
Another fav epi of mine🦋🌷 படிச்சிட்டு உங்களுக்கும் பிடிச்சதான்னு சொல்லுங்க🫶✨
அத்தியாயம் 43
மகனின் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்திருந்த ஒரு நாளில், அன்னையர் இருவரும் அபிராமியின் தலைக்கு மறைந்து இலகுவாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
நிரஞ்சனா கேட்டாள். “சனா, ஏதாவது குட் நியூஸ் சொன்னாளா அனு?”
அனு ஒரு நொடி திகைப்பாகப் பார்த்தாள். பின் பார்வையை மாற்றிக்கொண்டு, “இல்லை ரஞ்சி. நான் அதைப் பத்தி அவக்கிட்ட எதுவும் கேட்கலயே…”
“அப்புறமா கேளு. நானும் அவ வீட்டுக்கு வரும்போது கேட்டுப் பார்க்கறேன்.”
“சரி!” என்ற அனுவிற்கு மனம் ஒரு நிலையிலில்லை.
நிரஞ்சனா சென்றதும் கணவனைத் தேடினாள் அவள். இங்கே அர்ஜூன் தொழிலில் காலூன்றும் வரை அப்பாவின் உதவியும் அவனுக்கு தேவையாக இருப்பதால் காலையில் இருவருமே ஒன்றாகவே சென்றுவிடுகிறார்கள். அதிக வேலை நாட்கள் தவிர, ஏனைய நாட்களில் பாஸ்கரன் மதியமே வந்துவிடுவதுண்டு.
இப்போது மனதின் அலைப்புறுதலில் நேரத்தைப் பார்க்காமல் அனு அவன் அலைப்பேசிக்கு அழைக்க, “இங்கே கொஞ்சம் வேலை இருக்குது அனு. ஈவ்னிங் வர லேட்டாகலாம். மதியம் எனக்காக வெய்ட் பண்ணாம சாப்பிடு!” என்றிட,
“ஓ! சரிங்க.” என்றவளின் குரலின் டெசிபல் குறைந்திருந்ததை அவளின் காதல் கணவன் கண்டுகொண்டான்.
பெங்களூர் வந்து நிரஞ்சனா, அபிராமியுடன் பழக ஆரம்பித்த பிறகு, சில இரவுகளில் சஞ்சுவைத் தேடுவதைத் தவிர்த்து அனுவின் மனநிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. மகனின் திருமணத்திற்கு பிறகு சந்தனாவின் அண்மையும் சேர்ந்து முற்றிலும் குணமாகிவிட்டாள் என்றே நம்பினான் பாஸ்கரன். ஆனால் இன்று மீண்டும் பழைய நிலையில் சோர்வுடன் ஒலிக்கும் இந்தக் குரல் அவனை யோசிக்க வைத்தது.
இப்படியான நேரங்களில் உடனடியாக தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென சஞ்சய் சொல்லியிருப்பதால், மனைவியைப் பற்றிய கவலையை மகனிடம் சொல்லிவிட்டான் பாஸ்கரன்.
“சரின்னு சொன்ன ஒரு வார்த்தைலயே அவங்க வாய்ஸ் வச்சு கண்டுபிடிக்கறீங்களே, எப்டிப்பா?” என்று ஆர்வமாகக் கேட்ட சஞ்சுவிற்கு, அனுதினமும் சிறு சிறு விடயங்களிலும் அன்னை-தந்தையின் காதல் பிரமிப்பூட்டவே செய்கிறது.
முன்பொரு முறை சந்தனா இது குறித்து சொன்னபோது, அவளுடைய அத்தை, மாமாவின் மீதான பிரியத்தில் மிகைப்படுத்தி சொல்வதாக தான் நினைத்தான். ஆனால் இப்போது தினமும் இவனே நேரில் பார்க்கிறானே! அப்பா ஒரு நாளில் எத்தனை ‘அனு’ சொல்கிறார் எனக் கணக்கெடுத்தால் தலை சுற்றிப் போகும்.
மகனின் கேள்வியில், மின்னும் நட்சத்திரத்திற்கு ஈடாக வெளிப்பட்டது பாஸ்கரனின் வெட்கச் சிரிப்பு! குரலழைப்பில் இருந்ததால் அப்பாவின் அந்த அழகிய மென்சிரிப்பைத் தவறவிட்டான் சஞ்சய்.
