அத்தியாயம் 9
அவனது வார்த்தைகளும் அருகாமையும் தந்த மயக்கத்தில் பேச்சற்று உறைந்து போயிருந்தாள் நிறைமதி.
அவனும் எதுவும் சொல்லாமல் அவள் அருகாமைதந்த சுக மயக்கத்தில் மூழ்கியிருந்தான். மங்கையவளின் தேகத்திலிருந்து வீசிய நறுமணமும் அதனால் உண்டான கிளர்ச்சியுமாய் அசைவற்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கோயிலுக்கு எதிரே சிறு குன்று ஒன்று உள்ளது அக்குன்றைச் சுற்றியும் மலையின் முடிவிடத்திலும் சிறிய வழியொன்று இருக்கவும் படிக்கட்டுகள் அமைத்திருந்தார்கள். குன்றினைச் சிறிது சிறிதாகக் குடைந்து சிவபெருமானின் சிற்பங்களை வடித்திருந்தார்கள். அப்பாதையின் ஒருபக்கம் குன்றும் மறுபக்கம் கம்பிவேலியும் அரண்களாக இருந்தன. கம்பிவேலியூடாக எட்டிப் பார்த்தால் சமுத்திரா தேவி இரைச்சலோடு மலையை முட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பாள். அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தது அப்படிக்கட்டிலேயே.
எவ்வளவு நேரம் இருவரும் அப்படியே மோனநிலையில் இருந்தார்களோ தெரியவில்லை. அதைக் கலைக்கவும் ஒரு சந்தர்ப்பம் வருமே.. பின்னால் சில வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் மொழியில் பேசியபடி மலையின் படியில் இறங்கவும் அவர்கள் குரல் கேட்டு முதலில் சுதாரித்துக் கொண்டவள் நிறைமதியே. தான் அவன் அருகில் பொது இடத்தில் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமே என்ற உணர்வு கூச்சத்தை உண்டாக்க சட்டென்று எழுந்தவள், என்ன செய்வது, சொல்வது எனப் புரியாமல்
“நான் போறேன்” என்றுவிட்டு படியில் ஏறவென அடியெடுத்து வைத்தாள். அவனுக்கோ அவள் திடீரென எழுந்து செல்லவும் பதட்டமாகிவிட்டது. தன்னைவிட்டே அவள் போகின்றாள் என்று அவன் மனது புலம்பவும் எட்டி அவளின் கையைப் பற்றினான். அவனின் இந்தச் செய்கை அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவன் என்ன கோயிலிலே வச்சு ஆட்களுக்கு முன்னால் எந்தத் தயக்கமும் இல்லாமக் கையைப் பிடிக்கிறான். பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். இவன் கோயிலுக்கு வா என்று சொன்னதும் ஏதோ ஒரு உத்வேகத்தில் வந்துவிட்டேன். எந்தவித முடிவும் எடுக்கக்கூட நேரம் தராமல் இப்படிச் செய்கிறானே என்று தவித்துப் போனாள். அவர்களைக் கடந்த வெளிநாட்டுக்காரர்கள் இதனைப் பெரிதாக எடுக்காமல் சிறு சிரிப்புடன் சென்றனர்.
“என்ன செய்யுறிங்க.. கையை விடுங்க” என்று தன் கையை உருவ முயன்றாள். ஆனால் அவன் கையை இறுகப்பற்றி “என்ன மதி திடீரென எழும்பிப் போறாய்? நான் ஒருத்தன் உனக்காக இங்க இருக்கன். எதுவும் கதைக்காம உன்ர பாட்டுக்கு எழும்பிப் போறாய்” என்று சற்றே கோபமும் ஏமாற்றமும் நிறைந்த குரலில் கேட்டான்.
அவனது கோபமான அக்குரல் அவளுக்குத் தாக்கத்தை உண்டாக்கிய போதும் அதனை வெளிக்காட்டாமல் “ம்ம்.. அதுக்கு நான் என்ன செய்ய? இப்படியே இருந்தால் போறவாற ஆக்கள் எல்லாம் பார்த்து என்ன நினைப்பாங்கள்”
“ஆர் என்ன நினைச்சாலும் நமக்கென்ன. கோயிலைச் சுத்தி எவ்வளவு பேர் கதைச்சுக் கொண்டு இருப்பாங்கள். நாமளும் கொஞ்ச நேரம் இருந்து கதைப்பமே”
“கதைக்கிறதுக்கு என்ன இருக்கு?”
