Loading

 

காதல் 4

 

“சேலஞ்சிக்கான விசயங்களை செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும்… வாழ்க்கைய சுவாரசியமா வாழணும்னு நினைக்குறவங்க இப்பிடி தான் இருப்பாங்கனு என் டாட் அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கேன்… ஒரு சேலஞ்சை ஜெயிச்சிட்டா ஆட்டோமேட்டிக்கா என்னோட கவனம் இன்னொரு விசயத்தைக் கவனிக்க ஆரம்பிச்சிடும்… எந்த ஒரு இடத்துலயும் தேங்கி நிக்குறது எனக்குப் பிடிக்காது… அதே போல ஒரே ஒரு நபர் கிட்ட என் வாழ்க்கை தேங்கிடக்கூடாதுங்கிறதுல நான் ரொம்ப கவனமா இருக்குறேன்… இதுல நான் என் அப்பாவோட அட்வைஸை ஃபாலோ பண்ணுறேன்… இன்னொரு முக்கியமான விசயம், I don’t want to keep anyone to tie with me in the name of commitment or relationship. அதனால தான் என் வாழ்க்கை சுவாரசியமா இருக்குதுனு நான் நம்புறேன்”

 

-டாம்

 

“யூ ஆர் ஃபினான்ஷியலி இண்டிபெண்டண்ட்… இன்னுமா உன் அப்பாவோட ஆர்டர்சை ஃபாலோ பண்ணுற… இட்ஸ் வியர்ட்”

 

தோள்களைக் குலுக்கிவிட்டுக் கையில் வைத்திருந்த குளிர்பானத்தைக் குடித்தான் டாம்.

 

ஆர்யா மென்மையாக முறுவலித்தாள்.

 

“பேரண்ட்சோட பேச்சைக் கேக்குறது ஒரு டாட்டரா என்னோட கடமை”

 

“ரிடிகுலஸ்… அப்பிடி இருக்கணும்னு என்ன கட்டாயம் இருக்கு? பேரண்ட்ஸாவே இருந்தாலும் அவங்க விருப்பத்தை குழந்தைங்க மேல திணிக்க முடியாது… யூ ஆர் நாட் ஹிஸ் ஸ்லேவ்”

 

“உங்க பேரண்ட்ஸ் சொன்னா நீங்க கேக்க மாட்டிங்களா?”

 

“நெவர்”

 

அசுரவேகத்தில் வந்த பதிலில் ஆர்யா திகைத்தாள்.

 

“அவங்க என்ன சொன்னாலும் எனக்கு சரினு தோணுறதை தான் நான் செய்வேன்… இப்ப வரைக்கும் என்னோட இந்த நிலைப்பாட்டை பாசம், அன்பு ப்ளா ப்ளா ப்ளா ரீசனுக்காக நான் மாத்திக்கிட்டதில்ல…. என் மாம்கு அவங்களோட ரியல்டர்ஸ் கன்சர்னை நான் நடத்தணும்னு ஆசை… என் டாடிக்கு அவரோட ஃபுட் செயினோட மேனேஜ்மெண்ட்ல என்னைச் சேர்த்துக்கணும்னு ஆசை… அவங்க ரெண்டு பேரோட ஆசைக்காக என்னோட ட்ரீம் ஜாபை நான் இழக்க முடியுமா?”

 

“சோ உங்க ஆசைப்படி செஃபா இருக்கிங்க” ஆர்யா சொல்லவும் டாம் புருவம் சுருக்கினான்.

 

“வாட்?” என்றவன் பின்னர் ஏதோ யோசித்தவனாக “யாஹ்! எனக்கு செஃபா இருக்க பிடிச்சிருக்கு” என்றான் மர்மப்புன்னகையோடு.

 

இதில் சிரிக்க என்ன இருக்கிறதென நினைத்தவள் “அவங்க சொன்னதை கேட்டா சந்தோசப்படுவாங்கல்ல” என்றாள்.

