Loading

 

காதல் 3

“அறிமுகம் இல்லாதவங்க குடுக்குற காம்ப்ளிமெண்ட்ஸ் நம்மளை தலை கிறுகிறுக்க வச்சிடும்… அந்தக் காம்ப்ளிமெண்ட் ரொம்ப ரொம்ப சின்னதா இருக்கலாம்… ரொம்ப அல்பமா கூட இருக்கலாம்… அது நமக்குள்ள உண்டாக்குற உணர்வுக்கலவைய நம்மளால அவ்ளோ ஈசியா சமாளிக்க முடியாது… ஏன் இப்பிடிலாம் நம்ம ஃபீல் பண்ணுறோம் தெரியுமா? நமக்கு நெருக்கமானவங்க அந்த மாதிரி காம்ப்ளிமெண்ட் குடுக்குறதே இல்ல… அதனால தான் யாரோ ஒருத்தர் குடுக்குற காம்ப்ளிமெண்டை அவ்ளோ ஈசியா நம்ம மனசு மறக்காது… அதை நினைச்சு பாத்து திருட்டுத்தனமா குதூகலிச்சுக்கும் அந்தப் பைத்தியக்கார மனசு”

 

     -ஜெர்ரி

 

“முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் கூட வீட்டுக்கு வந்திருக்க… அவன் கொலைகாரன், கொள்ளைக்காரனா இருந்தா என்ன செய்வ? அங்க நான் இல்லனதும் குளிர் விட்டுப் போச்சா உனக்கு?”

 

போனில் இறைந்த தந்தையை எப்படி சமாளிப்பதென தெரியாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள் ஆர்யா.

 

அவளெதிரே குயுக்தியான சிரிப்போடு குறுக்கும் நெடுக்குமாக நடமாடிக்கொண்டிருந்தான் ரவி. காக்டெயிலும் பீரும் கணக்கில்லாமல் அவனுக்குள் போதையை ஏற்றியிருந்தன. நடையில் சிறிய தள்ளாட்டம்.

 

அவனை துளி வெறுப்போடு ஏறிட்டவள் “என் நிலமை அப்பிடிப்பா… ரவி என்னை பீர் குடிக்க கம்பெல் பண்ணுனார்… ஒருவேளை அவர் சொன்ன மாதிரி பீர் குடிச்சிட்டு அவர் கூடவே தள்ளாடி வீட்டுக்கு வந்திருந்தா என்னை பாராட்டிருப்பிங்களாப்பா?” என்று ஆதங்கத்துடன் தந்தையிடம் கேட்க தேவநாராயணனோ கொதிநிலைக்குப் போய்விட்டார்.

 

“முழுசா ஒரு நாள் கூட ஆகல, அதுக்குள்ள அமெரிக்கா உன்னை துடுக்கா பேச வைக்குது பாரு… இதுக்குத் தான் அந்த கண்றாவி பிடிச்ச நாட்டுக்குப் போகவேண்டாம்னு சொன்னேன்”

 

ரவி மகளை மதுபானம் அருந்த வற்புறுத்தியதை விட மகள் அதை தன்னிடம் வெளிப்படையாகச் சொன்னது தான் குற்றம் என்பது போல ஒலித்தது தேவநாராயணனின் குரல்.

 

“ப்பா…”

 

“நீ எதுவும் பேசாத… இனிமே எங்க போறதா இருந்தாலும் ரவி கூட தான் போகணும், யூனிவர்சிட்டி விட்டா வீடுனு இருக்கணும்… அதை விட்டுட்டு அமெரிக்கக்காரங்க கூட சகவாசம் வச்சுக்கிட்டனு கேள்விப்பட்டேன்னா எனக்கு ஆர்யானு ஒரு பொண்ணு பிறக்கவேல்லனு தலைமுழுகிடுவேன்… ஜாக்கிரதை” என உறுமிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

 

ஆர்யாவுக்குத் தந்தையின் பேச்சை நினைத்து எரிச்சலாக இருந்தது. ரவியின் கேடு கெட்ட நடவடிக்கையைக் கடிந்துகொள்ளாமல் அவனிடமிருந்து தன்னைப் பாதுகாத்தவனையும் தன்னையும் திட்டித் தீர்த்த தந்தை அவளுக்குள் சலிப்பை உண்டாக்கினார்.

