Loading

 

காதல் 24

 

“ஜெர்ரிக்கு ட்ரெய்ல் ஆப் லைட்ஸ் ரொம்ப பிடிச்சிருந்துச்சுனு சொன்னா… அங்க அவ என்ஜாய் பண்ணுனதை பாத்ததுக்கு அப்புறம் நியூ இயருக்கு அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு யோசிச்சு வச்சிருக்கேன்… அந்த சர்ப்ரைஸை லைஃப்லாங் அவ மறக்கக்கூடாது… ட்ரெய்ல் ஆப் லைட்ஸ் பாத்தப்ப அவளோட கண்ல தெரிஞ்ச பிரகாசத்தை மறுபடி பாக்குறதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்… ரொம்ப அழகான தருணங்களை மறுபடி ரீ-க்ரியேட் பண்ணுறதுக்கு எஃபோர்ட் எடுத்தா தப்பில்லையே!”

 

-டாம்

 

 

 

தெற்கு பேட்ரே தீவு…

 

டெக்சாசில் நிலவிய குளிரின் ஆதிக்கம் சிறிதுமற்ற இதமான சீதோஷ்ணத்தில் கடற்கரை மணல் துகள்கள் கொடுத்த சுகத்தை வெற்றுப்பாதங்களால் அனுபவித்தபடி நடந்து கொண்டிருந்தாள் ஆர்யா.

 

கருப்பு வண்ண புல்-ஓவர் டாப், டெனிம் ஷார்ட்சை அணிந்திருந்தவள் கடல்காற்றில் கூந்தல் கற்றைகள் முகத்தைத் தொட்டு உறவாடுவதைத் தடுக்க முயன்றபடியே கடலை ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

“இட்ஸ் பியூட்டிஃபுல்… பாத்து ரசிக்க இன்னும் நாலு ஜோடி கண் இருக்கலாம்” என்றபடி அவளைப் பின்னே நின்று அணைத்துக்கொண்டான் டாம்.

 

ஆர்யா அவனது கரத்தை மெதுவாக விலக்கியவள் “நான் இங்க வரமாட்டேன்னு சொல்லியும் என்னை வற்புறுத்தி அழைச்சிட்டு வந்திருக்க டாம்” என்றாள் கண்டனம் தொனிக்கும் குரலில்.

 

டாம் ஒருபக்கம் மட்டும் உதட்டை இழுத்துப் புன்னகைத்தான்.

 

“அவசியமில்லாத பிடிவாதத்துக்கு வற்புறுத்தல் தான் பெஸ்ட் மெடிசின்… உனக்குச் சரியான டைம்ல நான் மெடிசின் குடுத்ததுக்கு நியாயப்படி நீ சந்தோசப்படணும் ஜெர்ரி”

 

“சந்தோசமா? அதுலாம் ஜில்கர் பார்க்லயே போயிடுச்சு டாம்”

 

டாமின் புன்னகை சுருங்கி இல்லாமல் போனது. மார்கரேட் செய்த குட்டி கலாட்டாவால் ஜில்கர் பார்க்கிலிருந்து வீட்டுக்கு வந்ததும் டாமிற்கும் ஆர்யாவுக்கும் சின்னதாய் கருத்து வேறுபாடு முளைத்தது.

 

காரசாரமாகச் சண்டையிட்டுக்கொள்ளவில்லை என்றாலும் வழக்கமான ‘குட் நைட் கிஸ்’ இல்லாமல் அன்றைய இரவு கழிந்தது. அதன் பிந்தைய இரவுகளிலும் அதுவே தொடர்கதை ஆனது.

 

என்ன தான் டாமிடம் கோபம் என்றாலும் மதுரிமா – நவீன் ஜோடியோடு ‘ட்ரெய்ல் ஆப் லைட்ஸ்’ நிகழ்வை அவ்வளவு ரசித்தாள் ஆர்யா. அப்போதே அவன் மனதில் உதித்த திட்டம் தான் அவளை இங்கே அழைத்து வர வேண்டும் என்பது.

 

ஆர்யா வரமாட்டேன் என்று முரண்டு பிடிக்க அவளைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் காரில் போட்டு அழைத்து வந்தவன் இங்கே வந்து ரிசார்ட்டில் நுழைந்த பிறகும் முறைத்துக்கொண்டே திரிந்தவளை பின்னர் கண்டுகொள்ளவில்லை.

