
காலை கனவு 46
‘நெடுங்காலமாய் புழங்காமலே…
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே!உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே…
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே!’
சுகவனம் வீட்டுக்கு பின்னிருக்கும் தேயிலைச் செடிகளின் சரிவில் சிறு பாறையின் மீது நின்றிருந்தான் ஆர்விக்.
மனதில் அத்தனை இதம். கன்னக் கதுப்புகள் எல்லாம் செம்மை கொண்டிருந்தன.
தூரத்தில் வானிலிருந்து தொங்கும் வெள்ளிக் கம்பியாய் காட்சியளிக்கும் அருவியில் குளுமையாய் படிந்திருந்தது அவனது பார்வை.
ஆனாலும், காணும் காட்சி யாவும் நீக்கமற நிறைந்திருந்தாள் ஆர்வியின் அன்வி.
கிடைக்கவே கிடைக்காதென அழுத்தமாக நம்பியிருந்த ஒன்று… இன்று அவனுக்கு மட்டுமே உரித்தாக.
அவனில் பாதியாய் நிறைந்திருந்தவள், இனி அவனின் முழுமையாய்.
அகம் நிறைந்த காதலை கொஞ்சமும் மிச்சமின்றி தன்னவளிடம் சேர்ப்பிக்கும் நாளுக்காக தவித்திருக்கிறான்.
அதிலும் இன்று முதன்முறையாக பெண்ணுக்கான அலங்காரத்தில் தன்னுடையாளை பார்த்தது முதல் ஆர்வியின் காதல் செல்கள் அனைத்தும் மீண்டும் புதிதாய் மொட்டவிழ்ந்து மலர தங்களின் காத்திருப்பில் காத்திருப்புக் கொண்டன.
அதிக கூட்டமின்றி, சலசலப்புகள் ஏதுமின்றி வீடு நெருங்கிய சுற்றத்தார் சூழ நிறைந்திருக்க…
சக்தியின் அருகில் ஆர்விக் அமர்ந்திருந்தான்.
ஆர்விக்கின் அந்தப்புறம் அமர்ந்திருந்த சுகவனம்… ஆர்விக்கின் கரம் காட்டிய மென் பதற்றத்தை கண்டுகொண்டவராக பிறர் அறியாது அழுத்தம் கொடுத்து பிடித்தார்.
“நாம நேசிச்ச பொண்ணாவே இருந்தாலும் இந்த மாதிரி நேரம் இப்படித்தான் இருக்கும். ஆனாலும் இந்த தவிப்பெல்லாம் மனசுக்கு ரொம்பவே பிடிக்கும்” என மெல்ல அவன் பக்கம் சரிந்து கூறினார்.
“அப்பா!” என ஆர்விக் விழிகள் விரித்திட…
“நானும் உன் அம்மாவும் காதல் திருமணம் தான்” என்று இந்த வயதிலும் மனைவியின் மீதுள்ள நேசத்தை வெளிக்காட்டியவராக வெட்கம் கொண்டு புன்னகைத்தார்.
“செமயா பிளஷ் ஆகுறிங்கப்பா” என்ற ஆர்விக், “என்னவாம்டா என் மாமனாருக்கு?” என்று சக்தி கேட்டதில், அவனிடம் திரும்பினான்.
“அதெல்லாம் சொல்றதுக்கில்லை” என்ற ஆர்விக், “உங்களுக்கு லவ் ஃபீல்… லவ் லைஃப் எப்படியிருக்கு மாம்ஸ்?” எனக் கேட்டான்.
“ரொம்பவே சிறப்பா போகுது. எவ்வளவு கெத்து தெரியுமாடா நான். ஆனா உன் அக்கா மொத்தமா என்னை ஆட்டி வைக்கிறாள்” என்றான்.
“கணவர் பொஷிஷனுக்கு போயிட்டாலே இதெல்லாம் சகஜம் மாம்ஸ்… பழகிக்கோங்க” என்ற ஆர்விக், “அடி பலமோ?” என்று தோள் குலுங்களில் தனது சிரிப்பை வெளிப்படுத்தினான்.
சக்தி அசடு வழியப் பார்த்தப் பார்வையில், அவனது தோள் மீதே சாய்ந்து முகத்தை மறைத்து…
“முடியல மாமா” என பொங்கி வந்த சிரிப்பை அடக்கினான்.
“டேய் எல்லாரும் பாக்குறாங்கடா” என்ற சக்திக்கு அனைவரின் பார்வையும் தங்கள் மீது படிந்திருக்க பேரவஸ்தை.
“உன்னை தெரிஞ்சும் உன் பக்கத்துல வந்து உட்கார்ந்ததே தப்புடா” என்ற சக்தி, “அன்வி வர்றாள்” என அவனின் இடை இடித்தான்.
“ஆர்வி” என லட்சுமணன் அழைத்திட நிமிர்ந்தமர்ந்தான்.
நிதாஞ்சனி, தான்யா அழைத்து வர அன்விதா சுற்றத்தார் முன் வந்து நின்றாள். ஆர்விக்கு நேரெதிர்.
