“ஹே முட்டாள் பெண்ணே. என்னை பார்த்தாள் உனக்கு காமுகன் போன்று தெரிகிறதா. அமர்ந்து தேவர்களிடம் வேண்டிவிட்டு சாஸ்திரத்தை திறந்தால் மட்டுமே நமக்கு நாம் செல்லும் வழி கிடைக்கும். அதற்காக தான் அமர சொன்னேன். தேடல் என நான் கூறியது சாஸ்திரத்தின் தேடல் மட்டுமே. புரிந்ததா. ஏதேனும் விதண்டாவாதமாக பேசினால் நான் மந்திரங்களால் உன் திருவாயை கட்டும் நிலைமை தான். ஜாக்கிரதை.” என கோபத்தில் பொரிந்து தள்ள அவளோ சற்று மிரண்டு தான் போனாள்.
“ஓ தெளிவா சொல்லனுமா இல்லையா. சரி யா சரி யா கோச்சுக்காத. நீ வழி கண்டுபிடி. நான் வாயைப் பொத்தி அமைதியா இருந்துக்குறேன்” என பயந்து கூற அவளின் செயல் அவனுக்கு சிரிப்பைத் தான் வரவழைத்தது. ஒரு நிமிடம் மதியரசியின் கண்கள் அவனின் புன்னகை முகத்தை ரசித்தது அவளறியாமலே.
கண்களை மூடி தேவர்களிடம் வேண்டியவன் சாஸ்திரத்தைத் திறக்க அதில்,
‘நதியின் ஆதியில்
நள்ளிரவு நான்கில்
நட்சத்திரத் தோடை
நான்கு திசைகளில்
நிலவின் முன்
நகர்த்த நகைக்கும்’
என்று எழுதிருக்க மாறனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை. சிறிது நேர சிந்தனைக்கு பிறகு,
“அருகில் ஏதேனும் அருவி இருக்கிறதா” என மாறன் கேட்க அவளும் ஆமென்றாள்.
“சரி வா. அங்கு தான் செல்ல வேண்டும்” என கூறி நடக்க ஆரம்பித்தான். மதியரசியும் அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.
“யோவ் அதுல என்னயா எழுதிருந்துச்சு. ஒன்னும் விளங்கல” என அவள் கேட்க,
“எனக்கும் விளங்கவில்லை தான். முதல் வரி மட்டும் புரிந்தது. அதனால் தான் அங்கு செல்கிறோம்”
“அப்படி என்னய்யா கண்டுபிடிச்ச”
“நதியின் ஆதி என்பது தான் அதன் முதல் வரி. நதி என்றால் ஆறு. ஆதி என்றால் ஆரம்பம். அப்படியென்றால் ஆறுகள் ஆரம்பமாகும் பகுதி என்று அர்த்தம். நதிகளின் பிறப்பிடம் அருவி தானே.” என அவன் கூற அவனின் புத்திக்கூர்மையை எண்ணி வியந்தாள் மதியரசி.
“யோவ் உன்ன முதல்ல கிறுக்கன்னு நெனச்சேன். ஆனா நீ இம்புட்டு அறிவாளியா இருப்பன்னு நான் நெனச்சி பாக்கல யா” என யோசிக்காமல் உளறிவிட போன முறை கிறுக்கன் என்று கூறுகையில் அவனுக்கு இவளின் பாஷை புரியாமல் இருந்தது. இம்முறை தான் புரிந்துவிட்டதே.
“ஹே பெண்ணே. கிறுக்கன் என்றால் நல்ல மனிதன் என்று ஏன் தவறான அர்த்தம் கூறினாய். என்னைப் பார்த்தால் பைத்தியம் போல் உனக்கு தெரிகிறதா” என முறைத்துக்கொண்டு கேட்க அவளோ,
‘ஆத்தாடி போனவாட்டி புரியாம இருந்துச்சு. எதையோ சொல்லி தப்பிச்சுட்டோம். இப்போ அவசரப்பட்டு ஒளறிட்டோமே. இவன் வேற ஆனா ஊனா மந்திரத்தை சொல்லி மிரட்டுவானே’ என மனதினில் நொந்தவள்,
“ஈஈ அது வேற ஒண்ணுமில்லையா. நீ தூரத்துல இருந்து பாக்க தனியா பினாத்துற மாதிரி தெரிஞ்சுச்சு. அதான் அப்படி நெனச்சேன்” என தயங்கி தயங்கி கூற அவனோ,
“தனியாக பேச யாம் பைத்தியமில்லை. என்னைத் தீண்டிய பூச்சியிடம் பேசி கொண்டிருந்தேன்” என அவன் கூற அவளோ,
‘பூச்சிகிட்ட பேசுனியா.. அது சரி.. அப்போ நான் உன்ன கிறுக்கன்னு சொன்னதுல தப்பே இல்ல’ என மனதில் நினைத்து சிரித்துக்கொண்டாள்.
