Loading

காதல் 15

“ஒருத்தரோட நெருக்கம் என்னை ஸ்தம்பிச்சுப் போக வைக்கும்னு கனவுல கூட நான் நினைச்சதில்ல… டாமோட விரல் தீண்டல் எனக்குள்ள ஆயிரம் வெக்கப்பூக்களை மலர வைக்குது… அவனோட ஒரே ஒரு கிஸ் போதும், என் உலகத்தைத் தலைகீழா திருப்பிப் போடுறதுக்கு… எவ்ளோ பெரிய கஷ்டம் வந்தாலும் அதை நினைச்சுப் பயப்படாத அளவுக்கு என்னைப் பாதுகாப்பா உணர வைக்குது அவனோட ஹக்… அவனோட க்ரீன் ஐரீஸ் அய்ஸ் சுருங்கி விரிய சிரிக்குறதை வாழ்நாள் முழுக்க பாத்து ரசிச்சிட்டே இருக்கலாம்னு தோணும்… கேக்குறதுக்குப் பைத்தியக்காரத்தனமா இருக்குல்ல?”

 

     -ஜெர்ரி

 

ப்ளூ ஹோல் ரீஜினல் பார்க், விம்பர்லி…

 

சைப்ரஸ் மரங்கள் அடர்ந்து வளர்ந்து சூரிய ஒளியை ஊடுருவ விடமாட்டோமென பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்க அவற்றின் நடுவே ஸ்படிகம் போல மின்னியது நதி நீர். அந்த நதிக்கு நீர் வரத்தை உண்டாக்கும் சிற்றோடைக்கு ‘சைப்ரஸ் சிற்றோடை’ என்று பெயர் வரவே அங்குள்ள சைப்ரஸ் மரக்கூட்டங்கள் தான் காரணம்.

 

தனது வலிய கரங்களால் நீரை அலைந்து தள்ளி நீந்திக்கொண்டிருந்த டாமை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்யா. பார்த்தாள் என்பதை விட ரசித்தாள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

 

“ஹே ஜெர்ரி! வான்ன ஸ்விம்?” என்று நீந்தியபடி கேட்டான் டாம்.

 

இல்லையென மறுப்பாய் தலையசைத்தாள் அவள்.

 

மீன்குஞ்சாய் சிறுவர் சிறுமிகள் நீந்துவதையும், நீச்சலுடையில் பெண்கள் மரங்களில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் இருந்து குதித்து நீராடுவதையும் பார்த்தவளுக்குப் பிரமிப்பூட்டியதே அங்கே ராட்சசத்தனமாக வளர்ந்திருந்த சைப்ரஸ் மரங்கள் தான்.

 

மற்ற இடங்களில் கிறிஸ்துமஸ் ட்ரீ போல ஒழுங்குபடுத்தி சைப்ரஸ் மரங்களை வளர்ப்பார்கள். ஆனால் ப்ளூ ஹோல் ரீஜினல் பார்க்கில் வளர்ந்து நிற்கும் விருட்சங்கள் இயற்கையாய் வளர்ந்து நிற்பவை. எவ்வித செயற்கைத்தனமும் இல்லாத அவற்றின் பிரம்மாண்ட வளர்ச்சி ஆர்யாவின் ரசனைக்குத் தீனி போட்டது.

 

அவளும் டாமும் இரண்டு மணி நேரம் முன்னர் தான் விம்பர்லிக்கு வந்து சேர்ந்தனர். ஆஸ்டினிலிருந்து நாற்பது நிமிட சாலைப்பயணம்.

 

வந்தவர்களை வரவேற்க அவனது அன்னை லிண்டா வீட்டில் இல்லை. ஹவுஸ்கீப்பர் ஜேனட் இருவரையும் வரவேற்று காலையுணவு மற்றும் பானங்கள் கொடுத்து உபசரித்தார்.

