காவ(த)லன் 1
அத்தியாயம் 1
#BREAKING NEWS
கல்லூரி மாணவியின் மீது ஆசிட் வீசிய வழக்கில் விசாரணை கைதியாக இருந்த திலீபனை உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி என்கவுண்டர் செய்ததால் துணை ஆணையர் திரு.வெற்றி அவர்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் சூடான முக்கியச் செய்தியாக ஒளிபரப்பாகி நகரையே அதிர வைத்துக் கொண்டிருந்தது.
செய்திக்கு சொந்தக்காரனான வெற்றியோ படு கூலாக சாக்லேட்டினை சுவைத்துக் கொண்டிருந்தான். அவனின் மனதை, கண் முன் தன்னால் நேர்ந்த மரணமோ… தனது பணி நீக்கமோ எவ்விதத்திலும் சலனப்படுதவில்லை.
வெற்றி… திராவிட நிறம், கலையான முகம்… அதில் குற்றவாளிகளை எளிதில் எடைபோடும் ஈட்டி போன்ற கூர்மையான கண்கள், சிவந்த அழுத்தமான அதரங்கள், வாளிப்பான தோள்கள், உருண்டு திரண்டிருக்கும் புஜங்கள்… கம்பீரமான நடை மொத்தத்தில் அவனின் தோற்றம் வேங்கையை ஒத்ததாகும். நிஜத்திலும் வேங்கையை போன்று பதுங்கி எதிரியை வீழ்த்துவதில் வல்லவன். அச்சமென்பதே அறியாதவன்.
சாக்லேட்டின் சுவையினை ஆழ்ந்து ருசிக்கும் தருணம் அவனின் அலைபேசி சிணுங்கியது. தனக்கு அழைக்கும் நபர் யாரென்று அறிந்து உற்சாகமாக செவிமடுத்தான்.
“ஹேய் என்னடா நடக்குது அங்க”, கேட்டவன் கதிர்.
“என்கவுண்டர் தே”… சிரிப்பினூடே பதிலளித்தான் வெற்றி.
“ம்ம்ம், கொலைன்னு சொல்லு.”
“அது எப்படி மச்சான் கொலை ஆகும், யூனிபார்மில் தானே சுட்டேன்”,
“நல்ல சுட்ட போ” என்ற கதிர் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனின் மச்சான் என்றழைப்பில் நெகிழ்ந்தான். (கதிர் வெற்றிக்கு யாரென்று பின்னால் பார்ப்போம்.) எப்போதும் அதீத மகிழ்ச்சியில் இருக்கும்போது மட்டுமே வெற்றி கதிரை மச்சான் என்று அழைப்பான்.
கதிர் உணர்ச்சியின் பிடியில் அமைதியாகிவிட… இந்தப்பக்கம் வெற்றி “ஹலோ” என்று ஒன்றுக்கு இருமுறை அழைத்தான்.
‘இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இவன் அமைதியாகிட்டான்’ மனதோடு வெற்றி யோசிக்க அப்போது தான், தான் உதிர்த்த மச்சான் என்கிற அழைப்பு அவனது நினைவிற்கு வந்தது. கதிர் பலமுறை வாய்விட்டு கேட்டும் தான் அழைக்காத அழைப்பிற்காக அவன் உணர்ச்சி வசப்பட்டுள்ளான் என்று புரிந்த வெற்றி அமைதியாகினான்.
வெற்றி அவ்வளவு எளிதில் யாரிடமும் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான். அதற்கு கதிர் மட்டுமே விதிவிலக்கு. ஆனால், சில காலமாக கதிரிடமிருந்தும் ஒதுங்கியே இருக்கின்றான்.
சில நிமிடங்களில் தன் நெகிழ்ந்த மனதினை நிலைப்படுத்திய கதிர்,
“ஆர்டர் இல்லாமல் என்கவுண்டர் பண்ணியிருக்க… விசாரணை கமிஷன் வைப்பாங்க… என்ன பதில் சொல்லப்போற?”
கதிர் வெற்றியின் மீதுள்ள அக்கறையோடு கேட்டான்.
