Loading

 

காதல் 6

“I love books… புக்கோட நான் செலவளிக்கிற நேரத்தை ரொம்ப ஆத்மார்த்தமா உணருவேன்… ஜெர்ரி கூட நான் ஸ்பெண்ட் பண்ணுற டைமும் இப்ப எனக்கு ஆத்மார்த்தமா ஃபீல் ஆகுது, இது எனக்கே சர்ப்ரைஸா இருக்கு… ஒரு மேக்னட் மாதிரி அவளோட ஒவ்வொரு செயலும் என்னை அட்ராக்ட் பண்ணுது… அவ ஒரு பஜில் மாதிரி… ஏகப்பட்ட சர்ப்ரைசஸ் அவளுக்குள் பொதிஞ்சிருக்கு… அது ஒவ்வொன்னா தெரிஞ்சிக்கிறப்ப எனக்கு அவ சுவாரசியமான பொண்ணா தெரியுறா”

 

-டாம்

 

டாம் சாண்ட்விச்சையும் ஸ்க்ராம்பிள்ட் எக்கையும் ப்ளேட்டில் வைத்துக்கொண்டிருக்கும் போது சாப்பிட வந்தாள் ஆர்யா. கலக்கம் அகன்று அவள் முகம் தெளிந்திருந்தது.

 

மெல்லிய கோடாய் புன்னகை கூட அரும்பியிருந்தது. டாம் அவளிடம் தட்டை நீட்டவும் வாங்கிக்கொண்டவள் “கோவம் போயிடுச்சா?” என்று கேட்க

 

“உன் உதட்டுல ஒட்டியிருக்குற சிரிப்பை பாத்ததும் போயிடுச்சு” என்றான் அவன்.

 

அந்த பதிலில் நாணம் கொண்டவள் அதை மறைத்தபடியே “ரவிக்கு எதிரா லீகல் ப்ரொசீடிங்ஸ் எப்ப ஆரம்பிப்பாங்க?” என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.

 

“ஏன் உன் ஃபியான்ஸை காப்பாத்தப் போறியா?”

 

ஓரக்கண்ணால் கேட்டபடி சாண்ட்விச்சைக் கடித்தான் டாம்.

 

“சீ! நான் அவனை ஏன் காப்பாத்தணும்? இந்த நாட்டோட சட்டம் பத்தி எனக்கு எதுவும் தெரியாது… தட்ஸ் ஒய் ஐ அம் ஆஸ்கிங்”

 

“ட்ரக் எடுத்ததால கண்ட்ரோலை இழந்து அவன் உன் கிட்ட தப்பா நடந்துக்க பாத்ததா சொல்லி தப்பிக்க நினைப்பான்… அதுக்கான சான்ஸ் அதிகம்… லீகல் சைடை விடு, அவனை பத்தி நீ என்ன முடிவுக்கு வந்திருக்க?”

 

“இனி அவனைப் பத்தி யோசிக்க என்ன இருக்கு? அவனை என் லைஃப்ல இருந்து தூக்கியெறிஞ்சு முழுசா ஒன்றரை மணி நேரம் ஆகுது டாம்”

 

கோபம் துளிர்த்த அவளது குரல் டாமின் காதில் தேனாய் பாய்ந்தது.

 

“குட் டிசிசன்… சோ இப்ப அஃபிஷியலி நீ சிங்கிள்?”

 

“யாஹ்!”

 

ஸ்க்ராம்பிள்ட் எக் காலியான வேகத்திலேயே ஆர்யாவின் பசித்தீவிரம் டாமிற்கு புரிந்தது.

 

“நான் பீட்சா ஆர்டர் பண்ணட்டுமா?” என்றான் ஆதுரமாக.

 

“இல்ல… எனக்குப் போதும்” என மறுத்தவள் கோக் வேண்டாமென மறுத்துவிட்டுத் தண்ணீரை அருந்தினாள்.

 

பின்னர் யோசனையோடு தனது அறைக்குப் போக நினைத்தவள் நின்றாள்.