“என்னம்மா இப்படிக் கேக்கிறாய்? இந்த அத்தானிடம் ஆசையா ஒரு வார்த்தை பேச ஏலாதா?”
“அத்தானா.. ?”
“ஆமா அத்தான்தான். ஏன் பிடிக்கலையா?”
“அது…”
என்ன பதிலைச் சொல்வது எனத் தெரியாமல் தவித்துப் போனாள் பெண்ணவள்.
தன் எதிரே ஆளுமையான ஒரு அழகன், தன் உள்ளம் கொள்ளை கொண்டவன் அமர்ந்திருந்து பிடிக்கலையா என்று கேட்டால் எப்படித்தான் மறுக்க மனம் வரும்.
ஆனால் அவளது சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்க மறுத்தது.
அவள் எந்த பதிலும் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருப்பதைப் பார்த்து,
“ஏன்மா என்னை ஏற்றுக் கொள்வது அவ்வளவு கஷ்டமான விஷயமா?” என்று தவிப்புடன் கேட்டான்.
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஆண்மைக்குரிய கம்பீரமும் கூடவே கனிவுடனும் காணப்படும் அவ் வதனத்திலிருந்து தன் பார்வையை அகற்றமுடியாமல் தடுமாறினாள். தொடர்ந்து அவன் புருவங்களை உயர்த்தி கேள்வியாய் நோக்கவும் வெட்கத்தில் அவளது கன்னங்கள் சிவந்தன.
அவளது பார்வையின் அர்த்தத்தையும் குண்டுக் கன்னங்களின் சிவப்பையும் கண்டுகொண்டவன் அவளைப் பிடித்திழுத்து தன்னருகே அமர்த்தினான்.
“நிறை உண்மையைச் சொல்லு உனக்கு என்னைப் பிடிச்சிருக்குதானே?”
அவள் வதனம் வெட்கத்தில் மேலும் சிவந்தது. அதுவே அவனுக்குப் பதிலான போதும் அது மட்டும் அவனுக்குப் போதுமானதாய் இல்லை. அவள் வார்த்தைகளின் சம்மதத்தை அவன் உள்ளம் எதிர்பார்த்தது.
“மதி என்னைப் பார்த்துச் சொல்லு. என்னைப் பிடிச்சிருக்கா?”
அவள் மெதுவாகத் தன் தலையை அசைத்தாள்.
“ம்கூம்… இங்க பார் மதி.. எனக்கு நீ வாயால சொல்லணும்.” என்று அவன் பிடிவாதத்துடன் கேட்கவும், எட்டிப்பார்த்த சிறு கோபத்தை குரலில் காட்டி, அவனை முறைத்தபடி
“இதைக்கூட புரிஞ்சுகொள்ள முடியாம என்னதான் லவ் பண்ணுறிங்களோ” என்று கேட்டாள்.
அவளது அந்தக் கேள்வியே அவனுக்கு ஓராயிரம் பதில்களைத் தந்துவிட சந்தோசத்தின் உச்சத்துக்கே சென்று விட்டான் செந்தூரன். சந்தோசத்தில் தன்னை மறந்து சூழ்நிலையை மறந்து அவள் கைகளைப் பற்றி அருகில் இழுத்தவன் கன்னத்தில் முத்தமொன்றைப் பதித்துவிட்டான்.
நிறைமதி அதிர்ச்சியில் அவனை சட்டென்று தள்ளிவிட்டு
“என்ன பண்ணுறிங்க? கோயில்ல இருந்துகொண்டு” என்று கோபத்தில் முறைத்தாள்.
ஆனால் அவளது கோபமோ வார்த்தைகளோ அவனை துளிகூடப் பாதிக்கவில்லை. சொல்லப் போனால் அவள் கோபமும் அவனுக்குக் காதல் மொழிகளாகவே தோன்றியது.