 

ரிசார்ட் கடற்கரை அருகில் அமைந்திருந்ததால் அங்கிருந்து செல்லும் நடைபாதை வழியே கடற்கரையை அடைந்தவள் தூரத்தில் நீலநிறத்தில் மாயக்கவர்ச்சியுடன் தெரிந்த கடல் ரசனைக்கு விருந்தாய் அமையவும் சுற்றம் மறந்து அதை ரசிக்க ஆரம்பித்தாள்.

 

இதோ டாம் வந்ததும் மீண்டும் முணுமுணுப்பு ஆரம்பமாகிவிட்டது.

 

மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவள் அடம்பிடிக்கும் சிறுகுழந்தையை ஞாபகப்படுத்தினாள் டாமிற்கு.

 

“மேகிய மறந்துடு ஜெர்ரி” என்றான் டாம் தன்மையாக.

 

“இதை நீ உனக்குச் சொல்லிக்க டாம்” மீண்டும் முரண்டு பிடிக்கும் பாவனை அவளிடம்.

 

டாம் கூந்தலை சலிப்போடு கோதிக்கொண்டான்.

 

“நீ என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் அவளைப் பத்தி நான் யோசிச்சதே இல்ல ஜெர்ரி”

 

“நான் உன் லைஃப்ல நிரந்தரமா இருக்கப்போறதும் இல்ல… அதனால அவ எப்ப வேணாலும் உன் லைஃப்ல ரீ-எண்ட்ரி குடுக்கலாம் தானே?”

 

“ஹேய்”

 

டாம் கோபத்தில் குரல் உயர்த்தவும் திடுக்கிட்டுப் போனாள் அவள். பொறுமையை வரவழைத்துக்கொண்டவன்

 

“அவளை நான் ஜில்கர் பார்க்குக்கு வரச் சொல்லல… உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண தான் நான் அங்க வந்தேன்… அந்த மொமண்ட் ஸ்பாயில் ஆனதுல உன்னை விட எனக்கு வருத்தம் அதிகம் ஜெர்ரி” என்றான் நிதானமாக.

 

ஆர்யா அவனது பேச்சை நம்பவில்லை என்பதை தோள் குலுக்கலில் வெளிப்படுத்தினாள்.

 

“நான் என்ன செஞ்சா நீ என்னை நம்புவ ஜெர்ரி?”

 

அசட்டையாக அவனைப் பார்த்தவள் “ஹான், இந்தக் கடல்ல குதி, அப்புறம் நம்புறேன்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.

 

பின்னே திரும்பிப் பார்க்காமல் வீறாப்புடன் நடந்தவள் திடீரென மக்களின் கூச்சல் கேட்கவும் நின்றாள்.

 

“ஹே ஸ்டாப் மேன்.. ஒய் ஆர் யூ கோயிங் இன்டு த டைட்ஸ்?” என்று யாரோ அலறினார்கள்.

 

ஆர்யா பயந்து போய் பார்த்தவள் அவர்கள் அனைவரும் கத்தியது கடலை நோக்கி போய்க்கொண்டிருந் டாமைப் பார்த்து தான் என்றதும் அவனைத் தடுக்க ஓடினாள்.

 

“டாம் நில்லு”

 

அவளது அலறலை அவன் செவிமடுக்காமல் அலைகளுக்குள் நடந்துகொண்டே இருக்க, வேகமாக ஓடியவள் ஒரு கட்டத்தில் அவனைப் பிடித்துவிட்டாள்.

 

“ஸ்டாப் இட் இடியட்” என்று உச்சஸ்தாயியில் அவள் கத்தியபோதே பெரியதொரு அலை வந்து மோத, இருவரும் நிலை தடுமாறினர்.

 

ஆர்யா உப்பு தண்ணீரைக் குடித்தவள் மூச்சு முட்டவும் திணறிப்போனாள். டாம் திடகாத்திரன் என்பதால் சமாளித்து நின்றவன் அலை அவளைக் கடலுக்குள் இழுத்துப்போகாதவண்ணம் இறுகப்பற்றிக்கொண்டான்.

