கண்ணுக்கெட்டிய தூரம்வரை எங்கும் புகை மண்டலம். ஆங்காங்கே அந்தரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கிய வண்ணமும் செடிகொடிகள் படர்ந்தவண்ணமுமாய் தென்பட்டது. ஒரு புறம் கதிரவன் கதிர்களைப் பரப்பிக்கொண்டிருக்க மறுபுறம் நிலாமகள் குளிர்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தாள்.
என்ன சூரியனும் சந்திரனும் ஒரே சமயத்திலா என்ற கேள்வி தானே. ஆம் இந்த உலகம் சற்று விசித்திரமானது தான். கதிரவனும் நிலாமகளும் ஒருவரையொருவர் தத்தம் கண்களுக்குள் நிரப்பிக்கொண்டிருக்க தலையில் முளைத்திருந்த சிறிய கொம்புகளுடனும் பச்சை நிற கண்களுடனும் வினோத உடைகள் அணிந்தபடி அங்குமிங்கும் ஆண்களும் பெண்களும் இயங்கிக்கொண்டிருந்தனர்.
ஆண்கள் பெண்கள் என கூறுவதை விட ஆண்பூதங்கள், பெண்பூதங்கள் என்று கூறுவது தான் கச்சிதமாக பொருந்தும். ஆம். இது ஒரு பூத உலகம். பூதமாஞ்சோலை என்றழைக்கப்படும் பூதங்களால் வசிக்கப்படும் ஓர் மாய உலகம். காண்பவை அனைத்தும் மாயங்களாய் தோன்றும்.
ஆங்காங்கே மிதப்பது போன்று காணப்படும் இருக்கைகள். நடுநிலைமையாக ஓர் பெரிய நாற்காலி பூதராஜன் எனும் பெயர்பலகையுடன் இருக்க அதன் வலப்பக்கத்தில் பத்து இருக்கைகள் இடப்பக்கத்தில் பத்து இருக்கைகள் இருந்தன. ஒவ்வொரு இருக்கையிலும் ஒவ்வொரு பெயர்பலகையும் இருந்தது. பூதவாசிகளின் ஆலோசனைக் கூடம் அது.
அங்கு வசிக்கும் அனைத்து பூதவாசிகளின் பெயரிலும் பூதம் என்ற சொல் இடம்பெற்றிருக்கும். ஆலோசனைக் கூடத்தில் இருந்த பெரிய அழைப்புமணியை ஒருவன் இயக்க ஒருவர்பின் ஒருவராக பூதவாசிகள் வந்து தத்தம் பெயர் கொண்ட இருக்கையில் அமர்ந்தனர். மீண்டும் அழைப்புமணியின் ஒலி கேட்க பூதராஜன் வந்து அமர்ந்தார். பூதவாசிகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். வந்து அமர்ந்தவர் சுற்றிலும் நோட்டம்விட தன் வலப்பக்கத்தில் இருக்கும் முதல் இருக்கை மட்டும் யாரும் அமரப்படாமல் காலியாக இருந்தது. அதனைக் கண்டவர் கோபமாய்,
“பூதமாறாஅஅஆ” என கர்ஜித்தார். அவரின் அழைப்பில் ஓடோடி வந்து நின்றான் ஒருவன்.
“தாமதத்திற்கு மன்னிக்கவும் ராஜா.” என்றான் பணிவாக.
“எங்கு சென்றாய். அழைப்புமணி காதில் விழாத அளவிற்கு அப்படி என்ன சிந்தை உமக்கு”
“இல்லை ராஜா. நம் பூதரகசிய சாஸ்திரத்தைத் தான் மெய்மறந்து படித்துக் கொண்டிருந்தேன். ஆதலால் கவனிக்க தவறிவிட்டேன். மன்னிக்கவும்” என்றான் தயங்கியவாறு.
