சாபம் – 6
“நான் கண்டுபிடித்தது எவ்வாறு உனக்கு தெரியும்”
“அதான் முப்பத்திரண்டு பல்லும் தெரியுதே. சரி பதில சொல்லுயா”
“சொல்கிறேன் கேள். நான்கு வழி இடைவது வரின் இந்த வரியில் நான்கு என்ற சொல்லுக்கும் வழி என்ற சொல்லுக்கும் இடையில் வது வந்தால்….” என மாறன் இழுக்க மதியரசி,
“நான்காவது வழி” என ஆச்சர்யமாய் அவள் கூற அவனோ,
“அது தான் நாம் செல்ல வேண்டிய வழி” என்றான் தோளைக் குலுக்கியவாறு.
“யோவ் யோவ். சத்தியமா என்னால முடியல. எப்படியா இப்படி யோசிக்குற” என ஆச்சர்யமாய் கேட்டாள்.
“எமக்கு புகழ்ச்சி பிடிக்காது பெண்ணே” என கூறியவாறு முன்னே நடந்தான். இரண்டடிகள் சென்ற பின்பு மதி தன்னுடன் வராததை உணர்ந்த மாறன் பின்னே திரும்பி பார்க்க அவளோ மேலே எதையோ மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“மதி என்ன ஆயிற்று. மேலே என்ன பார்க்கிறாய்” என அவளிடம் வந்தவன் கேட்க அவளோ மௌனமாய் தன் கைகளை உயர்த்தி மரத்தின் மேல் இருந்த ஓர் அரியவகை வண்ணத்துப்பூச்சியைக் காண்பித்தாள். அது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆங்காங்கே கத்திரிப்பு நிறத்தில் புள்ளிகள் தெளிக்கப்பட்டது போன்று காணப்பட்டது. மாறனோ புரியாமல் விழிக்க மதி,
“யோவ் அங்க பாரேன். அந்த பட்டாம்பூச்சி. எவ்ளோ அழகாயிருக்கு. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். ரொம்ப நாளா அத கையில பிடிக்கணும்னு ஆசை. அதுகிட்ட நம்ம ஆசையை சொன்ன உடனே நிறைவேத்துமாம். ஆனால் அத பிடிக்க முடியாது. அது சட்டுனு பறந்துரும்” என அவள் வருத்தமாக கூற மாறனுக்கு அதனைப் பிடித்து அவளின் கையில் கொடுக்க வேண்டுமென தோன்றியது.
“எனக்காக வழி காட்ட என்னுடன் வந்திருக்கிறாய். உனக்காக இதைக் கூட செய்யமாட்டேனா மதி. நான் பிடித்து தருகிறேன்” என இவன் கூற அவளோ,
“இல்லையா அதெல்லாம் வேணாம். உன்னால பிடிக்க முடியாது. அந்த பட்டாம்பூச்சிக்கு ஒரு குணம் இருக்கு. அது இருக்குற எடத்துல இருந்து பத்து அடி தூரம் தள்ளி சின்ன அசைவு தெரிஞ்சாலே பறந்து போயிரும். அதுவும் இல்லாம இந்த பூச்சிக்கு மோப்பம் சக்தி உண்டுனு வேற சொல்லுவாங்க. வீணா முயற்சி பண்ணாத. உன்னால முடியாது. வா நம்ம கிளம்புவோம்” என அவள் கூற அவனோ,
“என்ன நீ என்னை இவ்வளவு எளிதாக நினைத்துவிட்டாய். நான் ஒன்று சொன்னால் அதனை செய்து முடிக்கும்வரை ஓய மாட்டேன். பொறுத்திருந்து பார். சொன்னதை செய்கிறேன்” என கூறிவிட்டு மரத்தின் மேலே ஏறினான். சரியாக அருகில் சென்று பிடிக்கும் சமயத்தில் அப்பூச்சி பறந்து அருகில் இருந்த மரத்தில் சென்று அமர்ந்தது. கீழே இருந்த மதியோ,
“நான் தான் முடியாதுனு சொன்னேன்ல மாறா. கீழ வா” என அவள் அழைக்க அவனோ தோளைக் குலுக்கிவிட்டு அடுத்த மரத்தின் மேல் ஏறினான். மீண்டும் பறந்து அடுத்த மரத்திற்கு சென்றது அப்பூச்சி. இவ்வாறே நான்கு மரங்கள் ஏறிஇறங்க மாறனால் அதனைப் பிடிக்க முடியவில்லை.