 

“லுக்! ஐ அம் நாட் பான் டு ப்ளீஸ் மை பேரண்ட்ஸ்… ஒவ்வொருத்தரையும் சந்தோசப்படுற நடமாடும் தியாகச்சுடரா என்னால வாழ முடியாது… அது எனக்குப் பரிச்சயமில்லாத லைஃப் ஸ்டைல் ஜெர்ரி”

 

அசட்டையாகச் சொன்னவனின் பேச்சே இருவருக்கும் இடையே உள்ள வளர்ப்பு ரீதியான வேறுபாட்டைத் துல்லியமாக உணர்த்தியது ஆர்யாவுக்கு.

 

இவனைப் போலவே நானும் எனக்காக வாழ நினைத்தால் அது சாத்தியமாகுமா? தந்தை பேசி முடித்த வரன் வேண்டாமென தைரியமாகச் சொல்லிவிடமுடியுமா?

 

அது சாத்தியமில்லை என்றே தோன்றியது அவளுக்கு. தாயாரையும் தமக்கையையும் பற்றி யோசித்தால் ஆர்யாவின் தைரியம் தானாக ஆவியாகிவிடும்.

 

டாமை பார்த்தால் பொறாமையாக இருந்தது அவளுக்கு. அதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்தாள்.

 

“நமக்காக வாழுறது ரொம்ப சாதாரணமான விசயம்… இதுல பொறாமைப்பட என்ன இருக்கு?” என்றவனின் விழிகளில் புரியாத பாவனை.

 

அவனுக்குச் சொன்னால் புரியாது என்பதால் மீண்டும் புன்னகைத்தவள் “ஐ ஹேவ் டு கோ டாம்” என்றாள்.

 

டாமின் முகத்தில் ஏகப்பட்ட உணர்ச்சிகள் மின்னல் போல தோன்றி மறைந்தன.

 

“மறுபடி அந்த வீட்டுக்குப் போறியா? ஆர் யூ அன் இடியட் ஜெர்ரி? அவன் உன்னை…”

 

“யூனிவர்சிட்டி ஆரம்பிக்குற வரைக்கும் நான் தங்குறதுக்கு வேற இடம் இல்ல டாம்”

 

“அப்ப என் கூட இங்க தங்கிடு”

 

அவன் விளையாட்டுக்குச் சொன்னதாகத் தோன்றவில்லை ஆர்யாவுக்கு. இது கட்டாயம் ஜோக் ஆகவும் இருக்க முடியாது. அப்படி என்றால் சீரியசாக சொல்கிறானா இவன்?

 

உதடுகள் சில மில்லி மீட்டர் இடைவெளியில் விரிய ஆர்யா திகைப்பை வெளிப்படுத்தினாள்.

 

“என்னாச்சு? அவன் எவ்ளோ கேவலமானவன்னு தெரிஞ்ச அப்புறமும் அவனோட வீட்டுல இருக்கணுமா?”

 

“அதுக்காக உங்க கூட நான் தங்க முடியாது டாம்”

 

இப்போது ஆர்யாவின் குரலில் இருந்த வேறுபாடு நீ மூன்றாவது மனிதன் என தன்னைச் சுட்டுவதாக எண்ணிக்கொண்டான் டாம்.

 

அவனது உடல்மொழியும் மாறிவிட்டது.

 

“அப்புறம் உன் தலைவிதிப்படி நடக்கட்டும்”

 

இறுக்கமான குரலில் உரைத்தவன் “கிளம்பலாமா?” என்றான்.

 

க்ஷண நேரத்தில் மாறிப்போன சூழலை நொந்தவளாக ஆர்யா டாமுடன் கிளம்பினாள்.

 

மௌனமாக அவனைத் தொடர்ந்தவள் காரிலேறியதில் இருந்து அட்லாண்டிஸ் ஹௌசிங் ஃபவுண்டேசன் வந்து இறங்கும் வரை டாமிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

 

இறங்கியவளிடம் கார்ட் ஒன்றை நீட்டினான் டாம்.

 

“இது…”

 

“என்னோட கார்ட்… எப்பிடியும் உன் ஃபியான்ஸ் பைத்தியக்காரத்தனமா எதையாச்சும் செஞ்சு வைப்பான்… அப்ப உன்னைக் காப்பாத்த வரணும்ல”

 

நக்கலாகச் சொன்னவன் மூன்று விரல்களால் நெற்றியைத் தொட்டு சலாம் போட்டுவிட்டுக் காரைக் கிளப்பிப் போய்விட்டான்.

