Loading

அத்தியாயம் 8

அன்று இரண்டு கேக் கொடுக்க வேண்டியிருந்ததால் அவன் வந்ததையும் கதைத்ததையும் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு வேலைகளில் தன் கவனத்தைத் திசை திருப்பினாள். மாலையில் சிந்து சென்றதும் நிறைமதிக்கு வீட்டிற்குச் செல்லும் எண்ணம் வரவில்லை. மனம் முழுவதும் பெரும் தவிப்பை உணர்ந்தாள். அவ்வளவு நேரம் மறக்காவிட்டாலும் மனதின் ஓரத்தில் ஒதுக்கி வைத்திருந்த நினைவுகள் எட்டிப் பார்த்தன.

 

வீட்டில் தாயின் நிலைப்பாடு பெரும் வேதனையைத் தந்தது என்றால், காலையில் வந்தவன் நடந்துகொண்ட விதமும் பேசிய பேச்சும் குழப்பத்தை உண்டாக்கியது.

 

‘கடவுளே! நான் என்ன பெரிதாக ஆசைப்பட்டுட்டன். நிம்மதியான வாழ்க்கையைத் தானே கேட்கிறன் ஏன் எனக்கு மட்டும் எதுவுமே கிடைத்ததில்லை? வீட்டில் அம்மா ஒரு பக்கம் எப்படியாவது என்னைக் குகனுக்குக் கல்யாணம் செய்து விட வேண்டும் என்று கரைச்சல் தாறார். இன்னொரு பக்கம் என் மனசுக்குப் பிடிச்சவர். இவ்வளவு நாளும் கண்ணால அவரைக் காணாட்டியும் அவரின்ர நினைவோடையே வாழ்ந்து சந்தோஷத்த அனுபவிச்சன். ஆனா, இப்போ அவர் என் முன்னால வந்தும் அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியல்லையே. ஏன், அவர் இன்னொருத்திக்குச் சொந்தமானவர். அதை என் கண்ணாலேயே பார்த்தன். ஆனாலும் அவர் ஏன் அப்படிப் பேசினார். நான் என்னதான் செய்வது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது?’ என்று வேதனையுடன் புலம்பி கொண்டிருந்தாள்.

 

இனி எப்போதுமே அவனைக் காணக்கூடாது என்று எண்ணமிட்டபடி இருந்தவளை அவளது அலைபேசி க்கு வந்த அழைப்பு கலைத்தது. புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. யார் இது என்ற யோசனையுடன் அலைபேசியை எடுத்தாள். சிலவேளை கடைக்கு கேக் ஓர்டர் பண்ண யாராவது எடுக்கலாம் என்று நினைத்தபடி “ஹலோ” என்றாள். மறுமுனையில் எந்த சத்தமும் கேட்கவில்லை. இங்கே செந்தூரனோ அவளது ஹலோ என்ற அழைப்பிலேயே மெய் மறந்து நின்றான். அவள் குரல் காதில் கேட்டதும் உறுதியான தன் மனமும் தடுமாறுகிறதே. என்ன மாயம் செய்தாயடி என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான். ஆம், அவளுக்கு அழைத்தது செந்தூரனே. அவன் ஒரு முடிவெடுத்தால் அதை செயற்படுத்த சகல முயற்சிகளையும் மேற்கொள்வான். வேலை விஷயத்திலேயே அப்படி என்றால் அவனது வாழ்க்கை விஷயத்தை சாதாரணமாக எடுத்துவிடுவானா? ஹரிஸின் உதவியுடன் அவளைப் பற்றிய மேலதிக விடயங்களையெல்லாம் சேகரித்து விட்டான். எப்படியாவது அவளைத் தன்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டான். கடையிலிருந்து வரும்போதே விளம்பரப் பலகையில் இருந்த அவளது அலைபேசி இலக்கத்தைத் தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டு வந்திருந்தான். கடையில் வேலை செய்யும் போது அவளைத் தொந்தரவு செய்யக்கூடாது என எண்ணியவன் மாலைவரை பொறுத்துவிட்டு இப்போதுதான் அழைப்பெடுத்தான்.

