“யோவ் யோவ்… என்ன தான் யா வேணும் உனக்கு. உன்னால ஒரே அக்கப்போறா இருக்கே. இப்போ எதுக்கு யா பின்னாடியே வர” என இவள் புலம்ப அவனோ கூர்மையான பார்வையுடன் அவளின் தோடை உற்று பார்த்தான். அவனின் பார்வை இவளுக்குள் திடீரென ஓர் கிளர்ச்சியை ஏற்படுத்த மனத்திலும் சிறு பயம் தொற்றிக்கொண்டது.
“யோவ் இப்போ எதுக்கு அப்படி பாக்குற.” என இவள் நடுங்கியபடி கேட்க அவனோ அவளை நெருங்கினான் அருகில் அவளின் தோடைப் பார்க்கும் பொருட்டு.
“யோவ் எதுக்கு நீ இப்போ கிட்ட வர” என அவள் பயந்த விழிகளுடன் கேட்க அவனோ ஒற்றை விரலை தன் வாயில் வைத்து “ஷு” என்றான். அவன் கூறிய விதத்தில் ஏற்பட்ட பயத்தாலும், அவன் மூச்சு காற்று தன் முகத்தில் பட்ட கிளர்ச்சியிலும் வார்த்தை வராமல் அவளை இம்சித்தது. அவனிடத்தில் வேறொருவன் இருந்திருந்தால் இந்நேரம் அவன் கதி முடிந்திருக்கும். ஆனால் இவனிடம் இவளின் தைரியம் காணாமல் போனது.
அவளை நெருங்கியவன் அவளின் காதுமடலைப் பிடித்து அந்த தோடை உற்று கவனிக்க அவனின் அதரங்கள் புன்னகையால் விரிந்தன. ஏற்கனவே அவனின் மூச்சு காற்று ஏற்படுத்திய கிளர்ச்சியில் இருந்தவள் இப்பொழுது அவன் கை தன் காதுமடல் உரசியதில் சொல்லமுடியாத ஓர் நிலையில் இருந்தாள். அவளின் தோடு நட்சத்திர வடிவில் இருந்ததைக் கண்டுகொண்டவன் திடீரென,
“நான் கண்டுபிடித்துவிட்டேன். நான் கண்டுபிடித்துவிட்டேன்” என மகிழ்ச்சியில் சத்தமாக கூற அவனின் குரலில் தான் மீண்டும் நிகழுக்கு வந்தாள் மதியரசி. அவள் புரியாமல் ஒரு கணம் முழிக்க அப்பொழுது தான் இருந்த நிலையை யோசித்தாள்.
‘என்ன இது. நானா இப்படி இருந்தேன். எந்த ஒரு ஆம்பளை என் பக்கத்துல வந்து நின்னா கூட எனக்கு அது பிடிக்காது. என் உடம்பெல்லாம் எரிய ஆரம்பிச்சுரும். ஆனால் இவன் என்ன இவ்ளோ பக்கத்துல வந்து நின்னான். ஆனால் என் உடம்பு எரியவே இல்ல. நானும் அவனைத் தடுக்காம இருந்துருக்கேன். இது எப்படி’ என இவள் சிந்தித்து கொண்டிருந்தாள். பிறகு அவனோ பேச ஆரம்பித்தான்.
“பெண்ணே. நான் கூறுவதை சிறிது கவனமாக கேள். யாம் ஒரு புண்ணிய காரியம் செய்யவே இங்கு வந்துள்ளோம்.” என அவன் கூறிக்கொண்டிருக்க,
“யோவ் யோவ் இருய்யா. கவனமா கேளுன்னு சொன்னது மட்டும் தான் எனக்கு விளங்குச்சு.” என அவள் கூற அவனோ சிந்தித்தான். பிறகு ஏதோ முடிவு செய்தவனாக கண்களை மூடி,
‘தேவர்களே எனக்கு வழிகாட்ட போகும் இப்பெண்ணுக்கு நான் பேசுவது விளங்கவில்லை. இந்த புண்ணிய காரியம் நிறைவு பெரும் வரை நான் பேசும் மொழி அவளுக்கு விளங்க வேண்டுமாக’ என வேண்டிவிட்டு அவனுக்கு கொடுக்கப்பட்ட எட்டு மந்திரங்களில் முதல் மந்திரத்தைப் பயன்படுத்தினான். ரகசிய மந்திரங்கள் எழுதியிருந்த காகிதத்தில் முதல் மந்திரம் காணாமல் மறைந்தது. பிறகு கண்களைத் திறந்தவன்,
“இனி நான் கூறுவது அனைத்தும் உமக்கு தெள்ளத்தெளிவாக விளங்கும்.” என அவன் கூற அவளோ,
“யோவ் என்னய்யா நீ. சிரிப்பு காமிக்குற. கண்ணைமூடி ஏதோ பண்ணிட்டு இனிமே எனக்கு விளங்கும்னு சொல்ற. அதெப்படியா போயா” என சிரித்தபடி கேலி செய்தாள்.