 

முழுவதுமாக நனைந்து போய்விட்ட ஆர்யாவைத் தனது கரங்களில் ஏந்தி கரையை நோக்கி வந்தவன் அங்கே குழுமிய மக்கள் கலையவும் அவளை மணலில் அமர்த்தி தானும் அமர்ந்தான்.

 

உப்புத்தண்ணீர் மூக்கு, வாயில் போன எரிச்சல்! டாமின் செயல் கொடுத்த கடுப்பு! ஆர்யா கோபத்தில் சிவந்து போயிருந்தாள்.

 

ஷார்ட்ஸ் மூடாத தொடையில் கடற்கரை மணல் உறுத்தவும் இரு கால்களையும் கட்டிக்கொண்டு அமர்ந்தவள்

 

“இன்னொரு தடவை இப்பிடி பைத்தியக்காரத்தனமா நடந்துக்காத டாம்” என்றாள் எரிச்சலோடு.

 

“உன்னைக் காதலிக்கிறதை விட இது ஒன்னும் பைத்தியக்காரத்தனம் இல்ல ஜெர்ரி” விளையாட்டாகப் பேசி அவளது கோபத்தைத் தணிக்க முயன்றான் டாம்.

 

அவளோ முன்னை விட சூடாக அவனை முறைத்தாள்.

 

“ப்ச்! சும்மா சும்மா கோவப்படாத… ஆல்ரெடி கடல்ல நனைஞ்சு மெர்மெயிட் மாதிரி ஹாட்டா இருக்க… அந்த ஹாட்னெஸ்ஸை உன் கோவம் இன்னும் அதிகமாக்குது… உனக்குப் ப்ளான் பண்ணி வச்ச சர்ப்ரைஸை சொல்லுறதுக்குள்ள லவ் மூடுக்குப் போகுற எண்ணம் எனக்கு இல்ல… கொஞ்சம் போல கோவத்தைக் குறைச்சு கருணை காட்டு ஜெர்ரி”

 

அவன் கரம் குவித்துக் கெஞ்சியதும் கொஞ்சம் மலையிறங்கியவள் என்ன சர்ப்ரைஸ் என்று துருவி துருவி கேட்டதில் மார்கரேட்டை மறந்தே போனாள்.

 

ஆனால் டாம் சொன்னால் தானே!

 

“ட்ரஸ் ஈரமாயிடுச்சு… மண் ஒட்டிருக்கு… முதல்ல இதை சேஞ்ச் பண்ணிட்டு கொஞ்சம் இந்த ஏரியாவ சுத்தி பாப்போம்” என்று பேச்சை மாற்றி அவளை அழைத்துச் சென்றான்.

 

தெற்கு பேட்ரே தீவில் அவர்களைப் போலவே புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஏகப்பட்ட மக்கள் வந்திருந்தார்கள்.

 

டாம் நடந்து போக விரும்பாமல் ஸ்கூட்கூப் (Scootcoupe) எனப்படும் சிறிய மோட்டார் வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். அது கார் வடிவில் இருவர் மட்டும் அமரும்படி இருக்கும். ரேஸ்காரை விட சற்று பெரியது. ஆனால் வேகம் குறைவு.

 

“சின்னதா ஒரு ட்ரைவ் போலாமா?” என்று அவன் கேட்டது தான் தாமதம் ஆர்யா ஆர்வமாக அவனருகே ஸ்கூட்கூபில் அமர்ந்துகொள்ள டாம் அதைக் கிளப்பினான்.

 

மிதமான வேகத்தில் ஸ்கூட்கூப் செல்ல ஆங்காங்கே உள்ள ரெஸ்ட்ராண்ட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை பார்த்துக்கொண்டே சென்றனர் இருவரும்.

 

இடையே அதை நிறுத்தி தங்களுக்கு வேண்டிய பானம், தின்பண்டங்களை ஆர்யா வாங்கிக்கொள்ள மீண்டும் ஸ்கூட்கூப் கிளம்பியது.

 

சாப்பிட்டபடியே வேடிக்கை பார்ப்பதில் நேரம் அற்புதமாகக் கழிந்தது. இரவும் வந்துவிட ‘நியூ இயர் ஈவ்’ களை கட்டியிருந்தது ரிசார்ட்டில்.

 

லூயிஸ் பேக்யார்ட் என்ற ரெஸ்ட்ராண்டில் புத்தாண்டுக்கான பட்டாசு வாணவேடிக்கை அழகாக இருக்குமென்ற டாம் ஆர்யாவை அங்கே அழைத்துச் சென்றான்.

