
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 35
மருத்துவமனையில் மதுதாராவுக்கு சிகிச்சை எல்லாம் முடிந்தது. மைல்ட் அட்டாக் என்பதாலும், உடனடியான முதலுதவி மற்றும் சரியான நேரத்திற்குள் மருத்துவர்கள் சிகிச்சையும் அளித்ததால் ஓரளவுக்கு உடல்நிலை சரியாகி இருந்தது. ஆதலால் ஐ.சி.யூவிலிருந்து மாற்றலாகி சாதாரண அறைக்கு விரைவில் மாற்றிவிடலாமெனக் கூறினார் மருத்துவர்.
ஆனால் அன்புக்கு இது இரண்டாவதாக வந்த அட்டாக் என்பதாலும் வந்தது கொஞ்சம் கடுமையானதாகவும் இருக்க, அவர் வயதும் அதிகமாக இருந்ததால் அவருக்கு இன்னமும் ஐ.சி.யூவில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது.
ஐ.சி.யூக்கு வெளியில் அத்தனை பேரும் இருந்தனர். மருத்துவர்களும் இவ்வளவு கூட்டம் இங்கு வேண்டாமென அடிக்கடி சொன்னாலும் யாராலும் அவ்விடத்தை விட்டு அகல முடியவில்லை. வைரம் பாட்டிக்கு நடந்த நிகழ்வுகளால் உடலும், மனமும் தளர்ந்திருக்க, அகிலாவும் கர்ப்பகால அவஸ்தையால் சோர்ந்திருக்க, தருணையும் சேர்த்து மூவரையும் வீட்டில் விட்டுவிட்டு வந்தான் ஆதவன்.
ஒரு வார்த்தை யாரும் யாருடனும் பேசவில்லை. சித்தார்த்தின் நிலைமையைப் புரிந்து கொண்ட ஆதவன் மட்டுமே அவனருகில் அமர்ந்து, அவன் கைகளைப் பற்றிக் கொண்டான். அஸ்வந்துக்கு கோபம் தான் தன் தங்கை அங்குப் பட்ட கஷ்டங்களை அறிந்தால் எந்த அண்ணனுக்குத் தான் கோபம் வராது.
ஈகைக்கு எதையுமே யோசிக்கும் திறன் இல்லை கணவர் ஒருபக்கம், மகள் ஒருபக்கம் நெஞ்சுவலியால் கிடந்தால் அவருக்கு உலகம் தெரியுமா என்ன? அவர் மனதிற்குள் சதா நேரமும் இவருக்கான வேண்டுதலுடன் அமர்ந்திருக்க, அவருக்குத் துணையாக இருந்தார் எழில். பூபாலனும், அஸ்வந்தும் ஒரிடத்தில் அமர்ந்திருந்தனர்.
சித்தார்த்துக்கு கண்களை விழிக்கவே பயம். ஆம் பயம் தான் எந்த முகத்தை வைத்து இவர்களைத் திரும்பப் பார்ப்பான்? அவன் மனதிலோ ‘என் தாயும், தந்தையும் செய்து வைத்த குளறுபடிக்கான தண்டனையை இவர்களுக்கல்லவா கொடுத்துவிட்டேன். பெத்தவர்களிடமும், வளர்த்தவர்களிடமும், உடன் வளர்ந்தவர்களிடமுமிருந்து என் தாராவைப் பிரித்து, அவளை வேண்டாமென நினைத்தவர்களிடத்தில் அவளைக் கொண்டு தள்ளி, அவளுக்கு இத்தனை துன்பங்களை அளித்துவிட்டேனே!
அவளையும் எவ்வளவு தூரம் வார்த்தைகளால் காயப்படுத்தினேன். அன்று கோவிலில் அவளின் தாய், தகப்பனைப் பார்த்துப் பேசியதற்கு கூட அவளிடம் கோபத்தை அள்ளித் தெளித்து, அவளை அநாதரவாக விட்டுச் சென்றேனே! என் பின்னால் தாயை தேடும் கன்றுபோல ஓடிவந்து அன்று மன்னிப்பு கேட்டாளே!
அவள் என்ன தவறு செய்தாள் என்னிடம் அத்தனை மன்னிப்பு கேட்க, இல்லை அவள் குடும்பம் தான் என்ன தவறு செய்தது இப்படி இன்னல்களையும், துன்பங்களையும் தாங்க.. ஆனாலும் அத்தனை பேரும் என்னிடம் மன்னிப்பு கேட்டனரே ஏன்? நான் வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தால் மட்டுமே செய்யாத தவறுக்கு கூட அத்தனை பேரும் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்.
