அத்தியாயம் 2
திருகோணமலை நகருக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் பிரதான சாலையிலேயே உள்ளது அனுராதபுர சந்தி என அழைக்கப்படும் பரபரப்பான ஒரு பிரதேசம். நகருக்குப் போட்டியாக பலவிதமான கடைகள் அங்கே பெருமளவில் தோன்யிருந்தன. அந்த நாற்சந்தியை ஒட்டியிருந்தது அந்தச் சிறிய கடை. ‘அன்பு கேக் ஹவுஸ்’ என்ற பெயரில் காணப்பட்ட அக்கடைக்குள் ஆர்ப்பாட்டமாய் நுழைந்தனர் அப்பெண்கள்.
“ஹாய் நிம்மதி…”
“ஹாய்டி செல்லம்…’
“ஹாய்டி குண்டுப் பூசணி “
என்று கூறிய படி, இல்லை இல்லை கூவியபடி அந்த சிறிய கடையையே அதிர வைத்தபடி நுழைந்தனர் மூன்று பெண்களும். அவர்களின் சத்தத்தால் வீதியால் சென்றவர்கள் கூட திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர்.
அது ஒரு சிறிய கடை என்றபோதும் கடைக்குள் அழகழகாக பல்வேறுபட்ட நிறம், சுவைகளில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் கண்ணாடி அலூமாரிகளுக்குள்ளும் குளிர்சாதனப் பெட்டியிலும் மிக நேர்த்தியாக வீற்றிருந்தன. பார்ப்போரை எச்சில் ஊற வைத்து வா வா என அழைப்பது போல இருந்தன.
சிறிய மேசை மேல் இருந்த கேக் ஒன்றிற்கு கிரீம் அலங்காரம் செய்து கொண்டிருந்த நிறைமதியும், அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்த பெண்ணும் இவர்களின் சத்தத்தால் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்கள். தன் தோழிகளைக் கண்டதும் மனம் நிறைந்த மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலிக்க,
“வாங்கடி வாங்க, என்னங்கடி எல்லாருமாச் சேர்ந்து கடைக்கு வந்திருக்கிங்க” என்று கேட்டாள் நிறைமதி.
“ஆ.. ஒரு கேக் ஓர்டர் பண்ணலாம் என்று வந்தோம். இருபத்தைஞ்சு கிலோவில ஐசிங் கேக் ஒன்று எடுக்கலாமா?” என்று கேட்ட சாரங்கா மிக அழகாக இருந்தாள்.
“அதுவும் என் உயரத்துக்கு இருக்கணும்” என்று சொன்ன பிரணிதா உயரமாக இருந்தாள்.
“அத்தோடு குண்டுப் பூசணி மாதிரி மொழு மொழுவெனவும் அந்தக் கேக் இருக்கணும் சரியா”
என்ற பிரின்சி கொடியிடையாள் என சொல்லும் அளவுக்கு மிகவும் மெலிதாகவும் அழகாகவும் இருந்தாள்.
“என்னங்கடி நக்கல் பண்ணுறிங்களா?” என்று மூவரையும் முறைத்தபடி நின்ற நிறைமதியே நம் கதையின் நாயகி.
அவள் சற்று குண்டாக இருப்பதால் குண்டுப் பூசணி என பட்டப்பெயர் வைத்து அழைப்பாள் பிரின்சி.. நிறைமதியை நிம்மதி என அழைப்பது சாரங்காவின் பழக்கம்.
நிறைமதி… பெயருக்கேற்றாற் போல எப்போதும் ஒரு தெளிவும் பிரகாசமும் அவள் முகத்தில் காணப்படும். சிரித்த முகமாய், அமைதியின் உருவமாய் காட்சி தருவாள். கண்கள், மூக்கு, வாய் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து பிரமன் அளவெடுத்து செய்திருந்தார். ஆனால், உடல்வாகு மட்டும் சிறு வயதுமுதல் சற்றே குண்டு ரகம்தான்.
அவளுக்கு அழகு சேர்ப்பதே அந்தப் புரிகுழல்தான்.