“பார்த்துக்கலாம் விடுடா, அவனெல்லாம் வாழவே தகுதியில்லாதவன்”, ஒருவித உக்கிரத்தோடு கூறிய வெற்றி… “சாக்லேட் வேணுமா மச்சான்” என்றான்.
“இந்த மாதிரி ரிஸ்க்கான நேரத்தில் உன்னால் மட்டும் தான்டா இப்படி கூலாக இருக்க முடியும், நீயே சாப்பிடு” என்ற கதிர் அழைப்பினை வைத்துவிட்டான்.
________________________________________
இரண்டு மாதங்களுக்குப் பிறகு,
இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் அந்நேரத்தில் சந்தேகப்படும்படியாக சாலையில் நடமாடும் நபர்களை பரிசோதனை செய்தபடி நின்றிருந்தனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த இரண்டு நபர்களை கான்ஸ்டபிள் பரிசோதனை செய்து கொண்டிருக்க, ஆய்வாளர் வண்டியில் சாய்ந்தபடி நின்று கவனித்துக் கொண்டிருந்தார்.
அச்சமயம் இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண் அவர்களை கடக்க, அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார் ஆய்வாளர். குடிகார ஆசாமிகளை விடுமாறு கூறிய ஆய்வாளர் தனக்கொரு டீ வாங்கிவருமாறு கான்ஸ்டபிளை அங்கிருந்து அனுப்பி வைத்தபடி இளம்பெண்ணை நெருங்கினார். நெருங்கிய வேகத்தில் அவளின் இருசக்கர வாகனத்தின் சாவியை பறித்தவர் தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.
அப்பெண் பதறியவளாய் வண்டியிலிருந்து இறங்கி நிற்க, அவளை மெல்ல சுற்றி வந்த ஆய்வாளர் மேலிருந்து கீழ் வரை அவளின் மீது தன் பார்வையை பதித்தார்.
“சார் நான் போகணும்… சாவியை கொடுங்க,”
அவரின் பார்வை அந்த இரவு நேரத்தில் அப்பெண்ணுக்கு பயத்தை உண்டாக்கியது.
“உன் பெயர் என்ன?”
…………………..
பதில் சொல்லாது நடுக்கத்துடன் நின்றிருந்தாள்.
“இந்நேரத்தில் எங்கு சென்று வருகிறாய்?” அப்பெண்ணின் முகத்திற்கு கீழே பார்வையை பதித்து வினவினார்.
“ஆபிஸ் சார், நைட் ஷிஃப்ட்” பயந்தவாறு வார்த்தைகள் தடுமாற பதிலளித்தாள்.
ஆய்வாளரின் பார்வை அவளுக்கு சரியாகப் படவில்லை. அவளிடம் கேள்விகளை கேட்டாலும், அவரின் பார்வை அவளின் மீது விரசமாக படிந்தது.
“ஆபிஸ் போயிட்டு வரேன்னு சொல்லுற ஆனால், ரொம்ப ஃபிரஷா இருக்க”
அவரின் பேச்சு அவளுக்கு அருவெறுப்பை உண்டாக்கியது.
“சார் சாவியை கொடுங்க” சற்று தைரியத்தை வரவழைத்தவளாய் குரலுயர்த்தினாள்.
“நான் யாருன்னு தெரியுமில்ல, என்கிட்டவே சவுண்டா விடுற… பிராத்தல் கேஸில் உள்ள பிடிச்சு போட்டுறுவேன்” பதிலுக்கு ஆய்வாளர் எகிறினார்.
அவரின் வார்த்தைகள் கோபத்தை உண்டாக்க அவள் தன்னால் முடிந்த மட்டும் அவரை முறைத்தாள்.
“உன் முறைப்பெல்லாம் என்னை ஒண்ணும் பண்ணாது, முடிஞ்சா எடுத்துக்கோ” என்றவராய் சாவியை தான் சாய்ந்து நின்றிருந்த வண்டியின் மீது வைத்தார்.
அவள் சாவியினை எடுக்க முயல்கையில் அவளின் கையினை பற்றியிருந்தார் அவர்.