 

பஃபே முறையில் நாமே சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதால் இருவரும் ஒரு தட்டில் வேண்டியதை எடுத்து வைத்துக்கொள்ள ஆர்யா மறக்காமல் ஒரு துண்டு சாக்லேட் கேக்கை எடுத்துக்கொண்டாள்.

 

“முப்பது டாலரை ஏன் வேஸ்ட் பண்ணனும்?” என்ற எண்ணம் அவளுக்கு.

 

முதல் முறையாக ‘ஷீ ஃபூட்’ சாப்பிட்டவளுக்கு அதன் ருசி பிடித்துப்போனது. அதிலும் எலுமிச்சை சாறு பிழிந்து ருசித்த இறாலின் சுவை நாவிலேயே நிற்பதாக ரசனையுடன் சொன்ன விதத்தில் டாம் சிரித்துவிட அந்நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பித்தது.

 

பட்டாசுகளின் வர்ணஜாலங்களை வாங்கி பிரகாசித்தது இரவு வானம்.

 

“பீச்சுக்குப் போகலாமா ஜெர்ரி?”

 

“இப்பவா? ஃபயர்வொர்க்ஸ் எவ்ளோ அழகா இருக்கு பாரு… அதை ரசிக்காம…”

 

வார்த்தையை முழுவதுமாக அவள் முடிக்கக் கூட இல்லை. டாம் ஆர்யாவைக் கையில் ஏந்தியபடி அங்கிருந்து வெளியேறினான்.

 

“டாம்..” என்று கால்களை உதறியவளின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அருகில் தாங்கள் தங்கியிருந்த ரோஸ் சேண்ட் ரிசார்ட் வரை தூக்கி வந்தவன் கடற்கரையில் இறக்கிவிடவும் முறைத்தாள் ஆர்யா.

 

“இங்க இருந்து பாத்தாலும் ஃபயர்வொர்க்ஸ் தெரியும் ஜெர்ரி… நம்மளோட நியூ இயர் செலிப்ரேசன்ல ப்ரைவேசி வேண்டாமா?” என்று குனிந்து அவளது நாசியோடு நாசி உரசி அவன் கேட்ட பிறகு முறைப்பெல்லாம் ஓடிப்போனது.

 

கடற்கரையில் தனிமையில் காதலனோடு வாணவேடிக்கையை ரசித்தபடி ஒரு புத்தாண்டு கொண்டாட்டம்! இதெல்லாம் நடக்குமென கனவில் கூட ஆர்யா நினைத்ததில்லை. இன்றோ அது நிஜமாகவே ஆகிவிட்டது.

 

டாமின் புஜத்தில் சாய்ந்து பட்டாசுகளின் ஜாலத்தை ரசித்தவள் புத்தாண்டுக்கான கவுண்ட்-டவுன் ஆரம்பிக்கவும் வானத்தில் எண்கள் வடிவில் வெடித்துச் சிதறிய வாணங்களுடன் சேர்ந்து அவளும் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தாள்.

 

“ஃபைவ்… ஃபோர்… த்ரீ… டூ…. ஒன்…”

 

வானத்தில் ‘ஹேப்பி நியூ இயர்’ என ஆங்கில எழுத்துகள் பூக்கவும் டாமைக் கட்டியணைத்தவள் “ஹேப்பி நியூ இயர் மை கிங்” என்று வாழ்த்து சொல்லவும் அவனும் புத்தாண்டு வாழ்த்தைக் கூறினான், சிறிய இதழொற்றலோடு.

 

வாணவேடிக்கை இன்னும் முடியவில்லை. கொத்து கொத்தாய் மலர்கள் பூத்தது போல கண்களுக்கு விருந்தாய் வெடித்துச் சிதறிய வாணங்களை குழந்தையின் உற்சாகத்தோடு ரசித்தவள் “டாம் அங்க பாரு, ஃப்ளவர் மாதிரி வெடிக்குது” என்றபடி அவனது புஜத்தில் சாய எத்தனிக்க அங்கோ டாமின் புஜமில்லை.

 

வானிலிருந்து கண்களை அகற்றியவள் தன் முன்னே முழங்காலிட்டு நின்றவனைப் பார்த்ததும் ஒரு நொடி ஸ்தம்பித்தாள்.