ஆனால் நான் பாவம் ஒரு இடத்தில் பலி ஒருத்திடத்தில் என்பது போல என் தாய், தகப்பனிடத்தில் காட்டவேண்டிய கோபத்தை இவர்களிடம் காட்டினேனே! குடும்பமாய் நிம்மதியாய் இருந்தவளை அழைத்து வந்து சர்க்கரை நோயாளியாய் மட்டுமே இருந்தவளை இன்று இதய நோயாளிக்காக்கிவிட்டேனே!
அவள் இதயம் எத்தனை துன்பங்களையும், வேதனையும் அனுபவித்ததோ? அத்தனையும் என்னிடம் மறைத்து எனக்கு இன்பம் மட்டுமே கொடுக்க நினைத்தாளே அவள் எங்கே? நான் எங்கே? இதயத்தில் அவளை வைத்தால் மட்டும் போதாது அவள் இதயத்தில் என்ன இருக்கிறதெனத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமோ!
அவளை நான் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ? என்னிடம் அப்படி கூடிக்களித்து, எனக்கு இன்பங்களையும், சுகத்தையும் வாரி வாரிக் கொடுத்தாளே அவளுக்கு நான் கொடுத்ததெல்லாம் வலியும், வேதனையும் தானா? காதல் வலியும், வேதனையும் தருமா? ஆனால் நான் தந்திருக்கேனே அப்போ என் காதல் காதலே இல்லையா? எனக்குக் காதலை மட்டும் திகட்ட திகட்ட அளித்து காதலிலும் அவளே தான் உயர்ந்து நிற்கிறாள். ஆனால் நான் அவளை இங்குக் கொண்டு வந்து படுக்க வைத்துவிட்டேனே!
மாமா! அந்த வார்த்தையைச் சொல்லவாவது எனக்கு அருகதை இருக்கா? அவர் என்ன பாவம் செய்தார்? என்னைப் பெற்ற தாய் என்னை அநாதரவாக விட்டுச் செல்ல, என்னை எடுத்து, வளர்த்து, ஆளாக்கி, எனக்காகவே அத்தனை ஏச்சும், பேச்சும் வாங்கி இந்த நிலைமையில் இருந்தாலும், எனக்கு நல்லது மட்டுமே நினைத்த அவரைத் தூர நிறுத்தி, அவரிடமிருந்து அவர் மகளைப் பிரித்து அவரைத் தவிக்கவிட்டு, துடிக்கவிட்டு என்ன பாடு படுத்திவிட்டேன். இனி எந்த முகத்தை வைத்து அவரைப் பார்ப்பது?’ என மனதிற்குள் அத்தனை போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க, சிந்து வழியாக விஷயத்தை அறிந்த இளங்கோ, மனைவியை உண்டு, இல்லையென ஆக்கிவிட்டார்.
“அடியேய்! இன்னாடி பண்ணி வச்சிக்கின? மருமக பொண்ணு என்ன பண்ணுனானு அப்படி அவள பேசி இப்படி படுக்க வச்சிட்டியே.. இனி என் புள்ள என்ன திரும்பிப் பார்ப்பானா? மாட்டான் மாட்டவே மாட்டான்.
அன்னைக்கு புத்தி கெட்ட தனமா உம்பேச்ச காதுல போட்டுகினதுக்கு இன்னைக்கு அனுபவிக்கிறேன் நான். மருமக பொண்ணு நம்ம வீட்டுல இருக்குற வரை தான் நம்ம மகன் நம்மளாண்ட இருப்பானு எம்மாந்தூரம் படிச்சு படிச்சு சொல்லிகினேன்.
அடங்கவே இல்லயேடி அடங்காப்பிடாரி. இப்போ மட்டும் என்புள்ள என்கூட பேசல உன்னை உசுரோடு கொளுத்தி போடுவேன். என் பிள்ளைய, என் வாரிச, என் குலவிளக்க அன்னைக்கு தள்ளி வச்சு தப்பு பண்ணிட்டேன் உன் பேச்சைக் கேட்டுக்கினு, இப்போ திரும்பக் கூடவே வச்சிகின ஒரு சான்ஸ்ஸூ கிடைச்சது அதை அநியாயமா இப்படி கெடுத்து வச்சிருக்கியே! நான் கடைக்குப் போன கேப்புல ஆத்தாளும், மகளும் அந்தபுள்ளைய கொத்தி குடிச்சிருக்கீங்களே!
அந்தப் புள்ளையும் என்னாண்ட ஒத்த வார்த்தை சொல்லல. சொல்லிருந்தீச்சு உங்கள இரண்டா வகுந்துருப்பேன். நிதமும் கேட்டேனே உன் அத்தைகாரி என்னமும் சண்டை கட்டினாளாளு.. அந்தப் புள்ள ஒத்த வார்த்தை சொல்லலயே!