“சார் விடுங்க சார்”… அவரின் பிடியில் நிற்க அவளுக்கு கூசியது. பயத்தில் கண்களில் நீர் இறங்கியது.
“நைட்ல வேலை பார்க்குறியே, உனக்கு ஆண் நண்பர்கள் யாருமில்லையா?… வேணுமின்னா என்னை உன் பாய்ஃபிரண்டா வச்சிக்கோ”
அவரின் வார்த்தை எல்லை மீற, ஆத்திரமுற்றவளாய் மற்றொரு கரம் கொண்டு அவள் அவரை அறைந்திட.. “என் மேலயா கை வைக்கிற, நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்டி” என்று கோபத்தில் கொதித்த ஆய்வாளர் அப்பெண்ணை தனது காரின் பின்னிருக்கையில் பிடித்து தள்ள இருளின் நிசப்தத்தில் அதிரடியாக ஒலித்தது அந்தப்பாடல்.
நான் யாரு நான் யாரு
கொய்யால நான் யாரு
நான் யாரு நான் யாரு
கொய்யால நீ கேளு
நான் ராஜா நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா நான் ராஜா
எப்போதும் நான் ராஜா
தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எரிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா
வாடா…………..
சுத்தும் பூமியை மாத்தி, சட்டை காலரை ஏத்தி
வந்தா சாத்துவேன் சாத்தி
போடா…………
கட்டம் போட்ட முழுக்கைச்சட்டையின் கையை முட்டி வரை மடித்து விட்டவனாய், சாம்பல் வர்ண பருத்தி கையிலியினை நன்கு ஏற்றி கட்டி… பின்னால் கைகளை கோர்த்தபடி அந்த இரவு நேரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான் அவன். அவனின் சட்டை பையிலிருந்த அலைபேசியில் பாடல் ஒலிர்ந்து கொண்டிருந்தது. அவனது நடையில் திமிர் சற்று அதிகப்படியாக இருந்தது.
இருளில் நிழற்படமாக தெரிந்தவன், அவர்களை நெருங்கி மெல்ல வெளிச்சத்திற்கு வர… அவனின் கம்பீரமானத் தோற்றம் ஆய்வாளருக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் அவர் அவனை அலட்சியப்பார்வை பார்த்தார். அவனை மேலிருந்து கீழ் ஆராயும் பார்வையுடன் நோட்டமிட்டபடி… “யாருவே நீ” என்று வினவ அவனிடத்தில் பதிலில்லை.
“என்னலே தெனவா? கேள்வி கேட்டால் பதில் சொல்லமாட்டியோ? போட்டிருக்க துணியை பார்த்தாலே தெரியுதே, நீ எவ்வளவு பெரிய பொ***ன்னு.”
அவரின் வார்த்தையில் கோபம் வர பெற்றவனாக கை முட்டியினை இறுக மூடியவன் ஆய்வாளாரை உறுத்து விழித்தான்.
“என்னலே மொறைக்கிற, நான் யாருன்னு தெரியுமில்ல”
“நீ யாருன்னும் தெரியும், உன் குணம் எப்டின்னும் தெரியும், இதுக்கு முன்னாடி நீ அந்த அமைச்சருக்கு கூஜா தூக்கினதும் தெரியும்.”
“ஹேய்…” ஆய்வாளர் அவனின் சட்டையை கொத்தாக பிடிக்க,
“சார்… சார்…”
தேநீர் வாங்கச் சென்றிருந்த கான்ஸ்டபிள் மூர்த்தி பதறியவராக ஓடி வந்தார்.
அருகில் வந்தவர், “முதலில் அவர் மேலிருந்து கையை எடுங்க சார்” என்றார்.
“என்ன மூர்த்தி, எவனோ ஒருத்தனுக்கு ஆதரவாக பேசி என்னையவே அதிகாரம் பண்றீரு”, ஆய்வாளர் சினந்தார்.
“சார் இவரு யாருன்னு தெரிஞ்சா உங்களுக்குத் தான் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும்.”
மூர்த்தி மேலும் ஏதோ கூற வருகையில் அவரை கை நீட்டித் தடுத்தவன், “அந்த பெண்ணை விடு” என்றான் அமைதியாக.