 

“வில் யூ மேரி மீ மை லவ்?” வானில் சிதறிய பூத்தூறல்கள் இப்போது டாமின் கண்களில் தெரிந்தது.

 

அதை கவனிக்கவேண்டியவளோ உச்சபட்ச சந்தோசத்தில் உறைந்து நின்றாள்.

 

அவளது காதலன், யாதுமானவன் அவளை மணக்கக் கேட்கிறான். எத்தனை நாள் ஏக்கம் இது! நடக்கவே நடக்காதோ என்று எத்தனை இரவுகளைக் காவு வாங்கியது இந்த ஏக்கம்.

 

அவனது காதலில் மூழ்கி களிப்புற்றாலும் உடையவளாகி உரிமை கொண்டாட முடியாதே என்று எத்தனை முறை வருந்தியிருப்பாள் அவள்!

 

இதோ அந்த வருத்தமும் ஏக்கமும் இனி உனக்குத் தேவையில்லடி பெண்ணே என்று சொல்லிவிட்டான் அவளது அன்புக்காதலன் டாம்.

 

“ஜெர்ரி, வில் யூ மேரி மீ?” அழுத்தமாக மீண்டும் அவன் கேட்கவும் கண்கள் கலங்க தலையசைத்தவள் அவனைப் போலவே முழங்காலிட்டாள்.

 

உணர்ச்சி மேலீட்டால் அவள் நாசி விடைக்க, உதடுகள் துடிக்க, கைவிரல்களோ நடுக்கம் கண்டன.

 

மோதிரவிரலில் முத்தமிட்டவன் அதில் அவளுக்காக வாங்கிய மோதிரத்தை அணிவித்துவிட்டு “இது தான் என்னோட சர்ப்ரைஸ் மிசஸ் தாமஸ் போல்டன்” என்றான் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி.

 

பதிலளிக்க முடியாமல் தடுமாறியவள் தனது கண்ணீரே பதில் சொல்லட்டுமென நினைத்துவிட்டாள். மோதிரத்தை ஆசையாய் பார்த்தவள் அவனது நெற்றியில் தனது நெற்றியை முட்டி கண்களை இறுக மூடிக்கொள்ள கண்ணீர் வெள்ளம் அவளது கன்னங்களில்!

 

டாம் தனது பெருவிரல்களால் அவளது கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான்.

 

“இது சந்தோசத்துக்கான கண்ணீர் தானே?” என்று கேட்கவும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் ஆர்யா.

 

“ஐ லவ் யூ சோ மச் டாம்… என்னோட அதிகபட்ச ஆசையே இது தான்” என்றாள் விசும்பியபடி.

 

டாம் கண்களைத் திறந்தவன் தன்னெதிரே கண் மூடி நிற்பவளின் கன்னத்தைத் தட்டினான்.

 

அவள் விழி மலரவும் திருமணம் பற்றிய அவனது கருத்து மாறிய விதத்தைக் கூறலானான்.

 

“உன்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்ததும் எனக்குள்ள வந்த ஸ்பார்க் உன்னை ஒவ்வொரு தடவை மீட் பண்ணுறப்பவும் கொஞ்சம் கொஞ்சமா பெருசாகி ஒரு கட்டத்துல உன் கூட எப்பவும் இருக்கணும்ங்கிற எண்ணமா மாறுச்சு… என்னால உன்னைக் காதலிக்க முடிஞ்சுது, அதுவும் என் இயல்பே மாறிப்போறது தெரியாதளவுக்குப் பைத்தியக்காரத்தனமா காதலிக்க முடிஞ்சுது… லிவின் ரிலேசன்ஷிப்ல இருந்து வெளியேறணும்ங்கிற எண்ணம் எனக்கு எப்பவுமே வந்தது இல்ல… ஆனா அதுக்கு மேரேஜ்ங்கிற் அங்கீகாரத்தைக் குடுக்கணும்னு தோணுனதும் இல்ல… சில விசயங்களை நீ உரிமையா கேக்க தயங்குறது, என் பணத்தைச் செலவு பண்ண யோசிக்குறது இதெல்லாம் ஒரு குழப்பத்தையும் கோவத்தையும் எனக்குள்ள உருவாக்குச்சு… என்னை எந்த வகையிலயும் நிரந்தர உறவுக்குக் கட்டாயப்படுத்தமாட்டேன்னு சொன்ன உன் நேர்மை என்னை மாத்திடுச்சு ஜெர்ரி… ஒரு இந்தியன் கேர்ளா கல்யாணம் பத்தி உனக்கும் சில ஆர்வம் இருந்திருக்கும்…. எனக்காக நீ அதை வெளிக்காட்டிக்காம தவிக்கிறியோனு குற்றவுணர்ச்சி வந்துச்சு… ரொம்ப யோசிச்சுப் பாத்து நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்ங்கிற முடிவுக்கு வந்திருக்குறேன்… உனக்கும் இதுல சந்தோம் தான ஜெர்ரி?”