அது கட்டின புருஷன் கிட்டயே சொல்லல என்னாண்டயா சொல்லப் போவுது.. அதான் இரண்டு பேரும் ஆட்டம் ஆடிருக்கீங்க. அந்தப் புள்ளைக்கு சுகருனு தெரிஞ்சும் சோத்துல உப்பையும், கரப்பான்பூச்சியையும் போட்டு இருக்கீயே அந்தபுள்ளை அப்பன் காசுல தான் நாம நிதமும் சோறு திங்குறோம்.
இன்னா பழசு மறந்து போச்சா என்ன? அன்பு தான் கடைய வச்சுக் கொடுத்தான் உசாரில்லையோ? அவன் செஞ்ச உதவியால, மேலும் மேலும் உழைச்சு தான் இந்தக் கடைய உருவாக்கி வச்சிருக்கேன்.. அது தான் உனக்குச் சோறு போடுது.. இல்லை நம்ம குடும்பமே நடுத்தெருவுல தான் நின்னிருக்கும்.
அவன் செஞ்ச உதவி எல்லாம் மறந்துட்டுட்டு, அவன் புள்ளைக்கே ஒத்த வாய் சோறு போடாம இருந்திருக்கீனா உனக்கு எம்மாத்தரம் திமிரு” என நாலு அறை ஆனந்திக்கு விழ, காது தோடோடு கிழிஞ்சு இரத்தம் வந்தது. கோபத்திலும், வலியிலும் “யோவ் இன்னாயா கிறுக்கு கிறுக்கு பிடிச்சிருச்சா? காத கிழிச்சு போட்டியே.. அம்மா..” என வலியில் கத்த, “மூச்.. இனி வாய திறந்த கொன்னேபுடுவேன்” என ஆனந்தியை அடக்க அந்நேரம் அறைக்குள் வந்த செவிலியர் ஆனந்தியின் காதுக்கு மருந்து போட்டுக்கட்டு கட்டிவிட்டார். அவர் வெளியில் செல்லவும்,
“நீயும் உங்காத்தாளுக்கு உடந்தையா இருந்து அவள தூண்டி தூண்டி விட்டுருக்க.. உடம்பு சரியில்லைனு கைய கட்டுப்படுத்திட்டு நிக்கிறேன். இல்ல உன் மூஞ்சு, மொகறையும் பேந்திருக்கும்” என் சிந்துவுடம் காய்ந்தவர் தொடர்ந்து,
“எனக்கு என் புள்ளை வேணும்.. என்ன பண்ணுவேன்? இப்ப நான் என்ன பண்ணுவேன்?” எனக் குறுக்கும், நெடுக்குமாக நடந்தவர் கண்களில் ஆனந்தி படும் போதெல்லாம் சென்று அவர் முதுகில் இரண்டு அடிகளைப் போட,
“யோவ் இன்னாயா நீ.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இந்த அடி அடிக்கிற.. அடி தாங்குற வயசாயா எனக்கு? இப்ப என்ன உனக்கு நம்ம புள்ள தான வேணும் வா யா என்னோட.. நம்ம புள்ளைய கையோடு இட்டுக்குனு வருவோம்.. நம்ம புள்ளை கிட்ட நமக்கு இல்லாத உரிமையா?” எனக் இளங்கோவை இழுத்து கொண்டு போனார் ஆனந்தி.
அங்குச் செல்ல அனைவரும் சோகமே உருவாக, அமைதியாக அமர்ந்திருக்க, அந்த அமைதியை குழைக்கவே சென்றார் ஆனந்தி. அஸ்வந்துக்கு ஆனந்தியை பார்க்கவும் அத்தனை ஆத்திரம். அடிக்கவே எழுந்துவிட்டான் பூபாலன் தான் அவன் கையை இறுக்கி பிடித்துத் தடுத்து வைத்திருந்தார். தலையைச் சேரில் சாய்த்து அண்ணார்ந்து கண்களை மூடி, அமர்ந்திருந்த மகனிடம் சென்ற ஆனந்தி,
“சித்தார்த்து! சித்தார்த்து! எழுந்திரியா” என அவனை அசைக்க, அவரின் குரல் கேட்டு அசையவேயில்லை அவன். இளங்கோ “எய்யா சித்தார்த்து! அப்பா இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலயா.. இந்தக் கயிதை இப்படி செய்வானு நினைக்கலயா.. அப்பாவ மன்னிச்சிடுயா..” எனக் கைகளைப் பிடிக்க அவர் கையை உதறிவிட்டான் சித்தார்த். அதில் முகத்தில் சுடுதண்ணீர் கொட்டியது போலத் துடித்தார் இளங்கோ.