“மன்னிப்பு மன்னிப்பு. இதோடு நீ கேட்கும் தொண்ணுற்றெட்டாயிரத்து இரண்டாவது மன்னிப்பு இது. அவ்வாறு கிடைக்கும் நேரமெல்லாம் சாஸ்திரத்தில் எதைத் தேடி கொண்டிருக்கிறாய்.”
“தங்களின் ஞாபக சக்தியினைக் கண்டு யாம் வியக்க”
“புகழ்ச்சி தேவையில்லை. மறுமுறை இவ்வாறு கவனமில்லாமல் இருக்க மாட்டாய் என நம்புகிறேன். வந்து அமருவாயாக” என பூதராஜன் ஆணையிட,
“நன்றி ராஜா” என்றவாறு வந்து அமர்ந்தான் பூதமாறன் என்று பெயர் பலகை இருந்த இருக்கையில். பிறகு பூதராஜன் பேச ஆரம்பித்தார்.
“அனைவரும் கவனமாக கேளுங்கள். நம் பூதவாசிகளுக்கு விடுதலைக் கிட்ட போகும் சமயம் இது.” என அவர் கூற அவையில் சந்தோசமான சலசலப்பு கேட்டது.
“அமைதி. நான் கூறவருவதைப் பொறுமையாக கேளுங்கள். பல வருடங்களாக இந்த பூதமாஞ்சோலை தவிர வேறு எங்கேயும் நம்மால் செல்ல முடியாத சூழ்நிலை. பூமிக்கு கூட போக முடியாத படி நாம் அனைவரும் கட்டப்பட்டுள்ளோம். இந்நிலை மாற போன மண்டலத்தில் யாம் செய்த யாகத்தின் பலனாக நமக்கு இப்பொழுது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இதோ இந்த கயிறு தான்.” என தன் கையில் இருந்த அந்த கயிற்றினை அனைவரிடமும் தெரியும்படி காண்பித்தார்.
“இதென்ன கயிறு ராஜா. இதை வைத்து நம்மால் என்ன செய்ய இயலும்” என அணியில் இருந்த ஒருவன் கேட்க பூதராஜனோ,
“சொல்கிறேன். இந்த கயிற்றின் மூலம் பூமிக்கு நம்முள் ஒருவரால் சென்று வர முடியும். நாம் இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டுமாயின் நமக்கு கிடைக்க வேண்டிய அந்த இன்னொரு சாஸ்திரம் பூமியில் தான் உள்ளது. அது நமக்கு கிட்ட வேண்டும். அதில் தான் நாம் செய்ய வேண்டிய கடமைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தேவர்களால் அக்கடமைகளை நிறைவு செய்யவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். அந்த சாஸ்திரத்தை நாம் தொலைத்ததற்கு தண்டனை தான் நாம் இருக்கும் இந்த நிலை. எனவே பூமிக்கு சென்று அதனைக் கண்டுபிடித்து எடுத்து வர வேண்டும். யார் பூமிக்கு செல்ல ஆயத்தமாயிருக்கிறீர்கள்.” என கேட்க மீண்டும் சலசலப்பு.
“நான் இப்பொழுது வரை என் துணை யார் என்றே காணவில்லை. இதில் சாஸ்திரத்தை எங்கு போய் தேடுவது. நம்மை பூமிக்கு அனுப்பாமல் இருந்தால் உசிதம்” என பூதமாறன் மனதில் நினைத்துக்கொண்டிருக்க அவனின் எண்ணங்களுக்கு எதிர்மறையாக நடந்தது.