 

அந்த நக்கல் பேச்சில் இருந்த உண்மை ஆர்யாவைச் சுட்டது. சோர்வோடு கம்யூனிட்டிக்குள் நுழைந்தவள் வீட்டை அடைந்தபோது தொங்கிப்போன முகத்துடன் அலுவலகம் செல்ல தயாரான தோற்றத்தோடு வெளியே வந்தான் ரவி.

 

திடுமென வந்து நின்றவளைப் பார்த்ததும் அவனுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

 

“ஆர்யா… நீ… இங்க”

 

இவள் எப்படி உயிரோடு வந்தாள் என்ற ரீதியில் அவனது அதிர்ச்சி இருக்கவும் ஆர்யா வெளிப்படையாகவே தனது அதிருப்தியைக் காட்டினாள்.

 

“எப்பிடி? இவ சாகட்டும்னு விட்டுட்டு ஓடுனோமே, எப்பிடி உயிர் பிழைச்சு வந்தானு யோசிக்கிறிங்களா ரேவ்? நீங்க என் அப்பா கிட்ட ஒரு அமெரிக்கனோட ஊர் சுத்தப் போயிருக்கேன்னு சொன்னிங்களே, அவன் தான் என்னைக் காப்பாத்துனான்”

 

ரவி பதில் சொல்ல இயலாமல் அசடு வழிய முகம் கறுக்க நின்றான். அவனது இந்த தோற்றம் பரம திருப்தியாக இருந்தது ஆர்யாவுக்கு.

 

“என்ன ரேவ் பதிலே வரல? எங்கப்பா கால் பண்ணிருப்பாரே, என்ன சொன்னிங்க அவர் கிட்ட? உங்க மகளை ஒரு கொலைகாரன் கிட்ட விட்டுட்டு ஓடி வந்துட்டேன்னு சொன்னிங்களா?”

 

ரவிக்குத் தொண்டை அடைத்தது போல பேச்சு வரவில்லை. இருப்பினும் அசட்டுச்சிரிப்போடு அவளை நெருங்கியவன் அணைக்க எத்தனிக்கவும் ஆர்யா கையை நீட்டி அவனைத் தடுத்தாள்.

 

ஏனோ அவன் நெருங்கினாலே குமட்டியது. ரவிக்கு அவளது இந்தச் செய்கையில் முகம் மாறிவிட்டது.

 

“ஆர்யா… அன்னைக்கு என்னோட நிலமை… ப்ளீஸ் என்னைப் புரிஞ்சிக்க”

 

ஆர்யாவின் உதடுகள் ஏளனமாக வளைந்தன.

 

“உங்களை நான் ரொம்ப்ப்ப நல்லா புரிஞ்சிக்கிட்டேன் ரேவ்” அவள் அழுத்தமாக சொன்ன விதத்தில் வயிறு கலங்கியது ரவிக்கு.

 

பாவிப்பெண் இதை காரணமாக வைத்து தன்னை மணக்கவேண்டாமென முடிவெடுத்துவிடுவாளோ என்ற பதபதைப்பு அவனுக்குள் பரவியது. அவனது தவிப்பை ரசித்தவளாக “உங்களுக்கு டைம் ஆகுதுல்ல… கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டாள் ஆர்யா.

 

ரவி பயத்தோடு அலுவலகத்துக்குக் கிளம்பிப் போய்விட வீட்டுக்குள் வந்தவளின் மனமோ கொதித்துக்கொண்டிருந்தது. செய்வதையும் செய்துவிட்டு அணைத்துப் பேசி சமாளித்துவிடலாமென நினைத்த ரவியின் கீழ்த்தரமான குணத்தை எண்ணி அருவருப்படைந்தாள் அவள்.

 

இவன் அருகில் வந்தாலே அருவருக்கிறாயே, இப்படிப்பட்டவனுடன் எப்படி ஒருமித்த எண்ணத்தோடு குடும்பம் நடத்துவாய் என்று ஆர்யாவின் மனசாட்சி குதர்க்கமாகக் கேட்டது.

