சாபம் – 10
சாஸ்திரம் தனியே இருப்பதைப் பார்த்த அந்த தீவினைப் பூதம் பூத உலகத்தை சாபத்தில் தள்ள திட்டமிட்டு அதனை இரும்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி பூமியை நோக்கி வீச அது சஞ்சீவினி ஆற்றில் சென்று விழுந்தது.
வெளியில் சென்ற மதி மீண்டும் உள்ளே வந்து பார்க்க சாஸ்திரத்தைக் காணவில்லை. அதனைக் கண்டு பதறியவள் தேவர்களிடம் மன்னிப்பு வேண்ட தேவர்கள் கோபமடைந்தனர்.
“சாஸ்திரங்களைக் காக்க தவறியதற்காக பூதமாஞ்சோலைக் கட்டுக்கு உட்படுத்தப்படும். பூதங்கள் அனைவரும் பூதமாஞ்சோலை தவிர்த்து வேறெங்கும் செல்ல முடியாத நிலையை அடைவீர்கள். பூதமதியின் அலட்சியத்தால் இது நிகழ்ந்ததால் அவள் பூமிக்கு சென்று பூத உலகின் நினைவுகள் மறக்கப்பட்டு மானிடப்பெண்ணாக வாழவேண்டுமென்பது அவளின் சாபம். உன் விமோச்சனத்திற்கு பின் நீ பூதமாஞ்சோலையில் காலடி எடுத்து வைத்த பிறகு தான் பூத உலகின் நினைவுகளை நீ திரும்ப பெறுவாய். அதே போன்று பூதமாஞ்சோலையை சேர்ந்த மற்ற பூதங்களுக்கு சாஸ்திரம் தொலைந்ததும் அதனால் சாபகட்டுக்குள் இருப்பதாக மட்டும் தான் நினைவிலிருக்கும். காரணமும் பூதமதியும் உங்கள் நினைவில் இருந்து நீக்கப்படும். எப்பொழுது சாஸ்திரம் கிட்டுகிறதோ அப்பொழுது தான் பூதமாஞ்சோலைக்கு விடுதலை. சாஸ்திரத்தை மீட்க பிறந்த ஒருவனால் மட்டுமே பூதமதிக்கும் பூதமாஞ்சோலைக்கும் விமோச்சனம் கிட்டும்.” என சாபமிட அதனைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.
மதிக்கோ தன்னை நினைத்து குற்றஉணர்வாய் இருந்தது. அதுமட்டுமன்றி இங்குள்ள அனைவரையும் பிரிந்து பூமிக்கு செல்ல வேண்டும் என்பதை நினைத்தும் தன் காதலை முன்னமே மாறனிடம் கூறியிருக்கலாம் என்றும் மிகவும் வருத்தமாக இருந்தது. பிறகு தேவர்களின் சாபத்திற்கிணங்க பூதமதி மதியரசியாக பூமிக்கு தள்ளப்பட்டாள். பூதமாஞ்சோலை கட்டுக்குள் கட்டப்பட்டது.
இவ்வாறு அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருக்க அதனைப் படித்த இருவருக்கும் பேரதிர்ச்சியுடன் கூடிய சந்தோஷம்.
“மாறா அப்போ நான் தான் அந்த பூதமதியா. நிஜமாவே நான் ஒரு பூதமா. என்னால நம்பவே முடியல” என ஆச்சர்யத்தின் உச்சத்தில் கேட்டாள்.
“ஆம் மதி. நீயே தான். என் மணவாளி நீ எனக்கு இப்பொழுது கிடைத்துவிட்டாய். இனி நம் காதலுக்கு எந்த தடையும் இல்லை மதி. நம் காதல் நிறைவேறப்போகிறது” என மாறன் கண்கலங்க மிகவும் மகிழ்ச்சியாக கூறினான். மதிக்கோ இன்னும் ஆச்சர்யம் விலகவில்லை. அவளால் இதனை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
“ஆனால் மதி. நீ இங்கு வந்தது உன் கூட்டத்தாருடன் சேர்ந்தது எல்லாம் சில காலமாக தானா அப்படியென்றால்” என மாறன் தன் சந்தேகத்தைக் கேட்க மதியோ குழம்பியபடி,
“இல்லை யா கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நான் இங்க இருக்குற மலைக்கு பக்கத்துல மயங்கி விழுந்துக்கிடந்தேன். அத பாத்த எங்க சனங்க என்னை அவங்க இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க. மயக்கத்துல இருந்து தெளிஞ்சப்போ எனக்கு எந்தவித நியாபகமும் இல்லாம இருந்தேன்னு சொன்னாங்க. ரொம்ப நாளா யார்கிட்டயும் பேசலயாம். கொஞ்ச நாள் அப்புறம் தான் பேச ஆரம்பிச்சனாம்” என மதி கூற மாறனுக்கு எல்லாம் புரிந்தது.
