Loading

அத்தியாயம் 7

காலையில் சீக்கிரம் எழுந்த செந்தூரனுக்கு அவள் நினைவுகளே பூபாள இராகம் பாடியது. இன்று எப்படியாவது அவளைச் சந்தித்து கதைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். ஏனோ அவனுக்கு நாட்களைத் தள்ளிப் போடுவது பிடிக்கவில்லை. உடனேயே அவளைத் தன்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அவளை எப்படி சந்திப்பது என்ற வழியையே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

தான் அன்று கடைக்கு வரத் தாமதமாகும் எனக்கூறி ரவிவர்மனை நேரத்திற்குச் சென்று கடையைத் திறக்குமாறு அனுப்பி வைத்தான். எழுந்து தயாராகி அவன் சென்றது திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு. அவளைக் காணும் வழி அறிந்தவர் அவர்தான். அவரிடம் சென்றூ கேட்டால் வழி கிடைக்கும் என முடிவெடுத்து வந்தவனாகத் தெரிந்தான். காலைப் பூசையைப் பார்த்துவிட்டு, விபூதி சந்தனம் வாங்கி அணிந்தவன் மூலஸ்தானத்துக்கு எதிரே சென்று அமர்ந்து கண்களை மூடினான். அவனது நினைவுகளோ அவனவளைச் சுற்றிச் சுழன்றது. கோணேசப் பெருமானிடம் மனமுருகி வேண்டினான். 

“என் தாயுமானவனே, எனனவளென அவளை எண்ணிவிட்டேன். அவள் எனக்காகப் பிறந்தவள். அவளை எப்போதும் என் கண்ணாகப் பார்ப்பேன். அவளை இப்போதே என்னிடம் சேர்த்துவிடு” என்று உள்ளம் உருக வேண்டி நின்றான்.

அவனது வேண்டுதல் அவரது காதில் உடனேயே விழுந்துவிட்டது போலும், அவன் அருகில் உட்கார்வதை உணர்ந்தவன் கண்திறந்து அருகில் பார்த்தான். அவன நண்பன் ஹரிஸ் அமர்ந்திருந்தான். இருவரும் கும்பிட்டுவிட்டு வெளியில் வந்தனர். மலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டில் சென்று அமர்ந்தனர்.

“என் மச்சி அதிசயம். கடை திறக்கும் நேரத்தில் கோயிலில் நிக்குறாய்?”

“அதுசரி மச்சான். நீ என்ன  கோயிலுக்கெல்லாம் வாறாய்?” என்று அவனிடமே திருப்பிக் கேட்டான்.

“இந்த தயானா கோயிலுக்கு ஏத்திக்கொண்டு போகச் சொல்லி கத்தினாளா, அதுதான் பைக்கில் ஏத்தி வந்தன். கீழ உன்ர காரைக் கண்டதும் அதிசயமாப் போச்சு. கோயிலுக்க வந்து தேடினா , முன்னுக்கே நீ இருக்காய். என்ன மச்சி விசேஷநாள் இண்டைக்கு?” என்று கேட்டான்.

நிறைமதி பற்றி ஏற்கனவே ஹரிஸிற்குத் தெரிந்தாலும் நேற்று அவளைக் கண்டதையும் இன்னும் அவள் தன் உள்ளத்தில் உறுதியாக இருப்பதை உணர்ந்ததையும் கூறினான்.

கனிந்தா குறித்தும் அவனுக்குக் கூறினான். அவன் கூறியதையெல்லாம் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஏன் மச்சி, இப்படி பேயைக் கணடவன் போல முழிக்கிறாய்?”

“பின்ன என்னடா? நான் ஒரு நாலு நாள் கொழும்புக்குப் போயிருந்தேன். திரும்பி வாறதுக்கிடையில கல்யாணப் பெண்ணையே மாத்திட்டாய்”

“ம்கூம்… நான் மாத்தல. கோணேசப் பெருமானாப் பார்த்து என் உயிர எனக்குத் திருப்பி அனுப்பிட்டார்”

“ரொம்பத்தான் ஃபீல் பண்ணுறாய்”

“அதவிடு மச்சி.. நீ இப்ப என் கூட வா. அவளைப் போய் சந்திச்சிட்டு வருவம்”

“ஓகேடா எங்க போய் சந்திக்கப் போறாய்?”

“தெரியல..” என்று உதட்டைப் பிதுக்கினான்.