அவ்வாறே அருவி வந்து சேர இரவாகியது. மதியரசியோ,
“யோவ் பசியெடுக்குது யா. அதோ அந்த மரத்துல இருந்து பழத்தைப் பறிச்சு குடேன்” என சோர்வாய் கூற ஏனோ மாறனின் மனது பிசைந்தது. மின்னலென மரத்தில் ஏறி பழங்களைப் பறித்து கொடுத்தான். அவளுக்கு கொடுத்தவன் தானும் உண்டான்.
நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் ஓர் ஓநாய் அவர்களிருக்கும் இடத்திற்கு வந்து மாறனைப் பார்த்து ஊளையிட்டது. அதனைப் பார்த்தவளுக்கு சப்த நாடியும் நடுங்கியது.
‘இது ஏன் நம்மை கண்டு சத்தமிடுகிறது’ என மனதில் நினைத்தபடி மதியரசியைப் பார்க்க அவளோ இவனையே பீதியுடன் பார்த்தாள்.
“பெண்ணே நீ ஏன் என்னைப் பீதியுடன் பார்க்கிறாய். அது ஏன் என்னைப் பார்த்து சத்தமிடுகிறது” என கேட்க அவளோ,
“பொதுவா இந்த மாதிரி ஓநாய், நரி, நாய் இதுக்கெல்லாம் பேய் பிசாசு பூதம் எல்லாம் கண்ணுக்கு தெரியும்னு சொல்லுவாங்க. அதால கண்டுபிடிக்க முடியும்.” என பயந்து பயந்து கூற அவனோ,
“நிஜமாகவா. அப்படியென்றால் சரியாக தான் சத்தமிடுகிறது.” என இவன் கூற அவளோ,
“யோவ் யோவ். எனக்கு பேய் பூதம்னா ரொம்ப பயம் யா. நீ வேற ஏன் யா இப்படி பயமுறுத்துற. நீ சும்மா தான சொல்ற.” என அழுகாத குறையாக கேட்க அவனோ,
‘இப்பெண்ணுக்கு பூதம் என்றால் பயமா. நாம் பூதம் என்று தெரிந்தால் நம்முடன் வராமல் இருந்துவிடுவாளோ. நம் காரியம் முடியும்வரை அதனை சொல்ல வேண்டாம்.’ என மனதில் நினைத்தவன்,
“என்ன நீ எது கூறினாலும் நம்பிவிடுவாய் போலவே. பேதை பெண். நான் விளையாட்டாக தான் கூறினேன். பயப்படாதே” என கூறிவிட்டு திரும்ப மீண்டும் ஓநாய் கத்தியது. அதனைப் பார்த்து மேலும் பயந்தவள்,
“அது சரி. அப்புறம் ஏன் அது உன்ன பாத்து கத்துதுயா” என இவள் கேட்க அவனோ,
“ஒருவேளை கண்களுக்கு புலப்படாமல் பேய் பூதம் ஏதேனும் நம்மருகில் இருக்கிறதோ என்னவோ” என அவன் கூற அவளோ பயத்தில் சற்று அவனை நெருங்கி நின்றாள்.
“யோவ் ஏன் யா. எனக்கு பயமா இருக்கு யா. அப்படியெல்லாம் சொல்லாத.” என கண்கள் கலங்கி கூற அதனைப் பார்த்தவனுக்கு கஷ்டமாக இருந்தது.
“ஹே பெண்ணே. இதற்கெல்லாம் யாராவது கண் கலங்குவார்களா. பயம் கொள்ளாதே. நான் தான் உடன் இருக்கிறேனே.” என தைரியம் கூறிவிட்டு அந்த ஓநாயை விரட்டிவிட்டான். அவளோ இன்னும் பீதியிலே இருக்க அதனைக் கண்டவன் அவளிடம் தன் கையை நீட்டி,
“இன்னும் பயமாக உள்ளதென்றால் என் கரத்தைப் பற்றிக்கொள்.” என அவன் கூற சிறிதும் யோசிக்காமல் பிடித்து கொண்டாள் மதியரசி. அவன் மனதில் சலனமேதும் இல்லை. ஆயினும் ஏதோ ஓர் மகிழ்ச்சி இருப்பதை அவனால் உணர முடிந்தது. மதிக்கோ சிந்தனையுடன் கூடிய மகிழ்ச்சி.
