
நீண்ட புல்வெளியில் தன் மென்பாதங்களை புல்லுக்கும் வலிக்காமல் பனிப் படர்வது போல் பாதத்தைப் பதித்து நடந்து கொண்டிருந்தாள்.
வெளியே அவளின் மென்மைக்கும் உள்ளே அவளுக்குள் இருக்கும் ரணத்திற்கும் நூறு வித்தியாசங்கள் இருந்தன.
நெஞ்சாங்கூட்டில் தன் கணவனின் நினைவுகள் அனைத்தும் அவன் அணிவித்த தாலிச் சங்கலியோடு குத்தி குத்தி உள் காயத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டிருந்தன.
மேலுமவள் நெஞ்சில் இரு சிலுவைகளைச் சுமந்தாள். கண்களிலிருந்து உருண்டு விழுந்த அத்தனை துளிகளும் கூட அவனுக்காகத் தான் உடைந்தன.
கணவனை அவள் மறக்க என்றுமே நினைத்ததில்லை. மாறாக அவனது ஒவ்வொரு அசைவும் பேச்சும் வார்த்தைகளும் சிரிப்புகளும் முத்தங்களும் ஊடல் கூடல் என அனைத்தையும் சுருட்டிக் கொண்டு சிலுவையாக நெஞ்சோடு ஆணி வைத்து அடித்து, அவள் சுமக்கச் காரணமான விதியை நினைத்து சிரித்தவள், சாகும் வரை அந்நினைவுச்சிலுவையோடு வாழப் பழகிக் கொண்டாள்.
இறக்கி வைக்க நினைக்கும் பாரமல்ல அச்சிலுவை. வாழும் நாட்கள் எல்லாம் நெஞ்சோடு அழுத்தி அணைத்து காத்து வைக்கும் பொக்கிஷம். நாளும் எண்ணிக் கலங்கினாலும். கரையும் நாட்களில் தன் தனிமைக்கு உடன் வரும் துணை அச்சிலுவை.
சீதளத்தின் ஆட்சியையும் பொருட்படுத்தாமல் நடந்துக் கொண்டிருந்தாள் ஜெஸி. கண்ணீரும் அவளோடு பயணித்தது.
தன்னை மறந்து சுவரில் சாய்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான். குறுகிய இடத்தில் படர்ந்த வெளிச்சத்தில் நடைப்பயின்றாள். அதில் அவள் வினாடிக்கு ஒரு முறை கன்னத்தை தொட்டு மீண்ட உள்ளங்கையை வைத்தே தெரிந்து கொண்டான் அவள் அழுகிறாள் என்று.
‘இவ தானே மத்தவங்கள அழ வைப்பா? இப்போ என்ன இவ அழறா??? மிராக்கில் !’என்று எண்ணியவன், தலையை சாய்த்துக் கொண்டு தன் கால் வலிப்பதையும் பொருட்படுத்தாது அவளை மட்டும் தான் பார்த்து கொண்டிருந்தான்.
“ஏன் அழுகிறாள்???” விடைக்கிடைக்காது என்று தெரிந்தும் அந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்தான் மனதோடு.
அவள் அழுதால் சிரிக்க வேண்டியவன் , அதை எல்லாம் மறந்து அவளுக்காக மனம் வருந்தினான் அவனையும் மீறி.
அவனால் அங்கிருந்த நகர முடியவில்லை. கால்களும் மனம் போல அங்கிருந்து நகர மறுத்தன.
‘ஏன்??? அவள் கண்ணீர் தன்னை அசைத்து பார்க்கிறது?’ என்ற கேள்வி அவனுள் முளைக்க, பதில் கண்டறிய முடியவில்லை.
எவ்வளவு நேரம் அவளும் அவளுக்காக அவனும் உறங்காமல் கால் வலிக்க நின்றுக் கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை.
ஒளிர்ந்து கரையும் நிலவுக்கு துணையாக வானமும் தன்னை கரிய நிறத்தில் நிறைத்து கொண்டிருக்கறது என்று அறியாமல் போனது நிலா.