“நக்கல் இல்லை விக்கல். ஏய் குண்டுப் பூசணி இன்டைக்கு என்ன நாள்? நாங்களெல்லாம் கஷ்டப்பட்டு தேடி வந்திருக்கோம். ஒரு ட்ரீட் வைக்க நினைக்கலையே நீ” எனக் கேட்ட பிரின்சி ஓடி வந்து நிறைமதியைக் கட்டியணைத்து “ஹப்பி பேர்த்டே செல்லக்குட்டி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். மற்ற இருவரும்கூட அருகில் வந்து அவளைக் கட்டியணைத்து தமது வாழ்த்துக்களைக் கூறினர்.
“ஓமடி… இன்னைக்கு எனக்கு பேர்த்டே என்ன?.. மறந்தே போயிட்டன். தாங்க்ஸ் செல்லங்களே”
“மறந்திட்டியா? என்னடி இது? ஓகே எங்களுக்கு தாங்ஸ் மட்டும் போதாது. நீ இன்று பார்ட்டி வைக்கணும். அதுவும் ரெஸ்ரோறன்ட் கூட்டிப் போகணும்” என்று கூறிய பிரணிதா, அங்கே கண்ணாடி அலமாரிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கப் கேக் ஒன்றை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
“ஏன் நிறை, கவியும் அன்பும் கூடவா உனக்கு விஷ் பண்ணல” என்று ஆதங்கத்துடன் கேட்டாள் பிரின்சி. தன் மனதுக்குள் எழுந்த ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் மறைத்த நிறைமதி “கவி அஞ்சு மணிக்கே கிளாசுக்கு போயிட்டாள். நான் காலையில கடைக்கு வரும் வரைக்கும் அவள் வீட்ட வரவேயில்ல. அன்பு மறந்திருப்பான் போல..” என்றாள்.
தன் மனதை மாற்றவோ அல்லது அந்தப் பேச்சை நிறுத்தவோ எண்ணி, “ஏன் பாபி டோல், சும்மாவே நீ கொள்ளை அழகு. அப்புறம் எதுக்கடி உன் அழகுக்கு அழகு சேர்க்க ரொம்பவும் கஷ்டப்பட்டருக்கிறாய். இப்படியே உன்னவர் பார்த்தால் அப்படியே மயங்கிடுவார். இன்டைக்கே பிளைட் பிடிச்சு வந்து உன்னை அப்படியே தூக்கிக் கொண்டு போயிடுவார்” என்றதும் வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்து “போடி” என்று சிணுங்கினாள் பிரின்ஸி.
“நிறை, உனக்கு விஷயம் தெரியாதா? இப்பெல்லாம் மெடத்த பிடிக்க முடியுறதே இல்ல. இவளுக்கு அவங்க அத்தானைக் கல்யாணம் பேசினதும்தான் பேசினாங்க… போனிலேயே வாழத் தொடங்கிட்டாள். இன்றுகூட அவளோட அத்தானுக்கு போட்டோவும் வீடியோவும் எடுத்து அனுப்பத்தான் இந்த அலப்பறை” என்று கலாய்த்தாள் பிரணிதா.
“ஆமாடி அதுக்கு இப்போ என்னங்கடி… ஏய் பிரணி, நீ எங்க எல்லோருக்கும் முன்னமே கல்யாணத்தக் கட்டி ஒரு குழந்தையும் பெத்தாச்சுதானே.. பேசுவதானே…” என்று பழிப்புக் காட்டினாள் பிரின்ஸ்.
“ஆமா… அதையேன்டி இப்ப ஞாபகப்படுத்துற. தெரியாம இந்த நிரோஷனை லவ் பண்ணித் தொலைச்சி, கல்யாணத்தையும் கட்டிட்டன். ஸப்பாஆஆ.. முடியல…” என்று சலிப்பு போல காட்டினாள் பிரணிதா.
“ஆமா நீ இப்படி புலம்புறது நிரோஷனுக்குத் தெரியுமா… பாவம்.. அமரக் காதல் பண்ணி வீட்டையெல்லாம் அடி, உதை வாங்கி உன்னைக் கட்டினதுக்கு அந்த மனுஷன்தான் புலம்பணும்” என்றாள் சாரங்கா.
“பொல்லாத அமரக் காதல்… அவனைக் கட்டிட்டு அவன்கிட்ட நான் படும் கஸ்டம் இருக்கே…”
“சிந்து… சீக்கிரமாய் ஒரு பென்னும் பேப்பரும் தாவன்” என்று கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டாள் பிரின்ஸ்.