ஏறக்குறைய முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்பு அனுவைப் புகைப்படத்தில் பார்த்ததிலிருந்து, காலையில் சந்தன முல்லைத் தொடுத்துக் கொண்டிருந்த அவள் விரல்களின் வாசம் பிடித்து வந்தது வரை அவர்களின் காதலின் அதிஉன்னதத்தைக் கண்மூடி அனுபவித்தான் பாஸ்கரன்.
“அப்பா?”
“ம்ம்!”
“ஆர் யூ கான் இன் லவ் மோட்?”
“ஹாஹா… யப்!” என்றவன், “அந்தப் பக்கம் சாரலடிக்குதா சஞ்சு?” எனக் கேட்க,
இதென்ன சம்பந்தமில்லா கேள்வி என்று நினைத்தப் போதும், “ஆமாப்பா! அமேஸிங் கிளைமேட்.” என்றான் மகன்.
“ஹ்ம்ம்! அவ அன்பை விட சிரிப்பை விட, கோபத்தை விட, காதலை விட, அழகான மனசை விட… இந்த கிளைமேட் எனக்கு அவ்ளோ அமேஸிங்கா தெரியல சஞ்சு! அதனாலதான் அவளோட ஒரு வார்த்தைல அவ மனநிலையை என்னால சொல்ல முடியுது.” என்று சொல்லி, மேலும் மகனை பிரமிக்க வைத்தான்.
“வாவ்! யூ ஆர் அ கிரேட் அண்ட் பர்ஃபெக்ட் லவிங் ஹஸ்பண்ட்’ப்பா! அம்மா இஸ் தி லக்கி வன்.”
“ஹஹ்ஹஹ… உன் தம்பி உங்கம்மா என்கிட்ட ஏமாந்துட்டா’ன்னு சொல்லுவான்.”
இவனும் அர்ஜூன் சொன்னதைக் கேட்டிருக்கிறானே! புன்னகை அரும்பியது. “யாஹ் ஐ க்னோ! சரி, முதல்ல உங்க வைஃப என்னன்னு கேட்டுட்டு வர்றேன்.” என்று அழைப்பைத் துண்டித்தவனுக்கு, அவனின் மாரியாத்தாவின் நினைவு! அப்பாவின் பெருங்காதலைப் போல் தானும் மனைவியைக் காதலிக்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது.
இந்த மூன்று மாத பந்தத்தில் அவளை அங்கம் அங்கமாக அறிந்திருக்கிறான். அவளின் அண்மையில் எழும் உள்ளார்ந்த உணர்ச்சிகளும் உற்சாக பீறிடல்களும் இவனை அடியோடு மறைக் கழன்று போகச் செய்திருக்கின்றன. அவளின் ஒத்துழைப்பில் தென்றலைப் போல் மென்மையாக ஸ்பரிசித்து, கட்டிலுக்கு நன்மை செய்திருக்கிறான்.
ஆனால் இன்னமும் அவளின் அமைதிக்கும் ஆத்திரத்திற்கும் அர்த்தம் படித்திருக்கவில்லை. அவள் பார்வைகளுக்கும் குரல்களுக்கும் அகராதி எழுதியிருக்கவில்லை. காதலிக்க வேண்டும்; துளித்துளியாய்க் காதலிக்க வேண்டும்.
இப்படியாக அப்பாவைப் பார்த்து காதல் செய்ய கற்றுக்கொண்டான் மகன்.
********
டிரோன் செக்யூரிட்டி அழைத்ததில் இந்த நேரத்தில் யாரெனத் திரையில் பார்த்தாள் அனு. ரிமோட்டின் உதவியால் சஞ்சுவின் கார் உள் நுழைவதை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு எழுந்து வந்தாள்.
“என்னடா இந்த நேரத்துல? இன்னும் நான் லன்ச்க்கு கூட ஒண்ணும் ப்ரிப்பேர் பண்ணவே இல்லயே?”
உள்ளே நுழைந்தவாறு சொன்னான். “ஒரு கம்பெனிக்கு ஈ-வாலெட் சிப்ஸ்’க்கு காஸ்ட் கொடேஷன் போட்டு வச்சிருந்த டேட்டா கார்ட்’ஐ வச்சிட்டு போயிட்டேன்.”
“எதுக்கு அலைச்சல்? எங்கே வச்சிருக்கன்னு சொல்லி யாரையாவது அனுப்பிருந்தா கொடுத்துவிட்டிருப்பேன்ல?”