 

டாமிடம் வந்தவள் “எதுக்கு நீ ஹெல்ப் பண்ணுன டாம்?” என்று கேட்க

 

“ஐ லைக் யூ” என்றான் அவன் சற்றும் தாமதிக்காமல்.

 

ஆர்யா கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

 

“டாம்…”

 

“ஓஹ்! லவ் அது இதுனு நினைச்சுக்காத ஜெர்ரி… பாத்ததும் பிடிக்குற முகம் உனக்கு… எனக்கும் பிடிச்சுது… உன் ஃபியான்ஸ் கிட்ட இருந்து உன்னைக் காப்பாத்தணும்னு தோணுனதுக்குக் காரணம் அவன் எந்த விதத்துலயும் உனக்குத் தகுதியானவன் இல்ல… யூ ஆர் க்ளோஸ் டு மை ஹார்ட்… பட் நீ என்னை அப்பிடி நினைக்கல… இங்க தங்குறதுக்கு பணம் குடுக்குறேன்னு நீ சொன்னதுலயே அது தெரியுது”

 

“அந்தக் கோவம் இன்னும் போகலயா டாம்?”

 

“போயிடுச்சுனு சொன்னேனே… பட் நீ என்னைத் தூரமா நிறுத்தி வைக்குறது கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா ஃபீல் ஆகுது… ஐ ஷ்வர், நான் உன் ஃபியான்ஸ் மாதிரி இல்ல… இப்ப எனக்கு உன்னைப் பிடிக்கும்னு ஓப்பனா சொன்ன மாதிரி நாளைக்கே உன் மேல வேற ஃபீலிங் வந்தாலும் ஓப்பனா சொல்லிடுவேன்… சம்மதமில்லாம ஒரு பொண்ணைத் தீண்டுறதுல எனக்கு எப்பவுமே நாட்டம் கிடையாது… இதை நீ புரிஞ்சிக்கிட்டா நல்லது”

 

தீவிரக்குரலில் அவன் கொடுத்த விளக்கம் ஆர்யாவுக்குக் குற்றவுணர்ச்சியை உண்டாக்கியது. அவளுக்குமே அவன் மீது ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. பிடித்த நடிகரையோ, க்ரஸ்சையோ ரசிப்போமே அந்த மாதிரியான ஈர்ப்பு அது.

 

அதை தாண்டி வேறு எதுவும் இல்லை தான். ஆனால் ரவியின் மூலம் கிடைத்த அனுபவமும் டாம் மீதான ஈர்ப்பும் சேர்ந்து ஆர்யாவைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்ததால் அவனைத் தன்னை விட்டு விலக்கியே வைத்திருக்க முயன்றாள் பெண்ணவள்.

 

டாமிற்கு அது புரிந்துவிட்டதால் அவன் கொடுத்த விளக்கம் சூழலையே மாற்றிவிட மெய்யான காரணத்தை அவனிடம் சொல்லியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள் ஆர்யா.

 

“ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ டாம்… யூ நெவர் ஃபெய்ல் டூ அட்ராக்ட் மீ… ஐ அஃப்ரைட் டு லூஸ் மை கண்ட்ரோல்… அதனால தான் உன்னை ஒரு எல்லைக்கு வெளிய நிறுத்துறேன்”

 

அவன் தன்னைப் பாதிக்கிறான் என்பதை கண்களின் தவிப்போடு அவள் சொல்லும்போதே டாமின் வதனத்தில் மகிழ்ச்சியில் சாயல்.

 

“அண்ட் யூ நெவர் ஃபெய்ல் டூ சர்ப்ரைஸ் மீ… என் மேல உனக்கு அட்ராக்சன் இருக்குனு சொன்னியே, அது தான் எனக்குக் கிடைச்ச பெஸ்ட் சர்ப்ரைஸ்” என்றவன் ஆர்யாவை நெருங்கினான்.

