சாபம் – 5
“கண்டுபிடித்துவிட்டேன். நகைக்கும் என்றால் சிரிப்பது என்று பொருள். சிரித்தால் பிரகாசமாக தெரிவோம். அப்படியென்றால் நாம் உன் நட்சத்திர தோடை நான்கு திசைகளில் நகர்த்தும்பொழுது ஒரு திசையில் மட்டும் பிரகாசமாக மின்னும். அது தான் நாம் செல்ல வேண்டிய வழி” என அவன் கூறிமுடிக்க மதியோ அவனைக் கண்ணிமைக்காமல் ஆச்சர்யமாய் பார்த்தாள்.
“யோவ் உனக்கு உடம்பு முழுக்க மூளையா இருக்குயா. எப்படியா இப்படி கண்டுபிடிக்க” என கேட்க அவனோ புன்னைகையை மட்டுமே பதிலாக கொடுத்தான்.
வழிகாட்டும் நேரத்திற்கு இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருந்தன. மதியரசிக்கோ உறக்கம் கண்ணை சொக்கிக் கொண்டு வந்தது.
“யோவ் எனக்கு தூக்கம் தூக்கமா வருதுயா. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்” என கூறிக்கொண்டு அவள் உறங்கிவிட மாறனோ அவளுக்கு பாதுகாப்பாய் உறங்காமல் உறங்கும் அவளையே பார்த்தவன்,
‘என்ன பெண் இவள். என்னை நம்பி எவ்வாறு தைரியமாக உறங்குகிறாள். என்மீது அத்துணை நம்பிக்கையா இவளுக்கு. துடுக்குத்தனமாக பேசினாலும் நல்ல பெண். உதவிக்கு கைமாறாக என்ன செய்ய போகிறேனோ. ஆமாம் இவளின் பெயர் என்ன. இவ்வளவு நேரம் பேசியும் அதனைக் கேட்க மறந்துவிட்டோமே. சரி உறக்கம் கலைந்து எழட்டும். பிறகு கேட்போம்’ என மனதினில் நினைத்தவன் இப்பொழுது வானத்தை வெறிக்க ஆரம்பித்தான்.
விடிவெள்ளி சற்று மேலெழும்பி மூன்று மணி என உணர்த்தியது. அவ்வாறே பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் சிரித்துக்கொண்டிருந்த நிலாவை நோக்கினான். அதனைப் பார்த்தவனுக்கு அவனின் மச்சக்காரியின் நியாபகம் எழுந்தது.
‘எங்கே தான் இருக்கிறாய் நீ. உனக்காக நான் தவமிருக்கிறேன். என்னை நினைத்தால் உனக்கு பாவமாக தோன்றவில்லையா கண்ணே. சீக்கிரம் என்னைத் தேடி வந்து விடடி. தேவர்களே நீங்கள் தான் எனது மச்சக்காரியைக் கண்டுபிடிக்க உதவி செய்ய வேண்டும்’ என தன்னவளிடம் கெஞ்சலாக ஆரம்பித்த உரையைத் தேவர்களிடம் வேண்டுதலாக முடிக்க அந்த நேரம் குளிர்ந்த காற்று சற்று பலமாக வீசி அவன் தோளில் அணிந்திருந்த வஸ்திரத்தைப் பறக்கவைத்து உறங்கி கொண்டிருந்த மதியரசியின் மேல் போர்த்தி இவள் தான் உன்னவள் என இரண்டாம் முறை அறிவுறுத்தியது. ஆனால் சாஸ்திர அர்த்தங்களை எளிதில் புரிந்துகொள்ளும் மாறனுக்கு தேவர்களின் இந்த திருவிளையாடல் புரியாமல் போனது விதி போலும்.
பறந்துசென்ற வஸ்திரம் அவளின் மேல போர்த்தியிருக்க அடித்த குளிருக்கு அதனை நன்கு இழுத்து போர்த்திக்கொண்டு சுகமாக உறங்கினாள் மதியரசி. இப்பொழுது வஸ்திரத்தை எடுத்தால் அவளின் உறக்கம் கெடும் என நினைத்தவன் அவ்வாறே உறங்கட்டும் என விட்டுவிட்டான்.
