Loading

 

காதல் 23

 

“கொண்டாட்டங்கள் நம்ம ரொட்டீன் லைஃப்ல இருந்து நம்மளை ஆசுவாசப்படுத்துறதுக்காகவே உருவாக்கப்பட்டதுனு நான் நினைப்பேன்… தீபாவளி, பொங்கல் இந்த மாதிரி பண்டிகை நாள்ல அப்பா பெருசா எங்களோட ஆக்டிவிட்டீஸ்ல தலையிடமாட்டார்… அதனாலயே நானும் ஆரா அக்காவும் வருசம் முழுக்க பண்டிகையா இருக்கக்கூடாதானு ஏங்குவோம்… ஆஸ்டின் வந்ததும் பொழுதுபோக்கா நான் கலந்துகிட்ட போட்டி எல்லாமே நான் ஆசைப்படுற கொண்டாட்ட மனநிலைய எனக்குள்ள குடுத்துச்சு.. ஆஸ்டின்ல கிறிஸ்துமஸ் டைம் ‘ட்ரெய்ல் ஆப் லைட்ஸ்’னு ஒரு செலிப்ரேசன் நடக்கும்னு டாம் சொன்னான்… அதை பாக்குறதுக்கு நான் ரொம்ப ஆவலா இருக்கேன்”

 

     -ஜெர்ரி

 

படுக்கையில் சோர்வாகப் படுத்திருந்தார் எரிக் போல்டன். மெத்தையின் அருகே கிடந்த நாற்காலியில் அமர்ந்து அவரை உணர்வற்ற விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தான் டாம். அவனருகே ஆர்யாவும்.

 

மருத்துவர் சொன்ன விவரங்களை டாமிடம் பகிர்ந்து கொண்டிருந்தார் எரிக் போல்டனின் செகரட்டரி ராபின்.

 

“இன்னும் ஒரு மாசம் பெட் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிருக்காங்க… சாருக்கு அதிர்ச்சி குடுக்குற மாதிரி எந்த விசயத்தையும் சொல்லக்கூடாதாம்… கொலஸ்ட்ரால் கம்மியான ஃபூட் சாப்பிடச் சொல்லிருக்காங்க… நான் செஃப்கு நேத்து நைட்டே இந்த இன்ஸ்ட்ரக்சனை பாஸ் பண்ணிட்டேன் ஜூனியர்”

 

 சிறுவயதிலிருந்தே அவனை ஜூனியர் போல்டன் என்றே அழைப்பார் அவர்.

 

அவர் சொன்னதை கேட்டு தலையசைத்தவன் தந்தையைப் பார்த்தான். கோடாய் தெரிந்த அவரது உதடுகள் சிரிக்க முயன்றன.

 

“நீ அட்வைஸ் பண்ணுனப்பவே நான் கேட்டிருக்கணும் டாம்” என்றார் தளர்ந்த குரலில்.

 

அவரது சோர்வுற்ற விழிகள் டாமின் அருகே அமர்ந்திருந்த ஆர்யாவைப் பார்த்ததும் கொஞ்சம் பளிச்சிட்டன.

 

“ஆர்யா… என்னோட பார்ட்னர்”

 

ஆர்யாவின் கையைத் தனது கையோடு பிணைத்துக்கொண்டபடி அவளைத் தந்தையிடம் அறிமுகப்படுத்தினான் டாம்.

 

“நீ ஒரு இந்தியன் கேர்ள் கூட ரிலேசன்ஷிப்ல இருக்குறதா என் காதுக்குத் தகவல் வந்துச்சு… ஹோப் யூ ஹேவ் அ ஸ்மார்ட் அண்ட் கைண்ட் பார்ட்னர்”

 

ஆர்வத்தோடு ஆரம்பித்தவரின் குரல் கசப்பில் முடிய டாமின் வதனம் இறுகிப்போனது.

 

“நாட் ஆல் கேர்ள்ஸ் ஆர் கோல்ட்-டிக்கர்ஸ் டாட்” என்றான் டாம்.

 

அதை கேட்டதும் எரிக் போல்டனின் முகத்தில் தாங்கவொண்ணா வலி வியாபித்தது. ஆர்யா உடனே டாமின் உள்ளங்கையில் பெருவிரலால் அழுத்தி சைகை செய்தாள். அவன் அலட்சிய தோள்குலுக்கலோடு கவனத்தைத் திருப்பிக்கொண்டான்.