 

அவள் திகைக்கும்போதே அணைத்துக்கொண்டவன் “உன் மனசை எப்பவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிக்கணும்னு யோசிக்காத ஜெர்ரி… அது பாசிபிள் இல்ல… மனசு என்ன விரும்புதோ அதை செஞ்சு முடிச்சிடணும்” என்றான் மென்மையானக் குரலில்.

 

ஆர்யாவின் தேகமோ அவனது இறுக்கமான அணைப்பில் நடுங்கியது. சற்று முன்னர் ரவியின் வீட்டில் கூட அவன் அணைத்தானே! அப்போது பாதுகாப்பு உணர்வு தானே தோன்றியது. இப்போது மட்டும் ஏன் நடுக்கம்?

 

“யூ ஆர் ஷிவரிங்… போய் ரெஸ்ட் எடு… இங்க நடந்ததை அப்பிடியே உன் பேரண்ட்ஸ் கிட்ட சொல்லணும்னு அவசியமில்ல… யூ ஆர் நாட் அ கிட்… க்ரோ அப் அண்ட் பிஹேவ் லைக் அன் அடல்ட்… உன் லைஃப்ல வர்ற பிரச்சனைகளை நீயே சமாளிக்க கத்துக்க ஜெர்ரி… இந்த யூ.எஸ் லைஃபை அதுக்கான ட்ரெயினிங் பீரியடா நினைச்சுக்க… ரொம்ப அட்வைஸ் பண்ணி போரடிச்சிட்டேன்… போய் தூங்கு”

 

தனது அணைப்பிலிருந்து அவளை விடுவித்தவன் போய்விட, ஆர்யாதான் அந்த அணைப்பின் கதகதப்பை விரும்பவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் தவித்துப் போனாள்.

 

ஆனால் டாம் சொன்ன அறிவுரை அவளுக்குள் இருந்த பழைய ஆர்யாவைச் சிந்திக்க தூண்டியது.

 

எப்படியும் ரவி தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதை சொன்னாலும் தந்தை நம்பப்போவதில்லை. தாயாரும் தமக்கையும் பரிதவித்துப்போவார்கள். ராஜேஷோ தம்பி மீது இன்னும் அதிருப்தியுறுவான். இதனால் இந்தியாவில் தனது குடும்பத்தில் குழப்பம் தானே உண்டாகும்.

 

எனவே எதுவும் நடக்காதது போலவே தனது குடும்பத்தினரிடம் காட்டிக்கொள்ள முடிவெடுத்தாள் ஆர்யா. ரவியாலும் அவன் செய்த கேடுகெட்ட செயலை யாரிடமும் சொல்ல முடியாது. மெதுவாக தந்தையிடம் பேசி திருமண பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

 

அந்த தைரியத்தோடு அன்னையின் எண்ணுக்கு அழைத்து சாதாரணமாகப் பேசினாள். தமக்கையிடம் நலம் விசாரித்தாள். ரவியிடமிருந்து மொபைல் அழைப்பு இல்லை என மாமியார் புலம்பியதை ஆராதனா சொன்ன போது கூட அவனுக்கு அலுவலகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு அதிகவேலை இருக்குமென சொல்லி சமாளித்தாள்.

 

ஒருவேளை ரவிக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்லவேண்டும் என்றால் கூட டாம் தனக்குத் துணையாய் இருப்பான். அவன் சொன்னது போல இந்த அமெரிக்க பயணம் அவள் சுயமாக முடிவெடுக்க கற்றுக்கொள்ளவேண்டுமென கடவுள் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பு.

 

தந்தையின் சுடுசொல்லில் இருந்து தாயாரைக் காக்க வேண்டுமென்றால் அவர் உளவியல் ரீதியாகத் தொடுக்கும் சொல் அஸ்திரங்களை சுக்குநூறாக்க அவள் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

நான் கற்றுக்கொள்வேன் என தீர்மானித்துவிட்டுப் படுத்தவள் நிம்மதியாக உறங்கிப்போனாள்.