அவ்வாறே நாழிகைக் கடக்க விடிவெள்ளி இன்னும் சற்று மேலெழும்பியது. அதனைப் பார்த்து நான்கு மணி ஆகப்போகிறது என புரிந்துக்கொண்டவன் மெல்ல மதியரசியை எழுப்பினான். எழுந்த அவள் தன் மேல் அவனின் வஸ்திரம் இருப்பதைல் பார்த்து சற்று சந்தேகமாய் அவனைப் பார்க்க அதனைப் புரிந்துகொண்டவன்,
“ஏ பெண்ணே. என்னை ஏன் சந்தேக பார்வைப் பார்க்கிறாய். நான் ஒன்றும் மோசமானவன் இல்லை. காற்றில் பறந்து வந்து உன் மேல் விழுந்தது. நீயும் நன்கு போர்த்திக்கொண்டு உறங்கிவிட்டாய். அதனால் தான் யாம் அவ்வாறே விட்டுவிட்டோம். என்னவளை தவிர என் கண்கள் வேறு யாரையும் இச்சையாக நோக்காது. புரிந்து கொள்” என ஆதங்கமாய் பேச அவன் பேசிய விதத்தில் மதியரசிக்கு சிரிப்பு தான் வந்தது.
“யோவ். நான் அப்படி எல்லாம் பார்க்கலையா. உன்ன நம்பாம இருந்திருந்தா உன்ன நம்பி தூங்கிருக்க மாட்டேன். அத முதல்ல புரிஞ்சுக்கோ” என கூறிவிட்டு சிரிக்க அப்பொழுது தான் அதனை யோசித்தான் மாறன்.
‘அதுவும் சரி தான். நம்மை நம்பாமல் இருந்திருந்தால் நிம்மதியாக உறங்கியிருக்க மாட்டாளே’ என மனதினுள் நினைத்தவன் மெலிதாக சிரித்தான். அவளோ,
“சரி அத விடு. உன் ஜோடிப்புறா யாருயா. சொல்லவே இல்ல. கண்ணாலம் ஆயிருச்சா உனக்கு அப்போ” என அவள் சிறிது வருத்தமாக கேட்க அவனோ,
“இல்லை அது பெரிய கதை. பிறகு கூறுகிறேன். மணி நான்கு ஆகப்போகிறது. முதலில் வழியைக் கண்டுபிடிப்போம் வா.” என கூறியவன் பௌர்ணமி நிலவின் முன்னே நின்று அவளிடம்,
“பெண்ணே உன் தோடினைக் கழட்டி என்னிடம் கொடு” என கேட்க அவளும் கொடுக்க அதனை வாங்கியவன் நிலவின் முன் காட்டியவாறு நான்கு திசைகளிலும் நகர்த்தினான். ஆனால் அது மின்னவில்லை. மீண்டும் முயற்சித்தான். பலனில்லை.
“என்ன யா இது. ஒண்ணுமே காட்டமாட்டிக்குது” என மதியரசி கேட்க அவனும்,
“அது தான் எனக்கும் விளங்கவில்லை.” என யோசிக்க மதியரசி அவன் கையில் இருந்த தோடினை வாங்கி அதே போல் செய்தாள். இப்பொழுதும் பலனில்லை. என்ன செய்வது என சிறிது நேரம் இருவரும் யோசித்தனர். ஏதோ தோன்ற திடீரென மதியரசியின் கரம் பற்றினான் மாறன். அவனின் திடீர் ஸ்பரிசத்தில் அவளின் மேனி சிலிர்க்க அவனைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அவனோ தன் கரத்தின் மேல் அவள் கரம் இருக்கும்படி பிடித்து அவளின் கரத்தின் மேல் அந்த நட்சத்திர தோடினை வைத்து நிலவின் முன் நீட்டி நாற்திசையிலும் நகர்த்தினான். கிழக்கில் நகர்த்திய நேரம் பளிச்சென்று மின்னியது நட்சத்திரம். அதனைக் கண்ட மாறனது அதரங்கள் விரிந்தது.
மதியரசியோ உணர்ச்சிகளின் பிடியில் மாட்டிக்கொண்டு அவனையே கண்ணிமைக்காமல் பார்க்க அவனோ அங்கே பார் என கண்களால் காண்பித்தான். பிறகு அங்கு பார்க்க விழிவிரித்தாள் மின்னுகின்ற தோடினைப் பார்த்து. பிறகு அவளின் கரத்தினை விடுவித்தவன் அவளிடம்,
“தோடினை அணிந்துகொள்” என கூற மறுபேச்சு ஏதும் பேசாமல் அணிந்துகொண்டாள். பிறகு கிழக்கு நோக்கி இருவரும் நடக்க தொடங்கினர்.
“ஆமா யா. எப்படி நம்ம ரெண்டு பேரும் பிடிச்சா தான் ஜொலிக்கும்னு கண்டுபிடிச்ச” என கேட்க அவனோ,
“அது வேறொன்றுமில்லை. நான் செய்தும் வரவில்லை. நீ செய்தும் வரவில்லை. அப்பொழுது தான் ஒன்று தோன்றியது. ஒன்று என்னால் இந்த நல்ல கார்யம் நிகழவேண்டுமெனில் என்னை மட்டும் நியமித்திருக்க வேண்டும். உன்னால் ஆகவேண்டுமெனில் உன்னை மட்டும் நியமித்திருக்க வேண்டும். நாம் இருவரும் இதில் இணைந்துள்ளோம் என்றால் காரணமில்லாமல் இருக்காது என தோன்றியது. எனவே தான் கூட்டுமுயற்சி செய்தேன். பலன் கிடைத்தது” என அவன் கூற மீண்டும் மீண்டும் மலைத்துதான் போனால் அவனின் புத்திக்கூர்மையை எண்ணி.
