Loading

 

 

 

காதல் 26 (Final)

 

“We all are fools in love… எவ்ளோ உண்மையான வார்த்தை… காதல் மாதிரி சுயபுத்திய இழந்து பைத்தியக்காரத்தனமா நம்மளை நடமாட வைக்குற உணர்வு வேற எதுவுமில்ல… காதல்ல கான்சியசா இருந்தா அதோட மகத்துவத்தை நம்மளால அனுபவிக்க முடியாது… எப்ப நம்ம சுயத்தை இழந்து இன்னொருத்தருக்காக நம்ம புத்தி யோசிக்க ஆரம்பிக்குதோ அந்தப் புள்ளில தான் காதல் தொடங்கும்… ரொம்ப யோசிச்சு மூளைய குழப்பி கஷ்டப்பட வைக்குற அதே நேரத்துல அளவே இல்லாத சந்தோசத்தையும் குடுக்கக்கூடியது காதல் மட்டும் தான்… யாருக்காகவும் எதுக்காகவும் மாறமாட்டேன்னு அடம்பிடிக்குற பிடிவாதக்காரனை கூட காலை உரசுற பூனைக்குட்டியா காதல் மாத்திடும்… Love happens like a miracle… அந்த அற்புதத்தால யாரோ ஒருத்தரா இருக்குற ரெண்டு பேர் ஈருடல் ஓருயிரா மாறுறதுலாம் ஒரு மேஜிக் மாதிரி நடந்து முடிஞ்சிடும்… நடந்ததை உணர்றதுக்கு முன்னாடி நம்மளை காதலோட போதை மயக்கிடும்… அந்தக் காதல் தான் தாமஸ் போல்டனா இருந்த என்னை ஆர்யாவோட டாமா மாற வச்சுது… ஆர்யா தேவா இருந்தவளை தாமஸோட ஜெர்ரியா என் கூட சேர்த்து வச்சுது… மனசாலயும் உடலாலயும் எங்களை பிணைச்சது அந்தக் காதல் தான்… இது வரைக்கும் சண்டை போடுற டாம் அண்ட் ஜெர்ரிய தான் பாத்திருப்பிங்க… அதுக்கு ஆப்போசிட்டா. திகட்ட திகட்ட காதலிக்கிற இந்த டாம் அண்ட் ஜெர்ரி உங்களுக்கு புதுசா தெரியுதுல்ல? எங்க லவ் எப்பவும் இளமை மாறாம இருக்கணும்னு கடவுள் கிட்ட ப்ரே பண்ணிக்கோங்க கய்ஸ்!”

 

-டாம்

 

மருத்துவமனை படுக்கையில் மருந்துகளின் ஆதிக்கத்தால் கண் மூடி படுத்திருக்கும் அன்னையைப் பார்த்தபடி கொட்ட கொட்ட விழித்துக்கொண்டிருந்தாள் ஆர்யா.

 

மைத்ரியின் வதனத்தில் தான் எத்தனை கனிவு? கட்டிய கணவன் ஆதரவாக இல்லாத போதே இத்தனை கனிவென்றால் இவருக்கு மட்டும் மனதைப் புரிந்து நடந்துகொள்ளும் கணவன் வாய்த்திருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருந்திருப்பார்!

 

அன்னையின் தலையெழுத்தை எண்ணி வருத்தப்பட்டாள் அந்த அன்பு மகள். அவரது தலையெழுத்து இருக்கட்டும், உன் நிலை எப்படி இருக்கிறதடி என்று தவறான நேரத்தில் தலைநீட்டியது மனசாட்சி.

 

தன்னை நினைத்துக் கழிவிரக்கம் பிறந்தது ஆர்யாவுக்கு.

 

முழுதாக பத்து மாதங்கள் குழந்தையைக் கருப்பைக்குள் வைத்து காப்பது போல அவள் கட்டிக்காப்பாற்றிய காதல் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது. யாரை அவள் தனது யாதுமானவனாக நினைத்தாளோ அவன் இப்படி பொய்த்துப் போனானே!

 

தன்னுடன் காதல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டே மார்கரேட்டின் பிள்ளைக்குத் தகப்பனாக ஆகிவிட்டு அவளைச் சட்டப்படி சமாளித்துக்கொள்வேன் என்ற சவடால் வேறு.

 

கொதிப்பும் தவிப்புமான மனநிலையில் பொங்கி வந்த அழுகை நெஞ்சை பிளந்துகொண்டு வெளியேறியபோது தான் ஆராதனாவின் அழைப்பு அவளது மொபைலுக்கு வந்தது.

 

மைத்ரிக்கும் தேவநாராயணனுக்கும் மீண்டும் ஏதோ பெரிய சண்டை வந்துவிட கணவரின் சொற்கள் கொடுத்த அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு வந்துவிட்டது என்றாள் அவள்.

 

தேவநாராயணன் பயந்துபோனவராக உடனடியாக மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மூத்தமகள் மருமகனுக்குத் தகவல் சொல்லவும் அவர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

 

என்ன விவரமென கேட்டபோது ஆர்யாவின் மீது மீண்டும் வசைமாரி பொழிந்திருக்கிறார் மனிதர்.

 

“அவ வெளிநாட்டுக்காரனை கல்யாணம் பண்ணிக்கப்போறதா ரவி தம்பி சொன்னதும் என் நெஞ்சு கொதிச்சுது மாப்பிள்ளை… எப்பவும் மாதிரி நாலு வார்த்தை எதிர்த்துப் பேசுவானு நினைச்சேனே தவிர இப்பிடி அடியோட சாய்ஞ்சிடுவானு யோசிக்கல… எல்லாத்துக்கும் அந்தக் கடங்காரி ஆர்யா தான் மாப்பிள்ளை காரணம்”

 

ஆராதனா கொதித்துப் போய் தேவநாராயணனை திட்டித் தீர்த்துவிட மனிதர் மௌனம் காக்க ஆரம்பித்திருக்கிறார். ராஜேஷ் மாமியாரைக் கவனித்துக்கொள்ளவும், இதர உதவிகளுக்காகவும் மருத்துவமனையில் மனைவியோடு தங்கிவிட்டான்.