ஹரிஸ் சிரித்துவிட்டு யோசித்தவன் “பொறு மச்சி வாசனிட்ட கேட்டா தெரியுமல்லோ. அவன் வீட்டு ஃபங்கஷனில்தானே சந்திச்சாய்?” 

“ஓம் மச்சி, மறந்திட்டன் பார்த்தியா, நேற்று அவன்வீட்ட போய் விசாரிச்சிட்டுத் தான் வந்தனான். கேக் கடை வச்சிருக்கிறதா சொன்னான். எங்கெயென்று கேட்க மறந்திட்டன். நீ ஞாபகப் படுத்திட்டாய்”

“இதுக்குத் தான் ஒரு அறிவாளி பக்கத்தில இருக்கணும் என்று சொல்லுவாங்க”

“ம்ம்.. நீ அறிவாளிதான் நம்புறன்” என்று கூறிவிட்டு கீர்த்தி வாசனுக்குக்கு அழைப்பெடுத்து அவளைப் பற்றி விசாரித்தான். அவளது கடை அனுராதபுரச் சந்தியில் இருப்பதை அறிந்து வைத்தவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அந்த வீதியால் எத்தனை தடவை பயணித்து இருக்கிறான். ஆனால், ஒரு தடவை கூட அவளைச் சந்திக்கவில்லையே என நினைத்துக் கொண்டான்.

ஹரிஸ் தன் தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டுவிட்டு செந்தூரனுடன் சென்றான்.

கடையை வந்து அடைந்ததும் உள்ளே சென்று எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது? அவளது பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும் என்று சற்றே தயங்கி நின்றான். சில நொடிகளிலேயே தன்னை சமநிலைப் படுத்திவிட்டு உள்ளே சென்றான்.

அங்கே அவள் மேசை மேல் இருந்த கேக்கில் அலங்கார வேலை செய்து கொண்டிருந்தாள். மேசை முன் சென்று நின்றவன் அவளையே ரசித்தான். தன் முன் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தவள் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது. அவனை அங்கே அவள் சற்றேனும் எதிர்பார்க்கவில்லை. 

நெடு நெடுவென்ற உயரமும் அளவான உடல் கட்டமைப்புடனுமும் அலையலையாக நின்ற தன் கேசத்தைக் கையால்கோதிவிட்டபடி தன் முன் நின்றவனைக் கண்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவள் முகத்தில் நிலைத்திருந்த அவன் விழிகள் இமை சிமிட்டாது பார்த்த பார்வை அவளை சங்கடப்படுத்தியது.

அவன் பார்வையை சந்தித்தவளுக்கு ஏனோ மனம் படபடக்கத் தொடங்கியது. அவனின் பார்வை அவளை அப்படியே கபளீகரம் செய்தது.

‘ஏன் இந்தப் பார்வை பார்க்திறான்? ‘ என உள்ளூர சிணுங்கியவள், அவனைப் பார்த்து மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தாள். அந்தச் சிறு சிரிப்பிலேயே தன் முன் நின்றவன் தொலைந்து போனான் என்பதை அறியவில்லை பேதையவள்.

அவன் எதுவும் பேசாது தன் முன் நிற்பவளையே கண்ணுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான். அவளை அப்படியே அள்ளிப் பருகுபவன் போல் பார்த்தான். அவனுடன் வந்த ஹரிஸோ தனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவன் போல் கண்ணாடி அலுமாரிக்குள் அழகழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கேக் மாதிரிகளை இரசித்துக் கொண்டிருந்தான்.

‘இதென்னடா இவர், கடைக்கு வந்தவர் எதுவும் கதைக்காமல் இப்படிப் பார்த்தால் நான் என்னதான் செய்வது? இவரை எப்படி அழைத்துக் கதைப்பது? அண்ணா என்பதா? ஐயையோ அப்படி கூப்பிட என்னால் முடியாது. சேர் என்று கூப்பிடுவமா? ம்கூம்… அப்படி வேண்டாம். வேற எப்படிக் கூப்பிடுவது? இவராவது கதைக்கத் தொடங்கலாம்தானே’ என்று மனதிற்குள் சிணுங்கினாள். இறுதியில் ஒரு முடிவாக

“சொல்லுங்க” என்றாள்.

என்ன வேணும் என்பதைத்தான் அவள் அவ்வாறு கேட்டாள். ஆனால் அந்த ஒரு சொல் அவனுள் ஏற்படுத்திய மாற்றத்தை அவள் அறியவில்லை.

ஒரு சொல் பல அர்த்தங்களைக் கொடுக்கும் என்பதை இன்று அவன் அனுபவ ரீதியாக உணர்ந்தான்.

