சாபம் – 2
“சிரி புள்ள சிரி. நான் சொன்ன மாதிரியே என்னைத் தேடி என் மவராசன் வருவான் பாரு புள்ள” என கூறி முடிக்க அவளின் முன்னே தொப்பென வந்து குதித்தான் பூதமாறன் “அயோ” என அலறியபடி.
ஓர் ஆடவன் வந்து விழுந்தவுடன் பெண்கள் அனைவரும் அரைகுறை ஆடையுடன் இருப்பதை நினைத்து பயந்து ஓடினர். தன் தோழிகளுடன் சேர்ந்து மதியரசியும் பயந்து ஓட நினைக்க அவளின் பாவாடை அருகில் இருந்த முட்புதரில் சிக்கிக்கொண்டது. வேகமாக இழுத்தால் கிழிந்துவிடும் என்ற அச்சம் வேறு. எவ்வளவு முயன்றும் எடுக்க முடியாத படி ஆகிவிட்டது.
‘பாவிகளா.. கொஞ்சம் கூட யோசிக்காம என்னை விட்டுட்டு ஓடிட்டாளுக. அயோ கடவுளே யார் இந்த பரதேசி. பொம்பலைங்க குளிக்குற எடத்துல நின்னு பினாத்திட்டு இருக்கான்’ என இவள் புலம்பிக் கொண்டிருக்க மாறனோ,
‘என்ன இது நாம் எங்கு வந்துள்ளோம்’ என சிந்தித்தவாறு சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது தான் மதியரசியைக் கவனிக்கின்றான்.
‘ஏன் இந்த பெண் முட்களோடு சண்டைப் போடுகிறாள்’ என நினைத்துக்கொண்டே,
“பெண்ணே. என்ன செய்து கொண்டிருக்கிறாய்.” என அவன் கேட்க அவளோ அவன் கேள்வியில் கோபமுற்று,
“ஆன்ன்ன்ன்…. பூ பறிச்சுட்டு இருக்கேன்.” என கடுப்பில் கூற,
“மானிட உலகில் இவ்வாறு தான் பூக்கள் பறிப்பார்களா…” என அவன் புரியாமல் கேட்க அதில் மேலும் கடுப்பானவள்,
“யோவ் யாருய்யா நீ. பொம்பளைங்க குளிக்குற இடம்னு கூட பாக்கமா நீ ஏதோ சுத்தி பார்க்க வந்த மாதிரி சுத்திட்டு இருக்குற. எங்க பயலுகளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சுதுனு வச்சுக்கோ உன்னை வகுந்துருவாங்க வகுந்து” என இவள் திட்டிக்கொண்டே போக அவள் பேசுவது புரியாதவனோ அவள் முன்னே வந்து நின்று,
“நீ என்ன பேசுகிறாய். எனக்கேதும் விளங்கவில்லையே” என அருகில் வந்து கேட்க தன் கைகளை மார்புக்கு குறுக்கே மறைத்தவள்,
“யோவ் என்னய்யா நீ கிட்ட வர. திரும்பி நில்லுயா” என இவள் கத்த இவள் கத்தியதில் பயந்து திரும்பி நின்றவன்,
“நான் என்ன கூறினேன் என்று நீ இவ்வளவு கோபம் கொள்கிறாய். நீ பேசுவது எனக்கு விளங்கவில்லையே என்று தானே கேட்டேன்.” என திரும்பி நின்றபடியே கூற அவளோ,
“உனக்கு விளங்குதோ இல்லையோ. அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நீ இப்படியே பேசிகிட்டு இங்கன நின்னன்னு வச்சுக்கோ உன் கை கால் விளங்காம போயிரும் பரவாயில்லையா.” என முட்களுடன் போராடியபடி கூறிக்கொண்டிருந்தாள்.