புடவையில் அவளை பார்த்ததே இல்லையென்றில்லை. உரிமையாய், உரியவளாக பார்ப்பதே பரவசமாய் அவனிடம்.
கேசாதிபாதம் பார்வையால் புகைப்படம் எடுத்திருந்தான்.
‘குண்டுமல்லி வைச்சிருக்கலாம்’ என நினைத்தவனிடம் அத்தனை ரசிப்பு. அவள் பாதத்தில் தீட்டியிருந்த மருதாணி வரை விழிகள் பருகி ரசித்திருந்தான்.
அன்விதா பெண்ணுக்குரிய நாணம் கொண்டு தலை கவிழ்ந்தெல்லாம் நிற்கவில்லை. தன்னவனை நேர்கொண்டு பார்த்து நின்றாள்.
ஆர்விக்கின் அசையா பார்வைக்கு முன் போன்று தடுமாற்றம் கொள்ளாது, அவனுக்கு இணையாய் தானும் காதல் அம்புகளை அவனிடம் எறிந்தாள்.
சக்தி, நிதாஞ்சனி திருமண வரவேற்பிற்காக அன்விதா வாங்கிக்கொடுத்த ஆடையை தான் அணிந்து வந்திருந்தான்.
வெண்மை நிற சட்டையும், க்ரீம் வர்ண பேண்டும்… முன்னெற்றி வழிந்த கேசத்தின் அசைவும் அவனை கொள்ளை அழகாய் காட்டிட, சற்றும் விழிகளில் அசைவுகொள்ளாது பார்த்திருந்தாள்.
“தனியா இருக்கும்போது முகத்தையே பார்க்கமாட்டாள். இத்தனை பேருக்கு நடுவில் நின்னுட்டு பிச்சுத் திங்கிறா” என்று முனகிய ஆர்விக்,
என்னவென பார்வையால் வினவ…
தலை அசைந்ததுவோ எனும் விதமாக ஒன்றுமில்லையென்றவள், விழிகளை அதீத மெல்லலில் அழுத்தமாக மூடி திறந்தாள்.
மனதின் முத்தம் விழிகள் வழி அவனைச் சேர்ந்தது. கண்களால் கட்டிக்கொண்டாள். நொடியில் அவனை திண்டாடச் செய்தாள்.
இருவரும் காதலை பகிர்ந்து, இன்றைய தினம் வரையிலான இத்தனை மாதங்களில் காதலை காட்டுவது ஆர்விக் தான். அவனிடத்தில் அவளுக்கான பெருங்காதல். அதனை முழுமையாய் காட்டிட வாழ் நாளும் போதாது. அதற்காகவே நொடிக்கு நொடிக்கு அவளிடம் தன்னுடைய காதலை சேர்ப்பித்துக் கொண்டே இருப்பவனுக்கு, அவள் காட்டும் காதல் சுகந்தமாய்!
“பார்வையாலே முழுங்கிடாத அன்வி… அவன் உனக்கே உனக்குதான்” என அன்விதாவின் அருகில் நின்றிருந்த தான்யா கூற, “ஆமா எல்லாரும் பாக்குறாங்க” என்றாள் நிதாஞ்சனி.
“இருக்கட்டும் அண்ணி” என்ற அன்விதா, “இன்னைக்கு எல்லாரும் பாக்குறதைவிட நான் பாக்குறதுதான முக்கியம்” என்றாள்.
“பாருடா” என்ற நிதாஞ்சனி, “இனி எங்களை பார்க்க விடமாட்டபோல” என்றாள்.
“என்ன பேச்சு” என்று வந்த கார்த்திகா, “அங்க உட்காரும்மா” என அனிதாவின் அருகில் காலியாக இருந்த இருக்கையை காண்பித்தார்.
விலகி அமர்ந்திருந்தாலும் இருவரின் பார்வையும் ஒட்டிக்கொண்டிருந்தன.
பூபேஷ் அனைத்தையும் காமிராவில் பதிவு செய்துகொண்டிருந்தான்.
யாஷ் மதியுடன் யாரின் பார்வையும் விழாத வகையில் நின்றிருந்தான். சக்தி கவனித்து பார்வையால் கண்டிப்புக் காட்டிட, பின்னந்தலை வருடி கண்கள் சுருக்கியவனாக அவனருகில் வந்திருந்தான் யாஷ்.
அனைவரின் கவனமும் ஐயரின் மீது நிலைத்திருக்க… தெய்வானை மட்டும் சிறு படபடப்புடனே இருந்தார்.
அனிதா கவனித்து என்னவென்று கேட்க,
“என் அண்ணி வந்து எதுவும் ரகளை பண்ணுவாங்களோன்னு இருக்கு” என்றார் தெய்வானை.
“அதெப்படி வந்து பண்ண முடியும். பண்ணிடுவாங்களா?” என்ற கார்த்திகா, “சந்தோஷமான விஷயம் நடக்குது. மனசை இங்க வைச்சில்லாம வேண்டாத நினைப்பு எதுக்கு?” என்று கடிந்தார்.
“ஆமா அண்ணி… அவங்க பையன் மேல தப்பிருக்கும்போது எப்படி வந்து பேசுவாங்க” என்ற அனிதா, “கவலைப்படாம இருங்க” என்றார்.