 

அன்னைக்கு வந்த சிக்கலைக் கேட்ட பிறகும் ஆர்யாவால் ஆஸ்டினில் இருக்க முடியவில்லை.

 

உடனடியாக பிரதீப்பிடம் விமானப்பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்யமுடியுமா என உதவி கேட்டவள் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில் அவசர விடுமுறைக்கு விண்ணப்பித்தாள்.

 

அவளது நல்ல நேரம் மறுநாள் விமானச்சீட்டு கிடைத்துவிட தனது உடமைகளை எடுத்துக்கொண்டு டாமிடம் சொல்லாமல் வீட்டை விட்டுக் கிளம்பியவள் இப்போது வரை அவனுடைய மொபைல் அழைப்புகளை ஏற்கவில்லை.

 

இதோ மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. மூன்றாம் நாளான இன்று டாமிடமிருந்து எந்த மொபைல் அழைப்பும் இல்லாதது ஒரு விதத்தில் நிம்மதியைக் கொடுத்தாலும் மற்றொரு விதத்தில் அமைதியின்மையைத் தோற்றுவித்தது.

 

ஆராதனாவை ராஜேஷுடன் அனுப்பி வைத்துவிட்டு அன்னைக்குத் துணையாக மருத்துவமனையில் இருந்துகொண்டாள் ஆர்யா, தேவநாராயணன் எக்காரணத்தைக் கொண்டும் தனது அன்னையைப் பார்க்க வரக்கூடாதென்ற நிபந்தனையுடன்!

 

வந்தால் எங்கே ஏடாகூடமாக அவரைப் பேசிவிடுவோமோ என்ற பயம் அவளுக்கு. தேவநாராயணன் மூன்று நாட்களாக அங்கே வராமல் போனது கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.

 

இம்மூன்று நாட்கள் ஒரு பொட்டு உறக்கம் இல்லை அவளுக்கு. மனம் ஆழிப்பேரலை கண்ட கடலாய் மாறிப்போயிருக்க எங்கிருந்து தூக்கம் வரும்!

 

கண் மூடி சுவரில் சாய்ந்தவள் யாரோ கதவைத் திறக்கவும் எழுந்தாள்.

 

வந்தவர் செவிலி. மைத்ரியைப் பரிசோதித்துவிட்டு ஆர்யாவிடம் சில மருந்துகளை வாங்கவேண்டுமென சொல்லிவிட்டுச் சென்றார்.

 

அவர் சென்று சில நிமிடங்கள் கழித்து ராஜேஷ் வந்தான். ஆர்யா அவனிடம் மருந்துச்சீட்டைக் கொடுக்கும்போதே

 

“நீ வீட்டுக்குப் போம்மா… கொண்டு வந்த லக்கேஜை கூட இங்கயே வச்சிருக்க பாரு… இன்னைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடு… நானும் ஆராதனாவும் அத்தைய கவனிச்சுக்குறோம்” என்றான்.

 

தேவநாராயணன் முகத்தில் விழிக்கக்கூடாதென நினைத்தவளுக்கு அவரது வீட்டுக்குச் செல்ல மனம் ஒப்பவில்லை.

 

“இல்ல மாமா..”

 

தயங்கியவளிடம் சாவியொன்றை நீட்டினான் ராஜேஷ்.

 

“பிரதீப்போட சென்னை ஃப்ளாட் சாவி… நீ அமெரிக்கா போற வரைக்கும் அங்கயே தங்கிக்கலாம் ஆர்யா… நேத்து நானும் ஆருவும் புரொவிசன் எல்லாம் வாங்கி வச்சிட்டோம்”

 

கண்கள் பனித்தன ஆர்யாவுக்கு. சாவியை வாங்கிக்கொண்டவள் கிளம்பினாள்.

 

அவள் சென்றதும் பெருமூச்சுவிட்டான் ராஜேஷ். உடனே அவன் ஒரு நபருக்கு அழைத்து விவரத்தைச் சொன்னான்.

 

“நான் அத்தைக்கு மெடிசின் வாங்கணும்… அப்புறமா பேசுறேன்” என அழைப்பைத் துண்டித்தான் அவன்.

 

ஆர்யா மருத்துவமனையிலிருந்து கேப் புக் செய்தவள் பிரதீப்பின் அப்பார்ட்மெண்டை வந்து சேர முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது.

 

சென்னையின் வழக்கமான போக்குவரத்து நெரிச்சலோடு ஒப்பிடும்போது இது குறைவான காலதாமதம் என்பதால் பெரிதாகச் சோர்வடையாதவள் மின் தூக்கியில் தனது ரோலர் சூட்கேசுடன் ஏறி பிரதீப்பின் ஃப்ளாட் இருக்கும் தளத்தை அடைந்தாள்.

 

அவனது ஃப்ளாட் எண்ணைத் தேடியவள் அதை கண்டுபிடித்து அங்கே நிற்கும்போதே கதவு திறந்தது.

 

பூட்டியிருந்த ஃப்ளாட்டை யார் திறந்தது என அவள் திடுக்கிடும்போதே வேகமாக ஒரு கரம் அவளை உள்ளே இழுத்துக்கொண்டது.

 

என்னவென சுதாரிக்கும் முன்னர் ஆர்யா ஹால் சோபாவில் சரிந்து விழ கதவும் டொம்மென்ற சத்தத்தோடு மூடப்பட்டது.

 

பயமும் கோபமுமாக நிமிர்ந்தவளை எதிரில் நின்றவனின் கடினப்பார்வை வாயடைக்க வைத்துவிட்டது.

 

பச்சை விழிகளில் கோபத்தீ சுடர்விட கல்லினும் கடினமானவன் நான் என்ற தோரணையோடு மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவன் சாட்சாத் டாம் தான்.

 

ஆர்யாவுக்குத் திடீரென அவனை அங்கே பார்த்த அதிர்ச்சி தீரும் முன்னர் கோபம் துளிர்த்தது.

 

என்னவோ உடையவன் போல உரிமையோடு இழுத்துத் தள்ளுவதெல்லாம் பிரமாதம் தான் என எள்ளலாக நினைத்தவள் சூடாகச் சொற்களை வீசத் துவங்கினாள்.

 

“இப்பிடி நடந்துக்க உனக்கு வெக்கமா இல்ல டாம்?”

