Loading

 

 காதல் 25

 

“வீட்டுல அன்பும் சுதந்திரமும் கிடைக்காதப்ப அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள், முழு சுதந்திரமும் அன்பும் எங்க கிடைக்குதோ அங்க போனதும் கட்டவிழ்ந்து போறது இயல்பு… எனக்குக் கிடைக்காத சுதந்திரம் ஒரு கட்டத்துல என் கைவச்சப்பட்டப்ப நான் அதை அளவா பயன்படுத்திக்க நினைச்சேன்… ஆனா எதிர்பாக்காத ஒருத்தன் கிட்ட இருந்து கிடைச்ச அன்பும், அவன் குடுத்த பாதுகாப்பு உணர்வும் என்னைத் தடுமாற வச்சுது… என் மேல விசாரிக்காம போடப்பட்ட பழிச்சொல் நான் கத்துக்கிட்ட நெறிமுறைகளை மீற வச்சுது… ஆனா அதையும் தாண்டி டாம் கிட்ட எனக்குக் கிடைச்ச காதலும், அன்பும், பாதுகாப்பு உணர்வும் தான் லிவின்ல அவன் கூட எந்தத் தயக்கமும் இல்லாம வாழ அனுமதிச்சுது…. என் கலாச்சாரத்துக்கு இது சரியா தப்பானு நான் விவாதம் பண்ண வரல… நான் எடுத்த முடிவால வர்ற பின்விளைவுகளைச் சமாளிக்கிற தைரியம் எனக்கு இருந்துச்சு… அதை எல்லாம் தாண்டி டாம் மேல இருந்த பைத்தியக்காரத்தனமான காதல் என்னை எப்பவும் தப்பு பண்ணிட்டோமோனு பயப்படவிடல”

 

     -ஜெர்ரி

 

MSITM வகுப்பறை…

 

டாமின் முன்னே திருதிருவென விழித்தபடி நின்று கொண்டிருந்தாள் ஆர்யா. வழக்கம் போல பாடம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு கேள்வியைக் கேட்க அதற்கு பதில் தெரியவில்லை அவளுக்கு.

 

இத்தனைக்கும் போன செமஸ்டரில் அடிக்கடி அந்தக் கேள்விக்கான பதிலை அவளிடம் தெளிவுபடுத்தியிருந்தான் டாம். அப்படியும் மறந்து போய் நின்றவளை பேராசியருக்கே உரித்தான கண்டனப்பார்வை பார்த்தான் அவன்.

 

ஆர்யாவோ அசட்டுச்சிரிப்பை உதிர்த்தாள்.

 

“மிஸ் ஆர்யா தேவ் நான் இந்தக் கேள்விக்கான பதிலை ஆயிரம் தடவை போன செமஸ்டர்ல நான் சொல்லிருக்கேன்… அப்பிடி இருந்தும் ஆன்சர் தெரியாம முழிக்கிறிங்க… உங்க மைண்ட் இங்க இல்ல” என்றான் அதட்டலாக.

 

அவனது அதட்டலில் ஆர்யாவின் அசட்டுச்சிரிப்பு மாயமாக மறைந்து குறும்புத்தனம் விழித்துக்கொண்டது.

 

“என் மைண்ட் மட்டுமில்ல, என் ஹார்ட்டும் இங்க இல்ல புரபசர் போல்டன்… ரெண்டுமே என் ஃபியான்ஸ் கிட்ட ஓடிருச்சு”

 

விளையாட்டுத்தனமாக அவள் சொல்லவும் அருகில் அமர்ந்திருந்த மதுரிமாவும் நவீனும் சிரித்தார்கள்.

 

டாம் மூவரையும் முறைக்கவும் கப்சிப்பானார்கள். அன்று அதுதான் கடைசி வகுப்பு. வகுப்பு முடிந்ததும் டாம் வெளியேற அவனைத் தொடர்ந்து ஓடப்போன ஆர்யாவைப் பிடித்து நிறுத்தினாள் மதுரிமா.