 

“மேடம் ரியல்டர்ஸ் ஆபிஸ்ல இருப்பாங்க… இன்னைக்கு முக்கியமான ரெண்டு பார்ட்டி வந்தாங்க… அனேகமா அவங்களுக்கு வீடு பாத்து ஓ.கே ஆகுற வரைக்கும் அவங்களை மேடமை வீட்டுல எதிர்பாக்க முடியாது… ஒய் டோண்ட் யூ ப்ரிங் ஹெர் டூ ப்ளூ ஹோல் பார்க்?”

 

ஜேனட் சொன்னதும் தான் இங்கே வரும் ஐடியாவே டாமுக்கு உதித்தது. உடனே சில டவல்கள், தரைவிரிப்புகள், நீச்சலுக்குத் தேவையான உடைகள் என அனைத்தையும் எடுத்துகொண்டவன் ஆர்யாவோடு கிளம்பி வந்துவிட்டான்.

 

2003 வரை தனியாருக்குச் சொந்தமான நீச்சல் பகுதியாக இருந்த ப்ளூ ஹோல் ரீஜினல் பார்க் பகுதியை அவர் முன்னூற்று ஐம்பது வீட்டுமனைகள் கட்டுவதற்காக விற்கவிருந்தாராம். அவரிடமிருந்து இப்பகுதியை வாங்கி சமூக பூங்காவாக மாற்ற தன்னார்வலர்களும், விம்பர்லி கிராமத்தினரும், ஃப்ரெண்ட்ஸ் ஆப் ப்ளூ ஹோல் அமைப்பினரும் பல்வேறு விதமான நிதிசேகரிப்பில் ஈடுபட்டு அந்த நூற்று இருபத்தாறு ஏக்கர் நிலத்தையும் வாங்கி இந்தப் பூங்காவைக் கட்டி முடித்தனர் என்றான் டாம்.

 

ஒரு பூங்காவிற்கு பின்னே இவ்வளவு பெரிய வரலாறா என்று அதிசயித்த ஆர்யாவுக்கு பூங்காவையும் அதில் குளுமையாகச் செல்லும் நதியையும் பார்த்ததும் இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் போரடலாம் என்று தோன்றியது.

 

அவள் பூங்காவையும் நதியையும் ரசிக்கத் துவங்க டாமோ நீச்சலில் மூழ்கிவிட்டான். ஆர்யாவுக்கு அவன் நீந்தும் லாவகத்தை ரசிப்பதில் பொழுது போனது.

 

அவள் பார்த்துக்கொண்டே இருக்கையிலே நீந்திக்கொண்டிருந்த டாம் தண்ணீரிலிருந்து எழுந்து வந்தான். முதல் முறையாக மேற்சட்டையற்ற அவனது தோற்றத்தைப் பார்த்தபோதே ஆர்யாவின் புத்தி தடுமாறிப்போனது.

 

வலிய புஜங்களிலும் மார்பிலும் தண்ணீர் சொட்ட சொட்ட, பச்சை விழிகள் மின்ன அவன் நடந்து வந்த தோரணை கிரேக்கர்களின் கடற்கடவுளான பொசிடோனை நினைவு படுத்தியது.

 

மெய்மறந்து ஆர்யா அவனை ரசித்துக்கொண்டிருக்கும்போது அவளை நெருங்கிவிட்ட டாம் அவள் கண் முன்னே விரல்களைச் சொடுக்கவும் நாணி முகம் சிவந்தாள் அவள்.

 

ஸ்விம் ட்ரங்கோடு நிற்பவனையா விழுங்குவது போல பார்ப்பாய் என்று மனசாட்சி கேலி செய்ததே முகச்சிவப்புக்கும் நாணத்துக்கும் காரணம்.

 

அவள் வேறு பக்கம் திரும்ப எத்தனிக்க, தண்ணீர் சொட்டும் உடலோடு அவளை அணைத்த டாம் “நான் இருக்கேன்ல… என் கூட ஸ்விம் பண்ண வா” என்றான்.

 

அவனது உடல் ஈரம் தன் மீது ஒட்டியிருக்குமோ? ஏனெனில் திடீரென குளிர் எடுத்தது ஆர்யாவுக்கு.

 

“இல்..ல டாம்” உதடுகள் தந்தியடித்தன.

