Loading

காதல் 12

“யாரோட கண்ணீரும் என்னை அசைச்சதில்ல… பொதுவா எனக்கு அழுறவங்களைச் சுத்தமா பிடிக்காது… அழுகை பலகீனத்தோட அடையாளம்னு நினைக்குறவன் நான்… அழுது மத்தவங்க இரக்கத்தைச் சம்பாதிக்க நினைக்குறவங்களுக்கு ஏன் இம்பார்டன்ஸ் குடுக்கணும்? வெயிட் வெயிட், இது எல்லாமே ஜெர்ரியோட கண்ணீரை பாக்குறதுக்கு முன்னாடி என்னோட நிலைப்பாடு… அவளோட கண்ணீர் தான் அழுகை பலகீனத்தோட அடையாளம் மட்டும் இல்லனு எனக்குப் புரியவச்சுது… என்னை யாரும் புரிஞ்சிக்கலையேங்கிற ஏக்கத்துல வர்ற கண்ணீர், செய்யாத தப்புக்குப் பழியேற்குறப்ப வர்ற கண்ணீர், உதவிக்கு யாருமில்லாம தனிச்சு நிக்குறப்ப பரதவிப்புல வர்ற கண்ணீர்னு அழுகைக்குத் தான் எத்தனை பரிமாணங்கள் இருக்கு! இதை எனக்குப் புரிய வச்சது ஜெர்ரி தான்”

 

-டாம்

 

க்ளே பிட் இந்தியன் ரெஸ்ட்ராண்ட்…

 

காரச்சாரமான பிரியாணியை ரய்தாவுடன் கலந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ஆர்யா. அவளருகே நாணையும் தாலையும் நாசுக்காக சுவைத்துக்கொண்டிருந்த டாம் அவள் கரண்டியில் நீட்டிய பிரியாணியைச் சுவைக்க கொஞ்சம் தயங்கினான்.

 

“டோண்ட் வொரி டாம்… கர்ட் ரய்தால மிக்ஸ் பண்ணித் தான் தர்றேன்… காரமே இருக்காது” என்று அவன் வாயருகே கரண்டியைக் கொண்டு சென்றவளை

 

“ஐ அம் நாட் அ கிட் ஜெர்ரி” என்று தடுத்தான் டாம்.

 

ஆர்யா கரண்டியைத் தனது தட்டில் வைத்தவள் முகத்தை உர்ரென வைத்துக்கொள்ளவும் பக்கென சிரித்துவிட்டான்.

 

“ஏன் சிரிக்குற?” கடுகடுவென கேட்டவளின் தட்டிலிருந்த கரண்டியை எடுத்து அவனே சாப்பிடவும் ஆர்யாவின் முகம் மலர்ந்தது.

 

“குட் பாய்” என அவனது தோளில் பாராட்டாகத் தட்டிக்கொடுத்தாள்.

 

“இப்ப என் டர்ன்” என்றவன் நாணை தாலில் தோய்த்து அவளுக்கு ஊட்டிவிடவும் ஆர்யா மறுப்பு கூறாமல் சாப்பிட்டாள். சாப்பிடும்போது கண் கலங்கி போனது.

 

“ஹே ஜெர்ரி? ஏன் அழுற?”

 

“அம்மா ஞாபகம்” என்றபடி மூக்கை உறிஞ்சிக்கொண்டாள் ஆர்யா.

 

“வீட்டுக்குப் போனதும் அவங்களுக்குக் கால் பண்ணிப் பேசிடு”

 

“ம்ம்ம்”

 

பின்னர் பிரியாணியில் கவனமானவள் “நான் வெஸ்ட் காம்பஸ்ல வீடு தேடிட்டிருக்கேன் டாம்… அந்த ஏரியா சேஃபா?” என்று கேட்க, டாம் கையில் எடுத்த நாண் விள்ளலை தட்டில் போட்டுவிட்டு அதிருப்தியுடன் அவளைப் பார்த்தான்.

 

“ஏன் இவ்ளோ அவசரப்படுற ஜெர்ரி?”