 

“அது யாரும்மா எனக்குத் தெரியாத ஃபியான்ஸ்?” என்று அவள் கேட்க

 

“புரபசர் போல்டன்” என அலட்டாமல் பதிலளித்தாள் ஆர்யா. டாம் அணிவித்த மோதிரத்தைக் காட்டினாள்.

 

நவீனும் மதுரிமாவும் இனிமையாய் அதிர்ந்தார்கள்.

 

“ரியலி? எப்ப இந்த மேஜிக் நடந்துச்சு?”

 

“நியூ இயர் செலிப்ரேசனுக்காக சௌத் பேட்ரே ஐலண்டுக்குப் போனோம்ல, அங்க நடந்துச்சு” நாணத்தோடு கூறியவளுக்கு மகிழ்ச்சியோடு வாழ்த்து கூறினார்கள் நவீனும் மதுரிமாவும்.

 

மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது ஆர்யாவின் மொபைல் சிணுங்கியது. அழைத்தவன் டாம் என்றதும் விடைபெறும் பாவனை அவளது உடல்மொழியில் வந்துவிட்டது.

 

“நாளைக்குப் பாக்கலாம் கய்ஸ்”

 

வேகமாக ஓடி வந்து டாமின் காரில் அமர்ந்தாள் அவள்.

 

இன்னும் முறைப்பு அகலாத விழியோடு “இப்ப உங்க மைண்டும் ஹார்ட்டும் உங்க கிட்ட இருக்குதா மிஸ் ஆர்யா தேவ்?” என்று கேட்டவனின் கன்னத்தில் முத்தம் பதித்தாள் அவள்.

 

“அது ரெண்டையும் நீயே பத்திரமா வச்சுக்க டாம்” என்று அவள் சொல்லவும் டாம் புன்னகைக்க காரும் கிளம்பியது.

 

அந்த செமஸ்டர் மற்ற செமஸ்டர்களை விட அதிக மாதங்களைக் கொண்டது. ஜனவரியில் ஆரம்பிக்கும் செமஸ்டர் மே மாதத்தில் தான் முடிவடையும்.

 

கடைசி செமஸ்டர் என்பதாலோ என்னவோ ஆர்யா தனது முழு கவனைத்தையும் படிப்பில் செலுத்தினாள். போதாக்குறைக்கு ‘டெல் டெக்னாலஜியில்’ அவள் இண்டர்னாகச் சேர்ந்துவிட்டாள்.

 

எனவே கல்லூரியில் செய்து கொண்டிருந்த இண்ஸ்ட்ரக்சர் பணியைத் துறக்க வேண்டிய நிலை.

 

நவீனும் மதுரிமாவும் அவர்கள் பங்குக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் இண்டர்னாக சேர்ந்துவிட்டனர்.

 

தங்களது திருமணமுடிவை நண்பர்களுக்குத் தெரிவிக்க நியூமரோ 28ல் ட்ரீட் வைத்தான் டாம். அதற்கு அவனது பெற்றோர் என்ற முறையில் எரிக் போல்டனும், லிண்டாவும் வருகை தந்திருந்தனர்.

 

இருவருக்கும் டாமும் ஆர்யாவும் மணக்கப்போவதில் மகிழ்ச்சியே! அதிலும் லிண்டா ஆர்யாவை மனதாற வாழ்த்தினார்.

 

“காட் ப்ளஸ் யூ ஹனி” வாழ்த்தும் போதே கண்ணீர் வர அதை வெளிக்காட்டாமல் ஆர்ப்பாட்டமாகப் புன்னகைத்தார் அவர்.

 

எரிக் போல்டன் மகனை ஆரத் தழுவிக்கொண்டவர் “எனக்கு அப்புறம் என் பிசினசுக்கு நீ வாரிசு ஆவனு நினைச்சேன்… பட் அதை விட சர்ப்ரைஸான குட் நியூசை குடுத்திருக்க டாம்… கங்கிராட்ஸ்” என்று வாழ்த்தினார்.

 

அடுத்து தந்தையும் மகனும் ஏதோ இரகசியம் போல பேசவும் ஆர்யா அவர்களை விடுத்து எல்சா, அலெஸாண்ட்ரோவிடம் தனது கவனத்தைத் திருப்பிக்கொண்டாள்.

