Loading

சமுத்திரா – 10:

கருநிற வானில் வரிசையாக செல்லும் வெண்புறாவின் கூட்டம்  படபடவென வெண்மை நிற சிறகுகளை அடித்துக் கொண்டே பறப்பது போல் இருட்டடித்து கருத்திருந்த கடலில் வெண்ணிற பாய்களை இறக்கையாய் கொண்ட கப்பல் மிதந்தவண்ணம் இருந்தது.

அதனின் மேல் தளத்தில் இருந்த பாதி இடத்தை மூடப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளே ஆக்கிரமித்திருந்தது.

விலோச்சனா ப்ரதீப்பை முறைத்துப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தாள். ப்ரதீப்பை தவிர்த்த ஆடவர்கள் மூவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். ப்ரதீப்பும் சலைக்காமல் விலோவை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“உன்னை போய் என்னோட ஃபிரென்ட்னு சொல்லிக்கிறேன் பாரு. என்னோட புத்திய..” என்று ஆரம்பித்த விலோ முடிக்கும் முன்,

“நான் ஷூ தான் விலோ போட்டுருக்கேன். அது உனக்கு ஓகே வா..?” என நகைத்த ப்ரதீப்பை பார்த்தவள், “ச்சீ. குடிகாரா.. வாய மூடு.” எரிச்சலுடன் கூறினாள். ஷிவன்யாயும் அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவள் விலோவுடன் ஒதுங்கிக் கொண்டாள்.

கண்ணைமூடிக் கொண்டு அந்த அற்புத பூதத்திடம் ப்ரதீப் வேண்டியது வேறொன்றுமில்லை.. ‘அவர்கள் இருந்த கப்பல் முழுவதும் இயற்கை முறையில் தயாரான மதுவால் நிரம்ப வேண்டும்!’ என்பதே!

அதனை ப்ரதீப் கேட்டு முடித்து, அற்புத விளக்கு கடலில் அமிழ்ந்து அடங்கிய மறுநொடியில் அனைத்தும் நிறைவேறியதை பார்த்த அனைவரும் சற்று மிரண்டே போயினர்.

பின், ‘அப்படியென்ன கேட்டிருக்கான்?’ என்று அனைவரும் ஒரு அட்டைப்பெட்டியை பிரித்துப் பார்த்தனர். மண் குடுவையில் நிரப்பப்பட்ட இயற்கை முறையில் தயாரான மதுபானம் அவர்களை பார்த்து பல்லிளித்தது. அதிலிருந்து தான் விலோ ப்ரதீப்பை திட்டிக் கொண்டிருக்கிறாள்.

“டேய் மச்சான் சத்தியமா எனக்கு என்ன கேட்கணும்னு தெரியல டா. விளையாட்டை தவிர்த்து வேற அந்த பூதம் கேட்க சொல்லிடுச்சு. இல்லனா கூட இந்த விளையாட்டில் இருந்து நமக்கு விடுதலை கேட்டிருப்பேன். அந்த நேரம், அந்த பூதத்தை பார்த்த நொடி, மொத்தமா என்னால யோசிக்கவே முடியல டா.” என்றான் ப்ரதீப் தன்னிலை விளக்கமாக.

அமரன் நக்கல் வழிந்தோடிய குரலில், “கேட்டதும் தான் கேட்ட? தங்கம் விக்குற விலைக்கு தங்ககட்டியை கேட்டிருக்கலாம்..” என இழுத்து கூற,

“டேய் நானே என்னோட வரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்னு கடுப்புல இருக்கேன். நீ வேற அதுல எண்ணையை ஊத்துறீயா..?” என்ற ப்ரதீப் அமரன் மீது பாய்ந்தான்.

“நான், நீ வேற ஒன்னு கேட்பனு எதிர்பார்த்தேன் மச்சான். அதுக்கு இது எவ்வளவோ பரவாலை. விடு ப்ரதீப்.” என்று ரங்கா சிரிப்புடன் சொல்ல, “என்னது ரங்க்ஸ்?” என்று விலோ கேட்டாள்.

“ப்ரதீப் தான் எப்பவும் ஆள் இல்லன்னு பீல் பண்ணுவானே.. அதான் பொண்ணு எதாவது கேட்பானோன்னு நினைச்சேன்.” என்று ரங்கா முடிக்க,

“அந்தளவுக்கெல்லாம் அவனுக்கு திறமை இருந்தா தான் எப்பவோ கமிட் ஆகிருப்பானே டா..” என்று அமரனும் ப்ரதீப்பை கேலி செய்தான்.