 

மொபைலை ரவியிடம் நீட்டினாள் அவள்.

 

அவன் வாங்கி காதில் வைத்துக்கொண்டு “கவலைப்படாதிங்க மாமா… ஆர்யாவை நான் பத்திரமா பாத்துக்குறேன்” என்று பேசிக்கொண்டே அவனது அறைக்குப் போய்விட்டான்.

 

ஆர்யா தான் அமர்ந்திருந்த சோபாவை ஓங்கி குத்திவிட்டு எழுந்தவள் தனது அறைக்குள் சென்று அடைபட்டுக்கொண்டாள்.

 

டாம் அவளை அழைத்துச் சென்றதை எப்படியோ கவனித்துவிட்ட ரவி, அலெஸாண்ட்ரோ கொடுத்த காக்டெயிலை அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வந்ததும் அவன் செய்த முதல் காரியமே தேவநாராயணனின் மொபைலுக்கு அழைத்து ஆர்யா ஒரு அமெரிக்கனோடு ஊர் சுற்ற போய்விட்டாள் என்பதே!

 

அவரும் மகள் சொன்னதை செவிமடுக்காமல் ரவியின் பேச்சை நம்பி அவளை எச்சரித்துவிட ஆர்யாவுக்கு என்னடா மனிதர்கள் இவர்கள் என்று விரக்தி தட்டிவிட்டது.

 

அதிலும் ரவி படுமோசம். ஆராதனா பயந்தது இதற்காக தான் போல. இப்படி ஒருவனைக் கட்டாயம் மணமுடித்து தான் ஆகவேண்டுமா?

 

அவள் மனதின் ஓரத்தில் இக்கேள்வி உதயமானது. அடுத்த நொடியே தேவநாராயணன் கடுகடுவென்ற முகத்தோடு மனக்கண்ணில் வலம் வந்து எச்சரிக்கை செய்தார்.

 

அவரது பேச்சைக் கேட்கவில்லை என்றால் தன்னோடு சேர்ந்து அன்னையும் அல்லவா வசைமொழிகளை வாங்கி கட்டிக்கொள்ள நேரிடும். அதோடு ஆராதனாவின் மாமியார் அபர்ணா வேறு அவளைத் தேளாய் கொட்டித் தீர்ப்பாரே!

 

அன்னையையும் தமக்கையையும் மனதில் நினைத்துக்கொண்டு ரவியைப் பற்றிய தப்பெண்ணங்களை அழிக்க முயன்றவளுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்றாலும் தனக்காக யோசித்து செயலாற்றிய டாமின் ஞாபகம் வந்தது.

 

தனது அழகைப் புகழ்ந்தாலும் அதில் விரசம் தெரியவில்லை. யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன என்று இருக்காமல் தனக்காக அவன் யோசித்த விதம் ஆர்யாவுக்குப் பிடித்திருந்தது.

 

தாராளமாக பழகக்கூடிய கலாச்சாரத்தைக் கொண்டவன் என்றாலும் அவனது கண்ணியமான நடத்தையைப் பாராட்டத் தோன்றியது. தனியே அவனோடு வந்த போது கூட தன்னிடம் வரம்பு மீறவில்லையே!

 

மீண்டும் ஒரு முறை அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்க்குமெனில் கட்டாயம் அவனது செயலைப் பாராட்டி இரண்டு வார்த்தையேனும் பேசிவிடவேண்டும்.

 

ரவியும் தேவநாராயணனும் நடந்து கொண்ட விதத்தால் உண்டான எரிச்சல் மெல்ல அடங்கியது ஆர்யாவுக்கு.

