Loading

காலை கனவு 12

அன்று காலையே தென்னரசியும், ரகுபதியும் கதிர்வேலன் வீட்டிற்கு வந்திருந்தனர்.

“வாங்க” என்று வரவேற்ற தெய்வானை, “அவங்க சக்திக்கு கருப்பட்டி காபி கொண்டு போயிருக்காங்க. நைட்டு முழுக்க லோடு ஏத்த குளிர்ல நின்னது ஆவல போலிருக்கு. செத்த முன்னுக்க எதுக்கோ அவங்களுக்கு போன் போட்டான். குரல் சரியில்லைன்னு அவங்களே மல்லியை வறுத்து கருப்பட்டி சேர்த்து போட்டு எடுத்திட்டு போயிருக்காங்க” என்றார்.

இருவரும் இத்தனை காலையிலே வந்திருக்க நிச்சயம் எதுவும் வெடிகுண்டாகத்தான் இருக்குமென நினைத்த தெய்வானை, தன்னிடம் தனித்து எதுவும் கூறி மண்டையை சரியென ஆட்ட வைத்துவிடுவார்களோ என அஞ்சியே பேச்சை வேறு பக்கம் நீட்டினார்.

தென்னரசி பேசிட முயல…

“இரு தென்னரசி, அவங்களுக்கு உளுந்துக்கஞ்சி காய்ச்சினேன். உனக்கு ரொம்ப பிடிக்குமே! கொண்டு வரேன்” என வேகமாக அடுக்களைக்குள் சென்ற தெய்வானை, கதிர்வேலனுக்கு அழைத்தார்.

எடுத்தது சக்தி.

“சொல்லுங்கம்மா!”

‘ஆத்தி… அவங்க போனு தம்பிக்கிட்ட..’ என்று தெய்வானை விழித்து நிற்க…

“தேங்காய் பால் சேர்த்தீங்களா அண்ணி” என்று தெய்வானையின் பின்னால் வந்து நின்றார் தென்னரசி.

“ஆங்… இப்போதான் ஊத்தினேன்” என்ற தெய்வானை, “சக்தி போன் பண்ணான். அதான்” என்று தன்னுடைய காதில் வைத்திருந்த அலைபேசியை கீழிறக்கினார்.

தெய்வானை காரணம் சொல்லாமலே அலைபேசியில் கேட்ட பேச்சுக்குரலில் அவர் கூப்பிட்டதற்கான காரணத்தை கண்டுகொண்டான் சக்தி.

“இந்த முறை உருளைக்கிழங்கு கூடுதல் விளைச்சலாகும் சக்தி” என மண் வரப்பின் மீது வயலை சுற்றி நடந்து வந்த கதிர்வேலன் கூற, சக்தி வெண்மதிக்கு அழைத்தான்.

“ஹாய் மாமா!”

“காலேஜ் கிளம்பிட்டியாடா?”

“ம்ம்… சாப்பிட்டுட்டு இருக்கேன் மாமா. போகணும்” என்றவள், “நீங்க எங்கயிருக்கீங்க? லேட் ஆகிடுச்சு, காலேஜ் பஸ் வந்திடும். மேட்டுக்கு கீழ ஸ்டாப் வரை ட்ராப் பண்ண முடியுமா?” எனக் கேட்டாள்.

“மாமா இல்லையா?”

“அப்போ நீங்க வீட்ல இல்லையா?அப்பாவும், அம்மாவும் அங்க நம்ம வீட்டுக்குத்தான் போயிருக்காங்க. நிச்சயத்துக்கு நாள் குறிச்சிருக்காங்க” என்று சக்தி கேட்காமலே அவனுக்கு வேண்டிய தகவல்களை சொல்லியிருந்தாள்.

“ஹ்ம்ம்… நான் வரேன். நீ வெளிய வந்து நில்லு” என்று அழைப்பினை வைத்திட்ட சக்தி,

“எதுக்கு இவ்வளவு அவசரம் தெரியலைப்பா! அத்தையும், மாமாவும் நிச்சயித்துக்கு நாள் பார்த்திட்டு, வீட்டுக்கு வந்திருக்காங்க. நீங்க போங்க. நான் பின்னாலே வர்றேன்” என்றான்.