சக்திக்கு திருமண சீர் கொண்டு வந்த தினம் முதல், அதிகமில்லை என்றாலும் எப்போதாவது வந்துபோக இருந்தார் தென்னரசி.
நேற்று கூட வீட்டுக்கு வந்திருந்த தென்னரசி…
“அன்வி என் வீட்டுக்குத்தான் மருமகளா வருவான்னு ஆசைப்பட்டேன். அதுக்கு கொடுத்து வைக்கலையே!” என்றிருந்தார்.
அதுகொண்டே தெய்வானைக்கு இந்த பதற்றம்.
சக்தி அன்னையை கவனித்தவனாக மற்றவரின் கவனம் ஈர்க்காது எழுந்து வந்து என்னவெனக் கேட்டு அவரை ஆற்றுப்படுத்தினான்.
அதன் பின்னர் தெய்வானை முழுமனதுடன் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வில் கவனம் வைத்தார்.
ஆர்விதாவின் காதலுக்கு நடுவில் அடுத்து நடக்க வேண்டிய யாவும் சிறப்பாக அரங்கேறியது. திருமண நாளும் குறிக்கப்பட்டு, அடுத்தடுத்துப் பேச்சுக்கள் துரிதமாக பேசி நிச்சய ஓலை வாசிக்கப்பட… இருவரையும் ஆசீர்வதித்து உறவுகள் செல்லத் துவங்கினர்.
இரு வீட்டார் மட்டும் எஞ்சியிருக்க…
“அன்வியை கூட்டிட்டு போம்மா” என தான்யாவிடம் கூறினார் தெய்வானை.
இனி ஆர்வியை பார்க்கவிடமாட்டார்களென தெரிய, செல்லும் முன்பு அவனிடம் விழிகளால் விடைபெற்றாள் அன்விதா.
“கண்ணாலே நீங்க பண்ற லவ்… முடியல அன்வி” என அறைக்குள் வந்ததும் மயங்கி விழுவதைப்போன்று படுக்கையில் சரிந்தாள் தான்யா.
“அடுத்து டும் டும் கொட்டுற வரை ஒரே லவ் தான்” என்று கண்ணடிக்க, அன்விதாவிடம் மென் புன்னகை.
அக்கணம் ஆர்விக்கிடமிருந்து தகவல் வந்ததன் அடையாளமாக அன்விதாவின் அலைபேசி ஒலித்து அடங்கியது.
“கொன்னுட்டடி!” என்ற ஆர்விக்கின் வார்த்தையோடு கத்தி குத்துப்பட்ட இதயத்தையும் அனுப்பி வைத்திருந்தான்.
செவ்விதழ் நீண்டு விரிய அலைபேசியால் நெற்றியைத் தட்டிக்கொண்டாள்.
மீண்டும் அலைபேசியில் சத்தம்.
“வெட்டிங்க்கு குண்டு மல்லி வைக்கணும் அன்வி” என தகவல் வந்திருந்தது.
தோளில் வழிந்த முல்லை மலரை பிடித்தவளாக மூரல்கள் மின்னினாள்.
“போயிட்டு வர்றேன்” என அடுத்த தகவல் வர, உடன்…
“இப்படியே என்னோட வந்திடுறியா அன்வி?” எனக்கேட்டு அனுப்பியிருந்தான்.
தன்னுடைய கேள்விக்கு பதில் வந்து சேர அதனை திறந்து பார்க்க முடியாது லட்சுமணன் ஆர்விக்கிடம் பேச்சுக் கொடுத்திருந்தார்.
சுகவனத்தின் வீடு வரும் வரையிலும் கூட லட்சுமணன் பேச்சினை நிறுத்தவில்லை.
பேரனின் திருமணத்தில் எவ்வளவு மகிழ்வென்பதை தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்தியிருந்தார்.
வீடு வந்துசேர…
“ஒரு மணி நேரத்தில் கிளம்புவோம் ஆர்வி” என்றார் அனிதா.
“ஓகே மாம்” என்ற ஆர்விக் அலைபேசியை எடுக்க, “அங்க சாப்பிட்டு இருக்கும்போதே மதி அவள் அம்மா கால் பண்ணாங்கன்னு போயிட்டாள் ஆர்வி. நான் பார்த்திட்டு வந்துடுறேன். கிளம்பிட்டா கால் பண்ணு” எனக் கூறிச்சென்றான் யாஷ்.
“வெளியவே நிக்காம உள்ள வா ஆர்வி” என்று கார்த்திகா அழைக்க,
“ஒரு மெசேஜ் பார்க்க விடுறாங்களா?”என நொந்தவனாக வீட்டிற்குள் செல்ல, “மச்சான் உனக்கு ஒரு வீடியோ அனுப்பியிருக்கேன். தனியா பாரு” என்று ஆர்வியின் காதில் சத்தமின்றி சொல்லி நகர்ந்தான் பூபேஷ்.
தான் தங்கியிருந்த அறையில் லட்சுமணன், சென்னை கிளம்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்க, கூடத்தில் நின்றிருந்த ஆர்விக் அப்படியே நழுவி வீட்டின் பின்புறம் தேயிலை சரிவிற்கு வந்திருந்தான்.