 

ஆர்யா புன்னகை முகமாகத் தலையசைத்தாள். உணர்ச்சி மேலீட்டில் கண்ணீர் தான் வந்தது, பேச்சு வரவில்லை.

 

டாம் அவளை எழுப்பிவிட்டான்.

 

“நீ இப்ப எப்பிடி ரியாக்ட் பண்ணுறதுனு தெரியாம இருக்குற… ஒரு வாக் போயிட்டு வரலாம்” என்றவன் அவளது கையைப் பிடித்தபடி ஆங்காங்கே இருந்த விளக்கு அலங்காரங்களைப் பார்வையிடக் கிளம்பினான்.

 

ஆர்யாவுக்கும் அந்த ஆசுவாசம் தேவைப்பட்டது. வெளியே தெரிந்த மெல்லிய குளிருக்கு அவனது உள்ளங்கை சூடு இதமாக இருந்தது.

 

கண்களில் பட்ட விளக்கு அலங்காரங்கள் எதுவும் காட்சியில் பதியவில்லை. மனம் சந்தோசத்தில் திளைத்துக்கொண்டிருந்தது. டாமின் திருமண முடிவை உடனே தாயார், தமக்கையிடம் பகிர்ந்துகொள்ள துடித்தாள் அவள்.

 

திருமணக்கனவில் மூழ்கியவளுக்கு அந்த இரவு இனிய இரவாக, மகிழ்ச்சியின் ஆழத்தைக் காட்டும் இரவாக அமைந்தது.

 

மறுநாள் டாம் அவளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றான்.

 

‘ஷீ டர்ட்டில் இன்கார்பரேசன்’ என்ற அமைப்பு கடல் ஆமைகளைப் பராமரிப்பது, காயப்பட்ட ஆமைகளுக்கு மருத்துவ உதவி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தது.  

 

அங்கே சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவர்கள், டால்பீன்கள் வளர்க்குமிடத்துக்குச் சென்றார்கள். டால்பீன்கள் நீரில் எழும்பிக் குதிப்பதை ரசித்தார்கள்.

 

பின்னர் பறவை ஆர்வலர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சரணாலயம் போன்ற பகுதிக்குச் செல்ல ‘லாகுனா மேட்ரே நேச்சர் ட்ரெய்ல்’ என்ற மரப்பாலத்தின் மீது கரம் கோர்த்து நடந்தார்கள்.

 

அங்கே ஐந்தடுக்கில் பறவைகளைக் கண்டு ரசிக்க ‘அப்சர்வேசன் டவர்’ ஒன்று இருந்தது. அதன் மீது நின்று பலவிதமான பறவைகளை பைனாகுலர் வழியே கண்டு ரசித்தனர்.

 

இப்படியாக தெற்கு பேட்ரே தீவில் தங்கள் புத்தாண்டின் முதல் நாளைக் கழித்தவர்கள் அன்று மாலையே ஆஸ்டினுக்குக் கிளம்பினார்கள். மறுநாள் பல்கலைகழகத்தில் ஸ்ப்ரிங் செமஸ்டர் ஆரம்பிக்கவிருக்கிறது.

 

அடுத்த ஐந்து மாதங்களுக்குத் தேவையான புத்துணர்ச்சியை தெற்கு பேட்ரே தீவு பிரயாணம் கொடுத்துவிட்டதாக ஆர்யா உணர்ந்தாள். ஜனவரி முதல் வாரம் டெக்சாசின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘இண்டர்ன்ஷிப்புக்கான’ நேர்க்காணலில் கலந்துகொள்ளப்போகிறாள்.