 

அவளது பெற்றோருக்கு இத்தகவலைச் சொல்லியாயிற்றா என்று அலெஸாண்ட்ரோ விசாரிக்க ஆமென்றாள் ஆர்யா.

 

ராஜேஷ், ஆராதனா மற்றும் மைத்ரியிடம் திருமணச்செய்தியை அறிவிக்கும் விருந்தை பற்றி ஏற்கெனவே கூறியிருந்தாள். தேவநாராயணனிடம் சொல்லவேண்டுமென தோன்றவில்லை.

 

எப்படியும் அவரிடமிருந்து வாழ்த்து மழைக்குப் பதிலாக சாபமாலை தான் கிடைக்கும். ஏன் வீணாக கேட்டு மனதை வருத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம்.

 

டாமும் அவனது தந்தையும் பேசி முடித்துவிட்டு வந்ததும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவுணவை அருந்தினார்கள்.

 

விம்பர்லிக்குக் கிளம்பும் முன்னர் லிண்டா ஆர்யாவிடம் மீண்டும் ஒரு முறை நன்றி கூற மறக்கவில்லை.

 

“என்னோட கிப்ட் இது… இதை தான் வெட்டிங்குக்கு நீ போட்டுக்கணும்” என்று சொல்லி முத்தும் வைரமும் மேல் கீழாக கோர்க்கப்பட்ட காதணியை ஆர்யாவிடம் கொடுத்தார் அவர்.

 

ஆர்யா மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக்கொண்டவள் தனது உடைமைகளோடு சேர்த்து பத்திரப்படுத்தி வைத்தாள்.

 

மைத்ரியிடம் வீடியோ கால் பேசும்போது அந்தக் காதணியைக் காட்டினாள்.

 

“ரொம்ப அழகா இருக்கு ஆர்யா… வெளிநாட்டுக்காரங்களுக்கு எவ்ளோ நல்ல மனசு பாரு… இதுவே நம்ம ஊரா இருந்தா பொண்ணு வீட்டுல இருக்குற கடைசி குண்டுமணி தங்கத்தைக் கூட விட்டுவைக்காம மாப்பிள்ளைவீட்டுக்காரங்க வாங்கிப்பாங்க… ஆராதனா மாமியார் ஒரு பவுன் குறைஞ்சதுக்கு என்ன பேச்சு பேசுனாங்க? இந்த மாதிரி ஆட்களுக்கு மத்தியில லிண்டா மாதிரி பெருந்தன்மையும் பாசமும் உள்ள ஆட்களுக்கும் இருக்காங்க பாரேன்”

 

அன்னையும் மகளும் பேசிக்கொண்டிருக்கையில் இடையில் டாம் வந்துவிட அவர்களிருவருக்கும் இடையே நடந்த உரையாடலுக்கு மொழிபெயர்ப்பாளர் ஆகிப்போனாள் ஆர்யா.

 

மைத்ரிக்கு வருங்கால மருமகனிடம் பேசுவதில் முதலில் தயக்கம் இருந்தாலும் பின்னர் அவன் அன்பாய் உரையாடுவதைக் கவனித்து இலகுவாக உரையாடலானார்.

 

பின்வந்த நாட்களில் டாம் ராஜேஷுடனும் ஆராதனாவுடனும் சகஜமாகப் பேசுமளவுக்குத் தேறிவிட்டான்.

 

மைத்ரி அவனுக்கு ‘மாம்’ ஆகிப்போக ராஜேஷும் ஆராதனாவும் முறையே ‘ராஜ்’. ‘ஆரு’வாகச் சுருக்கி அழைக்கப்பட்டார்கள்.

 

பெயர்கள் சுருங்குகையில் அன்பும் நெருக்கமும் பெருகும். அவையே செல்லப்பெயர்களாக உருமாறுமாயின் காலத்திற்கும் நிலையான உறவொன்று வெகு பலமாக உருவாகும்.