அவன் கோபமாக சொல்லியிருந்தால் கூட மூர்த்திக்கு பயம் ஏற்பட்டிருக்காது… ஆனால், அவனோ எவ்வித உணர்வையும் பிரதிபலிக்காது அமைதியாக சொல்லிய விதமே இங்கு பெரும் சம்பவம் நடைபெற போவதை அவருக்கு உணர்த்தியது.
“அவளை விட முடியாது என்னடா செய்வாய், நீ என்ன பெரிய *******”, தகாத வார்த்தைகளைக் கூறியவன் அவனை அலட்சியம் செய்தவனாக வண்டியினுள் தள்ளிய பெண்ணை நோக்கி அடி வைக்க, அவரின் பேண்ட் பாக்கெட்டிலிருந்த துப்பாக்கியை அவரே அறியாது லாவகமாக கைப்பற்றியவன் ஆய்வாளரின் உள்ளங்கையிலேயே தனது குறி வைத்தான். அடுத்த நொடி அவரின் கை ரத்தத்தில் குளித்தது.
வலியில் துடித்தவர் அவனை நோக்கி “நான் அமைச்சரோட ஆளுன்னு தெரிஞ்சும் என் மேல கை வைச்ச உன்னை சும்மா விடமாட்டேன் டா” என்று காட்டு கத்தலாகக் கத்தினான்.
ஆய்வாளரின் உணர்ச்சி வார்த்தைகள் அவனுக்கு வெறும் கத்தலாக மட்டுமே தெரிந்தது.
“நீ என்னை சும்மா விடுறீயோ இல்லையோ அதை பிறகு பார்க்கலாம், முதலில் அந்த பெண்ணை விடு” என்றவன் ஆய்வாளரை பொருட்படுத்தாமல் தானே காரினை திறந்து அப்பெண்ணை அங்கிருந்து போகுமாறு கூறினான்.
ஆனால், அவளோ போகாது வலியில் துடித்துக்கொண்டிருக்கும் ஆய்வாளாரை நடுக்கத்துடன் பார்த்திருந்தாள்.
அவளின் பார்வையின் பொருளுணர்ந்த அவன், ஆய்வாளரின் பேண்ட் பாக்கெட்டிலிருந்து அவளது இருசக்கர வாகன சாவியை எடுத்துக்கொடுக்க நன்றி எனக்கூறி அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்கிற குமுறலோடு ஆய்வாளர் அவனை அடிக்க, லாவகமாக தன்மீது ஆய்வாளரின் கரம் படாமல் விலகியவன் சட்டை பையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்த தனது அலைபேசியை எடுத்து மணியை பார்த்தான்.
மணி சரியாக நள்ளிரவு பனிரெண்டு. அவனின் இதழ்கடையில் விஷமப் புன்னகை தோன்றி மறைந்தது. அவனின் புன்னகைக்கான காரணத்தை பலமுறை அருகிலிருந்து பார்த்த மூர்த்திக்கு ‘இன்று இந்த ஆய்வாளரின் நிலை அவ்வளவு தான்’ எனத்தோன்றியது.
மூர்த்தியின் கையிலிருந்த தேநீர் கோப்பையை வாங்கிய அவன் ஒய்யாரமாக நடந்து சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் என்ஜின் பகுதியின் மீது கால்மேல் காலிட்டு கம்பீரமாக அமர்ந்தான்.
அவனின் தோரணை ஆய்வாளருக்கு மேலும் பயத்தை தோற்றுவிக்க அவனோ தேநீரை நன்கு ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் ஆய்வாளருக்கு ஒன்று புரிந்தது, தன்னை சுட்ட அவனை மூர்த்தி ஒன்றும் செய்யாது மரியாதை பார்வையுடன் பார்த்திருப்பதை,
“யாரு மூர்த்தி இவன்” சிறு கலக்கத்துடன் கேட்டார் ஆய்வாளர்.
“சார் அவரு நகரின் துணை ஆணையர் திரு.வெற்றி, இப்போ இடைக்கால பணி நீக்கத்தில் இருக்கார்.”
