Loading

காதல் 10

“காதல் ரொம்ப அற்புதமான உணர்வு… அதுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது… எந்த வயசுலயும் யார் மேலயும் காதல் வரலாம்… அந்தக் காதல் சுதந்திரப்பறவையா இருந்தா மட்டும் தான் உயிர்ப்போட இருக்கும்… எப்ப அதை மேரேஜ், ஃபேமிலிங்கிற பொன்கூண்டுல சிறை வைக்குறோமோ அப்பவே அதோட ஜீவன் போயிடும்… இப்ப எனக்கு ஜெர்ரிய பாக்குறப்ப வர்ற அட்ராக்சன் நாளைக்கே கூட லவ்வா மாறலாம்… ஆனா அந்த லவ்வை மேரேஜ்ங்கிற கூண்டுக்குள்ள அடைச்சு வைக்குற தப்பை நான் என்னைக்குமே செய்யப்போறதில்ல”

 

 

-டாம்

 

 

நியூமரோ 28 இட்டாலியன் ரெஸ்ட்ராண்ட், சன்ரைஸ் ரோடு, ரவுண்ட் ராக்…

 

 

டாம் ரெட் ஒயினைச் சுவைத்தபடி ஒரு பெண்ணிடம் சிரித்த முகமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள் ஆர்யா.

 

 

அங்கே எல்சா மும்முரமாக அந்தக் காலத்து செங்கல் ஓவனில் பீட்சாவை ஒரு பெரிய தட்டில் வைத்து தள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்தவள் “இப்பிடி ட்ரெடிஷனல் ஸ்டைல்ல பீட்சா செய்யுறதால தான் உங்க ரெஸ்ட்ராண்ட்ல கூட்டம் அலைமோதுது போல” என்றாள்.

 

 

எல்சா புன்னகைத்தபடி ஃபொகாசியா என்ற ப்ரெட்டுக்குத் தேவையான மாவை எடுத்து வைத்தாள்.

 

 

“வெளியில சாப்பிடுற ஃபூட் நாக்குக்கு ருசியா இருக்கணும், வயித்துக்குப் பிரச்சனை தரக்கூடாது… ஒரு நாள் சாப்பிட்டதுக்கு பத்து நாள் டாக்டர் கிட்ட அலையவைக்கக்கூடாது… நியூமரோக்கு வர்ற கஸ்டமர்சுக்குப் பிடிச்சதே எங்களோட இந்த மோட்டோ தான்… இப்ப இந்த ஃபொகாசியா ப்ரெட்டுக்கு கார்லிக், ரோஸ்மேரி போட்டு கொதிக்க வச்ச ஆலீவ் ஆயிலை யூஸ் பண்ணுறேன்… ரோஸ்மேரி எவ்ளோ அற்புதமான ஹெர்ப் தெரியுமா? நம்ம ஃபேமிலிக்குச் சமைக்கிற மாதிரி கஸ்டமர்சுக்கும் சமைச்சோம்னா அவங்க நம்ம ரெஸ்ட்ராண்டை எப்பவும் மறக்க மாட்டாங்க ஜெர்ரி”

 

 

“ஓஹ் காட்! உங்களுக்கும் நான் ஜெர்ரி ஆகிட்டேனா?”

 

 

“டாம் அப்பிடி சொல்லி சொல்லி உன் நேம் ஜெர்ரினு என் மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகிடுச்சு”

 

 

எல்சாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் சமையலறையின் கண்ணாடி தடுப்பின் வழியே வைனரியில் பெண் ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருந்த டாமை அவ்வபோது ஆர்யாவின் விழிகள் ஒருவித ஆதங்கத்தோடு தழுவி மீண்டன.

 

 

அதை எல்சா கவனிக்கத் தவறவில்லை. ஒரு சர்வர் பாஸ்தா பென்னே கேட்டு வர அதை எடுத்துக்கொடுத்தவள் ஆர்யாவிடம் பேச்சு கொடுத்தபடி ஃப்ரீசரிலிருந்த ரிகோட்டா எனப்படும் ஆட்டுப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட சீஸை எடுத்தாள்.