 

“நான் ஏன் வெக்கப்படணும்? என் கிட்ட பேசாம, இந்தியா போறதை பத்தி ஒரு வார்த்தை இன்ஃபார்ம் பண்ணாம ஓடி வந்த நீ தான் வெக்கப்படணும்”

 

அவளுக்குக் கிஞ்சித்தும் குறைவில்லா கோபத்தோடு அவனிடமிருந்து பதிலடி வந்தது.

 

“உன் கிட்ட நான் ஏன் சொல்லணும்? நான் ஒன்னும் உன்னோட அடிமை இல்ல”

 

“அடிமைனு நானும் சொல்லலையே… நாம பார்ட்னர்ஸ்… வீ ப்ளாண்ட் டு கெட் மேரிட்… அது ஞாபகம் இருக்கா உனக்கு?”

 

“மேரேஜ்… அந்த மேரேஜ் நடக்கவே போறதில்ல மிஸ்டர் தாமஸ் போல்டன்… இங்க இருந்து வெளிய போயிடுங்க… இது என் மாமா எனக்காக ஏற்பாடு பண்ணுன வீடு”

 

டாம் நக்கலாகச் சிரித்தான்.

 

“நீ பேசுன வார்த்தைகள்ல நிறைய மிஸ்டேக்ஸ் இருக்கு ஜெர்ரி… நம்பர் ஒன் மிஸ்டேக் நம்ம மேரேஜ் ஆல்ரெடி முடிவான ஒன்னு… அதை கடவுளே நினைச்சாலும் நிறுத்த முடியாது… நம்பர் டூ, இந்த வீட்டை உனக்காக இல்ல, நமக்காக ராஜ் ஏற்பாடு பண்ணிருக்குறார்”

 

“பொய் சொல்லாத டாம்” அவசரமாக இடைமறித்தவள் திருமணம் நடக்குமென அவன் சொன்னதற்கு இன்னும் பதிலடி கொடுக்கவில்லை என்பது புத்தியில் உறைக்கவும் “உன்னைக் கல்யாணம் பண்ண எனக்கு விருப்பமில்ல” என்றாள் கோபத்தோடு.

 

டாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சோபாவில் அமர்ந்தான். கால் மேல் கால் போட்டுக்கொண்டவன் “என்ன காரணம்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று விசாரிக்கும் தொனியில் கேட்கவும் ஆர்யாவுக்கு எரிச்சல் வந்துவிட்டது.

 

இன்னும் இவன் பேராசிரியன், நான் மாணவி என்று நினைத்துக்கொண்டிருக்கிறான் போல.

 

முகம் கடுக்க “மார்கரேட்டோட குழந்தைக்கு அப்பாவா இருக்குறவனை நான் எப்பிடி கல்யாணம் பண்ணிக்க முடியும்?” என அவள் கேட்டது தான் தாமதம் டாமின் முகத்தில் கோவச்சிவப்பேறியது.

 

“வாட்? கம் அகெய்ன்”

 

“நீ என் கூட லிவின்ல இருந்தப்பவே மார்கரேட் கூடவும் ரிலேசன்ஷிப்ல இருந்திருக்க… அவ கன்சீவ் ஆனதும் அந்த பேபிக்கு ரெஸ்பான்சிபிளிட்டி எடுத்துக்காம அவாய்ட் பண்ணுற…. உன்னை மாதிரி ஒருத்தனை நான் எப்பிடி கல்யாணம் பண்ணிப்பேன் சொல்லு” என முடித்தவள் அவன் மீதிருக்கும் காதல் இன்னும் குறையாத வேதனையில் “ஹவ் குட் யூ டூ திஸ் டு மீ டாம்? (ஏன் எனக்கு இப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணுன?)” என்றாள் வேதனையோடு.

 

அவளது வேதனை டாமையும் சுட்டது.

 

இருப்பினும் தனது மனம் இளகுவதைக் காட்டிக்கொள்ளாமல் பிடிவாதத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டான் அவன்.

 

“அதே கேள்வி தான் எனக்கும்… ஹவ் குட் யூ திங்க் லைக் தட் அபவுட் மீ ஜெர்ரி? (உன்னால எப்பிடி என்னைப் பத்தி இப்பிடிலாம் யோசிக்க முடிஞ்சுது?) நான் மேகியோட உறவை முறிச்சதுக்கு அப்புறமா ஏன் அகெய்ன் அதை புதுப்பிக்க போறேன்? உன் பேச்சுல லாஜிக் இருக்கா ஜெர்ரி?”

 

ஆர்யா இப்போது குழம்ப ஆரம்பித்தாள். அன்று சட்டப்படி அவளை அணுகுவேன் என்றவன் இன்று அவளது குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்கிறான். இதில் எது உண்மை?

 

“நீ அவளை லீகலா ஃபேஸ் பண்ணுவேன்னு சொன்னியே டாம்?”

 

“அவ என்னை மிரட்டுனதை பாத்து நீ பயந்துடுவியோனு சொன்னேன்”

 

“அவ குழந்தைக்கும் அவளுக்கும் நீ பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கனு சொன்னா… அவ குழந்தையோட அப்பா மிஸ்டர் போல்டன்னு தெளிவா சொன்னாளே”

 

தவிப்போடு சொல்லி முடித்தவளை டாம் பார்த்த பார்வையில் ஏமாற்றம்.

 

“மிஸ்டர் போல்டன் நான் மட்டுமில்ல ஜெர்ரி… என் அப்பாவையும் சுருக்கமா மிஸ்டர் போல்டன்னு தான் கூப்பிடுவாங்க”

 

முகம் கறுக்க அவன் சொல்லி முடிக்கவும் ஆர்யாவுக்குள் மின்வெட்டாக அதிர்ச்சி ஒன்று பரவியது.

 

“அப்ப… மார்கரேட்…” தடுமாறிப்போனாள் அவள்.

 

“மார்கரேட் சொன்ன மிஸ்டர் போல்டன் நான் இல்ல… மிஸ்டர் எரிக் போல்டன்… என் அப்பா”

 

முகம் கறுக்க அமர்ந்திருந்தவன் வேறு வழியின்றி ஆர்யாவிடம் நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான்.