“எனக்கென்னவோ சரியாப்படல சக்தி” என்ற கதிர்வேலன் அங்கிருந்து செல்ல, ரகுபதியின் வீட்டிற்கு வந்த சக்தி, அங்கு தான் சொன்னது போன்றே வாயிலில் நின்றிருந்த வெண்மதியை கூட்டிக்கொண்டு, அவர்களது வீடு இருக்கும் மேட்டுப்பகுதிக்கு கீழ் வெண்மதியின் கல்லூரி பேருந்து வந்து நிற்குமிடத்தில் இறக்கிவிட்டான்.

“தேங்க்ஸ் மாமா” என்ற வெண்மதி, “ஈவ்வினிங் வீட்ல இருப்பீங்களா?” எனக் கேட்டாள்.

ஏன் எனும் விதமாக சக்தி பார்வையை உயர்த்த,

“பேசணும்” என்றாள்.

சக்தி உள்ளுக்குள் யோசனையானான்.

அன்விதாவை வெண்மதியிடம், அவளது வீட்டாரிடம் இருக்கும் விருப்பம் பற்றி கேட்கக் கூறியிருந்தான்.

அன்விதாவும், “கேட்டுட்டேன். என்கிட்ட இன்னும் இதைப்பற்றி எதுவும் பேசல. என்னை நேரடியா கேட்கும்போது பதில் சொல்லிக்கிறேன் சொன்னா. அதுக்குமேல கேட்டு, இல்லாத எண்ணத்தை நாமளே ஏன் வரவைக்கணும் அப்படின்னு அழுத்தமா கேட்கல” என சக்தியிடம் சொல்லியிருந்தாள்.

அது பற்றித்தான் தன்னிடம் பேச நினைக்கின்றாளென சக்தியிடம் ஓர் அனுமானம்.

இருப்பினும்,

“காலேஜ்ல எதுவும் பிரச்சினையா மதி?” எனக் கேட்டான்.

“இல்லை மாமா” என்றவள், “பஸ் வந்திருச்சு. காலேஜ் முடிஞ்சு நேரா அங்க வர்றேன் மாமா” என்றாள்.

“ம்ம்… கவனம்” என்ற சக்தி, வெண்மதி பேருந்தில் ஏறி கிளம்பியதும் வீட்டிற்கு வந்தான்.

வரும் வழியில் சுகவனம் நின்றிருக்க, அவர் சக்தியை பார்த்து புன்னகைக்க, அவரிடம் சிறு முறுவலை காண்பித்து வண்டியை நிறுத்தினான்.

இருவருக்கும் தொழில் விடய பேச்சுவார்த்தையால் நல்ல பழக்கமிருந்தது. அத்தோடு கதிர்வேலனும், சுகவனமும் பால்ய காலம் முதலான நண்பர்கள்.

“உன்னை பார்க்க வீட்டுக்கே வரலாம் இருந்தேன் சக்தி” என்றார்.

“சொல்லுங்க மாமா?” என்றான்.

அவன் வண்டியை விட்டு இறங்காது அமர்ந்த நிலையிலே நின்று கேட்க,

“அவசரமா போறியா சக்தி?” என வினவினார்.

“இருக்கட்டும் மாமா, சொல்லுங்க” என்றான்.

அவர் முக்கியமாக ஏதோ பேச நினைக்கின்றாரென கருதிய சக்தி, பாதையிலிருந்து வண்டியை நகர்த்தி ஓரம் கட்டியவனாக, இறங்கி அவரருகில் வந்தான்.

சுகவனமும் தன்னுடைய வீட்டிலிருந்து நூறு மீட்டர் இடைவெளியில் தோட்டத்தினை பார்வையிட்டுக் கொண்டிருக்க, சக்தியை பார்த்ததும் பேசிட நிறுத்திவிட்டார்.