முதலில் அன்விதாவின் பதில் என்னவென்று பார்த்தவனின் கண்களோடு உயிரும் குளிர்ந்தது.
அவள் அனுப்பிய வார்த்தைகள், அவன் படித்திட… அவளின் குரலாய் செவி விழுந்தது.
“வரலாமே! வெட்டிங் முடிச்சு… ஆர்வி பொண்டாட்டியா!” உடன் வந்திருந்த வெட்கத்தால் முகம் மூடும் பொம்மை அவனுக்கும் வெட்கத்தை வரவழைத்தது.
சில நிமிடங்கள் அன்விதா அனுப்பிய வரியையே திரும்பத்திரும்ப படித்து, விரலால் வருடி மெதுவாக அந்நேர மகிழ்வை கடத்தியவன், அடுத்து பூபேஷ் அனுப்பி வைத்த காணொளியை திறந்தான்.
அன்விதா வந்து நிற்க, ஆர்விக் அவளிடம் பார்வையால் வினா தொடுத்தது, அவள் விழிகளால் அவனை முத்தமிட்டதென அனைத்தும் தெளிவாக காட்சியாகியிருந்தது.
உடனே அவளை பார்க்க வேண்டுமென மனம் ஆர்ப்பரிக்க… அவளிடமிருந்தே அழைப்பு வந்தது.
“கிளம்பிட்டிங்களா?”
“கொஞ்ச நேரத்தில்…”
“ஹோ… பார்க்கணுமே!”
“அன்வி!”
“பேசவே இல்லையே! இனி மேரேஜ் முடியுறவரை சென்னை போகக்கூடாது சொல்லிட்டாங்க!”
“யாரு…”
“தெய்வானை!” அவள் கடுப்பாக மொழிய அவனிடம் சிரிப்பு.
முதல்முறை அவனுக்கான தேடலை வெளிப்படுத்துகிறாள்.
“இப்போ போயிட்டன்னா… வெட்டிங் முதல் நாள் தான பார்க்க முடியும்” என்ற அன்வி, “இங்க வர்றியா?” எனக் கேட்டாள்.
“நான் அங்க வரது சரிவருமா தெரியலையேடா!”
ஆர்விக்கின் முடியாதென்ற மறுப்பில், “உனக்கு எதுவும் தோணலையாட…” என்ற அன்விதா, “கிஸ் பண்ணனும்” என்றாள்.
“டேய்…” உதட்டினை உள் மடித்து உணர்வினை விழுங்கினான்.
“எனக்காகத்தான அந்த ட்ரெஸ் போட்டுவந்த நீ?” என்றவள், “தெரியும். நிறைய சைட் அடிச்சேன். இப்போ திரும்பவும் சைட் அடிக்கணும்” என அவனிடம் உண்டாகும் காதலை கட்டுப்படுத்திட தெரியாது, முடியாது அவனிடமே கொட்டித் தீர்த்திட முயன்றாள்.
“என்ன உன் மாம்ஸ்கிட்ட பெர்மிஷன் வாங்கணுமா?”
“அதெல்லாம் இல்லை” என்ற ஆர்விக், “நிஜமா உன் வீட்டிலிருந்து கிளம்பவே மனசில்லடி! நீ ரூம் விட்டு வெளியவருவன்னு தான் மெசேஜ் பண்ணேன். திரும்ப உன்னைப் பார்த்திட்டு இங்கிருந்து கிளம்பிறதெல்லாம் ஈசியா முடியாதுடா” என்றான்.
“நீ மட்டும் உனக்கு பார்க்கணும் தோணுச்சுன்னா மிட் நைட்டா இருந்தாலும் என் ஹாஸ்டல் முன்ன வந்து நின்னு பார்க்கணும் ஆர்டர் போடுறல…” என்றவள், “எனக்கு இப்போ உன்னை பார்க்கணும். நான் தோட்டத்துக்கு அந்தப்பக்கமா வர்றேன். நீ தேயிலை தோட்டம் வழியாவே வந்திடு” என, அவன் பதில் பேசும் முன்பு வைத்திருந்தாள்.
***********************
நிதாஞ்சனியிடம் மட்டும் சொல்லிவிட்டு மற்றவர்களுக்குத் தெரியாது அவர்களின் பெர்ரி தோட்டத்திற்கு வந்திருந்தாள்.
வழியிலும் யாரும் தன்னைப் பார்த்திடவில்லையென நினைத்தவள் தோட்டத்தில் காத்திருக்க முடியாது ஆர்விக் எதிர் வரும் பாதையில் நடக்கத் துவங்கினாள்.
இன்னும் கொஞ்சம் சென்றால் சுகவனத்தின் வீடே வந்துவிடும். ஆதலால் பாதி வழியிலேயே நின்றுகொண்டாள்.
நிமிடங்கள் ஊர்ந்தன.
ஆர்விக்கு அழைக்கலாமென அலைபேசியை பார்க்க…
“அன்வி” என பின்னால் கேட்ட குரலில் தானாக உடலில் ஒருவித இறுக்கம் சூழ திரும்பியும் பாராது வேகமாக முன்னோக்கி அடி வைத்திட்டாள்.