 

“அப்பா மார்கரேட்டை மேரேஜ் பண்ணிக்கிட்டார்… அவ அப்பாவோட பிசினசுக்கு முக்கியமான சீக்ரேட் டாக்குமெண்டைத் திருடுறதுக்காக காசு வாங்கிட்டு அப்பாவ காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்கா… அவர் முழுசா அவளை நம்ப ஆரம்பிச்சதும் டாக்குமெண்டோட ஓடிட்டா… பட் ரொம்ப நாள் அவளால சந்தோசமா இருக்க முடியல… காரணம் குற்றவுணர்ச்சி… அப்பா கிட்ட போய் மன்னிப்பு கேட்டிருக்கா… அவரால அவளை மன்னிக்க முடியல… அதான் ஜில்கர் பார்க்ல என் கிட்ட பேச வந்தா… அடிக்கடி என்னைப் பாக்க ட்ரை பண்ணுனா… நான் தீவிரமா விசாரிச்சப்ப அவ ப்ரெக்னெண்ட்னு தெரிஞ்சிக்கிட்டேன்.. அவ குழந்தைக்கு பயாலஜிக்கல் ஃபாதர் என் அப்பானு சொன்னா…

 

நானும் அப்பாவும் அதை நம்பல… நம்ம மேரேஜ் அனவுன்ஸ்மெண்டுக்காக நியூமரோல ட்ரீட் வச்சோமே… அப்ப நானும் அப்பாவும் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பாக்கலாம்னு டிசைட் பண்ணுனோம்… ப்ரீ-நாட்டல் பேட்டர்னிட்டி டெஸ்ட் எடுத்தோம்… அவ பேபிக்கு அப்பா தான் பயாலஜிக்கல் ஃபாதர்னு ரிசல்ட் வந்துச்சு… அப்பாக்கு அவளை மறுபடி நம்ப மனசு இல்ல… பட் மேகி மாறிட்டேன்னு சொன்னா… நான் அவளை வெயிட் பண்ணச் சொன்னேன்… யாரோ வேண்டாதவங்க அவளை எனக்கு எதிரா தூண்டிவிட்டதும் நம்ம வீட்டுக்கு வந்து கன்னாபின்னானு பேசிட்டுப் போயிருக்கா.. அப்பாக்கு அவரோட பிசினஸை பாத்துக்க வாரிசு வேணும்னு ஆசை… அவளுக்குப் பிறக்குற பேபிய வாரிசா வளத்துக்கோங்கனு சொல்லிட்டேன்… நீ இந்தியாக்கு வந்ததும் இதைப் பத்தி பேசி முடிவு பண்ணுனோம் ஜெர்ரி… நீ எப்பிடி என்னைப் பத்தி இவ்ளோ தப்பா யோசிச்ச?”

 

ஆர்யாவால் பதில் சொல்ல முடியாத நிலை. அவனது வார்த்தைகளுக்குத் தானாக ஒரு அர்த்தம் எடுத்துக்கொண்டு சொல்லாமல் இந்தியா வந்ததோடு வார்த்தைகளாலும் வதைத்து விட்டாள் அல்லவா!

 

குற்றவுணர்ச்சியில் கூனிக் குறுகிப் போனவளின் பதில் கண்ணீராக வரவும் டாமிற்கு அவள் மீதிருந்த வருத்தம் பறந்தது.

 

எழுந்து வந்து அவளை அணைத்து உச்சி முகர்ந்தான்.

 

“உன் கிட்ட இதை நான் சொல்லிருக்கணும் ஜெர்ரி… நான் இருக்கிறப்ப அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணுனதுக்கே நீ முகம் சுளிச்ச… உன்னால குழந்தை மேட்டரை ஏத்துக்க முடியாதுனு மறைச்சிட்டேன்… அப்பாவ பத்தி நீ தப்பா நினைச்சுடக்கூடாதுங்கிற ஆதங்கம் எனக்கு”

 

“இருந்தாலும்… நான்…”

 

பேச்சு கோர்வையாக வராமல் அழுதாள் ஆர்யா.

 

மூன்று நாட்கள் துக்கத்திலும் வேதனையிலும் நாட்களைக் கழித்தது எல்லாம் வீண்! கொஞ்சம் நிதானித்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?

 

அவனைப் பிரிய அவளுக்கு மட்டும் உவப்பாகவா இருந்தது? எத்தனை பெரிய வலி அது!

 

ஆர்யாவின் ஆற்றாமை எல்லாம் கண்ணீராக வெளியேற, அவளது கூந்தலை நீவி ஆறுதல்படுத்தினான்.

 

அழுது ஓய்ந்தவளை சோபாவில் அமரவைத்தவன் தண்ணீர் தம்ளரை நீட்டவும் வாங்கி அருந்தினாள் ஆர்யா.

 

தலையைக் குனிந்தபடி “சாரி டாம்” என்றாள் இன்னும் தெளிவாகாத குரலில்.

 

டாம் அவளது மோவாயை நிமிர்த்தியவன் வருத்தத்தில் தோய்ந்திருந்த கண்களின் இமை மீது முத்தம் பதித்தான்.

 

“இட்ஸ் ஓ.கே ஜெர்ரி… இனிமே எந்தப் பிரச்சனையா இருந்தாலும் என் கூட இருந்து சண்டை போடு… வீ வில் சால்வ் தெம் பை அவர் ஓன் டெக்னிக்ஸ்… இப்பிடி பிரிஞ்சு வராத ஜெர்ரி… நீ போன நிமிசத்துல இருந்து எனக்கு உலகமே அழிஞ்ச ஃபீல்… நீ இல்லாம வாழுறதுக்கு நான் இன்னும் பழகல ஜெர்ரி”

 

சொல்லும்போது டாமின் பச்சைவண்ண விழிகளும் கலங்கின.

 

“இனிமே இப்பிடி ஒரு தப்பை செய்யமாட்டேன் டாம்… ஐ ஸ்வர்”

 

பிரிந்தவர்களின் பிணக்கு தீர்ந்து சுமூக நிலை வந்துவிட டாம் மைத்ரியைப் பார்க்க விரும்பினான். ‘மாம்’ என்று பெயருக்கு ஒன்றும் அவன் அழைக்கவில்லையே!

