் காதலிலாவது சுயநலம் இருக்கிறது. ஆனால் நீ எப்படி மதி எந்த காரணமுமில்லாமல் என்னை இவ்வளவு காதலிக்கிறாய். உன் காதல் முன் என் காதல் வெறும் தூசு தான். உன்  காதலை எண்ணி நான் வியக்கின்றேன் மதி. உன் காதலுக்கு நான் தகுதியானவன் இல்லை என என்  மனம் என்னைக் குற்றம் சாட்டுகிறது. ஆயினும் உன்னை நான் பிரியமாட்டேன். நீ எனக்கு கிடைத்த வரம் மதி. உன்னை ஒருபோதும் தவற விட மாட்டேன். உன்னுடன் வாழ முடியாது என்ற நிலை வந்தால் கூட நான் பூமிக்கு வந்து உன்னைப் பார்த்துக்கொண்டே என் நாட்களைக் கழித்து கொள்வேன்.” என கண்கலங்கி அவன் கூற,

“யோவ் ஏன் யா இப்போ இப்படி வருத்தமா பேசுற. கண்டிப்பா நல்லதே நடக்கும் யா. நான் உனக்கு வரம்னு சொன்னல. இல்லவே இல்ல. நீ தான் யா எனக்கு வரம். உன்னோட அந்த ரெண்டாவது சாஸ்திரம் இருக்கே அது தான் நம்ம காதலோடு வரமே.. அது மூலமா தான நீ எனக்கு கிடைக்க போற யா” என பூரிப்புடன் கூறிக்கொண்டிருக்க மாறன் அதனை ரசித்துக்கொண்டிருக்க விதியோ உங்களின் காதல் வரமா அல்ல சாபமா என சற்று நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள் என சிரித்தது.

சிறிது தூர பயணத்திற்கு பிறகு ஒரு மலையின் உச்சத்தை அடைந்தனர் இருவரும். அங்கிருந்து வேறெங்கும் செல்ல முடியாது என தெரிந்தது. அருகிலே அருவியின் தொடக்கம் மட்டுமே தென்பட்டது. அங்கு ஓரிடத்தில் அமர்ந்தனர் இருவரும்.

“இதுக்கு மேல போக எங்கயும் வழி இல்லையா. இங்கன தான் அந்த சாஸ்திரம் இருக்கும்னு நெனைக்கிறேன் யா”

“ஆம் மதி. சாஸ்திரத்தைக் கேட்போம். அது தானே நம் வழிகாட்டி.” என்றவன் கண்களை மூடி தேவர்களை பிராத்தித்துவிட்டு சாஸ்திரத்தைத் திறக்க அதில்,

‘சாகாவர நதியின் ஆதியிலே
சற்று நீரினை விலக்கினால்
சாஸ்திரம் அடியிலே…’

என வந்திருக்க இம்முறை இருவரும் சேர்ந்தே அர்த்தம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

“இந்த நதியின் பெயர் என்ன மதி” என மாறன் கேட்க அவளோ,

“சஞ்சீவினி நதின்னு சொல்லுவாங்க மாறா” என்றாள்.

“சஞ்சீவினி மூலிகை என்பது சாகாவரமளிக்கும் மூலிகை. சாகவர நதியின் ஆதி என்றால் சஞ்சீவினி நதியின் தொடக்கமான இந்த அருவியாக தான் இருக்க முடியும் மதி” என மாறன் அவன் கண்டுபிடித்த கூற்றைக் கூற மதியோ,

“ஆமா மாறா. அப்போ இங்க இருக்குற தண்ணியை விலக்கி பார்த்தா தண்ணிக்கு அடில சாஸ்திரம் இருக்குமா” என அவள் கண்டுபிடித்ததைக் கூற மாறனும்,

“ஆம் மதி அதே தான். ஆனால் தண்ணீரை எவ்வாறு விலக்குவது” என அவன் கேட்க அவளும் அதே கேள்வியோடு சிந்திக்க அவள் கையில் இருந்த சாஸ்திரம் தானாக திறந்தது. அதில்,

“கதிரவன் மறைவதற்குள்
கடை மந்திரம் உச்சரித்து
தோடினை வீசி தோண்டுக”

என அதில் எழுதியிருக்க இருவருக்கும் இம்முறை எளிதில் அர்த்தம் புரிந்தது. ஆனால் அர்த்தமறிந்த இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர். மதியோ வழி கிடைத்துவிட்டது என உற்சாகமாய் இருக்க மாறனோ கண்கலங்க மதியைப் பார்த்தான்.

“யோவ் ஏன் யா கண் கலங்குற. அதான் வழி கிடைச்சுருச்சே. உன்னோட மந்திர தாள்ல இருக்குற கடைசி மந்திரத்தை உச்சரிச்சு என்னோட தோட கழட்டி வீசுனா தண்ணி விலகிரும் போல. அப்றம் நாம மண்ணைத் தோண்டி சாஸ்திரத்தை எடுத்துறலாம். இதுக்கு எதுக்கு யா கண் கலங்குற” என அவள் வெகுளியாய் கேட்க மாறனோ,

“என்னை மன்னித்துவிடு மதி.” என கீழே அமர்ந்து அவளின் இடையைக் கட்டிக்கொண்டு கதறி அழுதான். மதியோ,

“மாறா என்னாச்சு. இப்போ எதுக்கு அழுற. அதான் எல்லாம் நல்லபடியா முடிய போகுதே. அப்றம் எதுக்கு யா மன்னிப்பு எல்லாம் கேக்குற. நம்ம காதல் தான் கூடிய சீக்கிரம் சேரப்போகுதே” என அவள் கூற அவனோ குற்றவுணர்வாய் அவளின் முகம் நோக்கி,

“மதி. இந்த சாஸ்திரம் தான் நம் காதலின் வரமென கூறினாயல்லவா.. ஆனால் இது காதல் சாபமாய் விளங்கப்போகிறது மதி.” என மாறன் கலக்கமாய் கூற அதனைக் கேட்டு அதிர்ந்தாள் மதி.

காதல் சாபம் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்