முதலில் வெற்றி யாரென்று தெரிந்ததும் அவனின் பதவியை அறிந்து அதிர்ந்த ஆய்வாளர், வெற்றி இப்போது பணி நீக்கத்தில் இருக்கின்றான் என்றதும் மீண்டும் வெற்றியை அலட்சியமாக பார்த்தான்.
“ஹோ அந்த போலீஸ் நீ தானா, உன்னைத்தான் பார்க்கணும் நினைச்சிட்டே இருந்தேன், அமைச்சருக்கு ரொம்ப குடைச்சல் கொடுக்குறியாமே.”
தன் கை வலிப்பதையோ ரத்தம் வழிவதையோ அந்த ஆய்வாளர் பொருட்படுத்தாமல், வாங்கும் லஞ்சத்திற்கு பொறுப்பாக பேசினான். ஆனால் அவனின் பேச்சையெல்லாம் வெற்றி காதில் வாங்கவே இல்லை. அமைதியாக தன் கையிலிருக்கும் தேநீர் மீதே தன்னுடைய கவனத்தை வைத்திருந்தான்.
வெற்றி யார் என்பதை ஆய்வாளரிடம் தெரிவித்த மூர்த்தி, வெற்றியிடம் திரும்பி… “சார் இவர் புது ஆய்வாளர் சங்கர், ஐந்து நாட்களுக்கு முன்பு தான் கன்னியாகுமரியிலிருந்து மாற்றலாகி இங்கு வந்தார்” என்றார்.
எனக்குத் தெரியும் என்பதைப்போல் வெற்றி மூர்த்தியை பார்க்க, அதன் பொருளறிந்த சங்கரும் “நான் யாருன்னு தெரிந்தாலும் உன்னால் என்னை ஒன்னும் செய்திட முடியாது. உன் இடைக்கால பணி நீக்கம் முடிவதற்குள், முற்றிலும் இந்தத் துறையிலிருந்து உன்னை தூக்குறேன், அதுமட்டுமில்ல பணியில் இல்லாத போது பணியிலிருக்கும் அதிகாரி மீது கை வைத்ததற்காக நீ தண்டனை பெற போற” என்றான்.
அப்படியா, எனும் விதமாக இதழோரம் சிரித்த வெற்றி “வரட்டா” என்ற வார்த்தையோடு அங்கிருந்து சென்றான்.
அந்நேரத்திலும் வெற்றி தனது இடை நீக்க பணிக்காலம் முடிவடைந்த பின்னரே சங்கரை சுட்டிருந்தான். பணியிலிருக்கும் ஒருவர் தவறு செய்தால் அவர்களை தண்டிப்பது உயர் அதிகாரிகளின் கடமை, அதைத்தான் வெற்றியும் செய்தான்.
தெனாவட்டாக செல்லும் வெற்றியையே ஒருவித வெறியுடன் பார்த்த சங்கர் “வண்டியை எடு, ஏதேனும் மருத்துவமனைக்கு போ” எனக்கூறி வண்டியிலேறி அமர்ந்தான்.
மருத்துவமனை சென்று கைக்கு சிகிச்சை செய்த பிறகு, “ஒருநாளாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும்” என்ற மருத்துவரின் பேச்சை கூடக் கேட்காது வீடு சென்றான் சங்கர்.
காவலர் குடியிருப்பு பகுதி,
தான் தங்கியிருக்கும் வீட்டிற்குள் நுழைந்த வெற்றியை தனிமையே வரவேற்றது. இந்தத் தனிமை பிடிக்காமல் தான், இரவு நேரத்தில் கூட வீதியில் உலவிக் கொண்டிருந்தான். பிறந்தது முதலே குடும்பத்தோடு வாழ்ந்தவனுக்கு தனிமையிலிருப்பது கொடுமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இத்தனிமையிலிருந்து அவனால் வெளியேற முடியாது. தெரிந்து செய்த தவற்றிற்காக(அது அவன் குடும்பத்தாரை பொறுத்தமட்டிலும் தவறு) அவனே ஏற்றுக்கொண்ட தனிமை இது.