“அன்வி நில்லு… நான் சொல்றதை கொஞ்சம் கேளு?”
அன்விதா கண்கள் சிவக்க பெரும் சினத்தோடு நடந்திட…
வேகமாக ஓடிச் சென்று அன்விதாவின் கையை பிடித்து நிறுத்தியிருந்தான் கௌதம்.
அப்போதுதான் ஊருக்குள் வந்திருந்தான். எதிரில் தன்னை கவனியாதும் சென்றவளை பின் தொடர்ந்திருந்தான்.
“ஒழுங்கா கையை எடு.”
“அன்வி நான் உன் கௌதம் டி!”
“ச்சீ… கையை விடு” என்று அவனின் பிடியை உதறியவள்,
“என் முன்னாடி வந்து நிக்க உனக்கு வெட்கமா இல்லையா? உன்னை பார்க்கவே வெறுப்பா வருது. அருவருப்பா இருக்கு” என்றாள். அதுநாள் வரை அடக்கி வைக்கப்பட்ட அவளின் கோபம் யாவும் அக்கணம் வெளி வந்திருந்தது.
“நீதான் வேணும்னு வந்திருக்கேன் அன்வி…” என்றவனை புழுவைப் பார்ப்பதைபோல் பார்த்து வைத்தாள். முகத்தில் ஒவ்வாமை பாவனை.
“எனக்கு… எனக்கு தீக்ஷா செட் ஆகமாட்டாள் அன்வி. கௌதமுக்கு அன்வி தான் பொருத்தம். எனக்கு புரிஞ்சிடுச்சு” என்றவனின் பேச்சு காதிலே விழாதவாறு வழியை மறித்து கையை நீட்டியிருந்தவனிடம்,
“வழியை விடு” என சீறினாள்.
“என்னை நீ இன்னும் லவ் பண்றேன்னு எனக்குத் தெரியும்” என்றான்.
“குட் ஜோக்” என்றவள், “வழியை விடு” என்றாள்.
“என்னை மறக்கத்தான உன் ஃப்ரெண்ட்டையே மேரேஜ் பண்ணிக்க முடிவு பண்ணிட்ட?” என்ற கௌதம், “நான் நீதான் வேணும்னு திரும்பி வந்துட்டேன் அன்வி. முன்ன மாதிரியே நாம லவ் பண்ணுவோம். கல்யாணம் பண்ணிப்போம். எதுக்காக யாருக்காக அந்த ஆர்விக்கை கல்யாணம் பண்ண ஓகே சொன்னியோ அதெல்லாம் வேண்டாம். அவன் என்னை ஆள் வைச்சு அடிச்சிப்போட்டான் தெரியுமா? அவன் ரவுடி… அவன் வேணாம்” என்றான்.
“பேசி முடிச்சிட்டியா?” என்ற அன்வி “தள்ளு” என அவனின் நீண்டிருந்த கையை கவனமாக தீண்டிடாது விலகினாள்.
“அன்வி… அன்வி… கோபப்படாமா கேளு… உன்னோட லவ் இல்லாம இருக்கவே…” என கௌதம் முடிக்கும் முன்பு, அங்கிருந்து நகர்ந்து அடி வைத்தவள் கரத்தை மீண்டும் அவன் பற்றி இழுத்தான்.
அன்விதா கௌதமின் மார்பில் மோதிட இருந்த நூலிழை நொடியில், எதிர்ப்பக்கம் யாரோ சுண்டி இழுக்க, பிடி தீண்டிய ஸ்பரிசத்தில் யாரெனக் கண்டு கொண்டவள்,
“ஆர்வி” என சுற்றி சுழன்றவளாக அவனில் தஞ்சம் கொண்டிருந்தாள்.
அன்விதாவின் கரத்தை மற்றொரு பக்கம் பிடித்திருந்த கௌதம் தடுமாறி தரை விழுந்திருந்தான்.
யாருக்கும் தெரியாது வர முயன்ற ஆர்விக்கால் முடியாதுபோகவே, அனிதாவிடம் சொல்லிவிட்டு வர தாமதமாகியிருந்தது.
“டேய்…” என்று கத்திக்கொண்டே எழுந்த கௌதம், “உன் ஊர்ல வைச்சு என்னை அடிச்ச மாதிரி இங்க அடிச்சிடலாம் நினைக்காத. இது என் ஊரு. மேல கை வைச்ச?” என விரல் நீட்டிட…
“கை வைச்சா?” என்று இழுத்து கேள்வியாக நிறுத்திய ஆர்விக், “வைச்சா என்னடா பண்ணுவ?” என்று சட்டையின் கைகளை மடக்கியவனாக அவனை நெருங்கினான்.
“இந்த முறை கண்டிப்பா போலீஸ் போவேன்” என பயத்தில் திணறலாக பதில் சொல்லியவனாக பின்னால் நகர்ந்தான்.
“அதான் பயமிருக்குல? அப்புறம் எதுக்கு டயலாக்லாம் பேசுற” என்றான்.
“எனக்கு பயமெல்லாம் இல்லை” என்ற கௌதம் பின்னால் செல்வதை நிறுத்தவில்லை.
