Loading

காலை கனவு 38

‘மறக்கவே முடியாத ஒரு முகம்,
மறைக்கப்பட்டது என்னவோ என்னுள்!’

– ஆர்விக்

தொடர்ந்து அன்விதாவிடமிருந்து அழைப்பு வந்துகொண்டே இருக்க, அதனை ஏற்க முடியாது திருமண வேலையாக ஓடிக்கொண்டிருந்தான் ஆர்விக்.

“அன்வி தான்டா” என்று அங்கு இருக்கையின் மீதிருந்த ஆர்விக்கின் அலைபேசி சத்தத்தில் யாரெனப் பார்த்த தான்யா கூறினாள்.

“ஹ்ம்ம்… அப்புறம் பேசிக்கிறேன்” என்றான் ஆர்விக். கையில் பப்ளிமாஸ் பழங்களை வைத்து என்னவோ செய்து கொண்டிருந்தான்.

“நீ அன்னைக்கு சொன்னது உண்மைதான ஆர்வி?” தான்யா கேட்க, செய்து கொண்டிருப்பதை நிறுத்தியவனாக அவளை ஏறிட்டான்.

“இல்லை… அவளைவிட்டு தள்ளியே நிக்கிறியே! அதான் கேட்டேன்” என்றாள்.

“அவள் என்னோட இல்லைங்கிற எண்ணம் தான் எனக்கு அவள் மேலிருந்த காதலை உணர வைச்சது தானு. இப்போ நான் தள்ளி நிற்கிறது அவளுக்கும் என்மேல அப்படியொரு ஃபீல் உருவாக்கலாம்ல” என்றான்.

“உனக்கு அப்படி ஆச்சுன்னா, அவளுக்கும் அப்படி ஆகும் சொல்ல முடியாதே ஆர்வி” என தான்யா சொல்ல,

“புரியுது… ஆனாலும் அவளுக்கு என்மேல லவ் வந்திடாதான்னு ஏக்கமா இருக்கு தானு. நானா வரவைக்கிறதை விட, அவளுக்கா லவ் வர்றதுதான என்னோட இத்தனை வருஷ லவ்வுக்கு மதிப்பா இருக்கும். அவள் எனக்கு வேணுங்கிறதுக்காக, என் லவ்வுக்கான மதிப்பை நான் குறைச்சிடக்கூடாதே!” என்றான்.

தான்யா எதுவும் சொல்லாது அவனையே பார்த்திருக்க…

“அஃப்கோர்ஸ்… அவள் தான் என்னோட லவ். ஆனாலும் அவகிட்டேவும் என் லவ்வை விட்டுக்கொடுக்க முடியாது” என்றான்.

“அன்விக்கு நிச்சயம் உன்னை பிடிக்கும் ஆர்வி.”

மெல்ல இதழ் விரித்த ஆர்விக்,

“இப்பவும் அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அந்த பிடித்தம் காதல்ங்கிற எல்லைக்குள்ள வருமா?” என்றான்.

“இதுக்கு நான் என்னடா பதில் சொல்ல?” என்ற தான்யா, “வந்தா நல்லாயிருக்கும்னு நினைக்காத நொடியில்ல” என்றாள்.

வழமையானப் புன்னகை ஆர்விக்கிடம்.

“இப்படி சிரிக்காதடா! உன்னோட வலிதான் தெரியுது அதுல” என்ற தான்யா, “இவ்ளோ பழத்தையும் பார்க்கும்போது சாப்பிடத்தாண்டா தோணுது” என ப்ளூ பெர்ரியை கை நிறைய அள்ளி அருகிலிருந்த பூபேஷின் வாயில் திணித்தாள்.

திருமணம் பழனி கோவிலில் என்றாலும், மாலை வரவேற்பு சக்தியின் தோட்டத்தில் நடைபெற இருந்தது.

வரவேற்பிற்கான மேடை, அலங்காரம் என அனைத்தும் நண்பர்கள் குழு ஏற்பாடு தான்.

அலங்காரத்திற்கான ஒவ்வொரு வடிவமைப்பும் ஆர்விக்கின் யோசனை தான்.