“மதி அது உன் சாபம் மதி. உன் நினைவுகள் மறக்கப்படும் என தேவர்கள் கூறினார்கள் அல்லவா அது தான் காரணம். நீ மீண்டும் பூதமாஞ்சோலையில் காலடி எடுத்துவைக்கும் நேரம் அனைத்தும் அனைவர்க்கும் நினைவு வந்துவிடும்.” என கூற மதிக்கும் இப்பொழுது ஓரளவு நடந்ததில் மேல் நம்பிக்கை வந்தது. அது மட்டுமா. மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.
“மாறா.. மாறா.. அப்போ நம்ம காதல் நிறைவேறும்ல. எனக்கு நீ கிடைச்சுருவல. இனிமே நாம சேருறதுக்கு எந்த தடையும் இல்லல. இது போதும் எனக்கு. என் மாறா எனக்கு கிடைச்சிட்ட” என மகிழ்ச்சியில் மாறனின் முகமுழுதும் முத்தமிட்டாள். அவ்வாறே சில கணங்கள் இருவரும் தங்கள் காதல் கைக்கூடிய மகிழ்ச்சியில் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் மகிழ்வாய் பரிமாறிக்கொண்டனர். சிலநிமிட காதல் பரிமாற்றத்திற்கு பிறகு மதிக்கு ஒரு சந்தேகம் வந்தது.
“மாறா அப்போ இந்த மந்திர கயிறைக் கட்டுன உடனே தான நான் மாறினேன். அப்போ இதுக்கு மந்திரம் தேவையில்ல தான. ஆனால் சாஸ்திரத்துல ஏன் மந்திரம் உபயோகிச்சு காட்டுனா தான் நமக்கு வழி கிடைக்கும்னு போட்ருந்துச்சு.” என கேட்க மாறனுக்கும் அப்பொழுது தான் அது நினைவிற்கு வந்தது.
“ஆம் மதி நீ கூறுவதும் சரி தான். பிறகு ஏன் சாஸ்திரத்தில் அவ்வாறு வரவேண்டும்” என கேட்க மீண்டும் வானில் அசரீரி ஒலித்தது.
“பூதமதி… பூதமாறன்… உங்களின் காதலின் ஆழத்தையும் மாறனின் கடமை உணர்ச்சியையும் சோதிக்க தான் யாம் அவ்வாறு செய்தோம். சாஸ்திரத்தைக் கண்டெடுக்கும் முன்னமே நீ மந்திரக்கயிற்றை மதியின் கரத்தில் கட்டியிருந்தாலும் அவளுக்கு விமோச்சனம் கிடைத்திருக்கும். சோதனைகளில் வெற்றிபெற்ற நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள்” என கேட்க அதனைக் கேட்ட இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி. மாறனோ மதியை இறுக அணைத்துக்கொண்டு,
‘நன்றி மதி. உன்னால் தான் இன்று நம் காதல் கைக்கூடியது. நீ மட்டும் நான் செல்லும் போது அழைக்காமல் இருந்திருந்தால் நம் காதல் நிறைவேறாமலே முடிந்திருக்கும். அங்கேயும் நீ தான் என்னை உருகி உருகி காதலித்தாய். இங்கேயும் அதே தான். உன் காதலுக்கு நான் தகுதி பெற்றவனா மதி” என கண்கலங்க கேட்டான் மாறன்.
“மாறா என்னோட காதலுக்கு நீ மட்டும் தான் தகுதியானவன். இனி நீ இல்லனா நான் இல்ல”
“நானும் தான் மதி” என்றவன் அவளின் பிறைநெற்றியில் தன் இதழ் பதித்தான். பிறகு சாஸ்திரங்களைக் கையில் எடுத்த மாறனோ,
“சரி மதி. வா நாம் பூதமாஞ்சோலைக்கு செல்வோம். நினைவுகள் திரும்ப பெற்று இன்னும் காதலில் திளைத்திடுவோம். திருமணமும் முடித்திடுவோம்” என மாறன் கூற மதியின் முகமோ வாடியது ஒரு நிமிடம். அதனைக் கண்ட மாறனோ,
“என்ன ஆயிற்று மதி. ஏன் சோகம்”
“இல்ல மாறா இத்தனை நாள் எங்க சனங்க என்னைப் பாத்து பாத்து கவனிச்சுக்கிட்டாங்க. இனிமே அவங்கள பிரிஞ்சு தான போனும். உண்மைய சொல்லிட்டு போலாமா யா” என வாடிய முகத்துடன் கேட்டாள் மதி.