“அன்வி என் ல…” என கௌதம் முடிக்குமுன் ஆர்விக்கின் கை இடியென அவன் கன்னம் இறங்கியது.
“அவள் என் பொண்டாட்டி…” என்ற ஆர்விக், “ஒழுங்கா ஓடிடு” என்றான்.
“அவள் என்னை தான் லவ் பண்றாள்” என்று கௌதம் அப்போதும் அடங்காது கூற, மீண்டும் ஒரு அறை விட்டிருந்தான் ஆர்விக். இம்முறை நிலை தடுமாறி கீழே விழுந்த கௌதமை தாங்கிப் பிடித்திருந்தாள் தீக்ஷா.
தீக்ஷாவை கௌதம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அரண்டு விழித்தான்.
“அம்மாகிட்ட மன்னிப்பு கேட்கணும். அவங்களை பார்க்கணும் போலிருக்குன்னு நீ சொல்லும்போதே எனக்கு டவுட். அதான் நானும் உன் பின்னாடியே, நீ வந்த பஸ்ஸ ஃபாலோ பண்ணிக்கிட்டே வந்தேன்” என்றாள்.
“தீக்ஷா…” என்று எதுவும் சொல்ல முடியாது தடுமாறியவனை நிலையாக நிற்க வைத்தவள்,
“என்கிட்டேர்ந்து உன்னால அவ்ளோ சீக்கிரம் தப்பிக்க முடியாது கௌதம்” என்றாள்.
இருவரின் பேச்சும் அவர்களுக்குள் ஏதோ சரியில்லையென ஆர்விதாவுக்கு உணர்த்தியது.
அடிபட்டு நடக்கவும் முடியாது கோவைக்கு அழைத்துச்சென்ற தீக்ஷா, முதல் ஒரு வாரம் அவனை நன்றாகத்தான் கவனித்துக்கொண்டாள். ஆனால் அவளுக்கு இப்படியெல்லாம் ஒருவரை பார்த்துக்கொள்வது பழக்கமில்லாதது. கூடுதல் சிரமமாக இருக்கவே கௌதமுக்கென கேர்டேக்கரை ஏற்பாடு செய்தாள். அதில் கௌதமுக்கு சுத்தமாக உடன்பாடில்லை. அங்கு ஆரம்பித்தது இருவருக்குமான போர்.
காதலாக எவ்வித பொறுப்புடைமையுமின்றி ஒன்றாக இருந்தபோது மகிழ்வாக நகர்ந்த நாட்கள் யாவும், இனி இருவரும் தான் எனும் கடமையாக மாறியதில் தினம் தினம் ஒரு வாக்குவாதம். அதற்கு சமாதானமென நகரத் துவங்கியது.
இதில் இருவருக்கும் இதுவரை இல்லாத கருத்து வேறுபாடு தொட்டதுக்கும் சண்டையாக மாறியது.
மற்றவர்களை வேலை வாங்கியே பழகிய தீக்ஷாவுக்கு, கௌதமுக்காக அனைத்து வேலைகளையும் செய்வதில் விருப்பமில்லை.
“அதுக்குத்தான் ஆளிருக்கே” என சாதாரணமாக சொல்லிட, “அப்புறம் நீ எதுக்கு?” என கேட்ட கௌதம், அத்தோடு நிறுத்தியிருக்கவில்லை, ஆனால் அவன் அடுத்து அவளை அன்விதாவுடன் ஒவ்வொன்றிற்கும் ஒப்பிட்டு பார்த்துப்பேச, தீக்ஷாவுக்கு அவன் மீது வெறுப்பு வரத் துவங்கியது.
“என்னயிருந்தாலும் நான் உனக்காக என் அன்வியை விட்டிருக்கக்கூடாது. இந்நேரம் அவள் மட்டும் இருந்திருந்தா என்னை எப்படி கவனிச்சுப் பார்த்திருப்பாள் தெரியுமா?” என ஆரம்பித்த கௌதமின் ஒப்பீடல், “அன்வி அப்படி, அன்வி இப்படி” என அனைத்திற்கும் அவளையே முன்னிறுத்தினான்.
என்ன தான் கௌதமுடன் சண்டை, முரண் என இருந்தாலும், தீக்ஷாவுக்கு அவன் மீதான காதல் அப்படியே இருக்க, அவன் தன்னை அன்விதாவுடன் பொருத்தி வைத்து பேசுவதில் கலங்கவே செய்தாள். இருப்பினும் அவன் மீதான காதலுக்காக அவன் பேச்சுக்களைப் பொறுத்துக்கொண்டாள்.
என்ன செய்தாலும் கௌதமின் பேச்சு அன்விதாவோடு இருந்திட, தீக்ஷாவின் பொறுமையும் கரைந்தது.
“அவள் தான் வேணும்னா அவளோடவே போக வேண்டியதுதான. என்கூட நான்தான் வேணும்னு எதுக்கு வந்த?” என்று தீக்ஷா கேட்டிட…
“உன் காதல் எனக்கு சளிச்சிடுச்சு” என சர்வ சாதாரணமாகக் கூறினான்.