 

மறுமுனையில் அழைப்பெடுத்தவர் எதுவும் பேசாது இருக்கவும்,

“ஹலோ யார் பேசுறது?” என்று மீண்டும் கேட்டாள். தன்னை மறந்து நின்றவன் அவள் யார் எனக் கேட்டவுடன் தான் சுயநினைவுக்கு வந்தான்.

 

“மதி.. நான்தான்” என்றான். ஏதோ நீண்டகாலம் பேசிப் பழகியவன் போல் நான்தான் என்பதோடு மதி என அழைக்கவும் குழம்பிப் போனாள். அவளை இதுவரை யாரும் மதி என அழைத்ததில்லை. உறவுகளும் நண்பர்களும் நிறை என்றே அழைத்துப் பழக்கம். அறிந்தவர்கள்கூட நிறைமதி என்று முழுப்பெயர் சொல்லியே அழைப்பர். எனவே புதிதாக மதி என்று ஒருவன் அழைக்கவும் அதுவும் அந்தக் குரல் அவளைக் கட்டிப்போடுவதாய்  கம்பீரத்துடன் மென்மையும் கலந்து ஒலிக்கவும் யாராய் இருக்கும் என்று சிந்தித்தபடி “ஹலோ நீங்க யாரு கதைக்கிறது? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவள் கேட்கவும், “மதி… எனக்கு என் தேவதை வேண்டும். கிடைக்குமா?” என்று அசால்டாக கேட்டான்.

 

அந்த ஒரு வார்த்தையிலேயேஅவன் யார் என்பதை புரிந்து கொண்டாள். காலையில் வந்தவன் தான் இப்பொழுதும் தனக்கு அழைப்பு விடுக்கின்றான் என்பதைப் புரிந்து கொண்டவள், அவன் என்ன இப்படிப் பேசுகிறான் என்ற எரிச்சலுடன் 

“நீங்கள் யார்? என்று சொல்லுங்கள் எனக்கு வேலையிருக்கு” என்று குரலில் எரிச்சல் வெளிப்படக் கேட்டாள்.

 

அவளின் குரலில் இருந்த எரிச்சல் புரிந்த போதும் தன் குரலில் உள்ள துள்ளல் குறையாமலே,

“என் குரல் உனக்கு தெரியலையா மதிம்மா?” என்று கேட்டான்.

இவளுக்கு இங்கு கோபத்தில் முகம் சிவந்தது.

 

‘இவன் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான். இவன் கதைத்ததும் இழித்துக்கொண்டு கதைப்பன் எண்டு நினைச்சிட்டானோ? ஏற்கனவே ஒருத்திய லவ் பண்ணிட்டு என் கூட இப்படிப் பேச எப்படி மனம் வருதோ?’ என்று சினத்துடன் எண்ணியவள்

 

“என்ன கதைக்கிறிங்க? முன்னப்பின்ன தெரியாத பொம்பிளைகளிட்ட இப்படித்தான் கதைப்பிங்களா? அறிவில்லையா?” என்று தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு இறுகிய குரலில் கேட்டாள்.

 

“உண்மையாவே என்னை உனக்குத் தெரியாதா மதி? நம்பிட்டன்”

 

“பிளீஸ் போனை வைக்கிறிங்களா?”

 

“ஏன் மதிம்மா? என்னோட கதைக்கப் பிடிக்கலையா?”

 

“உங்களோட எனக்கென்ன கதை?”