 

இட்டாலியன் ரெஸ்ட்ராண்டில் சாப்பிட்ட பனினி சாண்ட்விச்சின் உபயத்தால் வயிறு நிரம்பியிருந்தது. எனவே உறங்கும் முடிவுக்கு வந்தவள் கவனமாக கதவைத் தாளிட்டுவிட்டுப் படுத்தாள்.

 

மறுநாள் விடியல் எவ்வித எதிர்மறை உணர்வுகளுமின்றி விடிந்திருந்தது.

 

பல் துலக்கிவிட்டுக் காபி குடிக்கலாமென தனது அறையை விட்டு வெளியே வந்தவள் ரவி அவனது அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருப்பதை பார்த்ததும் முந்தைய இரவின் நினைவில் சற்றே எரிச்சல் எழும்ப நின்றாள்.

 

“குட் மானிங் பேப்… உனக்காக ப்ரட் டோஸ்ட் வச்சிருக்கேன்… பசிச்சுதுனா நேத்து போனோமே அந்த இட்டாலியன் ரெஸ்ட்ராண்ட்ல ஆன்லைன் டெலிவரி உண்டு… அவங்க கிட்ட ஆர்டர் பண்ணிக்க… நான் ஈவ்னிங் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து க்ராசரிஸ் வாங்கிட்டு வருவோம்… பை”

 

அவசரகதியில் சொல்லிவிட்டு ஓடியவனை எந்த ரகத்தில் சேர்ப்பதென்றே புரியாமல் சமையலறைக்குச் சென்றவள் அங்கே ஒரு தட்டில் கறுகிப்போன ரொட்டித்துண்டுகளைப் பார்த்ததும் கடுப்படைந்தாள்.

 

“இதை சாப்பிடுறதுக்கு நான் பட்டினியா கிடந்துடுவேன்” என்று வாய்க்குள் முணுமுணுத்தவளின் நாக்கு அன்னை செய்து தரும் சூடான இட்லிக்காக ஏங்கியது.

 

அந்தச் சுற்றுவட்டாரத்தில் இந்திய உணவகம் எதுவும் இருக்கிறதா என கூகுளில் ஆராய ஆரம்பித்தாள் ஆர்யா.

 

கூகுளும் சில உணவகங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது. மெனுவில் இட்லி சாம்பார் இருக்கிறதா என தேடி ஒரு ஹோட்டலில் ஆர்டர் செய்துவிட்டுத் தனது மடிக்கணினியை ஆன் செய்தவள் மின்னஞ்சல் எதுவும் பல்கலைகழகத்திலிருந்து வந்திருக்கிறதா என பார்க்க ஆரம்பித்தாள்.

 

பின்னர் சாப்பாடு வந்துவிட அதை சாப்பிட்டுவிட்டு தனது வேலையில் மூழ்கிப்போனவள் எப்படியோ அந்த ஒரு நாளை நெட்டித் தள்ளினாள்.

 

மாலையில் சொன்னபடி ரவி வந்து சேர்ந்தான். வந்தவன் மளிகை ஜாமான் வாங்க போவோமா என கேட்டுக்கொண்டே வந்தான்.

 

“இந்தியன் ஃபுட் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு ஆர்யா… உன் கையால சமைச்சு நான் சாப்பிடணும்னு இருக்கு பாரேன்” என்று ஐஸ் வைத்தான்.

 

“அப்பிடி என்ன அவசியம் ரேவ்? பக்கத்துல இந்தியன் ரெஸ்ட்ராண்ட்ஸ் இருக்கே… அங்க போய் சாப்பிடலாமே?”

 

அலட்டிக்கொள்ளாமல் கேட்டாள் ஆர்யா. அதற்கு அசட்டுச்சிரிப்பொன்றை உதிர்த்தவன்

 

“என்ன இருந்தாலும் வீட்டுச்சாப்பாட்டோட டேஸ்ட் ஹோட்டல் ஃபுட்ல இருக்குமா பேப்?” என்று சொல்லிவிட்டு அருகிலுள்ள டார்கெட் செயின் ஸ்டோருக்குச் செல்ல ஆயத்தமானான்.