“நீ மனுசனே இல்லை யா. தெய்வ பிறவி” என அவள் புகழ்ந்து கூற அவனோ,
“எவ்வாறு கண்டுபிடித்தாய்” என்றான் அவள் உண்மையைக் கூறுகிறாள் என்றெண்ணி.
“அட போயா. உனக்கு எப்பவும் நக்கல் தான்” என கூறி சிரித்துக்கொண்டாள்.
“அது இருக்கட்டும். உனது பெயர் என்ன பெண்ணே. அதனைக் கேட்க மறந்தே போய்விட்டேன்.”
“அட ஆமால. நானும் கேக்கல. சரி சொல்றேன். என் பேரு மதியரசி. உன் பேரு” என அவள் கேட்க அவள் பெயரினைக் கேட்டவனுக்கு அவளின் மச்சக்காரி நினைவு தான் வந்தது. தனக்குள்ளே சிரித்துக்கொண்டான். அவனின் சிரிப்பைக் கண்டவள்,
“என்ன யா. எதுக்கு சிரிக்குற” என்று கேட்க அவனோ,
“அழகான பெயர். நிலவின் அரசி என்று பொருள். மதி என்று நான் உன்னை அழைக்கிறேன்.” என கூற அவன் கூறும்போது மட்டும் அவளின் பெயர் பன்மடங்கு அழகாய் தெரிவது போல் தோன்றியது அவளுக்கு.
“சரி உன் பேரு சொல்லுயா” என அவள் கேட்க அவனோ சட்டென்று,
“பூதமாறன்” என கூறிவிட அவளோ அதனைக் கேட்டு,
“என்னது பூதமா. என்னயா சொல்ற நீ” என பீதியுடன் கேட்டாள்.
‘ஆஹா. அவசரப்பட்டு கூறிவிட்டோமே. ஏதேனும் சமாளிப்போம்’ என மனதினுள் நினைத்தவன்,
“என்ன உனக்கு எல்லாமே தவறாக தான் விழுமா. நான் என் பெயர் பூமாறன் என்று தானே கூறினேன். நீ என்ன பூதம் என்கிறாய்.” என சமாளித்து கூற,
“ஓ பூமாறனா. சரி சரி. எனக்கு தான் தப்பா விழுந்துருச்சு போல. மன்னிச்சுரு மாறா” என்றாள். அவளின் அழைப்பு அவனுக்கு புன்னகையைத் தந்தது. சிறிது நேரம் மௌனமாய் இருவரும் நடந்தனர். பிறகு மதியோ,
“சரியா. உன் கண்ணாலத்தைப் பத்தி கேட்டேனே. அப்புறம் சொல்றேன்னு சொன்ன. இப்போ சொல்லு” என கேட்டாள்.
“என்னவளை நான் இன்னும் காணவில்லை. அவளைத் தான் பலநாட்களாக தேடுகிறேன். நான் இந்த புனித காரியத்தை செய்து முடித்தால் தேவர்கள் என் கோரிக்கையை நிறைவேற்றுவர். அதனால் தான் இப்புனித காரியத்தை செய்ய முனைப்புடன் வந்திருக்கிறேன். வெற்றிகரமாக செய்து முடித்து என்னவளின் கழுத்தில் வெற்றிமாலை சூடுவேன் என நம்புகிறேன்” என்றான் தன்னவளை நினைத்தபடி. அதனைக் கேட்ட மதியரசியின் மனதில் ஏனோ இனம்புரியாத வலி.
‘யாரோ ஒருத்தியைப் பத்தி அவன் பேசும்போது எனக்கு ஏன் வலிக்கிது’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள் அவ்வாறே மௌனமாய் இருந்தாள். அவனோ அதனைக் கண்டுகொள்ளாது,
“என் மச்சக்காரியை மணந்து கொள்ளவே மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறேன்” என அவன் கூற அவனின் கூற்றில் புரியாமல் விழித்த மதியோ,
“மாறா நீ என்ன சொல்ற. மச்சக்காரியா”
“ஆம் மச்சக்காரி தான். என்னவளின் மேனியில் மதியின் வடிவில் ஓர் மச்சம் உண்டென்று எனக்கு ஒருநாள் குறிப்பு கிடைத்தது” என அவன் கூற அவன் கூறுவதைக் கேட்டவளுக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் மாறிமாறி தோன்றியது.