சந்தோசத்தில் எழுந்து மலையில் தடுப்பாகப் போடப்பட்டிருந்த கம்பிவேலியில் தொங்கியபடி கடலைப் பார்த்து பெரிதாகச் சிரித்தான். அவ்வழியாகச் சென்ற சிலர் அதனைப் பார்த்து புன்னகைத்து விட்டுக் கடந்தனர். நிறைமதிக்கோ வெட்கத்தைவிடப் பயமே அதிகமானது. கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கிறானே. விழுந்து விட்டாலும் என்று பயந்தவள் எழுந்து அவனது கைகளைப் பற்றி
“ஐயோ இறங்குங்க” என்று கெஞ்சினாள்.
இறங்கி மீண்டும் தானிருந்த இடத்தில் அமர்ந்து அவளையும் அமர்த்தியவன் நிறைந்த காதலோடு தன்னவளின் வதனத்தை பார்த்தான்.
“என்ன இப்படிப் பார்க்குறிங்க?” என்று வெட்கத்துடன் கேட்டாள்.
“ம்ம்.. என் மதியை நான் பார்க்கிறேன். அதில உனக்கென்ன குறையுது?” என்று விளையாட்டுக் குரலில் வினவினான்.
“ஒரு குறையும் வரல. நான் கடை திறக்கப் போகணும். எழும்புங்கோ” என்று உரிமையோடு அதட்டினாள். அவளுக்கே தன்னை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. தானா அவனிடம் இவ்வளவு உரிமையோடு பேசுவதென்று ஆச்சரியப்பட்டாள்.
“போகலாம் கொஞ்சம் இரு.. முக்கியமான விசயம் பேசணும். என் வீடு, தொழில் இதப்பற்றியெல்லாம் உன்கிட்ட சொல்லணும்” என்று கூறியவன் சுருக்கமாக எல்லாவற்றையும் கூறினான். அவளுக்கோ அவனின் அந்த அன்பான குடும்பத்தில் தானும் ஒருத்தியாகப் போவதை நினைத்து சந்தோசத்தில் மனம் பூரித்தது.
ஆனால், தன் வீட்டையும் சூழ்நிலையையும் எண்ணும்போது அவனுடனான தன் வாழ்வின் பயணம் என்பது கானல் நீராகிப் போய்விடுமோ என்று பயமும் ஒரு ஓரத்தில் தோன்றியது.
அவன் எல்லாவற்றையும் கூறிவிட்டு
“மதிம்மா, எனக்கு என் குடும்பம்தான் ஆதாரம். என் அப்பாவும் அத்தையும் என் வாழ்வோடு கலந்தவர்கள். நீ என்கூட வந்திட்டால் இவங்க இரண்டு பேரையும் நீ சந்தோசமாய் பார்த்துப்பியா?” என்று தயக்கத்துடன் கேள்வி தொக்க நின்றான்.
“என்ன கேள்வி இது.. உங்க குடும்பத்திலிருக்கிறவங்க எனக்கும் வேண்டியவங்கதானே.. அவங்க எப்பவும் சந்தோசமாய் இருக்கிறமாதிரி நான் பார்த்துக்குவேன். ஆனால்…” என்று அவள் இழுக்கவும் இவன் தடுமாறிப் போனான்.
“என்னம்மா?” என்று தவிப்புடன் கேட்டான்.
அவன் தவிப்பை உணர்ந்தவள்
“ச்சாச்சா.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நான் சொல்ல வரல்லை. என் குடும்பம்.. அம்மா…” மேலே சொல்லமுடியாது தடுமாறினாள்.
தற்போது அவளது வருமானத்தை நம்பியே அவளது குடும்பம் இருக்கு. இவனுடன் கல்யாணம் செய்ய நிச்சயம் அம்மா சம்மதிக்க மாட்டாங்க. தான் கல்யாணம் கட்டிப் போய் விட்டால் வருமானத்துக்கு என்ன செய்வது என்று பயந்து போய்விடுவார்கள். தம்பி, தங்கைகளின் படிப்பு என்று பற்பல சிந்தனைகள் சொற்ப நொடிகளிலேயே அவள் மூளைக்குள் வலம் வந்தன.
