அத்தியாயம் 13
இரண்டு நாட்களாக பட்ட அடிகளாலும் பேச்சுக்களாலும் உடலாலும் மனதளவிலும் பெருமளவில் தளர்ந்து போய் இருந்தவளுக்கு அவன் தன் முன்னால் வந்து நின்றதே பெரும் தெம்பைத் தந்தது. இதுவரை தான் பட்ட வேதனைகள் தீர்வதற்கான ஒரு வழிகாட்டியாகவே அவன், அவள் கண்களுக்குத் தெரிந்தான்.
அவனைக் கண்டதும் இதோ வருகிறேன் என அடம்பிடித்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கினாள். தாய் நின்றதால் அவன் அருகில் செல்லப் பயந்து ஏக்கத்துடன் அவனைப் பார்த்து நின்றாள்.
தான் கூப்பிட்டதும் ஓடோடி வராமல் மெல்ல நடந்துவந்து வீட்டிற்கு உள்ளேயே நின்றவளை ஆராயும் பார்வை பார்த்தான். அந்த சொற்ப தூரத்தைக் கூட கடந்து வருவதற்கு அவளால் முடியவில்லை. உடலில் பட்ட காயங்களால் நடப்பதற்கு கூட மிகச் சிரமப்பட்டுக் கொண்டாள். எங்கே சற்றே தவறினாலும் விழுந்து விடுவேனோ எனப் பயந்து மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தே வந்ததையும் கண்டான். அவளது வாடிய, ஓய்ந்த தோற்றமும் அவளது உடலில் ஏற்பட்டிருந்த வடுக்களும் செந்தூரனின் உள்ளத்தை வேதனையில் தள்ளியது. தான் இருக்கும்போதே தன்னவள் இவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்கின்றாளே.. இனி அவள் மீது ஒரு தூசிகூடப் பட விடக்கூடாது. தன் கண்ணுக்குள் வைத்து அவளைக் காக்க வேண்டும் என உள்ளூர சபதம் எடுத்துக் கொண்டான். உடனடியாக அவளை இந்த வேதனைலிருந்து மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனுக்கு உறுதியாக இருந்தது.
வீட்டின் உள்ளே தயங்கி நின்றவளை “மதி, இங்க வா” எனத் தன் அருகில் கூப்பிட்டான். தாயைத் திரும்பித் தயக்கத்துடன் பார்த்தாள். அவரது முறைப்பு உள்ளூரக் கிலியை ஏற்படுத்தினாலும், துணிவை வரவழைத்துக் கொண்டு மெல்ல அவனருகில் சென்றாள். அவன் அருகில் வந்ததும், நீண்ட நாள் பிரிந்திருந்த தாயைத் திடீரெனக் கண்டதும் சேயொன்று ஏக்கத்தில் அழுவதைப் போல உள்ளூர தவிப்பு உண்டாகவும் அவளுக்கு மளுக்கென்று கண்ணீர் புறப்பட்டது.
அவளது அழுகையையும் ஏக்கத்தையும் கண்டதும் பதறித்
தனது தோள் வளைவிற்குள் அவளை இழுத்து ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தான்.
அவள் உள்ளத்தில் தனக்கான இடம் இதுதான் என்ற ஒரு ஆறுதல் உணர்வு தோன்றியது.
இதற்குமேல் அவள் துன்பப்படுவதை அவனால் சகித்துக் கொள்ள முடியாது. உடனேயே தான் வரும்போதே திட்டமிட்டு வைத்திருந்ததை செயலாக்க முடிவெடுத்தான். சற்றும் தயக்கமின்றி,
“மதிம்மா, நீ இப்பவே என்கூட வந்திடு” என்றான். அவன் அப்படி அழைக்கவும் திகைத்துப் போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். உண்மையாகத்தான் சொல்கின்றானா என்ற தயக்கம் அவளிடம் இருந்தது. கண்ணீர் வழியும் அவளது கண்களை மெல்லத் துடைத்து விட்டான். அவளது அந்தப் பார்வையும் கண்ணீரும் அவனை வதைத்தன.