 

 

ஆர்யாவின் பார்வை டாமை விட்டு விலகாமலிருக்கவும் “அவ தான் மேகி… டாமோட எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட்” என்றாள் எல்சா.

 

 

அந்நொடி ஆர்யாவிடமிருந்து சிறிய சலனம் ஏற்பட்டதைக் கவனித்துவிட்டாள் அவள்.

 

 

“மேகிக்கு டாமை மேரேஜ் பண்ணிக்கணும்னு ஆசை… போல்டன் இன்கார்பரேசனோட அதிகாரம் அடுத்து டாமுக்குத் தான் வரும், அவனை மேரேஜ் பண்ணுனா சொகுசா வாழலாம்னு திட்டம் போட்டா… ஆனா டாமை பத்தி தான் உனக்குத் தெரியுமே… ஹீ வாஸ் நாட் ரெடி டு மேரி ஹெர்… சோ பிரிஞ்சிட்டாங்க… டூ இயர்ஸ் கழிச்சு இப்ப மறுபடி மீட் பண்ணிருக்காங்க”

 

 

பெண் தோழி என்றதுமே ஆர்யாவுக்குள் புகைந்தது. என்னைச் சமாதானம் செய்ய இங்கே அழைத்து வந்தவன் முன்னாள் காதலியோடு கொஞ்சிக்கொண்டிருக்கிறான் என கடுப்புற்றாள்.

 

 

“காதலி இல்ல… கேர்ள் ஃப்ரெண்ட்” என்று திருத்தியது அவளது மனசாட்சி.

 

 

“இந்த ஊருல ரெண்டுக்கும் பெருசா வித்தியாசம் இல்ல” என மனசாட்சியை அடக்கியவள் எல்சாவிடம் ஏதாவது உதவி செய்யட்டுமா என கேட்க சீஸ் வீலோடு அந்த சர்வரைத் தொடர்ந்து செல்லும்படி கூறினாள்.

 

 

ஆர்யாவுக்கும் டாம் அந்தப் பெண்ணிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பதால் உண்டான எரிச்சலை திசை திருப்பியே தீரவேண்டும் என்ற கட்டாயம்.

 

 

“ஓ.கே எல்சா”

 

 

புன்னகையோடு சீஸ் வீலை எடுத்துக்கொண்டு டைன்-இன் பகுதிக்குச் சென்றாள்.

 

 

வைனரியைக் கடந்து தான் அங்கே போக வேண்டுமென்பதால் டாமின் பார்வைக்கு இக்காட்சி தப்பவில்லை.

 

 

ஆர்யா தன்னைக் கவனியாது சர்வருடன் சிரித்துப் பேசிக்கொண்டு செல்லவும் முணுக்கென ஒரு கோபம் அவனுக்குள் முகிழ்த்தது.

 

 

“ஓ.கே மேகி… வீ வில் டாக் லேட்டர்” என அந்தப் பெண்ணைத் தவிர்க்கப் பார்த்தான். அவளோ அவனை அத்துணை எளிதில் விடுவதாகத் தெரியவில்லை.

 

 

“நம்ம ரெண்டு பேரும் சேர்த்து போன லாங் ட்ரிப் ஞாபகம் இருக்குதா டாம்? ரொம்ப அற்புதமான ஞாபகம் அது… இப்ப நினைச்சாலும் எனக்குள்ள ஒரு சிலிர்ப்பு ஓடுது”

 

 

மயக்கத்துடன் உரைத்தாள் அந்த மேகி என்ற மார்கரேட். டாமின் முன்னாள் பெண் தோழி. காதல், திருமணம் என அவள் நச்சரித்ததால் டாம் அவளுடனான நட்பை முறித்துக்கொண்டான்.

 

 

இப்போது ரெஸ்ட்ராண்டில் பார்த்ததும் நட்புரீதியாகப் பேசிக்கொண்டனர். ஆயினும் மார்கரேட்டிற்கு தங்கள் உறவைப் புதுப்பிக்கும் எண்ணம் இருந்தது. என்னன்னவோ சொல்லி டாமிற்கு வலை விரித்துப் பார்த்தாள்.