“ஏன் நான் இப்போ வந்ததுல என்ன பிரச்சினை உனக்கு?”
“உங்கப்பா எதுவும் சொன்னாரோ?”
‘எப்டி?!’ தனக்குள் எழுந்த ஆச்சரியத்தை அழகாக மறைத்துக்கொண்டான். “எதைப் பத்தி?”
“சும்மா கேட்டேன். காலைல ரஞ்சியைப் பார்த்தியா? என்ன சாப்பிட்ட?” அம்மா பேச்சை மாற்றுகிறாராம். சிரிப்பு வந்தது இவனுக்கு.
“எப்டியும் நான் அந்தப் பக்கம் போனதும் ரெண்டு பேரும் ஒண்ணு கூடிருப்பீங்க! அப்புறம் என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்கற?”
“ம்க்கும்! என்னவோ எடுக்கணும்ன்னு சொல்லிட்டு மொபைலை நோண்டிட்டிருந்தா என்ன அர்த்தம்?”
“நீ வீட்டுக்கு வந்த பிள்ளைக்கு காஃபி கீஃபி போட்டு கொடுப்ப’ன்னு நினைக்கறேன்னு அர்த்தம்!”
“நீ ரொம்ப அமைதின்னு ரஞ்சி சொல்றா! ஆனா எனக்கு அப்டி தெரியல.” என்றபடி அடுக்களைக்கு சென்ற அம்மாவைப் பின்தொடர்ந்தான்.
அவள் சொல்வதைப் போல் அனுவிடம்தான் அவனின் சிறுபிள்ளைத்தனங்கள் வெளிப்படுகிறது. அதிலும் அவளுடன் அர்ஜூன் இருந்துவிட்டால் முறைத்துக்கொண்டே தான் திரிகிறான். ஆரம்பத்தில் அர்ஜூனே கூட இவன் செயல்களைக் கண்டு தலையிலடித்தாலும், நாள் செல்ல செல்ல இது அம்மாவிற்கான அவனுடைய ஏக்கத் திணறல் என்று புரிந்து அண்ணனுக்கு வழிவிட்டிருக்கிறான்.
சஞ்சய் எப்படி பேச்சைத் துவங்குவது எனத் தெரியாமல், ஏதோ கேட்க வேண்டுமென, “அம்மா என்னைப் பத்தி வேறென்ன சொன்னாங்க?” எனக் கேட்க,
“உன்னைப் பத்தி இல்லை. சனாவைப் பத்தி கேட்டா!” என்று சொல்லிவிட்டு, சட்டென்று எழுந்த பதற்றத்தில் சர்க்கரை டப்பாவைத் தவறவிட, அது கீழே விழாமல் பிடித்துக்கொண்ட மகன் இதில்தான் விஷயமிருக்கிறது எனக் கண்டுகொண்டான்.
“அவளைப் பத்தி என்ன கேட்டாங்க?”
டிகாஷனை இறக்கியவளிடம் மௌனம்!
இவனும் மௌனமாக அம்மாவின் முகத்தினை ஆராய்ந்தான். அவள் காபியை இரு குவளைகளில் ஊற்றி வைக்க, இவன் டிரேயில் வைத்து எடுத்துக்கொண்டு பால்கனியில் போய் அமர்ந்தான். பெங்களூரின் சாரல்கள் காபி வாசத்தின் மேல் ஏகாந்தக் காதல் கொண்டது.
அனு கிச்சனில் சுவரோரமாகச் சாய்ந்து கண்மூடி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றாள். பின் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் மகனருகே போய் அமர்ந்தாள்.
சஞ்சய் அம்மாவின் முகம் பார்த்தான். செயற்கை புன்னகை! “அம்மா என்ன கேட்டாங்க?”
காபியில் கவனம் வைத்தபடி சாதாரணம் போல் பதிலளித்தாள். “வேறென்ன? புள்ளைக்கு கல்யாணத்தைப் பண்ணியாச்சு. அடுத்து பேரன், பேத்தியைப் பார்க்க ஆசையிருக்கும்ல?”
புன்சிரிப்பு இவனிடம்! “ம்ம்! அதை நீயே உன் மருமவக் கிட்ட கேளேன்?”
“………”
“என்னம்மா?”
“……..”
“ம்மா?”
“அதைக் கேட்கறதுக்கு எனக்கென்ன தகுதியிருக்குது சஞ்சு?”
அதிர்ந்துவிட்டான். “அம்மா!”