 

நாட்கள் காற்றினும் வேகமாக கடக்க செமஸ்டர் தேர்வுகள் ஒரு பக்கம், இண்டர்ன்ஷிப் ஒரு பக்கம் என ஆர்யா பயங்கர பிசி.

 

தேர்வில் டாமின் பாடத்தில் கொஞ்சம் சொதப்பினாலும் மற்ற பாடங்களில் நல்ல க்ரேடுகளை எடுத்திருந்தாள் ஆர்யா. பட்டமளிப்பு விழாவின் போது டாமை தன்னோடு அழைத்துச் சென்றாள்.

 

அறிவியல் தொழில்நுட்ப மேலாண்மையில் முதுகலை பட்டத்தைக் கையில் வாங்கியதும் டாமிடம் ஓடிச் சென்றவள் இடையில் தொற்றி தனது கால்களால் அவனது இடையை வளைத்துக்கொள்ள டாம் அவளது எடையைத் தனது கைகளில் தாங்கிக்கொண்டான்.

 

“இதுக்குலாம் நீ தான் காரணம் டாம்… லவ் யூ சோ மச்” கண்ணீர் மல்க சொன்னவள் அவன் பேசுவதற்கு உதடுகள் அசையும் முன்னர் அங்கே முத்த முத்திரையைப் பதித்தாள்.

 

டாம் தனக்குள் சிரித்துக்கொண்டவன் “நீ லவ் யூ சொன்னது டாமுக்கா? இல்ல புரபசர் போல்டனுக்கா?” என்று விசமமாகக் கேட்கவும் இடையில் கால்களைப் பின்னி தொற்றியிருந்தவள் இறங்கினாள்.

 

“டோண்ட் டாக் அபவுட் புரொபசர் போல்டன்… அந்தாளு சரியான சிடுமூஞ்சி” என்று போலிக்கோபத்துடன் சொன்னவளைத் தன்னோடு இழுத்துச் சென்றவன் நவீன் மதுரிமாவுக்கு வாழ்த்து தெரிவித்தபடி இரவு பார்ட்டிக்கு அழைப்பு விடுத்தான்.

 

“கட்டாயம் வருவோம் மிஸ்டர் போல்டன்” ஒருமித்தக் குரலில் சொன்னவர்கள் அவர்களது குடும்பத்தினரிடம் பேசப்போய்விட்டனர்.

 

டாமின் காரிலேறியதும் ஆர்யா அன்னையிடம் பேச ஆரம்பித்தாள். ஆசையாத் தான் வாங்கிய டிகிரி சர்டிபிகேட்டைக் காட்டினாள்.

 

“ரொம்ப சந்தோசமா இருக்குடி… ஒவ்வொருத்தர் உன்னை துச்சாந்தரமா பேசுனதுக்குலாம் சரியான பதிலடிய குடுத்துட்ட… என் மகள் கொஞ்சமும் மாறல… நீ அதே பழைய ஆர்யா தான்” என மைத்ரி கண்ணீர் மல்க கர்வப்பட்டார்.

 

பேசும் போதே அவரது வதனம் சோர்வாக இருப்பதைக் கவனித்தவள் என்னவென வினவினாள்.

 

“நேத்து ரவி வந்திருந்தான் ஆர்யா… அவன் கிட்ட படிப்பு முடிய ரெண்டு வருசம் ஆகும்னு சொன்னியாமே… இப்ப பத்தே மாசத்துல படிப்பை முடிச்சிட்டா பாருங்க மாமானு உன் அப்பா கிட்ட குறை சொன்னான்… அவன் கிட்ட நீ பொய் சொன்னதை வச்சு அரைமணிநேரம் கதை பேசுனான்… உன் அப்பாக்கு உன்னைத் திட்ட சாக்கு கிடைச்சிருச்சுனதும் மறுபடி திட்ட ஆரம்பிச்சார்… நான் எவ்ளோ நேரம் தான் பொறுமையா இருக்க முடியும்? அதான் பிடிச்சு கத்தி விட்டுட்டேன்”

 

“அவரைக் கண்டுக்காம இரும்மா”

 

“இத்தனை வருசம் அப்பிடி தான இருந்தேன்? எந்தத் தப்பும் செய்யாத உன்னை அவரோட வறட்டு கௌரவத்துக்காகத் திட்டுனா கூட அமைதியா போகணுமா நான்? முடியலடி ஆர்யா… இந்த மனுசன் கிட்ட போராடி என் மூச்சு நின்னுடும் போல”

 

மைத்ரி இவ்வாறு சொன்னதும் ஆர்யாவின் கண்கள் கலங்கிப்போயின. அவரது குரலும் மாறியிருக்கவே “ஆர் யூ ஓ.கே மாம்?” என அவரது நலனை விசாரித்தான் டாம்.