 

ஆர்யா மாலையில் ‘விசிட்டர்ஸ் ஹவரின்’ போது அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

 

அங்கே அவள் பார்க்க விரும்பாத நபர்கள் மைத்ரியைப் பார்க்க வந்திருக்க ஒரு நொடி அங்கிருந்து சென்றுவிடலாமா என யோசித்தது ஆர்யாவின் உள்ளம்.

 

ஏனெனில் அங்கே தேவநாராயணன் மட்டுமில்லை, அபர்ணா மற்றும் அவரது புதல்வன் ரவியும் இருந்தார்கள்.

 

தேவநாராயணன் இளைய மகளையும் அவளது தோளை அணைத்தபடி நின்ற டாமையும் பார்த்த பார்வையில் சத்தியமாக பழைய திமிர் இல்லை.

 

மனைவி வேரற்ற மரமாகச் சாய்ந்தபோதே அவருக்குள் இருந்த திமிரும் ஆணவமும் சாய்ந்துவிட்டது. இப்போது அவருக்குள் வியாபித்திருப்பது பயம் மட்டுமே! அதற்கு காரணம் சற்று முன்னர் மருமகனிடம் மனைவி சொல்லிக்கொண்டிருந்த செய்தி.

 

“என் தலை சாயுறதுக்கு முன்னாடி ஆர்யாவுக்கும் டாமுக்கும் கல்யாணம் செஞ்சு பாத்துடணும் மாப்பிள்ளை… அவ என்னை அமெரிக்கா கூட்டிட்டுப் போகணும்னு ஆசைப்படுறா… இந்த தடவை அவ கல்யாணமாகி புருசனோட போகணும்… ஆர்யா கிட்ட இதை பத்தி பேசுங்க மாப்பிள்ளை”

 

கண் முன்னே நடமாடியபோது மனைவியை அலட்சியம் செய்த ஆண் திமிர், மனைவி இனி தூரமாகச் செல்லப்போகிறார் என்பதை அறிந்ததும் பறந்தோடிப்போனது.

 

இளையமகள் எங்கே மனைவியைக் கண்காணாத தொலைவுக்கு நிரந்தரமாக அழைத்துச் சென்றுவிடுவாளோ என்ற பயத்தோடு ஆர்யாவுக்காகக் காத்திருந்தார் மனிதர்.

 

வருங்கால கணவனோடு வந்த இளையமகள் அவரைப் பார்த்தாளே தவிர வேறெதுவும் கேட்கவில்லை.

 

மைத்ரி டாமை நேரில் கண்ட மகிழ்ச்சியில் பூரித்துப்போனார். மொழி தெரியாத பிரச்சனை வேறு. என்ன பேசுவதென தெரியாது தவித்தவரிடம் “ஹவ் ஆர் யூ மாம்?” என்று தானே பேச்சை ஆரம்பித்தான் டாம்.

 

“இவ்ளோ கூட்டம் இருக்கவேண்டாம் மாமா… நீங்க மட்டும் இருங்க… மத்தவங்களைக் கிளம்ப சொல்லுங்க” என்றாள் ஆர்யா ராஜேஷிடம்.

 

ராஜேஷ் சொல்லாமலே தேவநாராயணன் அடிபட்ட பார்வையோடு வெளியேறிவிட அபர்ணாவிடம் டாமைக் காட்டி கிசுகிசுத்தபடி நகர்ந்தான் ரவி.

 

மூவரும் வெளியேறியதும் டாமுக்கும் மைத்ரிக்கும் மொழிபெயர்ப்பாளராகிப் போனாள் ஆர்யா. மனவருத்தத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்றுவதில் டாம் நிபுணன் ஆயிற்றே!

 

அவனிடம் பேசிய பதினைந்தாவது நிமிடத்தில் மைத்ரியின் முகத்திலிருந்த வாட்டம் அகன்று புன்சிரிப்பு எட்டிப் பார்த்தது.

 

அவர் டாமிடம் வைத்த வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். இங்கிருந்து அமெரிக்கா கிளம்பும் முன்னர் தங்கள் முறைப்படி ஆர்யாவைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்பதே!

 

கரும்பு தின்ன கசக்குமா என்ற ரீதியில் டாம் உடனடியாகச் சம்மதித்துவிட்டான்.

 

பெற்றோர் இல்லாமல் எப்படி மணமுடிப்பான் என்று ஆர்யா யோசிக்கையில்

 

“நம்ம டெக்சாஸ் போனதும் எங்க முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலாம் ஜெர்ரி… அங்க என் அம்மாவும் அப்பாவும் இருப்பாங்க… மாம் எப்பிடியும் நம்ம கூட தானே வரப்போறாங்க… மாம்கு விசா ரெடியா ராஜ்?” என்று கேட்டு அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் டாம்.

 

பிரதீப் ஆர்யாவைப் பல்கலைகழகத்தில் சந்தித்த போதே அதற்கான ஏற்பாட்டை ராஜேஷ் ஆரம்பித்திருந்தான். அதை டாமிடம் பேசும் போது சொல்லியிருந்தான்.

 

மைத்ரியின் உடல் நலம் தேறிய பிறகு இந்தியமுறைப்படி திருமணத்தை முடித்துவிடலாம். பின்னர் அமெரிக்காவில் கிறிஸ்தவ முறைப்படி திருமணத்தை வைத்துக்கொள்ளலாமென அவர்கள் பேசி முடிக்க டாம் லிண்டாவிடம் விவரத்தைத் தெரிவித்தான்.

 

அவர்கள் பேசிக்கொள்ளட்டுமென வெளியே வந்த ஆர்யா அங்கே கிடந்த இருக்கையில் ஓய்ந்து போய் கண் மூடி அமர்ந்திருந்த தேவநாராயணனைப் பார்த்ததும் ஒரு கணம் தயங்கினாள்.

 

பின்னர் தைரியமாக அவர் முன்னே போய் நின்றவள் “அப்பா” என்று அழைக்கவும் விழிகளைத் திறந்தவர் இளையமகள் ஸ்வாதீனமாக தன்னிடம் பேசுவதை நம்பவியலாமல் அமைதி காத்தார்.