 

“நிறைய இருக்கே.. நம்மளைப் பற்றி பேச எவ்வளவு விசயம் இருக்கு. ஓகே போனில கதைக்கக் கஸ்ரம் என்டா நாளைக்கு காலம உனக்காகக் கோணேஸ்வரம் கோயிலுக்கு வருவேன். நீயும் கட்டாயம் வரணும் சரியா? அங்க வச்சுப் கதைப்பம். ஓகேடா நாளைக்குச் சந்திப்பம்” என்றுவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் அலைபேசியை நிறுத்திவிட்டான்.

 

‘இவனுக்கு என்ன ஒரு துணிவு. தேவையில்லாத விசயம் கதைக்கிறது மட்டுமில்லாம நாளைக்கு நேரில சந்திப்பம் என்கிறான். கட்டாயம் வரணும் என்று ஓர்டர் வேற போடுறான். இவன் என்ன பைத்தியமா? அல்லது என்னை பைத்தியமாக்குறானா? நான் போகமாட்டேன். இவன் கூப்பிட்டதும் போறதுக்கு நான் இவனுக்கு அடிமையில்ல. ம்ம்.. நடப்பது நடக்கட்டும். நானாக அவனைத் தேடிப் போகவே மாட்டேன். அவன் கண்ணில் படாமல் காப்பாத்து முருகா’ இப்படி ஏதேதோ புலம்பியபடி இருந்தாள்.

 

அன்று இரவு படுக்கும் போதும் அவன் கதைத்தவை அவள் எண்ணம் முழுவதும் பற்றிப் பிடித்துச் சுழன்று திரிந்தது. கட்டாயம் நான் கோயிலுக்கு போகமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டே தூங்கினாள். ஆனால் அலாரம் வைத்தது போல் நான்கு மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. அவனுக்காக வேண்டாம் தன் மனநிம்மதிக்காகக் கோயில் போகவேண்டும் என்று ஏதேதோ சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு தயாராகிக் கிளம்பினாள்.

 

ஊரில் எத்தனையோ கோயில்கள் இருந்தும் அவள் சென்றது திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கே. அவள் அறிவு அங்கே போகாதே. அவன் உன்னை வைத்து விளையாடுகிறான் என்று கத்தியது. ஆனால், அவன் மீது காதல் கொண்ட மனமோ அவளை அங்கேயே கொண்டு சேர்த்தது.

 

கோயிலுக்குச் சென்றவளுக்கு அங்கே நடந்த பூசையை மனமார பார்க்க முடியவில்லை. பழக்க தோசத்தில் கைகள் இறைவனைக் கும்பிட்டது. பூசை இடையில் வந்த அவனை அவள் கவனிக்கவில்லை.

 

அவளுக்குப் பின் வந்து நின்ற அவனுக்கோ சந்தோசத்தில் உள்ளம் கூத்தாடியது. தான் கூப்பிட்டதும் கோயிலுக்கு வந்திருக்கிறாள் என்றால் அவள் மனதில் நிச்சயம் தான் இருக்கிறேன் என்று உறுதிப்படுத்திக் கொண்டான்.

 

பூசை முடிந்ததும் பிரசாதத்தை வாங்கியவள் வெளியில் வந்தாள். அவள் பின்னாலேயே வந்தவன் கடலைப் பார்க்க அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டு அருகில் வந்ததும் இங்கே இருப்போமா என்று கேட்டான்.  தன் பின்னால் கேட்ட குரலால் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவனைக் கண்டதும் அவமானத்தில் முகம் சிவந்தது. அவன் கூப்பிட்டதும் வெட்கமில்லாமல் வந்து நிற்கிறாளே என்று எண்ணியிருப்பானோ என நினைக்கும் போது சங்கடமாக உணர்ந்தாள்.

 

ஆனாலும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அங்கே இருந்த படிக்கட்டில் அமர்ந்தாள். அவளின் அருகே அவன் அமரவும் அவள் இதயம் மிக வேகமாகத் துடிப்பதை உணர்ந்தாள்.