“ஏன் அக்கா?” என்று கேட்டபடி அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தாள்.
“நம்ம பிரணி ஒரு ஜோக் சொல்லியிருக்காளே… அதை மறக்காமல் குறிச்சு வைக்கணும். வீட்ட போயிட்டு அதை பார்த்து அடிக்கடி சிரிக்கணுமல்லோ.. மறந்திடப் போறன்”
“இப்போ என்ன ஜோக் சொன்னனான்?” என்று பொய் கோபத்தில் கேட்டாள் பிரணிதா.
“இஞ்ச பாருங்கடி… நிரோஷனைக் கட்டி இவள் கஷ்டப்படுறாளாம். இதுதான் இந்த வருஷத்தோட பெஸ்ட்டு அவார்ட் ஜோக். அந்த அப்பாவி பாவம்… இவளக் கட்டிட்டு அந்தப் பெடியன் படுற பாடிருக்கே… ஆட்டி வைக்கிறாள்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,
அந்த நேரம் பார்த்து பிரணிதாவின் கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்தான் நிரோஷன். ‘இவன் வேற நேரம் காலம் தெரியாம எடுக்கிறானே’ என மனதுக்குள் திட்டினாள்.
அவன் ஏதோ கேட்கவும் கடுகடுவென எரிந்து விழுந்துவிட்டு வைத்ததும் “ஹி..ஹி..” என அசடு வழிந்தாள்.
பிரின்ஸி அவளுக்கு பழிப்பு காட்டினாள்.
இவர்களின் சண்டையை ரசித்தபடி இருந்த நிறைமதியையும் அவள் செய்து கொண்டிருந்த கேக்கையும் பார்த்து,
“நிறை, இப்போ அவசரமாக் குடுக்க வேண்டிய ஓர்டரா இது?” என்று கேட்டாள் சாரங்கா.
“இல்லடி, நாளை மத்தியானம் குடுக்க வேணும்”
“அப்போ, இத அப்படியே தூக்கி வச்சிட்டு வா, நாம புதுசா திறந்திருக்க அந்த ரெஸ்ரோரன்ட் போவம்”
“இல்லடி… நான் வீட்ட..” என அவள் ஏதோ சொல்ல வரவும்,
“இவளிட்ட யாரு பெர்மிஷன் கேட்டது. வரச்சொன்னால் வாயை மூடிட்டு வரவேணும். சொல்லிப் போட்டன்” என்றாள் பிரணிதா.
“ஓகேடி, ஆனா என்ர ஸ்கூட்டிய அன்பு கொஞ்ச முன்னதான் வந்து வாங்கிட்டு போனான். அதுதான்…”
“ஏன் என்கூட பைக்கில் வரமாட்டிங்களோ? கொன்வன்ரில் படிக்கேக்க புஷ்பைக்கில் கால் தேயத்தேய ஏத்திப் போனது யாராம்?” என்று படபடத்தாள் பிரணிதா.
“சரி சரி வாறன்டி, கொஞ்சம் வாயை மூடு… திரும்ப புலம்பத் தொடங்காதே” என்றவள், அங்கிருந்த கப் கேக் சிலதை எடுத்து பார்ஷல் பண்ணி வைத்துவிட்டு
“பிரணி… நீ லக்ஸ்மி குட்டியையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். கனநாள் ஆச்சு அவளைப் பார்த்து. போகும் போது கடைக்கு வந்து போ.. குட்டிக்கு கேக் எடுத்து வச்சிருக்கன். கொண்டு போய் குடுத்திடு” என்றாள்.
“இவளிடம் இருந்து இந்தக் கேக் லக்ஸ்மிதா குட்டிக்கு போய் சேரணுமே” என்று சாரங்கா சிரிக்கவும், “போடி” என்று திட்டினாள் பிரணிதா.
கடையை உதவிக்கு நின்ற பெண்ணிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பாங்கிகள் நால்வரும் புறப்பட்டனர்.