தீக்ஷாவுக்கு தலையில் இடி விழுந்த உணர்வு. அவன் மீது அவளுக்கான காதல் சரியோ தவறோ? ஆனால் அவளின் காதல் அவன் மட்டும் தான். ஆதலால் அவனின் வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாதவள்…
“அப்புறம் ஏன் என்கூட இன்னும் இருக்க? போ இங்கிருந்து” என்று வெடித்து கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் அவன் மீதே தூக்கி எறிந்தாள்.
“உன்னோட வாழ்ந்தா என் வாழ்க்கை சண்டையிலேதான் போகும். எனக்கும் இனி உன்கூட வாழ விருப்பமில்லை. நான் என் அன்விகிட்டவே போறேன்” என்றான்.
போ என தீக்ஷா சொல்லியதும் கௌதம் எதுவும் பேசாது சென்றிருந்தால் விட்டிருப்பாளோ என்னவோ?
தன்னுடைய வாழ்வை கேள்விக்குறியாக்கிவிட்டு அவன் மட்டும் சந்தோஷமாக வாழ்வதா என நினைத்த தீக்ஷா,
“அப்படியெல்லாம் உன்னை போகவிடமாட்டேன். என்னை உணர்வுப்பூர்வமா வேதனைப்பட வைச்சிட்டு, நீ மட்டும் சந்தோஷமா வாழுறதா?” என்றவள், “நீ மட்டும் இங்கிருந்து போய் பாரேன்” என்று தெனவட்டாக இருக்கையில் அமர்ந்தாள்.
“என்ன மிரட்டுரியா?”
“ஆமா… அப்படியே வைச்சுக்கோ?” என்றவள், “அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்டில் உட்கார்ந்துகிட்டு நீ எவ்வளவு பிராடு வேலை பார்த்திருக்கன்னு மொத்தத்துக்கும் என்கிட்ட எவிடென்ஸ் இருக்கு. நீ இங்கிருந்து போனால் நேரா ஜெயிலுக்குத்தான் போகணும். இல்லையா இதுவரை நீயெடுத்த பணமெல்லாம் திருப்பிக் கொடுக்கணும். உன்னால முடியுமா? வாழ்க்கை முழுக்க உழைச்சாலும் உன்னால அது முடியாது” என்றதோடு, “உனக்கு ஒரே வழி தான். என்கூடவே இருக்கிறது” என்றாள்.
கௌதம் இடிந்துபோனவனாக நின்றிருக்க…
“இப்போ போய் அன்வியோட வாழேன்” என நக்கலாக சிரித்தாள்.
அடுத்த இரு தினங்களில் பதிவாளர் அலுவலகத்தில் அவனுடன் திருமணம் செய்துகொண்டாள்.
“கல்யாணம் ஆகமா குடும்பம் நடத்தினதாலதான என்னைவிட்டு போகலாம்னு ஈசியா நினைச்ச?” என்றவள், “சாவுற வரை நீ என்னோடதான்” என்றிருந்தாள்.
அடுத்து அவளது ஆட்டம் ஆரம்பமாகியிருந்தது.
“அன்வி உன்னை இப்படி கூப்பிடுவாளா? உனக்காக இதை செய்வாளா? இந்த ட்ரெஸ் அவளுக்குதான் நல்லாயிருக்கும்ல?” என ஒவ்வொன்றையும் அன்விதாவுடன் சேர்த்து கேட்டு கேட்டு, தான் ஏன் அன்விதாவுடன் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தோமென கௌதமே நொந்துகொள்ளும்படி செய்தாள்.
வாழ்வு நரகமென்ற நிலையை பேச்சிலேயே அவனுக்கு வழங்கியிருந்தாள்.
சொல்லி புலம்பவும் ஆளில்லாது தவித்திருந்த நேரத்தில் தான், மகனின் மீதான பாசம் அவன் செய்த தப்பை ஒதுக்கி வைக்கச் செய்திருக்க தென்னரசியே அவனுக்கு அழைத்திருந்தார்.
அவரிடம் சொல்ல முடியவில்லையென்றாலும், அவர் தன்னுடன் பேசுவதே சிறு ஆதரவாக இருக்க அமைதியாக இருந்தான். எல்லாம் அன்விதாவுக்கு நிச்சயமென கேள்விப்படும்வரை தான்.
காதலியாக அவளை விட்டுக்கொடுக்க முடிந்தவனால், அவள் இன்னொருவனுக்கு உரிமையானவளாக மாறயிருப்பதை ஏற்க முடியவில்லை.
கௌதம் ரொம்பவே அமைதியாகிவிட்டதை உணர்ந்த தீக்ஷா, இதற்கு மேலாவது அவனுடன் எல்லாம் பேசி சரி செய்து ஒழுங்காக வாழ வேண்டுமென நினைத்திருக்க…
அவனோ அன்விதாவின் திருமணத்தை ஏற்க முடியாது, தடுத்து நிறுத்த நினைத்தான்.
அன்விதா எப்போதும் தான் அழைத்தாள் வந்துவிடுவாளென அத்தனை நம்பிக்கை அவனுக்கு. அந்த நம்பிக்கையை அவன் மீது அன்விதா கொண்டிருந்த காதலை மொத்தமாக சிதைத்ததே தான்தான் என்பது முற்றிலும் மறந்துவிட்டான் போலும்.