“ஏய் மதி, இப்போ எதுக்கடா அழுறாய்? நானிருக்கும்போது உனக்கு இப்படிக் கஷ்டத்தை வர இனிமே விடுவனா?” என்று ஆறுதலாகத் தோளை அணைத்த வண்ணம் கேட்டான்.
“சரிம்மா.. இதுவரை நீ பட்டது போதும்.. இப்போதே என்கூட வந்திடு. நீ எப்போதும் அழக்கூடாது. உனக்கு எந்த கஸ்ரமும் வர இனி நான் விடமாட்டேன்”
அவளுக்கும் அவன் கூப்பிட்டதும் உடனேயே போய்விடத்தான் ஆசை. ஆனால் தன்னை.. தன் வருமானத்தை நம்பியிருக்கும் இந்தக் குடும்பத்தின் நிலை மீளமுடியாத சுழலாகத் தன்னை இழுத்து இங்கேயே வைத்திருப்பதாக உணர்ந்தாள். எனவே அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தயக்கத்துடன் நின்றாள்.
“ஏய் நிறை.. நீ என்னடி செய்யிறாய்? இப்படி எந்தக் கண்டவன் வந்து கூப்பிட்டாலும் அவன்கூடப் போயிடுவியா? உன்னை நான் இப்படியா வளர்த்தன்? உள்ள வாடி” எனப் பெருங்குரலில் கத்தினார் உமையாள். அவருக்கு அவன் கூப்பிட்டதும் எங்கே அவள் உடனேயே போய் விடுவாளோ என்ற பயம் பிடித்துக் கொண்டது.
“அக்கா உனக்கென்ன பைத்தியமா? அம்மா உனக்காக எவ்வளவு கஸ்ரப்படுறா. நீ என்ன செய்யுறாய்?” என்று கோபத்துடன் கத்தினாள் பவித்திரா.
இவர்களது அதட்டலும் பேச்சும் அவளை சற்றே நடுங்கவும் வைத்தது. எப்போதும் தாயின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு வளர்ந்தவள் என்பதால் அவரை மீறி ஒரு வார்த்தை பேசுவதற்கு கூட பயந்து போய் நின்றாள். அவளது பயந்த பார்வையைக் கண்டவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.
“மதி நீ எதற்கு பயப்படுறாய்? நீ உங்க அம்மாட்ட சொல்லு. உனக்கான சந்தோசத்தைத் தேடிப் போகிறேன் என்று” என்றவன் உமையாளைப் பார்த்து “மாமி..” என்று கூப்பிட்டான். அவனது மாமி என்ற அழைப்பு அவரைக் கோபத்தின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது.
“யார் உனக்கு மாமி? என்ன துணிவில எங்க வீட்டு வாசலில வந்து நிக்கிறாய்? நின்டதும் இல்லாம என்னைப் பார்த்து மாமி என்று வேற கூப்பிடுறாய்.. எவ்வளவு தைரியம் உனக்கு.. நான்..” என்று கோபத்தில் மூச்சிரைக்க உறுமலாகக் கேட்டவர் அவனது கோபப் பார்வையில் தொடர்ந்து பேச முடியாமல் தடுமாறி பேச்சை நிறுத்தினார்.
“நீங்க தான் எனக்கு மாமி. அது எப்பவும் மாறாது. மாமி நானும் மதியும் ஒருவரையொருவர் விரும்புறோம். முறைப்படி உங்க எல்லாற்ற சம்மதத்தோடவும்தான் கல்யாணம் செய்வம் என்று நினைச்சிருந்தன். பொறுமையாவும் இருந்தன். ஆனா, அதுக்கு நீங்க விடமாட்டிங்க போல இருக்கு. மதிக்கு பிடிக்காத ஒருத்தன கட்டு என்று கரைச்சல் குடுக்குறதுமில்லாம, அவளைப் போட்டு இந்த அடி அடிச்சிருக்கிங்க. இதுக்கு மேல என்ர மதிய இங்க விட்டிட்டுப் போக என்னால முடியாது. வாற திங்கட்கிழமை… அது நீங்க பார்த்து வச்ச நல்ல நாளில எங்களுக்குக் கல்யாணம் செய்ய முடிவெடுத்திருக்கன். கட்டாயம் நீங்க எல்லோரும் வரணும் மாமி” என்று எந்தவிதத் தயக்கமுமின்றி நேர்கோண்ட பார்வையில் உமையாளிடம் கூறினான்.