“ஓ உன்னை நான் ஏதேனும் செய்துவிடுவேன் என்று பயப்படுகிறாயா. கவலை கொள்ளாதே. யாம் உன்னை அவ்வாறெல்லாம் செய்யமாட்டேன். நீ என்னைத் தவறாக புரிந்திருக்கிறாய். இப்பொழுது உனக்கு என் உதவி தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.” என கூற ஏனோ மதியரசிக்கும் அவனின் மேல் ஓர் நம்பிக்கைத் தோன்றியது.
“ஆமா யா. என் பாவாடை இந்த முள்ளுக்குள்ள மாட்டிக்கிச்சு. கொஞ்சம் எடுத்து விடணும்” என அவள் கேட்க கொஞ்சம் கொஞ்சம் அவள் பேசுவது புரிந்த அவனோ உடனே திரும்பி,
“நான் எடுத்து விடுகிறேன்” என அருகில் வர,
“யோவ் யோவ். நின்னுயா. உன்னை நான் இன்னும் திரும்ப சொல்லவே இல்ல. திரும்புயா அங்குட்டு” என மீண்டும் இவள் கத்த,
“இதென்ன கொடுமை. பார்க்காமல் யாம் எவ்வாறு இதனை எடுக்க இயலும். என் விழிகள் என்ன பின் சிரத்திலா இருக்கிறது.” என அவன் கேட்க,
“பின் சிரமா அப்படினா… சரி என்னவோ இருக்கட்டும்.. முதல்ல உன் தோள்ல இருக்குற துண்டை எனக்கு கொடு. நான் போர்த்திக்கிறேன். அப்புறம் நீ திரும்பு” என அவள் கூற அவனும் கொடுக்க அதனைப் போர்த்திய பின் அவன் திரும்பி முட்களில் இருந்து அவளின் உடையை விடுவித்தான். பிறகு நிமிர்ந்தவன்,
“இது என்ன இடம். நான் எங்கு இருக்கிறேன். நீ யார். இங்கு என்ன செய்கிறாய்” என அவன் கேட்க அவளோ முறைத்தபடி,
“யோவ் நான் கேட்க வேண்டியத நீ கேக்குற. இங்க எப்படியா நீ வந்த. ஆமா மேல இருந்து குதிச்சியே. அப்போ மரத்து மேல தான் இருந்தியா” என கேட்டவள் ஏதோ யோசித்துவிட்டு, “யோவ் அப்போ நாங்க குளிக்குறதெல்லாம் பார்த்துட்டு இருந்தியா… உன்ன என்ன பண்றேன்னு பாரு” என கூறியவள் கத்தத் தொடங்க அதற்குள் அவளின் வாயைப் பொத்தியவன்,
“எதற்கு சத்தமிடுகிறாய்” என கேட்க,
“விடுயா. யாரு நீ? மொதல்ல அத சொல்லு. திடிர்னு பூதம் மாதிரி வந்து குதிக்குற.” என அவள் கேட்க அவனோ,
“உனக்கு எவ்வாறு என் ரகசியம் தெரியும்” என்று ஆச்சரியமாய் கேட்க அவளோ,
‘இந்தாளு என்ன உளறுறான். போதைல இருக்கானோ’ என ஒருநிமிடம் நினைத்தவள்,
“ஆமா நீ ஏன் புரியாத மாதிரி பேசுற. எங்கனா இருந்து தப்பி ஓடியாந்தியா” என அவள் கேட்க,
“யாம் தமிழில் தான் மொழிகிறோம். நீ தான் பெண்ணே புரியாமல் பேசுகிறாய்”
“யோவ் என்னய்யா நீ குழப்புற. என்னமோ பண்ணிட்டு போ. எனக்கு சோலி நெறய கெடக்கு.” என கூறிவிட்டு செல்ல எத்தனிக்க,
“எமது வஸ்திரம்” என அவன் கேட்க புரியாமல் முழித்த மதியரசி,
“அப்படினா என்னய்யா” என்றாள்.