யாருமில்லாத வீட்டினை வெறுமையாக பார்த்தவன், வரவேற்பு அறையில் போடப்பட்டிருந்த நீள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான்.
மூடிய விழிகளுக்குள் அவனின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் முகமும் அழகாய்த் தோன்றியது.
அழகிய மலை கிராமம்
அவனுடையது. ஊரில் அனைவரும் மதிக்கத்தக்க மனிதர் வெற்றியின் தாத்தா வெங்கடாசலம் அவரின் மனைவி செண்பகம். அவர்களுக்கு இரண்டு மக்கட் செல்வங்கள்.
மூத்தவர் நல்லு, இளையவர் சேதுராமன்.
நல்லுவின் மனைவி செல்வி இவர்களுக்கு ஒரு மகன் வெற்றி. சேதுராமனின் மனைவி ஜானகி இவர்களின் மகன் சக்தி, மகள் வாணி.
பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் வெற்றி பிறந்ததும் செல்வி இறந்துவிட்டார். திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே காதல் மனைவி இறந்துவிட துக்கம் தாளாது நல்லு வெற்றியை கவனிக்கத் தவறினார்.
நல்லு துக்கத்திலிருந்து மீண்டு வரும் வரை வெற்றியின் பொறுப்பை சேதுராமன் ஜானகி ஏற்றுக்கொண்டனர். நல்லு தன்னை ஓரளவு தேற்றிக்கொண்டு வெற்றியை கவனிக்கத் தொடங்கிய பின்னரும் சேதுராமன், ஜானகி தங்களது இடத்தை விட்டுக்கொடுக்காது வெற்றியையே தங்களது முதல் பிள்ளையாக நினைக்கின்றனர்.
வீட்டின் முதல் மூத்த ஆண் வாரிசு என்பதால் வெற்றியை அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர்.
வெற்றிக்கும் சக்திக்கும் வயது வித்தியாசம் இரண்டு வருடங்கள்.
வெற்றி சிறு வயது முதலே தனக்கு இதுதான் என்பதில் உறுதியாக இருப்பான். தான் ஆசைப்பட்டது எதுவாக இருந்தாலும் நியாயமான முறையில் அதனை அடைவான். அவனின் வேலையும் அப்படித்தான்.
“போலீஸ் வேலையெல்லாம் நமக்கு தோதுப்படாதுப்பா.”
“நமக்கே பலத்தொழில் இருக்கும்போது நீ எதுக்குய்யா அரசாங்க வேலைக்கு போவனும்.”
“போக்கத்தவந்தேன் போலீஸ் வேலைக்குப் போவான்.”
வீட்டின் மூத்த தலைமுறைகள் அனைவரும் ஒவ்வொன்றை சொல்ல,
“இவ்வீட்டின் தொழில்களை என்னிடத்திலிருந்து சக்தி பார்த்துக்குவான்” என்ற வெற்றி அவ்வளவு தான் என்பதைப்போன்று அங்கிருந்து நகர,
“உனக்கு ஒரு ஆசை இருக்காப்போல, அவனுக்கும் ஏதேனும் ஆசையிருந்தா என்னப்பு செய்யறது.” தாத்தா வெங்கடாசலத்தின் கேள்வியில் வெற்றி தனது தம்பியை பார்த்தான்.
சக்தியோ தனது வீட்டாரை நேருக்கு நேர் பார்த்து… “வெற்றி அவர் விருப்பப்படியே காவல்துறையில் சேரட்டும், எனக்கு விவசாயம் பண்ணதான் பிடிச்சிருக்கு… அதுக்குதான் என்னுடைய படிப்பையும் விவசாயம் சம்பந்தப்பட்டதாகவே தேர்ந்தெடுத்தேன். நம் தொழிலை நான் பார்த்துகிறேன்” என்றான்.
“அண்ணனும் தம்பியும் கூட்டு களவாணி பயலுவ, அதேன் முன்னமே ஏற்பாட்டோடு படிச்சிருக்கானுவ” என்று அப்பத்தா தன்னுடைய ஒப்புதலை மறைமுகமாக அளிக்க… வீட்டின் மற்றவரும் மௌனமாக தங்களின் சம்மதத்தை அளித்தனர்.