“இந்த முறை தேயிலை கொஞ்சம் தேங்கிப்போச்சு சக்தி… எதுவும் பண்ண முடியுமா?” எனக் கேட்டார்.

சக்தி பதில் சொல்லாது யோசிக்க…

“தேயிலை நல்லா பதமாதான் சக்தி இருக்கு. பச்சைக்கூட மாறல. பக்கத்து எஸ்டேட்காரன் நம்ம எஸ்டேட்டை விலைக்கு கேட்டான். கொடுக்க முடியாது சொல்லிட்டேன். அதனால் என்னை நட்டமாக்கி இறக்கணுமுன்னே இந்த முறை ரொம்ப மலிவு விலைக்கு அவன் தேயிலையை கொடுத்து எந்த டீலரையும் நம்ம பக்கம் வரவிடாம பண்ணிட்டான். இதனால எனக்கு மட்டுமில்ல நிறைய பேருக்கு தேங்கிப்போச்சு” என்றார்.

“ஹ்ம்ம்… அப்பாவும் சொன்னாங்க. நான் பார்க்கிறேன் மாமா. ஒருநாள் டைம் கொடுங்க” என்றான் சக்தி.

“சரிப்பா…” என்ற சுகவனம், “வீட்டுக்கு வந்துப்போப்பா” என அழைத்தார்.

“இருக்கட்டும் மாமா!” என்று சென்று வருவதாக அவருக்கு தலையசைத்துச் சென்றிருந்தான்.

சக்தி வீட்டிற்குள் வரும்போது, வீடு அமைதியாக இருந்தது.

ஆனால் பெரியவர்கள் நால்வரும் கூடத்தில் தான் அமர்ந்திருந்தனர்.

சக்தி கதிர்வேலனை பார்க்க…

“அன்விக்கும், கௌதமுக்கும் அடுத்த வாரம் நிச்சயம் பண்ணலான்னு முடிவு பண்ணியிருக்கோம் சக்தி” என்றார் ரகுபதி.

“ஆமாவாப்பா?”

சக்தி கதிர்வேலனிடம் கேட்க,

“இதுல அப்பா சொல்ல என்னயிருக்கு சக்தி” என்ற ரகுபதி, “அன்விக்கு பண்ணாதான உனக்கு பண்ண முடியும்” என்றார்.

“இங்க யாருக்கு முதல்ல கல்யாணம் பண்ணணுங்கிறது விஷயமில்லை மாமா. அன்விக்கு விருப்பமிருந்தா தான் கல்யாணம்” என்றான் சக்தி.

“ரெண்டு பேரும் விரும்புங்கிறாங்க சக்தி. கல்யாண வயசும் ஆச்சுதே! சீக்கிரம் செய்து வைப்போம்” என்றார் தென்னரசி.

“விரும்புறாங்க அப்படிங்கிறதுக்காக அவங்க சம்மதம் கேட்காம நாமளே முடிவு பண்ணறது சரியா?” சக்தி கேட்க,

“கௌதம் சரின்னு சொல்லிட்டான். அதுக்கு அப்புறம் தான் ஜாதகம் பார்த்து தேதி குறிச்சோம்” என்றார் தென்னரசி.

“அப்போ அன்வி சம்மதம் வேணாமா?”

“சம்மதம் இல்லாமலா ஆறேழு வருஷமா பழகியிருக்காங்க?” இதே கேள்வியை கேட்டுத்தான் கதிர்வேலன், தெய்வானையை வாய் திறக்கவிடாது செய்தனர்.

ஆனால் சக்தியை அப்படி அவர்களால் அமைதிப்படுத்திட முடியுமா? அவன் பேசியதில் அவர்கள் தான் வார்த்தையற்று அமைதியாகினர்.

“நேத்து பிடித்தது இன்னைக்கு பிடிக்கிறது இல்லை… இது நம்ம விருப்பத்துக்கு செய்யுற வேலை கிடையாது. அன்விகிட்ட பேசிட்டு நான் சொல்றேன்.”