” ஏன் மேம் தூங்காம இந்த பனில நிக்கிறீங்க?? உள்ள வாங்க மேம்”வீட்டுனுள் இருந்து வந்த தன்யா ஜெஸியை அழைத்தாள்.
“தூக்கம் வரல தன்யா, அதான் கொஞ்சம் நடக்கலாம்னு. நீ தூங்காம என்னை ஏன் தேடி வந்த???”
“தண்ணீ தவிச்சது, குடிக்க எழுந்தேன். உங்களை பெட்ல காணோம்ன்றதும் தேடி வந்தேன் மேம். வாங்க மேம் உள்ள போகலாம்”என்று மீண்டும் அழைக்க, அவளும் அவளுடன் நடந்தவள், தன்னை யாரோ பார்வையால்துளைப்பதை உணர்ந்து தலையை மட்டும் நிமிர்த்தி பார்த்தாள். அது சரியாக துருவனின் பால்கனியாக இருந்தது. வெளிச்சமாக பரவியிருந்தது. ஆனால் அங்கே யாருமில்லை. எதையும் யோசிக்காமல் உள்ளே சென்று விட்டாள்.
அவள் செல்வதைத் திரை மறைவிலிருந்து பார்த்தவன். அவள் சென்ற பின் தான் தன் மெத்தையில் வந்து விழுந்தான்.
விட்டத்தில் சுழலும் மின் விசிறியை நோக்கி கொண்டிருந்தவனுக்குள் பல கேள்விகள் சுற்றிக் கொண்டிருந்தன.
அவளது அழுகையின் காரணத்தை அறிய மனம் ஒரு புறம் நினைத்தாலும், இன்னொரு புறம் அவள் அழுதால் என்ன? சிரித்தால் நமக்கு என்ன ? என்ற அவனது ஈகோவும் தலையைத் தூக்கியது.
தன் நெஞ்சில் கை வைத்து ‘அம்மா, ராதாம்மா அழுதா ஃபீல் பண்ணின சரி ! அப்பா இறந்ததுக்கு உடைஞ்சு போன சரி ! உன்னை தேத்த ரொம்ப கஷ்டப்பட்டேன். இவங்க எல்லாரும் என் உறவு அதுனால நீ ஃபீல் பண்ணலாம். ஆனா சம்பந்தமே இல்லாத ஒருத்திக்காக நீ ஏன் ஃபீல் பண்ற? அதுவும் அவள அழுக வைக்கணும் கங்கணம் கட்டி அலைஞ்சிட்டு இருக்கற என்னையும் சேர்த்து நீ ஏன் ஃபீல் பண்ண வைக்கற? ரீசன் என்ன மேன்?? சொல்லு எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்” என மனதோடு பேச, மனமோ ‘காலமே பதில் சொல்லும்’ என்று விளித்து விட்டு அமைதியானது. ஆனால் அவனோ மாறாக கேள்வி கேட்டு குடைந்த வண்ணமே இருந்தான். ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி உறக்கத்தை தழுவி உறங்கிப் போனான்.
மறுநாள் விடியலில் தான் தன் வீட்டுக்கு வந்தாள் ஜெஸி. மகனோடு கொஞ்சம் நேரம் உறங்கினாள். அவர்களும் அவளை தொந்தரவு செய்யவில்லை… உறங்கட்டும் என்று விட்டு விட்டனர்.
பத்து மணியளவில் எழுந்தவள் மகனையும் எழுப்பி குளிக்க வைத்து உணவு கொடுத்தாள். சரியாக எட்வார்டும் அவனது குடும்பமும் ஜெஸியின் இல்லத்திற்கு வந்தனர்.
வார முதல் நாளானாலும் விடுமுறை நாளில் மாதம் இரு முறையாவது மாறி மாறி நண்பர்கள் தங்கள் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து விடுவார்கள். இது ஆரோன் கல்லூரி பயிலும் போதே பேசி முடிவு செய்யப்பட்டது. இன்று வரை அது தொடர்கிறது.
குடும்பமாக சர்ச்சிற்கு சென்று மார்ஸில் கலந்து கொண்டு பின் ஜெஸி வீட்டிற்கு வந்தனர். ஆண்கள் பேசி பொழுதை கடத்த, பெண்கள் சமையற்கட்டில் பேசிக் கொண்டே சமைத்தனர்.