“அம்மாவை பார்க்கணும் போலிருக்கு தீக்ஷா. பார்த்திட்டு வந்துடுறேன்” என்றான்.
“நிஜமா அம்மாவை பார்க்கத்தான் போறியா?” என்ற தீக்ஷா, அவனுடன் நல்ல முறையில் வாழ முடிவெடுத்ததால், வேறெந்த கேள்வியும் கேட்காது சரியென்றாள்.
கௌதம் முகம்கொள்ளா மகிழ்வோடு வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே, ‘செல்பவன் திரும்பி வராதுவிட்டால்? வேறெங்கும் சென்றுவிட்டால்?’ என நினைத்தவள், அவன் பின்னாலேயே தொடர்ந்து இதுவரை வந்திருந்தாள்.
அன்விதாவைப் பார்த்ததும் அவள் பின்னாலே கௌதம் செல்வதில் மொத்தமாக அவளின் மனமே விண்டுபோனது.
கௌதம் அவளை மிரண்டு பார்த்திருக்க…
“உனக்கு ஏமாத்துறது பழக்கமாகிடுச்சில” என்ற தீக்ஷா, “என் நிம்மதியை போக வைச்ச உன்னை நிம்மதியா விடவும் மனசு வரமாட்டேங்குதே… இல்லைன்னா சரிதான் போடான்னு போயிட்டே இருப்பேன்” என்றாள்.
“ஒருத்திக்கு பண்ண துரோகம் போதாதா உனக்கு?” என்ற தீக்ஷா, “நீ பண்ண பிராடு வேலையை ஆபிசில் சொல்லி போலீசில் பிடிச்சுக் கொடுத்தாதான் அடங்குவ” என்றாள்.
“அய்யோ தீக்ஷா அப்படியெல்லாம் பண்ணிடாத” என்று வேகமாக அவளின் கரம் பிடித்த கௌதம், “நான் உன்னைதான், உன்னை மட்டும் தான் லவ் பண்றேன். நிஜமா இங்க அம்மாவை பார்க்கத்தான் வந்தேன். வழியில் அன்வியை பார்த்ததும் எப்படியிருக்கான்னு கேட்கத்தான் வந்தேன்” என உடனடியாக பேச்சில் தனது அபார நடிப்புத்திறனை வெளிப்படுத்தினான்.
“ஆஹான்…”
“நிஜம் தீக்ஷா” என்று அவளின் தலையில் கை வைத்தவன், ஆர்விதா புறம் திரும்பி,
“உங்க ரெண்டு பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள். ஹேப்பி மேரிட் லைஃப்” என்றான்.
தீக்ஷா அவனை, ‘இப்படியும் ஒருவனா?’ என்று பார்க்க…
“என்னை நீ நம்பலையா?” என்றவன், “அம்மாவைகூட பார்க்கவேண்டாம். நாம இப்படியே திரும்பிப்போவோம்” என்றான்.
“சரி…” என்ற தீக்ஷா, “முன்னாடி போ” என்றாள்.
கௌதம் சற்று தூரம் சென்றதும், அன்விதாவிடம் வந்த தீக்ஷா,
“உனக்கு செய்த துரோகம் தான் என்னை துரத்தது. முடிஞ்சா மன்னிச்சிடு” என்றாள்.
“தேங்க்ஸ்” என்ற அன்விதா எதுவும் சொல்லாது ஆர்விக்கின் கை புஜத்தினை கோர்த்து பிடித்தவளாக அவனின் பின்னால் சென்றுவிட்டாள்.
அவளின் நன்றியின் பொருள் விளங்கிட, தீக்ஷாவிடம் உணர்வுகளற்றப் பார்வை.
“என்ன பிரச்சினை தெரியல. முடிஞ்சா சரி பண்ணலாம்” என்ற ஆர்விக், “இல்லை… இது ஒத்துவராது அப்படின்னா பிரியிறதே நல்லது” என்றான்.
“செய்த பாவத்துக்கு தண்டனை வேணாமா?” என்று சிரித்த தீக்ஷாவிடம் அப்படியொரு வலி.
காதலின் வலி ஆர்விக் உணராததா?
“நீங்க நினைச்சா கண்டிப்பா உங்க லைஃபை ஹேப்பியா மாத்தலாம்” என்ற ஆர்விக், “கௌதமுக்கு கவுன்சிலிங் தேவைப்படுது நினைக்கிறேன்” என்றான்.
“ஹ்ம்ம்… தேங்க்ஸ் ஃபோர் யூர் கன்சர்ன்” என்றவள், “ஹேப்பி மேரிட் லைஃப்” என திரும்பியும் பாராது, தள்ளி நின்றிருந்த கௌதமையும் கூட்டிக்கொண்டு சென்றிருந்தாள்.
ஆர்விக்கும், அன்விதாவும் இங்கு தங்கள் மனதை காதலாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்க, தென்னரசி சக்தியின் வீட்டில் சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
63
+1
1
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆர்விக் அன்வி கியூட்