“மதி உண்மையைக் கூறுவது பெரிதல்ல. ஆனால் கூறினால் நம்புவார்களா. உன்னைத் திரும்ப அனுப்பமாட்டேன் என சண்டையிட்டால் என்ன செய்வது.” என மாறன் கேட்க மதிக்கு அவன் கூறியது சரியெனப்பட்டது. ஆனாலும் சொல்லாமல் செல்ல மனமில்லை.
“நீ சொல்றதும் சரி தான் மாறா. ஆனால் எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் சொல்லாம வந்தா. எல்லார்கிட்டயும் சொல்லலைனா கூட பரவாயில்ல. என் அப்பாருகிட்ட மட்டுமாவது சொல்லிட்டு போலாம் யா. நாம எல்லாம் விளக்கமா சொல்லி புரிய வச்சுருலாம். கண்டிப்பா புரிஞ்சுப்பாரு.” என கெஞ்சலாக கூற மாறனுக்கு அவளின் உணர்வு புரிந்தது.
“சரி மதி வா போகலாம். அவரைத் தனியாக எப்படி சந்திப்பது” என அவன் கேட்க மதியோ,
“யோவ் இன்னைக்கு பௌர்ணமி. காட்டுக்கு அப்பால இருக்குற புத்துக்கோவிலுக்கு வருவாரு இன்னைக்கு. அங்க வேற யாரும் வரமாட்டாங்க. அங்க போய் பேசலாம்” என கூற மாறனும் சரியென்க இருவரும் புற்றுக்கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சிறிதுதூர பயணத்திற்கு பிறகு இருவரும் புற்றுக்கோவிலை அடைந்தனர். வெளியே இருந்து எட்டிப்பார்க்க மதியின் பூவுலக தந்தை வீரபாண்டி கோவிலினுள்ளே தியானம் செய்துகொண்டிருந்தார். மாறன் உள்ளே செல்ல ஆயத்தமாக மதியோ,
“யோவ் யோவ் இருயா. மண்டை மேல இருக்குற கொம்பை மறந்துட்டு போற. இப்படியே போன பேசுறவரை கேக்க மாட்டாரு. கைல கிடைக்குறத எடுத்து மண்டையைப் பொளந்துருவாரு. இரு ஒரு நிமிஷம்” என கூறியவள் தன் கையில் மாறன் கட்டிவிட்ட அந்த மந்திர கயிறைக் கழட்ட மதியின் கண்களின் நிறமும் கொம்புகளும் மறைந்தன. பிறகு அதனை மாறனின் கையில் அவள் கட்ட அவனது கண்களின் நிறமும் கொம்புகளும் மறைந்தன.
“மதி. உனது அறிவுத்திறனை எண்ணி வியக்கிறேன். எனக்கு கூட இது தோன்றவில்லை” என அவன் அவளைப் பாராட்ட அவளோ,
“இருக்காதா பின்ன. பூதமதியா நானு” என கம்பீரமாக கூறினாள். அதனைக்கண்டு மாறன் சிரித்தான். பிறகு மெதுவாக இருவரும் உள்ளே சென்றனர். மதியோ மெதுவாக,
“எப்போவ். நான் வந்துட்டேன்” என கூற தியானத்தில் இருந்த வீரபாண்டி கண்களைத் திறந்து மதியை பார்த்து,
“என் ஆத்தா. வந்துட்டியாத்தா. உன்ன நெனச்சுதான்த்தா தியானம் பண்ணிட்டு இருந்தேன். நீ நல்லபடியா வரணும்னு. ஆத்தாக்கு அபிசேகம் பண்ண வேப்பிலை எடுத்துட்டு வந்துட்டியாத்தா. உனக்கு ஏதும் ஆபத்து வரல தான” என அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக மதிக்கு தான் குற்ற உணர்வாக இருந்தது.
“எப்போவ். நான் உன்கிட்ட ஒரு உண்மையை மறைச்சுட்டேன்.”