டென்னிஸும், ப்ரின்சி, ஜெர்வினும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். எட்வார்டுக்கும் ரெக்ஸ்லினுக்கும் இரண்டு பிள்ளைகள் மூத்தவள் ப்ரின்சி அடுத்ததாக ஜெர்வின் மூன்று வயதுடையவன். அவர்களுடன் தான் விளையாடிக் கொண்டிருந்தான்.
ஜெஸியும் ரெக்ஸ்லினும் பிரியாணிக்கு தேவையான வெங்காயம் தக்காலியை நறுக்கிக் கொண்டிருக்க, எட்வர்டின் தாய் மரியா குழம்பிற்காக மட்டனை அலசினார். ஆரோக்கியவோ சிக்கனை வேக வைத்து கொண்டிருந்தார்.
ஒவ்வொருவரும் தங்கள் வேலையை செய்ய, பிரியாணிக்கு வதக்கிக் கொண்டிருந்த ஆரோக்யாவிற்கு மகனின் நியாபகம் வர, அழ ஆரம்பித்தார்.
“பிரியாணியோ மீன் குழம்போ நான் வதக்க ஆரம்பிச்சாலே தாய சுத்தி வர பூனையாட்டம் என் முந்தானை புடிச்சி நின்னுட்டே இருப்பான். அப்பலாம் அவனை, ‘தொந்தரவு பண்ணாதடானு’ விரட்டி தள்ளினேன் கோச்சுக்கிட்டு போற மாறி போய் மறுபடியும் வந்து நிப்பான். ஆனா இப்போ நான் திட்டவே இல்லையே போனவன் வர்றாம இருக்கானே !”என கண்ணீர் வடித்தவரை அணைத்து தேற்றினார் மரியா.
கீழே வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தவளின் கைகள் அப்படியே நின்றன. அவரை போல அவளுக்கு கணவனின் செயல்கள் நினைவிற்கு வந்தன.
அவர் சமைக்க, ஜெஸி அவருக்கு உதவி செய்தாள். ஆரோன் அருகே நின்று அவர் செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அம்மா, இவளுக்கு பிரியாணி எப்படி செய்யணும் கத்து கொடுமா ! பிரியாணினு சொல்லி தக்காளி சாதத்தை கிண்டிட்டு இருக்கா ! கொஞ்சம் உன் கைப்பக்குவத்தை அவளுக்கும் கத்து கொடுமா !” என தன் பக்கத்தில் நின்ற ஜெஸியை வம்பிழுத்தான்.
“நான் ஏன் கத்துக்கணும் அதெல்லாம் நான் கத்துக்க மாட்டேன்? எப்பையும் பிரியாணினா அது அத்தை தான் செய்யணும். நானெல்லாம் கத்துக்க மாட்டேன்ப்பா. எனக்கு அத்தையோட பிரியாணினா பேவரட். பிரியாணி மட்டும் அவங்களே செய்யட்டும் உனக்கு வேணுமா தக்காளி சாதத்தை பிரியாணி போல செஞ்சு தரேன் ஆனா பிரியாணி செய்ய கத்துக்க மட்டும் மாட்வே மாட்டேன்” என்றவள் அவனுக்கு பழிப்பு காட்ட, தாய் திரும்பும் முன் பழிப்பு கட்டிய இதழுக்கு முத்த தண்டனை கொடுத்து விலகினான்.
‘பொறுக்கி ! அத்தை இருக்காங்க’ என்று கண்ணைக் காட்டி உதட்டைப் பார்த்து விட்டு அவனை முறைத்தவள் அவன் கையை கிள்ளினாள்.
“ஸ்ஸ்ஸ்ஆஆ”என முணங்கினாலும் அவள் முறைப்பை கண்டு உதடு குவித்து முத்தத்தை அனுப்பி வைத்தான்.
முன்னாடி வதக்கிக் கொண்டிருந்தவர் பிள்ளைகளின் சேட்டையை கண்டும் காணாமல் உள்ளுக்குள் சிரித்தபடி இருந்து கொண்டார்.
