Loading

சாபம் – 7

‘அயோ என்னாச்சு இப்படியெல்லாம் பண்ணமாட்டானே. ஒருவேளை நாம நெனச்சது தெரிஞ்சுடுச்சோ.’ என நினைத்தவாறு நடக்க மாறனோ ஏதோ குற்றஉணர்வாய் உணர்ந்தான்.

‘இந்த பெண் பேசுவதைப் பார்த்தால் நம் மீது விருப்பம் கொண்டிருக்கிறாள் போலும். இது தவறல்லவா. வீணாக நம் மேல் ஆசை வளர காரணமாகிவிட்டோமோ. யாம் அப்படிப்பட்ட நோக்கத்தோடு அவளிடம் பேசவில்லை. அது மட்டுமில்லாமல் நாம் ஒரு பூதம். அவளோ ஒரு மானிட பெண். ஒத்துப்போகவும் வாய்ப்பில்லை. நான் என் மச்சக்காரியை மட்டுமே மணப்பேன். மதி அவளின் விருப்பத்தை ஒப்புக்கொண்டால் நாம் பொறுமையாக பேசி புரிய வைக்க வேண்டும்.’ என மனதினுள் நினைக்க இவனின் மனசாட்சியோ,

‘உன் மேலும் தவறு இருக்கிறது. நீ அவளின் மனதில் ஆசையை வளர்க்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறாய்’  என குற்றம் சாட்ட அவனோ,

‘நான் என்ன செய்தேன். இதுவரை அதுபோன்று அவளிடம் நான் பேசியதும்  இல்லை. பார்த்ததும் இல்லை. பின் எவ்வாறு நீ என்மீது குற்றம் சாட்டுகிறாய்’ என தன் மனசாட்சியிடம் வாதாட அதுவோ,

‘நீயே சிந்தித்து பார். உனக்கே தெரியவரும்’  என கூற மாறனும் சிந்திக்க ஆரம்பித்தான். மதியை பார்த்த முதல் கணத்திலிருந்து இப்போது வரை அனைத்தையும் பார்க்க நட்சத்திர தோடினை கண்டவுடன் அவனறியாமல் அவளை நெருங்கியது நினைவு வந்தது.

‘நான் தோடினை பார்க்க தான் நெருங்கினேன். அது அவளுக்கு ஏதேனும் உணர்வினைத் தூண்டிவிட்டதா. நாம் செய்தது தவறு தான். தோடினைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் இப்படி செய்துவிட்டோமே’ என தனக்குள் நொந்துகொண்டான். மீண்டும் சிந்திக்க அவளின் கரம் பற்றி நடந்தது வந்தது.

‘இதுவும் அவளின் நன்மைக்கு தானே செய்தேன். அவளின் பயம் போக்க மட்டும் தானே யாம் அவ்வாறு செய்தோம்.’ என மீண்டும் நொந்து கொண்டான். பிறகு நன்கு சிந்தித்து ஒரு முடிவெடுத்தவனாக தன் மனசாட்சியிடம் கூறினான்.

‘நான் செய்ததும் தவறு தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதனையெல்லாம் நான் எந்த வித நோக்கத்துடனும் செய்யவில்லை. அது மட்டுமல்ல. என் மச்சக்காரியைப் பற்றி கூட நான் அவளிடம் கூறியிருக்கிறேன்.

ஒருவேளை அவளுக்கு என்மீது விருப்பமிருந்து அதனை என்னிடம் தெரிவித்தால் நான் பொறுமையாக அவளிடம் எடுத்துக்கூறி புரியவைப்பேன். அவள் புரிந்துகொள்வாள். இது வெறும் பாலின கவர்ச்சியாக மட்டுமாக தான் இருக்க முடியும்’ என தனக்கு தானே சமாதானம் கூறிவிட்டு யோசித்தபடி அவளின் பின்னே சென்றான். அடிக்கடி பின்னே திரும்பி பார்த்துக்கொண்டே வந்த மதியரசி இவனின் ஆழ்ந்த யோசனையைக் கண்டு,