‘என்ன இது. இந்தாளுகிட்ட மட்டும் என்னால சகஜமா நெருங்க முடியுது. இவன் யாருன்னே எனக்கு தெரியாது. ஆனாலும் நம்பி வந்துட்டேன். தயங்காம அவன் கைய புடிக்குறேன். சொல்லப்போனா எனக்கு இதெல்லாம் ஏதோ சந்தோசமா இருக்கு. ஏன் இப்படி எல்லாம் எனக்கு தோணனும். இதுவரை நான் இப்படியெல்லாம் பண்ணதே இல்லையே’ என விடைதெரியாத கேள்விக்கு விடை தேடி சிந்தித்து கொண்டு வர அவனோ,
“உன் சமூகத்தில் உன்னை எவ்வாறு என்னுடன் வர அனுமதித்தார்கள்? நேற்று மிகவும் பயந்தவாறு கூறினாய். இன்று எவ்வாறு வந்தாய்?” என கேட்க அவளோ இன்னும் சிந்தையிலே உழன்றாள். அவள் கவனிக்கவில்லை என்று புரிந்து கொண்டவனோ அவள் பிடித்திருந்த கையை சிறிதாக ஆட்ட அப்பொழுது தான் நிகழுக்கு வந்தாள் மதியரசி.
“என்ன நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். நீ ஏதோ கனா கண்டு கொண்டிருக்கிறாய். பதில் கூறு” என கேட்க அவளோ அவன் என்ன கேட்டான் என்று தெரியாமல் முழித்தாள். அவன் மீண்டும் கேட்க அவள் என்ன சேட்டை செய்துவிட்டு வந்தாளோ அதனைக் கூறினாள். அதனைக் கேட்டவன் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான். சிரிக்கும் ஆர்வத்தில் பட்டென மதியரசியின் கையிலிருந்து அவன் தன் கைகளை தெரியாமல் உருவிவிட அவளுக்கோ என்னவோ போல் இருந்தது.
பொம்மையை பிடுங்கிய குழந்தை போல் அவளின் முகம் மாறிவிட்டது. அவன் கைகளை விட மனதில்லை அவளுக்கு. அது ஏன் என்ற காரணமும் தெரியவில்லை. மீண்டும் அவனின் கையைத் தானாக பிடித்தாள் தன்னைப் பற்றி தவறாக நினைத்துவிடுவான் என்றெண்ணி தன் மனதைத் தேற்றிக்கொண்டாள். பிறகு அவனிடம்,
“யோவ் இப்போ எதுக்கு யா இப்படி சிரிக்குற. உனக்காக தான கஷ்டப்பட்டு எல்லாம் பண்ணிருக்கேன். என்னை மெச்சுறத விட்டுட்டு சிரிக்குற” என முறைத்துக்கொண்டு கேட்க அவனோ சற்று தன் சிரிப்பைக் கட்டுப்படுத்திவிட்டு,
“என்னை என்ன செய்ய சொல்கிறாய் பெண்ணே. நீ எனக்காக இத்தனை விஷயம் செய்தது பாராட்டுக்குரியது தான். அதை யாம் பாராட்டி நன்றி கூறுகிறோம். ஆனாலும் உன்னைத் தனியே காட்டிற்கு அனுப்பிவைத்தவர்களை நினைத்து எமக்கு சிரிப்பு வந்துவிட்டது.”
“என்னய்யா சொல்ற. இதுக்கு எதுக்கு சிரிக்கனும்” என மதி புரியாமல் கேட்க அவனோ,
“ஆம் பிறகு சிரிக்காமல் என்ன செய்வது. ஒரு ஓநாய் சத்தமிட்டதற்கே பேய், பூதம் வந்துவிட்டதென அஞ்சினாய். இதில் தனியாக செல்கின்ற ஆளா நீ.” என கேலியாக கூற ஏற்கனவே அவன் கைகளை பற்ற முடியவில்லை என கவலையில் இருந்த மதியரசிக்கு மூளையில் வெளிச்சம் தோன்றியது.
“யோவ் நானே இப்போ தான் அத மறந்தேன். மறுபடியும் நியாபகப்படுத்தி என்னைப் பயமுறுத்துற” என இம்முறை வராத பயத்தை வரவழைத்துவிட்டு மீண்டும் அவனின் கையைப் பற்றிக்கொண்டாள்.