 

“ஒய்? நான் உன்னை தண்ணில அம்போனு விட்டுருவேனா? உனக்கு என் மேல நம்பிக்கை இல்லயா?”

 

“இதுக்கும் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் டாம்? எனக்குக் கம்பர்டபிளா இருக்காது” என்றாள் ஆர்யா சுற்றும் முற்றும் பார்த்து.

 

அவள் அணிந்திருந்த உடையை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

 

கையற்ற பீஜ் வண்ண ஸ்கொயர் நெக் ஸ்லீவ்லெஸ் டாப்பும், அதன் மேல வெண்ணிற காட்டன் சட்டையும் அணிந்திருந்தாள். ஸ்கின்னி ஜீன்ஸ் கால்களைக் கவ்வியிருந்தது.

 

“இதுக்குத் தான் வந்த உடனே உன்னை ஸ்விம்வேர் போடச் சொன்னேன்… நீ மாட்டேனுட்ட” என்றான் அதிருப்தியுடன்.

 

அங்கே வந்ததும் அவன் அணியச் சொன்ன நீச்சல் உடையைப் பார்த்தபோதே மயக்கம் வந்துவிட்டது ஆர்யாவுக்கு. அப்போதே முடிவு செய்தது தான் நீந்தவேண்டாம் என்பது.

 

“எனக்கு ஸ்விம்வேர் போடவும் அன்கம்ஃபர்டபிளா இருக்கு”

 

கண்களில் கலவரம் மின்ன சொல்லிவிட்டாள் அவள். பழக்கமற்ற ஆடையைத் தயங்குகிறாள் போல என டாமும் அவளை மேற்கொண்டு வற்புறுத்தவில்லை. இப்போதோ தனியாய் நீந்த பிடிக்கவில்லை. ஆர்யாவும் தன்னுடன் வந்தேயாக வேண்டுமென்றான்.

 

“இட்ஸ் ஓ.கே… இப்பிடியே வா”

 

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் பிடித்தான் டாம்.

 

வேறு வழியின்றி அவனோடு நதியோரம் இருந்த மரமேடை மீது நின்றாள்.

 

டாமை இறுக்கமாகக் கட்டிக்கொண்டவள் கண்களை மூடிக்கொள்ள அவனது கரங்கள் அவளை ஆக்டோபஸாய் வளைத்துக்கொண்டன. அவளது மொத்த உடல் எடையையும் தன்னில் தாங்கிக்கொண்டவன்

 

“நான் நம்பர் கவுண்ட் பண்ணுவே… த்ரீ சொன்னதும் பாடிய ரிலாக்ஸ் ஆக்கிக்க” என்றான். அவளும் அது போலவே செய்ய அவளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு நதியில் குதித்தான் டாம்.

 

சுற்றியிருந்தவர்கள் “க்யூட் கபிள்” என்று தங்களுக்குள் பேசி உற்சாக ஆரவாரம் எழுப்பினார்கள்.

 

நீருக்குள் இருந்து ஆர்யாவையும் தன்னோடு சேர்த்து அணைத்தபடி எழுந்தவன் முற்றிலும் நனைந்து போய் தன்னுடலோடு அச்சத்தில் ஒட்டியிருந்தவளை மையல் பார்வை பார்த்தான்.

 

கண்களைத் திறந்த ஆர்யாவோ நதிநீரின் குளுமையையும் தன்னை கட்டியணைத்திருந்தவனின் தேக வெம்மையையும் ஒரே நேரத்தில் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

 

“ஸ்விம் பண்ணுவோமா?” என்று காது மடலை உரசியபடி கேட்டான் அவன்.

 

“ம்ம்ம்”

 

பின்னர் என்ன? இருவரும் நீந்தினார்கள். நீரை ஒருவர் மீது மற்றொருவர் விசிறியடித்து விளையாடினார்கள். ஆர்யா போதுமென கரையேற நினைத்தாலும் அவளை குண்டுக்கட்டாகத் தூக்கி வந்து மீண்டும் நதியில் இறக்கிவிடுவான் டாம்.