அவன் பேசப்பேச அதைக்கேட்டு நிறைமதிக்கே மயக்கம் வந்தது என்றால், உமையாள், பவித்திராவின் நிலைமையைச் சொல்லவும் வேண்டுமா? உமையாளின் தலையில் பேரிடியே வந்து இறங்கியது எனலாம். அவர் எவ்வளவு ஆசையோடு காத்திருந்தார். குகனுக்கு அவளைக் கட்டிக் கொடுத்தால் காலத்துக்கும் தன் தமையன் தங்களை வைத்துப் பார்ப்பார். அதைவிட அன்பரசையும் அவர்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டால் தங்கள் கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று கற்பனைக் கோட்டை எல்லாம் கட்டி வைத்திருந்தார். தற்பொழுது அந்தக் கனவுகளை சிதைக்கும் வழியை அல்லவா அவன் சொல்லுகிறான். அவரது கோபம் அவர் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.
தாயின் ஆக்ரோஷமான முகத்தைக் கண்டு பயத்துடன் நிமிர்ந்து செந்தூரனைப் பார்த்தாள். அவளது உள்ளத்தை அறிந்தவன் கண்களை மூடித் திறந்து மென்மையாகப் புன்னகைத்து உனக்கு நானிருக்கிறேன் என்ற திடத்தை அவளுக்கு ஊட்டினான்.
“தம்பி இங்க பாரப்பா.. இது என் பொண்ணு. அதுக்கு எப்படிக் கல்யாணம் செய்யணும் என்று எங்களுக்குத் தெரியும். இப்படி நீ.. நீங்க பாட்டுக்கு வந்து கூட்டிப் போறன், கல்யாணம் பண்ணப்போறன் என்று சொன்னால் எப்படி?” என்று சற்றே இறங்கிய குரலில் கேட்டார். அதுவரை நேரம் இருந்த கோபக் குரலை காட்ட அவரால் முடியவில்லை. அவனது ஆளுமை நிறைந்த பார்வையும் துணிவான பேச்சும் அவருக்கு சற்றே பயத்தை உண்டாக்கியது. அதனால் அவர் அவனை மரியாதையாக அழைத்து தணிந்த குரலில் பேசினார்.
அவரது பேச்சிலும் குரலிலும் ஏற்பட்ட மாற்றத்தை செந்தூரனும் உணர்ந்தான் உள்ளுக்குள் சிரித்தவன் வெளியில் குரலை கறாராக வைத்துக் கொண்டு,
“மாமி..இந்தக் கல்யாணம் அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் நீங்கள் முடிவு எடுத்தீர்கள் தானே. அதற்கான பலனை நீங்களே அனுபவித்துக் கொள்ளுங்கள். என் மதியை இங்கே விட்டுப் போனால் நீங்கள் இப்படி அடித்தே கொன்று விடுவீர்கள். அதனால நான் கூட்டி போறன். முடிந்தால் திங்கட்கிழமை கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் பண்ணுங்கள்” என்று சொல்லிவிட்டு
“வா மதி” என அவளை அழைத்தான்.
அவளுக்கும் அவனுடன் சென்றுவிடத்தான் ஆசை. ஆனால் குடும்பத்தை எண்ணி சற்றே தயங்கி நின்றாள். “என்ன மதி? ஏன் தயங்குற?” என்று கேட்டான் செந்தூரன். “இல்லைங்க.. நான்.. வீடு..” என சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் தடுமாறினாள்.
அவளது உள்ளத்தை நன்கு அறிந்தவன் “நீ எதற்கு யோசிக்காத மதி. உன் மனசுக்குள்ள என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். அதற்கான வழியை நான் பார்ப்பேன். என் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் வா” என்று அவள் கையை பிடித்து அழைத்துச் சென்றான்.