“ஏன் மதி, என்னைக் கல்யாணம் கட்டியதும் என் அப்பா, அத்தை, அவர் குடும்பம் எல்லாத்தையும் அனுசரிக்கச் சொல்லி கேட்கிற நான் உன் குடும்பத்தை அம்போ என்று விட்டிட்டு என்னோட வா என்றா கூப்பிடுவன். இப்போ நீ எனக்கு சொந்தமானவள். அப்ப உன் குடும்பத்தை பார்க்க வேண்டிய கடமையும் எனக்குத் தானே. இதில உனக்கென்ன அவ்வளவு குழப்பம்”
“அது..அது..”
“மதிம்மா உன் புருஷன் நம்ம குடும்பம் எல்லாத்தையும் சேர்த்து காப்பாத்துற அளவுக்கு சம்பாதிக்கிறதாத் தான் நினைக்கிறன். போதாட்டிச் சொல்லு இன்னும் இரண்டு வேலை கூடப் பார்த்து உழைக்கிறன்” என்று அவன் கூறவும் அவளுக்கு சந்தோசத்தில் ஆனந்தக்கண்ணீரே வந்தது. தன் மனதில் உள்ளதை அவன் அப்படியே அறிந்து கொண்டது மட்டுமில்லாமல் அதற்கான தீர்வையும் தானே செய்வதாக உரிமையோடு கூறவும் நெகிழ்ந்து போனாள். பேச்சுவாக்கில் உன் புருஷன் என்று அவன் சொன்னதும் அவளை சிறகே இல்லாமல் வானத்தில் பறந்து உல்லாசக் கூத்தாட வைத்தது.
அவளது கண்களில் கண்களில் கண்ணீரைக் கண்டதும் “ஏய் மதிம்மா… எதுக்கு இப்போ அழுறாய்?” என்று அவள் கண்ணீரைத் துடைத்தபடி கேட்டான். மனமும் முகமும் மலர சிரிப்பை உதிர்த்தவள் “சந்தோசத்தில் அழுதேன்” என்றாள்.
“ஓகே.. வாம்மா போவோம். நானும் கடைக்குப் போகணும். உனக்கு ஃபிரீ ரைம் கிடைச்சா எனக்கு ஹோல் பண்ணு. எதையும் யோசிக்காத. இன்டைக்கே நான் அத்தைகிட்டயும் அப்பாகிட்டையும் உன்னைப் பற்றி சொல்லிடுவேன்” என்று சொன்னவன், அவளிடம் மறக்காமல் நேரம் கிடைக்கும் போது அழைப்பு எடுக்குமாறு சொன்னான். கதைத்தபடி இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிள் வைத்திருந்த இடத்தை வந்து சேர்ந்தனர்.
பிரிந்து செல்ல மனமில்லாமல் இருவரும் நின்றனர்.
அவள்தான் தன்னை சமாளித்தபடி “நான் போயிட்டு வாறன்” என்றுவிட்டுத் தன் ஸ்கூட்டியை எடுத்தாள். அவனும் சிறு தலையசைப்புடன் புறப்பட்டான்.
பிரதான வீதியை அடையும்வரை அவள் பின்னாலேயே வந்தவன், வாகனங்களுக்கிடையில் அவள் முன்னேறி சென்றுவிட வீட்டிற்குத் தனது வாகனத்தை விட்டான்.
நிறைமதி தனது வீட்டிற்குப் போகாமல் நேரே கடைக்கே வந்துவிட்டாள். அவள் சாப்பிட்டாளா இல்லையா என்றுகூடக் கவலைப்பட அவள் வீட்டில் யாருமில்லை.
கடையைத் திறந்து சுத்தமாக்கிவிட்டு சாமி மாடத்தில் விளக்கேற்றி வைத்தாள். சிறிது நேரம் அவன் நினைவாக இருந்தவள் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுடன் தன் பணியைத் தொடங்கி விட்டாள்.
* * *
தன் எதிரே ஐசிங் ரோஜாப்பூ ஒன்றை செய்து கொண்டிருந்தவளை அதிர்ச்சியாக விழி அகல பார்த்தாள் பிரணிதா.
“நிறை, நீ உண்மையைத் தான் சொல்லுறியா?” என்று வாய் பிளந்து கேட்டாள்.