“கேளிக்கைகள் வேண்டாம் பெண்ணே. நான் கூறியது முற்றிலும் மெய். இப்பொழுது நான் பேசுவது உமக்கு விளங்குகிறது தானே” என அவன் கேட்க அவளோ அப்பொழுது தான் கவனித்தாள். அவன் பேசுவதை அவளால் உணர முடிந்தது. அவளின் முகத்திலோ அப்பட்டமான ஆச்சர்யம். அதனைக் கண்டவன்,
“இப்பொழுது நம்புகிறாயா” என்றான் சிரித்தபடி. அவளோ,
“யோவ் என்னய்யா இது. ஆமா யா நீ பேசுறது எனக்கு புரியுது. என்னய்யா பண்ணுன. வித்தைக்காரனா இருப்ப போலேயே எப்படி யா” என்றாள் ஆச்சர்யமாக.
“எம்மால் மந்திரங்கள் உச்சரிக்க இயலும். அதனைக் கொண்டு எம்மால் எது வேண்டுமானாலும் செய்ய இயலும். தேவர்கள் எமக்களித்த வரங்கள் அவை.” என்றான் அவன். அவளோ,
“ஓ சாமி கொடுத்துச்சா. சரி சரி. ஏதோ கண்டுபிடிச்சுட்டேன்னு சொன்னியே என்ன அது”
“நான் தேடி வந்த ஒரு பொருள் இந்த காட்டிற்குள் தான் எங்கோ உள்ளது. அதற்கு வழிகாட்ட எனக்கு ஒரு பெண்ணின் துணைத் தேவை என்றும். அவளின் காதில் நட்சத்திர வடிவில் தோடு அணிந்திருப்பாள் என்றும் சாஸ்திரத்தில் குறிப்பிட்டிருந்தது. நீ தான் அது. எமது காரியம் உம்மால் மட்டுமே நிறைவேறும். எனக்கு உன் உதவிகள் வேண்டும் பெண்ணே. கிட்டுமா” என அவன் கேட்க அவளோ,
“என்னய்யா சொல்ற நீ. எனக்கு எப்படி தெரியும். நீ தேடி வந்தது உனக்கே தெரியல அப்றம் எப்படியா எனக்கு தெரியும்.”
“அது தான் தேவர்களின் திருவிளையாடல்கள். சாஸ்திரத்தில் இருப்பதை தான் நான் கூறுகிறேன். தயவுகூர்ந்து எமக்கு உதவி செய். அப்பொழுது தான் எங்கள் உலகிற்கு சாபத்தில் இருந்து விமோச்சனம் கிட்டும்.” என உருக்கமாக அவன் கேட்க அவளால் முடியாது என கூற இயலவில்லை.
“நீ சொல்றதை நான் நம்புறேன்யா. ஆனால் எனக்கெப்படி வழி தெரியும். நிஜமா தெரியாது நம்புயா”
“அதைக் குறித்து நீ கவலை கொள்ளாதே. தேவர்களின் திட்டப்படி நடப்பது நல்லபடி நடந்தேறும். ஆனால் நீ உடன் வந்தால் மட்டுமே” என அவன் கூற அவளுக்கோ என்ன கூறுவதென்றே தெரியவில்லை.
“நான் எப்படி உன்கூட வர முடியும். எங்க சாதிக்காரங்க ரொம்ப மோசமானவனுங்க. நான் உன்கூட பேசிட்டு இருக்குறத பாத்தாலே வகுந்துருவாங்க” என அவள் கூற அவனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.
“நீ என்ன கூறுகிறாய். எமக்கு விளங்கவில்லை” என அவன் கூற,
“யோவ் நீ பேசுறது எனக்கு விளங்கணும்னு வித்தை செஞ்சல அதே மாதிரி நான் பேசுறது உனக்கு விளங்கணும் ஒரு வித்தை செஞ்சுருயா. என்னால ஒவ்வொரு தடவையும் விளக்க முடியாது” என அவள் கூற அவள் கூறியது அரைகுறையாக விளங்கியது அவனுக்கு.