 

மறுநாள் டாம் எழுந்திருக்கும் முன்னரே விழித்தவள் சமையலறைக்குள் சென்று தனக்கும் அவனுக்குமாய் காபி தயாரிக்க ஆயத்தமானாள்.

 

அவளுக்குச் சிரமம் வைக்காமல் அங்கே நெஸ்ப்ரஷோ காபி மெஷின் வாங்கி வைத்திருந்தான் டாம். அருகிலிருந்த டப்பாவிலிருந்து காபி கேப்சூல்களை வைத்து இருவருக்கும் சேர்த்து காபியை வடித்தெடுத்தவள் தனக்கு மட்டும் பால் கலந்து கொண்டாள்.

 

அவளை அலெஸாண்ட்ரோவில் வீட்டில் டாம் வைத்திருந்தபோது பால் கலக்காத எஸ்ப்ரஷோ தனக்குப் பிடிக்குமென சொன்னதாக நினைவு.

 

எனவே டாமிற்கு வெறும் எஸ்ப்ரஷோ காபியாகவே எடுத்துக்கொண்டவள் அவனது அறைக்கதவைத் தட்ட எத்தனிக்கும்போதே அவனே கதவைத் திறந்தான்.

 

காபி கோப்பையும் கையுமாக நின்றவளிடம் “குட் மானிங் ஜெர்ரி… வீடு பிடிச்சிருக்கா?” என்று கேட்டபடி வாங்கிக்கொண்டான்.

 

“யுவர் ஹோம் இஸ் டூ ப்ரிட்டி அண்ட் நீட்… பேச்சிலர் வீடு மாதிரியே இல்ல… எஸ்பெஷலி ஐ லவ் த லான் அண்ட் யார்ட்” என வீட்டின் அழகைப் பாராட்டினாள்.

 

“மை மாம்ஸ் ஸ்மால் கிப்ட் ஃபார் மை தேர்ட்டி செகண்ட் பர்த்டே” என அவன் சொன்னதும் ஆச்சரியப்பட்டாள்.

 

“ஆர் யூ அபௌவ் தேர்ட்டி? ஐ காண்ட் பிலீவ் டாம்… யூ ஆர் எய்ட் இயர்ஸ் எல்டர் தன் மீ”

 

ஆர்யா சொன்னதும் குறும்புச்சிரிப்பு ஒன்று விரிந்தது டாமின் இதழ்களில்.

 

“எல்லா விதத்துலயும் நான் உன்னை விட எல்டர் அண்ட் சுப்பீரியர்… சீக்கிரமே உனக்கு அது புரியும்” என்றான் பூடகமாக.

 

ஆர்யாவுக்கு அவனது பூடப்பேச்சு புரியவில்லை. ஏதோ இவனிடம் இரகசியம் இருக்கிறது என்று மட்டும் தோன்றியது. எப்படியும் கண்டுபிடித்துவிடலாமென்ற எண்ணத்தோடு அவனிடம் அடுத்த உதவியைக் கேட்டாள்.

 

“இன்னிக்கு உனக்கு டைம் இருந்துச்சுனா யூனிவர்ச்சிட்டி வரைக்கும் போயிட்டு வந்துடலாமா? ஸ்டூடண்ட் ஐடி வாங்கணும்”

 

“ஷ்யூர்” என்றவன் அவளை ஊன்றி கவனிக்கவும் ஆர்யாவுக்கு வெட்கம்.

 

“ஏன் அப்பிடி பாக்குற?”

 

நாணத்தை மறைத்தவளாக காபியை அருந்தினாள்.

 

“இன்னைக்கு நீ ஃப்ரீயா இருந்தா என் கூட டேட் வரமுடியுமா?”

 

‘டேட்’ என்றதும் குடித்துக்கொண்டிருந்த காபி புரையேறியது ஆர்யாவுக்கு.

 

வாயைத் துடைத்துக்கொண்டவள் “வாட்?” என்றாள் சினம் துளிர்க்க.