 

அங்கே நிரந்தரப்பணி கிடைத்துவிட்டால் தனது ஆசைப்படி அன்னையைத் தன்னோடு அழைத்து வந்துவிடலாம் என்ற எண்ணம் அவளுக்கு.

 

நடப்பவை அனைத்தும் தனது மனம் விரும்பியபடியே நடப்பதால் இண்டர்ன்ஷிப்பும் அப்படியே அமையும் என்று தீர்க்கமாக நம்பினாள்.

 

ஆஸ்டின் வந்ததும் முதல் காரியமாக அன்னையிடம் டாம் தன்னை மணக்க கேட்டதைக் கூறினாள்.

 

மகள் சொன்னதைக் கேட்ட பிற்பாடு தான் மைத்ரியின் மனம் அமைதியானது.

 

ஆர்யா பேசி முடித்ததும் யாரிடமோ சொல்வது போல ஜாடைமாடையாகக் கணவரிடம் மகளும் டாமும் மணக்கப்போவதைக் கர்வமாகக் கூறினார்.

 

“வெளிநாட்டுக்காரனுக்கு நம்ம கலாச்சாரம் பத்தி என்ன தெரியும்னு யாரோ கேவலமா பேசுனாங்க… என் மகளோட குணம் தெரிஞ்சு அந்த மனுசனே மனசு மாறிட்டார்… இங்க சிலர் என் மகளோட அருமை தெரியாம சாபம் விடுறதும், வயித்தெரிச்சல்ல கத்துறதும் எங்க அவளுக்குப் பழிச்சிடுமோனு நான் பயந்து கடவுள் கிட்ட வேண்டுதல் வச்சதுலாம் வீண் போகல… என் மக இனிமே ரொம்ப சந்தோசமா வாழுவா”

 

தேவநாராயணனின் காதுகளில் அவரது வார்த்தைகள் விழாமல் இல்லை. இருப்பினும் காது கேட்காதவரைப் போல் காட்டிக்கொண்டார். இப்போதும் மகளுக்காகச் சந்தோசம் கொள்ளவில்லை அவர் மனம்.

 

தேவநாராயணனின் மகள் படிக்கச் சென்ற இடத்தில் வெளிநாட்டுக்காரனைக் காதலித்து மணமுடித்துக்கொண்டாளாம் என்று பேச்சு உறவினர்கள் மத்தியில் பரவினால் தனக்குத் தலையிறக்கமாகப் போய்விடுமே என்ற கவலை அவருக்கு.

 

அவரது வறட்டு கௌரவத்தைப் பற்றிய கவலையின்றி ஆர்யா புத்தாண்டின் உற்சாகத்தோடு புதிய செமஸ்டரின் ஆரம்ப நாளுக்கான குதூகலத்தோடு பல்கலைகழகத்திற்கு கிளம்ப ஆயத்தமானாள்.

 

பிடித்த பாடலை முணுமுணுத்தபடி குளித்து உடைமாற்றி மிதமான மேக்கப்பில் ஜொலித்த வதனத்தைக் கண்ணாடியில் பார்த்து ரசித்துக்கொண்டாள். அவள் பின்னே நின்று ஃபார்மல் ஷேர்ட்டின் பட்டனை மாட்டிக்கொண்டிருந்த டாமின் ரசனைப்பார்வையில் கவனம் கலைந்து அவனுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் முத்தங்களை வாங்கிக்கொண்டவளின் மனம் கொண்டாட்டநிலையில் இருந்தது.

 

எப்போதும் ‘ஆர்யா தேவ்’ என்றே அழைக்கப்படுபவள் இன்னும் சில மாதங்களில் ‘திருமதி போல்டன்’ ஆகப்போகிறாள் அல்லவா! பின்னர் குதூகலத்துக்குக் குறைவேது!

 

டாம் அணிவித்த ப்ளாட்டினம் மோதிரத்தில் பதித்திருந்த வைரம் ஒவ்வொரு முறை ஜொலிக்கும் போது ‘ஹாய் மிசஸ் போல்டன்’ என்று தனக்கு வணக்கம் சொல்வதைப் போலவே இருக்கிறது என்று டாமிடம் சொன்னபடியே அவனது காரில் அமர்ந்தவள் பல்கலைகழகத்துக்குக் கிளம்பினாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
41
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்