 

அவனது அக்கறை மைத்ரியின் மனதைக் குளிர்வித்தது.

 

“எனக்கு என்ன? ரொம்ப நல்லா இருக்கேன்… ஆனா சில மாசங்களா மனவுளைச்சல்ல இருந்தேன்ல, அது உடம்பையும் போட்டுப் படுத்துது… எனக்கு ஆர்யாவோட எதிர்காலத்தை நினைச்சு கவலை இருந்துச்சு… இப்ப தான் நீங்க அவளுக்குத் துணையா இருக்கிங்களே… இது போதும் எனக்கு”

 

மைத்ரி சொன்னதை ஆர்யா மொழிபெயர்த்ததும் அவரிடம் உடல்நலனில் அக்கறை செலுத்தும்படி கண்டிப்புடன் கேட்டுக்கொண்டான் டாம்.

 

அவனது அக்கறையில் மனம் நெகிழ்ந்தவர் சீக்கிரம் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

 

வீடு வந்துவிட காரிலிருந்து இறங்கியபடியே அன்னையிடம் இந்தியாவுக்கு வர முயற்சிக்கிறேன் என்று சொன்ன ஆர்யா வீட்டின் வாயிலில் மேடிட்ட வயிறோடு நின்ற மார்கரேட்டைப் பார்த்ததும் மொபைலை நழுவ விட்டாள்.

 

காரை கராஜில் நிறுத்திவிட்டு வந்த டாமின் பார்வையில் இக்காட்சி பட்டதும் அவனது முகம் ஜிவுஜிவுவென சிவந்தது.

 

“ஹவ் டேர் யூ டு கம் ஹியர்?” என உறுமியபடி அவளை நெருங்கியவனைக் கண்ணீருடன் ஏறிட்டாள் மார்கரேட்.

 

“நீ கல்யாணம் பண்ணிக்கப்போறதா கேள்விப்பட்டேன் டாம்… ஹவ் குட் யூ டூ திஸ்? யூ ஆர் அக்கவுண்டபிள் டு மீ அண்ட் மை பேபி…. மறந்துட்டியா?”

 

மார்கரேட் கேட்ட கேள்வியில் ஆர்யாவின் உலகம் தலைகீழாகச் சுழல் ஆரம்பித்தது.

 

டாமிற்கும் இவளுக்கும் எப்போதோ உறவு முறிந்துபோனது. இப்போது கர்ப்பவதியாக வந்து நின்று எனக்கும் என் குழந்தைக்கும் நீ தான் பொறுப்பு என்கிறாளே! என்ன நடக்கிறது இங்கே?

 

தலை விண்விண்னென வலிக்கத் துவங்கியது ஆர்யாவுக்கு.

 

“ஐ அக்ரி… பட் அதுக்கும் இப்ப நீ இங்க வந்ததுக்கும் என்ன சம்பந்தம் மேகி?” என்று கர்ஜித்தவன் முகம் கசங்க நின்ற ஆர்யாவைக் கண்டதும் குரலைத் தணித்தான்.

 

“எதுவா இருந்தாலும் நாளைக்குப் பேசலாம்… நீ கிளம்பு” மார்கரேட்டை அங்கிருந்து அனுப்புவதில் குறியானான் டாம்.

 

இவன் ஏன் இவ்வளவு பதறுகிறான்? கேள்வி கேட்டவளின் நெஞ்சமும் பதறியது. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கணக்காக ஆகிவிடக்கூடாதே என அனைத்து தெய்வங்களிடமும் வேண்டியது.