 

“டேட் மீன்ஸ் டேட்… வாட்னு கேட்டா என்ன அர்த்தம்?”

 

தோளைக் குலுக்கினான் டாம்.

 

“டேட்கு எனக்கு அர்த்தம் தெரியும்… என்னை டேட்கு ஏன் கூப்பிடுறனு கேட்டேன்… நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல”

 

ஆர்யாவின் பதில் சூடாக வரவும் டாமின் முகத்தில் குழப்பம்.

 

“டேட்டிங் போறது தப்பா என்ன? உன்னோட இடத்துல வேற ஒரு பொண்ணு இருந்தா யெஸ் ஆர் நோனு ஆன்சர் பண்ணிட்டுப் போயிருப்பா… நீ தான் எல்லாத்துக்கும் ஆர்கியூ பண்ணுற ஜெர்ரி”

 

“கூப்பிடுறவங்க கூடல்லாம் டேட்டிங் போற மாதிரி என்னோட பேரண்ட்ஸ் என்னை வளர்க்கல டாம்” சிடுசிடுத்தாள் ஆர்யா.

 

மீண்டும் டாம் குழம்பினான். இதில் கோபம் கொள்ள என்ன இருக்கிறது? விரும்புபவர்கள் டேட்டிங் செல்வதில் என்ன தவறு? தன்னைப் போலவே ஆர்யாவுக்கும் தன் மீது ஈர்ப்பு இருக்கிறதென்பதால் தான் டாம் அவளை டேட்டிங் வர அழைத்தான்.

 

ஆனால் அவளிடமிருந்து வந்த பதில்களில் கோபம் கொப்புளிக்கவும் குழம்பிப்போனான். குழப்பம் அவனிடமும் கோபத்தைத் தூண்டியது. காரணம் அவள் தன்னை யாரோ ஒருவனைப் போல பேசிய விதம்.

 

“கூப்பிடுறவங்க அவங்க வீட்டுல தங்க மட்டும் சொல்லி வளர்த்தாங்களா உன் பேரண்ட்ஸ்?”

 

யோசிக்காமல் அவனும் வார்த்தைகளை விட ஆர்யாவின் தன்மானம் அந்த இடத்தில் சீண்டப்பட்டது.

 

பாதி கூட காலியாகாத காபி கோப்பையை அங்கே இருந்த மேஜையில் வைத்தவள் விறுவிறுவென தனது அறைக்குள் போனாள்.

 

டாம் என்னவென யோசிக்கும் முன்னரே தனது ரோலர் சூட்கேசுடன் வந்தவள் “இது வரைக்கும் என்னைக் காப்பாத்தி உதவுனதுக்கு தேங்க்ஸ்… இதுக்கு மேல நான் இங்க தங்க விரும்பல” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

 

“ஹேய் ஜெர்ரி”

 

அவள் பின்னால் ஓடியவன் ஃப்ரன்ட் யார்டைக் கடப்பதற்குள் அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

 

மூச்சு வாங்க “நீ என்னை தேர்ட் பெர்சன் மாதிரி ட்ரீட் பண்ணுனது பிடிக்காம கத்திட்டேன்… ரியலி சாரி” என்றான்.

 

ஆர்யாவுக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லை.

 

“அப்ப நீ டேட்டிங் வானு கூப்பிட்டது மட்டும் சரியா?” என்று சிலிர்த்துக்கொண்டு சண்டையிட ஆரம்பித்தாள் அவள்.

 

“டேட்டிங் கூப்பிட்டதுல என்ன தப்பு?” என்றவன் “ஓஹ்! டிபிக்கல் இந்தியன் கேர்ள்” என்று சலித்துக்கொண்டான்.

 

ஆர்யா இன்னும் சமாதானமாகவில்லை என்றதும் “ஐ அம் சாரி ஜெர்ரி” என்றான்.