இப்போதும் சக்தியின் பெர்ரி தோட்டத்தில் தான் ஆர்விக் தனது நண்பர்களுடன் நின்றிருக்கின்றான்.

இன்னும் இரண்டு மணிநேரத்தில், முன்னதிகாலை நான்கு மணியளவில் அனைவரும் பழனி புறப்பட உள்ளனர். அதற்குள் பாதி அலங்காரத்தையாவது முடித்திட வேண்டுமென இருளில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

“இவ்வளவும் வேஸ்ட் ஆகிடாதாடா?” அங்கு அலங்காரத்திற்காக தயாராகிக் கொண்டிருப்பவற்றைப் பார்த்து யாஷ் வினவினான்.

“அதெல்லாம் ஆகாதுடா…” என்று தான்யா சொல்ல…

“எஸ்… ஆகாது. எல்லாமே லீஃப் ஸ்டிக்கிங் தான். சோ, டெக்கரேஷன் ரிமூவ் பண்ணதும் யூஸ் பண்ணலாம். எந்தவொரு டெமேஜூம் இருக்காது” என்றான் ஆர்விக்.

“உனக்கு ஏன் இதை வைச்சு செய்யணும் தோணுச்சு?” பூபேஷ் கேட்டிட,

நிதாஞ்சனி அவளுக்கு காதல் வந்த நிகழ்வை சொல்லியது நினைவு வந்து ஆர்விக்கிடம் குறுநகை எட்டிப்பார்த்தது.

“உன் சிரிப்பைப் பார்த்தால் எதோ இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும் போலயே” என்றான் யாஷ்.

“ஆமா… பட் இது நிதா, திரு பெர்சனல். சோ இந்தப் பேச்சை இதோட நிறுத்திட்டு, வேலையை பாருங்க. பாதியாவது முடிச்சா தான் நாளைக்கு கோவிலில் வெட்டிங் முடிஞ்சு வந்து கம்ப்ளீட் பண்ண சரியா இருக்கும்” என்றான்.

“எனக்கு நேம் போர்ட் டிசைன் ரொம்ப பிடிச்சிருக்குடா ஆர்வி. ஸ்கிரீன்ல நீ பண்ணியிருக்கிறதை நேர்ல பார்க்க எக்சைட்டா இருக்கு” என்றாள் தான்யா.

“அடுத்தவங்க காதலுக்கு ஓடி ஓடி செய்தா உன் காதல் தானா நிறைவேறும்னு யாரும் சொன்னாங்களா மச்சான்” என்று கேட்ட யாஷ், ஆர்விக் பார்த்தப் பார்வையில் வாயினை இறுக மூடியிருந்தான்.

“தேவையில்லாம நிறைய பேசுற நீ! கொஞ்சம் அடக்கி வாசி” என்ற ஆர்விக், தூரத்தில் வெண்மதி வரவும், “உன் ஆளுடா” என்றான்.

“எதே என் ஆளா?” என்று திரும்பிப் பார்த்த யாஷ், “கௌதம் சிஸ்டர்டா. அவங்களை போய் என் ஆளுன்னு… என்னை கோர்த்துவிட உனக்கு வேற குடும்பமே கிடைக்கலையா?” என்றான்.

“ஏன்? அவளுக்கென்ன? நாலு நாளா கூட இருந்து பாக்குற… அவள் எப்படின்னு உன்னால ஜட்ஜ் பண்ண முடியலையா?” என்றான் ஆர்விக்.

“நாலு நாள் பாக்குறதும், நாப்பது வருஷம் வாழுறதும் ஒண்ணாடா?” என்ற யாஷ், “அன்வி விஷயத்தில் அவளோட குடும்பம் எப்படின்னு தெரிஞ்சும் என்னை ஏன்டா அங்க லிங்க் பண்ற?” என்றான்.

“இது என்னோட லிங்க் இல்லை மச்சான். ஹார்ட் டூ ஹார்ட் லிங்க்” என்ற ஆர்விக், “இப்போ அவள் வரதே உன்கிட்ட லவ் சொல்லத்தான்” என்றான்.