 

மனதுக்குள் பொருமியபடி ஆர்யாவும் அவனோடு கிளம்பினாள்.

 

மக்கள் கூட்டம் மிதமாக இருந்தது. மளிகை பொருட்கள் பிரிவுக்கு ஆர்யா நகர்ந்தபோது அங்கே நின்று பொருட்களை எடுத்துக்கொண்டிருந்த கணவனும் மனைவியும் ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கேட்க நேரிட்டது.

 

“ஃப்ளோரிடால இருக்குற டாலர் ஜெனரல் ஸ்டோர்ல இன்னைக்கு மதியம் ஒரு கன் ஷாட் நடந்துருக்கு”

 

“வாட்? என்ன காரணம்?”

 

“அஸ் யூஸ்வல் ஒயிட் சூப்ரிமசிஸ்ட் ஒருத்தன் ப்ளாக் பீபிள் அண்ட் ஏசியன் பீபிளை குறி வச்சு சுட்டுருக்கான்”

 

“ஓஹ்! இத்தனை வருசம் ஆகியும் இன்னும் நிறவெறி அடங்கலயே”

 

குரல்களில் சோகம் கொப்புளிக்க அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த போது திடுதிடுப்பென ஸ்டோருக்குள் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது.

 

ஆர்யா திரும்பிப் பார்க்க, ஸ்டோரின் மையத்தில் நின்று கொண்டிருந்தான் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன். அவன் கையில் ஏ.ஆர் 15 ரைஃபிள் ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் வைத்திருந்தான்.

 

க்ஷண நேரத்தில் அந்த ஸ்டோருக்குள் இருந்த வாடிக்கையாளர்களிடையே பயமும் பதற்றமும் பரவியது. கூச்சல் எழும்பவும் அந்த இளைஞன் கத்தினான்.

 

“வாயை மூடிட்டு எல்லாரும் நீல் டவுன் போடுங்க”

 

சொன்னவன் அங்கே இருந்த பொருட்களை நோக்கி சரமாரியாகச் சுடவும் மக்கள் பதறியடித்து ஸ்டோரை விட்டு ஓட ஆரம்பித்தனர்.

 

அங்கே நிலவிய கூச்சல் குழப்பத்தில் ஆர்யா பயந்து போனவளாக ரவியைத் தேடினாள்.

 

அவன் எதிர்படவும் “ரவி” என அலறினாள்.

 

“ஆர்யா… வா ஓடிடலாம்” என்று கத்தியபடி அவன் ஓடிவிட்டான்.

 

தன்னுடன் அழைத்து வந்தவள் வரவில்லையே என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் தான் மட்டும் தப்பித்தால் போதுமென ஓடியவனை அதிர்ச்சியோடு பார்த்தபடி நின்றாள் ஆர்யா.

 

அதற்குள் அந்த இளைஞன் மீண்டும் அலறியபடி ஸ்டோரிலிருந்த பணியாளர் ஒருவரின் காலில் சுட்டுவிட மொத்த கூட்டமும் பயத்தில் கதறியது.

 

“நீல் டவுன் போடுங்க… இல்லனா…” என்றபடி ரைஃபிலை வைத்து குண்டுமழை பொழிந்தான் அந்த இளைஞன்.

 

பயத்தில் ஆர்யாவின் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது. அதிலும் அந்த இளைஞன் சுட்டதில் ஒரு தோட்டா அவளது கரத்தை உரசிவிட்டுப் போகவும் பயம் கூடி நினைவிழக்க ஆரம்பித்தாள்.

 

அவள் தலை தரையில் படும் முன்னர் வலிய கரங்கள் இரண்டு அவளைத் தாங்கிக்கொண்டன.

 

கலங்கிய கண்களுக்குள் “ஆர் யூ ஓ.கே ஆர்யா?” என்றபடி டாமின் உருவம் வர மொத்தமாக நினைவிழந்தாள் ஆர்யா.