“அமைதி. ஆனால் அங்கு யார் செல்ல வேண்டும் என சில விதி இருக்கிறது. அதற்கு யாரெல்லாம் பொருந்துகிறீர்களோ அவர்களால் மட்டுமே செல்ல இயலும். அந்த விதிகளானது,
“சாஸ்திரத்தை நன்கு அறிந்தவனும்
பெயரிலே பகைமைக் கொண்டவனும்
காரியம் மேற்கொள்க“
என கூறிவிட்டு,
“இந்த விதி தான் அசரீரியாக கேட்டது. இதற்கு பொருந்துபவன் நான் அறிந்து ஒருவனே.” என பூதராஜன் கூறிவிட்டு அமைதி காக்க அவையில் இருந்த அனைவரும் பூதமாறன் பூதமாறன் என கோஷமிட்டனர். அவனோ எழுந்து நின்று,
“ராஜா. யாம் எவ்வாறு இதனை மேற்கொள்ள முடியும். பெயர் பொருந்துகிறது உண்மை தான். ஆனால் நான் இன்னும் சாஸ்திரத்தை முழுதும் படித்து முடிக்கவில்லையே. பிறகு எவ்வாறு” என அவன் கூற,
“மாறா. அதில் முழுதும் அறிந்திருக்க வேண்டும் என குறிப்பிடவில்லை. நன்கு அறிந்தவன் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாங்கள் சாஸ்திரத்தைப் படித்திருந்தாலும் உம் தெளிவு எமக்கு இல்லை. தெளிவாக படித்தறிந்தவன் நீ ஒருவனே. ஆதலால் நீ தான் செல்ல வேண்டும். நம் இனத்தைக் காக்க பிறந்த காவலன் நீ. பூதவாசிகளை விடுவிக்க படைக்கப்பட்ட ரட்சகன் நீ.” என அவர் இவனைப் புகழ்ந்து கூற அவனோ,
“இதில் புகழாரம் வேறா. இதற்கொன்றும் குறைச்சல் இல்லை” என மனதினுள் நொந்துக் கொண்டான் பூதமாறன்.
“இன்னும் இரண்டு தினங்களில் நீ பூமி செல்ல யாகம் நடத்தப்பட்டு இந்த கயிறானது உனது கையில் கட்டப்படும். அவைக் கலையட்டும்” என கூறிவிட்டு செல்ல பூதமாறனோ ஏதோ சிந்தித்து கொண்டே சாஸ்திரம் வாசிக்கும் அறைக்கு வந்து அமர்ந்தான்.
“இதனை செய்ய சரியானவன் நான் தானா. ஏன் என்னை தேவர்கள் குறிப்பிட வேண்டும். என்னால் இதனைக் கட்சிதமாக செய்து முடிக்க இயலுமா” என்ற பல சிந்தைகள் ஊடுருவ பிறகு அதனை எல்லாம் முயன்று விலக்கிவிட்டு சாஸ்திரத்தில் கவனத்தை செலுத்தினான். அதில் இவனது கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாக,
‘தேவர்கள் காரணமின்றி காரியங்கள் செய்வதில்லை. அவர்கள் கூறுவதை முழு நம்பிக்கையுடன் செய்வதே பூதவாசிகளின் கடமை. அவ்வாறு சலனமின்றி செய்து முடித்தால் நிச்சயமாக அதன் பலனை நம்மால் பெற முடியும்” என்றிருக்க அதனைப் படித்துவிட்டு,
“நான் முழுமனதாக என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த புண்ணிய காரியத்தை செய்ய ஆயத்தமாகிறேன். பலனை எதிர்பாராமல் கடமையை செய்ய வேண்டும் என்பது தான் முறை. ஆனாலும் என் பலனாக என்ன வேண்டும் என்பதை இப்பொழுதே கேட்டுவிடுகிறேன். என் வருங்கால வாழ்க்கைத் துணையான மதியை மச்சமாக (நிலா போன்று மச்சம்) கொண்டவள் யாரென்று காண்பித்து விடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.” என்று வேண்டிவிட்டு தன் பணியைத் தொடர்ந்தான்.
அப்பொழுது பூதராஜன் வந்தார். வந்தவர் அவனின் தலையை வருடியபடி,
“மாறா. உனக்கு பூமிக்கு செல்ல சம்மதம் தானே. எமது கட்டாயத்தினால் தான் சம்மதம் கூறினாயா.” என மென்மையாக கேட்க,
“இல்லை தந்தையே. யாம் முழு சம்மதத்துடன் தான் ஒப்புக்கொண்டோம். தாங்கள் கவலைக் கொள்ள வேண்டாம்” என ஆறுதல் கூறினான் பூதமாறன்.