“அதுவும் சரி தான்” என கூறியவன் இரண்டாம் மந்திரத்தைப் பயன்படுத்தினான். அந்த காகிதத்தில் இருந்த இரண்டாவது மந்திரமும் மறைந்தது.
“இப்பொழுது மொழிவாயாக” என அவன் கூற மதியரசி கூறினாள்.
“நான் எப்படி உன்கூட வர முடியும். எங்க சாதிக்காரங்க ரொம்ப மோசமானவனுங்க. நான் உன்கூட பேசிட்டு இருக்குறத பாத்தாலே வகுந்துருவாங்க” என அவள் கூற அதனைப் புரிந்து கொண்டவன்,
“அதற்கு ஏதாவது நாம் தான் திட்டம் தீட்ட வேண்டும்.” என அவன் கூற இவளுக்கோ பயம் தோன்றியது.
“எனக்கு பயமா இருக்குது யா வேணாம் யா. நான் கிளம்புறேன்” என அவள் செல்ல எத்தனிக்க அவனோ,
“என்னால் மந்திரங்கள் செய்து உன் அனுமதியின்றி என்னுடன் வழிகாட்ட அழைத்து செல்ல இயலும். ஆனால் அவ்வாறு கட்டாயப்படுத்தி உன்னை செய்யவைக்க எமக்கு விருப்பமில்லை. அதனால் தான் உன் அனுமதி கேட்கிறேன். இல்லையென்றால்…” என அவன் இழுக்க இவளோ,
‘அடப்பாவி. என்ன இப்படி சொல்லுறான். மந்திரிச்சி கூட்டிட்டு போய்ட்டானா என்ன நடந்தாலும் நம்மளால ஒன்னும் செய்ய முடியாது. அதுக்கு நாமளே ஒத்துப்போம். ஐயோ இப்படி பயம் முறுத்துறானே’ என மனதில் நினைத்துவிட்டு,
“இல்ல இல்ல. அப்படி ஏதும் செஞ்சுறாத. நானே வரேன். எங்க அப்பாரு கிட்ட ஏதாவது சாக்கு சொல்லிட்டு நான் நாளைக்கு இதே இடத்துக்கு வரேன். இப்போ கிளம்புறேன்” என கூறிவிட்டு விறுவிறுவென சென்றுவிட்டாள்.
பூதமாறனிடம் பேசிவிட்டு தன் இருப்பிடத்திற்கு வந்த மதியரசி தன் அப்பாவிடமும் தோழிகளிடமும் என்ன பொய் சாக்கு கூறிக்கொண்டு நாளை அவனுடன் செல்வது என பலமாக சிந்தித்து கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கு வந்த அவளின் தோழி,
“ஏ புள்ள என்ன இம்புட்டு நேரம் யோசிக்குற. என்னாச்சு புள்ள.” என கேட்க மதியோ,
“நான் ஏதும் நினைக்கவில்லை. உறக்கம் வருவது போல் இருக்கிறது” என அவளறியாமல் செந்தமிழில் பேச அவளின் தோழியோ,
“என்ன புள்ள ஆச்சு உனக்கு. காத்து கருப்பு ஏதும் அண்டிருச்சா. ஏன் புள்ள வித்தியாசமா பேசுற” என பதறியவாறு அவளின் முகத்தை தன் சேலையால் துடைத்தபடி கேட்க அப்பொழுது தான் மதியரசி சிந்திக்கிறாள்.
‘அட கருமமே. அந்தாளு கூட கொஞ்ச நேரம் பேசுனதுக்கே அவன் பாஷ நமக்கு ஒட்டிக்கிச்சு. கருமம் கருமம்’ என தன் தலையில் அடித்தவள்,
“அட புள்ள அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ என்ன சொல்லுறன்னு பாக்குறதுக்கு தான் அப்படி பேசினேன்” என கூறிவிட்டு ஈயென இளிக்க அவளோ,
“நல்ல பேசுன போ புள்ள. பயந்தே போய்ட்டேன் நானு” என அவள் கூற திடீரென அவளின் கூற்றில் ஓர் யோசனை தோன்றியது. அதனை செயல்படுத்த திடீரென,
“ஏய்… யாரு அங்க.. எல்லாவனும் இங்க வாங்க. ஆத்தா வந்துருக்கேன்” என தன் கைகளைத் தலைக்கு மேல் கட்டியபடி அங்குமிங்கும் ஆடியபடி கூற அவளின் தோழியோ உண்மையாகவே மதியரசிக்கு அருள் வந்துவிட்டது என நம்பி ஊரைக் கூட்டினாள். கூடிய அனைவரும் பக்தி பரவசமாய் அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்திருக்க அவளோ,
“சாமி குத்தம் ஆயிருச்சு டா. சாமி குத்தமாயிருச்சு. இதை ஆத்தா மன்னிக்கவே மாட்டேன் டா” என கத்த அந்த இனத்தின் தலைவரும் மதியரசியின் வளர்ப்பு தந்தையுமான வீரபாண்டி பவ்யமாக பேச ஆரம்பித்தார்.