இவர்கள் நால்வரும் முதலாம் வகுப்பு முதல் சாதாரண தரம் வரை ஒன்றாகப் படித்தவர்கள். உயர்தரத்தில் கலைப்பிரிவில் சாரங்கா தவிர்த்து மற்ற மூவரும் இணைந்தனர். சாரங்கா பெற்றோரின் ஆசைக்கேற்ப விஞ்ஞானப் பிரிவில் இணைந்தாள். ஆனாலும் தங்கள் நட்பை விடாது தொடர்ந்தனர். நிறைமதியும் சாரங்காவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகினர். சாரங்கா கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு கற்கச் சென்றாள். நிறைமதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றாள். பிரணிதாவோ ஓரளவு பெறுபேறைப் பெற்றதும் படிப்புக்கு அத்தோடு முழுக்குப் போட்டுவிட்டு தான் காதலித்தவனை எத்தனையோ போராட்டங்களோடு திருமணம் செய்தாள். அவன் பெற்றோர் சமாதானம் ஆனபோதும் அவளது பெற்றோர் முறுக்கிக் கொண்டு நின்றனர். அதுவும் லக்ஸ்மிதா என்ற அழகுக் குழந்தையைப் பெற்றதும் அவளது பெற்றோர் கோபம் மறந்து அவர்களை ஏற்றுக் கொண்டார்கள். அக் குழந்தைக்கும் மூன்று வயதாகப் போகின்றது.
பிரின்ஸி தையல், மேக்கப் என்று கற்றதோடு அதனையும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வீட்டோடு இருந்துவிட்டாள். இதோ வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தயாராகியும்விட்டாள். அவர்களின் சொந்தத்திலேயே பெற்றோர் திருமணம் பேசி முடிவாகி வைத்துள்ளனர்.
நிறைமதி பல்கலையில் படிக்கும் போதே கேக் தயாரிப்பு, ஐசிங் அலங்காரம் போன்றவற்றையும் கற்றுத் தேர்ந்தாள்.
நிறைமதியின் பெற்றோர் சங்கரன் உமையாளுக்கு நான்கு பிள்ளைகள். நிறைமதியே வீட்டின் மூத்த வாரிசு. அடுத்து பவித்ராவும் அதற்கு அடுத்து இரட்டை பிள்ளைகளான கவினயாவும் அன்பரசனும் உள்ளனர்.
சங்கரன் கொஞ்சமல்ல அதிகமே குடிவாழ்விலும் நண்பர்களுடன் சீட்டாடுவதிலும் நாட்டமுடையவர். நான்கு பிள்ளைகளைப் பெற்றுவிட்ட போதும் அதைப் பற்றி எந்தவிதக் கவலையும் இன்றி தன் இஷ்டத்துக்கே வாழ்வார். சுயநலமாக வாழும் நபர் என்றுகூடக் குறிப்பிடலாம். உமையாளும் எத்தனையோ தடவை அவருடன் சண்டை போட்டும் பார்த்தார், கெஞ்சிக் கேட்டும் பார்த்தார். அவர் தன்னை மாற்றிக் கொள்ளவேயில்லை. வெறுத்துப் போனவர் அவருடன் எதுவுமே பேசாமல் விட்டு விட்டார். தன் தமையன் மாதவனின் உதவியுடன் பிள்ளைகளை வளர்த்தார். மாதவனும் சுயநலம் இல்லாமலேயே தன் தங்கை குடும்பத்தை கவனித்தார். ஆனால், அவரது மனைவியும் அப்படியே இருந்துவிட வேணுமா?
அவர் நிறைமதியின் சிறுவயதிலேயே திட்டமிட்டுள்ளார். அவரது மூத்த மகன் குகனுக்கு அவளைக் கல்யாணம் கட்டி வைத்துவிட வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. வளர வளர அவன் எல்லாவிதமான கெட்ட பழக்கங்களையும் பழகிவிட்டான். ஒரு கட்டத்தில் அவன் கட்டுக்கடங்காமல் பெண்கள் சகவாசம் என போகவும் இவனை இப்படியே விட்டால் சரிவராது என எண்ணியவர், நிறைமதி பல்கலையில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது உடனேயே கல்யாணத்தை செய்ய அவசரப்படுத்தினார்.