 

“பிசினஸ் பத்தி ரொம்ப யோசிக்காதிங்க… என் ஃப்ரெண்ட் ஒருத்தர் மேனேஜ்மெண்ட் கன்சல்டண்ட்… அவர் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவார்” என்றான்.

 

உடனே எரிக் போல்டனின் முகத்தில் வெளிச்சக்கீற்று. தன் மகனுக்குத் தனது தொழில்மீது அக்கறை உள்ளதே என்ற நிம்மதியின் வெளிப்பாடே அது.

 

“தேங்க்ஸ் டாம்” உளப்பூர்வமாக நன்றி கூறினார் மனிதர்.

 

“யூ ஆர் வெல்கம் டாட்” என்றவன் ஆர்யாவோடு கிளம்ப எத்தனிக்கவும் எரிக் போல்டன் மைந்தனிடம் தனியே பேசவேண்டும் என்றார்.

 

ஆர்யா நிலமையைப் புரிந்துகொண்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட தந்தையும் மகனும் தனித்துவிடப்பட்டனர்.

 

எரிக் போல்டன் மகனிடம் இரகசியக்குரலில் பேச ஆரம்பித்தார்.

 

“ஒரு வாரத்துக்கு முன்னாடி உன் அம்மாவ பாத்தேன் டாம்”

 

“மலரும் நினைவுகளா?”

 

கேலியாகக் கேட்டவனை அர்த்தபுஷ்டியோடு பார்த்தார் எரிக் போல்டன்.

 

“அப்பிடியும் வச்சுக்கலாம்… நாங்க நிறைய பேசுனோம்… எல்லாமே ஃப்ரெண்ட்லி டாக்ஸ்… பட் ஒரு விசயம் என்னை ரொம்ப யோசிக்க வச்சுது… ஐ வாண்ட் டு ஷேர் தட் டூ யூ”

 

பலமான முஷ்தீபுடன் அவர் பேச டாமோ பெரிதாக அக்கறை காட்டவில்லை.

 

“நீ வாழ்க்கை மேல பிடிப்பு இல்லாம இருக்குறதுல லிண்டாக்குச் சின்ன வருத்தம்… உன்னோட வாழ்க்கைய உன் பார்ட்னர் ஆர்யா கூட பிணைச்சு வைக்கணும்னு அவ ஆசைப்படுறா… அதுவும் நிரந்தரமா”

 

இப்போது டாமின் பார்வையில் சுவாரசியம் தென்பட்டது.

 

“இசிட்?” என்றான்.

 

“யெஸ்… அதை பத்தி நீயும் அந்தப் பொண்ணும் விம்பர்லி போனப்ப அவ கிட்ட லிண்டா டிஸ்கஸ் கூட பண்ணிருக்கா… உனக்கும் அவளுக்கும் மேரேஜ் உறுதியாச்சுனா அந்தப் பொண்ணு கிட்ட கம்பெனி மேனேஜ்மெண்டை ஒப்படைக்குறதா சொல்லிருக்கா லிண்டா”

 

அந்த இடத்தில் எரிக் போல்டன் நிறுத்தவும் டாமின் புருவங்கள் நெறிந்தன.

 

“கம்பெனிக்காக அந்தப் பொண்ணு உன் கூட நிரந்தரமான ரிலேசன்ஷிப்பை உருவாக்கிக்க நினைக்குறாளோனு டவுட் எனக்கு… நான் ஒரு தடவை அனுபவப்பட்டு ஸ்ட்ரோக் வந்து ஹாஸ்பிட்டல்ல இருக்குற மாதிரி உன் நிலமை ஆகிடக்கூடாது டாம்”

 

மெய்யான கவலையோடு சொன்னார் எரிக் போல்டன்.

 

“ஜெர்ரி அப்பிடிப்பட்டவ இல்ல” உறுதியாய் பதிலளித்தான் டாம்.

 

மகனுக்கு ஆர்யாவின் மீதிருக்கும் நம்பிக்கை அவருக்குப் பிரமிப்பை உண்டாக்கியது. இருப்பினும் அவனை எச்சரிக்க வேண்டியது அவரது கடமை. அதை செய்துவிட்டார். டாம் சொன்னபடி அந்தப் பெண் வெறும் நிறுவனத்திற்காக அவனோடு இல்லை என்றால் அவருக்கும் நிம்மதியே!