 

இடையிடையே ஜேனட் கொடுத்த சிற்றுண்டிகள், பழச்சாறைக் காலி செய்ய கரைக்குப் போவார்கள். கொஞ்சம் வெயில் காய்வார்கள். பின்னர் மீண்டும் நதிநீரில் நீச்சல்.

 

நீர் விளையாட்டில் அடிக்கடி டாம் ஆர்யாவைத் தீண்டி சீண்டினான். அதை கண்டுகொண்டவளுக்குள் பரவசரமான உணர்வு.

 

“இது தான் சாக்குனு நீ என்னை அடிக்கடி டச் பண்ணுற டாம்” போலிக்கோபத்தோடு கூறினாள் அவள்.

 

“ப்ச்! என்ன இருந்தாலும் ஸ்கொயர் நெக் டாப் அளவுக்கு உன்னை டச் பண்ண முடியலையே”

 

“டர்ட்டி பாய்” என்று அவன் தலையில் செல்லமாக குட்டி வெட்கத்தவிப்பை மறைக்க நினைத்தாள் ஆர்யா.

 

எவ்வளவு நேரம் தான் நீரில் ஆடுவது? குளிர் எடுக்கத் துவங்கியதும் பற்கள் தந்தியடிக்க ஆர்யாவின் முகவாய் நடுங்க ஆரம்பித்தது.

 

இருவரும் கரையேறி கொண்டு வந்த டவல்களால் தங்களைப் போர்த்திக்கொண்டு காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு விரைந்தார்கள்.

 

டாமின் அன்னை லிண்டாவிற்கு சொந்தமான நான்கு படுக்கையறைகள், நீச்சல்குளம், சிறிய தோட்டத்துடன் கூடிய மினி பங்களா விம்பர்லியின் ரெயின்போ ராஞ்ச் ரோட் பகுதியில் இருந்தது.

 

ஆர்யா நடுங்கவும் தனது டவலையும் எடுத்து அவளைச் சுற்றி போர்த்திவிட்டான் டாம்.

 

“வீட்டுக்குப் போனதும் ரம் ஆர் விஸ்கி குடி ஜெர்ரி… குளிர் குறையும்”

 

கிண்டல் செய்தவனது புஜத்தில் வலிக்க வலிக்க கடித்து வைத்தாள் ஆர்யா.

 

“வலிக்குது… வீட்டுக்குப் போனதும் ஜேனட் இதை பாத்தாங்கனா லவ் பைட்ஸ்னு நினைச்சுப்பாங்க” என்றான் விவகாரமாக.

 

ஆர்யா ஒற்றைக்கரத்தால் முகத்தை மூடிக்கொண்டாள். என்னவெல்லாம் பேசுகிறான் இவன்!

 

இருவரும் வீட்டுக்கு வந்ததும் ஜேனட் எட்டிப் பார்த்தார்.

 

“ஹாட்டா எதாச்சும் சாப்பிடுறிங்களா?” என்று கேட்டார்.

 

“இல்ல ஜேன்… யூ டேக் ரெஸ்ட்… கொஞ்சநேரம் ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு ஆர்யாவை அறைக்குள் அழைத்து வந்தான் டாம்.

 

இப்போது ஓரளவுக்கு நடுக்கம் குறைந்திருந்தது அவளுக்கு.

 

தன்னைச் சுற்றியிருந்த டவல்களை எடுத்தவள் டாமின் பார்வை தன் மீது நிலைக்கவும் விதிர்விதிர்த்தாள்.

 

நீரில் நனைந்து சுருள் சுருளாய் இருக்கும் சிகையோடு பார்க்க பேரழகியாகத் தெரிந்தாள். போதாக்குறைக்கு ஈரத்தில் உடலோடு ஒட்டியிருக்கும் காட்டன் சட்டை அவளது வரிவடிவத்தையும் வளைவுகளையும் அப்பட்டமாகக் காட்டியது.

 

டாமின் குறுகுறு பார்வையில் வெட்கி மீண்டும் டவலால் போர்த்தப்போனவளை அவசரமாகத் தடுத்தான் அவன்.