“யோவ் என்னையா ஏதோ பலமா யோசிச்சுட்டே வர. என்ன விஷயம்னு சொல்லு நான் வேணா யோசனை சொல்றேன்” என அவள் கேட்க அவனோ,

‘யோசனையே உன்னை பற்றி தானே.’ என நினைத்துவிட்டு,

“ஒன்றுமில்லை மதி. என் மச்சக்காரியைப் பற்றிய சிந்தனை தான்.” என அவன் கூற அவளோ வெட்கப்பட்டு சிரித்தாள் தன்னைப் பற்றி  தான் நினைக்கிறான் என நினைத்து. அதனைக் கண்டவனோ,

‘என்ன இவள். என் மச்சக்காரியைப் பற்றி கூறினால் இவள் வெட்கப்படுகிறாள். நியாயப்படி இவள் கோபம்தானே கொள்ளவேண்டும்.’ என குழப்பமாய் சிந்தித்தான்.

இவ்வாறு இருவரும் இரு வேறு மனநிலையில் அந்த நான்காவது வழியில் சென்றுகொண்டிருந்தனர். செல்லும் வழியில் ஒரு மரத்தில் நீல நிறத்தில் கண்ணைக் கவரும் வகையில் அழகான பழங்கள் பழுத்து தொங்கியது. அதனை இருவரும் வியந்து பார்த்தனர். அதனை எக்கி பறித்தவள் அவனுக்கு ஒன்று கொடுத்து தானும் ஒன்று உண்டாள். உண்டவுடன் அவளின் மேனி நீலநிறத்தில் மாறி உடல் முழுந்தும் விஷம் ஏற துவங்க அதனை உணர்ந்தவள் அவன் அதனைக் கடிக்க வரும் நேரத்தில் தட்டிவிட்டு மயங்கி சரிந்தாள். திடீரென அவள் சரிந்ததும் அவளைத் தாங்கிப்பிடித்தவன் தன் மடியில் அவளைக் கிடத்திவிட்டு,

“மதி என்ன ஆயிற்று.. ஏன் மயங்கிவிட்டாய்” என கேட்டபடி பார்க்க அவளின் மேனி முழுவதும் நீல நிறத்தில் மாறியிருந்தது. அரை மயக்கத்தில் இருந்த மதியோ,

“மாறா… இந்.. இந்த பழம் விஷமுள்ள பழம் போல.. நீ சாப்.. சாப்பிடாத.. எனக்கு விஷம் ஏறிடுச்சு.. நான் கொஞ்ச நேரத்துல சாக.. சாகப்போறேன்.” என அவள் திக்கித்திணறி கூற அவனோ,

“மதி. தயவுகூர்ந்து அவ்வாறெல்லாம் கூறாதே. உனக்கு ஒன்றும் ஆகாது. எழுந்துவிடு மதி. நீ சாகமாட்டாய். அயோ அவசரமாக உன்னை யார் அதனைப் புசிக்க சொன்னது. இப்பொழுது பார். கவலை கொள்ளாதே.” என பதறியவாறு கண்கள் கலங்க அவளின் பட்டுக்கன்னம் வலிக்க தட்டியவாறு அவளை விழிக்க வைத்துக்கொண்டிருந்தான். அவளோ,

“இல்ல மாறா. எனக்கு நான் பிழை.. பிழைப்பேன்னு நம்பிக்கை இல்ல. ஆனா சாகுறதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல.. சொல்லணும் ஆசைப்படுறேன். எனக்கு உன்ன ரொம்ப பிடிச்.. பிடிச்சுருக்கு யா. உன்மேல எனக்கு வந்த அந்த நெனப்பு காதலான்னு எனக்கு தெரியல.. ஆனா உன்னோட கண்ணியம் தான் என்னை வியக்க வச்சது. அடுத்த ஜென்மத்துலயாவது நான் உன்கூட சேரனும்.” என கூறியவள் பிறகு உன்னோட மச்சக்காரி நான் தான் என கூற நினைத்து அதனைக் கூற வாயெடுக்க, “உன் மச்சக்காரி…” என ஆரம்பித்தவள் நான் தான் என கூறாமலே மயங்கி சரிந்தாள்.