“என்னடா சொல்ற?”

“ஒயிட் மூன்?” ஆர்விக் கூற, யாஷ் புருவம் நெறித்தான்.

“புரியல” என்றான் யாஷ்.

“அவளோட நேம் தெரியுமா?”

“ஹ்ம்ம்… மதி!”

“வெண்மதி” என்ற ஆர்விக், “புரிஞ்சிடுச்சா?” எனக் கேட்டான்.

“யூ மீன்?”

“எஸ்… ஷீ இஸ்” என்று கண்கள் சிமிட்டிய ஆர்விக், “இங்க வந்ததும் நேம் தெரிஞ்சு நீயே கண்டுபிடிச்சிடுவ நினைச்சேன்” என்றான்.

“ஃபுல் நேம் இப்போ நீ சொல்லித்தான் தெரியும்.”

“ஹோ… அந்த பேர்ல வந்ததே உன்னை ஃபாலோ பண்ணத்தாண்டா” என்ற ஆர்விக், “நான் முன்ன வந்தப்போவே அவகிட்ட பேசிட்டேன்” என்றான்.

“என்ன பேசின?” என்ற யாஷின் முகத்தில் சின்னதாய் ஓர் ஆர்வம்.

“உனக்கு அவளை பிடிச்சிருக்குல?” ஆர்விக் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

“அது…” என யாஷ் தயங்கிட,

“நேத்து நலங்குல சக்தி அண்ணாவோட அவள் நின்னுட்டு இருக்கும்போது நீ அவளை சைட் அடிச்சதை நாங்களும் பார்த்தோம்” என்றான் பூபேஷ்.

“இதெல்லாம் நல்லா நோட் பண்ணு” என்று அவனின் வயிற்றில் குத்திய யாஷ், “அப்படியில்லடா” என்றான்.

“எப்படியில்லை” என்ற ஆர்விக், “என்கிட்ட மறைக்க நினைக்கிறியாடா?” என்றான்.

“ஆர்வி…”

“அவள் உன்னை ரெண்டு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்காள். இதுக்குமேல அவள் தான் சொல்லணும்” என ஆர்விக் அங்கிருந்து நகர்ந்தான்.

வெண்மதியும் அருகில் வந்திருந்தாள்.

“டேய் என்னைவிட்டு எங்கடாப்போற?” என்று யாஷ் கேட்க,

“அதெல்லாம் உனக்கும் அவளை பிடிக்கும் தெரியும். சும்மா சீன் போடாதடா” என்று சென்றுவிட்ட ஆர்விக்கைத் தொடர்ந்து,

“மொக்கு பாப்பா. பெர்ரி பறிக்க வந்த நரி தூக்கிட்டுப் போகப்போகுது உன்னை” என்ற தான்யா, “ஆர்வி அமைதியா போறான் அப்படின்னா… அவள் உனக்கு செட்டாவாள் நினைக்கிறான். உனக்கு பிடிச்சா ஓகே சொல்லு” என்றாள்

“ஆமாடா… எவ்ளோ நாள் சிங்கிளா இருப்ப நீயும்? ஆர்வியும் அன்விகிட்ட லவ் சொல்றேன் சொல்லிட்டான். சோ, நீயும் கமிட் ஆகிடு” என்ற பூபேஷை வெண்மதியை பார்த்துக்கொண்டே இழுத்துச் சென்றாள் தான்யா.

“ஹாய்…”

தன்னுடைய நண்பர்கள் சென்ற திசையை பார்த்தவாறு நின்றிருந்த யாஷ், வெண்மதியின் குரலில் திரும்பி…

“ஹா… ஹாய்ங்க” என்றான்.

இங்கு வந்த அன்று சக்தியின் வீட்டில் தான் யாஷ் தங்கியிருந்தான். சக்தியின் திருமணம் என்பதால் தென்னரசி, ரகுபதியின் அங்கு செல்ல வேண்டாமென்ற பேச்செல்லாம் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக சக்தியின் வீட்டில் தான் தங்கிக் கொண்டிருக்கிறாள்.