“கௌதம் ஜாதகத்தை நேத்து பார்த்த பிறகு தான் தெரிஞ்சுது. அவனுக்கு இந்த வயசுல முடிக்கலன்னா ஏழெட்டு வருஷம் தள்ளிப்போவும்னு இருக்கு” என்ற தென்னரசி, “பெத்தவங்க சொல்றதைதான் பிள்ளைங்க கேட்கணும். அவங்க சொல்றதை கேட்டு செய்ய நாம எதுக்கு பெத்தவங்கன்னு” என கதிர்வேலனிடம் கூறினார்.

“நீங்க அன்விக்கிட்ட கேட்டு பொறுமையா சொல்லுங்க… ஆனால் இன்னும் மூணு மாசத்துல கௌதமுக்கு கல்யாணம் நடந்திருக்கணும் ஜாதகம் சொல்லுது. கௌதம் வேலை செய்யுற கம்பெனி முதலாளி அவர் பொண்ணை கொடுக்க கேட்கிறாங்க” என்று இருக்கையை விட்டு எழுந்துகொண்டார் ரகுபதி.

“அண்ணா… நம்ம வீட்ல பொண்ணு இருக்கும்போது” என்று தெய்வானை பதற,

“நான் என்னம்மா பண்றது. சக்தி விஷயத்திலும் சரி, இப்போ அன்வி விஷயத்திலும் சரி நீ வேணும்னு நான்தான் நினைக்கிறேன். ஆனால் நீங்க” என்று சக்தியை அழுத்தமாகப் பார்த்தார் ரகுபதி.

“எனக்கு கௌதமுக்கு அன்வியை கட்டி வைக்கத்தான் விருப்பம் தெய்வா. இதை காரணமா வைச்சு சக்தியை மதிக்கு கேட்பேன்னு நீங்க தயங்கினா நான் ஒன்னும் பண்ண முடியாது. அப்புறம் நீங்க உங்க பையனுக்காக பார்க்கிறேன்னு, கௌதமுக்கு அன்வியை கொடுக்கலன்னு சொல்லிட்டா… எங்களைத் தேடி வந்த நல்ல சம்மந்தத்தையும் நாங்க இழந்திடக் கூடாதே! அதுக்காக சொல்லி வைக்கிறேன்” என்றார்.

உண்மையிலும் ரகுபதி சொல்வதுதான் அவரின் திட்டமென்று சக்தி யூகித்திருந்தான்.

“எய்யா சக்தி… இன்னும் என்ன யோசனை. அன்வியும் கௌதமை விரும்புறாள். கல்யாணத்துக்கு மட்டும் எப்படி மறுப்பு சொல்லுவா! நாம இப்போ சரின்னு சொல்லுவோம்ப்பா” என்றார் தெய்வானை.

என்ன தான் யூகமிருந்தாலும், அவர்களின் திட்டம் என்னவென்று தெரிந்திட, தான் முன்னால் ஒரு அடி வைக்கத்தான் வேண்டுமென்று நினைத்த சக்தி,

“சரி ஆக வேண்டியதைப் பாருங்க” என்றான்.

‘தனக்கு திருமணம்… பெண் வெளியில் பார்ப்பதாக முடிவெடுத்ததற்கே கௌதம் அன்வியிடம் கோபித்துக் கொண்டான். இதில் அடுத்தக்கட்டமா என் முடிவை செயல்படுத்தியிருந்தா அன்வியோட லவ்? கௌதம் முடிவு?’ என ஒருவித தெளிவில்லா நிலையில் தான் சக்தி சம்மதம் வழங்கியிருந்தான்.

அன்று அன்விதா கோவை சென்று கௌதமுடன் என்ன நடந்ததென்று இன்னும் அவனுக்குத் தெரியவில்லை.

அன்விதாவிடம் நேரடியாகக் கேட்டு அவளை தடுமாற வைத்திட வேண்டாமென ஆர்விக் மூலமாக அறிந்திட நினைத்தான்.