‘என்ன இது. இச்சிறு பூச்சி என் மானத்தை வாங்கிவிடும் போலும். நான் இதனைப் பிடிக்காமல் சென்றால் மதி என்னைக் கண்டு கேலியாக நகைப்பாளே. அது எமக்கு அவமானம் ஆயிற்றே. அவள் கூறும்போதே சென்றிருக்க வேண்டும். பெரிய வீர சூரனாக சவால் விட்டுவிட்டோம். இப்பொழுது என்ன செய்வது’ என சிறிது நேரம் சிந்திக்க ஒரு யோசனைத் தோன்றியது.
‘ஆம் அது தான் சரி. அவ்வாறு செய்தால் அவளின் ஆசையும் நிறைவேறும். நம் மானமும் காப்பாற்றப்படும்.’ என நினைத்தவன் மதி அறியாமல் சாஸ்திரத்தைத் திறந்து ரகசிய காகிதத்தில் இருந்த மூன்றாவது மந்திரத்தை உச்சரித்து என்னைத்தவிர அனைத்தும் சற்று நொடிகளுக்கு இயங்கமால் நிற்க வேண்டும் என தேவர்களை வேண்ட அதிலிருந்து மூன்றாவது மந்திரம் மறைந்தது. அவன் கூறியது போல் அனைத்தும் இயக்கமின்றி நின்றது. கீழே பார்க்க மதியோ சிலையாக நின்றாள். பிறகு அப்பூச்சியைக் கையிலெடுத்தவன்,
‘நல்ல வேலை. ஒருவழியாக பூச்சியைப் பிடித்துவிட்டோம்.’ என நினைத்தவன் மீண்டும் சூழல் இயல்பு நிலைக்கு திரும்ப காத்திருந்தான். நொடிகளைத் தாண்டி நிமிஷங்கள் கடந்தும் இயக்கமில்லாமல் அவ்வாறே அனைத்தும் இருக்க அப்பொழுது தான் நினைவு வந்தது அவனுக்கு.
‘இயக்கம் நிற்க ஒரு மந்திரம் பயன்படுத்தியது போல மீண்டும் இயங்க அடுத்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் போலும். இன்னும் நான்கு மந்திரங்கள் மட்டுமே மீதம் உள்ளது. இனி அனாவசியமாக பயன்படுத்தக்கூடாது’ என தன்னைத் தானே நொந்தவன் நான்காவது மந்திரத்தை உச்சரித்து மீண்டும் உலகம் இயங்க தேவர்களை வேண்ட இயங்கியது அனைத்தும்.
திடிரென்று அவனின் கையில் எவ்வாறு பூச்சி பிடிபட்டது என ஆச்சர்யமாய் பார்த்தாள் மதி. கீழே பூச்சியுடன் வந்தவனிடம்,
“யோவ் எப்படியா. சொன்ன மாதிரியே செஞ்சுட்ட. ஆனால் நான் மேல தான பார்த்துட்டே இருந்தேன். நீ பிடிச்சதை மட்டும் எனக்கு பார்த்த மாதிரி இல்லையே. எப்படியா” என அவள் விழிவிரித்து கேட்க அவனோ,
“அஃதாவது நீ இமை மூடி திறக்கும் கணத்தில் யாம் இதனை நிகழ்த்தினோம். ஆதலால் நீ கவனிக்க தவறிவிட்டாய் போலும். சரி அதெல்லாம் உனக்கெதற்கு. உன் ஆசையை நிறைவேற்றிக்கொள். இதனை பிடி” என அவளின் கையில் கொடுக்க மென்மையாக அதனை வாங்கினாள். தன் விருப்பம் நிறைவேறிய ஆவலில் மகிழ்ச்சியாக அதனை முன்னும் பின்னும் திருப்பி அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். பிறகு அதனை மென்மையாக முத்தமிட்டு மனதினுள்,
‘இந்த முத்தத்தை என்னை கட்டிக்க போறவனுக்கு கொண்டு போய் சேர்த்துரு’ என நினைத்து சிரித்துவிட்டு அதனை விடுவிக்க.. விட்டால் போதும் என்ற வேகத்தில் அது பறக்க எதிரில் இருந்த மாறனின் இதழில் மோதிவிட்டு பறந்து சென்றது. அதனைக் கண்டவளின் மனதிலோ லட்சம் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
‘என்ன இது. என்னைக் கட்டிக்க போறவன் கிட்ட கொடுக்க சொன்னா மாறன் கிட்ட கொடுத்துட்டு போகுது. இது எதார்த்தமா நடந்ததா இல்ல இது தான் உண்மையா. அப்போ நிஜமாவே மாறன் தான் என்னோட காதலனா. என்னைக் கட்டிக்க போகுற மவராசன் இவன் தானா. அதனால தான் இவனை எனக்கு பிடிசுருக்கா. இவன் கூட இருந்தா மட்டும் எனக்கு உடம்பு எரியல. ஒரு பாதுகாப்பா நினைக்குறேன். அவனோட காதலியா வரப்போறவளுக்கு கூட நிலா மாதிரி ஒரு மச்சம் இருக்கும்னு சொன்னானே. அதுவும் எனக்கு இருக்கு. இதெல்லாத்துக்கும் அர்த்தம் காதலா அப்போ. நான் தான் அவனோட காதலியா. அவன் தான் என்னோட காதலனா’ என பல கேள்விகள் வரிசையாக மதியின் மூளையில் தோன்ற அவளின் மனமோ அதற்கு செவிசாய்த்து ஆமென பதிலளித்தது.