 

திருக்கோணேஸ்வரம் ஆலயம் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட சிறிய மலை உச்சியில் அமைந்திருந்ததால் விஷேச நாள்களிலேயே ஊர் மக்கள் அதிகம் வருவர். அன்று விசேஷ நாள் இல்லாததால் ஊரிலிருந்து கோயிலுக்கு வந்திருந்தவர்கள் மிகச் சொற்பமானவர்களளே. அவர்களும் பூசை முடிந்ததும் சென்று விட்டனர். ஆனாலும் அது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் என்பதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வழமை போல் அதிகளவில் வந்திருந்தனர். தன்னை அறிந்தவர்கள் யாரேனும் கண்டு தாயிடம் கூறிவிடுவரோ என்ற பயம் அவளை ஒரு பக்கம் பீடித்திருந்தது. எனவே சுற்றும்முற்றும் யாராவது தெரிந்தவர்கள் நிற்கிறார்களா என்று நோட்டமிட்டாள்.

 

“ஏன்மா, ரென்சனா இருக்கிறாய்? ரிலாக்ஸா இரு. எவ்வளவோ பேர் கோயிலைச் சுத்தி உட்கார்ந்து கதைச்சிட்டு இருக்கினம். உனக்கேன் பயம்” 

 

“எதுக்கு இங்க வரச்சொன்னிங்க?”

 

“இதைக்கூட புரிஞ்சுகொள்ளமுடியாத சின்னப் பிள்ளை இல்லையே நீ.. தெரிஞ்சு கொண்டும் என் வாயால் கேட்க ஆசையா..? உன் மனசு சொல்லுறதைக் கேளுடா” காதுகளில் அணிந்திருந்த சிறிய ஜிமிக்கி காற்றிலாட அவளது நெற்றியில் கிடந்த சுருள் முடியை விரல்களால் அவள் ஒதுக்குவதை ரசனையுடன் பார்த்தபடி இருந்தான். அவன் பார்வை அவளை சங்கடப்படுத்த மறுபுறம் திரும்பிக் கடலைப் பார்த்தபடி 

தன் கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள். 

 

“உங்களை நான் பார்க்க வரல. என் மனசு என்ன சொல்லுது, சொல்லலை என்று ஆராய்ச்சி பண்ணவும் வேணாம். நான் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தேன். கும்பிட்டாச்சு. நீங்களும் வந்த வேலையைப் பாருங்க”

 

“நான் வந்த வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கன். நான் வந்ததே என் மதியைப் பார்த்து சைட் அடிக்கத்தான். அந்த வேலையை நான் சரியாத்தானே செய்யுறன்.”

 

அவன் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தாலும் அவன் இன்னுமொருத்திக்கு முத்தம் கொடுத்தவன்தானே என்ற எண்ணம் தோன்றவும்

“சும்மா தேவையில்லாத கதையெல்லாம் கதைக்காதிங்க.. உங்கள மாதிரி ஆம்பிளைக்கு நாங்க ஒரு விளையாட்டுப் பொம்மையா? நினைச்சு நினைச்சு ஒவ்வொருத்தியா மாத்துவிங்க. நாங்களும் உங்க பின்னாடி வரணுமா?” என்று சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசினாள்.

 

அவள் கைகளைப் பிடித்து தன் அருகில் இழுத்தான். அவள் விலக முயலவும் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு 

 

“ஏன் மதி இப்படிப் பேசுறாய்? என்னாச்சு என்னைப் பிடிக்கலையா? ஆனா, அப்படி நீ சொன்னாலே அது பொய் என்று எனக்குத் தெரியும். நீ எவ்வளவு கோபமாய் பேசினாலும் உன் கண் உன் காதலை எனக்குச் சொல்லுது”

 