 

“யூ லுக் சோ ப்யூட்டிஃபுல் நவ்… கலைஞ்ச முடி, நலுங்குன ஈர ட்ரஸ் இந்த இம்பெர்ஃபெக்சனான அப்பியரன்ஸ்ல கூட நீ ரொம்ப அழகா இருக்க ஜெர்ரி”

 

வார்த்தைகள் முணுமுணுப்பாக உதிர அவனது கரங்களோ அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டன. அவனது சூடான மூச்சுக்காற்று ஆர்யாவுக்குள் இருந்த கொஞ்சநஞ்ச நடுக்கத்தையும் போக்கிவிட இதற்கு மேல் விலகி நிற்க விரும்பாமல் அவனுடலோடு ஒட்டிக்கொண்டாள் பெண்ணவள்.

 

“ஜெர்ரி?”

 

“ம்ம்ம்”

 

“மே ஐ….?”

 

முடிக்காமல் விட்ட வாக்கியம் தன்னிடம் கேட்கப்பட்ட அனுமதி என்று கூடவா ஆர்யாவுக்குப் புரியாது! அவள் தான் அவனிடம் சரணடைந்துவிட்டாளே. அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள் சம்மதமாக.

 

தனித்தனியே இருந்தபோது குளிர்ந்திருந்த தேகங்கள் ஒன்றோடு ஒன்று உராய்கையில் கதகதப்பாக உணர்ந்தன.

 

அணைப்பும் கதகதப்பும் புதியதொரு மோனநிலையை உண்டாக்க இதழ்கள் முத்தப்போரில் ஈடுபட ஆரம்பிக்க கைகளோ துச்சாதனத்தனம் செய்ய தொடங்கின.

 

இருவருக்குள்ளும் இருந்த காதல் அடுத்த கட்டத்திற்கு செல்லும் தைரியத்தை அளிக்க மெல்லியலாளின் பூமேனியைத் தன்வசமாக்க தொடங்கினான் மரகத விழியழகன்.

 

அவளது மென்மையில் அவன் தொலைய, அவனது வன்மையில் அவள் மயங்க, தாபமும் மோகமும் காதலோடு போட்டி போட்டு அங்கே மோகனராகம் இசைக்க அனுராகமாய் இணைந்தார்கள் காதலர்கள் இருவரும்.

 

கவிதையாய் அரங்கேறிய கூடலில் காதலின் களிப்பே அதிகம். இதழ் முத்தத்தில் முன்னுரை எழுதியவர்கள் நெற்றி முத்தத்தில் முடிவுரை எழுதினார்கள்.

 

ஆர்யாவைத் தனக்குள் அடக்கிக்கொண்ட டாம் கண் மூடி படுத்திருக்க அவளுக்கோ நாணம் அடங்கவில்லை.

 

“லவ் யூ ஜெர்ரி” கண்கள் மூடியிருந்தாலும் உதடுகள் அனிச்சையாக முணுமுணுத்தன.

 

“லவ் யூ டாம்”

 

எவ்வளவு நேரம் அப்படியே கழிந்ததென தெரியவில்லை. கூடலின் மோனநிலை வடிந்து இரவின் ஆளுமைக்குள் அந்த அறை வந்த நேரத்தில் இருவரும் இயல்புக்குத் திரும்பினார்கள்.

 

“எனக்குப் பயங்கரமா பசிக்குது டாம்”

 

டாம் மேற்சட்டையை அணிந்துகொண்டு வெளியேறினான். திரும்பி வந்த போது உணவு பாத்திரங்கள் அடங்கிய ட்ராலியைத் தள்ளிக்கொண்டு வந்தான்.

 

ஆர்யா பேபி பிங் வண்ண லௌஞ்ச் டாப், ஷார்ட்ஸ் அணிந்தவள் கூந்தலை உலர்த்திக்கொண்டிருக்க சூப் கிண்ணத்தை அவளிடம் நீட்டினான்.