 

“நீ சொல்லுறது உண்மையா இருந்தா எனக்குச் சந்தோசம் டாம்… நான் மோசமான கணவனா இருக்கலாம், ஆனா மோசமான அப்பா இல்ல”

 

டாமின் கண்களில் கனிவு பிறந்தது. தந்தையின் கரத்தை வருடியவன் “டேக் கேர் டாட்” என்று சொல்லிவிட்டு அவரிடமும் ராபினிடமும் விடைபெற்றான்.

 

அவனுக்காக வெளியே காத்திருந்த ஆர்யாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் வீட்டை அடைந்ததும் எரிக் போல்டன் சொன்ன விசயத்தை மெதுவாக வெளியிட்டான்.

 

விம்பர்லியில் லிண்டா கேட்டதை ஏன் என்னிடம் பகிர்ந்துகொள்ளவில்லை என்று அவளிடம் கேட்டான்.

 

“லவ் எந்த நிபந்தனைக்குட்பட்டும் வரக்கூடாது டாம்…. திருமணவுறவும் அதே மாதிரி தான்… ஒரு கம்பெனிக்காக எல்லாம் என்னால உன்னைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்க முடியாது… ரெண்டு மனசு விரும்பி நடந்தா தான் அந்தக் கல்யாண உறவு நிலைக்கும்”

 

ஆர்யா தன் மனதிலிருப்பதைத் தெளிவாகச் சொன்னதும் பளீர் புன்னகை டாமிடம்.

 

“ஏன் சிரிக்குற?” என்று கேட்டவளிடம்

 

“நல்ல ஜாப்ல ஜாயின் பண்ணி உன் அம்மாவ இங்க அழைச்சிட்டு வரணும்ங்கிறது உன்னோட இலக்கு… நீ மட்டும் என் அம்மா சொன்ன மாதிரி என்னைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சிருந்தனா, அந்த இலக்கைச் சீக்கிரமா அடைஞ்சிருக்கலாமே” என்று தூண்டில் போட்டுப் பார்த்தான் டாம்.

 

“என்னோட இலக்கை அடைய உன்னை விருப்பமில்லாத திருமணவுறவுல சிக்க வைக்குற அளவுக்கு நான் பேராசைக்காரி இல்ல… நான் அப்பிடி செய்யுறதை என் அம்மா விரும்பமாட்டாங்க”

 

எந்த வலையிலும் சிக்காதவள் அவனது தூண்டிலில் மட்டும் விழுவாளா என்ன?

 

டாமிற்கு ஆர்யாவின் இந்த நேர்மை பிடித்திருந்தது. தவறான ஒருத்தியோடு தனது காதலைப் பகிர்ந்துகொள்ளவில்லை என்ற கர்வம் எழுந்தது அவனுக்கு.

 

“உன் கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே உன்னோட நேர்மை தான் ஜெர்ரி” என்றவன் அவளை மார்போடு அணைத்துக்கொள்ள, அணைப்பில் அடங்கியவளுக்கோ அவன் வாய் வார்த்தையாகவே ‘வில் யூ மேரி மீ?’ என்று கேட்டுவிடமாட்டானா என்ற ஏக்கம்!

 

வாய் விட்டுச் சொல்ல முடியாமல் ‘நேர்மை’ இடித்துரைத்தது. நல்லவர்களின் வாழ்க்கை ஏன் சோதனைமயமாகவே உள்ளதென அப்போது புரிந்தது ஆர்யாவுக்கு. அவள் மனதைப் பிளந்துகொண்டு ஏக்கப்பெருமூச்சு ஒன்று வெளிவந்தது.

 

அந்த ஏக்கம் அவளது ஊனில் உறைந்து உயிரில் கலந்து நீக்கமற நிறைந்தது நாட்கள் செல்ல செல்ல.

 

மனதை ஆள்பவனின் காதல் கொடுத்த களிப்பையும் மீறி அந்த ஏக்கம் அவளுக்குள் பாதிப்பை உண்டாக்கியது என்னவோ உண்மை! அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் படிப்பையும், வேலையையும் முகமூடியாக அணிந்துகொண்டாள் ஆர்யா.

 

ஃபால் செமஸ்டரின் இடையே குளிர்க்காலமும் வந்துவிட்டது. குளிர்காலத்தை ஒட்டி ஆஸ்டினில் நடைபெறும் எண்ணற்ற கொண்டாட்டங்களில் ஒன்று ‘ட்ரெய்ல் ஆப் லைட்ஸ்’ என்ற கொண்டாட்டம்.