 

ஆர்யாவுக்கு அவரிடம் சண்டை போடவும், கோபப்படவும், அவரை வெறுக்கவும் ஏகப்பட்ட காரணங்கள் இருந்தன. ஆனால் ஒரே ஒரு காரணம் அவளை எதுவும் செய்யவிடாமல் தடுத்தது. அது தந்தை – மகள் உறவு.

 

அவர் வேண்டுமென்றால் மகளைத் துச்சமாகப் பேசி தூக்கியெறிந்திருக்கலாம். ஆனால் அவளுக்கு அப்படியில்லையே!

 

“என் கல்யாணத்துக்கு வருவிங்களா? இல்ல பிடிக்காத மகள் கல்யாணம்னு வராம இருந்துடுவிங்களா?”

 

அமைதியாக அவள் வினவ தேவநாராயணின் முகம் கலங்கிப்போனது.

 

எத்தனை சாபங்கள் கொடுத்திருப்பார்? எத்தனை பெரிய வார்த்தைகளை வாரி இறைத்திருப்பார்? இதற்கெல்லாம் பிறகும் இவ்வளவு அமைதியாக திருமணத்துக்கு வருவீர்களா என விசாரிப்பவளின் முன்னே அவரது கர்வம் சுக்குநூறாக நொறுங்கி மண்ணோடு மண்ணானது.

 

ஏற்கெனவே மனைவிக்கு மாரடைப்பு வந்த அதிர்ச்சி, இன்னும் சில நாட்களில் மனைவி தன்னை விட்டு நெடுந்தூரம் செல்லப்போகிற வேதனை, வெறுத்து ஒதுக்கிய மகள் எவ்வித கோபத்தையும் காட்டாமல் பேசிய விதம் அனைத்தும் சேர்ந்து அவரை உணர்ச்சிப்போராட்டத்தில் தள்ளிவிட முதல் முறையாக மனம் நொந்து கண் கலங்கினார் மனிதர்.

 

மகள் என்றும் பாராமல் யாரை பேசக்கூடாத வார்த்தை பேசினாரோ அவள் முன்னே கைகூப்பினார்.

 

“என் கட்டுப்பாட்டை மீறிப் போன கோவத்துல ஆணவமா உன்னை என்னென்னவோ பேசிருக்கேன்… மைத்ரியையும் வார்த்தையால வதைச்சிருக்கேன்… ஒரு ஆம்பளையா ஆணவமா இதெல்லாம் செஞ்ச நான் பொண்டாட்டியோட தயவு இல்லாம வாழ பழகிக்கலயே… எனக்குனு இல்ல, பொண்டாட்டிய ஆட்டி வைக்குற எந்த ஆம்பளைக்கும் அவ இல்லாம எப்பிடி வாழுறதுங்கிறது தெரியாத புதிர்… உன் கல்யாணத்துக்கு வர்ற அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கானு தெரியல… ஆனா எனக்காக மைத்ரிய அமெரிக்காக்கு கூட்டிட்டுப் போற எண்ணத்தைக் கைவிட்டுடு ஆர்யா”

 

ஆர்யாவுக்கு அவர் கைகூப்பியதைப் பார்த்ததும் மனம் தாங்கவில்லை.

 

அவரது கையை இறக்கிவிட்டவள் “அவங்களையும் உங்களையும் நான் எப்பவும் பிரிக்க மாட்டேன்… ஆனா என் அம்மாவ இன்னொரு தடவை மனசளவுல நோகடிச்சிங்கனா அவங்களை என்னோட அழைச்சிட்டுப் போறதை விட எனக்கு வேற ஆப்சன் கிடையாது” என்றாள்.

 

தேவநாராயணன் கண்களைத் துடைத்துக்கொண்டவர் “இனிமே மைத்ரிய நான் கஷ்டப்படுத்தமாட்டேன் ஆர்யா… அவ என் கண்ணு முன்னாடி மூர்ச்சையாகி விழுந்ததை மறக்க முடியல” என்றார்.

 

கூடவே “இதுவரைக்கும் உனக்கு அப்பாவா என் கடமைய செஞ்சிருக்கேன்… இந்தக் கல்யாணத்தையும் நான் செய்ய ஆசைப்படுறேன்” என்றார்.

 

“வேண்டாம்… உங்களுக்குப் பிடிக்காத கல்யாணம் இது… என் அப்பாவா நீங்க கலந்துக்கிட்டா மட்டும் போதும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள் ஆர்யா.

 

இனி அவரது பணத்தில் எந்தச் செலவும் செய்ய பிரியப்படவில்லை அவள். திருமணத்தைக் கூட எளிமையாகக் கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டாள்.

 

மைத்ரியின் உடல்நிலை சரியானதும் ஆர்யாவின் ஆசைப்படி கோவிலில் வைத்து அவள் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி தனது மனையாள் ஆக்கிக்கொண்டான் டாம்.

 

எவ்வித ஆடம்பரமுமின்றி பெற்றோர், பெரியோர் மட்டும் கலந்துகொண்ட அத்திருமணம் நல்லவிதமாக நடந்தேற ஆனந்தக்கண்ணீருடன் மகளையும் மருமகனையுன் ஆசிர்வதித்தார் மைத்ரி.

 

ஆர்யாவுக்கு ஏனோ தேவநாராயணனிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. ஆனால் தமக்கை – மாமாவிடம் ஆசி பெற்றுக்கொண்டாள்.

 

டாம் அத்திருமணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தான். பழக்கமற்ற வேஷ்டி இடுப்பிலிருந்து நழுவிவிடுமோ என்ற பயத்தையும் தாண்டி முதல் முறையாக பாரம்பரிய உடையான பட்டுப்புடவையில் ஜொலித்த ஆர்யாவை வைத்தக் கண் வாங்காமல் பார்த்து நெஞ்சில் நிரப்பிக்கொண்டான் அந்தக் காதல் கணவன்.

 

இந்தியாவில் திருமணத்தை முடித்துக்கொண்ட கையோடு அமெரிக்காவில் கிறிஸ்தவ முறைப்படியிலான திருமணத்தை விம்பர்லியில் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டான் அவன்.