அங்கு தங்குவதற்கு சக்தியின் திருமணம் என்பதைக்காட்டிலும் அவளுக்கு மற்றொரு காரணமும் இருந்தது. யாஷின் வருகை.

இதுவரை புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருந்தவனை, நேரில் பார்ப்பதற்கும் அவனுடனே இருப்பதற்கும் கிடைத்திட்ட வாய்ப்பை இழக்க நினைக்காது அங்கேயே இருந்துவிட்டாள்.

அத்தோடு ஆர்விக் வெண்மதியை சந்தித்து பேசியிருந்தான்.

திருமண வேலையில் சுகவனத்திற்கு உதவுவதற்காக வந்திருந்தபோது சக்தியின் வீட்டுக்கு ஆர்விக் வந்தபோது, வெண்மதி அங்கிருந்து தன்னுடைய வீட்டிற்குச்செல்ல வெளியில் வந்திருந்தாள்.

ஆர்விக் வந்த முதல்நாளே…

“நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்களா? உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் வரலையா?” என அவனிடம் கேட்டிருந்தாள்.

ஆர்விக் ஏன் எனும் விதமாகப் பார்க்க…

“அஞ்சு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருப்பீங்களே! அதான் நீங்க மட்டும் வந்திருக்கீங்களேன்னு” கேட்டேன் என்ற அவளின் சமாளிப்பை ஆர்விக் எளிதாக கண்டுகொண்டிருந்தான்.

முதலில் அவளே பேசியிருக்க இப்போது எவ்வித தயக்கமுமின்றி ஆர்விக் அவளைப்பார்த்து புன்னகைத்திருந்தான்.

பதிலுக்கு புன்னகைத்த வெண்மதி,

“உங்க ஃப்ரெண்ட்ஸ்லாம் எப்போ வர்றாங்க?” எனக் கேட்டாள்.

“யாஷ் எப்போ வர்றான் தெரிஞ்சிக்கணுமா?” ஆர்விக் நேரடியாகக் கேட்டதில் சட்டென்று பதற்றம் கொண்டாள்.

“அது… வந்து…”

“ஹேய்… ரிலாக்ஸ்” என்ற ஆர்விக், “என்ன லவ்வா?” என்றான்.

வெண்மதி பதில் சொல்லாது தலை கவிழவுமே ஆர்விக்கிடம் இளமுறுவல் தோன்றி மறைந்தது.

“அவனைப்பற்றி எல்லாம் தெரியுமா?” என்ற ஆர்விக், “ஜெஸ்ட் க்ரஷ் தான?” என்றான்.

விலுக்கென நிமிர்ந்தவள்,

“அவங்களை பிடிக்கும். நீங்க சொல்ற மாதிரியில்லை. மேரேஜ் பண்ணிக்கணும். இன்னைக்கு நேத்து வந்த எண்ணமில்லை. ரெண்டு வருஷமா அவங்களை மனசுல நினைச்சிட்டு இருக்கேன்” என்றாள். மென் கண்ணீரோடு.

“அப்போ அவன்கிட்ட சொல்ல வேண்டியதுதான?”

“சொல்லியிருக்கலாம். ஆனால் எனக்கு நேர்ல சொல்லணும். அவங்க பதில் என்னவா இருந்தாலும், நேர்ல உள்வாங்கினாதான் என்னால அதை ஏற்க முடியும். அடுத்து என்னன்னு யோசிக்க முடியும்” என்றாள்.

அவளின் தெளிவு அவனை வியக்க வைத்தது. உள்ளுக்குள் மெச்சிக்கொண்டான்.

“அவனும் நீ யாரா இருப்பன்னு தேடிட்டுதான் இருக்கான்” என்ற ஆர்விக், யாஷின் குடும்ப சூழலை அவனுக்கென சொந்த உறவுகள் யாருமில்லை என அனைத்தும் கூறினான்.

தன்னவனுக்கு தாய் தந்தை இல்லை என்பது அவளின் மனதை கனக்க வைத்தது. நெஞ்சம் துடித்திட அவனின் வேதனையை தனதாய் உணர்ந்தாள்.