 

“நம்ம ரெண்டு பேரோட நல்லதுக்காக யோசிச்சு எடுத்த முடிவு இது… உன் கூடவே இருந்து உன்னோட ஃபீலிங்ஸோட விளையாட எனக்குப் பிடிக்கல… அதே நேரம் என் மனசும் கண்ட்ரோலா இருக்க மாட்டேங்குது… நம்ம ஒன்னா இருக்குறது ரெண்டு பேரோட மென்டல் ஹெல்துக்கும் நல்லது இல்லனு தோணுது”

 

ஆழ்ந்து யோசித்து எடுத்த முடிவை டாமிடம் எடுத்துச் சொன்னாள் ஆர்யா. அவன் என்னவோ சமாதானம் ஆகவில்லை. அவள் சொன்னவை அனைத்தும் உண்மை தான்.

 

அணைப்புகளும் முத்தங்களும் இதழணைப்புகளும் அவர்களுக்குள் சகஜமாகிவிட்டன. இப்போதெல்லாம் அதோடு நிற்பதற்கு இருவரது மனங்களுக்கும் விருப்பமில்லை. எங்கே எல்லையைத் தாண்டிவிடுவோமோ என்ற பயம் இருவருக்குள்ளும் வியாபித்திருப்பது என்னவோ உண்மை.

 

அந்தப் பயத்துக்குத் தீர்வு இருவரும் தனித்தனியே வசிப்பது தான் என்கிறாள் ஆர்யா. அது உண்மையாக இருந்தாலும் கசந்தது டாமிற்கு.

 

உடல்நிலை மோசமானால் கசப்பு மருந்து சாப்பிடுவதில்லையா! அதே போல நினைத்துக்கொள் என ஆர்யா கூறிய அறிவுரையை ஏற்றுக்கொண்டான்.

 

இருவரில் யார் பேராசிரியர் என்றே புரியவில்லை என சலிப்போடு சொல்லவும் செய்தான்.

 

இருவரும் பேசிக்கொண்டே சாப்பிடுகையில் ஆர்யாவின் மொபைல் சிணுங்கியது. தொடுதிரையில் ‘அப்பா’ என்று வரவும் ஆர்யாவின் கண்கள் கலவரம் பூசிக்கொண்டன.

 

ஒவ்வொரு முறையும் அவரது அழைப்பின் முடிவில் ஆர்யாவின் மனம் புண்பட்டுப்போவது வாடிக்கையாகிவிட்டது. ஏதோ டாமின் துணையால் அந்தப் புண் புரையோடாமல் உடனே ஆறிவிடுகிறது. ஆனால் ஆறும் வரை எடுக்கும் வேதனை எத்துணை கொடுமையானது என உணர்ந்தவளுக்குத் தந்தையின் அழைப்பை ஏற்க தைரியம் வரவில்லை.

 

டாமும் தொடுதிரையைப் பார்த்துவிட்டு “பேசவேண்டாம் ஜெர்ரி… அவர் உன் மனசை நோகடிப்பார்” என்றான். ஆர்யா சரியென தலையாட்டிவிட்டு பிரியாணியைக் காலி செய்தாள்.

 

அழைப்பு அதுவாகத் துண்டிக்கப்படும் வரை அவள் மனம் ஒரு நிலையில் இல்லை.

 

ஏதோ தந்தையே எதிரில் நின்று முறைப்பது போன்ற மாயை.

 

கை கழுவிவிட்டு இருவருக்கும் சேர்த்து டாம் பணம் செலுத்தியபோது மீண்டும் தேவநாராயணனிடமிருந்து அழைப்பு வந்தது. ஆர்யா இம்முறை டாமின் முகத்தைப் பார்த்தாள். ஏற்கட்டுமா என்று அனுமதி கேட்பது போல அவளது முகபாவனை இருக்கவும் சரியென தலையசைத்தான் அவன்.

 

ஆர்யா அழைப்பை ஏற்கவும் தேவநாராயணன் வசைமாரி பொழிய ஆரம்பித்தார்.

 

“கால் பண்ணுனா எடுக்க முடியாத அளவுக்கு என்ன வெட்டி முறிக்குற வேலை உனக்கு? அந்த அமெரிக்கக்காரன் கூட சேர்ந்து கும்மாளம் அடிச்சிட்டு இருந்தியா?”