பார்வையில் ஒன்றில் நிலை குத்திருக்க, கண்ணீர் வடிய அமர்ந்திருந்தவளை ரெக்ஸ்லின் தான் நினைவுக்கு கொண்டு வந்தாள். கண்ணைத் துடைத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள்.
சமையல் வேலை முடிய, ஆண்களுக்கு முதலில் பரிமாறினார்கள். அவர்கள் சாப்பிட்டதும் பெண்கள் சாப்பிட்டனர். பிள்ளைகள் ஒரீடத்தில் உறங்க வைத்து விட்டு பெரியவர்கள் நால்வரும் ஒரு அறையிலும் சிறியவர்கள் ஒரு அறையில் பேசிக்கொண்டிருந்தனர்.
“எனக்கு நீ துருவன் கிட்ட பாடிகார்ட்டா வேலை பார்க்கிறது பிடிக்கல ஜெஸி. நீ சொல்லித் தான், நான் ஆட்களை அனுப்பி அந்த துருவனை அடிக்கச் சொன்னேன். அவனுக்கு பாடிகார்ட் வேணும் கண்டிப்பா வீரமதி கேட்பாங்கனு நீ என் டீம் பெயரை சொல்ல சொன்ன, உன் திட்டப்படி உள்ள வந்த சரி. ஆனால் உன்னால் உன் வேலையை தவிர , வந்த வேலைய பார்க்க முடிஞ்சதா? ஆரோன கொல பண்ணது யார்னு கண்டு பிடிக்க சிறு முயற்சி கூட எடுக்கல நீ.
நீ சொன்னது போல வீராமதி மேம நான் வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன். ஆனா அவங்க சந்தேகப்படும் படியான ஆட்களை பார்க்கவோ பேசவோ இல்ல. உன் சந்தேகம் தவறு, இது ஆக்சிடேண்ட் தான் எனக்கு தோணுது.
நீ தான், இந்த விபத்தைக் கொலைனு குழம்பிட்டு இருக்க ஜெஸி. ப்ளீஸ் அந்த துருவனுக்கு பாடிகார்டா இருக்கற வேலை விடு, நம்ம செக்யூரிட்டி சர்வீஸ்ல ஏதாவது வேலய பார் ஜெஸி”என்று நண்பனாக அறிவுரை சொல்ல, புயலுக்கு முன் அமைதி போல் சீற்றங்கொண்டு கத்த இருந்தவள் தன்னை கட்டு படுத்தி பொறுமை காத்து அவன் முகம் பார்த்தவளின் இதழ்கள் விரக்தியில் விரிந்து சிரித்தாலும் கண்களில் ஏனோ வலியை கண்ணீராக உகுத்தன.
இதுவரை அவளை அப்படி பார்க்காத எட்வார்டும் ரெக்ஸ்லினும் கூட கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள்.
ஆரோனின் இழப்பு அவர்களுக்கு பேரும் பாதிப்பு என்றால் உயிரின் பாதியானவளுக்கு அது வெறும் இழப்பு என்று சொல்லிட முடியுமா?
இயற்கையான மரணத்திற்கும் விபத்திற்கும் வித்தியாசம் உண்டு. அதே போல கொலை செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. நிச்சயம் ஆரோனின் இறப்பு கொலை என்று ஆணித்தரமாக நம்பினாள்.
மற்றவர்கள் எப்படியோ ஆனால் இவள் அவனை கொலை தான் செய்திருக்கிறார்கள் என்று உறுதியாக இருக்கிறாள். அதற்கு தான் அவள் வீரமதியின் வீட்டிற்குள் நுழைந்ததே !
அங்கு தான் ஆரோனின் கொலைக்கு காரணமானவர்களும் காரணங்களும் கிடைக்கும் என்று நம்பி அங்கு வேலைக்கு சேர்ந்தாள்.
துருவனை அடியாட்களை வைத்து அடிக்க சொல்லி, அவள் திட்டத்தின் படியே உள்ளே நுழைந்தாள் ஜெஸி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1