“எல்லாமே அவளா சொல்லுவா திரு. இதை மட்டும் சொல்லமாட்டேங்கிறா(ள்). லவ்… ரொம்பவே பெர்சனலான விஷயம். நானா எப்படி கேட்கிறது” என்று ஆர்விக்கும் சொல்லியிருக்க, இவர்கள் இப்படி துரித நிலையில் உந்தித் தள்ளுவரென்று சக்தி எதிர்பார்க்கவில்லை.

அவர்களின் கணக்கு, பேச்செல்லாம் கௌதமின் சொல்படி நடக்கிறதென்பதை சக்தியும் அறியவில்லை. சொல்லப்போனால் சக்திக்கு கௌதமின் மீது எவ்வித கணிப்பும் எழவில்லை. தனது முடிவால் அன்விதா மீது சிறு கோபமென்றே நினைத்திருக்கிறான்.

மொத்த உண்மையும் தெரிந்திடும் போது வலி சுமக்கப்போவது அன்விதா தான்.

அன்விதாவின் இந்த மௌனம் கூட உண்மைகளை ஓரளவுக்கு தெரிந்துக்கொண்டதால் தானோ?

எடுத்திருக்கும் முடிவு சரிதானா என ஒருவித யோசனையிலே இருந்த சக்தி, கௌதமிடமே பேசிவிடலாமென அழைத்திருந்தான்.

***********************

அங்கு புஃபேவில் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகள் யாவற்றையும் பார்வையிட்ட ஆர்விக்…

“எல்லாமே நீங்க சொன்னது தான் மேம் இருக்கு” என்று, அந்த மேம்மில் அதிக அழுத்தம் கொடுத்து இனியாவை வார்த்தையாலே தள்ளி வைத்தான்.

“குட்… நான் பார்க்கும்போது எதுவுமே ஃபில் பண்ணல… அதான் செக் பண்ண சொன்னேன்” என்ற இனியா, “டிஸ்டர்ப் பண்ணிட்டனா ஆர்வி” என கண்களில் ஒருவித ஈர்ப்பை காட்டி வினவினாள்.

“நீங்க எங்களோட கஸ்டமர்… சோ எந்த தொல்லையும் இல்லை மேம். வேறெதுவும் இஷ்ஷூ அப்படின்னாலும் சொல்லுங்க” என்றான்.

“இஷ்ஷூ தான்” என்றவள், “என் மனசுல… உங்களால” என்றாள்.

“புல்ஷிட்” என்று மெல்லிய ஓசையில் முனகிய ஆர்விக்,

“என்ஜாய் த பார்ட்டி மேம்” என்று அங்கிருந்தான்.

இரண்டடியில் அவனது கையை எட்டிப் பிடித்திருந்தாள்.

“ஹேய்…” என வேகமாக கையை உதறி விலகி நின்றான் ஆர்விக்.

“நான் என்ன இன்டன்ஷனோட உங்க பின்னாடி வர்றேன்னு உங்களுக்கு தெரியும்ல ஆர்வி?” என்ற இனியா, “ஏன் ஒன்னுமே தெரியாத மாதிரி என்னை இக்னோர் பண்றீங்க?” எனக் கேட்டாள்.

“நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல மேம்” என்ற ஆர்விக், “நிச்சயம் உங்க இன்டன்ஷன் எனக்கு நல்லதில்லைன்னு மட்டும் புரியுது மேம்” என்றான்.

“ஏன் நல்லதில்லை ஆர்வி. நான் உங்களை எவ்ளோ ல…”

இனியாவை லவ்வென்று கூட சொல்லவிடாமல் கை காட்டி தடுத்த ஆர்விக், “ஜஸ்ட் ஸ்டாப் திஸ் அன்வான்டட் டாக்” என்று சத்தமின்றி பற்களைக் கடித்து மொழிந்திருந்தான்.

