Loading

நிறைமதியின் வீட்டிலிருந்து அவளை அழைத்து வரும்போது வழியிலேயே இறங்கிய கீர்த்திவாசன் ஆட்டோவில் தன் வீட்டிற்குச் சென்று விட்டான். காரில் இருவரும் மட்டுமே. சற்றுத் தூரம் வந்தும் நிறைமதி பெரும் யோசனையுடன் வெளியே வெறித்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டவன், அவளைச் சீண்டிப் பார்க்கும் எண்ணத்தில்

“மதிம்மா, என்ன பலமான யோசனை. என்னுடன் ஏன் வெளிக்கிட்டு  வந்தோம் என்று நினைக்கிறியா? என்னை நினைக்க எதுவும் பயமா இருக்கா?” என்று நக்கல் குரலில் கேட்டான். அவனது நக்கலைப் புரிந்து கொள்ளாதவள் பதறிவிட்டாள். தான் அமைதியாக அமர்ந்திருந்ததை அவன் தவறாக நினைத்து விட்டானோ என்று தடுமாறினாள்.

“ஐயோ.. இல்லைங்க.. அப்படி எதுவும் நான் யோசிக்கலைங்க. உங்ககூட வாறதுக்கு நான் ஏன் பயப்படனும்?” என்று படபடப்புடன் கேட்டாள்.

“அப்ப ஏன்மா காரில ஏறுனதிலை இருந்து உம்மணாமூஞ்சியாவே இருக்க? என்னதான் ஆச்சு? அப்படி என்ன யோசனை உனக்கு?”

“அது வந்து.. திடீரென நீங்க கூப்பிட்டதும் எதையும் யோசிக்காமல் உங்ககூட வந்திட்டனா.. உங்க வீட்டில இதை எப்படி ஏத்துப்பாங்களோ?”

“அதை ஏன் இவ்வளவு சீரியஸா யோசிக்கிறாய், நான் எப்பவோ நம்ம வீட்டில உன்னைப் பற்றிச் சொல்லிட்டேனே”

“நான் அதைச் சொல்லல… நீங்க வீட்டில நாம லவ் பண்ணுறதைத்தான் சொல்லியிருப்பிங்க. இப்படி என்னை உங்க வீட்டுக்கு கூட்டிப் போறது சரியா.. திடீரென வந்து நின்றால்

என்னைப் பற்றி எல்லோரும் என்ன நினைப்பாங்க? என்னைத் தப்பாத்தானே யோசிப்பாங்க”

“மதி  நம்ம வீட்டைப்பற்றி நீ கவலையே படத் தேவையில்லை. நான் என்ன முடிவெடுத்தாலும் அப்பாவோ அத்தையோ எதுவும் சொல்லமாட்டாங்கள். ஆனாலும் நான் இன்டைக்கு உன் வீட்ட வாறதுக்கு முதலே அத்தையிடம் ஹோல் பண்ணி பேசினன். உன்னைக் கூட்டி வரப் போறதை அத்தைகிட்ட சொல்லிட்டன், அத்தை அப்பாகிட்டயும் சொல்லியிருப்பாங்க. அங்க வீட்டில உன்னை சந்தோசமாய் தான் எதிர்பார்ப்பாங்க.. ரிலாக்ஸ் பேபி” என்று அவள் கன்னத்தைத் தட்டினான்.

அதற்கும் அவள் உடைந்து போனாள். கேவிக்கேவி அழத் தொடங்கிவிட்டாள். அவள் அழுகையைக் கண்டு பதறியவன் இடையிலிருந்த தடையை யோசிக்காமல் எட்டி அவளது முகத்தை இழுத்து தன் மார்போடு அணைத்தான். அவளது கலங்கிய கண்களைத் துடைத்து விட்டபடி

“இப்ப என்ன நடந்தது? ஏன்டி அழுறாய்?” என்று சற்றே உரத்த குரலில் கேட்டான்.

அந்த அழுகையிலும் அவனது ஏன்டி என்ற சொல் உறைக்க கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“டியா?” என்று கேட்டாள்.

“ஓம் என் பொண்டாட்டியை நான் செல்லமா டி போட்டும் கூப்பிடுவன். டா போட்டும் கூப்பிடுவன். அதைவிடு.. இப்போ நீ எதுக்காக அழுதாய்?” என்ற கேள்வியோடு நின்றான்.

அவனது பொண்டாட்டி என்ற அழைப்பு உள்ளுக்குள் என்னவோ பண்ணிய போதும் அதையும்மீறி அவளது துயரம் முன்னுக்கு எட்டிப்பார்க்கவும்,

“இல்லை.. எங்க வீட்டிலயும் அம்மா, அப்பா எல்லாம் என்மேல பாசமா இருந்திருக்கலாமே… என் மனசைப் புரிஞ்சு அவங்க யாரும் நடந்துக்கலையே…. ஏன் என்னை அவங்களுக்குப் பிடிக்காமப் போச்சு?” என்று கலங்கி நின்றாள். காதல் கைகூடி, அவள் மனங்கவர்ந்தவனுடனேயே வாழ்வதற்காக வந்திருந்த போதும் இத்தனை வருடங்களாக பெற்று வளர்த்தவர்களையும் கூடப் பிறந்தவர்களையும் பிரிந்து வந்தது ரணமாக வலித்தது.

அவனது மதியின் கலக்கத்தை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அவளது ரணத்திற்கு மருந்தாக அவள் தலையைக் கோதியவன், பரிவாக

“மதிம்மா.. இங்க பாரடா.. உன் அம்மாக்கு உன் மேல பாசம் இருக்குத்தான். ஆனால் அவங்கட சூழ்நிலை.. அதைக் காட்ட விடல. எந்த வருமானமும் இல்லாமல் அடுத்தவங்க தயவுலதான் நாலு பேரையும் உங்க அம்மா தனியாளா நின்று வளர்த்திருக்காங்க.. இத்தனை வருஷமா அவங்களையே சார்ந்திருந்து பழகிட்டாங்க. அதுதான்.. அவங்க, உங்க மாமா குடும்பம் சொல்றதுதான் சரியாகும் என நினைச்சு அதையே செய்யணும் என்று பிடிவாதமா இருக்காங்க. அவங்கட நிலைமையில இருந்து பார்க்கும்போதுதான் அவங்க அப்படி நடக்கிறதுக்கான காரணம் புரியும். உன் மாமாட மகனை நீ கட்டணும் என்று அவர் பிடிவாதமாய் இருக்குறதுக்கும் காரணம் இருக்கு. அவனைக் கல்யாணம் கட்டிட்டா எப்போதும் போல மற்றப் பிள்ளைகளையும் வளர்த்திடலாம். காலத்துக்கும் பயப்படத் தேவையில்லை என்ற எண்ணம் அவருக்கு உறுதியாயிருக்கு. அதுதான் இப்படி அவரை நடக்க வைக்குது…” என்று சொன்னவன் அவளது முகத்தில் இருந்த தழும்புகளை மென்மையாக வருடி விட்டான். தொடர்ந்து “அவங்கடதும் உன் தம்பி, தங்கச்சிகளதும் எதிர்காலத்துக்கு நாமதான் பொறுப்பு என்று அவங்களுக்குப் புரிஞ்சாப் போதும். உன் மேல் இருக்குற பாசத்தை கட்டாயம் காட்டுவாங்க” என்று அவன் சொல்லி முடிக்கவும் ஆச்சரியமாக விழி விரித்து அவனைப் பார்த்தாள் அவள். தன் தாயின் மனதை எவ்வளவு ஆழமாகப் பார்த்திருக்கிறான். தான் கூட அப்படி யோசிக்கவில்லையே என்ற எண்ணம் உண்டாகவும் கண்கள் முழுவதும் காதலைத் தேக்கி அவனைப் பார்த்தாள். அக்காதலைப் புரிந்து கொண்டவன் “அம்மாடி என்ன பார்வையடி இது.. ஆளையே கொல்லுது.. இப்படியே காலம் முழுவதும் கட்டியணைச்சபடி இருந்தா எவ்வளவு சந்தோசமாய் இருக்கும்” என்று அவன் சொல்லவுமே தான் அவன் மார்பில் தலை சாய்த்திருப்பதை உணர்ந்தாள். அருகாமையில் உணர்ந்த அவனது வாசமும், அவனின் மயக்கும் புன்னகையும் அவளது சகல கவலைகளையும் மறக்கடிச்சு வெட்கம் கொள்ள வைத்தது. அவளது இதயத் துடிப்பு அவள் காதுகளையே எட்டியது.

இவன் பொல்லாதவன்… நொடியிலேயே சகலத்தையும் மறக்கடிக்க வைத்துவிட்டானே என எண்ணி உள்ளூர செல்லமாகத் திட்டினாள். அவனிடமிருந்து விலக முயன்றாள்.

“இப்ப என்னதான்டி ஆச்சு. கொஞ்ச நேரம் இப்படியே இருப்போமே” என்றவன் விரல்கள் சும்மா இருக்கவில்லை. அவளது காது மடல்களை மென்மையாக வருடியது.

காதுகளில் உண்டான கூச்சத்தால் நெளிந்தவள் “என்ன.. என்னப்பா செ.. செ..ய்யுறிங்க…” என்று குரல் தந்தியடிக்க கேட்டாள்.

உல்லாசமான சிரிப்பொன்றை உதிர்த்தவன்

“என் பொண்டாட்டிய நான் கட்டிப் பிடிப்பன். என்னவேணா செய்வன். அதுக்கென்ன இப்போ.. இதோ கிஸ் கூட பண்ணப் போறன்” என்றவன் அவள் முகத்துக்கருகில் இன்னும் நெருங்கினான்.

நிறைமதிக்கு முகம் அந்திவானமாகச் சிவந்தது. அவனிடம் எப்படி மறுப்பது எனப் புரியாமல் தடுமாறினாள். அவளுக்கும் அவன் நெருக்கம் உள்ளூர பலவித உணர்வுகளைத் தோற்றுவித்திருந்தது.

அவன் தன்னவளின் அதரங்களைத் தீண்டும் எண்ணத்துடன் மெல்ல நெருங்கியபோது ஜெயராணி அவனது அலைபேசிக்கு அழைத்தார். அதில் தன்னிலை மீண்டவன் உல்லாசமான சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அவளை விடுவித்தான். தனது அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.

“மதி, அத்தைதான் ஹோல் பண்ணுறா. இரு கதைச்சிட்டு வாறன்” என்றுவிட்டு அழைப்பை ஏற்றான்.

“ஹலோ.. அத்தை இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திடுவன். நீங்க எதுவும் யோசிக்காமல் நிம்மதியா இருங்க” என்றான்.

அவன் குரலில் இருந்த உற்சாகம் அவருக்குப் புரிய நிம்மதிப் பெருமூச்சொன்றை விட்டவர்,

“தம்பி நீ போய் கன நேரம் ஆச்சுதா.. அதுதான் பயந்துபோய் ஹோல் பண்ணிற்றன். அங்க எதுவும் பிரச்சினை இல்லையே? பிள்ளை வீட்டுல ஒன்றும் சொல்லலையா? அந்தப் பிள்ளையும் பயப்படாமல் உன் கூட வந்திடுச்சா?” என்று கேள்வியாக கேட்டுக் கொண்டார்.

“அத்தை.. அத்தை.. ரிலாக்ஸா இருங்க. இங்க எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் மதியைக் கூட்டிட்டு வெளிக்கிட்டன். இன்னும் கொஞ்ச நேரம்தான். உங்க முன்னால நிற்பன். அப்புறம் உங்க கேள்வியெல்லாம் கேளுங்க” என்று சிரிப்புடன் பதிலளித்தான்.

“சரி தம்பி, போனைக் கதைச்சுட்டு வண்டி ஓட்டாத. பிள்ளையக் கூட்டிட்டு வீட்டவா..  நான் வைக்கிறன்”என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

“மதிம்மா.. அத்தை ரென்ஷனில ஹோல் பண்ணுறா.  நாம போவோமா” என்றுவிட்டு காரை எடுத்தான்.

அங்கே இவனது வரவுக்காகக் காத்து நின்றார் ஜெயராணி. அவன் தங்கள் வருங்கால மருமகளை அழைத்து வரப்போகும் செய்தியைத் தன் அண்ணனிடம் கூறியவர் அவரையும் அழைத்து வந்து போர்டிகோவில் காத்திருந்தார். செய்தியறிந்த ரவிவர்மனும் கடையை வேறு பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு ஓடோடி வீட்டிற்கு வந்து காத்திருந்தான். அது மட்டுமில்லாமல் ஜெயராணி தன் கணவர், பிள்ளைகள் எல்லோருக்கும் அழைத்து விடயத்தைக் கூறிவிட்டார். எல்லோரும் அவர்கள் வந்ததும் திரும்ப அழைக்குமாறு கூறி ஆவலோடு காத்திருந்தனர்.

கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்த காரைக் கண்டதும் பரபரவென எழுந்த ஜெயராணி வீட்டிற்குள் ஓடினார். வரும்போது அவரது கையில், கரைத்துத் தயாராக வைத்திருந்த ஆலாத்தித் தட்டு இருந்தது. அவர் வரப்போகும் மருமகளை நிறைவாக வரவேற்க வேண்டும் என்ற ஆசையால் நேரத்திற்கே அதனைத் தயார் செய்து வைத்திருந்தார்.

தன் வருங்கால மனைவியுடன் வந்திறங்கிய செந்தூரனைக் கண்டதும் அவர்கள் மூவரின் முகத்திலும் பிரகாசமான புன்னகை தோன்றியது. அவர்களுக்குத் தங்கள் மகனைப் பற்றி நன்கு தெரியும். அவன் யோசித்துத்தான் எந்த முடிவையும் எடுப்பான். தனக்கு எது நன்மை, வீட்டுக்கு எது நன்மை என்று ஆராய்ந்து தெளிந்தே செய்வான். சாதாரணமான விடயங்களுக்கே அவ்வளவு யோசித்து நிதானமாக, ஆனால் தெளிவான முடிவாக எடுப்பவன் தன் வாழ்வில் சரியான முடிவே எடுப்பான் என நம்பினர். எனவேதான் அவன் கனிந்தாவை வேண்டாம் என்று சொன்ன போதும் எந்த மறுப்புமில்லாமல் ஏற்றுக் கொண்டனர். இப்போது அவன் காதலிக்கும் பெண்ணிற்கு பிரச்சினை என்றதும் அவளை அழைத்து வரப் போவதாகச் சொல்லி, அழைத்து வருவதும் அவர்களுக்குச் சந்தோசத்தையும் திருப்தியையுமே தந்தது.

காரிலிருந்து இறங்கி தயக்கத்துடனும் பயத்துடனும் வாசலுக்கு வந்துநின்ற நிறைமதியை முகம் நிறைந்த புன்னகையுடன் “வாம்மா” என அழைத்தார் ஜெயராணி. தயக்கத்துடன் செந்தூரனின் முகத்தை ஏறிட்டு வாசலிலேயே நின்றவளை அவனின் அருகில் நிற்குமாறு கூறிவிட்டு ஆலாத்தி எடுத்தார். ஆலாத்திக் கரைசலை வாசலில் கொண்டு போய் கொட்டிவிட்டு வந்தவரை அறிமுப்படுத்தினான் செந்தூரன். தனது தந்தை, ரவிவர்மன் ஆகியோரையும் அறிமுகப்படுத்தினான். உள்ள வாம்மா என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்ற ஜெயராணியைப் பார்த்ததுமே அவளுக்குப் பிடித்துவிட்டது.

தயங்கித் தயங்கி உள்ளே வந்தவளை

“எதற்குப் பிள்ளை யோசிக்கிறாய், இது உன் வீடு. நீ வருவதற்கு யார் உன்னை கூப்பிட வேண்டும். இனி எங்களையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு” என்றவர் சிரித்துவிட்டு

“பயந்துவிடாதம்மா.. எங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னவுடனேயே வீட்டு வேலையெல்லாம் உன் தலையில கட்டிவிடுவமோ என்று பயப்படாத. அந்த உரிமையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். வீட்டு வேலைகளை நான் பார்ப்பேனாம்.  நீ எங்களை அதிகாரம் பண்ணி வேலை வாங்கிறதை மட்டும் பாரு” என புன்னகையுடன் சொன்னவர், அழைத்துச் சென்று ஒரு அறையை அவளுக்குக் காட்டினார். “கல்யாணம் முடியும் மட்டுமே இதில தங்கடா..” என காட்டிவிட்டு அவளுக்கும் செந்தூரனுக்கும் தேநீர் எடுத்து வரச் சென்றார். 

அவர்கள் பின்னாலேயே அறைக்குள் வந்த செந்தூரன்

“மதி.. நான் கொஞ்சம் கடை வரைக்கும் போய் வாறன். லொறி வந்திருக்காம்.. நீ எதுவும் யோசிக்காத.. கொஞ்ச நேரத்துல வந்துடுவன். அத்தைகூட சகஜமாப் பேசு.. அவங்க என்னைவிட உன் மீது பாசம் அதிகம் காட்டுவாங்க ” என்று விட்டு ரவிவர்மனையும் அழைத்துச் சென்று விட்டான்.

ஜெயராணி இரவுச் சமையலுக்கான வேலைகளைச் செய்துகொண்டே அடிக்கடி அவளிடமும் வந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

எப்போதும் அளவாகப் பேசும் செந்தூரனின் தந்தை முருகானந்தம் அவள் வந்ததும் புன்னகையுடன் வாம்மா என அழைத்து அவளை ஆசீர்வாதம் செய்தார். ரவிவர்மனும் ஓரிரு வார்த்தைகள் அவளுடன் சந்தோசமாகப் பேசிவிட்டே சென்றான்.

ஆனாலும் ஒருவித தயக்கத்துடன் இருந்தாள். எந்தவித உடமைகளையும் தாய் வீட்டிலிருந்து எடுத்து வராததால் பெரும் சங்கடத்துடன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். ஜெயராணி காட்டும் அன்பையும் செந்தூரனின் காதலையும் நினைத்து தன்னைத் திடப்படுத்திக் கொள்ள முயன்றாலும் திடீரென வந்து நின்றதால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என எண்ணிக் கூனிக்குறுகியவள் ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் நத்தையாக அறைக்குள்ளேயே சுருண்டு கிடந்தாள்.

எல்லாவற்றையும்விட அவள் மனம் முழுவதும் தன் தாயும் சகோதரர்களும் தன் பிரிவால் எப்படித் தவிப்பார்களோ என்ற வேதனையே ஆட்கொண்டிருந்தது

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மதி உன் மேல இவ்வளவு பாசமா இருக்கிறவங்களை விட்டு உன்னை பணத்துக்காக மட்டுமே பார்க்கிற உங்கஅம்மாவை பற்றி அந்த பவித்ராவை பத்தி ஏன் நினைச்சுகிட்டு இருக்க??