தடுக்க முடியாமல் தடுமாறி நின்றனர் பவித்ராவும் உமையாளும். அவளை அவன் கைபிடித்து அழைத்துச் செல்வதைப் பார்த்ததும் நெஞ்சில் அடித்து கத்தத் தொடங்கி விட்டார்.
“ஐயோ… இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டு வளர்த்த நன்றிகூட இவளுக்கு இல்லையே. எங்களைப் பற்றி கொஞ்சமாவது யோசிக்கிறாளா? ஐயோ இப்ப நான் என்ன செய்வன்? அண்ணி கேட்டால் என்ன பதிலைச் சொல்லுவன்? இனிமேல் இந்த மூன்று பிள்ளைகளையும் எப்படி வளர்க்கப் போறேனோ? அவங்கட படிப்பெல்லாம் நாசமாப் போகப் போகுதே.. இவளை நம்பி மோசம் போயிட்டேனே… பாவி பாவி.. நீ உருப்படமாட்டடி. யாரென்று தெரியாத இவனை நம்பிப் போய் நாசமாய்த்தான் போகப்போறாய்..” என்று பெற்ற பெண் என்றும் பார்க்காமல் சாபமெல்லாம் விட்டார்.
அவனுடன் சேர்ந்து அவனது வாகனத்தின் அருகில் சென்றவளுக்கு அவரது புலம்பல் தெளிவாகவே கேட்டது. அவரது சாபம் எல்லாம் அவளைப் பாதிக்கவில்லை. ஆனால் தம்பி, தங்கைகளைப் பற்றிய அவரது கவலை மட்டும் அவள் நெஞ்சைத் தாக்கியது. அவர்களுக்காகத் தானே அவள் தன் படிப்பையே இடை நிறுத்தியவள். தன்னால், தான் எடுத்த முடிவால் இப்பொழுது அவர்களின் படிப்பும் பாழாய் போய்விடுமோ என்று எண்ணம் அவள் மனதை வேதனை கொள்ள வைத்தது. மேற்கொண்டு அவனுடன் செல்ல முடியாமல் தடுமாறி நின்றாள். கால்களை எடுத்து வைக்க அவளால் முடியவில்லை. திடீரென அவளது தயக்கத்தை பார்த்தவன் திரும்பி அவளைப் பார்த்தான். அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்தவன்,
“என்னடா அம்மா சாபம் விடுறாவே என்று பயமாய் இருக்கா?” என்று கேட்டான்.
“இல்லைங்க.. தம்பி, தங்கச்சி படிப்பெல்லாம் நினைச்சாத்தான்… என்ர வருமானம் மட்டும்தானே.. அதுதான்” என்று கவலையுடன் கூறினாள்.
“ஏன் மதி உன் தம்பி, தங்கைகளை நான் விட்டு விடுவேனா? எப்படி நீ இப்படியெல்லாம் யோசிக்கிறாய்? அவர்களுக்கு நான் இருக்கேன். அவங்களோட படிப்பு மட்டுமல்ல அவங்களுடைய எதிர்காலத்துக்கும் நான் வழி செய்வேன். அதைப்பற்றி நீ யோசிக்காதே. எப்ப உன்னை நான் என்னவளா நினைச்சேனோ, அப்பவே உன் குடும்பமும் என் பொறுப்புத்தான். அவர்கள் உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தியிருந்தாலும் அவர்களை நான் வெறுக்க மாட்டேன். நீ ஆசைப்பட்டபடி அவங்களைப் படிப்பிக்கலாம். உன் அம்மா, அப்பாவையும் நான் விட்டுட மாட்டேன். உங்க அம்மா கோபத்தில அப்படிக் கத்துறா? அதுக்காக நான் அவங்கமேலயும் வெறுப்பைக் காட்ட மாட்டேன். அவங்களும் எனக்கு அம்மாதான். முதல்ல நாம வீட்ட போவோம். அப்புறமா அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு எடுப்போம்” என்றான்.
அவனது இந்தப் பேச்சு அவள் தயக்கத்தையெல்லாம் உடைத்து எறிந்தது.