“இப்டித்தானே உங்கப் பாட்டியும் நினைச்சிருப்பாங்க? அவங்க ஆசையை நான் உடனே நிறைவேத்தலன்னு தான் என்னை அப்டி பேசினாங்க. அப்போவும் நான் என் வேலை முக்கியமா போச்சுன்னுதானே சரகஸிக்கு போனேன்? இப்போ நான் எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு சனா கிட்ட கேட்பேன்? நிர்மாவுக்கு நான் கேட்டது தெரிஞ்சா என்னைக் காரித் துப்ப மாட்டாளா? சின்னத்தை என்னை இளக்காரமா பேச மாட்டாங்களா?”
“ஷட் அப்!!!” என காபி அதிர பேய்க்கத்தலாக கத்தினான் இவன்.
அதிராமல் அமர்ந்திருந்தாள் அவள்.
“முதல்ல உன்னை யாரும் பேச நான் விடமாட்டேன். காட் இட்! சந்தனாவும் உன்னை அப்டி நினைக்கமாட்டாம்மா! என்னை விட உனக்குத்தானே அவளைத் தெரியும்? ஏன்மா இப்டிலாம் யோசிக்கற?” ஆக்ரோஷமாக ஆரம்பித்து ஆதங்கத்துடன் முடித்தான்.
“இல்லை சஞ்சு. இப்போ யாரும் பேசலைன்னாலும் என் மனசாட்சிக்கு தெரியுமே? இப்டித்தானே அத்தையும் (மங்கை) எதிர்பார்த்திருப்பாங்கன்னு தோணுதே?”
அவள் அம்மாவில் ஆரம்பித்து மாமியார், நாத்தனார், இன்னும் பல சுற்றங்கள் என அத்தனை பேரும் அவள் மனதில் விதைத்திருந்தது குற்றவுணர்வினை மட்டும்தானே? குழந்தையின் அருமை புரியாதவள்; அதற்கு கிஞ்சித்தும் தகுதியில்லாதவள் என்றெல்லாம் அவர்கள் பேசிய பேச்சுக்களை அத்தனை சுலபமாக மறந்துவிட முடியுமா? அந்த நினைவுகளெல்லாம் இன்னமும் நிறுத்தாமல் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறதே! அதனாலல்லவா அவள் மனம் இத்தனை காலமாகியும் அமைதியுற மறுக்கிறது!
‘அம்மா! அம்மா!’ ஆற்றாமையாக இருந்தது இவனுக்கு.
“அம்மா, அவங்க பேசினதுக்கெல்லாம் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கற நீ இப்போ நான் சொல்றதைக் கேட்பியா?”
“?!”
“முதல்ல ஒண்ணைப் புரிஞ்சுக்கோ! நீ பேரக் குழந்தையைப் பார்க்க ஆசைப்படறது நியாயமான, ரொம்பவே இயல்பான ஒரு விஷயம். அதை நீ என்கிட்ட, சந்தனா கிட்ட சொல்லவும் செய்யலாம். இப்போ வந்து அவ, ‘எனக்கு கெரியர்தான் முக்கியம். இப்போ குழந்தைப் பெத்துக்கல’ன்னு சொன்னா நீயோ, அம்மாவோ என்னப் பண்ணுவீங்க?”
“என்ன பண்ணுவோம்?”
“சந்தனாவை ஃபோர்ஸ் பண்ணுவியா? இல்லை, என்னை அசிங்கமா பேசுவியா?”
“ச்சச்ச! என்னடா?”
“தட்’ஸ் மை மாம்! உனக்கு ஆசையிருந்தாலும் நீ அவளை ஃபோர்ஸ் பண்ணமாட்ட! அவளுக்கு கைட் பண்ணுவ! அவ மனசு மாறுற வரை வெய்ட் பண்ணுவ! இது வெறும் ஜெனரேஷன் கேப் ப்ராப்ளம்’ம்மா! அந்தக் காலத்துல அவங்களோட பிரிஸ்பெக்டிவ்ல பேசிருக்காங்க. இதுல நீ கில்ட்டியா ஃபீல் பண்ண ஒண்ணுமே இல்லை! அப்டியே அவ பிடிவாதம் பிடிச்ச பொண்ணா இருந்தாலும், நீயோ, அம்மாவோ எங்க ரெண்டு பேர் மனசையும் நோகடிச்சு, ஹார்ஷா பேசி அவளை வேறொரு முடிவெடுக்கற நிலைமைக்கு தள்ளமாட்டீங்க!”