“மதி.., முதல்முதலாக நீ என் மேல் வந்து விழுந்தபோதே என் மனசிலும் வந்துட்டாய். அன்றே உன்னோட கதைக்கணும் என்டு ட்றை பண்ணினன். ஆனா நீ திடீரென காணாமப் போயிற்றாய். பிறகு நான் உன்னைத் தேடல தவிர உன் நினைப்பு எனக்குள்ளேயே இருந்திச்சு. முந்தாநாள் உன்னை ரெஸ்ரோரன்ரில் பார்த்ததுமே நான் எப்படி சந்தோசப்பட்டன் தெரியுமா? என் உயிர் எனக்கு திரும்ப கிடைச்ச மாதிரி தோணிச்சு..” என்று அவன் மேலே சொல்லுமுன்,

“அதுதான் கிஸ் பண்ணிக் கொண்டு இருந்திங்களோ?” என்று சட்டென்று கேட்டுவிட்டாள். 

 

“என்னது..? கிஸ்ஸா..?” என்று திகைத்துப் போய் கேட்டான் அவன்.

 

பட்டென்று அவனிடம் கேட்டுவிட்ட போதும் அவனது கேள்விக்குத் திரும்பவும் விளக்கம் சொல்ல அவளால் முடியவில்லை. இப்போதுதான் அவனைப் பிடிக்காத மாதிரிப் பேசிவிட்டு, அவன் யாரை முத்தமிட்டாலும் கேள்வி கேட்கும் உரிமை எப்படி வந்ததென்று உள்ளம் முரண்பட்டது. மறுபுறம் எப்படி வெளிப்படையாக அவனிடம் இதைக் கேட்பது என்று வெட்கம் உண்டானது.

 

நன்றாக அவள் புறம் திரும்பியவன்

“மதி.. எப்ப, எங்க, யாரை நான் கிஸ் பண்ணினன்? நீ அதைப் பார்த்தாயா?” என்று எதுவும் புரியாத குழப்பத்துடன் கேட்டான். 

அவள் தயங்கவும் மீண்டும் வற்புறுத்திக் கேட்டான்.

 

சங்கடப்பட்டாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில், அன்று தான் கண்டதைக் கூறினாள்.

 

அவள் சொன்னதைக் கேட்டதும் பக்கென்று சிரித்துவிட்டான். தொடர்ந்து தனக்கும் கனிந்தாவுக்கும் நடந்த சம்பந்தக் கலப்பு பற்றி கூறினாள். அவள் முகம் கோபத்தில் சிவந்தது. அவளுடன் கல்யாணம் பேசிவிட்டுத் தன்னுடன் வந்து இப்படிக் கதைக்கிறானே என்ற சினம் உண்டானது. அவள் கோபத்தைப் புரிந்து கொண்டவன், கோபத்தில் சிவந்திருந்த அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான். தொடர்ந்து கல்யாணத்தை நிறுத்தியதையும் சொன்னான்.

 

“அப்போ அவ இங்கேயே இருக்கப் போறதா சொல்லியிருந்தா நிறுத்தியிருக்க மாட்டிங்கதானே?” என்று கோபம் குறையாமல் கேட்டாள்.

 

அவள் காது அருகில் மெல்லக் குனிந்தவன்

“கட்டாயம் நிறுத்தியிருப்பன். உன்னைப் பார்த்த பிறகு என்னால இன்னொருத்தியை கனவில கூட நினைக்க முடியாது. எப்போதும் எனக்கு நீ போதும்.இனிமேல் நீ என் மதிதான்” என்றான்.

 

அவன் மூச்சுக்காற்று அவள் கன்னங்களைத் தீண்டியது. பெண்ணவள் பேச்சற்றுப் போனாள். அவனுக்கும் அவள் அருகாமை மதிமயக்கியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஒரு வழியா மதியோட சந்தேகத்தை தீர்த்து வச்சிட்டான் சூப்பர்

      மதி இனி உனக்கு பிரச்சனை இல்லல்ல செந்தூரனுக்கு ஓகே சொல்லிடு

      1. Author

        ஓகே சொன்னாலும் பிரச்சினை தீராதே…🤔🤔🤔