மனதின் பிரதிபலிப்பாக முகத்திலும் மகிழ்ச்சி குடியேறி மிகவும் பிரகாசமாக காணப்பட்டாள். இவ்வளவு நேரம் தெரியாத ஒரு பொலிவு திடீரென அவளின் முகத்தில் கண்ட மாறனோ,
“என்ன ஆயிற்று மதி. உன் முகம் இவ்வளவு பிரகாசமாக காணப்படுகிறது. நினைத்ததை முடித்துவிட்ட ஆனந்தமா” என அவன் கேட்க இவளோ இமைக்க மறந்து அவனைப் பார்த்து கொண்டிருந்தாள்.
“மதி உன்னைத் தான் கேட்கிறேன். நீ என்ன பகல் கனா காண்கிறாய் போலும்” என அவளை உலுக்க அவனின் தீண்டலில் கன்னம் சிவக்க நிகழுக்கு வந்தாள். ஒன்றுமில்லை என தலையசைத்தவாறு முன்னே நடந்தாள் மதி.
‘அப்போ இவன் கிட்ட நாமளே சொல்லிருவோமா. உன்னோட மச்சக்காரி நான் தான்னு. இல்ல வேணாம். சமயம் பார்த்து நம்ம விருப்பத்தை மட்டும் நாம சொல்லுவோம். முதல்ல அவன் ஏத்துக்குறானான்னு பாக்கலாம். என்னை எனக்காக அவன் ஏத்துக்கிட்டா ரொம்ப சந்தோசபடுவேன். அப்படியும் ஏத்துக்கலைனா அவனோட மச்சக்காரி நான் தான்னு சொல்லிறலாம். முதல்ல அந்த மச்சம் விஷயம் உண்மையா சொல்றானா என் மச்சத்தைப் பார்த்து சொன்னானான்னு வேற தெரிலயே. ஒருவேளை பார்த்துட்டு சொல்லிருந்தா அப்போ அவனுக்கு என்னைப் பிடிச்சுருக்குன்னு தான அர்த்தம்.’ என பலவாறு தனக்குள்ளயே பேசிக்கொண்டிருந்தவள் ஏதோ ஓர் நினைவில் நான்காம் வழியில் செல்லாமல் மூன்றாவது வழியை நோக்கி சென்றாள்.
பின்னே மாறனோ மதி மதி என சத்தமாக அழைத்தும் அவளின் செவியில் அது விழவில்லை. அந்த வேகத்தில் வேகமாக அவளின் பின்னே வந்தவன் சட்டென அவளின் கரம் பற்றி பின்னே இழுக்க அவனின் நினைவில் உழன்றவள் இருந்தவள் நிலைதடுமாறி அவனின் மேலே சரிந்தாள். பாதை வேறு மலையின் மேல் ஏறுவது போல் இருக்க இருவரும் மாறிமாறி உருண்டுவிட்டனர். ஏற்கனவே அவனின் நினைவில் மதி கேட்டு திரிந்த மதி இப்பொழுது அவனின் ஸ்பரிசத்தில் மொத்தமாக மதியிழந்தாள்.
முதலில் சுதாரித்த மாறனோ சட்டென ஓர் செடியைப் பிடித்து தன்னை நிலைநிறுத்தினான். அவன் கீழிருக்க அவனின் மேல் மெய்மறந்து மதியிருக்க அவளின் கண்களோ அவனின் கண்களோடு கலந்திருக்க அவனும் சில கணம் அவளின் காந்த பார்வையில் லயிக்க தான் செய்தான்.
பிறகு சட்டென பார்வை விலக்கியவன் தன்னை உருட்டி அவளை கீழிருக்குமாறு செய்து தன்னை எழுப்பிக்கொண்டான். பிறகு அவளைக் கரம்பிடித்து தூக்கிவிட்டான்.