 

“நிறைய நேரங்கள்ல நம்ம ரெண்டு பேரும் வேற வேற கலாச்சாரத்துல வளர்ந்தவங்கனு மறந்து போயிடுது எனக்கு”

 

ஆர்யா சற்று சமாதானமானாள்.

 

“டேட்டிங், லிவின்லாம் இப்ப இந்தியாலயே சகஜமாகிடுச்சு டாம்… அது ஒவ்வொருத்தரோட பெர்ஷனல் சாய்ஸ்… பட் எனக்கு அதுல எல்லாம் விருப்பமில்ல… எனக்குக் கம்ஃபர்டபிளாவும் தோணல”

 

தனது மறுப்பை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தாள்.

 

“இப்ப என்ன? நான் உன்னை டேட்டிங் கூப்பிடக்கூடாது, அவ்ளோ தானே? ஓ.கே… இனிமே டேட்ங்கிற வார்த்தையே என் வாய்ல இருந்து வராது”

 

சொன்னதும் தனது மனநிலையைப் புரிந்துகொண்டவன் மீது முன்பிருந்த கோபம் அகன்றது ஆர்யாவுக்கு.

 

வெளிநாட்டவன் என்றாலும் தனக்கு விருப்பமில்லை என்றதும் புரிந்துகொண்டானே என டாம் மீது நன்மதிப்பு வந்தது அவளுக்கு.

 

அவனோடு வீட்டுக்கு வந்தவள் பல்கலைகழக அலுவலகம் செல்ல தயாரானாள்.

 

கருப்பு வண்ண ஸ்பகட்டி க்ராப் டாப் மீது, பட்டன் இல்லாத மஸ்க் எல்லோ வண்ண உல்லன் ஸ்ரக் சட்டை, நேவி ப்ளூ ஜீன்ஸ் சகிதம் தயாராகி வந்தவள் டாமின் கண்கள் அவளை அளவிடவும் முகம் சிவந்தாள்.

 

சாதாரணமாக வெள்ளை நிற டீசர்ட் மீது ஸ்ட்ரெச் கோர் ஜாக்கெட், கருப்பு வண்ண சினோ பேண்ட் அணிந்த அவனை அவளது கண்களும் திருட்டுத்தனமாக ரசித்தன. அதிலும் ஸ்ட்ரெச் கோர் ஜாக்கெட்டின் பாக்கெட்களில் அவன் கை வைத்தபடி நின்ற தோற்றம் மாடல் போல அசத்தலாக இருந்தது.

 

டீனேஜ் பெண்ணைப் போல அவனைப் பார்க்கிறோமோ என தலையை உலுக்கி இயல்புக்கு வந்தாள் ஆர்யா.

 

“போகலாமா டாம்?”

 

“யாஹ்! ப்ரேக்ஃபாஸ்ட்?”

 

“ஸ்டூடண்ட் ஐடி வாங்குனதுக்கு அப்புறமா ஏதாச்சும் ரெஸ்ட்ராண்ட்ல சாப்பிடலாம்… இன்னைக்கு என்னோட ட்ரீட்”

 

“அப்ப இந்தியன் ஃபூட் வாங்கி குடு… இப்பலாம் எனக்கு இந்தியா மேல தனி பாசம் பிறக்குது… ஐ டோண்ட் நோ ஒய் ஜெர்ரி”

 

பச்சை நிற விழிகள் குறும்பில் மிளிர சொன்னவனின் பேச்சை ரசித்தவளாக க்ராப் டாப்பின் உபயத்தால் பளிச்சென தெரிந்த இடையை ஸ்ரக்கை கொண்டு மறைத்துக்கொண்டு கிளம்பினாள் ஆர்யா.

 

டாம் அவளிடம் சொல்லாத இரகசியம் ஒன்று இன்னும் சில மணி நேரங்களில் வெளிவரப்போவதை அறியாதவள் முதல் முறையாக எவ்வித பதற்றமுமின்றி அவனது காரில் பயணித்தாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
60
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்