நிறைமதி மேலும் கீழுமாக சிறிது தலையை அசைக்கவும் நம்பமுடியாத பாவனையில் தன் கையில் ஒருமுறை கிள்ளிப் பார்த்தாள் பிரணிதா. அவளால் நிறைமதி சொன்ன செய்தியை நம்பவே முடியவில்லை.
“நான் கனவு காணலதானே. ஏய் நிறை.. நீ என்னைப் பிறாங் ஏதும் பண்ணலையே?” என்று மீண்டும் தன் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தக் கேட்டாள்.
“ஏன்டி, இந்த விசயத்தில நான் விளையாடுவனா? உண்மையத் தான்டி சொல்லுறன்” என நிறைமதி சொல்லி முடிப்பதற்குள் அவளை நெருங்கி அவள் இரு கைகளையும் பற்றியவள் தட்டாமாலை சுற்றினாள். இவளின் கைகளில் இருந்த ஐசிங் அங்காங்கே சிதறி விழுந்தது.
“எனக்கு எவ்வளவு சந்தோசமாய் இருக்கு தெரியுமா? என் நிறைக்கும் லவ் வந்திடுச்சு” என்று சொல்லியபடி சுற்றினாள் பிரணிதா. இவளுக்கோ தலைசுற்றியது.
“போதும் நிப்பாட்டு பிரணி. என்னால் முடியல.” என்று நிறைமதி கத்தவும் சுற்றுவதை நிறுத்தியவள், அவளின் கன்னத்தில் முத்தமொன்றைப் பதித்தாள்.
அன்று மாலை தன் நண்பியை சந்திக்கவென கடைக்கு வந்திருந்தாள் பிரணிதா. தனக்குத் தெரிந்த ஒருவரின் திருமணநாளிற்கு கேக் ஒன்றை செய்து தருமாறு கேட்கவே வந்திருந்தாள்.
வழமைக்கு மாறாகத் தன் தோழியின் முகம் பிரகாசிக்கவும்
“நிறை என்ன உன் முகம் இன்டைக்கு சந்தோசத்தில ஜொலிக்குது. என்னாச்சு..?” என்றுகேட்டாள்.
“ஒன்றுமில்லை” என்று சொன்னவள் நினைவில் செந்தூரன் வரவும் வெட்கத்தில் தன்னையறியாமல் புன்னகைத்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரணிதாவிற்கு ஏதோ பொறி தட்டவும்
“அடியே கள்ளி… ஏதோ இருக்கு. நீ என்னட்ட மறைக்கிறாய். சரி விடு… நான் உனக்கு வேண்டாதவள்தானோ” என்று முகத்தை சிணுங்கலாக வைக்கவும் நிறைமதி தடுமாறிப் போனாள்.
“இல்லடி.. அது.. அவர்..” என்று சொல்லவந்ததைத் தொண்டைக்குள்ளேயே முழுங்கினாள்.
“உனக்கு சொல்ல விருப்பமில்லாட்டி விடடி. நீ கஸ்ரப்பட்டு எதையும் சொல்ல வேண்டாம். நான் வாறன்” என்று சொல்லிவிட்டு தனது கைப்பையை எடுத்துக் கோண்டு புறப்படத் தொடங்கினாள்.
“இரு பிரணி நான் சொல்லுறன்” என்றுவிட்டு நேற்று கடைக்கு அவன் வந்ததையும் இன்று காலை கோயிலுக்கு சென்று அவனைச் சந்தித்ததையும் தன் தோழியிடம் பகிர்ந்தாள். அதைக் கேட்டுவிட்டே ஆச்சரியத்திலும் சந்தோசத்திலும் அவளை இழுத்து சுற்றியிருந்தாள் பிரணிதா.
“நிறை… உண்மையிலேயே எனக்குச் சந்தோசமாயிருக்கடி. நீ இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு ஒரு விடிவு கிடைச்சிற்றுது. எதைப் பற்றியும் யோசிக்காதே. அவர் சொல்லுறதையே கேளு” என்று தன் நண்பிக்கு நம்பிக்கை வார்த்தை பேசினாள் பிரணிதா. பாவம் அவளுக்கு தெரியவில்லை. தன் தோழிக்கு அவ்வளவு இலகுவாக அந்த சந்தோசத்தைக் கொடுக்க விதி வரைந்த சூழ்நிலை இடங்கொடுக்காதென்று.