 

“அப்பா….” ஆர்யா அவர் காரணமின்றி டாமையும் தன்னையும் இணைத்து நாராசமாகப் பேசவும் கண்டிக்கும் தொனியில் குரலை உயர்த்தினாள்.

 

“குரலை உசத்துனனா தொலைச்சிடுவேன் கழுதை… உன்னைப் படிக்க தானே அமெரிக்கா அனுப்பிவச்சேன்… போறதுக்கு முன்னாடி நான் சொன்னதுக்குலாம் மண்டைய ஆட்டிட்டு அங்க போனதுக்கு அப்புறம் எல்லாத்தையும் உதிர்த்துட்டு அலையுற”

 

“நீங்க என்ன சொல்லுறிங்கனு புரியலப்பா”

 

மெய்யாகவே அவரது கோபத்திற்கான காரணம் புரியாததால் கேட்டுவிட்டாள் ஆர்யா. மறுமுனையில் கொதிப்பின் உச்சத்திலிருந்த தேவநாராயணன் மகள் என்று கூட பார்க்காமல் அநாகரிகமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்.

 

“நீ அந்த அமெரிக்கக்காரனை கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்த கருமத்தைச் சொல்லுறேன்… எல்லாத்தையும் ரவி போட்டோ பிடிச்சு அனுப்பிட்டான்… சீ! உன்னை என் மகள்னு சொல்லவே அருவருப்பா இருக்கு… தெருவுலயே இப்பிடி நடந்துக்கிறவ அவன் கூட ஒரே வீட்டுல தங்கி என்னென்ன அசிங்கத்தைப் பண்ணுறியோ? உன்னையெல்லாம் காலேஜ் முடிச்சதும் கையை காலை உடைச்சு வீட்டுல போட்டுருக்கணும்… அதை விட்டுட்டு வேலைக்கு அனுப்புனேன்ல, அதான் உனக்குக் குளிர் விட்டுப்போச்சு… என் கண் முன்னாடி இருக்குற வரைக்கும் வீட்டுக்கு அடங்குனவ மாதிரி நாடகம் போட்டுட்டு, கண்காணாத தேசத்துக்குப் போனதும் கொழுப்பெடுத்து ஆடுற… ரவி உன் கிட்ட தப்பா நடந்துக்கப் பாத்தான்னு ஓனு அழுத… அவனாச்சும் உனக்கு நிச்சயம் பண்ணுன மாப்பிள்ளை… ஆனா இப்ப நீ கல்யாணம் பண்ணாம குடித்தனம் நடத்துறியே ஒரு அமெரிக்கக்காரன், அவன் யாரோ ஒரு மூனாவது மனுசன்… என் வளர்ப்பு, நம்ம கலாச்சாரம் எல்லாத்தையும் மறந்து மனம் போக்குல வாழுறல்ல… எழுதி வச்சிக்க, இனிமே உனக்கும் நம்ம குடும்பத்துக்கும் எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல… அம்மா அக்கானு என் பொண்டாட்டி, மகளுக்குக் கால் பண்ணி நாடகம் போடலாம்னு நினைச்ச, நல்லா இருக்காது.. அவங்க ரெண்டு பேரும் நீ அமெரிக்கால செய்யுற அசிங்கத்தைக் கேள்விப்பட்டதும் உன் உறவே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்க… இன்னைல இருந்து நீ ஒரு அனாதை… என் வீட்டுப்பக்கம் எப்பவும் வந்துடாத”

 

தேவநாராயணின் வசைமாரி நின்றதும் தான் அவர் அழைப்பைத் துண்டித்ததே ஆர்யாவுக்குப் புரிந்தது. அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஆர்யாவின் மென்மையான மனதில் ஆணியை அடித்தது போல வலியை உண்டாக்கியது.

 

அழக்கூட தோன்றாத அதீத வேதனை அவளைச் சூழ்ந்து கொள்ள மரம் போல நின்றவளிடம் “ஆர் யூ ஓ.கே ஜெர்ரி?” என ஆயிரம் முறை கேட்டும் பதில் கிடைக்கவில்லை டாமிற்கு.