“நான் சொல்லலனாலும்… என்ன சொல்ல வரேன்னு உங்களுக்குத் தெரியும்ல?”

“லுக்… எனக்கு இந்த லவ்லலாம் சுத்தமா இன்ட்ரெஸ்ட் கிடையாது. வீணா என் பின்னாடி சுத்தி உங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. நீங்க பெரிய அரசியல் குடும்பத்துப் பொண்ணு, என் பின்னாடி சுத்தினா எனக்குதான் தேவையில்லாத தலைவலி. சோ, நீங்க என்னைவிட்டு கொஞ்சமா… ம்ஹூம்… ரொம்பவே தள்ளி இரு. முடிஞ்சா என் பக்கமே வராதீங்க” என்றான்.

“நான் அரசியல் குடும்பத்துப் பொண்ணுங்கிறது தான் நீங்க என்னை அவாய்ட் பண்ண காரணமா ஆர்வி.”

“ஓ.எம்.ஜி…” என்று ஒற்றை கையை இடையில் குற்றி மற்றொரு கையால் நெற்றியை தேய்த்துக் கொண்டு, இரு உதட்டையும் உள்ளுக்குள் மடித்து வெளியில் குவித்தவனாக பார்வையை அவ்விடம் அலையவிட்டான்.

“நீ யாரா இருந்தாலும் என் பதில் இதுதான்” என்று அத்தனை அடர்த்தியாக அவளின் கண்கள் பார்த்துக் கூறிய ஆர்விக் விடுவிடுவென அவ்விடம் விட்டு வேக எட்டுக்கள் வைத்து சென்றிருந்தான்.

சற்றுத் தள்ளி இவர்களை கவனித்தவாறு கேக்கினை அலங்காரம் செய்து கொண்டிருந்த தான்யா, ஆர்விக் கோபமாக செல்வதைக் கண்டு தான் செய்து கொண்டிருந்ததை பணியாளரிடம் ஒப்படைத்துவிட்டு ஆர்விக்கின் பின்னால் ஓடினாள்.

ஆர்விக் அலுவலகக் கட்டிடத்திற்குள் செல்லாது வெளியில் செல்ல,

“ஆர்வி” என்றழைத்திருந்தாள்.

ஆர்விக் நின்று திரும்பிட…

“என்னாச்சுடா?” என்று அருகில் சென்று அவனின் தோளில் கை வைத்தாள்.

“டார்ச்சர் பண்றா தானு… இரிட்டேட்டிங் ஆகுது” என்றான்.

“ஹ்ம்ம்… அவள் உன்னை ட்ரூவா லவ் பண்றான்னுதான் தோணுது ஆர்வி” என்ற தான்யா ஆர்விக் முறைத்தும் தான் சொல்ல வந்ததை நிறுத்தாது, “நீ ஆசைப்படுறது கிடைக்காது அப்படிங்கிறப்போ உன்னைத்தேடி வரதை நீயேன் அக்செப்ட் பண்ணக்கூடாது ஆர்வி?” என்றாள்.

“உன் அளவுக்கு நான் பிராக்டிகல் இல்லைன்னு நினைக்கிறேன் தானு” என்ற ஆர்விக், “சில விஷயங்களை ஏத்துக்க மட்டும் தான் முடியும், ஓவர்கம் பண்றது அவ்ளோ ஈசி இல்லை. எனக்கு என் லவ் இல்லைன்னு எந்தளவுக்கு ஸ்ட்ராங்கா தெரியுமோ… அதே அளவுக்கு என் லைஃப்ல இன்னொரு பொண்ணுக்கு இடமில்லைன்னும் தெரியும். அதுக்காக அவளை நினைச்சுக்கிட்டு தான் இப்படிலாம் டயலாக் பேசுறேன்னு நினைக்காத… என்னோட இந்த தாட் பியூச்சரில் மாறலாம்… மே பீ. காலத்துக்கு ஹீலிங் பவர் இருக்கே. ஆனால் என்னோட லவ் எப்பவும் மனசோட இருக்குமே! அதுக்கு நான் உண்மையா இருக்கணும் அப்படின்னு தான் இந்த செக்கென்ட் வரை தோணுது” என்றான்.