‘ஐயோ! அருமையான ஐடியாவா இருக்கே! இது அப்ப நமக்கு தோணாம போய்டுச்சே?’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட ப்ரதீப் வெளியே, “ஹலோ வெட்டி ஆபீசர் அமரன், நான் யூனிவெர்சிட்டி டப்பர். தெரியும்ல?” என்று கெத்தாகவே அமரனிடம் சொன்னான். அதற்கும் அவர்கள் சிரித்தனர்.

‘கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இப்படி ஒரு வரம் கிடைத்தும் தன் அவசரத்தினால் தவறவிட்ட தருணத்தை அந்நொடி மனதிற்குள் சபிக்கவே செய்தேன் ப்ரதீப். சுற்றியிருந்தோர் வேறு அதற்கு தூபம் போடும் விதத்தில் அவனை மேலும் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

“எங்க கிட்ட கூட எதுவும் கேட்கவே இல்லைடா நீ..” என்று மீண்டும் தொடங்கிய விலோவை தடுத்த சக்தி அனைவரையும் பார்த்து சமாதானமாக, “சரி விடுங்க. அதான் முடிஞ்சிடுச்சே.. இப்ப பேசி அதை மாத்தவா முடியும்? அடுத்து என்னன்னு பார்க்கலாம்.” என்றான்.

“அதான! உனக்கு ப்ரதீப்ன்னா ஒரு படி மேல தான்!” என விலோ சடைத்துக் கொண்டாள்.

“நீ இந்த விளையாட்டுல இருந்து விடுதலை வேணும்னு கேட்க சொன்ன. ஆனா அது உஷாரா விளையாட்டை தவிர்த்து கேட்க சொல்லிடுச்சி. வேற என்ன கேட்டிருந்தாலும் நமக்கு அதுனால ஒன்னும் கிடைக்க போறதில்லை தான விலோ.” என்றான் சக்தி.

“இருந்தாலும்.. உபயோகமா எதாவது கேட்டிருக்கலாம்..” என்று வாய்க்குள்ளேயே முனங்கிக்கொண்டாள் விலோ.

“சரிங்க மேடம். அடுத்த முறை அந்த ஜீபூம்பா வரப்ப நீங்களே உபயோகமா கேளுங்க..” என்ற ப்ரதீப் அமரனின் அருகில் சென்று அமர்ந்தான்.

“இப்பவாது நீங்க நம்புறீங்களா? இந்த கேம்ல இருந்து தான் எல்லாமே நடக்குதுன்னு..” என விலோ அனைவரையும் பார்த்தாள்.

“உண்மைலையே நடக்குறது எல்லாமே எதோ மேஜிக் மாதிரி தான் இருக்கு. ஆனாலும் எதுக்கு இதை மாதிரி நடக்கணும்?” – ரங்கா.

“அதான் தெரியல ரங்கா. இதை நாம விளையாடினா முழுசா தெரிஞ்சிக்க முடியும் போல. ஆனா, இதுனால பெருசா பிரச்சனை வராத வரைக்கும் எதுவும் இல்லை.” என்றான் அமரன்.

சக்தி, “சரி டா. அடுத்து நம்ம மூணு பேர்ல தான் ஒருத்தர் போடணுமா..?” என அமரனையும் ரங்காவையும் பார்த்தான்.

ப்ரதீப்போ “இவன் போடுவான் சக்தி.” என்று அமரனை கைக்காட்டினான்.

“நானா..?” என வினவிய அமரனை கைசிறையில் பிடித்த ப்ரதீப், “நீ தான். என்னைய இப்படி தான பிடிச்சி போட வெச்ச. வா டா ராசா வா..” என மிரட்டல் விடுத்தான்.

சிரிப்புடன் அவனின் கையை தட்டிவிட்ட அமரன், “சரிடா. நானே போடுறேன்.” என்று சம்மதித்தான்.

‘ஓ காட்! யார் போடுறதுன்னு முடிவு பண்ண ஒரு மணி நேரம். வந்த குறிப்புக்கு டிஸ்கஸ் பண்ண ஒரு மணிநேரம்னு போச்சுன்னா இவங்க எப்ப இந்த கேமை முடிப்பாங்க?’ என்றெண்ணிய ஷிவன்யாவிற்கு பெருமூச்சு தான் வந்தது.