 

 

ஆனால் டாம் கோப்பை கோப்பையாக ரெட் ஒயினை அருந்தினானே தவிர அவளது நப்பாசைக்குச் சரியென ஒரு வார்த்தை சொல்லவில்லை.

 

 

இப்போது ஆர்யா அவனது பார்வையில் பட்ட பிறகோ டாமின் விழிகள் அவளை விட்டு நகர்வேனா என பிடிவாதம் பிடித்தன.

 

 

ஆர்யா சர்வர் மெக்குடன் சேர்ந்து சீஸ் வீலில் பாஸ்தாவைச் சமைத்துக்கொண்டிருந்தாள். அவன் ஆர்வத்தோடு அவளுக்குச் சொல்லிக்கொடுக்க, டாமிற்கோ இக்காட்சி அசௌகரியத்தைக் கொடுத்தது.

 

 

கூடவே உணவு மேஜையிலிருந்த இளைஞன் ஆர்யாவின் கவனத்தைத் திருட முயல்வதையும் பார்த்து விட்டான் டாம். அவனிடம் ஆர்யாவும் சிரித்துப் பேசவும் டாமின் பொறுமை காற்றில் பறந்துவிட்டது.

 

 

மார்கரேட் இப்போதைக்குப் பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை.

 

 

“ஓ.கே மேகி… ஒரு எமர்ஜென்சி”

 

 

அவளது பேச்சைப் பாதியில் கத்தரித்துவிட்டு ஆர்யா நின்று கொண்டிருந்த மேஜையை அடைந்தான் டாம்.

 

 

எதுவும் பேசாமல் ஆர்யாவின் கையைப் பிடித்தவன் “வா ஜெர்ரி” என்கவும் சீஸ் வீலில் பாஸ்தாவை முட்கரண்டியால் புரட்டிக்கொண்டிருந்தவள் ஏன் என்று கண்களால் வினவினாள்.

 

 

“வா! அப்புறமா சொல்றேன்”

 

 

அதிகாரமாகச் சொன்னவன் அவளுடைய கையை இறுக்கமாகப் பிடிக்கவும் ஆர்யாவிற்கு கை வலியெடுக்கத் துவங்கியது.

 

 

இவ்வளவு நேரம் வேறொருத்தியிடம் சிரித்துப் பேசிவிட்டு என்னிடம் அதிகாரம் காட்டுகிறாயா என்ற எரிச்சலோடு அவன் கையை உதற முயன்றாள்.

 

 

ஆனால் டாமின் கரம் இரும்பாய் மாறியிருக்க அவளால் தனது கையை அசைக்கக்கூட முடியவில்லை.

 

 

“டாம்!”

 

 

கடித்த பற்களிடையே வார்த்தைகளை முணுமுணுத்தவளின் கையிலிருந்த சீஸ் வீலை வாங்கி மேஜையில் வைத்தவன் “நீ சர்விங்கை கவனி மெக்” என்று சொல்லிவிட்டு அவளை இழுக்காத குறையாகத் தன்னோடு அழைத்துச் சென்றான்.

 

 

மற்றவர் கண் மறைவாக ஸ்டோர் ரூம் பகுதிக்கு அழைத்து வந்தவன் அவள் கையை விடவும் ஆர்யா பொறிய ஆரம்பித்தாள்.

 

 

“எதுக்கு இப்பிடி தரதரனு இழுத்துட்டு வந்த டாம்? உன் கேர்ள் ஃப்ரெண்ட் கூட ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தல, திடீர்னு உனக்கு என்னாச்சு?”

 

 

“கேர்ள் ஃப்ரெண்ட்?” முகம் சுளித்த டாம் “எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட்” என்று அவளது வார்த்தையைத் திருத்தினான்.

 

 

“பேசுனதை பாத்தா எக்ஸ் மாதிரி தெரியலை… சம்திங் இஸ் ப்ரூயிங்”

 

 

“ஓஹ்! நீயும் தான் மெக் கூடவும், அந்த டேபிள்ல இருந்த பையன் கூட ஃப்ளர்ட் பண்ணுன”

 

 

“வாட்? ஆர் யூ அவுட் ஆப் மைண்ட் டாம்? பேசுறதுக்கும் ஃப்ளர்ட் பண்ணுறதுக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?”