 

“நீ டாமை விட க்ரூயலா பேசுற” என்று மனசாட்சியைத் திட்டியவள் ஆசுவாசமடைய சிறிது நேரம் படுக்கலாமென எண்ணினாள்.

 

படுக்கையோ அன்னியமாக உறுத்தியது. வீடே அன்னியமாகத் தெரிந்தது அவளுக்கு.

 

டாமின் வீட்டில் இப்படி உணரவில்லையே! ஆச்சரியமடைந்தவள் ஏன் டாம் டாம் என அவனைப் பற்றியே சிந்திக்கிறோமென குழப்பிக்கொண்டாள்.

 

அதே நேரம் சென்னையில் அவளது வீட்டில் தேவநாராயணனிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தார் ஆர்யாவின் அன்னை மைத்ரி.

 

முழுதாய் ஒரு நாள் கடந்தும் ஆர்யா அவரிடம் பேசவில்லை என்பதே திட்டுக்குக் காரணம்.

 

“உன் மக அமெரிக்காக்குப் பறந்ததும் அப்பா அம்மாங்கிற உறவை மறந்துட்டா போல… ரவி கூட எனக்குக் கால் பண்ணி பேசுனான்… உன் மக யூனிவர்சிட்டி ஆபிசுக்குப் போறதா சொல்லி போனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிட்டா… நைட் ஆகியும் இப்ப வரைக்கும் கால் வரல”

 

“அவ க்ளாஸ் ஆரம்பிக்கப்போற பிசில இருப்பாங்க… இல்லனா கால் பண்ணிருப்பா”

 

“கிளிக்கு அமெரிக்கா போனதும் ரெக்கை முளைச்சிடுச்சு… மறுபடி இங்க தானே வந்தாகணும்… ரெக்கைய வெட்டி ரவிக்குக் கல்யாணம் பண்ணி வைக்குறேன்”

 

கறுவிக்கொண்டு சப்பாத்தியைச் சாப்பிட்ட மனிதரின் வார்த்தைகள் கொடுத்த காயத்தை மறைத்துக்கொண்டு குருமாவை வைத்தார் மைத்ரி.

 

அவரது மனமோ மகள் ஏன் தன்னிடம் பேசவில்லை என்ற கவலையில் மூழ்கியிருந்தது. அந்தக் கவலையோடு சேர்ந்து கணவரின் சுடுசொற்களும் அவரை வாட்டி வதைக்க ஆரம்பித்தன.

 

தேவநாராயணன் சாப்பிட்டு முடித்ததும் அவருக்குத் தெரியாமல் ஆராதனாவின் மொபைல் எண்ணுக்கு அழைத்தார் மைத்ரி.

 

அழைப்பை ஏற்றவளும் தங்கை தன்னிடமும் பேசவில்லை என்றதும் மைத்ரியின் பயம் அதிகரித்தது. நினைத்ததும் பார்க்கும் தொலைவிலா ஆர்யா இருக்கிறாள்!

 

தாய் மனம் பரிதவித்துப்போனது. ஆராதனா அன்னையின் குரல் நடுங்கவும் தைரியம் கொடுக்க ஆரம்பித்தாள்.

 

“ஆன்லைன் வாம்மா… நம்ம வாட்சப் குரூப் கால் போடுவோம்… அவ அட்டெண்ட் பண்ணுவா”

 

குருட்டு தைரியத்தோடு உரைத்தவள் அவர்கள் மூவர் மட்டும் இருக்கும் வாட்சப் குழுவிலிருந்து அழைப்பைத் தட்டிவிட்டாள். மைத்ரி அதில் இணைந்ததும் இருவரும் ஆர்யாவின் இணைப்புக்காக காத்திருந்தனர்.

 

சில நொடிகளுக்குப் பின்னர் தொடுதிரையில் தெரிந்த கட்டங்களில் ஒன்றில் ஆர்யாவின் முகம் தெரிந்ததும் தான் இரு பெண்களுக்கும் மூச்சே வந்தது.