ஆனந்தி “அதான் அவ நல்லா ஆயிட்டாளாம்ல இனி அவங்க வூட்டாளுங்க பார்த்துப்பாங்க.. நீ வா நம்ம வூட்டுக்கு போவோம். வா.. அப்புறம் எதுவும் பேசிக்கலாம்” என அழைக்க, கண்களைத் திறந்தான். அழுகையிலும், வேதனையிலும் சிவந்த கண்கள் இப்போ கோபத்தில் இரத்தமெனச் சிவந்து கண்களில் கனல் கக்கியது.
“நம்ம வீடா? எது? எது நம்ம வீடு? அது உங்க வீடு.. எப்போ எப்படி நம்ம வீடாச்சு? நாலு நாள்.. வெறும் நாலு நாள் நான் தங்கினா அது என் வீடா ஆகுமா? என்னைய தான் பிறந்ததுல இருந்து பார்க்கல தண்ணி தெளிச்சு விட்டுட்ட, இப்போ நான் தாலி கட்டி ஒருத்திய கூட்டிட்டு வந்தேனே.. அவளையாவது நிம்மதியா இருக்கவிட்டியா?
என்கிட்ட ஒன்னுமில்லாமயா அவள அங்க கூட்டிட்டு வந்தேன்.. சொந்த வீடு வாங்குற அளவுக்கு இல்லைனாலும் என்னால வாடகை வீடு பார்த்திருக்க முடியாதா? ஆனாலும் ஏன் அங்க வந்தேன்? அம்மா, அப்பா வீடு.. நம்மள கைவிடமாட்டாங்க.. நாளைக்கு என் பொண்டாட்டியையும் பார்த்துப்பாங்கனு நம்பி தான வந்தேன்? அப்பவும் மனசுல ஓடுச்சு இங்க வந்தது தப்போனு அதுதான் திரும்பத் தனியா வீடு பார்த்தேன் விட்டாரா அவரு” என இளங்கோவை முறைத்தான்.
ஆம்! அன்று மகன் தனியாக வாடகை வீடு பார்த்து அட்வான்ஸ் எல்லாம் கொடுக்க, விஷயம் இளங்கோ காதுக்குச் செல்ல, மகனிடம் கெஞ்சி, கூத்தாடி மருமகளை நீ வரும் வரை பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன் எனப் பல சத்தியங்கள் செய்து ஒரே வீட்டில் இருக்க வைத்தார் காரணம் அப்போது தான் மகன் தன்னுடனே இருப்பான் என்பதால்.
அவருக்கு அவர் மகன் வேண்டும். காலம் சென்றபிறகு தனக்கான ஒரே பிடிப்பு தன் மகன் மட்டும் தானெனக் கொக்குக்கு ஒன்றே மதி என்பதை போலச் சித்தார்த் குடும்பமாகத் தன்னுடனே இருக்க வேண்டும். அவருக்கு மது மருமகளாக வரக் கூடாது என்ற எண்ணம் எல்லாம் இல்லை. மது மருமகளாக வந்தால் மீண்டும் அவன் அன்பு வீட்டுக்கே சென்று விடுவானோ என்ற பயம் தானொழிய மது மேல் அவருக்கு வெறுப்பு எல்லாம் இல்லை ஆனந்தி போல.
மதுவுக்கு தாலி கட்டியவுடன் அவள் தான் மருமகள் என்றான பிறகு அவளுக்குப் பார்த்து, பார்த்துத் தான் அத்தனையையும் செய்தார் ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். அவர் கவனிக்க தவறிய, அவர் இடறிய இடம் அவரின் வாழ்க்கை துணை ஆனந்தி சுயநல பிசாசு, வன்மங்களின் உச்சம்.
இளங்கோ “என்னால முடிஞ்ச அளவு நான் மதும்மாவ நல்லா தான் பார்த்துக்கிட்டேன் சித்தார்த்து. ஆனா நான் இல்லாத நேரம் என் கைமீறி தான் எல்லாம் நடந்திருக்கு. நடந்தது தப்பு தான். அப்பாவ மன்னிச்சிடுப்பா.. மதும்மாவுக்கு சரியாகவும் கூட்டிட்டு நம்ம வூட்டுக்கு வந்துருப்பா”
ஆனந்தி “என்னாத்திக்குயா திரும்பத் தொல்லைய புடிச்சு தோளுல போடுற” என அடங்காத வாயைத் திரும்பத் திறக்க, அடிப்பட்ட காதின் மேல் மேலும் இரண்டு அறை.. “வாய திறந்த கொன்றுவேன்” என இளங்கோ கத்த, அனைவரின் முன்னும் அடிவாங்கிய ஆத்திரத்தில் அமைதியாக நின்றார் ஆனந்தி.