 

சரியாக டிசம்பர் மாதத்தின் எட்டாம் தேதி ஆரம்பித்து கிறிஸ்துமஸ் முடியும்வரை நடைபெறும் அந்தக் கொண்டாட்டம் ஜில்கர் பார்க் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்படும்.

 

இந்தாண்டு மட்டும் மொத்தம் இரண்டு மில்லியன் விளக்குகளால் அவ்விடத்திலுள்ள மரங்கள், சின்ன சின்ன சுரங்கப்பாதைகள், ராட்டினங்கள், அரங்குகள் அலங்கரிக்கப்படுமாம். எங்கு நோக்கினும் விளக்குகளின் ஒளிவெள்ளம் மட்டுமே நிறைந்திருக்கும் என்றான் டாம்

 

அங்கே கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்றவன் செமஸ்டர் தேர்வுகள் முடிந்ததும் அங்கே அழைத்துச் செல்வதாக வாக்களித்தான்.

 

அந்த இடத்தில் ப்ரைவேட் பார்ட்டி கொண்டாடவும் அனுமதி உண்டு என்றவனிடம் இம்முறை பார்வையாளராக மட்டுமே போய்வருவோமென்றாள் ஆர்யா.

 

அவனும் சரியென்றுவிட ஆர்யா தேர்வுக்காகப் படிப்பதில் மும்முரமானாள். இதற்கிடையே டாமிற்கு டெக்சாஸ் பல்கலைகழகத்தின் ‘எக்பீரியன்சல் லேனிங் எக்சலன்ஸ் அவார்ட்’ கிடைத்தது.

 

தனக்கு இந்தாண்டு எத்துணை அதிர்ஷ்டமான ஆண்டு என பூரித்துப்போனான் டாம்.

 

ஆர்யாவின் தேர்வுகள் முடிந்ததும் ஒரு நாள் ‘ட்ரெய்ல் ஆப் லைட்ஸ்’ கொண்டாட்டத்திற்கு செல்லலாமென முடிவு செய்தவர்கள் அலெஸாண்ட்ரோவையும் எல்சாவையும் கூட அழைத்தனர்.

 

ஆர்யா மதுரிமாவுக்கும் ரசனை அதிகம் என்பதால் அவளையும் நவீனையும் தங்களுடன் வரும்படி அழைப்பு விடுத்தாள்.

 

மூன்று ஜோடிகளும் ஜில்கர் பார்க்குக்கு வந்தபோது மொத்த இடமும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது.

 

மரங்கள், சாரட்கள் என எங்கேங்கும் விளக்குகளின் ஜாலங்கள். ஆங்காங்கே உணவு ஸ்டால்களில் சிற்றுண்டியைச் சுவைத்தார்கள் மூன்று ஜோடிகளும்.

 

ஆர்யா டாமிற்கு ஐஸ் க்ரீமை ஊட்டிவிட்டபடி தூரத்தில் வெளிச்சத்தைச் சிதறியபடி சுற்றிக்கொண்டிருந்த பிரம்மாண்டமான ராட்சச ராட்டினத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்.

 

டாமிடம் அந்த ராட்டினத்தின் பின்னணியில் செல்ஃபி எடுப்போமா என்று அவள் ஆசையாகக் கேட்டாள்.

 

இருவரும் அதனருகே சென்று பல்வேறு கோணங்களில் செல்ஃபிக்களைச் சுட்டபோது “டாம்” என்று ஒரு பெண் குரல் கேட்டது.

 

இருவரும் ஒருசேர திரும்ப, அங்கே நின்று கொண்டிருந்தவள் மார்கரேட்.

 

அவளைப் பார்த்ததும் ஆர்யாவிடம் இவ்வளவு நேரம் பொங்கிக்கொண்டிருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்தது.

 

டாமின் கண்களோ கோபத்தில் நெருப்புக்கோளங்களாக ஜொலிக்கத் துவங்கின.

 

“எதுக்கு இங்க வந்த? ஹவ் டேர் யூ டு கம் ஹியர்?”

 

“டாம் உன் கிட்ட கொஞ்சம் பெர்ஷனலா பேசணும்”

 

“உன் கிட்ட பேச எனக்கு எதுவுமில்ல மேகி… ஜஸ்ட் லீவ்”

 

உச்சபட்ச கோபத்துடன் உறுமினான் டாம்.