அவளின் கூற்றில் கண்கலங்கி நின்றவன் அவள் மயங்கியதும் செய்வதறியாமல் திணறினான்.

‘அயோ கடவுளே. இப்பொழுது நான் என்ன செய்வது. எனக்காக உதவி செய்ய நீ வந்து இப்பொழுது உன் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதே. தேவர்களே மதியை நான் காப்பாற்றியாக வேண்டும். தயவுக்கூர்ந்து எமக்கு உதவுங்கள். என் உயிரேனும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் மதி காப்பாற்றப்படவேண்டும்.’ என கதற அவனின் சாஸ்திரம் காற்றில் தானாக திறந்தது. அதில்,

‘உயிர்கொடுத்து உயிர்ப்பிக்க
உச்சரிப்பாயாக மும்மந்திரம்’

என அதில் எழுதியிருக்க அதனைப் படித்தவுடன் அர்த்தம் புரிந்துகொண்டான். உடனே தன் ரகசிய மந்திரங்கள் எழுதியிருக்கும்  காகிதத்தைக் கையில் எடுத்தான். ஏற்கனவே அதில் நன்கு மந்திரங்கள் மறைந்திருந்தன. இப்பொழுது மதியை உயிர்ப்பிக்க வேண்டுமெனில் அதிலிருக்கும் மூன்று மந்த்திரங்களை ஒன்றாக உச்சரித்து தேவர்களை வேண்ட வேண்டும்.

சற்றும் தாமதிக்காமல் மூன்று மந்திரங்களை உச்சரித்தவன் தேவர்களிடம், ‘தேவர்களே என் மதியை உயிர்ப்பிக்க உதவுங்கள்’ என கண்களை மூடி பிராத்தித்துக் கொண்டே இருக்க காகிதத்திலிருந்து மூன்று மந்திரங்கள் மறையவும் மதி கண்விழிக்கவும் சரியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் மேனியிலிருந்து நீல நிறம் மறைந்தது. அதிலும் அவன் என் மதி என கூறியது அவனறியாமல் அவன் மனதிலிருந்து வந்த வார்த்தைகள்.

மாறனோ இன்னும் கண்விழிக்காமல் சத்தமாக தேவர்களிடம் “என் மதியை உயிர்ப்பிக்க உதவுங்கள்” என மீண்டும் மீண்டும் வேண்டியபடி அமர்ந்திருந்தான் கண்களில் கண்ணீருடன். கண் விழித்த மதி எழுந்து அமர்ந்து மாறனை நோக்கினாள். அவளுக்கு புரிந்தது. தான் இப்பொழுது உயிருடன் இருப்பதற்கு காரணம் மாறன் மட்டுமே என. வார்த்தைக்கு வார்த்தை என் மதி என் மதி என அவன் கூறியதையும் நினைத்து மகிழ்ச்சிக் கொண்டாள் மதி. அவள் அவனின் தோளில் கைவைத்து,

“மாறா” என அவள் அழைக்க அவனோ அவளை உயிருடன் கண்டதும் சற்றும் யோசிக்காமல் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

“மதி.. மதி.. நீ எழுந்துவிட்டாயா. நீ நலமுடன் இருக்கிறாய் தானே. ஏன் அவசரப்பட்டு அதனை உண்டாய். உன் உடம்பில் விடமேறியதும் என் உயிர் போய்விட்டது போல் வலித்தது. நல்லவேளை மந்திரங்கள் உச்சரித்து உன்னை மீட்டுவிட்டேன். தேவர்களுக்கு தான் நன்றி கூறவேண்டும். இனிமேல் இவ்வாறு செய்துவிடாதே.” என கண்கலங்க கூறிக்கொண்டே இருந்தான். அவளோ தன் மீது மாறன் கொண்டுள்ள அக்கறையை எண்ணி பூரித்தாள்.