பின், சமுத்திரா பெட்டியை எடுத்து வந்த ஷிவன்யா அமரனின் முன் வைத்தாள். பகடையை அமரனின் கையில் கொடுத்தவள், அவனின் மற்றொரு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

விலோ, ரங்கா, சக்தியும் அவர்களுடன் இணைந்துக் கொள்ள அந்த பெட்டியை சுற்றி அறுவரும் முழு வட்டமாக அமர்ந்துக் கொண்டனர். தன்னிடம் உள்ள பகடையை கீழே போட போன அமரனை, “வாட்ஸ் கோயிங் ஆன் ஹீயர்..?” (இங்கே என்ன நடக்கிறது?”) என்ற கடுமையான குரல் தடை செய்தது.

குரல் வந்த திசையில் இருந்து அக்கப்பலில் அவர்களுடன் பயணம் செய்துக்கொண்டிருந்த மாலுமிகளில் இருவர் வந்தனர். அந்த இருவரில் மாலுமிகளால் மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட மார்ட்டினும் இருந்தார்.

நண்பர்களின் கூட்டத்திடம் வந்தவுடன் மீண்டும், “இங்கே என்ன நடக்குது?” என்று கப்பலில் தோன்றிய மாற்றத்தை பார்த்துக்கொண்டே குழப்பத்துடன் வினவினார் மார்ட்டின்.

(கேப்டன்களிற்கும் இவர்களுக்கும் நடக்கும் உரையாடல் தமிழில் நமக்கு வரும்)

அங்கிருந்து எழுந்த சக்தி, “மார்ட்டின்! நாங்களே உங்ககிட்ட கேட்கலாம்னு இருந்தோம்.” என்று விலோ அந்த பெட்டியை எடுத்தத்தில் இருந்து அதுவரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவர்களிடம் சொல்லிவிட்டு, “இந்த பெட்டி உங்களுக்கு எப்படி, எங்க கிடைச்சது?” என்று சந்தேகக் கண்கொண்டு அவர்களை கூர்ந்து பார்த்தான்.

‘நிச்சயமாக இவர்களுக்கு தெரியாமல் இதை போன்றோரு அமானுஷ்யங்கள் நிறைந்த அரியவகை விளையாட்டு இந்த கப்பலில் இருக்க வாய்ப்பில்லை!’ என்றே சக்தி நினைத்திருந்தான்.

சக்தியை தொடர்ந்து அனைவரும் எழுந்துக் கொண்டனர். ‘அந்த பெட்டியை எடுத்ததற்கு எதாவது சொல்லுவர்களோ..?’ என்றெண்ணிய நண்பர்கள் கூட்டம் அவர்களை பார்த்தப்படியே நின்றனர்.

“இந்த பெட்டி(சமுத்திரா) எங்களுக்கு மலகாவில்(malaka) கிடைத்தது. அங்க மீன்பிடிக்க போனப்ப தான் எங்களோட வலைல மாட்டுச்சு. இதை எங்களால திறக்கவே முடியல. அதனால தான் நாங்க இதை இங்க இருக்க பழைய பொருட்களோட கட்டி வெச்சிருந்தோம்.” என்றார் மார்ட்டின்.

“நீங்க கடைசியா ஸ்பெயின்ல இருந்ததா தான சொன்னீங்க?” என்றான் அமரன் சந்தேகத்துடன்.

“யெஸ். மலகா ஸ்பெய்ன்ல தான இருக்கு. அதுமட்டுமில்ல மலகாவில் இருக்க ஆண்டலூசியால தான் எங்களுக்கு இது(சமுத்திரா) கிடைச்சது. உங்களுக்கு தெரியாம இருக்காது, ஆண்டலூசியா, உலகத்துல இருக்க பழைய துறைமுகத்துல ஒன்று. அதுல தான் இது எங்களோட வலைல மாட்டுச்சு.” என்று விளக்கத்துடன் மார்ட்டின் கூறினார்.

‘இந்த விளையாட்டு பழைய திறைமுகத்துல கிடைச்சிருக்குன்னா.. இது பழங்காலத்துலயே இருந்திருக்க வாய்ப்பிருக்கா?’ என்று அனைவருக்குமே தோன்றியது.

“இது அங்க கீழ கட்டி வைக்காம தான் இருந்தது. ஒருவேளை நீங்க கட்டிவைத்தது அவிழ்ந்திருக்கும். எங்கயாவது இடிச்சிடுமோன்னு தான் நான் எடுத்துட்டு வந்தேன்.” என விலோவும் கூறினாள்.