அனுவிற்கு கரகரவென கண்ணீர் வழிந்தது.
அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு சொன்னான். “ஃபர்தர்மோர் உன்னோட குற்றவுணர்வு தேவையில்லாதது. உன்னை விட வேற யாருக்கும் குழந்தையோட அருமை புரிஞ்சிடாதும்மா! ஏன்னா ‘ஒருத்தன் போயிட்டானா? சரி பரவாயில்ல. அதான் அர்ஜூன் இருக்கானேன்னு நினைச்சு நீ என்னை, என் நினைவுகளை சுலபமா எரிச்சிடல! வெறும் ஏழெட்டு வருஷத்து அன்பைக் கொட்டின உனக்காக இந்த முப்பது வயசுலயும் என்னை ஏங்கித் தவிக்க வச்சிருக்கம்மா! அப்போ நீ காட்டின அன்புக்கு எவ்ளோ வீரியம் இருக்கணும்?
அஃப்கோர்ஸ்! உன் வயித்துல நான் பிறக்கலை. உன் கருவறைல நீ எனக்கு இடம் தரலை. ஆனா உன் அடிவயித்து சூட்டை நான் எட்டு வருஷமா உணர்ந்திருக்கேன்மா! நாலு வயசுல இருந்து அதெல்லாம் இன்னமும் ஞாபகம் இருக்குது.”
யோசித்துப் பார்த்தால் தான் அனுபவித்தது எட்டு வருடங்களுக்கும் குறைவுதான்! சரியாக சொல்ல வேண்டுமென்றால் அர்ஜூன் பிறந்த பிறகுதான் தாத்தா தன்னிடம் மூர்க்கமாக நடந்துகொண்டிருந்தார். இவனுக்கு வலி புரிய வேண்டுமெனவும், இவன் இடமும் தகுதியும் இவனுக்கு தெரிய வேண்டுமெனவும் மட்டுமே அவர் காத்திருந்து அங்ஙனம் வெறித்தனமாக நடந்திருக்கிறார்.
ஆனால் என் அம்மா? எத்தனை காலமாக இந்த குற்றவுணர்வினைத் தூக்கி சுமந்து கொண்டிருக்கிறார்?
அனுவிற்கு தன் குற்றவுணர்வினைக் கழுவித் தள்ளும் மகன் தேவத்தூதனைப் போல் தெரிந்தான். அவன் கூற்றில் மனசெல்லாம் மாலை நேரக் காற்றில் மிதக்கும் இறகைப் போல் மாறியது.
“நீ உன் மனசாட்சிக்கு நேர்மையாவே இரும்மா! ஆனா அது கிட்ட சொல்லு! என் குழந்தைக்காக நான் என் வாழ்நாள் மொத்தத்தையும் எழுதி கொடுத்திருக்கேன்னு சொல்லு! நீ ஒரு அற்புதமான அம்மான்னு சொல்லு. எல்லாரும் என்னைத் திட்டினப்போ, அருவருப்பா பார்த்தப்போ என்னைக் கொண்டாடினவ நீதான்மா! உன் வயித்துல உனக்கே உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்தப்புறம் கூட நீ என்னை வேற யாரோவா நினைக்கல. உன் பிரியமும் பிரார்த்தனையும் எனக்கே எனக்கா இருந்தது. அப்டிப்பட்ட உன்னோட அன்பும் அரவணைப்பும் என் குழந்தைக்கு கிடைக்கற வரம்! ஆசிர்வாதம்! ஆர் யூ கெட்மீ?”
“ம்ம்!” என்றவளின் உதடுகள் துடித்தன. கண்ணீருடன் சிரித்தாள்.
“யூ ஆர் அ ப்யூர் ஸோல்ம்மா! இனி எப்பவும் உனக்கு குற்றவுணர்வு வரவே கூடாது. புரியுதா?”
“ம்ம்! புரியுது.”
“ஒண்ணு சொல்லவா?”
“ம்ம்!”
“நீ அன்னிக்கு கேட்ட மாதிரி என்னை உன் வயித்துல பெத்துக்கலன்னு எனக்கு உன் மேல கோபம் இருந்ததுதான்.”
“சஞ்சு!”