“இதுக்கு அப்புறம் என்ன சொல்லணும் தெரியல ஆர்வி…” என்ற தான்யா, “டோண்ட் மிஸ்டேக் மீ” என்றாள்.

“ஹ்ம்ம்… அப்புறம்?” என்று அவளின் தலையில் தட்டிய ஆர்விக், “இனி அவள் வேறெதுவும் இவன்ட் அப்படின்னு வந்தா அக்செப்ட் பண்ணாத” என்றான்.

“ம்ம்” என்ற தான்யா, “இப்போ ஒன்னு சொல்லணும் தோணுது… சொல்லட்டுமா?” என்றாள்.

“என்ன?” புருவம் உயர்த்தியவனாகக் கேட்டான்.

“கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது” என்றவள், ஆர்விக் பார்த்தப் பார்வையில்…

“மீ எஸ்கேப்” என ஓடியிருந்தாள்.

ஆர்விக் முற்றிலும் தன்னுடைய மனநிலை மறந்தவனாக வாய்விட்டு சிரித்திருந்தான்.

சிரித்த முகமாக தனக்கு பின்னால் யாரோ வரும் அரவம் உணர்ந்து திரும்பிய ஆர்விக்கின் புன்னகை நொடியில் சுருங்கியது.

“வாங்க கௌதம்” என வந்தவனை வரவேற்ற ஆர்விக், “அன்விக்கு சர்ப்ரைஸ் விசிட்டா?” எனக் கேட்டான்.

“ஹாய்” என்ற கௌதம் நீட்டிய கரத்தினை பற்றி விடுத்தான் ஆர்விக்.

ஆர்விக் தன்னை இயல்பாய் வரவேற்று பேசுவதே கௌதமுக்கு ஆசுவாசமாக இருந்தது.

கௌதம் தான் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாது இருப்பதே, இருவருக்குமான பிரச்சினையை பேசி தீர்த்திட வந்திருக்கிறான் என்பதை ஆர்விக்குக்கு வலியுறுத்தியது.

“அன்வி” என்று கௌதம் அலுவலகத்தின் உள்ளே பார்க்க…

“வாங்க” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

“அன்வி எதும் சொல்லலையா?”

“என்னது?”

“எங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்க. நெக்ஸ்ட் வீக் எங்கேஜ்மெண்ட்” என்றான் கௌதம்.

“ஹேய்… கங்கிராட்ஸ்.”

என்னதான் நிதர்சனம் இதுதானென ஏற்றுக்கொண்டு ஏற்க பழகியிருந்தாலும் அந்நேர வலி உள்ளத்தை சுழற்றி அடிக்கத்தான் செய்தது.

துவளும் மனதை இழுத்துப் பிடித்து, புன்னகையோடு வாழ்த்துக் கூறினான்.

“தேங்க்ஸ் ஆர்வி” என்ற கௌதம், உள்ளே வந்ததும் அன்விதாவை தேடிட, “அந்த ரூம்” என்று கைக்காட்டினான் ஆர்விக்.

கௌதம் அறைக்குள் சென்ற அந்த நிமிடமே அன்விதா வெளியில் வந்திருந்தாள்.

அவளின் முகம் இறுகியிருந்தது.

கண்கள் சிவந்து கண்ணீர் கரைக்கட்டி நின்றது.

“அன்வி” என்று அவளின் தோற்றம் கண்டு ஆர்விக் தன்னுடைய பதற்றத்தை மறைத்தவனாக அருகில் செல்ல, அவனின் புஜத்தை இரு கைகளாலும் கோர்த்து பிடித்து, அவனது தோளில் நெற்றி முட்டியவள்,

“போகச்சொல்லு ஆர்வி” என்றாள். உடைந்த மனதின் சில்லுகளின் தடம் அவளின் குரலில் தெறித்தது.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 56

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
44
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்