“என்மேல இவ்ளோ அக்கறை இருக்காயா உனக்கு. எனக்கு இது போதும். அப்போ உனக்கும் என்னைப் பிடிக்கும் தானே. நீ என்னை ஏத்துப்பியா மாறா” என அவள் கேட்க அப்பொழுது தான் மயக்கத்தில் மதி கூறியது அனைத்தும் அவனின் நினைவிற்கு வந்தது. சட்டென்று அவளிடம் இருந்து விலகியவன் திரும்பி நின்றான். தன் அக்கறையையும் அவள் தவறாக புரிந்து கொண்டாள் என நினைத்தவன் பேச ஆரம்பித்தான். அவனின் விலகளில் மதியின் முகம் வாடியப்பயிரைப் போல் காட்சியளித்தது.

“மதி. நான் கூறுவதை சற்று பொறுமையாக கேள். நீ என்மீது கொண்டுள்ள உணர்வினைக் காதல் என தவறாக புரிந்து வைத்திருக்கிறாய். இது வெறும் பாலின கவர்ச்சி மட்டுமே. எனக்கே தெரியாமல் சில நேரங்களில் உன்னைக் கவரும் வகையில் நான் நடந்து கொண்டேன் என எனக்கு புரிந்தது. அதற்கு மன்னிப்பு வேண்டுகிறேன். ஆனால் இது காதல் அல்ல. அவ்வாறே காதலாக இருந்தாலும் கூட இந்த காதல் நிறைவேறாது. நிறைவேற முடியாது.” என மாறன் கூறி முடிக்க அவனின் கூற்றில் பொங்கி எழுந்த மதியோ,

“யோவ் வாய மூடுயா. உனக்கு என்மேல காதல் இல்லன்னு வேணா சொல்லு. அதுக்காக என்னோட காதல கவர்ச்சின்னு சொல்லி கொச்சைப்படுத்தாத. என்னய்யா தெரியும் உனக்கு என் காதல பத்தி. மனசளவுலயும் சரி உணர்வு அளவுலயும் சரி இது தான் காதல்னு எனக்கு தெரிஞ்சுடுச்சு. எனக்கு உன்ன பிடிக்க காரணமே உன்னோட கண்ணியம் தான் யா.

முதல் தடவ பாக்கும்போது நான் அரைகுறையா உடம்ப மறைச்சு தான் உன் முன்னாடி நின்னேன். அப்போ கூட உன் கண்ணு என் கண்ண தவிர எங்கயும் பாக்கல. அப்போவே உன்னோட கண்ணியம் எனக்கு பிடிச்சுச்சு. ரெண்டாவது தடவ பாக்கும் போது உணர்வால புரிஞ்சுது. நீ என்னமோ என்னோட தோட பாக்க தான் என்கிட்டே வந்த. ஆனால் அந்த நேரம் எனக்குள்ள நடந்த மாற்றத்தை என்னால உணரமுடிஞ்சுது. இது எந்த ஒரு ஆம்பள பக்கத்துல வந்தாலும் தோணும்னு நீ நெனச்சா அது தான் இல்ல.

ஏன்னா இதுவரை மத்த ஆம்பளைங்க என் பக்கத்துல நின்னா கூட என் உடம்பு முழுக்க எரிய ஆரம்பிச்சுரும். அதனாலேயே எந்த ஆம்பளை பக்கம் நிக்கக்கூட மாட்டேன். ஆனால் நீ என்னை நெருங்கும் போது எனக்கு கொஞ்சம் கூட எரியல. ஏன் அப்படி நடக்கணும். அதுலயே எனக்கு தெரிஞ்சுது.  கண்டிப்பா உனக்கும் எனக்கும் ஏதோ சமமந்தம் இருக்குன்னு.