“என்ன சொல்ல? எவ்வளவு நேரம் இங்க வந்து நிக்குறன். ஒரு வார்த்தை கேட்கல. இதுதான் நீர் கடை நடத்துற லட்சணமோ?”

“இல்லை…  நான்… உங்களைக் காணலையே”

“இல்லையே.. என்னைப் பார்த்திட்டுத்தான் பேசாமல் இருந்தீர்” என்று அவளுடன் வம்பு வளர்த்து கதைக்கத் தொடங்கினான்.

“உண்மையாவே நான் உங்களைக் காணல.  உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க?”

“என்ன கேட்டாலும் தருவாயா?” என்று அவன் கேட்கவும் பெண்ணவளுக்கோ ஒருவித சங்கடம் உண்டானது.

இப்படிப் பேசுகிறானே என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் போதுதான் அவன் தன்னை ஒருமையில் கதைப்பது பிடிபட்டது.

“என்ன பதிலையே காணல? என்ன கேட்டாலும் தருவாயா?” என்று மீண்டும் அழுத்திக் கேட்டான்.

இவன் பதில் சொல்லாமல் விடப்போவதில்லை என்பதை உணர்ந்தவள் “என் கடையில் இருப்பதைக் கேட்டால் தருவேன்” என்றாள்.

“எனக்கு என் தேவதை வேண்டும்” என்று பட்டென்று சொல்லவும் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

“எ.. ன்..ன?”என்று புரிந்தும் புரியாத தடுமாற்றத்துடன் கேட்டாள்.

அவளையே பார்த்திருந்தவன் மேசை மீதிருந்த அவள் கைமீது தன் கையை மெல்ல வைத்தான். இருவரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. அவன் செய்கையால் அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டாள் பெண்ணவள். கைகளை விலக்கப் பார்த்தாள் முடியவில்லை.

இவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்த ஹரிஸ் புன்னகையுடன் சென்று வெளிவாசலில் கிடந்த இருக்கையில் அமர்ந்து அலைபேசியில் நோண்டத் தொடங்கினான்.

இங்கே மங்கையவள் படபடக்கும் விழிகளால் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். அவள் பார்வை அவனை முற்றாக சாய்த்தது. தன்னிலை மறந்து பேசினான்.

“இரண்டு வருஷமாச்சு உன்னைத் எனக்குள் வைத்து. அதன் பிறகு உன்னை நான் காணவேயில்லை. ஆனால் மறக்கவுமில்லை. நேற்றுத் தான் மீண்டும் உன்னைப் பார்த்தன். பேச முடியாத நிலமை. நேற்று முழுக்க உன் நினைப்புத் தான். தூங்கவே முடியல. அதுதான் விடியவே வந்தன்” என்று தன் உள்ளக் கிடக்கையை அவளிடம் கொட்டிவிட்டான்.

‘இவன் என்ன சொல்கிறான்? என்னைத் தேடினானா? எனக்காகத் தவித்தானா? அன்று சந்தித்ததைத் தான் மட்டும் மறக்காமல் இருப்பதாக எண்ணினால் அவனும் என்னை மறக்கவில்லையா?’ என்று எண்ணி உள்ளூர ஆனந்தப்பட்டாள். அந்த ஆனந்தம் அடுத்த நொடியே அவளை விட்டு நீங்கியது. காரணம் நேற்று அவன் வேறொரு பெண்ணை முத்தமிட்டது அவள் நினைவுக்கு அப்போது வந்ததே. அவள் மனைவியாக இருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். ஆனால் நேற்று அவளை முத்தமிட்டு விட்டு இன்று தன்னிடம் வந்து இப்படிப் பேசுகிறானே என்று எண்ணவும் எரிச்சல் உண்டானது. போதாதற்கு இன்று தன் கையை வேறு பிடித்திருக்கின்றானே  என்று எண்ணமிடவும் கோபம் உண்டானது.

கையை உருவப் பார்த்தாள். முடியவில்லை. அவனிடமே கையை விடச் சொல்லிக் கேட்டாள்.

அவள் எண்ணவோட்டம் பரியாமல், முடியாது என்று சொல்லி அவள் கையை மேலும் இறுகப் பற்றினான். இவளுக்கோ கோபத்தில் வார்த்தைகள் இன்றி கண்கள் கண்ணீரால் நிரம்பியது.