“ஆத்தா. எங்க சனத்தை மன்னிச்சுரு ஆத்தா. என்ன சாமி குத்தம் நடந்தது ஆத்தா. என்ன பண்ணா நீ மலையிறங்குவ ஆத்தா. சொல்லு நாங்க அத செஞ்சிடுறோம்” என கூற மதியோ,
‘நல்லவேளை உடனே கேட்டுட்டாக.’ என மனதில் நினைத்துவிட்டு,
“குத்தம்னா சின்ன குத்தம் இல்ல டா. சொல்லமுடியாத பெரிய குத்தமா பண்ணிட்டீக. அம்புட்டு சீக்கிரமா இந்த ஆத்தா மலையிறங்கமாட்டேன்.. நான் மலையிறங்கணும்னா இங்க இருந்து ஒரு கன்னிப்புள்ள இந்த கந்தர்வ காட்டுக்கு தெற்கால இருக்குற அந்த அடர்ந்த காட்டுக்குள்ள தனியா யார் துணையும் இல்லாம போய் ஒரு வேப்ப மரத்துல இருந்து வேப்பிலை பறிச்சுட்டு வந்து எனக்கு அபிஷேகம் பண்ணனும். இல்லனா இங்க இருக்குற எல்லா கன்னி புள்ளைகளுக்கும் காத்து கருப்பு அண்டிரும்” என கூற அனைவரின் முகத்திலும் பீதி தெரிந்தது.
“ஆத்தா ஒரு பொம்பள புள்ளைய எப்படி ஆத்தா தனியா அனுப்புறது”
“ஆத்தான்னு ஒருத்தி நான் எதுக்கு டா இருக்கேன். நான் துணை இருப்பேன் அந்த புள்ளைக்கு” என ஆடிக்கொண்டே கூற அனைவரும், “மதியரசி மேல தான் ஆத்தா வந்துருக்கு. மதியரசி தான் போனும்” என்று கூறிவிட வீரபாண்டியும் வேறு வழியின்றி சரியென ஒப்புக்கொண்டார். பிறகு மதியரசி அவ்வாறே மயங்குவது போல் நடித்து கீழே விழுந்தாள்.
அவளைத் தூக்கிவந்து தண்ணீர் தெளித்து நடந்ததை அனைவரும் அவள் நடத்திய நாடகத்தை அவளுக்கே கூற அவளோ உடனே ஒப்புக்கொள்ள வேண்டாம் என நினைத்து,
“என்ன புள்ள பேசுறீங்க எல்லாரும். ஒரு பொம்பள புள்ள தனியா எப்படி காட்டுக்குள்ள போக முடியும். எனக்கு பயமா இருக்குது. நான் போவ மாட்டேன்” என வீம்பு பிடிப்பது போன்று நடிக்க பொறுமையிழந்த தோழிகளில் ஒருத்தி,
“என்ன இவ இம்புட்டு வீம்பு பண்றா. அவ வேணாம். நானே போறேன். நம்ம சனத்துக்காக” என அவள் கூற மதியரசியோ,
‘அட சிறுக்கி. உன்ன யாரு புள்ள இப்போ பேச சொன்னது. எல்லாம் போச்சு’ என மனதினுள் நொந்தவள் உடனே,
“சரி புள்ளைகளா. உங்க எல்லாருக்காகவும் நானே போறேன். என்மேல தான் ஆத்தா வந்தா. அப்போ நான் போறது தான் சரியா வரும்” என கூற அவளின் தோழிகளோ, ‘இத தான புள்ள நாங்களும் சொன்னோம்’ என சலிப்பாக பார்த்தனர். ஒருவாறாக அனைவரையும் சமாளித்தவள் அடுத்த நாள் அங்கு செல்ல ஆயத்தமானாள். செல்வதற்கு முன்னே பூஜை ஒன்று நடத்தி அனுப்பிவைக்க தயாராக இருந்தனர்.