சித்தார்த் “இத முன்னாடியே செஞ்சிருந்தா நான் அநாதையா நின்னிருக்க மாட்டேனே” என ஊணுருகும் குரலில் கேட்க, ஆடிவிட்டார் இளங்கோ. ஏன் ஆனந்திக்கும் உள்ளே என்னவோ உடைய தான் செய்தது அந்தக் குரலில். தான் பெத்த பிள்ளை அநாதையா?
இளங்கோ “எப்பா சித்தார்த்து.. இன்னாயா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுற.. நாங்க எல்லாரும் இருக்குறப்போ நீ எப்படியா அநாதையா.. இனி அப்படி சொல்லாதய்யா.. உசுற புடிங்கி எறியுற மாதிரி இருக்கு”
“வார்த்தையால சொல்லும் போதே வலிக்குதா? அத அனுபவிச்ச எனக்கு.. அந்தா நிக்குதே ஒரு குடும்பம் இடுஞ்சு போயி.. அது மட்டும் இல்லனா அநாதையா தான் நின்னுருப்பேன். ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’
இந்தக் குறளை எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் தான் இப்போ உயிருக்குப் போராடிட்டு இருக்காரு. நான் அவருக்குக் காலம் முழுக்க நன்றி கடன் பட்டுருக்கேன்.. என்னை எச்சிலை மாதிரி தூக்கி போட்டுட்டு போயிட்டிங்க வளர்த்து, ஆளாக்கினார் ஆனால் நான் அவருக்கு பண்ணது அத்தனையும் துரோகம்.
உங்க இரத்தம் தான என் உடம்புலயும் ஓடுது, அதான் நன்றி மறந்துட்டேன், துரோகம் பண்ணிட்டேன், அவர் கால கழுவி குடிச்சாலும் என் பாவம் போகாது. அந்தக் குடும்பம் எனக்குப் பாசம் கொடுத்துச்சு, அன்பு கொடுத்துச்சு, ஏன் காதல் கூடக் கொடுத்துச்சு ஆனா நான் திருப்பிக் கொடுத்தது துரோகம் மட்டும் தான்.
என்னை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு. நான் இப்போ இருக்குற நிலைமையில என்னால என்னைக் கண்ட்ரோல் பண்ணிக்க முடியல. பிளீஸ் என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க” எனத் தளர்ந்து அமற, அவனுக்கு இரு பக்கமும் ஆதவனும், அஸ்வந்தும் அமர்ந்தனர். அஸ்வந்த் அவன் கையை இறுக்கமாகப் பற்றத் திரும்பி அவனை அணைத்துக் கொண்டான் சித்தார்த்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 34
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 36
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Eagerly waiting for next episode 😊
மிக்க நன்றி
ஒரு குடும்பமே சேர்ந்து இன்னொரு குடும்பத்தை இவ்வளவு கொடுமை பண்ணி வச்சிருக்கீங்க. அதுவும் நல்லது பண்ணவங்களுக்கு இப்படி வலியையும் கஷ்டத்தையும் கொடுத்து வச்சிருக்கீங்க.
🙈🙈 நான் இல்லைங்கோ..
மிக்க நன்றி
அன்பை வாரி வழங்கிய இடத்தில் இருந்து தனது அன்பானவளை பிரித்து அவளை அறவோடு வெறுக்கும் இடத்தினில் விட்டதன் பலன்,
காதலை மட்டுமே கொடுத்தவளை காயப்படுத்தியாயிற்று.
தாயாய், தந்தையாய் அரவணைத்தவர்களிடம் இருந்து அவர்களது மகளை பிரித்துவந்து பார்த்துகொள்ளாமல் அவர்களை வேதனையில் தவிக்கவிட்டாயிற்று.
சித்தார்த் கூறியது முற்றிலும் உண்மை. நன்றிக்கடனாக கூட தேவையில்லை ஆனால் அவர்கள் மகனுக்காக கூட யோசிக்காமல் செயல்படும் சுயநல மிருகங்களாக இருக்கின்றனரே.
ஆனந்தி, சிந்துவை விட மோசமான தவறை செய்தவர் இளங்கோ தான். இன்னமும் கூட புரிந்துகொள்ளாமல் “தான்” என்ற எண்ணத்திலேயே பேசுகிறார்.
மிக்க நன்றி😍😍