 

நேரே மார்கரேட்டின் முன்னே போய் நின்றவள் “உன் பேபிக்கு டாம் எப்பிடி பொறுப்பாக முடியும்?” என்று பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் கேட்டாள்.

 

மார்கரேட் சற்றும் தயங்காமல் “ஏன்னா இவன் எனக்கு வாக்கு குடுத்திருக்கான்… இந்தக் குழந்தைக்கு அப்பா மிஸ்டர் போல்டன்” என்றாள் வேகமாக.

 

“மிஸ்டர் போல்டன்”

 

“புரொபசர் போல்டன்”

 

யார் யாரோ டாமை அழைத்தார்கள் ஆர்யாவின் கற்பனையில். அப்படி என்றால்?

 

அந்தக் கேள்வி உதயமான நிமிடம் ஆர்யாவின் முகம் இரத்தப்பசையற்று வெளுத்துவிட தன்னருகே நின்ற டாமைப் பார்த்தாள் அவள்.

 

அவனோ முகம் கறுக்க நின்றான்.

 

“சீக்கிரம் எனக்கான பதிலைச் சொல்லு டாம்… இல்லனா நான் லீகலா மூவ் பண்ணுவேன்” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தாள் மார்கரேட்.

 

போகிறவளை வெறுப்புடன் வெறித்தாள் ஆர்யா.

 

வந்தாள்! பேசினாள்! பேசிய சில நொடிகளில் என் உலகத்தையே அழித்துவிட்டாளே!

 

அடுத்த நொடியே கருவுற்ற பெண்ணை இப்படியெல்லாம் எண்ணாதே என்று மனசாட்சி அறிவுறுத்தவும் டாமைப் பார்த்தாள்.

 

ஒருவேளை மார்கரேட் பொய் சொல்கிறாளோ? சந்தேகத்துடன் டாமிடம் தன் மனதிலுள்ள கேள்வியைக் கேட்டாள்.

 

“ஏன் இந்த விசயத்தைப் பத்தி என் கிட்ட சொல்லல டாம்?”

 

“இது அவ்ளோ பெரிய விசயம் இல்லனு தோணுச்சு ஜெர்ரி… இந்த ப்ராப்ளமை நான் சரி பண்ணிடுறேன்… அவ லீகலா போனா என்னாலயும் லீகலா அவளை அடிக்க முடியும்… நம்ம ரிலேசன்ஷிப்ல மேகியால எந்தப் பிரச்சனையும் வர்றதை நான் விரும்பல”

 

அப்படி என்றால் மார்கரேட் பொய் சொல்லவில்லை. அவள் மெய்யாகவே கருவுற்றிருக்கிறாள். அதன் தந்தை திருவாளர் போல்டன் அதாவது டாம் என்ற தாமஸ் போல்டன் என்பதை அவனே தனது வாயால் ஒப்புக்கொண்டான்.

 

தனக்குப் பதில் சொல்லாமல் திருமணம் செய்யக்கூடாது என்பது குழந்தையைச் சுமப்பவளின் பொருமல். அதற்கு டாம் மதிப்பளிக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

 

அதற்கு மேல் நின்று அவனிடம் பேச ஆர்யாவுக்குப் பிடிக்கவில்லை. அவன் முகத்தைக் கூட பார்க்காமல் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.

 

தன் அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டவளின் செவியில் “ஏன்னா இவன் எனக்கு வாக்கு குடுத்திருக்கான்… இந்தக் குழந்தைக்கு அப்பா மிஸ்டர் போல்டன்” என்ற மார்கரேட்டின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

 

அதனால் தானோ என்னவோ மொபைலின் சிணுங்கல் அவளது செவியைத்

தாமதமாக வந்தடைந்தது. இரணமாய் வலித்த மனதை அடக்கியபடி அழைப்பை ஏற்றாள் ஆர்யா.

 

அவளது மொபைலுக்கு அழைத்த ஆராதனா அடுத்து சொன்ன செய்தியில் வெயிலில் கிடக்கும் புழு போல துடிக்கலானாள் ஆர்யா.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
37
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்