 

“ஏன்டி கால் பண்ணல? உங்கப்பா பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசி வதைக்குறார்… பெத்த மனசு பொண்ணை கடல் கடந்து அனுப்பிட்டு பைத்தியம் மாதிரி தவிக்குதுடி… டிவில பாத்தா அமெரிக்கால வெளிநாட்டவர்கள் மேல துப்பாக்கி தாக்குதல்னு நியூஸ் வருது… என்னாச்சு ஏதாச்சுனு தெரியாம நான் கலங்கி போய் இருக்கேன் ஆர்யா”

 

கண்ணீர் விட்டு கதறினார் மைத்ரி. ஆராதனாவின் குரலும் கம்மிப் போயிருந்தது.

 

ஆர்யா சில நொடிகள் மௌனம் சாதித்தவள் டார்கெட் ஸ்டோரில் நடந்ததை இருவரிடமும் மறைக்காமல் கூறினாள். கூடவே இட்டாலியன் ரெஸ்ட்ராண்டில் ரவி தன்னிடம் நடந்து கொண்ட முறையையும் கூறியவள் தன்னை இருமுறையும் காத்தவன் டாம் என்பதை சொல்ல, இரு பெண்களுக்கும் முகம் தெரியாத அமெரிக்கன் மேல் மரியாதை பிறந்தது.

 

“அப்பா வார்த்தைக்கு வார்த்தை கலாச்சாரம் பத்தி பேசுவார்லம்மா, ரவி என்னை குடிக்க கட்டாயப்படுத்துனதை சொன்னப்ப அதை கண்டுக்க கூட இல்ல… என்னைக் காப்பாத்துன டாம் கூட நான் வீட்டுக்கு வந்தது தப்புங்கிறதுலயே நின்னார்மா… ஒரு பொண்ணா அவர் என் கிட்ட என்ன எதிர்பாக்குறார்னு தெரியல… அவர் சொன்னவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லிட்டேன்… அதுக்காக அவன் செஞ்ச கேவலமான செயலைக் கண்டுக்காம இருக்க முடியுமா? டாம் மட்டும் இல்லனா என் உயிர் டார்கெட் ஸ்டோர்லயே போயிருக்கும்மா”

 

ஆராதனாவும் மைத்ரியும் ரவியின் குணம் அறிந்து அருவருத்துப் போயினர்.

 

“நான் ராஜேஷை வச்சு ரவி கிட்ட பேசட்டுமா ஆர்யா?” ஆராதனா கேட்க வேண்டாமென மறுத்தாள் ஆர்யா.

 

“இன்னும் கொஞ்சநாள்ல யூனிவர்சிட்டி ஓப்பன் ஆகிடும்… அங்க கிளாஸ்மேட்ஸ் கிட்ட கேட்டு நான் வேற வீடு பாத்துட்டுப் போயிடுவேன்கா… என்னால உன் குடும்பத்துல குழப்பம் வரவேண்டாம்” என்றாள்.

 

“இப்ப மட்டும் என்னவாம் ஆர்யா? என் மாமியார் கிட்ட நேத்து பேசுனப்ப கூட உன்னை விட்டுட்டு ஓடி வந்ததை அந்த ரவி சொல்லல… சொன்னாலும் அந்தம்மா காமிச்சிக்கவா போகுது… எனக்காக, அம்மாக்காகனு ஒவ்வொரு தடவையும் யோசிச்சு நீ ஆபத்துல மாட்டிக்குற ஆர்யா… ஆபத்தை விடு… இவ்ளோ மோசமானவன் கூட உன்னால எப்பிடி உன் வாழ்க்கைய பிணைச்சுக்க முடியும்? வாழ்க்கைல சில நேரம் நாம நமக்காக சுயநலமா யோசிக்கணும்… இல்லனா நம்ம தான் பாதிக்கப்படுவோம் ஆர்யா… புரிஞ்சு நடந்துக்க”

 

ஆராதனா கொடுத்த அறிவுரையைக் கேட்டுக்கொண்டவள் இனி தன்னைப் பற்றி யோசித்து கலங்கவேண்டாமென இருவரிடமும் வலியுறுத்திவிட்டு அழைப்பைத் துண்டிக்கப் போனாள்.