“என்னத்தா சொல்ற” என கேட்டவர் அப்பொழுது தான் அருகிலிருந்த மாறனைக் கண்டார்.
“தம்பி யாருத்தா.” என கேட்க மாறனோ,
“ஐயா வணக்கம். நான் பூதமாறன். தங்களிடம் சற்று பேச வேண்டும்” றன கூற அவரோ,
“சொல்லுப்பா. என்ன விஷயம்” என்று கேட்க மாறனோ நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான். அதனைக் கேட்ட வீரபாண்டியோ அதனைக் கொஞ்சம் கூட நம்பவில்லை.
“மதி. இதென்ன கட்டுக்கதையா. நீங்க ரெண்டு பெரும் விரும்புறீங்க ஓடி போகப்போறிங்கன்னு தெளிவா சொல்லுங்க. அதைவிட்டுட்டு சும்மா பூத உலகம் பூதம் சாஸ்திரம் சாபம்னு கதை விடாத. உண்மைய சொல்ல போறியா இல்லையா நீ. உன்ன நம்புனேன் பாத்தியா. என்னை சொல்லணும். அத்தா பேர சொல்லி பொய் சொல்லி இவன்கூட தான் கூத்தடிக்க போனியா நீ” என வீரபாண்டி வாயில் இருந்து வார்த்தைகள் கடுமையாக வர தொடங்கியது.
“இல்லப்பா. என்ன நம்புங்க. மாறா சொன்னதெல்லாம் உண்மை தான். நிஜமா நானே ஒரு பூதம் தான். கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடி நான் மலைக்கு பக்கத்துல மயங்கி தான கிடந்தேன். அப்போ தான என்னை எல்லாரும் தூக்கிட்டு வந்து பார்த்துக்கிட்டிங்க. அதுக்கு முன்னாடி நான் பூத உலகத்துல தான் இருந்தேன்.” என மதி கூற வீராபாண்டிக்கோ இன்னும் அவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை.
“போதும் மதி. நிப்பாட்டு உன் கட்டுக்கதைய. இவ்ளோ நாள் உன்மேல வச்ச பாசத்துக்கு நல்ல கைம்மாறு பண்ற. என் மூஞ்சிலயே முழிச்சுறாத. எக்கேடு கேட்டு போ” என திட்டிவிட்டு அவர் செல்ல போக அவளின் காலைப் பிடித்த மதியோ,
“இல்ல நான் உங்கள ஏமாத்தல. நான் சொன்னதெல்லாம் நெசம்பா நம்பு பா. நான் நிரூபிச்சு காமிக்குறேன்” என அழுதவள் பிறகு எழுந்து மாறன் கையில் கட்டிய கயிறைக் கழட்டி மீண்டும் அவளின் கையில் மாறனைக் கட்ட சொன்னாள். நடப்பவை புரியாமல் பார்த்தார் வீரபாண்டி. கட்டிய அடுத்த நொடி மதியின் கண்களும் நிறமாறி கொம்புகள் முளைக்க அதனை கண்ட வீரபாண்டி அதிர்ச்சியானார். உடனே பதறி அருகில் வந்தவர்,
“மதி என்னாச்சு உனக்கு. ஏன் இப்படி கொம்பு முளைக்குது.” என பதறியவாறு கேட்க மதியோ,
“ஆமா பா. இது தான் நான். என்னோட சுயரூபம் இது தான். நான் ஒரு பூதம் பா. மாறன் சொன்னதெல்லாம் உண்மை.” என கூற வீரபாண்டியோ அதிர்ச்சியில் உறைந்தார். அவரால் நம்பவும் முடியவில்லை. தன் கண்முன்னே தன் மகள் இருக்கும் கோலத்தைக் கண்டவரால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. சில நேர தெளிவுக்கு பின்,
“என்னால நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல. ஆனா நான் நம்ப வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்னு மட்டும் தெரியுது. ஆரம்பத்துல கோவம் வந்துச்சு. அப்றம் நீங்க சொன்னதெல்லாம் யோசிச்சு பாத்தேன். சரி நான் நம்புறேன்.” என பொதுவாக கூறியவர் பிறகு மதியிடம் திரும்பி,
“கொஞ்ச நாள் உன்ன என் மகளா நெனச்சு நான் வளர்த்தாலும் முழு பாசத்தையும் கொடுத்துட்டேன்த்தா. அதான் என்னால ஏத்துக்க முடியல. தெய்வர்களால படைக்கப்பட்ட நீ எங்க கூட இவ்ளோ காலம் இருந்துருக்க நினைக்கும் போது சந்தோசமா தான் இருக்கு. கவலைப்படாம போயிட்டு வாத்தா. நம்ம சனங்கட்ட நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன். நீ சந்தோசமா போயிட்டு வா.” என வீரபாண்டி விரைவில் புரிந்துக் கொண்டு பெருந்தன்மையாக கூறினார்.