“நீ ஃபீல் பண்ணனும்னு இதையெல்லாம் சொல்லல” என்ற ஆர்விக், “அவன் எங்களை அவனோட குடும்பமா நினைச்சாலும், அவனுக்குன்னு வரப்போற பொண்ணு தான் அவனோட முதல் சொந்தமா இருக்கும். அந்த சொந்தம் நீங்கிறப்போ எனக்கு சந்தோஷம் தான். அன்வி உன்னைப்பற்றி சொல்லியிருக்காள். ஆனால் எனக்கு உன்னோட பேரண்ட்…” என்று நிறுத்தினான்.

“புரியுது.” சத்தமின்றி அவள் கூறிட,

“அவங்க உன்னோட லவ்வுக்கு சம்மதிப்பாங்களா? நீ லவ் சொல்லி யாஷும் உன்னை விரும்புறான் வைச்சிப்போம். பின்னாடி உன்னோட அப்பா, அம்மா ஒத்துக்கலன்னா ரொம்ப கஷ்டமாகிடும். அது அவனுக்கு வலியாகிடும். அவன் சோர்ந்து உட்கார்ந்துகூட நான் பார்த்ததில்லை. அவனை வலி சுமக்க வைச்சிடாத” என்றான்.

“அவனுக்காக உன்னால கடைசிவரை எந்தவொரு சிட்டுவேஷனிலும் ஸ்டேண்ட் பண்ண முடியும் அப்படின்னா மட்டும் அவன்கிட்ட லவ் சொல்லு” என்றிருந்தான்.

அதற்கு பின்னர் ரொம்பவே அமைதியாக இருந்த வெண்மதி இயல்புக்கு மீண்டிருந்தது யாஷ் இங்கு வந்த பின்னர் தான்.

அவளை கவனித்திருந்த ஆர்விக்,

“எல்லாத்தையும் சமாளிக்க முடியுங்கிற தைரியம் வந்திருச்சிபோல” என்று அவளை பார்த்த கணம் கேட்டிருந்தான்.

“எனக்கு உங்களை புரியுது. அவருக்காக நீங்க மட்டுமில்ல… நானும் என்னவும் செய்வேன்” என்றாள் வெண்மதி.

“குட்” என்று சிரித்த ஆர்விக், “அவனும் உன்னை பார்த்ததும் விழுந்துட்டான் நினைக்கிறேன்” என்றான்.

“ஃபீல் பண்ண முடிஞ்சுது” என்ற வெண்மதி, “சொல்லிடலாம் தோணுது” என்றாள்.

“ஆல் தி பெஸ்ட்” என்ற ஆர்விக் உண்மையில் சூழலை விவரித்து வெண்மதியை யாஷிடம் காதலை சொல்ல வைப்பதற்காக அவளறியாது தயார் செய்திருந்தான். அதன் பலனாய் இந்த நொடி வெண்மதி யாஷின் முன்னால் நின்றிருக்கின்றாள்.

வெண்மதி தைரியமாக வந்துவிட்டாலும், யாஷின் முகம் பார்த்து காதலை சொல்லிட முடியாது தடுமாறினாள்.

அவளது பதற்ற முகம் அவனுள் இனிமையை சேர்பித்தத்து.

இன்னும் சிறிது நேரத்தில் திருமணத்திற்கு செல்லவிருப்பதால் அதற்கு தோதாக மெலிதான அலங்காரத்தில் கிளம்பி நின்றவளை பார்க்க பார்க்க அவனுள் ரசனையின் ஆர்ப்பரிப்பு.

நிமிடங்கள் நீடிக்க…

“ஐ லவ் யூ!” யாஷ் சொல்லியிருந்தான்.

“ஹான்…” தான் சொல்ல வந்ததை அவன் சொல்லிக்கேட்டிட அவளிடம் அதிர்வு.

விழிகள் விரித்து அவனை ஏறிட்டாள்.

“உனக்கு ஓகேதான?” யாஷ் கேட்க, வெண்மதி ஆமென தலையசைத்தாள்.