 

“எதுக்கும் உன் அப்பா கிட்ட ரெண்டு வார்த்தை பேசிடு ஆர்யா… அந்த மனுசன் அனலா காயுறார்” என்றார் மைத்ரி மனம் பொறுக்காமல்.

 

“சரிம்மா… நான் பேசுறேன்”

 

அழைப்பைத் துண்டித்தவள் தேவநாராயணின் எண்ணுக்கு அழைத்தாள். ஒரு நொடி கூட ரிங் போகும் முன்னர் அவசரமாக அழைப்பு ஏற்கப்பட்டது. ஏற்கப்பட்ட வேகத்தில் சுடுமொழிகள் வேகமாக அவளது செவிகளில் பாய்ந்தன.

 

“படிப்பைச் சாக்கா வச்சு வெளிநாட்டுல ஊர் சுத்துறியா கழுதை? உனக்கு நிச்சயமாயிடுச்சு, அவன் வீட்டுல தான் தங்கியிருக்கனு மறந்துட்டியா? உன் நடத்தை பிடிக்காம ரவி கல்யாணத்தை நிறுத்திட்டான்னா என்ன பண்ணுவ? அப்பிடி மட்டும் நடந்துச்சுனா உன்னை அடியோட தலை முழுகிடுவேன்… எனக்குக் கௌரவம் தான் முக்கியம்… பொண்ணுனா பிறந்தவீட்டு கௌரவைத்தைக் காப்பாத்தணும்… உன்னை மாதிரி காத்துல பறக்கவிடக்கூடாது”

 

அவளது பக்கம் இருக்கும் நியாயத்தைக் காது கொடுத்துக் கேட்காமல் வசைமாரி பொழிந்த தந்தையின் சொற்கள் ஆர்யாவின் மெல்லிய மனதில் துப்பாக்கிக்குண்டுகளாய் துளைத்தன.

 

“அப்பா ரவி என்னை…”

 

“ஒரு வார்த்தை பேசக்கூடாது நீ… அடக்க ஒடுக்கமா யூனிவர்ச்சிட்டிக்குப் போனோமா படிச்சோமா பட்டம் வாங்குனோமா இந்தியாவுக்கு வந்தோமானு இருக்கணும்… எங்கயாச்சும் என் கௌரவத்தைக் குலைக்குற விதமா நீ நடந்துக்கிட்டனு கேள்விப்பட்டேன்னா பொண்ணுனு கூட பாக்க மாட்டேன், ஜாக்கிரதை… போனை வை”

 

எந்த தவறும் செய்யாத தனக்கு இந்த வசைமாரி தேவை தானா? ஏன் தந்தை எப்போதும் மகள்களை நம்ப மறுக்கிறார்? ரவியின் வார்த்தைகளை நம்பியதில் பத்தில் ஐந்தாவது தான் சொல்வதைக் கேட்பாரென நினைத்த ஆர்யாவின் நம்பிக்கைதான் அங்கே பொய்த்துப் போனது.

 

அவரது வளர்ப்பையும் கௌரவத்தையும் கேள்விக்குறியாக்க கூடாது என்று தானே டாம் அவனுடன் தங்க விடுத்த அழைப்பைக் கூட அத்துணை அழுத்தமாக மறுத்துவிட்டு வந்திருக்கிறாள்.

 

விவரம் தெரிந்த நாளில் இருந்து தந்தை அன்பாய் பேசுவாரென எத்தனை முறை எதிர்பார்த்து ஏமாந்திருப்பாள்! இந்த ஜென்மத்தில் அவளுக்குத் தந்தையின் அன்பு கிடைக்காது போல.

 

ரவி தன்னிடம் நடந்து கொண்ட முறையை அன்னை எடுத்துச் சொன்னாலும் தந்தை புரிந்துகொள்ள போவதில்லை என்பது திண்ணம்.

 

தேவநாராயணனின் வார்த்தைகள் ஆர்யாவின் மனதை இரணமாக்கிவிட அதை விட பெரிய ஆபத்தொன்று ரவியின் ரூபத்தில் அன்றே வரப்போவதை அறியாதவளாக ஆர்யா கண்ணீரில் மூழ்கிப்போனாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
49
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment