அத்தியாயம் 17
காலை எழுந்து குளித்துவிட்டு கடைக்குச் செல்லத் தயாராகி வந்தவன் நிறைமதியை காண அவளது அறைக்குள் சென்றான். அங்கே அவளைக் காணவில்லை எனவும் யோசனையுடன் வெளியில் வந்தவன் சமையலறைக்குள் கேட்ட சத்தம் அங்கே சென்றான். அங்கே நின்ற நிறைமதியைப் பார்த்ததும் அப்படியே சொக்கிப் போய் நின்று விட்டான். காலையிலேயே தலைக்குக் குளித்துவிட்டு ஒரு சிறு துணியொன்றால் தலைமுடியை அள்ளி முடிந்திருந்தாள். நெற்றியில் சிறு சாந்துப் பொட்டு. அதன்மேல் திருநீற்றுக் கீறும் சந்தனப் பொட்டுமாக பார்ப்பதற்கு சாந்தமான அழகுடன் இருந்தாள். ஜெயராணியோடு சேர்ந்து காலையுணவுக்கு சம்பலுக்குத் தேவையான தேங்காயைத் துருவிக் கொண்டிருந்தாள். அவள் வந்த ஒருநாளிலேயே தன் வீட்டோடு பொருந்திப்போய் விட்டதாகவே அவனுக்கு தோன்றியது. சமையலுக்கு உதவி செய்துகொண்டு நின்றதைப் பார்க்கவும் மனதிற்கு இதமாய் இருப்பதை உணர்ந்தான்.
அவளை அப்படிப் பார்த்ததும் சீண்டிப் பார்க்கும் எண்ணம் துளிர்க்கவும் கீழே அவள் தங்கியிருந்த அறைக்குள் சென்றவன் “மதி” எனக் கொஞ்சம் சத்தமாகக் கூப்பிட்டான். அவன் கூப்பிட்டது அவள் காதில் கேட்டபோதும், கூடநின்ற ஜெயராணியைப் பார்த்துவிட்டு அமைதியாகத் தேங்காயைத் துருவத் தொடங்கினாள். திரும்பவும் அவன் “மதி ஒருக்கா வந்துவிட்டுப் போ.. ஒரு விஷயம் கதைக்கணும்” என்று சத்தமாக அழைத்தான். வெட்கத்தில் முகம் சிவக்க நின்றவளை “பிள்ளை, தம்பி ஏதோ அவசரமாகக் கூப்பிடுறான் போல. என்ன என்று போய் கேட்டுட்டு வாவன்” என்று அனுப்பி வைத்தார் ஜெயராணி. அவரும் இந்த வயதையும் அனுபவங்களையும் கடந்து வந்தவர்தானே. அவருக்குப் புரியாதா? அவர்களின் சின்னச் சின்னச் சீண்டல்களைக் காணாதவர் போல இருந்துவிட்டார்.
அறை வாசலில் வந்து நின்றவள் “ஏன் கூப்பிட்டிங்க?” என்று மெல்லக் கேட்டாள். “ஏன்டி, அதை உள்ளே வந்து கேட்க மாட்டியா? நான் என்ன பூதமா? உன்னைப் புடிச்சு விழுங்கப் போறன் என்று பயப்படுறியா? உள்ள வாவன்டி”
“இல்லைங்க.. அம்மாக்குத் தேங்காய் துருவிக் கொடுக்கணும். என்ன..? சொல்லுங்க”
என்று கேட்டுக் கொண்டு சற்றே உள்ளே வந்தவளை உள்புறமாக இழுத்தவன் கதவை சாத்திவிட்டு, “ஏன்டி செல்லம் கூப்பிட்ட உடனேயே வர மாட்டியா?” எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டான்.
அவன் உள்ளே இழுத்ததில் வெட்கிச் சிவந்தவள் “ஏன்…?”தடுமாறக் கேட்டு நின்றாள். “என் பொண்டாட்டியை நான் கூப்பிடக் காரணம் வேற வேணுமா? எப்பவும் உன் புருஷன் கூப்பிட்டா உடனேயே வந்திடனும். அவனுக்கு என்ன அவசரமோ. இப்படிக் கட்டிப் பிடிக்கக் கூடக் கூப்பிட்டிருக்கலாம்” என அவளை இழுத்து அணைத்தான். “ஐயோ விடுங்கப்பா.. அம்மா வெளியில் நிற்கிறார். நான் உள்ளுக்க கனநேரம் நின்றால் என்ன நினைப்பாங்க. வாங்கப்பா சாப்பிட” என அழைத்தாள்.
“ஏய் செல்லம் இப்போ எப்படி கூப்பிட்டாய் என்னை. வாங்கப்பா… சூப்பராய் இருக்கடி.. இனி அப்பா போட்டே கூப்பிடு” என்று சந்தோசத்தில் முகம் மலர நின்றான். “ம்ம்.. நீங்க கடைக்குப் போகணுமல்ல. விடுங்க” என சிணுங்கினாள். “கடைக்குப் போக முதல்ல எனக்கு எனர்ஜி டிரிங்க்ஸ் வேண்டும்” என்று சொன்னவனை புரியாமல் பார்த்தாள். அவள் முகத்தைத் தன்னருகே கொண்டு வந்தவன் அவள் அதரங்களை மென்மையாகத் தீண்டினான். “இதுதான் எனக்கு எனர்ஜி டிரிங்க்ஸ்”
“எ.. என்ன… வி.. விடுங்க” என்ற அவளது சொற்கள் வெளியில் வர முடியாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கியது. அவளை அவன் பேச விட்டால்தானே. பதட்டமடைந்த அவள் கண்களைப் பார்த்தவன், சற்றே இடைவெளி விட்டுவிட்டு “ப்ளீஸ்டி கொஞ்ச நேரம் தான்” என கெஞ்சியவன் திரும்பவும் தன் வேலையைத் தொடர்ந்தான். அதிலிருந்து மீள முடியாமல் தவித்தான். வெளியில் “அம்மா.. அண்ணா வெளிக்கிட்டு வந்திட்டானா?” என்று கேட்ட ரவிவர்மனின் குரலால் தன்னிலை மீண்டவன் அவள் அதரங்களைப் பிரிய மனமின்றி விடுவித்தான். அவனிடம் இருந்து விடுபட்டு ஓட முயன்றவளை அப்போதும் அவன் விடவில்லை. தன் முன்னே நிறுத்தியவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். “மதிம்மா, நான் கடைக்குப் போயிற்று வண் அவர்ல திரும்பி வாறன். நீயும் அத்தையும் வெளிக்கிட்டு ரெடியா இருங்க. கடைக்குப் போய் உனக்குத் தேவையான உடுப்புகளையும் மற்ற திங்ஸையும் வாங்கிட்டு வருவோம்” என்று சொல்லி அவளை விடுவித்தான்.
அவள் நேற்று வரும்போது தன் வீட்டில் இருந்து எதையும் எடுத்து வரவில்லை.
அதிகாலையில் எழுந்தவள் எப்படி குளிப்பது என்று தெரியாமல் தவிப்புடன் அறைக்குள் அமர்ந்திருந்தாள். அவள் அறையில் வெளிச்சம் தெரியவும் உள்ளே வந்த ஜெயராணி அவளைப் பார்த்துப் புரிந்து கொண்டார். அந்த அறையில் இருந்த தன் மகளின் உடையை எடுத்துக் கொடுத்தவர் “தப்பா நினைக்காத பிள்ளை.. இப்போ குளிச்சிட்டு இதைப் போட்டுக் கொள். தம்பி வந்ததும் உனக்குத் தேவையான உடுப்புகளை வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டுச் சென்றார். அவளும் வேறு வழியின்றி தான் உடுத்திருந்தவற்றைக் கழுவிக் காய வைத்துவிட்டு அவர் தந்த உடைகளையே அணிந்திருந்தாள். அதனைப் பார்த்ததுமே அவனுக்கு விஷயம் உறைக்க, தன்னைத் தானே மனதிற்குள் திட்டிவிட்டு அவளைக் கடைக்குப் போகத் தயாராக நிற்குமாறு கூறினான்.
அவள் சமையலறைக்குச் செல்லவும் வெளியில் வந்த செந்தூரன் அங்கே வரவேற்பறையில் அமர்ந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த தந்தையைக் கண்டு அவர் அருகில் சென்று அமர்ந்தான். ரவிவர்மனும் வரவே அவர்கள் மூவரினதும் பேச்சு வியாபாரம் குறித்து நடந்தது. சற்று நேரத்திலேயே உணவு உண்பதற்கு ஜெயராணி அழைக்கவும் மூவரும் சென்று அமர்ந்தனர். அவர்கள் வீட்டில் எத்தனை வசதி வாய்ப்புகள் வந்துவிட்டன. அழகான சாப்பாட்டு மேசை அலங்காரமாக அங்கே போடப்பட்டிருந்தன. ஆனால், முருகானந்தத்திற்கு சமையலறையில் தரையில் உட்கார்ந்து சாப்பிடவே பிடிக்கும். அதே பழக்கத்தை வீட்டிலிருந்த எல்லோரும் விருப்பத்துடனேயே கடைப்பிடிப்பர். அதனாலேயே அவர்கள் அறைகளிலேயே சமையலறையை மிக விசாலமாகக் கட்டியிருந்தனர்.
சமையலறையில் வந்து அமர்ந்தவர்களுக்கு ஜெயராணி உணவு பரிமாறவும் நிறைமதி அவருக்குத் தேவையானதை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். செந்தூரனோ சாப்பிடுவதைவிட அவளைக் கண்களால் காதல் செய்வதிலேயே குறியாக இருந்தான்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் திடீரென நினைவு வந்தவனாக “அப்பா, அத்தை… மதியின் அப்பாவும் மாமா குடும்பமும் ஏதாவது பிரச்சனை எடுத்தே தீருவாங்க போல. அதனால நாளைக்கே கல்யாணத்தை வைக்கலாமென்று யோசித்து இருக்கேன். பரவாயில்லைதானே?” என்று தந்தை முகத்தைப் பார்த்தபடி கேட்டான்.
“உனக்கு எது சரியென்று படுதோ அதைச்செய் தம்பி.. நான் ஏதாவது செய்யணுமா?” என்று கேள்வியாக கேட்டு நின்றார் அவன் தந்தை.
“இல்லையப்பா பெரிய வேலை எதுவும் இல்லை. நானே பார்த்துக்கிறேன்”
“ஏன் தம்பி, நாளைக்கு நல்ல நாளாமா? நேரம் பார்த்தியா?” என்று கேட்டார் ஜெயராணி. “அதெல்லாம் பார்த்து விட்டேன். நம்ம கேணியடிப் பிள்ளையார் கோயில் ஐயரிடம் கேட்டனான். அவர் சொன்னவர் நாளைக்கும் நல்ல முகூர்த்தம் இருக்குதாம். அதனால நாளைக்கு நாம கல்யாணத்தை வைப்போம்”
“சரி தம்பி” என பெரியவர்கள் இருவரும் சம்மதமாகத் தலையசைத்தனர்.
“அண்ணா… இப்படி திடீரென சொன்னால் கல்யாண ஏற்பாடெல்லாம் எப்படிச் செய்யுறது. நிறைய வேலை இருக்கே. எல்லோருக்கும் ட்ரெஸ் எடுக்கணும். ஆட்களுக்குச் சொல்லணும். வெளியூரில இருக்கிற நம்ம சொந்தக்காரங்க வரணுமே? என்னண்ணா நீங்க?” என்று அங்கலாய்த்தான் ரவிவர்மன்.
“இல்லடா.. யாருக்கும் சொல்லத் தேவையில்லை. நம்ம வீட்டோடயே நடத்துவோம். பிற்பாடு வேண்டுமென்றால் ஒரு ரிசப்ஷன் மாதிரி வைப்போம். அப்போ எல்லோரையும் அழைப்போம். சரிதானே அப்பா?” என்று கேட்டான். “தம்பி சொல்றது சரிதான். முதல்ல கல்யாணம் முடியட்டும். ஆறுதலாய் வடிவா யோசித்து ரிசப்ஷன் செய்வோம்” என்றார் முருகானந்தம்.
அவளைப் பார்த்து “சரிதானே மதி? உனக்கு எதுவும் யோசனை இருக்கா?” என்று வினவினான்.
அவள் இல்லை எனத் தலையாட்டவும்,
“அத்தை,நீங்க தேவையான சாமானெல்லாம் எழுதி வையுங்க. நான் ஒரு மணித்தியாலத்தால வாறன் கடைக்குப் போவோம்” என்றுவிட்டு சாப்பிட்டு எழுந்து விட்டான்.
அவர்கள் சொல்லிக்கொண்டு சென்றதும் அவளிடம் வந்து தலையை தடவிய ஜெயராணி, “பிள்ளை நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் கட்டி எப்போதும் சந்தோசமாய் இருக்கணும். நீங்க ரெண்டு பேரும் நீண்ட காலத்துக்கு நல்லா இருக்கணும்” என்று வாழ்த்தி விட்டு அவளையும் அமர வைத்து தனக்கும் அவளுக்கும் சாப்பாட்டைப் பரிமாறத் தொடங்கினார்.
மறுநாள் காலையில் கோயிலில் வைத்து எளிமையாகத் திருமணத்தை முடித்து இருந்தான்.
அவனின் குடும்பம் மட்டுமே. மேலும் உறவுக்காரர் ஓரிருவர் மட்டுமே வந்திருந்தனர். ஜெயராணிக்கும் முருகானந்தத்திற்கும் மிகுந்த சந்தோஷமே தங்கள் செல்ல மகன் குடும்பஸ்தன் ஆகிவிட்டான் என்று சந்தோசப்பட்டனர். நிறைமதிக்கும் சந்தோசமாய் இருந்தபோதும் மனதின் ஒரு ஓரத்தில் வலி ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது. தன் கல்யாணத்தைத் தாயும் கூடப் பிறந்தவர்களும் அருகில் இருந்து பார்க்கவில்லையே என்று சொல்லமுடியாத வேதனை அவளை வாட்டி வதைத்தது.
திருமணச் சடங்குகள் முடிந்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட ஆயத்தமானபோது “கொஞ்சம் நில்லுங்க போகலாம்” என்று எல்லோரையும் நிறுத்தி வைத்தான் செந்தூரன். ஏன் என்று கேள்வியாய் பார்த்தவர்களுக்கு விடையாக நிறைமதியின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அன்பரசனும் கவினயாவும் வந்து இறங்கினர். அவர்களைக் கண்டதும் நிறைமதியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தது. அருகில் வந்த இருவரும் “அக்கா..” என அழைத்து ஆனந்தக் கண்ணீருடன் கட்டியணைத்தனர்.
எப்படி வந்தார்கள் என்ற நிறைமதியின் கேள்விக்கு செந்தூரனைக் கண்களால் காட்டினர். ஆச்சரியத்துடன் செந்தூரனைத் திரும்பிப் பார்த்தவளை சிறு தலையசைப்பில் சந்தோசமா? எனக் கேட்டான். அவளுக்கு வார்த்தைகளால் பதில் சொல்ல முடியவில்லை. கண்ணீருடன் ததையசைத்து தன் சந்தோஷத்தை தெரிவித்தாள்.
முதல்நாள் கல்யாணத்துக்கு முடிவெடுத்து கடைகளுக்குச் சென்றபோது செந்தூரனின் மனதில் சிறு உறுத்தல் இருந்தது. கல்யாணத்துக்குத் தன்னைச் சேர்ந்தவர்கள் நிற்கும் போது நிறைமதி தவித்துப் போவாளே என்று யோசித்தான். அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு அன்பரசனைத் தேடிச் சென்றான். ஏற்கனவே நிறைமதி அன்பரசனும் கவினயாவும் மட்டும் தன்மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்ததாகக் கூறியதாலேயே அவர்களை அழைக்க வேண்டும் என எண்ணியிருந்தான்.
அவன் வழமையாக உதைபந்து பயிற்சிக்கு வரும் மைதானத்திற்குச் சென்றான். ஆனால் அவன் நிறைமதியைப் பிரிந்த கவலையில் எங்குமே செல்லாமல் வீட்டிற்குள் அடைந்துகிடந்தான். நண்பன் மூலம் அவனை வரவழைத்தவன் கல்யாண விஷயத்தைச் சொன்னான். அதன்மூலமே அவன் கவினயாவையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். அவர்கள் இருவருக்கும் புது உடைகளையும் எடுத்துக் கொடுத்திருந்தான். அவள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் அவன் எடுத்துக் கொடுத்தபோதும் மற்றையவர்களுடையதை இருவரும் ஒளித்து வைத்துவிட்டே வந்திருந்தனர்.