 

பின்னர் என்ன நடந்தது என அவளுக்குத் தெரியவில்லை. அவள் கண் விழித்த போது மெத்தென்ற படுக்கையில் இருந்தாள்.

 

புஜத்தில் தோட்டா உரசிய சிறு காயத்திற்கு கட்டு போட்டிருந்தார்கள். இது என்ன இடமென தெரியாமல் விழித்தவள் “ஹலோ பியூட்டிஃபுல்! குட் மானிங்” என்றபடி வந்த டாமைக் கண்டதும் திகைத்துப் போனாள்.

 

“டாம்”

 

கண்கள் கடலாய் விரிய பெயருக்கு வலிக்குமோ என்ற ரீதியில் தனது பெயரை உச்சரித்தவளைப் பார்த்து முறுவலித்தபடி அவளருகே அமர்ந்தான் டாம். அவன் கையில் வைத்திருந்த பௌலை அருகில் இருந்த சிறிய டீபாயில் வைத்தான்.

 

ஆர்யா அவன் நெருக்கமாக அமர்ந்ததும் நகரப் போக அவளை நகர விடாமல் தனது கையை ஊன்றிக்கொண்டான்.

 

அவள் மருண்டு பார்க்கவும் “டோண்ட் கெட் பேனிக்… நேத்து ஈவ்னிங் நடந்த சம்பவம் உனக்கு பெரிய ஷாக்கா இருந்திருக்கும்… கையில சின்ன காயம் தான்… பயப்பட ஒன்னுமில்ல” என்றான் மென்மையாக.

 

அவனுடன் சேர்ந்து பச்சை நிற விழிகளும் மென்மையாக கனிந்தது போன்ற மாயை அவளுக்கு.

 

ஆர்யாவின் மனக்கண்ணில் முந்தைய நாள் மாலை டார்கெட் ஸ்டோரில் நடந்த சம்பவம் திரைப்படம் போல விரிய பயத்தில் அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

 

“ஹே! பயப்பட எதுவும் இல்ல… சில் ஆர்யா” ஆதுரமாக அவளது தோளில் தட்டிக்கொடுத்தான் அவன்.

 

ஆர்யா தன்னைச் சமாளித்துக்கொண்டவள் “நீ… நீங்க எப்பிடி அங்க?” என விசாரிக்க

 

“நானும் அலெஸாண்ட்ரோவும் ஷாப்பிங் வந்தோம்… அப்ப தான் அந்த சம்பவம் நடந்துச்சு… எல்லாரும் பயந்து ஓடுனாங்க… அலெஸாண்ட்ரோ போலீசுக்குக் கால் பண்ணிட்டு அந்தப் பையனைத் தடுக்கப் போனப்ப நான் உன்னைக் கவனிச்சேன்… உன்னைத் தனியா விட்டுட்டு உன் ஃபியான்ஸ் ஓடிப்போனதையும் பாத்தேன்… நீ ஷாக் ஆகி நின்னப்ப புல்லட் உன்னை உரசிட்டுப் போச்சு… நீ மயங்கி விழப்போகுறப்ப நான் வந்து உன்னைத் தாங்குனேன்” என நடந்ததை கதை போல கூறினான் டாம்.

 

அவன் சொன்னதைக் கேட்டதும் ஆர்யாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. வருங்கால கணவனாக வரிக்கப்பட்டவன் தன்னை விட்டு ஓடியது நினைவில் வந்ததும் அவளது முகம் கறுத்துப்போனது.

 

வடி கட்டிய கோழை அவன் என திட்டித் தீர்த்தவள் தன்னைக் காப்பாற்றியவனை நன்றியுணர்ச்சியோடு ஏறிட்டாள்.

 

அதிர்ச்சி, மயக்கம், பயம் என உணர்ச்சிகளால் பீடிக்கப்பட்டவளுக்குப் பேச்சு எழவில்லை. அதை புரிந்துகொண்ட டாம் ஆதுரமாக அவளது கன்னத்தை வருடினான்.