மார்ட்டினுடன் இருந்த விக்டர் என்பவன், “நீங்க அங்க இருந்து எடுத்தீங்க, ஓகே. ஆனா, எதுக்கு இத மாதிரி ஒரு விளையாட்டுன்னு தெரிஞ்சும் விளையாடினீங்க?” சற்று கோபம் தொனிக்க அனைவரையும் பார்த்து கேட்டான்.

இவர்களால் கப்பலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அவர்களின் முதலாளிக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கவலை அவனுக்கு.

‘கப்பலில் தங்களுக்கு தேவையானதை செய்ய வந்தவன் தங்களை எதிர்த்து கேள்வி கேட்பதா?’ என எரிச்சலான சக்தி, “இந்த கப்பலோட நிலைக்கு எவ்ளோ செலவாகுதோ? அதை நானே கொடுத்திடுறேன். எங்களை கேள்வி கேட்கிற உரிமை உங்களுக்கு இல்லை!” திமிருடன் சொல்லியப்படி அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையை கைமுட்டிவரை மடித்துவிட்டுக் கொண்டே விக்டரை நெருங்கினான்.

விட்டால் அடித்துவிடுபவன் போல் முன்னே வந்துக் கொண்டிருந்த சக்தியை கண்ட விக்டர் இரண்டடி பின்னே வைத்தான். “இங்க பாருங்க மிஸ்டர் சக்தி. விக்டர் சொன்னதுல தவறேதும் இல்லையே! நீங்க உங்க இஷ்டத்துக்கு பண்ண போய் இப்ப எல்லாரும் தான மாட்டிக்கிட்டோம். அவர் அதை கொஞ்சம் கோபமா கேட்டுட்டாரு.. அவ்ளோதான?” குரலை தழைத்து மார்ட்டின் பேச, அவரையும் முறைத்துப் பார்த்தான் சக்திவேல்.

அவர்களின் நடுவே வந்த ரங்காவும் அமரனும் சக்தியை தள்ளி அழைத்துச் சென்று, “டேய் சக்தி, தப்பு நம்ம மேல தான இருக்கு? வந்த இடத்தில் சும்மா இருந்திருக்கணும் தான?” என சமாதானப்படுத்த முயன்ற ரங்காவை ஒரு பார்வை பார்த்த சக்தி அதே கோபத்துடன் முகத்தை திருப்பினான்.

தள்ளிச்சென்ற அவர்களையே பார்த்த விலோவிற்கு தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சி உருவானது. ‘நம்மிடம் சண்டை போட்ட அன்றும் இதேபோல் தானே ருத்ரமூர்த்தியாய் இருந்தான். பணக்காரனா இருந்தா யாருக்கும் மரியாதை கொடுக்கவே தெரியாது போல..’ என்று ஷிவன்யா மனத்திற்குள்ளே சக்தியை வருத்தெடுத்தாள்.

“சக்தி! உனக்கு நான் சொல்லி தெரியனும்னு இல்லை. இப்போதைக்கு நமக்கு இருக்குற பிரச்னையை பார்க்கலாம்.” என்ற அமரனின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்தான் சக்தி.

விக்டரிடம் சென்ற சக்தி, “மத்த சைலர்ஸ்(மாலுமிகள்) எல்லாரும் எங்க?” என மிடுக்குடனே கேட்டான்.

விக்டரை முந்திக் கொண்ட மார்ட்டின், “அவங்க முதல் தளத்துக்கு தூங்க போனாங்க. அங்க தான் இன்னும் இருக்கனும்.” யோசனை நிறைந்த முகத்துடன் கூறினார்.

விக்டர், “நீங்க என்ன செய்யுறதா முடிவு பண்ணிருக்கீங்க..? கப்பலை கரைக்கு திருப்பிடலாமா?” தன்மையாகவே சக்தியின் முகத்தை பார்த்து கேட்டான். இவர்கள் அந்த பக்கம் சென்றதும் மார்ட்டின் விக்டரை மலையிறக்கி விட்டிருந்தான்.

“இந்த விளையாட்டை முடிக்க முடியலனா.. கண்டிப்பா ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருக்கு. அதான் நாங்க ஆறு பேர் விளையாடி முடிக்க போகிறோம்.” அழுத்தம் நிறைந்த குரலில் சக்தி கூறினான்.

“உங்களால முடியுமா? எனக்கு தெரிஞ்சி இது ரொம்ப ஆபத்தான விளையாட்டாக இருக்கும் போல. இன்னொரு முறை யோசிச்சிக்கோங்க.” என்றார் நாற்பது வயதை கடந்த அனுபவமிக்க மார்ட்டின்.