 

முற்றிலும் அனைத்தையும் இழந்து நிற்கதியாக நிற்பது போன்ற தோற்றம். பேராசிரியன் அல்லவா! சொல்லாமலே புரிந்துகொண்டவன் அதிர்ச்சியால் செயல்பட முடியாமல் நின்றவளைத் தனது கரங்களில் ஏந்தி காரில் அமர வைத்தான்.

 

அவளது அதிர்ச்சிக்கான காரணம் தெரியாவிட்டாலும் அது வடியும் வரை காத்திருக்கத் தீர்மானித்தவன் காரை ஓல்ட் வெஸ்ட் ஆஸ்டினுக்குச் செலுத்தினான்.

 

வீட்டுக்கு வந்ததும் “ஜெர்ரி” என அழைத்தவனிடம் “அம்மா கிட்ட பேசிட்டு வர்றேன்” என்ற ஆர்யா மைத்ரியின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.

 

அழைப்பே போகவில்லை. ஆராதனாவின் எண்ணுக்கு அழைத்தபோதும் அதே நிலை தான். வாட்சப்பில் மூவரும் சேர்ந்திருக்கும் குரூப்பினுள் போய் பார்த்தாலோ அதிலிருந்து ஆராதனாவும் மைத்ரியும் விலகிவிட்டதாக அறிவிப்பு காட்டியது.

 

தேவநாராயணனின் வார்த்தைகள் கொடுத்த வலியை விட தாயாரும் தமக்கையும் மௌனமாய் தன்னை ஒதுக்கிவிட்ட வலியே ஆர்யாவைக் கொன்றது.

 

குடும்பமே உலகம் என வாழ்ந்தவர்கள் அந்தக் குடும்பத்தாராலேயே புறக்கணிக்கப்படுவது எத்துணை பெரிய அவலம்!

 

செய்யாத தவறுக்குக் கேட்கக்கூடாத வார்த்தைகளைக் கேட்ட பிறகும் உடையாத ஆர்யாவின் மனதைரியம் தமக்கையும் தாயாரும் தன்னை ஒதுக்கியதால் சுக்குநூறாக உடைந்தது.

 

மெல்லிய விம்மல் அவளிடமிருந்து கேட்டது. மனதில் மறைந்து கிடந்த வேதனையெல்லாம் கரையுடைத்து கண்ணீர் நதியாக அழுகை எனும் ரூபத்தில் பிறப்பெடுத்து பெருகி வழிந்தது.

 

தேற்றுவார் இல்லாத குழந்தையாக விசித்து அழுதவளை ஆதரவாகத் தோள் சாய்த்துக்கொண்டான் டாம்.

 

“காம் டவுன் ஜெர்ரி”

 

அவளது சிகையை வருடிக்கொடுத்தவனின் மனம் ஆர்யாவின் கண்ணீரால் துடித்துப்போனது.

 

“எல்லாரும்… என்னை ஒதுக்கிட்டாங்க டாம்”

 

கேவி கேவி அழுதவளை என்ன சொல்லி அவன் தேற்றுவான்? நீ இடமளித்ததால் தானே அவர்கள் உன்னை ஒதுக்குமளவுக்குத் துணிந்தார்கள் என்று மற்றவர்களிடம் பேசுவதைப் போல ஆர்யாவிடம் அறிவுரை தொனியில் பேசத் துணிவில்லை டாமிற்கு.

 

அவனது நோக்கமெல்லாம் கண்முன்னே அழுது துடிப்பவளை எப்படியாவது தேற்றி மனக்காயத்தை ஆற்ற வேண்டுமென்பதே

 