 

 

“பேசுறதுக்கும் ரொமான்ஸ் பண்ணுறதுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாதா ஜெர்ரி?”

 

 

“நான் உன் வீட்டுல பேயிங் கெஸ்டா தங்கியிருக்குறதால என்னை கண்ட்ரோல் பண்ணலாம்னு நினைச்சிட்டியா? ஸ்டே ஆன் யுவர் லிமிட் டாம்… டோண்ட் க்ராஸ் தட்”

 

 

ஆர்யா கோபத்தோடு எச்சரிக்கவும் டாமின் ஈகோ தூண்டப்பட்டுவிட்டது.

 

 

“என் கிட்ட லிமிட் பத்தி பேசுறியா?” என சீற்றத்தோடு நெருங்கியவனின் மார்பில் கை வைத்து தடுத்தவள் “யெஸ்” என்று அழுத்தமாக உரைத்த கையோடு அவனை விலக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் ஆர்யா.

 

 

டாம் பொங்கி வந்த சினத்தை அடக்க வழி தெரியாமல் ஸ்டோர் ரூமின் சுவரில் கரங்களை முஷ்டியாக்கி குத்தினான்.

 

 

“டாம்”

 

 

எல்சாவின் குரல் கண்டனமாக ஒலிக்கவும் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டவன், அவனது கை முஷ்டியின் சிராய்ப்பைக் கவனித்தவள் கண்டிக்கும் பார்வை பார்க்கவும் அமைதியானான்.

 

 

“என்னாச்சு டாம்? ஏன் இவ்ளோ கோவம்? ஜெர்ரியும் இப்ப தான் கோவத்தோட போறா”

 

 

“அவளுக்கு ஆஸ்டின் புதுசு எல்சா… யார் கூட எப்பிடி பழகணும்னு அவளுக்குத் தெரியாது… டேபிள்ல இருந்த பையனை நான் அடிக்கடி வேற வேற பொண்ணுங்களோட பாத்திருக்கேன்… அவன் ஜெர்ரி கிட்ட பேசுறதை பாத்ததும் கோவம் வந்துடுச்சு… அவளை எச்சரிக்க தனியா கூப்பிட்டுட்டு வந்தேன்… ஆனா அவ என்னையும் மேகியையும் சேர்த்து வச்சு பேசுறா… மேகி இஸ் ஜஸ்ட் அ பாசிங் க்ளவுட்…. அவ கூட நான் ரொமான்ஸ் பண்ணிட்டிருந்தேனாம்… அதை கூட விடு… நான் என்னோட லிமிட்ல இருக்கணும்னு ஆர்டர் வேற போடுறா”

 

 

“சோ?”

 

 

எல்சா சாதாரணமாகக் கேட்கவும் டாம் இன்னும் கடுப்பானான்.

 

 

“என்ன சோ? என்னை விட அவ பாதுகாப்பு மேல வேற யாருக்கும் அக்கறை இருக்க முடியாது எல்சா… அவ கிட்ட எனக்கு எல்லா ரைட்சும் இருக்கு… எனக்கு லிமிட் ஃபிக்ஸ் பண்ணுறா அவ”

 

 

“சில் சில் டாம்! ஏன் இவ்ளோ கோவம்? வா, நிதானமா பேசலாம்”

 

 

டாமை கையமர்த்தி தன்னோடு அழைத்துச் சென்ற எல்சா ப்ளூபெர்ரி மொஜிட்டோவை நீட்டிவிட்டு ஐஸ் கியூபால் அவனது முஷ்டியில் ஒற்றடம் கொடுக்க, மொஜிட்டோவை வாங்கி அருந்தி கோபத்தைத் தணித்துக்கொண்டான் டாம்.

 

 

அதே நேரம் கண்ணுக்கெட்டும் சில அடிகள் தொலைவில் அலெஸாண்ட்ரோ ஆர்யாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.

 

 

அவளைப் பார்த்தபடியே கடைசி மிடறு மொஜிட்டோவை அருந்தியவனின் புஜத்தில் அடித்தாள் எல்சா.