“நான் ஒன்று கேட்டால் உண்மை உரைப்பாயா மாறா” என அவர் கேட்க,
“கேளுங்கள் தந்தையே.”
“நீ சாஸ்திரத்தை இவ்வளவு கவனமாக படிப்பது எமக்கு மகிழ்ச்சி தான். ஆனால் ஏதோ ஒரு முனைப்புடனும் ஏதோ ஒரு தேடுதலுடனும் நீ இதனைப் படிக்கிறாய் என்பது என் எண்ணம். அவ்வாறு இருந்தால் அந்நோக்கம் என்னவென்று யாம் அறியலாமா” என்று அவர் மாறனைக் கேள்வியாய் நோக்க அவனோ,
‘என்ன இது. எம் மனதில் ரகசியம் இருப்பதை எவ்வாறு கண்டுபிடித்தார். நல்லவேலை என்னவென்று அறியவில்லை.’ என பெருமூச்சுவிட்டவன்,
“அவ்வாறெல்லாம் ஒன்றுமில்லை தந்தையே என்றான்.” அதனைக் கேட்ட பூதராஜன் சிறு சிரிப்புடன்,
“யாம் உம் தந்தை. என்னிடமே பொய் உரைக்கிறாயா கள்ளனே” என்று கேட்க அவனோ,
‘என்னை மன்னித்துவிடுங்கள் தந்தையே. எனது தேடல் என் வாழ்க்கைத் துணையைப் பற்றியது தான். இதனை உம்மிடம் தெரிவித்தால் எமக்கு திருமண ஆசை வந்துவிட்டதாக எண்ணி கட்டாய திருமணம் செய்து வைத்துவிடுவீர். அதனால் உம்மிடம் நான் இப்பொழுது கூற போவதில்லை’ என மனதில் நினைத்தவன்,
“கூறுகிறேன் தந்தையே. ஆனால் இப்பொழுது அல்ல. நேரம் வரும் போது யாம் உமக்கு கூறுகிறேன்.” என கூற அவரும் சரியென்று தலையசைத்து சென்றார்.
இரண்டு தினங்கள் கழிய பூதமாறனைப் பூமிக்கு வழியனுப்ப யாகங்கள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மந்திரங்கள் ஓதப்பட்டு யாகம் சிறப்பாக நடந்து முடிந்ததும் தேவர்களின் சாட்சியாக பூதமாறனின் கையில் அந்த மந்திரக் கயிரானது கட்டப்பட்டது.
கயிறு கையில் கட்டப்பட்ட மறுநிமிடமே அவன் தலையில் இருந்த கொம்புகள் மறைந்தன. பச்சை நிற கண்கள் கருப்பு நிறமாக மாறின. கிட்டத்தட்ட முழு மனிதனாகவே மாறினான் பூதமாறன். அவனின் உடலிலும் ஏதோ மாற்றம் ஏற்பட அதனை நன்கு அவனால் உணர முடிந்தது. அப்பொழுது ஓர் அசரீரி கேட்க அனைவரும் கவனமாக கேட்டனர்.