அந்நேரம் பார்த்து பூசை வேளைக் கரடியாக கடையில் வேலை பார்க்கும் சிந்து வந்தாள். அவள் வருவதைத் தூரத்தில் கண்டதும் ஹரிஸ் பெரிதாக இருமினான். அந்த இருமல் சத்தத்திலேயே யாரோ வருவதை உணர்ந்தவன்

அவள் கன்னத்தில் மென்மையாகத் தட்டிவிட்டு வெளியேறினான். என்ன நடந்தது என்பதை சிந்திக்கக் கூட அவளுக்கு மூளை இடம் கொடுக்கவில்லை. ஸ்தம்பித்து நின்றுவிட்டது.

இமைக்கவும் மறந்து வாசலையே பார்த்தபடி நின்றாள்.

உள்ளே வந்த சிந்து அக்கா பஸ் வர லேட் ஆச்சு. அதுதான் கொஞ்சம் லேட். இவர்கள் என்ன வாங்க வந்தார்கள்?” என்று கேட்கவும்தான்  சுய நினைவுக்கு வந்தாள்

“அது அது.. ஒரு கேக் ஓர்டர் பண்ண கேட்டார்கள். அதற்கான விளக்கத்தை கொடுத்து அனுப்பி இருக்கேன்” என்று ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தாள். தொடர்ந்தும் அவளால் வேலை செய்ய முடியவில்லை. பாதியில் நின்ற வேலையை சிந்துவிடம் செய்யக் கொடுத்து விட்டு அங்கே கிடந்த இருக்கையில் சென்று அமர்ந்து கண்களை மூடினாள். அப்போதும் அவன் கன்னங்களைத் தட்டிவிட்டுச் சென்ற காட்சியே நிழலாடியது. ஒருவாறு அன்றைக்கு முடிகாகவேண்டிய கேக்குகளைத் தயார் செய்து கொடுத்துவிட்டு, அவனைப் பற்றிய சிந்தனையிலேயே உலாவினாள். மாலையில் சிந்து சென்ற பின்னும் கடைக்குள்ளேயே இருந்தாள். வீட்டிற்குப் போவதற்கும் பிடிக்கவில்லை. இன்று அம்மா என்ன குண்டைத் தூக்கிப் போடக் காத்திருக்காரோ என்று நினைக்கும்போதே வீடு செல்லத் தோன்றவில்லை. ஏதேதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவளை அவளது அலைபேசி கலைத்தது. அவளது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. தெரியாத இலக்கமாக இருக்கவும் யாராவது கேக் ஓர்டருக்கு அழைக்கிறார்களோ என்று எண்ணமிட்டபடி “ஹலோ” என்றாள். அந்த இனிமையான குரல் அடுத்த பக்கம் இருந்தவனை அப்படியே கட்டிப்போட்டது. ஆம் அவளுக்கு அழைத்திருந்தது செந்தூரனே. கடையிலிருந்து புறப்படும் போதே கடை விளம்பரப் பதாதையில் இருந்த அவளது அலைபேசி எண்ணைத் தனது அலைபேசியில் பதிவு செய்து விட்டே வந்திருந்தான்.

எதிர்பக்கம் எந்தப் பதிலும் இல்லையெனவும் “ஹலோ.. இது அன்புகேக் ஹவுஸ். நீங்க யாரு கதைக்கிறது? உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்?” என்று தொழில் ரீதியாக பேசினாள்.

“மதி..” என்று அவன் அழைக்கவும் யார் எனப் புரியாது நின்றாள்.

மீண்டும் “மதி.. எனக்கு என் தேவதை வேண்டும். அதற்கு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று அவன் கேட்கவுமே அவள் திகைத்துப் போய் நின்றாள். அவனது குரலை அப்போதுதான் கண்டாள். அவனது மதி என்ற அழைப்பும் அவளை அப்படியே கட்டிப் போட்டது. அவளை யாரும் இதுவரை மதி என்று அழைப்பதில்லை. நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் நிறை என்றே அழைத்துப் பழக்கம்.  அவள் அமைதியாக இருக்கவும் தன் குரலை அடையாளம் காணவில்லை போலும் என எண்ணியவன் “என் குரல் உனக்கு நினைவில்லையா?” என்று மறுபக்கத்தில்  கேட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. ஒருவழியா செந்தூரம் நிறைய நிறைய தேடி வந்துட்டான் சூப்பர் 👌👌
      மதி என்ன முழிக்கிற சீக்கிரம் செந்தூரனுக்கு ஓகே சொல்லு அப்பதான் உங்க அம்மா ராட்சசி கிட்ட இருந்து தப்பிக்க முடியும்