‘கைய பிடிச்சதும் ஏதோ ஒருமாதிரி மனசுக்கு நல்லா இருக்குது. இது எந்த மாதிரியான உணர்வுனே தெரிலயே. நான் ஏன் இப்படியெல்லாம் பண்றேன்’ என மீண்டும் யோசிக்க தொடங்கினாள் தன் மணவாளன் இவன் என்றும் இது காதலின் ஆரம்பம் என்றும் தெரியாத பேதை. அவனோ,
“அது சரி. ஏன் பூதமென்றால் அத்தனை அச்சம். அது உன்னை என்ன செய்தது. இதற்கு முன் பூதத்தைப் பார்த்திருக்கிறாயா” என அவன் கேட்க அவளோ,
‘இவன் ஏன் பூதத்தை பத்தியே பேசிட்டு வாரான்’ என சந்தேகமாக அவனைப் பார்க்க அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்தவன்,
‘இதை பற்றியே அதிகம் கேட்டு நாமே நம்மை பூதம் என்று காட்டிக்கொடுத்து விடுவோம் போலவே’ என மனதில் நினைத்துவிட்டு,
“இல்லை. ஒரு சந்தேகத்தில் கேட்டுவிட்டேன்” என அசடுவழிந்தபடி கூறினான். அவளோ,
“பாத்ததுலான் இல்லையா. ஆனால் கேள்வி பட்டிருக்கேன் அது எப்படி இருக்கும். என்ன செய்யும்னு” என அவள் கூற அவனோ ஆர்வமாய்,
“அப்படி என்ன கேள்விப்பட்டாய். எனக்கும் கூறு. நானும் தெரிந்து கொள்கிறேன்.” என்றான்.
“சரி சொல்றேன் கேளுயா. பேய் வெள்ளையா ஆவியா இருக்கும். ஆனால் இந்த பூதம் இருக்கே.. கருப்பா குண்டா பெருசா யாரையாவது பார்த்ததும் உடனே கடிச்சு ரத்தத்தைக் குடிக்க ஆரம்பிச்சுரும்” என அவள் கொடூரமாக கூற அவனுக்கோ அவன் இனத்தைப் பற்றி கூறியவுடன் புரையேறிவிட்டது.
“பாத்தியா கேக்கும்போது உனக்கே புரையேறுது. அதான் யா எனக்கு பேய் பூதம்னா பயம்” என அவள் கூற அவனோ,
“இவ்வாறெல்லாம் தவறாக யார் உனக்கு கூறியது. பூதங்கள் ஒன்றும் அவ்வளவு கொடூரமாக இருப்பதில்லை. அதுவும் நீ கூறுவது போன்று ரத்தத்தைக் குடிக்கும் அளவிற்கு கொடூரமல்ல. எதைப் பற்றியும் முழுதாக தெரியாமல் இவ்வாறெல்லாம் கூற கூடாது” என சிறிது கோபமாய் கூற அவளோ,
“யோவ் பூதத்தைப் பத்தி சொன்னா உனக்கெதுக்குயா கோவம் வருது. எனக்கென்னமோ உன்மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு” என கூற தன்னை சகஜமாக்கியவன்,
“இல்லை இல்லை. நான் சாஸ்திரத்தில் பூதங்களைப் பற்றி படித்திருக்கிறேன். அதில் இவ்வாறெல்லாம் குறிப்பிடவில்லை. உனக்கு யாரோ தவறாக கூறியுள்ளார். அதனால் தான் அவ்வாறு பேசினேன்” என படபடவென கூற,
“ஓ அப்போ உனக்கு பூதம் பத்தி தெரியுமா” என கேட்க அவனோ,
‘ஒரு பூதத்திடமே பூதத்தை பற்றி தெரியுமா என கேட்கிறாயே. தேவர்களே இதென்ன கொடுமை’ என மனதினுள் நொந்துவிட்டு,
“ஆம் தெரியும்.”
“அப்போ சொல்லு கேப்போம்”
“பூதங்களும் மனிதர்களைப் போல் தான். இருவருக்குமுள்ள வேற்றுமை தலையில் இருக்கும் கொம்பும் கண்களின் நிறமும் வாழ்நாளும் மட்டுமே. மற்றபடி பூதங்கள் மனிதர்கள் போல் தான். மனிதர்களுக்கு குறிப்பிட்ட வாழ்நாள் உண்டு. பூதங்களுக்கு அவ்வாறில்லை. அவைத் தேவர்களால் அவர்களின் கடமையை செய்ய படைக்கப்பட்டவை. அதற்கு இறப்பு கிடையாது. தேவையின்றி யாரையும் தொந்தரவு செய்யாது.” என அவன் கூற அவளோ,
“ஓ அப்போ தேவைக்கு யாரனாலும் தொந்தரவு பண்ணுமா. இப்போ நீ என்னை பண்ற மாதிரி” என சாதாரணமாக கேலியாக கூறி சிரிக்க மாறனோ,
‘இவள் தெரிந்து கூறிகிறாளா தெரியாமல் கூறுகிறாளா’ என சிந்தித்தான்.