உமையாளும் தன் அண்ணனுக்கு தான் பட்ட நன்றிக்கடனுக்காக உடனேயே அவளை அவசரமாக வரவழைத்து கல்யாணம் செய்ய வற்புறுத்தினார். அதற்கு அவள் மறுத்த போது வீட்டில் பெரும் பிரளயமே நடைபெற்றது. குகனின் நடத்தை குறித்து தாய்க்கு விளக்க முற்பட்ட போதும் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் வயதுக் கோளாறில் அப்படி நடக்கின்றான். கல்யாணம் என்ற ஒன்று நடந்தால் அவன் மாறி விடுவான் என்று ஒற்றை பிடியிலேயே நின்றார் உமையாள். அவர் எப்படியாவது தன் தமையனுக்கு நன்றிக் கடன் செலுத்தி முடிக்க இந்தக் கல்யாணம் தான் சரியான வழி என்ற உறுதியுடன் இருந்தார். பிடிவாதமாக அவள் நிற்கவே அவளுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார். அவருடன் சேர்ந்து அவளது மூத்த தங்கை பவித்ராவும் அவளை மதிக்காது, அவளுடன் எந்தவித பேச்சு வார்த்தையும் வைக்காமல் விட்டுவிட்டாள்.
நிறைமதி திருமணத்திற்கு மறுத்ததை அறிந்த மாதவனின் மனைவியோ அவர்களின் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் செய்யக்கூடாது என தடுத்துவிட்டார். மாதவன் நோயினால் அவதிப்பட்டதால் தோட்டமும் அதன்மூலம் வரும் வருமானமும் அவர் மனைவியிடம் சென்று விட்டதால் அவராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
இதனால் நிறைமதியால் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது. ஏனெனில் தங்குவதற்கு அறை வாடகை, சாப்பாட்டு செலவு என்று எதற்கும் வழியற்று போனதால் அவள் படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் மனம் தளராமல் தன் படிப்பு பாதியில் நின்றாலும் தன் சகோதரர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று எண்ணியவள், தான் கற்று வைத்த கேக் தயாரிப்பை தொழிலாக மாற்றிக் கொண்டாள். ஆரம்பத்தில் வீட்டில் இருந்து செய்து கொடுக்க ஆரம்பித்தவள், படிப்படியாக அதிகளவில் நுகர்வோரை கவர்ந்து இப்போது சிறிய கடையொன்றை வாடகைக்கு எடுத்து நடத்தியும் வருகிறாள்.
தன் வீட்டிற்குத் தேவையானதை அன்று முதல் அவள் செய்து வந்தாலும் தாயும் தங்கையும் அவளை இப்போதும் மதித்து சந்தோஷமாக ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. சங்கரனோ எப்போதும் போல எதிலுமே தனக்கு சம்மந்தம் இல்லாதது போலவே நடந்துகொண்டார். அந்தத் திருமணம் நடந்திருந்தால் கூட யாருக்கோ வைத்த விருந்து போல கலந்துவிட்டு போயிருப்பார். ஆனால், இவர்களுக்கு நேர் எதிர்மாறாக கவினயாவும் அன்பரசனும் அவள் மீது அதிகளவில் பாசத்தை காட்டினர். அவர்களின் அன்பே அவளை இந்நிமிடம் வரை உந்துகின்றது.
தோழிகள் நால்வரும் ஹைபிரிட் ரெஸ்ரோரன்டை வந்தடைந்தனர். கீழ் தளம் முழுவதும் ஆட்களால் நிரம்பி வழியவும் இரண்டாவது தளத்திற்குச் சென்று அங்கே காலியாகக் கிடந்த ஒரு மேசையைக் கண்டு அதில் போய் அமர்ந்தனர்.
அந்த உமையாளுக்கு என்ன பைத்தியமா அண்ணனுக்கு நன்றி கடன் செலுத்த பொன்னோடு வாழ்க்கை தான் கிடைச்சுதா?? செந்தூரன் இருக்கிற அதே ரெஸ்டாரண்டுக்கு தான் இப்ப நிறையமதியும் அவ பிரண்ட்ஸும் வந்து இருக்காங்களா?
ரெண்டு பேரோட முதல் சந்திப்பு எப்படி அமையப்போகிறது??
இப்படியும் ஒரு சில உறவுகள்…
முதல் சந்திப்பு 🥰🥰🥰❤️
Inga than namma hero va meet panuvalo 🥰🥰🤩🤩 waiting for next ud sis superb
🥰🥰🥰🥰 லவ்வினால் ஹப்பிதான்….