அதன் பின்னர், கொக்குக்கு மீன் ஒன்றே குறி என்பதைப்போல் காவல்துறையில் சேர்வதே தன்னுடைய இலக்கு என்பதில் குறி வைத்து படித்து ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது கோயம்புத்தூரில் பணி செய்கின்றான்.
சக்தி தனது பெரியப்பா மற்றும் அப்பாவுடன் இணைந்து பல தேயிலைத் தோட்டங்களையும், ஏலக்காய்த் தோட்டங்களையும் நிர்வாகம் செய்கின்றான். அவர்களுக்கு சொந்தமாக காய்கறி மற்றும் பழங்கள் தோட்டமும் உள்ளது.
தங்களது சொந்த தொழிற்சாலையிலேயே அனைத்தையும் பதப்படுத்தி தரம் பிரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
இதில் தேயிலைத் தொழிற்சாலை மட்டும் அவர்கள் வசிக்குமிடத்திலிருந்து சிறு தொலைவில் அமைந்துள்ளன. மற்றவையான ஏலக்காய் தொழிற்சாலை மற்றும் காய்கறிகள், பழங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கோயம்புத்தூரிலிருந்து ஊட்டிக்கு செல்லும் வழியின் மையத்தில் அமைந்துள்ளன.
வாணி பத்திரிக்கை எழுத்தாளர். எது சம்பந்தப்பட்ட கட்டுரையாக இருந்தாலும் சுவைபட எழுதுவதில் திறமை வாய்ந்தவள். அவள் இந்த வேலைக்கு செல்வதற்கு வீட்டிலுள்ள அனைவரையும் சம்மதிக்க வைத்ததே வெற்றி தான்.
வெற்றி ஒன்றை செய்தால் அதில் அர்த்தமிருக்கும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. அதனாலே தங்களுக்கு பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் இறுதியில் வெற்றியின் வார்த்தைக்கு கட்டுப்படுவர்.
அப்படித்தான் “முதலில் பொம்பள பிள்ளை வெளிய போய் என்னத்துக்கு வேலை பார்க்கணும்” என்ற எல்லோரும் வாணி வேலைக்கு செல்ல சம்மதமும் வழங்கினர்.
அந்த வீட்டின் அனைத்து முடிவுகளும் வெற்றியின் வசமே. அவனின் உருவில் வெங்கடாசலத்தை பார்ப்பதால் மற்ற சகாக்கள் யாரும் வெற்றியின் வார்த்தைக்கு குறுக்கே வந்ததில்லை. வெற்றியின் எந்தவொரும் செயலும் இக்குடும்பத்தின் நன்மைக்கே என்று வெங்கடாசலமும் அவன் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளார்.
அதேபோல் அவ்வூரில் அக்குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுக்கும் வெற்றி சிம்ம சொப்பனம். அதற்கு காரணம், வெற்றியின் அமைதியான ஆளுமையும், பணிவானப் பேச்சும், கனிவான குணமும், கம்பீரத் தோற்றமும், அவன் வகிக்கும் பதவியும் தான்.
வெற்றி காவல்துறையில் சேருவதில் விருப்பமில்லாமல் இருந்த பெரியவர் சிறு வயதிலேயே அவன் காவல்துறையில் உயர் அதிகாரியாக இருப்பதிலும், அவனுக்கு அனைவரும் பணிந்து நிற்பதிலும் அதிக பெருமை கொண்டார்.
ஆனால், அவன் இப்போது அவர்களுடன் இல்லாதது அனைவருக்கும் மிகப்பெரிய வருத்தம்.
அனைவரையும் நினைத்துப் பார்த்த வெற்றி, தான் தனிமையில் இருப்பதற்கான காரணத்தை மட்டும் யோசிக்க மறந்தவனாக நீள்விருக்கையிலே தனது ஆறடி உயரத்தை குறுக்கி படுத்தவனாக மெல்ல உறங்கிப்போனான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
53
+1
95
+1
6
+1
1
ஆரம்பமே அதிரடியா இருக்கு சூப்பர் 👌👌👌
Thank you so much sis