 

 

“யூ கய்ஸ் ஆர் ஈட்டிங் ஈச் அதர் வித் யுவர் அய்ஸ்… வாட்ஸ் குக்கிங் மேன்? (பார்வைலயே ஒருத்தரை ஒருத்தர் சாப்பிடுறிங்க, என்ன நடக்குது உங்களுக்குள்ள?)”

 

 

“நத்திங் எல்சா” விரக்தியாக மொழிந்தவனை நம்பாத பார்வை பார்த்தாள் எல்சா.

 

 

“டாம்! என் அனுபவத்துல சொல்றேன்… நீ ஜெர்ரிய காதலிக்குற”

 

 

தடாலடியாக எல்சா காதல் என்றதும் டாம் திகைத்துப் போய் அவளைப் பார்த்தான்.

 

 

“தட்ஸ் நாட் பாசிபிள்” உடனடியாக மறுப்புரை வாசித்தான்.

 

 

எல்சா கிண்டலாய் சிரித்தாள்.

 

 

“இன்டீட் இட் இஸ் (உண்மையாவே இது காதல் தான்)” என்றாள் தொடர்ந்து.

 

 

டாமின் விரக்தி அடங்கியது. யோசனையோடு ஆர்யாவைப் பார்த்தான்.

 

 

“மே பி… பட் ஜெர்ரியும் இதே போல ஃபீல் பண்ணணுமே? அவ இந்தியன் கேர்ள்… காதலுக்கு நான் வச்சிருக்குற வரையறை எதுவும் அவ வளர்ந்த கலாச்சாரத்துக்குப் பொருந்தாது எல்சா… திஸ் லவ் ஹேஸ் நோ லைஃப்” என்றான்.

 

 

“அதை நீ மட்டும் சொன்னா போதுமா? ஐ கேன் ரீட் ஹெர் அய்ஸ்… அதுல லவ் இருந்துச்சு… உனக்குச் சந்தேகம் இருந்துச்சுனா நீயே க்ளியர் பண்ணிக்க” என்று அவனை உசுப்பேற்றிவிட்டு எல்சா போய்விட்டாள்.

 

 

டாம் அவளது வார்த்தைகளை அசை போட்டுக்கொண்டிருந்த சமயத்தில், எல்சா சொன்னதை தான் அலெஸாண்ட்ரோவும் ஆர்யாவிடம் விளக்கிக்கொண்டிருந்தான்.

 

 

அவளுக்குக் காதல் என்ற வார்த்தை மிகவும் அதிகமாகத் தோன்றியது. ஆனால் அலெஸாண்ட்ரோவோ அடித்துக் கூறினாள் அவளும் டாமும் காதலிக்கிறார்கள் என்று.

 

 

அவளைக் குழப்பிவிட்டு அவன் போய்விட ஆர்யாவோ நான் டாமை காதலிக்கிறேனா என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிட்டாள்.

 

 

எனவே டாமுடன் சேர்ந்து இரவுணவைச் சாப்பிட்டபோது கூட அவளது கவனம் உணவில் இல்லை.

 

 

இருவரும் கிளம்பியபோது அலெஸாண்ட்ரோவும் எல்சாவும் கண்ஜாடை காட்டி அனுப்பி வைத்தார்கள்.

 

 

ஓல்ட் வெஸ்ட் ஆஸ்டினில் வந்து இறங்கும் வரை இருவரும் சுய அலைசலில் ஈடுபட்டதால் பேசிக்கொள்ளவில்லை.

 

 

வீட்டுக்குள் நுழைந்ததும் “ஜெர்ரி” என்ற டாமின் குரல் ஆர்யாவைத் தடுத்து நிறுத்தியது.

 

 

என்னவென திரும்பிப் பார்த்தவளை நெருங்கினான் அவன்.