“நீ போர்த்தியுள்ளாயே அது எம்முடையது தானே” என அவள் போர்த்தியிருந்த துண்டைக் காண்பித்து கேட்க,
“யோவ். இத வச்சு நான் என்ன கோட்டையா கட்ட போறேன். நாளைக்கு வந்து கொடுக்குறேன். இதே எடத்துல. இப்போ தர முடியாது” என அவள் கூற அவனும் சிந்தித்துவிட்டு தலையசைத்தான். அவள் சென்ற உடன்,
“யார் இவள்? ஏதேதோ பிதற்றுகிறாள். மானிடர்கள் பேசும் மொழி நமக்கு தான் விளங்கவில்லை போலும். நாம் வந்த வேலையைக் கவனிக்கலாம். அப்பொழுது தான் என் துணைவி எனக்கு கிடைப்பாள். எங்கு இருக்கிறாளோ என் தேவதை” என்று தனக்கு தானே கூறியவன் தன் கையில் இருக்கும் சாஸ்திரத்தைத் திறக்க அவனின் கேள்விக்கு பதில் கூறும் பொருட்டு அதிலிருந்து ஒரு காகிதம் காற்றுக்கு பறந்து.. சென்றுக்கொண்டிருந்த மதியரசியின் பின்னே சென்றது. இவள் தான் உன் தேவதை என காட்டுவதற்காக. பாவம் பூதமாறனுக்கு தான் புரியவில்லை.
“அயோ அது ரகசிய மந்திரங்கள் கொண்ட காகிதம் ஆயிற்றே.” என பதறியபடி அதைக் கைப்பற்ற அதன் பின்னே சென்றான். அதுவோ மதியரசியின் பின்னேயே பறந்து சென்றது. அரவம் கேட்டு மதியரசி திரும்ப நேரே அவளின் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது அந்த காகிதம். அதனை எடுத்துவிட்டு பார்க்க மாறனோ கைகளை காற்றில் துளாவியபடி ஓடி வந்து கொண்டிருந்தான். அதனைக் கண்டு பயந்த மதியரசியோ,
“யோவ் யோவ் என்னையா பண்ற. என் பின்னாடியே வந்துட்டியா நீ. உன்ன இன்னைக்கு ஒருவழியாக்காம விட மாட்டேன். இந்த மதியரசி கிட்டயே உன் வேலைய காமிக்குறீயா. பார்க்க தான் நான் பொம்பள. அடிச்சேன்னு வை சுருண்டு விழுந்துருவ” என இவள் கோபக்கனல் கக்க பேசிக்கொண்டிருக்க அவனோ,
“நீ என்ன வேண்டுமானாலும் செய். ஆனால் அந்த காகிதத்தை மட்டும் என்னிடம் ஒப்படைத்துவிடு. வாயுபகவானின் லீலையால் அது உன் முகத்தில் வந்து தஞ்சம் புகுந்துவிட்டது.” என அவன் கூற அவளுக்கோ அவனின் பேச்சில் தன் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்றிருந்தது.
“ஐயோ இப்படி பேசியே எனக்கு பித்து பிடிச்சுரும் போல. இதைத் தேடி தான் வந்தியா இதைப் பிடி. வேற எதுவும் நீ பேசுனது எனக்கு விளங்கல. நான் கிளம்புறேன் ராசா” என கொடுத்துவிட்டு விறுவிறுவென சென்றுவிட்டாள்.
“பேதை பெண்” என கூறி சிரித்துக்கொண்டான் பூதமாறன்.
பிறகு கண்களை மூடிவிட்டு,
‘யாம் எங்கு உள்ளோம் இப்பொழுது. என் கடமையை எவ்வாறு நான் ஆரம்பிப்பது. நான் எங்கு செல்வது. வழிகாட்டுங்கள் தேவர்களே’ என மனதில் வேண்டிவிட்டு சாஸ்திரத்தைத் திறந்து பார்க்க அதில் அவனுக்கான பதில் இருந்தது.