 

“என் நிலமைய புரிஞ்சிக்காம…”

 

மார்கரேட் அவள் போக்கில் பேசிக்கொண்டே போக அவளை டாம் எதுவும் செய்யும் முன்னர் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த முனைந்தான் அலெஸாண்ட்ரோ.

 

“அலெஸாண்ட்ரோ ப்ளீஸ்…”

 

“மேகி எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்… கிளம்பு”

 

எல்சாவும் அவனும் சேர்ந்து மார்கரேட்டை அங்கிருந்து அகற்ற டாமோ கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தான்.

 

அதிர்ச்சியில் உறைந்திருந்த ஆர்யாவைத் தேற்றினர் மதுரிமாவும், நவீனும்.

 

என்ன நடக்கிறதென புரியாவிட்டாலும் ஆர்யாவின் வாடி வதங்கிய தோற்றம் அவர்களை வருத்தியது.

 

டாம் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் ஆர்யாவின்பால் கவனத்தைத் திருப்பினான்.

 

“ஜெர்ரி”

 

“உன்னோட எக்சுக்கு நம்ம இங்க வந்தது எப்பிடி தெரியும் டாம்?”

 

உணர்ச்சியற்ற குரலில் அவள் கேட்ட பிற்பாடு தான் டாமின் முன்னாள் காதலி அவள் என நவீனும் மதுரிமாவும் புரிந்துகொண்டார்கள்.

 

“ப்ராப்ளம் என்னனு தெரியாம பேசாத ஜெர்ரி”

 

டாம் விளக்கம் கொடுக்க முன்வர ஆர்யா அதைக் கேட்கும் மனநிலையில் இல்லை.

 

“எனக்கு எதுவும் தெரியவேண்டாம் டாம்… என்னோட சந்தோசமான மனநிலைய நான் கெடுத்துக்க விரும்பல” என்றவள் மதுரிமாவையும் நவீனையும் அழைத்துக்கொண்டு உணவு ஸ்டால்கள் பக்கம் போய்விட டாம் கையாலாகாத்தனத்துடன் தனது ஒரு கரத்தை முஷ்டியாக்கி உள்ளங்கையில் குத்திக்கொண்டான்.

 

மார்கரேட்டை அனுப்பிவிட்டு வந்த அலெஸாண்ட்ரோவும் எல்சாவும் அவனிடம் ஆர்யாவை எப்படி சமாதானம் செய்யப்போகிறாய் என்று கவலையாய் கேட்டனர்.

 

“அவளை நான் சமாதானப்படுத்தணும்னு எதிர்பாக்க மாட்டா… என் கிட்ட ஒரு எல்லைக்கு மேல அவ உரிமையோட நடந்துக்க மாட்டா… பட் என்னோட ப்ராப்ளமே அது தான் எல்சா… அவ என் கிட்ட உரிமையா சண்டை போட்டா கூட நான் சந்தோசப்படுவேன்… ஆனா இப்பிடி ஒதுங்கிப்போறாளே, இதுதான் வலிக்குது”

 

டாம் நொந்து போய் பேசிக்கொண்டிருக்கையில் மதுரிமா ஊட்டிய பர்கரைக் கடித்துச் சுவைத்தபடி விளக்குகளால் அலங்கரிப்பட்ட சுரங்கப்பாதையை நோக்கி ஆர்யா செல்வது தெரிந்தது.

 

அவள் முகத்தில் சற்று முன்னர் இருந்த அதிர்ச்சி இல்லை. வரவழைக்கப்பட்ட சிரிப்பும் உற்சாகமும் கொட்டிக் கிடந்தது அங்கே.

 

வெளிப்பார்வைக்கு இயல்பானதைப் போல காட்டிக்கொண்டவளை கண்டுகொண்டவன் டாம் மட்டுமே! மார்கரேட்டைக் கண்டதில் கட்டாயம் ஆர்யாவுக்கு அதிருப்தி இருக்கும். அதை எப்படியாவது போக்கிவிடவேண்டுமென துடியாய் துடித்தது அவனது மனம்.

 

அவனது எண்ணப்படியே ஆர்யாவும் மனதுக்குள் மையம் கொண்டிருந்த கோபத்தை வெளிக்காட்டிடாமல் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாள். அவளது கோபத்தை டாம் போக்குவானா? 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
41
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்