“தேவையில்லை. எங்களால் உருவான பிரச்னையை நாங்களே சரி செய்துக் கொள்வோம்.” என்று குரலில் மட்டுமில்லாமல் முகத்திலும் மறுப்பை தெரிவித்தான் சக்தி.

எங்கே மறுபடியும் எதாவது சொல்லிவிடுவானோ என சக்திக்கு பயந்த ரங்கா “டேய்..” என்று சக்தியை அதட்டினான்.

பின்பு மார்ட்டினையும் விக்டரையும் பார்த்த ராங்க, “எங்களுக்கு உங்க உதவி தேவைப்படும்பொழுது கட்டாயம் கேட்போம்.” என்றவன் அமரனை பார்த்து விளையாடும் படி கூறினான்.

கீழே அமர்ந்த அமரன், தன் கையில் இருந்த பகடையை உருட்ட, இரண்டு என்று வந்தது. ஊதா நிறத்தில் இருந்த சிறு கப்பலும் தனாகவே இரண்டாம் இடத்திற்கு சென்று நின்றது.

அனைவரின் முகத்தையும் ஒருமுறை பார்த்த அமரன், அந்த நீர்குமிழியில் தோன்றிய எழுத்துக்களை வாசிக்க தொடங்கினான். ஷிவன்யாவும் ப்ரதீப்பும் அமருடன் சேர்ந்து வாசித்தனர்.

 

“குருதியுண்பவன் வருகிறான். பிழைத்துக்கொள்!!!”

அந்த குறிப்பை அவர்கள் மூவரும் வாசித்துவிட்டு நிமிர, “என்ன டா போட்டிருந்தது..?” என நின்றபடியே வினவிய ரங்காவிடம் வாசித்ததை கூறினார்கள்.

“குருதினா? இரத்தம். அதை உண்ண எது வரும்?” என்று பேசிக் கொண்டே யோசித்த ரங்காவின் யோசனை தான் அங்கிருந்த அனைவரின் சிந்தையையும் நிறைத்திருந்தது.

அந்நேரம், சட்டென்று அங்கு மின்னிக் கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்து அவர்கள் இருந்த கப்பல் இருளில் மூழ்கியது.

நிலா இல்லாத இருண்ட வானம்; விளக்குகள் அணைந்த இருண்ட கப்பல் என்று எல்லாம் சேர்த்து கும்மிருட்டாக காட்சியளித்தது. அதில் ஆக்ரோஷமாக சீறிக்கொண்டிருக்கும்  அலையின் சத்தம் மட்டும் அங்கு நிலவிய நிசப்தத்தை விரட்டிக்கொண்டிருந்தன.

“நாங்க போய் எதனால விளக்கு அணைந்திருக்குன்னு பார்த்துட்டு வரோம்.” என கூறிய இரண்டு மாலுமிகளும் மேல் தளத்தில் உள்ள எமெர்ஜென்சி கதவின் வழியாக ஜெனெரேடர் அறைக்கு கீழே சென்றனர்.

அங்கே, “ஊ.. ஊ..” என சுழற்றியடித்துக் கொண்டிருந்த காற்றின் இறைச்சல் வேறு அவர்களை அச்சுறுத்துவதாக இருந்தது.

பயத்தில் சில்லிட்ட கரத்தால் ரங்காவை விலோ கெட்டியாக பற்றியப்படி நின்றிருந்தாள். ரங்காவின் அருகினில் தான் சக்தியும் நின்றுக் கொண்டிருந்தான். ப்ரதீப்பும் ஷிவன்யாயும் அமரனின் இருபுறமும் கீழ அமர்ந்திருந்தனர்.

“என்னங்க டா? பேய் வர மாதிரி எஃபெக்ட் கொடுக்குது. ஒருவேளை உண்மைலையே ரத்தத்தை குடிக்க பேய் இல்ல இரத்த காட்டேரி தான் வருமோ?” என பயத்தில் உளறிய ப்ரதீப் தானும் பயந்து அவர்களையும் பயமடைய செய்தான். அதன் விளைவாக ஷிவன்யா அமரனின் வலது கையை இறுக்கி கொண்டாளென்றால், ப்ரதீப் அமரனின் இடது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

“பேசாம ரெண்டு பேரும் என் மேல ஏறிக்கோங்க..” என்று எரிச்சலாய் கூறிய அமரன் அவனின் கையை உதறினான். அந்நேரம் கப்பலின் உள்ளிருந்து படபடவென சத்தம் வந்தது.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்