‘பூதமாறா இந்த கயிறானது உனது கையில் கட்டப்பட்டிருக்கும் வரை நீ மனிதனாக தான் காட்சியளிப்பாய். பாதி பூதம் பாதி மனிதன் என்ற நிலையில் தற்பொழுது நீ இருக்கிறாய். பூமியில் உன்னால் எட்டு முறை மட்டுமே மந்திரங்கள் உபயோகித்து மாயாஜாலங்கள் மேற்கொள்ள முடியும். உனது கையில் இருக்கும் இந்த சாஸ்திரமே அந்த சாஸ்திரத்தைக் கண்டறிய உன்னை வழி நடத்தும். குழப்பங்கள் ஏதேனும் தோன்றினால் இரண்டு நிமிடம் தேவமந்திரம் உச்சரித்து வேண்டினால் உனக்கான பதில் கிட்டும். அதேபோல் உமது கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடமையை கவனமாக செய்து வெற்றியுடன் திரும்ப தேவர்களின் ஆசிகள் உமக்கு’ என்று அசரீரி ஒலிக்க அதனைக் கவனித்து கேட்டவன் சாஸ்திரத்தையும் தனக்கு தேவையான சிலவற்றையும் எடுத்து கொண்டு அனைவரிடமும் விடைபெற்று கொண்டு பூதமாஞ்சோலையின் வாயிலுக்கு வந்து நின்றான். பல வருடங்களாக திறக்கப்படாத அந்த கதவு திறக்கப்பட்டது. வாயிலில் கால் வைத்த அடுத்த கணம் பூமியை நோக்கி தூக்கி எறியப்பட்டான் பூதமாறன்.
பூதமாறன்
————————————-
மேற்கு தொடர்ச்சி மலையினை ஒன்றி அமைந்திருந்த கந்தர்வ வனம். பறவைகள் விலங்குகளின் சொர்கமான இங்கு எங்கும் பச்சை பசேலென்று ஓங்கி உயர்ந்த மரங்கள் காற்றில் அசைந்து சலசலப்பையும் குளிர்ந்த காற்றையும் ஏற்படுத்த அந்த காற்றில் வீசிய மூலிகை வாசானையை ரசித்து சுவாசித்து மதி மயங்கியபடி அங்கு தங்குதடையின்றி தெளிவாக ஓடிக்கொண்டிருந்த சஞ்சீவினி ஆற்றில் உல்லாசமாக குளித்து கொண்டிருந்தாள் மதியரசி.
மதியரசி
“ஏய் புள்ள. நீ ரசிக்குரேணு சொல்லி பாவாடைய நழுவ விட போகுற” என அவளின் தோழிகள் கேலியாய் கூற அவளோ,
“அம்புட்டு லேசுல விட்டுற மாட்டேன் புள்ள.” என்றாள் பாவாடையை இழுத்துக் காட்டியபடி.
“விட்டு தான் பாரேன். உன்னக் கொத்திட்டு போக நம்ம சாதி கார பயலுக வெறியா இருக்கானுவ” என பேசிக்கொண்டே குளித்து முடித்து தோளில் ஆடைகளை சுமந்தபடி மார்பினை மறைத்து பாவாடை மட்டும் கட்டியபடி பெண்கள் கரைக்கு எழுந்து வந்தனர்.
“இந்த மாதிரி பேசாத புள்ள. இவனுவ யாரையும் எனக்கு பிடிக்கல. எனக்கு பொறந்த மவராசன் எங்க இருக்கானோ” என பெருமூச்சு விட்டபடி அவர்களுடன் நடந்து வந்துகொண்டிருந்தாள் மதியரசி.
“இந்தா புள்ள. நீ அழகி தான். அதுக்காக உன்னக் கட்டிக்க வானத்துல இருந்தா மவராசன் குதிக்க போறான்.” என தோழிகளில் ஒருத்தி கூற,
“என் விதில வானத்துல இருந்து தான் என் மவராசன் குதிக்கணும்னு எழுதிருக்கோ என்னவோ” என்றாள் மதியரசி சாதாரணமாக அது தான் நடக்க போகிறது என்ற உண்மை அறியாமல்.
“அட போடி புள்ள. வானத்துல இருந்து மவராசன் குதிக்க மாட்டான். பூதமோ, பிசாசோ தான் குதிக்கும்” என மற்றவள் கேலி செய்தபடி சிரிக்க,
“சிரி புள்ள சிரி. நான் சொன்ன மாதிரியே என்னைத் தேடி என் மவராசன் வருவான் பாரு புள்ள” என கூறி முடிக்க அவளின் முன்னே தொப்பென வந்து குதித்தான் பூதமாறன் “ஐயோ” என அலறியபடி.
காதல் சாபம் தொடரும்…
படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்😁😁