 

தேவநாராயணன் சொன்னபடி மைத்ரியை அன்போடு நடத்துவதைக் கண்காணித்து திருப்தியுற்ற பிறகு டாமோடு அமெரிக்கா கிளம்பத் தயாரானாள் ஆர்யா.

 

ஆராதனாவுக்கு மாதவிலக்கு தள்ளிப் போயிருந்தது. மைத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோகத்தில் அதை கவனிக்கத் தவறிவிட்டாள். தங்கையிடம் மட்டும் தகவலைப் பகிர்ந்திருந்தாள். மறுநாள் மருத்துவ பரிசோதனை செய்ய மகப்பேறு மருத்துவரிடம் செல்வதாக இருந்தவளிடம் தன்னிடம் தான் நற்செய்தியை முதலில் சொல்லவேண்டுமென கேட்டுக்கொண்டாள் ஆர்யா.

 

விமானத்துக்குக் கிளம்பும் முன்னர் தேவநாராயணன் ஆர்யாவிடம் ஒரு வங்கிக்கணக்கு புத்தகத்தைக் கொடுத்தார். என்னவென பார்த்தவளிடம்

 

“உன் கல்யாணத்துக்காக நான் சேர்த்து வச்ச பணத்தை ஃபிக்சட்ல போட்டிருக்கேன்… உனக்கு என் பணத்தை யூஸ் பண்ண பிடிக்கலனு தெரியும்… ஆனா என் பேரப்பிள்ளைங்களுக்கு ஒரு தாத்தாவா இதை நான் செஞ்சதா இருக்கட்டும்” என்றார் அவர்.

 

பிடிக்காத மகள் – விரும்பாத மருமகன்! ஆனால் பேரப்பிள்ளைகள் என்றால் மட்டும் மனம் கனிந்துவிடும் போல! அதுவும் அவர்கள் பிறக்கும் முன்னரே!

 

மறுப்பு கூறாது வாங்கிக்கொண்டாள் ஆர்யா.

 

டாமுடன் விமானம் ஏறியவளின் மனம் இம்முறை சொல்லவொண்ணா நிம்மதியில் ஆழ்ந்திருந்தது.

 

விம்பர்லியில் வெண்ணிற கவுன் மற்றும் வெய்ல் அணிந்து கையில் பியோனி மலர்க்கொத்தோடு நடந்த போதும் அதே நிம்மதிதான்.

 

தான் கொடுத்த முத்தும் வைரமும் சேர்ந்த காதணியை ஆர்யா அணிந்திருந்ததில் லிண்டாவுக்குப் பெருமை தாங்கவில்லை.

 

எரிக் போல்டனின் முகத்தில் டாமின் திருமணத்தைக் காணும் குதூகலம். கூடவே மார்கரேட்டுடன் சமாதானமாகிவிட்டதில் தொழிலுக்கு வாரிசு வரப்போகிறதென்ற உற்சாகம் வேறு!

 

வேலை மற்றும் தொழில் காரணமாக இந்தியாவில் நடந்த திருமணத்துக்கு வர முடியாத நவீன் – மதுரிமா ஜோடி, அலெஸாண்ட்ரோ – எல்சா ஜோடி இத்திருமணத்தைக் காணும் ஆவலோடு நின்றிருந்தார்கள்.

 

தம்பதி சமேதராக டாமுடன் சேர்ந்து பாதிரியார் முன்னே நின்றாள் ஆர்யா. அடுத்து வாக்குறுதிக்கான நேரம்!

 

“I, Thomas, take you, Arya, to be my wife. I promise to be faithful to you, in good times and in bad, in sickness and in health, to love you and to honor you all the days of my life”

 

டாம் சொல்லி முடிக்கவும் ஆர்யாவும் கடவுள் முன்னிலையில் தனது கணவனுக்கு அதே வாக்கை அளித்தாள். பாதிரியாரின் சில கேள்விகளுக்குப் பிறகு அவர்களின் வழக்கப்படி மோதிரங்களை மாற்றிக்கொண்டனர் இருவரும். மோதிரங்களை அணிவித்து திருமணம் நிறைவுற்றதும் மணமக்கள் முத்தமிட வேண்டிய தருணம் அது!

 

“யூ மே நவ் கிஸ் ஈச் அதர்” என்றார் பாதிரியார்.

 

டாமும் ஆர்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இதுவரை எத்தனையோ முறை முத்தமிட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த முத்தம் ஸ்பெஷலாகத் தோன்றியது.

 

இதுவரை காதலர்களாக, லிவின் பார்ட்னர்களாக காதலில் களித்த போது கொடுத்துக்கொண்ட முத்தங்களை விட இப்போதைய முத்தம் அர்த்தமுள்ளதாகத் தோன்றியது இருவருக்கும். இப்போது அவர்கள் கணவன் மனைவி அல்லவா!

 

டாம் தனது பச்சைவண்ண விழிகளால் ஆர்யாவை காதல் பொங்க பார்த்தவன் “ஐ லவ் யூ ஜெர்ரி” என்று முணுமுணுத்துவிட்டு அவளது உதடுகள் “ஐ லவ் யூ டாம்” என்ற வாசகத்தை முழுவதுமாகச் சொல்லும் முன்னர் அவ்வுதடுகளைத் தன் வசமாக்கிக்கொண்டான்.

 

காதலர்களாகக் கொடுத்த முத்தங்களை விட இந்த இதழணைப்பு நெஞ்சின் ஆழம் வரை இனித்தது இருவருக்கும்.

 

ஆர்யா முதலில் விலகியவள் “ஹனிமூனுக்கு எங்க போகலாம்னு பண்ணிருக்கிங்க மிஸ்டர் போல்டன்?” என்று கேட்கும்போதே அவளது கருந்திராட்சை விழிகளில் குறும்பு மிளிர்ந்தது.

 

“மிசஸ் போல்டனுக்குப் பிடிச்ச இடம் எதுவா இருந்தாலும் அங்க ஹனிமூன் கூட்டிட்டுப் போக நான் ரெடி” என்று டாமும் அதே குறும்புடன் உரைத்தான்.

 

“சப்போஸ் அந்த நிலாவுக்கு ஹனிமூன் போகணும்னு மிசஸ் போல்டன் ஆசைப்பட்டாங்கனா என்ன செய்வீங்க?”