அவ்வாறே பேசியவாறு இருவரும் அருவியின் உச்சத்தை அடைந்தார்கள். அங்கு ஓர் பாறையில் அமர்ந்தவன் சாஸ்திரத்தைத் திறந்து மீண்டும் பதிலாக வந்த அந்த வரிகளைப் படித்தான்.
‘நதியின் ஆதியில்
நள்ளிரவு நான்கில்
நட்சத்திரத் தோடை
நான்கு திசைகளில்
நிலவின் முன்
நகர்த்த நகைக்கும்’
சிலமணித்துளிகள் யோசித்தபிறகு கடைசி வரி தவிர அனைத்தும் புரிந்தது.
“நாழிகை எவ்வளவு இருக்கும் இப்பொழுது” என மாறன் மதியரசியிடம் கேட்க அவளோ வானத்தை சுற்றிமுற்றி பார்த்துவிட்டு,
“ரெண்டு மணி இருக்கும் யா” என்றாள். அவனோ,
“எவ்வாறு கூறுகிறாய்.”
“அங்க பாருயா. விடிவெள்ளி கிழக்கு பக்கமா கீழ இறங்கி இருக்கு. அப்போ ரெண்டு மணின்னு வச்சுக்கலாம்.” என அவள் கணித்து கூற அவனோ,
“அப்படியென்றால் நான்கு மணியை எவ்வாறு கணிப்பது” என்றான்.
“பொழுது விடிய விடிய அந்த விடிவெள்ளி கொஞ்சம் கொஞ்சமா மேல வரும் யா. நல்ல உச்சிக்கு வந்துருச்சுனா மணி அஞ்சு. அப்போ உச்சில இருந்து கொஞ்சம் கீழ தள்ளி இருந்தா அது நாலு மணின்னு வச்சுக்கலாம்” என அவள் கூற அவனோ வியந்தான்.
“பரவாயில்லை. இதெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாய். நன்றி”
“அது இருக்கட்டும். நீ அந்த வரிக்கு அர்த்தம் கண்டுபிடிச்சியா இல்லையா” என்று கேட்டாள். அவனோ,
“கடைசி வரி மாத்திரம் தெரியவில்லை.”
“சரி அப்போ கண்டுபிடிச்ச மிச்ச அர்த்தத்தை சொல்லு”
“நள்ளிரவு நான்கு மணியளவில் உன் காதில் அணிந்திருக்கும் நட்சத்திர தோடை நிலவின் முன்னே காட்டியபடி நான்கு திசைகளில் நகர்த்த வேண்டும்” என அவன் கூற,
“நகர்த்தினா எப்படியா வழி கிடைக்கும்” என அவள் கேட்க,
“அது தான் அந்த கடைசி வரியில் இருக்கிறது. அதற்கு அர்த்தம் தான் விளங்கவில்லை” என யோசனையாய் கூற அவளோ கலகலவென சிரித்தாள்.
“இப்பொழுது எதற்கு சிரிக்கிறாய்” என கேட்டான் சலிப்பாக,
“சாஸ்திரத்தைப் படிச்ச உனக்கே அர்த்தம் தெரிலயே அத நெனச்சு தான் சிரிச்சேன்.” என கூறிக்கொண்டு மீண்டும் சிரிக்க சிரிக்கும்பொழுது அவளின் முகம் பிரகாசமானதைப் பார்த்தான். அதைக் கண்டவனுக்கு மூளையில் பொறிதட்டியது.
“கண்டுபிடித்துவிட்டேன். நகைக்கும் என்றால் சிரிப்பது என்று பொருள். சிரித்தால் பிரகாசமாக தெரிவோம். அப்படியென்றால் நாம் உன் நட்சத்திர தோடை நான்கு திசைகளில் நகர்த்தும்பொழுது ஒரு திசையில் மட்டும் பிரகாசமாக மின்னும். அது தான் நாம் செல்ல வேண்டிய வழி” என அவன் கூறிமுடிக்க மதியோ அவனைக் கண்ணிமைக்காமல் ஆச்சர்யமாய் வியந்து பார்த்தாள்.
காதல் சாபம் தொடரும்…