‘என்ன இது. அவன் சொல்ற மாதிரி என்னோட முதுகுல நிலா மாதிரி ஒரு மச்சம் இருக்கே. அப்போ அது நான் தானா’ என மனதில் மகிழ்ச்சியாய் நினைத்தவள் அதனைக் கூற வாயெடுக்க அந்நேரம் அவளின் மூளை எச்சரித்தது.
‘இவன் உன் மச்சத்தை நீ தூங்கும் போது பாத்துட்டு இப்படி சொல்றானா இல்ல உண்மைய தான் சொல்றானா’ என அவளின் மூளை கேள்வி கேட்க இப்பொழுது கூற வேண்டாமென்று முடிவெடுத்தாள். ஆனாலும் மனமுழுதும் மகிழ்ச்சியாய் இருந்தது மதியரசிக்கு.
அவ்வாறே நடந்து செல்ல அவர்கள் முன்பு நான்கு வழிகள் தென்பட்டது. எந்த வழியில் செல்லவேண்டும் என தெரியவில்லை. இருவரும் முழித்தனர்.
“நீ ஏன் யா முழிக்க. அதான் கையிலேயே வழிகாட்டி வச்சுருக்கல அப்றம் என்ன. கண்ண மூடு வழிய தேடு” என அவள் கூற அவனோ சிரித்துவிட்டு,
“உனக்கும் மூளை இருக்கிறது போலும்” என கூறிவிட்டு தேவர்களிடம் வழிகேட்டு சாஸ்திரத்தைத் திறந்தான். அதில்,
“நான்கு வழி
இடைவது வரின்”
என வரிகள் வந்தது.
அதனைக் கண்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“என்னய்யா இது. வெறும் ரெண்டு வரி தான் இருக்கு. ஆனாலும் ஒன்னும் விளங்கலயே” என அவள் கேட்க,
“ஆம் மதி. அது தான் எனக்கும் புரியவில்லை” என்று சிந்திக்கலானான்.
சாஸ்திரத்தில் தென்பட்ட அந்த வரிகளுக்கு பொருள் புரியாமல் இருவரும் சிந்தித்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் யோசித்த மதியரசிக்கு ஏதோ யோசனைத் தோன்றியது. அவனிடம்,
“யோவ் மறுக்கா சொல்லு அத” என கேட்க அவனும்,
“நான்கு வழி
இடைவது வரின்” என அவன் கூற,
“யோவ் வரின்னா என்ன அர்த்தம்.” என கேட்க,
“வரும் என்று பொருள் தரும்” என அவன் கூறினான். மீண்டும் சிந்தித்தவள்,
“சரி அப்போ இடைனா என்ன அர்த்தம்” என்றாள்.
“இடை என்பதற்கு இரு பொருள் வரும். ஒன்று பெண்ணின் மெல்லிடை. மற்றொன்று நடுவில்” என அவன் கூற அதனைக் கேட்டவள்,
“இடுப்புல வலி கேள்வி பட்டுருக்கேன். இதென்ன இடுப்புல வழி” என குழப்பமாக கேட்க அவள் கூற்றில் சிரித்தவன்,
“அந்த பொருளில் வந்திருக்காது என தோன்றுகிறது மதி” என்றான்.
“அப்டிங்குற. சரி நடுசுல வழி இருக்குனு அர்த்தமா” என அவள் கேட்க அவனோ,
“ஆம் கிட்டத்தட்ட அவ்வாறு தான். இது மூன்றுவழி பாதையாக இருந்தால் கூட நடுவில் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இதுவோ நால்வழி பாதை. இதன் நடுவில் இரு வழிகள் இருக்கின்றன. அவ்விரண்டில் எவ்வாறு தேர்வு செய்வது” என சிந்தித்து கொண்டிருந்தான்.
“ஆமா யா. நீ சொன்னதும் சரி தான். நாலு வழில இடைல வருறது வேறென்னவா இருக்கும்” என கூறிவிட்டு சிந்திக்க எப்பொழுதும் போல் அவளின் கூற்றில் மாறனுக்கு துப்பு கிடைத்தது. மீண்டும் அவ்வரியை வாசித்தவனுக்கு விடை கிடைத்துவிட்டது. அவனின் சிரிப்பை வைத்தே விடை கண்டுபிடித்துவிட்டான் என அறிந்தவள்,
“சொல்லுயா மாறா. என்ன கண்டுபிடிச்ச” என அவள் கேட்க அவனோ,
“நான் கண்டுபிடித்தது எவ்வாறு உனக்கு தெரியும்”
“அதான் முப்பத்திரண்டு பல்லும் தெரியுதே. சரி பதில சொல்லுயா” என்றாள்.
காதல் சாபம் தொடரும்…