 

“நீயே ஒரு நிலா, உனக்கு எதுக்கு இன்னொரு நிலாவுல ஹனிமூன்னு சொல்லி சமாளிச்சிடுவேன் ஜெர்ரி”

 

கண் சிமிட்டி டாம் சொன்ன விதத்தில் பற்கள் மின்ன பூவாய் சிரித்தாள் ஆர்யா.

 

டாமின் புஜத்தை வளைத்தபடி பூங்கொத்தை வீசினாள் அவள். பூங்கொத்து காற்றில் பறந்ததைப் போல அவள் மனமும் டாமின் அருகாமையில் மிதமாகப் பறந்து கொண்டிருந்தது.

 

இனி இவன் தன்னவன்! இதுவரை யாதுமானவனாக இருந்தவன் இனி நிரந்தர துணைவன்! இதை விட இன்பமேது ஆர்யாவுக்கு.

 

தனது கொள்கையைத் தகர்த்தெறிந்து தன்னையும் குடும்பஸ்தன் ஆக்கிவிட்ட வலிமையான காதலுக்குச் சொந்தக்காரியை புஜத்தோடு

வளைத்து அழைத்துச் சென்று அலங்கரிக்கப்பட்ட காரில் அமர்ந்தான் டாம்.

 

பெற்றோர், பெரியவர்கள் ஆர்ப்பரிக்க டாமையும் ஜெர்ரியையும் சுமந்துகொண்டு கார் கிளம்பியது.

 

‘and they lived happily ever after’ என்ற பதம் ஃபேரிடேய்ல்களுக்கு மட்டுமில்லை, இனி டாம் – ஜெர்ரியின் காதல் வாழ்க்கைக்கும் பொருந்தும்!

 

இனிதே நிறைவுற்றது

Total words: 36807

*****

ஹாய் டியர்ஸ்

 

இந்த கதைக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு தேங்க்ஸ். சாந்தி நாகராஜ் சிஸ், சித்ரா சரவணன் சிஸ், ஸ்வர்ணலதா சிஸ், ஸ்ரீலதா சிஸ் உங்களோட கமெண்ட்ஸ் தான் பெரியளவில வியூஸ் இல்லைனாலும் என்னைத் தொடர்ந்து எழுதி இந்த கதையை முடிக்க வச்சுது😍💜🫶🏻

 

இந்த போட்டில கலந்துக்க வாய்ப்பு கொடுத்த மேகவாணி சிஸ்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் 😍

டாம் & ஜெர்ரிய மறக்கமாட்டிங்கனு நம்புறேன்.

 

நன்றியுடன்

காதல் கியூபிட் ❤️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
65
+1
4
+1
2

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. Arul mozhi kathali

   காந்தமாய் இழுக்கும்
   காரிகையின் காதல்
   கண்ணாலே கவர்ந்த
   கண்ணனின் காதல்…. ❤️❤️❤️❤️

   ரொம்ப அழகான கதைக்களம்… கூடுவிட்டு கூடித்தேடிச்செல்லும் புறாவோட கடல் தாண்டிய காதல்
   கைகூடுற அசத்தலான கதை…
   டாம் அன்ட் ஜெர்ரி எதிரும் புதிருமா எல்லா இடத்திலும் காட்டப்படுற இந்த பெயர்கள் அன்பு அரவணைப்பு புரிதல் இதுலாமே அதிகம் கொண்ட‌காதலர்களுக்கு இந்த பெயர் கொடுக்கபட்டது நன்றாக இருந்தது. வித்தியாசமா யோசிச்சிருக்காங்க ரைட்டர்.
   டாம் ஒரு இடத்தில சொல்லுவாங்க our love has no life 💔 ஏன்னு தெரியல…. இந்த டயலாக் இரண்டு நாளைக்கு என் மைன்ட் ல ஓடிட்டே இருந்திச்சு… காதல்னு புரிய வைக்க நண்பர்கள் பட்ட பாடும், புரிந்து கொண்ட பின் இணைபிரியா இவர்களின் நேசமும் அழகு ❤️
   அன்பே உறவுக்கு அடித்தளம். எந்த உறவா இருந்தாலும் அன்பு இருந்தா எதையும் தாங்கும் இதயம் வந்திரும்.. காதலுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் அது பொருந்தும்னு சொன்ன விதம் அழகு❤️
   பெற்றோர் மட்டுமல்ல புரிந்துகொண்ட அன்புகொண்ட காதலனால் கூட ஒரு பெண்ணை ரொம்ப சந்தோஷமா காட்டிய விதம் அழகு❤️
   காதல்னாலே பயந்து ஓடுற நாயகியும்
   கமிட்மென்ட் பயந்து ஓடுற நாயகனும்
   கல்யாணம் பண்ணா நல்லாத்தான் இருக்குது ❤️🤭🥰

   டாம் அன்ட் ஜெர்ரி இரண்டு பேரோட அம்மா பாசமுடையவர்களா இருந்து
   அப்பாக்கள் பாசமிருந்தாலும் கொஞ்சம் டிஸ்அப்பாயின்ட் பண்ற மாதிரி கதாப்பாத்திரம் இருந்திச்சு…‌
   நிறைய கதைகள்ல அப்பானாலே ஸ்ரிக்ட் அப்பாவை பார்த்து பயப்படுற ஹீரோ ஹீரோயின்ஸ் தான் வருது..‌ அது மட்டும் ஒருத்தருக்கு அப்பாவும் இனனொருத்தருக்கு அம்மாவும் போட்டிருக்கலாமோ னு ஜஸ்ட் தோணிச்சு… அவ்ளோ தான்… பெருசா எடுத்துக்காதீங்கோ….🥺🥺
   துரிகை பக்கம் வந்த சுவடு தெரியாமா போகணும்னு இருந்தேன்…‌ ஆனாலும் ஏதோ ஒரு ஹார்ட்டச்சிங் மொமன்ட் இருந்திச்சு இந்த கதைல…‌அதான் படிச்சு மூணு நாளைக்கு அப்பறம் கமெண்ட் பண்ண இழுத்திட்டு வந்திருச்சு😂😂….‌..‌
   ரைட்டர்ஜி All the very best ❤️❤️