“எப்போவ். உன்கிட்ட சொல்லாம போயிருந்தா குற்றவுணர்வுல நான் செத்துருப்பேன். இது போதும் பா எனக்கு. எனக்கு உன்ன பிரியுறது கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் என் விதி இதுன்னு நினைக்கும் போது ஏதும் பண்ண முடியல. நீ பாத்து சூதானமா இருந்துக்கோ பா.” என மதி கண்கலங்க கூற சிலமணிநேர பாசப்போராட்டத்திற்கு பிறகு மாறனும் மதியும் பூமியை விட்டு விடைபெற்று பூதமாறனாகவும் பூதமதியாகவும் பூதமாஞ்சோலைக்கு வந்தனர்.
பூதமாஞ்சோலையின் எல்லைக்கோட்டில் மதி கால் வைக்க ஒரு கணம் அங்கே அனைத்திலும் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. ஆம் பூதமாஞ்சோலையின் சாபகட்டும் அறுந்தது இப்போது.
“பூதமதி வா உள்ளே செல்வோம்” என மாறன் அழைக்க அவளோ,
“நாதா..” என்றழைத்தாள். அதனைக் கண்டு ஆச்சரியமடைந்த மாறனோ,
“என்ன நாதாவா. யோவ் என்று அழைப்பது தானே வழக்கம் இதென்ன புதிதாக இருக்கிறது.” என மாறன் கேட்க மதியோ சிரித்துக்கொண்டே,
“எனக்கு பூதமாஞ்சோலையின் நினைவுகள் வந்துவிட்டது நாதா. முழுமையாக பூதமதியாக நான் மாறிவிட்டேன்.” என அவள் கூற அப்பொழுது தான் மாறனுக்கு நியாபகம் வந்தது தேவர்கள் கூறியது. பூதமதியின் வருகையால் மற்ற பூதங்களுக்கும் நீக்கப்பட்டிருந்த பூதமதியின் நினைவு திரும்ப அனைவரும் பூதமதியைக் காண ஆவலுடன் வந்தனர். அவர்களைக் கண்ட பூதராஜனோ,
“பூதமாறா. நீ சாதித்துவிட்டாய். உன்னால் நம் பூதஉலகத்திற்கே பெருமை. மீட்டுவிட்டாய் வீரனே நம் பூதமாஞ்சோலையையும் பூதமதியையும். இனி நாமெல்லாம் சுந்ததிர பூதங்களாய் வலம் வரலாம்.” என கூற மற்ற பூதங்கள் அனைத்தும்,
“பூதமதி வருக வருக. பூதஉலகின் மாவீரன் பூதமாறன் வருக வருக” என கோஷமிட்டனர். பிறகு,
“உடனடியாக நாம் இதனைக் கொண்டாடியாக வேண்டும். அது மட்டுமன்றி ஏதேனும் நற்காரியம் செய்ய வேண்டும். என்ன செய்யலாம்” என யோசிக்க மதி மாறன் இருவரையும் பார்த்த பூதராஜன்,
“பூதமாறனுக்கும் பூதமதிக்கும் திருமண ஏற்பாடுகள் செய்வது உசிதமென நினைக்கிறேன்.” என கூற மற்றவர்கள் கரகோஷம் எழுப்ப மாறன் அவனின் மதியைக் காதலாக நோக்க மதியோ வெட்கத்தில் தலைகுனிந்தாள். அவர்களின் பாவனையிலே அவர்களின் விருப்பம் உணர்ந்த பூதராஜன் அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.
பூதமாஞ்சோலை முழுதும் விழாக்கோலம் பூண்டிருக்க ஏற்கனவே சூரியன் சந்திரன் இருவரின் ஒளியில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் பூதமாஞ்சோலை சாபங்கள் விடுவிக்கப்பட்டதால் இன்னும் கூடுதல் பொலிவுடன் மிளிர்ந்தது.