“நான் உன் கூட கல்யாணம் பண்ணிக்காம ஒரே வீட்டுல வாழுறேன்னு ரவி அப்பா கிட்ட சொல்லிருக்கான் டாம்… எத்தனை தடவை இதை பத்தி நம்ம பேசிருப்போம்? இதுவரைக்கும் நீயோ நானோ அப்பிடி ஒரு காரியத்தைச் செய்ய துணிஞ்சிருக்கோமோ? எதுவுமே செய்யாம தப்பு தப்பா பேச்சு வாங்கி நிக்குறேன் டாம்… ரவி என் கிட்ட எல்லை மீறுறப்பலாம் என் அக்கா வாழ்க்கைல பிரச்சனை வந்துடும், என் அம்மா மனசை அப்பா காயப்படுத்துவார்னு அவங்களுக்குக்காக யோசிச்சேன்… இப்ப அவங்க யாருமே என்னைப் பத்தி யோசிக்கலயே? நான் உன்னை ஹக் பண்ணி முத்தம் குடுத்த போட்டோவ வச்சு நமக்குள்ள இருக்குற உறவுக்குக் கேவலமான முத்திரைய குத்துன எங்கப்பாவ விட, என்ன நடந்துச்சு ஆர்யானு என் தரப்பு நியாயத்தைக் கேக்காம ஒதுக்கி வச்ச என் அம்மாவும் அக்காவும் எனக்குக் குடுத்த காயம் ரொம்ப பெருசு டாம்… ரொம்ப வலிக்குது… செத்துடலாம் போல இருக்கு”

 

அவளது அழுகை டாமின் கண்ணீர் சுரப்பியையும் வேலை செய்யவைத்துவிட்டது.

 

ஆம்! ஆர்யாவின் நிலை குலைந்த தோற்றமும், இடைநிற்காத அழுகையும் எச்சூழலிலும் கலங்காத டாமை கண் கலங்க வைத்துவிட்டது. அதிலும் செத்துவிடலாம் என்ற வார்த்தை அவனை ஒரேயடியாக வேதனையில் ஆழ்த்திவிட இறுக்கமாக அவளை அணைத்துக்கொண்டவன் “டோண்ட் சே தட் வேர்ட்… நான் இருக்குறேன் உனக்கு” என்று ஆறுதல் கூறினான்.

 

ஆர்யா அவனது அணைப்பிலிருந்து விலகியவள் “நான் கொஞ்சம் தனியா இருக்கணும்” என்க

 

“நோ வே! இந்த நிலமைல உன்னைத் தனியா விடமாட்டேன்” என்று அதட்டலாய் மொழிந்தான்.

 

“எத்தனை நாள் நீ என்னை இப்பிடி புரொடக்ட் பண்ணுவ?”

 

கண்ணீருடன் கேட்டவளின் நிராசை அவனைச் சீண்டிவிட்டது.

 

“என்னோட புரொடக்சன் உனக்குத் தேவைப்படாத நாள் வர்ற வரைக்கும்… உன் பிரச்சனைய நீயே சால்வ் பண்ணிக்கிற துணிச்சல் உனக்கு வர்ற நாள் வரைக்கும்… பட் அது வரைக்கும் யூ ஹேவ் டு பி வித் மீ… இது ரெக்வஸ்ட் இல்ல… மை ஆர்டர்”

 

அதிகாரமாகச் சொன்னவன் ஃப்ரிட்ஜிலிருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து நீட்டினான்.

 

ஆர்யா அதை வாங்கி அருந்தினாள். இருப்பினும் அவளது கண்ணீர் நிற்கவில்லை.

 

“இத்தனை வருசம் ரொம்ப கட்டுப்பாட்டோட, என் வயசுப்பொண்ணுங்களை மாதிரி வெளியுலகத்துல எந்தச் சந்தோசத்தையும் அனுபவிக்காம, அப்பா பேச்சைக் கேட்டு வாழ்ந்தது எல்லாம் வேஸ்ட்டா போச்சுல்ல… நான் சொன்னா நம்ப மாட்ட டாம்… என் டீம்-மேட்ஸ் எல்லாரும் வீக்கெண்ட்ல மால், சினிமானு அவ்ளோ என்ஜாய் பண்ணுவாங்க… அப்பாக்கு வெளிய சுத்துனா பிடிக்காதுனு வீட்டோட அடைஞ்சிருந்திருக்கேன்… டீம் டின்னர் அரேஞ்ச் பண்ணுனா கூட அதுல கலந்துக்க மாட்டேன்… ஏன்னா அதுவும் அப்பாக்குப் பிடிக்காது… நான் ஒரு நல்ல மகளா இருக்கணும்ங்கிற முயற்சில என் வயசுக்கு உண்டான சின்ன சின்ன சந்தோசத்தைக் கூட தியாகம் பண்ணி பைத்தியக்காரியா வாழ்ந்திருக்கேன் பாரு… அதுக்கு கிடைச்ச பலன் ‘ஒழுக்கங்கெட்டவ’ங்கிற பட்டம்… நான் தப்பான பொண்ணா டாம்?”