அப்றம் உன்ன நம்பி நான் தூங்குனது. எந்த ஒரு ஆம்பளையா இருந்தாலும் தனக்கு பக்கத்துல இப்படி ஒரு பொண்ணு தூங்குறா. இவளை என்ன பண்ணாலும் கேக்குறதுக்கு யாரும் வரமாட்டாங்கங்குற சமயத்துல தப்பு பண்ண தோணும். ஆனா நீ அப்போ கூட எனக்கு துணையா இருக்கனும் னு நீ முழிச்சுருந்த.

தெரிஞ்சோ தெரியாமையோ நீ என்னைத் தொட்ட ஒவ்வொரு நொடியும் என்னை உயிர்வரைக்கும் கொண்டு போய் உலுக்குச்சு. உன் கையைப் பிடிச்சுட்டே இருக்கனும்னு எனக்கு தோணுச்சு. இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி கூட அந்த பட்டாம்பூச்சி எனக்கு கஷ்ட்டப்பட்டு பிடிச்சு கொடுத்த. என் ஆசைய நிறைவேத்துன. சரி அத கூட ஏதோ கைம்மாறுனு நெனச்சுக்கலாம். ஆனா அந்த பூச்சி கிட்ட என் ஆசையா நான் என்ன தெரியுமா சொன்னேன். அதுக்கு முத்தம் கொடுத்துட்டு இதை நான் கட்டிக்க போறவன் கிட்ட சேர்த்துருன்னு சொன்னேன். அது உன் உதட்டுல மோதிட்டு போச்சு. இது கூட உனக்கு பைத்தியக்காரத்தனமா தெரியலாம்.

ஆனால் இதெல்லாம் வச்சு நான் அடிச்சு சொல்லுவேன். இது காதல் தான். என்னோட மவராசன் நீ தான்.” என அவள் கூறி முடிக்க அவனோ அவளின் காதலை நினைத்து வருந்தினான். நிஜமாகவே மாறன் ஒரு மனிதனாக இருந்திருந்தால் அவளின் காதலை ஏற்றிருப்பான் போலும். அந்த அளவிற்கு அவனின் மனம் வலித்தது.

“மதி.. உன் காதல் எனக்கு புரிகிறது. ஆனால் என்னால் உன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னித்துவிடு” என அவன் கூற அவளோ,

“ஓ அப்றம் எதுக்கு நான் பேச்சு மூச்சி இல்லாம இருந்தப்போ அழுத. வார்த்தைக்கு வார்த்தை என் மதி என் மதின்னு சொன்னியே. அதெல்லாம் என்ன. காதல் இல்லாம தான் என் மதின்னு சொன்னியா” என அவள் ஆதங்கமாய் கேட்க அப்பொழுது தான் அவன் அதனை சிந்தித்தான்.

‘நாம் ஏன் என் மதி என கூறினோம்’ என.

“அது ஏனென்று எனக்கே தெரியவில்லை மதி. ஆனால் நிச்சயமாக உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது மதி. புரிந்துகொள்”

“ஏன் ஏத்துக்க முடியாது. எனக்கு காரணம் வேணும்”

“நான் தான் முன்னமே உன்னிடம் கூறினேன் அல்லவா. என் மச்சக்காரி தான் என் வாழ்கை என. அவளுக்காக தான் நான் இந்த பயணம் மேற்கொண்டேன். அவளை விடுத்தது வேறு பெண்ணை என்னால் நினைத்து பார்க்க முடியாது மதி” என அவன் கூற அவளோ உண்மையைக் கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைத்துக்கொண்டு,

“உன் மச்சக்காரியை சந்திக்கிற நேரம் வந்துருச்சு மாறா” என அவள் கூற அவனோ,

“என்ன மதி சொல்கிறாய்” என புரியாமல் கேட்க அவளோ பின்னே படர்ந்திருந்த தன் கூந்தலை முன்னே வாரி போட்டுக்கொண்டு அவளின் முதுகில் இருந்த பிறைமதி போன்ற மச்சத்தினை அவனிடம் காண்பித்தாள். அதனைக் கண்டவனுக்கு அதிர்ச்சியில் விழிகள் பிதுங்கின.

காதல் சாபம் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்