“எனக்கு உன்னை பார்த்ததும் பிடிச்சது. நீயும் என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சுது. சோ, உன்னை மாதிரி எனக்கு தயக்கமெல்லாம் இல்லை. அதான் சொல்லிட்டேன்” என்ற யாஷ், “ஆர்வி உன்கிட்ட பேசிட்டதா சொன்னான். என்ன பேசினான் தெரியாது. ஆனால் எனக்காக என்ன பேசணுமோ எல்லாம் பேசியிருப்பான் தெரியும். இதான் நான். இப்பவும் ஒண்ணுமில்லை… நீ இன்னும் நல்லா யோசிச்சுக்கூட சொல்லலாம்” என்றான்.

“இல்லை வேண்டாம்.”

“என்னது? நானா?”

“அய்யோ அதில்லை” என்ற வெண்மதி, “யோசிக்க வேண்டாம். நானும் லவ் யூ” என்றாள்.

“அடுத்த ஜோடியும் சேர்ந்தாச்சு.” தள்ளிச் சென்றாலும் இருவரின் மீதும் கண் வைத்திருந்த பூபேஷ் கத்தியவாறு யாஷின் அருகில் ஓடிவர, பின்னோடு வந்த தான்யா அவனின் வாயினை வேகமாக கரம் கொண்டு மூடியிருந்தாள்.

பூபேஷின் சத்தத்தில் யாஷ் மற்றும் வெண்மதியிடம் நாணம் குடிகொண்டது. இருவரிடமும் பேசிக்கொள்ள பல விஷயங்கள் இருந்தன. இருப்பினும் மனதின் விருப்பம் சுமந்த அன்பினால் ஒருவரையொருவர் இயல்பாய் ஏற்றிருந்தனர்.

“என்னடா இவன் புதுசா வெட்கமெல்லாம்படுறான்” என்று தான்யா, யாஷ் தங்களை பார்ப்பதை தவிர்ப்பதை கூறிட,

“டேய் போதும்டா” என்று அருகில் வந்த ஆர்விக், யாஷை அணைத்து விடுத்தான்.

யாஷ் ஆர்விக்கின் முகம் பார்க்கவே திணற, ஆர்விக் சத்தமிட்டு சிரித்தான்.

“உன்னை அடக்கவும் ஆள் வந்தாச்சு மச்சான்” என்றான்.

“அடேய்…” என்று யாஷ் நண்பனின் தோள் மீது சாய்ந்து தன் வெட்கமுகம் மறைத்தான்.

அந்நேரம் நிதாஞ்சனியிடமிருந்து அழைப்புவர,

“செட் பண்ணவரை போதும். எல்லாம் அவுட் டெக்கரேட் தான. நாளைக்குப் பார்த்துப்போம். எல்லாம் எடுத்து வைச்சிட்டு வாங்க” என்று ஆர்விக் வீட்டிற்குச் சென்றான்.

ஆர்விக் வீட்டிற்குள் நுழைந்ததும் நிதாஞ்சனி அவனின் கை பிடித்து அறைக்குள் இழுத்துச் சென்றாள்.

“ஹேய் நிதா என்ன அவசரம்?” என்று அவளின் இழுப்பிற்குச் சென்றவன், “மாம்ஸ்கிட்ட பேசணுமா?” என்று தன்னுடைய அலைபேசியை எடுத்து அவளிடம் நீட்டியவாறு, “அன்பிளாக் பண்ற ஐடியாவே இல்லையா?” என்றான்.

“அதில்லைடா” என்றவள், “நான் எப்படியிருக்கேன்?” என அவன் முன் தள்ளி நின்று தன்னை காண்பித்தாள்.

“வாவ் நிதா…” என்ற ஆர்விக், “ஆர்வியோட அக்கா வெட்டிங் லுக்கில் செமயா இருக்காங்களே!” என்றான்.

“ஓகேவா?”

“பெர்பெக்ட்” என்ற ஆர்வி, “வா செல்ஃபி எடுப்போம்” என அவளின் தோளில் கையிட்டு சுயமி எடுத்திட,

“அன்வி தான் கொஞ்ச முன்ன வந்து முகூர்த்தப் புடவை கொடுத்திட்டுப் போனாள்” என்றாள் நிதாஞ்சனி.