 

மெல்லிய மயிலிறகை வைத்து கன்னத்தில் தீண்டியது போல இருந்தது ஆர்யாவுக்கு. ரவியின் பார்வையிலே கூசிப்போகும் தேகம் இப்போது சிலிர்த்ததும் ஆர்யாவுக்கே ஆச்சரியம்.

 

“தேங்க்ஸ் டாம்”

 

கண்கள் பனிக்க அவள் கூறிய நன்றியை தலையசைப்புடன் கூடிய புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டான் டாம்.

 

“ஒரு தடவை இல்ல, ரெண்டு தடவை நீங்க என்னைக் காப்பாத்திருக்கிங்க… உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன் டாம்… இந்த நன்றிக்கடனை எப்பிடி தீர்க்க போறேன்னு தெரியல” என்றாள் உணர்ச்சி மேலிட்டவளாக.

 

டாம் அவனது பச்சை வண்ண கண்களைச் சுருக்கி “எப்பிடி தீர்க்கணும்னு நான் சொல்லட்டுமா?” என்று கேட்கவும் விகல்பமின்றி தலையாட்டினாள் ஆர்யா.

 

ஈர இமைகளின் வழியே கருந்திராட்சைகளாய் மின்னிய கருவிழிகளில் மின்னியது நன்றியுணர்ச்சி என்பதை புரிந்துகொள்ளாதவனா டாம்!

 

இருப்பினும் அவளைச் சீண்ட தோன்றியது அவனுக்கு.

 

கண்களில் டன் கணக்கில் குறும்பைக் கொட்டி “வில் யூ பி மை ஜெர்ரி?” என்று கேட்டான் அவன்.

 

ஆர்யாவின் கருந்திராட்சை விழிகள் இப்போது திகைப்பில் அலைபாயத் துவங்கின. கண்ணிமைகள் படபடவென அடிக்க “டாம்…. நீங்க” என அவள் திணறவும் மென்மையாகப் புன்னகைத்தான்.

 

“ஜஸ்ட் ஃபார் ஃபன்… உடனே ஸ்டேஷூ மோடுக்குப் போயிடாத ஆர்யா” என்றவன் பின்னர் தீவிரக்குரலில் “உன் நன்றியுணர்ச்சியை காட்டணும்னு நினைச்சனா ப்ளீஸ் கால் ஆப் யுவர் மேரேஜ் வித் தட் இடியட்… அவனை மாதிரி ஒரு கோழையை கல்யாணம் பண்ணிக்கிட்டனா எந்த நிலமையிலயும் அவன் உனக்குத் துணையா நிக்கமாட்டான்… செய்வியா?” என்று கேட்டதும் ஆர்யா பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்.

 

அவளது தயக்கம் டாமிற்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும். அவனது சிவந்த வதனத்தில் இன்னும் செவ்வண்ணம் கூடியது.

 

“என்ன? நிறுத்த மாட்டியா? ஓஹ்! டிபிக்கல் இந்தியன் கேர்ள் மைண்ட் செட்… அவனை உன்னால மறக்க முடியலையா?” என்றான் சூடான குரலில்.

 

ஆர்யா பதறியவளாக “அவ்ளோ தூரம் எங்க ரிலேசன்ஷிப் டீப்பா போகல டாம்” என்றதும் கொஞ்சம் சமாதானமானான் அவன்.

 

“ஐ வில் திங் அபவுட் இட்” என்றாள் ஆர்யா.

 

உடனே டாமின் வதனம் ஜொலிக்க ஆரம்பித்தது.

 

“குட்… பி அ ஸ்மார்ட் கேர்ள்… சில்லி செண்டிமெண்டுக்காக உன்னோட வொர்த் தெரியாதவன் கிட்ட உன் லைஃபை ஒப்படைச்சுடாத” என்று அறிவுரை கூறினான் டாம்.