“என்ன மதி கவனமாக இருக்க கூடாதா. என்ன நினைவில் உலாவுகின்றாய்” என அவன் கேட்க அவளோ சட்டென,
“உன் நெனப்புல தான்” என கூறிவிட
“மதி நீ என்ன சொல்கிறாய்” என கோபமும் ஆச்சர்யமும் கலந்த நிலையில் கேட்டான் பூதமாறன். அதனைக் கேட்ட மதியோ,
‘அச்சச்சோ ஒருவேகத்துல உளறிட்டோமே என்ன பண்ண ஏதாவது சமாளிப்போம்’ என மனதினுள் நினைத்தவள்,
“அது அது.. ” என கூறியவாறு அவள் திணற ஏனோ அவளது முகபாவனைகள் வித்தியாசமாக தோன்றியது மாறனுக்கு. அவள் கூறிய வார்த்தைகள் வேறு அவனுக்கு சந்தேகத்தை எழுப்ப,
‘இதற்கு மேல் இதனைத் தொடரவிட கூடாது’ என நினைத்துக்கொண்டு,
“சரி விடு. நேரம் ஆயிற்று நாம் கிளம்புவோம்” என கூறிவிட்டு நடந்தான். ஏதேனும் கேட்பான் என்று மதி நினைத்திருக்க இவனோ ஏதும் நடவாதது போல் சென்றது மதிக்கு ஆச்சர்யமே. எப்படியோ தப்பித்தால் போதும் என்று மட்டும் நினைத்துவிட்டு அவனின் பின்னே நடந்து சென்றாள் அவனை ரசித்தபடி. தன் மணாளன் கண்முன்னே இருந்தும் கைக்கோர்த்து கூட செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் மதியின் மனதில் எழ திடிரென்று அவனின் கரம் பற்றினாள். அவனோ சட்டென உதறிவிட்டு,
“மதி என்ன செய்கிறாய்” என சற்று கோபமாய் கேட்க அதில் அவளோ மிரண்டுவிட்டாள்.
“யோவ் ஏன் யா. இதுக்கு போய் இப்படி கோவப்படுற. கையைத் தான பிடிச்சேன்.” என அவள் பாவமாக கேட்க அவனுக்கோ இவளிடம் கோபமாக பேசினால் எங்கே நம்முடன் வராமல் போய்விடுவாளோ என்று வேறு பயம்.
‘நாம் சுயநலமாக நடந்து கொள்கிறோமோ. இது தவறு தானே’ என அவனின் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க மூளையோ,
‘இது தேவர்களின் விருப்பப்படி தான் நடந்தேறுகிறேது. இதில் உன் சுயம் மட்டும் அடங்கவில்லை. பூத உலகம் முழுவதையும் விடுவிக்க தான் இக்காரியம் நீ மேற்கொள்கிறாய். ஆதலால் இது தவறு அல்ல’ என நியாயம் கூற இரண்டிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டது போல் முழித்தான் மாறன். பிறகு தன்னை சுதாரித்தவன் மதியிடம்,
“இல்லை மதி. திடீரென கைப் பற்றினாய் அல்லவா. அதனால் தான் ஒரு வேகத்தில் சத்தமிட்டேன். சரி கூறு. எதற்காக எமது கரம் பற்றினாய்.” என சற்று பொறுமையாக கேட்க அவளோ,
“இல்லையா திடிர்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு. அதான் பயத்துல பிடிச்சுட்டேன்” என அவள் கூற அவனுக்கு அது பொய் தான் என புரிந்தது.
“ஓ அப்படியா. இப்பொழுதும் கேட்கிறதா”
“இல்ல மாறா இப்போ கேக்கல”
“அப்படியென்றால் இப்பொழுது உனக்கு பயம் இல்லை தானே” என அவன் கேட்க அவளோ,
‘என்னாச்சு இந்தாளுக்கு. கையைப் பிடிச்சதுக்கு இவ்ளோ குதிக்குறான். நேத்தெல்லாம் நல்லா தானே இருந்தான்.’ என நினைத்துவிட்டு இல்லையென தலையாட்ட அவனோ,
“நல்லது. நீ முன்னே செல். நான் உன் பின்னே வருகிறேன்” என அவளை முன்னே செல்ல சொல்ல மதியும் நடந்தாள்.
‘அயோ என்னாச்சு இப்படியெல்லாம் பண்ணமாட்டானே. ஒருவேளை நாம நெனச்சது தெரிஞ்சுடுச்சோ.’ என நினைத்தவாறு நடக்க மாறனோ ஏதோ குற்றஉணர்வாய் உணர்ந்தான்.
காதல் சாபம் தொடரும்…