 

“சூடு ஆறுறதுக்குள்ள குடிச்சுடு ஜெர்ரி” என்றவன் ஹேர் ட்ரையரை வாங்கி அவளது கூந்தலை உலர்த்த ஆரம்பித்தான்.

 

“நீ ஹாட் வாட்டர்ல குளிச்சு ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்க டாம்… இல்லனா கோல்ட் வந்துடும்” என்றவளிடம் “உன் ஹேர் ஈரமா இருந்துச்சுனா உனக்குத் தான் ஃபர்ஸ்ட் வரும்” என்று சொல்லிவிட்டுத் தன் கடமையைச் செய்தான்.

 

ஆர்யாவுக்கு அவனது அக்கறையில் கண்கள் கலங்கின. இன்னும் எத்தனை முறை அவனது அக்கறையான அன்புச்செய்கைகள் அவளை கண் கலங்க வைக்குமோ!

 

 சூப் நல்ல காரத்துடன் குளிருக்கு இதமாக இருந்தது. இடையிடையே டாமுக்கும் ஊட்டிவிட்டுத் தானும் குடித்து முடித்தாள் ஆர்யா.

 

சூப் காலியான போது அவளது கூந்தல் உலர்ந்துவிட்டது.

 

பின்னர் டாம் குளித்து உடைமாற்ற அவனுக்கும் வயிறு கபகபவென பசிக்க ஆரம்பித்தது.

 

ஜேனட் இருவருக்கும் ஹாம் பர்கர், கார்ன் ப்ரட், மீட் லோஃப், நாஷ்வில் ஹாட் சிக்கன், டெசர்ட் என சுடச்சுட சமைத்து அனுப்பியிருந்தார்.

 

இருந்த பசியில் உணவு காலியானதே தெரியவில்லை இருவருக்கும். கடைசியாக பீனட் பட்டர் அண்ட் ஜெல்லி சாண்ட்விச்சை உள்ளே தள்ளியபோது ஏப்பம் வந்துவிட்டது ஆர்யாவுக்கு.

 

“ஹோம் குக்ட் மீலோட டேஸ்டே தனில்ல”

 

“ஜேனோட சமையல் எப்பவுமே ஆசம்மா இருக்கும்” என்றவன் ஆர்யாவின் உதட்டி அங்குமிங்கும் ஒட்டியிருந்த ஜாமை பெருவிரலால் துடைத்தெடுத்தான்.

 

அவள் அசட்டுச்சிரிப்பொன்றை உதிர்க்கவும் கூந்தலை ஒதுக்கி நெற்றியில் முத்தமிட்டவன் காலி பாத்திரங்களோடு ட்ராலியை உருட்டிக்கொண்டு போய்விட்டான். திரும்பி வந்தவன் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த நீச்சல்குளத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஆர்யாவை பின்னே இருந்து கட்டிக்கொண்டான்.

 

அவளது கன்னத்தில் தனது கன்னத்தால் உராய்ந்தவன் “இந்த மொமண்டை நான் எப்பவுமே மறக்கமாட்டேன் ஜெர்ரி” என்றான் உருகிய குரலில்.

 

“நானும்” என்றவளுக்கு மனநிறைவும் விரக்தியும் ஒரு சேர வந்தது.

 

மனநிறைவுக்கான காரணம் அவளும் அவளது காதலனும் தங்களிடையே இருந்த தயக்கங்களை உடைத்தெறிந்து ஈருடல் ஓருயிராக மாறியது! விரக்திக்குக் காரணம் இருவரும் மற்றொருவர் எல்லையை மதித்து விலகியிருந்த சமயத்தில் தங்களது உறவைக் கொச்சையாகப் பேசிய தந்தையின் சொற்கள்! அது தானே எல்லையைத் தாண்டும் துணிவை அவளுக்குக் கொடுத்தது.

 

 அவள் முகம் சுருங்குவதை வைத்து எதுவோ அவளை வாட்டுகிறதென கண்டுகொண்ட டாம், தனது அணைப்பால் மற்றவை அனைத்தையும் மறக்கடித்தான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
44
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்