 

“ஹூ செட்? ஐ ஹேவ் நெவர் மெட் அன் வொண்டர்ஃபுல் கேர்ள் லைக் யூ… அவர் உன்னைப் புரிஞ்சிக்கிட்ட விதம் அவ்ளோ தான்னு நினைச்சு மறந்துடு”

 

“நோ! நான் மறக்கமாட்டேன்… இந்த நாளையும் அவரோட வார்த்தையையும் என்னைக்குமே நான் மறக்கமாட்டேன் டாம்”

 

அழுதபடி புலம்பியவளை இப்படியே புலம்பவிட்டால் சரியாக இருக்காதென நினைத்தவன் உறங்கி எழுந்தால் அவளது அதிர்ச்சி குறையும் என்று தீர்மானித்து தூக்கமாத்திரை ஒன்றை எடுத்துக்கொடுத்தான்.

 

மறுவார்த்தை பேசாமல் அதை விழுங்கியவள் அழுதபடியே உறங்கியும் போனாள். டாம் அவளது அறையில் படுக்க வைத்தவன் எங்கே தூக்கமாத்திரையையும் மீறி விழித்துக்கொண்டால் அவள் ஏடாகூடமாக எதையும் செய்துவிடுவாளோ என்று அஞ்சி அங்கே கிடந்த கவுச்சில் படுத்துக்கொண்டான்.

 

மறுநாள் விடியலில் விழித்தபோது ஆர்யாவின் மனவேதனை மட்டுப்பட்டிருந்தது. கவுச்சில் கால்களைக் குறுக்கி படுத்திருந்த டாமைப் பார்த்ததும் குற்றவுணர்ச்சி எழுந்தது.

 

கூடவே என் மீது இவனுக்கு எவ்வளவு அக்கறை என்று உள்ளம் உருகிப்போனது. இந்த அக்கறை ஏன் என் குடும்பத்தாருக்கு இல்லாமல் போனது?

 

மீண்டும் மனம் பழையபடி யோசிக்கவும் பிடிவாதமாக யோசனையைத் திசை திருப்பினாள். பட்ட காயம் அவளை வேறொருத்தியாக, எதை பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாத ஒருத்தியாக மாற்றிவிட்டது.

 

யாரெல்லாம் செய்யாத தவறுக்காக அவளை ஒதுக்கினார்களோ அவர்களைப் பற்றி இனி அவள் யோசிக்கப்போவதேயில்லை.

 

மாபெரும் மனவேதனையின் போது அவளுக்கு உறுதுணையாக இருந்தானே டாம், இனி அவன் மட்டுமே அவளுக்கென மிச்சமிருக்கும் ஒரே ஒரு உறவு.

 

மெதுவாக எழுந்து அவன் படுத்திருந்த கவுச்சின் அருகே சென்றவள் டாமின் சிகையை ஆதுரமாகக் கோதினாள். அவளது விரல்களின் ஸ்பரிசத்தில் நெற்றி சுருங்க விழிகளைத் திறந்தான் டாம்.

 

“குட்மானிங் ஜெர்ரி… ஃபீலிங் பெட்டர்?” மெதுவாக முணுமுணுத்தான்.

 

“மச் பெட்டர்” அவனைப் போலவே முணுமுணுத்தவள் புன்னகைத்தாள்.

 

அதோடு நிற்காமல் தலை சாய்த்து அவனது முகத்தை ஏந்தியவள் “ஐ லவ் யூ டாம்” என்று உருக்கமாகச் சொல்லிவிட்டு சற்றும் தாமதிக்காமல் தனது உதடுகளால் அவனது இதழைப் பூட்டினாள்.

 

முதல் முறையாக அவளே முன்வந்து கொடுக்கும் முத்தத்தை மறுக்க மனமில்லாதவன் விரும்பியே அந்த இதழணைப்பில் தொலையத் துவங்கினான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
44
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்