 

 

“நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணுறோம்னு எல்சா சொன்னா ஜெர்ரி”

 

 

“அலெஸாண்ட்ரோவும் அதை தான் சொன்னார்”

 

 

“இசிட்? ஓ.கே லீவ் தட்… நம்ம லவ் பண்ணுறோமா இல்லயாங்கிற கொஸ்டீனை அப்புறமா வச்சிக்கலாம்… ரெஸ்ட்ராண்ட் ஸ்டோர் ரூம்ல வச்சு நீ என்னை லிமிட்ல இருனு சொன்னல்ல… வாட்ஸ் மை லிமிட்? சொல்லு கேட்டுக்குறேன்”

 

 

அவனது ஐந்து அடி பதினோரு அங்குல உயரத்துக்கு நிமிர்ந்து மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவனிடம் என்ன பேசவேண்டுமென புரியாமல் திருதிருவென விழித்தாள் ஆர்யா.

 

 

ரெஸ்ட்ராண்டில் அவனிடம் கத்தியதெல்லாம் கண் முன்னே வந்து போனது. ஏன் அப்படி கத்தினோம்? கொஞ்சம் அதிகப்படியாகப் பேசிவிட்டோமோ?  

 

 

தனக்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தவள் டாம் தொண்டையைச் செருமவும் கவனம் கலைந்தாள்.

 

 

“நம்ம லவ் பண்ணுறோமானு எனக்குத் தெரியல ஜெர்ரி… பட் எப்பவாச்சும் நம்ம லவ் பண்ணுறோம்னு ரியலைஸ் ஆச்சுனா ஒரே ஒரு விசயத்தை மட்டும் மனசுக்குள்ள வச்சுக்கணும்… எப்பவுமே நம்ம காதல் கல்யாணத்துல முடியாது… நீயும் நானும் பார்ட்னர்ஸா வாழலாமே தவிர ஒரு குடும்பமா என்னைக்குமே வாழ முடியாது… எனக்கு ஃபேமிலி கான்செப்ட்ல நம்பிக்கை இல்லனு நல்லா தெரியும் தானே?”

 

 

ஆம் என்பது போல தலையாட்டினாள் ஆர்யா.

 

 

“குட் கேர்ள்” அவளது கன்னத்தில் தட்டியவன் அனுமதி கேட்காமல் குட்டி மச்சத்தில் முத்தமிட்டான்.

 

 

ஆர்யா திடுக்கிட்டுப் பின்னடைய, அவளைத் தன்னோடு அணைத்தவன் “ஐ வான்ன கிஸ் யூ” என்று ஹஸ்கியாக உரைத்தவன் அவள் எதிர்வினையாற்றும் முன்னர் இதழ்களை முற்றுகையிட்டான்.

 

 

எங்கே அவள் தன்னை மறுத்துவிடுவாளோ என்ற பயம் அவனை அதிவேகமாக முத்தமிடத் தூண்டியது. அவளைத் தனது முத்தத்தில் ஆழ்த்தி மூழ்கடிக்க ஊக்கியது.

 

 

எல்லையில் இரு என எச்சரித்தவளிடம் உன் மீது எனக்குள்ள உரிமைக்கு எல்லையே இல்லையடி என பறைசாற்ற வைத்தது அந்த இதழணைப்பு.

 

 

ரெஸ்ட்ராண்டில் இருவரிடையே தோன்றிய முன்கோபத்திற்கு முத்தத்தால் முடிவுரை எழுத ஆரம்பித்தார்கள் டாமும் ஆர்யாவும். அங்கே வார்த்தைகளால் சண்டையிட்டவர்களின் உதடுகள் இங்கே வேறொரு சண்டையில் மும்முரமாகிப் போயின

 

 

டாமை விலக்கித் தள்ள வேண்டிய ஆர்யாவின் கரங்கள் அவனது கழுத்தை வளைத்துக்கொண்டன. மறுக்க வேண்டியவள் அவனது முத்தத்தில் மாயா

ஜாலத்தில் மயங்கி கரைந்து கொண்டிருந்தாள்.

 

 

அவளது உடலின் நரம்புகளில் ஆக்சிஜனுக்குப் பதிலாக டாமின் முத்தம் உண்டாக்கிய அதிர்வலைகள் பயணிக்க ஆரம்பித்தன. இதயம் வரை சென்று இனித்த இதழணைப்பின் ஆதிக்கத்தில் மூழ்கிப்போனவர்கள் அந்த இதயத்தில் புதிதாய் நுழைந்த காதலைக் கண்டுகொள்ளாதது வேடிக்கையே!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
49
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்