 

தலையை ஆட்டி அவனது அறிவுரையைக் கேட்டவளுக்குப் பசிக்கத் துவங்கியது. கையோடு கொண்டு வந்த ‘ஓவர் நைட் ஓட்ஸ்’ பௌலை அவளிடம் நீட்டினான் டாம்.

 

அதை வாங்கியவள் சாப்பிட்டுக்கொண்டே டாம் கூறிய அறிவுரையை மனதுக்குள் அசைபோட ஆரம்பித்தாள்.

 

இப்போது டாம் சொல்வதை இன்னும் சிறிது நேரத்தில் தானே செய்து முடிக்கப்போகிறோம் என்பதை அறியாதவளாக ஓட்ஸை விழுங்கினாள் ஆர்யா.

 

டாமோ ஆர்யாவுக்கும் அவளது வருங்கால கணவனுக்குமிடையே அழமான உறவில்லை என தெரிந்ததும் குதூகலிக்கத் துடித்த மனதை அடக்க அரும்பாடு பட்டான்.

 

அவனால் மனதை தான் அடக்க முடிந்தது. கள்ளத்தனமாக பெண்ணவளை ரசிக்கும் கண்கள் அவன் சொல்பேச்சு கேட்காமல் அவளை ரசிக்க ஆரம்பித்ததை அடக்க முடியவில்லை.

 

பேச்சு, பார்வை, உடல்மொழி என அனைத்திலும் மென்மையே உருவாய் இருந்தவள் அவனது ஆர்வத்துக்குத் தீனி போட்டாள். மருண்ட விழிகளையும், சிவந்திருந்த நாசியும் என்னையும் ரசியேன் என அறைகூவல் விடுத்தன.

 

ஆர்யா மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை அவளிடம் நேரடியாகப் பகிர்ந்துகொள்ள முடியாமல் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. அமெரிக்கப் பெண்ணாக இருந்தால் இந்நேரம் மனதிலுள்ளதை சொல்லியிருப்பான்.

 

இந்தியப்பெண்ணான இவள் தனது பேச்சை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற தயக்கம் அவனது நாவைக் கட்டிப்போட்டுவிட்டது.

 

டாமின் மனதுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த போராட்டத்திற்குச் சற்றும் குறைவின்றி ஆர்யாவின் மனதிலும் ஒரு கலவரம் நடந்து கொண்டிருந்தது.

 

அவள் ரசித்த வெளிநாட்டவன், அவளை இருமுறை சிக்கல்களிலிருந்து காத்தவன் மிக அருகாமையில் அமர்ந்திருப்பதில் ஒருவித தவிப்பு அவளுக்குள் இழையோடிக்கொண்டிருந்தது.

 

இந்த நிலையிலும் தனது வயிற்றுப்பசியை யோசித்திருக்கிறானே என அவனது சின்ன சின்ன செய்கையையும் ரசிக்க ஆரம்பித்திருந்தவளை டாமின் பச்சை வண்ண விழிகளின் வசீகரம் கட்டிப்போட்டுவிட்டது.

 

தந்தையைத் தவிர மற்ற ஆண்களை ஒரு எல்லைக்கு அப்பால் நிறுத்தியே பழக்கப்பட்டவள், உடன் பணிபுரியும் ஆண்களின் ரசனைப்பார்வைகளைக் கூட அலட்சியமாக உணர்வின்றி கடந்து போக கூடியவள், தந்தையின் அதீத கண்டிப்பால் வயதுக்கு

ரிய காதல் போன்ற மென்மையான உணர்வுகளைக் கூட அனுபவிக்க விரும்பாதவள் புதிதாய் அறிமுகமான வெளிநாட்டவனின் வசீகரத்திலும், அவனது அன்பான செயல்களிலும் தொலைந்து போனது விதியின் விளையாட்டாக தானே இருக்க முடியும்!

****

அடுத்த எபி நாளை வரும் டியர்ஸ் 😍

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
49
+1
5
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.