‘கந்தர்வ வனம் எனும் காடு
செவியில் நட்சத்திரத் தோடு
வழிதுணைக்கு ஒரு பெண் தேடு’
என்றிருக்க அதனைப் படித்தவன்,
“ஓ இது கந்தர்வ வனமா. செவியில் தோடா. தோடென்றால் என்ன.” என சிறிது நேரம் சிந்தித்தவன் யோசனைக்கு பிறகு,
“தேவாரத்தில் சிவபகவானைக் குறித்து படித்துள்ளோம் அல்லவா ‘தோடுடைய செவியோன்’ என. எனவே தோடு என்றால் காதணி. சரி நட்சத்திர காதணியோடு ஒரு பெண் வர வேண்டுமா வழிகாட்ட. எங்கு சென்று தேடுவேன் அவ்வாறு ஒரு பெண்ணை” என தனக்குள்ளேயே பேசிகொண்டவன் அப்பெண்ணைத் தேடி நடக்க ஆரம்பித்தான்.
சிறிது தூரம் நடந்தவனுக்கு அங்கு ஆட்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. நான்கு திசைகளிலும் கொஞ்சம் தூரம் சென்றவனுக்கு ஏதோ இன்று அவனால் அப்பெண்ணைக் கண்டுபிடிக்க இயலும் என தோன்றவில்லை. மீண்டும் பழைய இடத்திற்கே வந்தவன் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தான். சோர்வில் விழிமூட அவ்வாறே உறங்கிவிட்டான். உறக்கத்திலும் சாஸ்திரத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டு உறங்கினான்.
அங்கு தன் இடத்திற்கு சென்ற மதியரசியோ தன் தோழிகளை வார்த்தையால் விலாசி கொண்டிருந்தாள்.
“சரி விடு புள்ள. அதான் பத்திரமா வந்துட்டல அப்புறம் என்ன” என தோழி ஒருத்தி கூற,
“ஆமா புள்ள இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. ஏதோ அந்தாளு கொஞ்சம் நல்லவனா இருக்க போய் நான் தப்பிச்சேன். மோசமான முரடான இருந்தா என் கதி என்னவாகுறது” என கோபமாய் மதியரசி கேட்க,
“நல்லவனா… ஏய் புள்ள நீ இப்படி எவனையும் நல்லவன்னு சொல்ல மாட்டியே. உன் வாயால ஒரு ஆம்பளைய நல்லவன்னு சொல்லிருக்க. அதிசயமால இருக்குது” என இழுத்தபடி தோழி ஒருத்தி கேட்க,
“ஆமா புள்ள. அவனைப் பார்த்தா என்னால தப்பா நெனைக்க முடியல. ஆனால் அவனும் அவன் பேசுறதும் ஒரு தினுசா இருந்துச்சு புள்ள. முக்காவாசி எனக்கு புரியவே இல்ல.”
“அது சரி” என்றனர்.
பிறகு அன்றைய நாள் அவ்வாறே கழிய மறுநாள் பொழுது மிகவும் அழகாக விடிந்தது. மரத்தடியில் உறங்கிக்கொண்டிருந்த மாறனின் கையில் திடீரென ஏதோ வலிப்பது போல் தோன்ற உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்தான்.
“என்ன இது. ஏதோ வலிப்பது போல் தோன்றுகிறதே.” என நினைத்தபடி வலித்த இடத்தில பார்க்க அதில் பூச்சு ஒன்று கடித்ததற்கான தடமும் அவனின் பச்சை நிற குருதி லேசாக வழிந்தபடி இருந்தது. அருகில் பூச்சியோ இறந்த நிலையில் காணப்பட்டது.
“நீ தான் என்னைத் தீண்டினாயா. இது தேவையா உமக்கு. நான் சிவனே என்று தானே உறங்கி கொண்டிருந்தேன். என்னைத் தீண்டிவிட்டு இப்பொழுது நீ மாண்டு கிடக்கிறாய். உன் விதி என் குருதி குடித்து தான் போக வேண்டும் என்று எழுதியிருந்தால் நான் என்ன செய்வது” என அதனுடன் பேசிக்கொண்டிருக்க அவனின் வஸ்திரம் கொடுக்க அவ்விடம் நோக்கி வந்தாள் மதியரசி.
தொலைவிலேயே அவனைக் கண்டுகொண்டவள் இவன் என்ன செய்கிறான் என்ற யோசனையில் பார்க்க அவளின் கண்களுக்கு அவன் தனியே பேசிக்கொண்டிருப்பது போல தான் தோன்றியது.
“ஆத்தாடி. என்ன இந்தாளு தனியா பினாத்திகிட்டு இருக்கான். ஒருவேளை கிறுக்கனா இருப்பானோ’ என நினைத்தபடி அவனருகில் சென்றாள். இவளை எதிர்பாக்காத மாறன் திடுக்கிட்டு எழும்ப அவளோ கத்திவிட்டாள்.
“நீயா.. ஏன் சத்தமில்லாமல் வந்து இவ்வாறு பயம் கொள்ள செய்கிறாய்.” என அவன் கடுமையாக கேட்க,
“யோவ் என்னய்யா என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுதாம். நீ என்னைப் பயப்பட வச்சுட்டு இப்போ மாத்தி சொல்றியா. சரியான கிறுக்கனா இருப்ப போலயே. தனியா வேற பினாத்திட்டு இருக்குற” என இவள் கூற இவள் பேசுவதே அவனுக்கு புரியவில்லை.
“ஏய் பெண்ணே.. சற்று நிறுத்து உமது உரையை. என்ன தான் கூறுகிறாய். பினாத்தல் எனறால் என்ன”
“பேசிட்டு இருக்குறதுயா” என்றாள் சலிப்பாக.
“ஓ. சரி அதற்கு முன் ஏதோ கூறினாய் அல்லவா ஏதோ கிறுக்க” என இழுக்க அவளே,
“கிறுக்கனா” என கேட்டாள்.
“ஆம் அதே தான். அவ்வாறென்றால் என்ன?”
‘இதை போய் இவன்கிட்ட எப்படி சொல்றது. நல்ல மாறியே சொல்லுவோம்’ என நினைத்துவிட்டு,
“அதுவா அது ரொம்ப நல்ல மனுசன்னு அர்த்தம்” என வந்த சிரிப்பை அடக்கியபடி கூறினாள் மதியரசி. அவனும் அதனை நம்பிவிட்டு,
“நன்று. ஆனால் நான் தான் மானிடனே இல்லையே” என அவன் யோசனையாய் கூற அவளோ,
“அட போ யா. என்னத்தையாவது ஒளறிக்கிட்டு. இந்தா புடி. உன் துண்டு. இதைக் கொடுக்க தான் வந்தேனாக்கும். நான் கிளம்புறேன்.” என கூறிவிட்டு திரும்பி செல்ல சூரிய ஒளியில் அவள் காதில் அணிந்திருந்த தோடு மின்னியது. அதில் இவனது கண்கள் கூச பிறகு நேற்று சாஸ்திரத்தில் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வர அவளின் தோடைக் காண அவளின் பின்னேயே சென்றான். அதனைக் கண்டுகொண்டவளோ,
“யோவ் யோவ்… என்ன தான்யா வேணும் உனக்கு. உன்னால ஒரே அக்கப்போறா இருக்கே. இப்போ எதுக்குயா பின்னாடியே வர” என இவள் புலம்ப அவனோ கூர்மையான பார்வையுடன் அவளின் தோடை உற்று பார்த்தான். அவனின் பார்வை இவளுக்குள் திடீரென ஓர் கிளர்ச்சியை ஏற்படுத்த மனத்திலும் சிறு பயம் தொற்றிக்கொண்டது.
காதல் சாபம் தொடரும்…