வீரபாண்டிக்கோ தன் மகள் தனியே செல்வது வருத்தமாக இருந்தது. இருப்பினும் ஊர் மக்களுக்காக செய்ய வேண்டிய கட்டாயம் என மனதைத் தேற்றிக்கொண்டார். அவர் கண்கள் கலங்க அதனைக் கண்ட மதியரசியோ,
‘என்னை மன்னிச்சுரு பா. நான் போகலனா அந்தாளு மாயமந்திரம் பண்ணி வர வச்சுருவான். அப்புறம் அவன் என்ன சொல்றானோ அத தான் நான் கேக்குற மாதிரி ஆயிரும். அதான் எனக்கு வேற வழி தெரியல. வெரசா வந்துருவேன்’ என மனதினுள் கூறிக்கொண்டவள்,
“கவலைப்படாத பா. பத்திரமா வந்துருவேன்” என தைரியம் கூறிவிட்டு தனக்கு தேவையானவற்றை அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்றாள் திரும்பி இங்கு வரப்போவதில்லை என்பதை அறியாமல்.
அவன் இருக்கும் இடத்திற்கு சென்றவள் சுற்றிமுற்றி மாறனைத் தேட அவனோ சாஸ்திரத்தைப் படித்து கொண்டிருந்தான். இவள் வருவதைப் பார்த்தவன்,
“பரவாயில்லை. வந்துவிட்டாயே. யாம் உன்னைப் பாராட்டுகிறோம்.” என அவன் கூற அவளோ,
“யோவ் நீ ஒருத்தன் தான இருக்க அப்றம் ஏன் யா உன் பின்னாடி ஏதோ பெரிய கூட்டம் நிக்குற மாதிரி பாராட்டுகிறோம் வைக்கிறோம்னு சொல்ற” என அவள் கேட்க அவனோ,
“அதெல்லாம் உமக்கு புரியாது பெண்ணே. எங்கள் மக்களை மீட்க எமக்கு உதவி புரிகிறேன் என மறுக்காமல் வந்ததற்கு மிக்க நன்றிகள்” என அவன் கூற அவளோ,
‘வரலனா மந்திரம் போட்டுருவேன்னு மிரட்டிட்டு இப்போ நன்றியாம்ல நன்றி. இரு யா. உன்ன என்ன பாடு படுத்தறேன்னு மட்டும் பாரு’ என மனதில் நினைத்துவிட்டு கடமையே என சிரித்தாள்.
“சரி நாம் நமது தேடலை இப்போதே தொடங்கலாம். சற்று இங்கே அமரு” என அவன் கூற அவளோ,
“யோவ் என்ன நெனச்சுட்டு இருக்குற நீ. நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல. ஏதோ பாவம்னு உதவி பண்ண வந்தா நீ என்ன காரியம் பண்ண சொல்ற. வகுந்துருவேன் பாத்துக்கோ” என கோபத்தில் கத்த மாறனோ,
‘நாம் என்ன கூறிவிட்டோம் என இவள் கோபம் கொள்கிறாள்.’ என புரியாமல் சிந்திக்க அப்பொழுது தான் அவன் கூறியதன் வேறு அர்த்தம் அவனுக்கு விளங்கிற்று. பிறகு அவளை முறைத்தவன்,
“ஹே முட்டாள் பெண்ணே. என்னைப் பார்த்தாள் உனக்கு காமுகன் போன்று தெரிகிறதா. அமர்ந்து தேவர்களிடம் வேண்டிவிட்டு சாஸ்திரத்தைத் திறந்தால் மட்டுமே நமக்கு நாம் செல்லும் வழி கிடைக்கும். அதற்காக தான் அமர சொன்னேன். தேடல் என நான் கூறியது சாஸ்திரத்தின் தேடல் மட்டுமே. புரிந்ததா. ஏதேனும் விதண்டாவாதமாக பேசினால் நான் மந்திரங்களால் உன் திருவாயைக் கட்டும் நிலைமை தான். ஜாக்கிரதை.” என கோபத்தில் பொரிந்து தள்ள அவளோ சற்று மிரண்டு தான் போனாள்.
காதல் சாபம் தொடரும்…