“ஏன் இப்போவே” என்ற ஆர்விக், “கோவில் போய் வியர் பண்ண முடியாதுன்னா?” என்றான்.

“ம்ம்” என்ற நிதாஞ்சனி, “இது நாம செலக்ட் பண்ணதில்லைடா” என்றாள்.

ஆர்விக்கும் அப்போதுதான் அவளின் புடவையை கவனித்தவனாக,

“மாம்ஸ் சீக்ரெட் செலக்ஷனா…” எனக் கேட்டு அவளை சிவக்க வைத்திருந்தான்.

“பேசினதெல்லாம் போதும். வேன் புறப்படப்போகுது. யாஷ், பூபேஷ், தான்யா எங்க ஆர்வி” என்று வந்தார் அனிதா.

அவரின் பின்னே வந்த கார்த்திகா மகளின் தோற்றத்தில் நெகிழ்ந்தவராக அவளின் கன்னம் வழித்து இதழில் ஒற்றிக்கொண்டார்.

“இந்தா ஆர்வி” என்று ஆர்வியின் கையில் சிறு பெட்டி ஒன்று கொடுத்த கார்த்திகா, “இதுல மாப்பிள்ளைக்கு போடுற மச்சான் மோதிரம் இருக்கு. வீட்டுக்கு போய் இதை போட்டு நீதான் கோவிலுக்கு கூட்டிட்டு வரணும்” என்றார்.

“சரிம்மா” என்று ஆர்விக் சொல்ல…

“இப்போவே அங்க போடா! கிளம்பனுமே” என்று பரபரத்தார்.

“அப்போ நான் நிதாகூட இருக்க வேண்டாமா?” என்று ஆர்விக் கேட்க,

“உன் அக்காவை யாரும் தூக்கிட்டுப்போக போறதில்லை. போடா” என்றார் அனிதா.

“ஆர்வி போயாச்சா?” என்று சுகவனம் வர,

“இதோ போயிட்டேன்” என்று ஆர்விக் வெளியில்வர, மாப்பிள்ளை அழைப்பிற்காக நின்றிருந்த சில சொந்தங்களுடன் சக்தியின் இல்லம் சென்றான் ஆர்விக். வழியில் தோட்டத்திலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த நண்பர்களில் யாஷும், வெண்மதியும் ஆர்வியுடன் இணைந்துகொண்டனர்.

சக்தியின் வீட்டில் அனைத்தும் தயாராக, இவர்கள் சென்றதும் நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் ஆரம்பமாக, ஆர்விக் கூட்டத்தில் நழுவி பிறர் அறியாது சக்தியின் கையில் தன்னுடைய அலைபேசியை கொடுத்தான்.

ஆர்விக், நிதாஞ்சனி எடுத்துக்கொண்ட சுயமியில் தன்னவளை பார்த்த சக்தி இருக்கும் சூழல் அறிந்து தன்னுடைய இதயத்தின் அதிர்வை முகத்தில் காட்டாதிருக்க உதட்டை மடக்கி விடுத்தான்.

“வெட்கமா மாம்ஸ்” என்று ஆர்விக் சக்தியின் காதில் கிசுகிசுக்க, அதுவரை கட்டுப்படுத்திய உணர்வுகளை மொத்தமாக சிரிப்பில் வெளியேற்றினான் சக்தி.

சக்தியின் புன்னகை ஆர்விக்கின் முகத்தில் தொக்கி நின்றது.

ஆர்விக்கின் முகம் முழுக்க சிரிப்பின் சாயல் விரவியிருக்க… அவனையே பார்த்திருந்த அன்விதாவுக்கு இதயத்தில் மென் அதிர்வை சுமந்த நுண்ணுணர்வுகள் அவன் பக்கமாக சாயும் மாயம். அவனது சிரிப்பில் தன்னுடைய ஜீவன் தொலைக்க ஆவல் கொண்டாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 70

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
64
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்