மணமகனாக பூதமாறன் கம்பீரமாகவும் மிடுக்காகவும் மணமேடையில் அமர்ந்து தேவர்கள் முன்னிலையில் மந்திரம் கூற சிறிது நேரத்தில் அவனைக் காக்கவைக்காமல் அழகோவியமாக பூதஉலகின் ரம்பையாக அன்னநடையிட்டு நடந்து வந்து பூதமாறன் அருகே வந்தமர்ந்தாள் பூதமதி.
சிறிது நேர பூஜைக்கு பிறகு அனைவரும் தேவர்களை வேண்டியபடி கண்களை மூடி திருமணத்திற்கான மாங்கல்ய மந்திரத்தை உச்சரிக்க மணமக்கள் முன் வைக்கப்பட்ட இரண்டு சாஸ்திரங்களின் மேல் மந்திர கயிறு ஒன்று மாங்கல்யத்துடன் தோன்ற அவர்களின் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவிக்கும் விதமாக இயற்கையின் மேளதாளமான இடியும் மின்னலும் மாறி மாறி தோன்ற அதனைக் கேட்டு அனைவரும் திருப்தியடைந்து அட்சதைத் தூவ மாங்கல்யத்தை தன் கரத்தில் எடுத்த மாறன் வலம்புரி சங்கை காட்டிலும் வழவழப்பான மதியின் கழுத்தில் தேவர்களின் சாட்சியாய் மென்மையாக கட்டினான்.
தேவர்களின் ஆசிபெற்ற தம்பதியர் பிறகு பெரியோர்களின் காலில் விழுந்து ஆசிபெற்று தங்கள் வாழ்வைத் தொடங்க ஆயத்தமாயினர்.
தன் அறையில் பூதமதியின் வருகைக்காக மாறன் காத்திருக்க எழிலோவியமாக அவன்முன் வந்து நின்றாள் பூதமதி. அவள் அழகில் லயித்தவனோ அவளின் கன்னங்களை தன் கைகளில் ஏந்தி அவளின் கண்களோடு தன் கண்களைக் காதலாக கலக்க விட்டான். அதில் அவளின் கன்னங்கள் சிவக்க அதனை ரசித்தவன்,
“என் பார்வையிலேயே சிவந்துவிட்டாயா” என சிரித்தபடி கேட்க மதிக்கோ மேலும் வெட்கம் பிடுங்கி தின்ன அவனுக்கு முகம் காட்டாதவாறு திரும்பி நின்றாள். அவளின் முதுகில் படர்ந்திருந்த அவளின் கார்மேகக்கூந்தலைத் தன் கைகளால் மென்மையாக ஒதுக்கியவன் அவளின் முதுகில் இருந்த அந்த மதி மச்சத்தினைத் தன் கைகளால் வருடினான். அதில் அவள் நெளிய பிறகு அவளின் காதோரம் குனிந்தவன்,
“மச்சத்தால் என்னை வீழ்த்தி விட்டாயே என் மச்சக்காரி” என கிரங்கியக்குரலில் கூற மேலும் மேலும் சிவந்தாள் மதி. பிறகு அவனிடம் திரும்பியவளோ,
“நாதா. நான் தங்களின் மீது கோபமாக இருக்கிறேன்.” என அவள் கூற அவனோ,
“ஏன் மதி. என்ன கோபம் என்மீது உனக்கு” என கேட்டான்.
“ஆம் அவசரப்பட்டு நம் காதலை சாபம் என கூறிவிட்டிர்களே” என கேட்க அதில் சிரித்தவன்,
“நான் கூறியது தவறு தான் மதி. நம் காதல் சாபமல்ல. சாபமாய் வந்த வரம் தான் நமது காதல் மதி” என காதலாக அவன் கூற அவன் நெஞ்சினில் தஞ்சம் புகுந்தாள்.
இவர்கள் இன்றுபோல் போல் என்றும் மதிமாறனாக மகிழ்ச்சியாக வாழவேண்டுமென நாமும் தேவர்களைப் பிராத்திப்போம்.
காதல் சாபம் முற்றும்.
வரமாய் வளரட்டும்…
நன்றி…! வணக்கம்…!
இப்படிக்கு,
செழிலி.
வணக்கம் நண்பர்களே…! இது குறுநாவல் என்பதால் சீக்கிரம் நிறைவடைந்துவிட்டது. இது எனது புது முயற்சி. படித்துவிட்டு தங்கள் விமர்சனங்கள் மறக்காமல் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதுவரை ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.