“ஆனா இப்போ ஐ அப்ரிஷியேட் யூ’ம்மா! அந்தக் காலத்துலயே அத்தனைப் பேச்சுக்களுக்கு மத்தியில என்னவொரு போல்ட் டிசிஷன் எடுத்துருக்க நீ’ன்னு ஆச்சரியமா இருக்குது. அதுக்கப்புறமும் அவங்க கேட்ட பேரனைக் கொடுத்தாச்சுன்னு உன் வேலையைப் பார்த்துட்டு போகாம, எனக்காக, என் சந்தோஷத்துக்காக எவ்ளோ தூரம் அவங்களோட சண்டை பிடிச்சிருக்கே!”
“சஞ்சு!” என்று எழுந்து மகனின் காலடியில் அமர்ந்து அவன் மடியினைக் கட்டிக்கொண்டாள். பாஸ்கரனுக்கு பிறகு அவளைப் புரிந்துகொண்ட ஒரு ஜீவனாகத் தெரிந்தான் அவள் மகன்.
“இந்த மாரியாத்தா ஒருமுறை கேட்டா, ‘பொண்ணுங்க குழந்தைக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி கொடுக்கணுமா? அந்த இடத்துல அவங்க கெரியர் முக்கியம்ன்னு சொன்னா அவங்களை அரகண்ட்ன்னு சொல்லுவீங்களான்னு! நீ உன் கெரியர்க்காக எவ்ளோ போராடிருக்கன்னு சொன்னா! அப்போவே உன் திறமையால ரொம்ப சீக்கிரத்துல மேனேஜர் போஸ்ட் அச்சீவ் செஞ்சுட்டியாம்! நீ அரகண்ட் இல்லம்மா; வைப்ரண்ட்! ஆஸ் அ மாம் ஆர் மேனேஜர் யூ ஆர் அப்சொல்யூட்லி வைப்ரண்ட்!”
கண்மூடி சேய் மடி சாய்ந்திருந்தவளின் மனம் மெல்ல மெல்ல பரிபூரண அமைதியில் லயித்தது.
அவளின் காதருகே குனிந்து வார்த்தைகளுக்கு வலிக்காமல் மென்மையாகச் சொன்னான். “என் தங்க அம்மா’ம்மா நீ!”
விலுக்கென நிமிர்ந்து கால் நிமிடத்தை அதிர்ச்சிக்கு தந்த அனுவிற்கு அழுகையினூடே விக்கியது. “இன்னும் இதை நீ ஞாபகம் வச்சிருக்கியா சஞ்சு?”
“ம்ம்! இப்போ சொல்லு! உன்னை விட வேற யாரால பெஸ்ட்டா என் குழந்தையை வளர்த்துட முடியும்?”
அப்போதெல்லாம், ‘என் தங்க பிள்ளை’ என்று அனு கொஞ்சுவதிலிருந்துதான் இவனும் அந்த வார்த்தையைக் கற்றிருந்தான். ஆனால் அவளைப் போல் அடிக்கடி சொல்வதில்லை. அவனின் அதீத மகிழ்ச்சியின் போது அல்லது தாத்தாவுடன் சண்டையிட்டு வரும்போது, அவள் மடியில் விழுந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு சொல்லுவான். அது இன்னமும் அவனின் நினைவு குறிப்பிலிருந்து அழிந்து போகவில்லையா?
அவன் காணாமல் போன பின்னர், தினமும் அவள் மனம் தன் குழந்தையின் பிரத்யேக அழைப்பிற்காக ஏங்கி சாகும் ஒரு தும்பியாய் அலைந்திருக்கிறது. இதோ சொல்லிவிட்டானே! இனி தன் மூச்சு நின்றால் கூட மகிழ்ச்சி எனும் நிலைக்கு வந்துவிட்டாள் அனு.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
சற்றுநேரம் பொறுத்து கேட்டான். “உன் மேல இருந்த கோபம் போய், இந்த ஞானோதயம் எப்போ வந்ததுன்னு கேட்க மாட்டியாம்மா?”
“ம்ம்?”
“பேபி பத்தி யோசிக்கும்போது தான் தோணுச்சு.”
கேள்வியாகப் பார்த்தாள்.
அவன் தன் மனைவியின் அலுவல் குறித்தோ, குழந்தைப் பற்றியோ எதையும் திட்டமிட்டிருக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு தான் அவள் பதவி உயர்வுக்காக கடும் உழைப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறாளென அவள் பேச்சிலிருந்து அறிந்து கொண்டிருந்தான். ஆனால் சந்தனா இந்த மாதம் எடுக்க வேண்டிய விடுமுறையை இருபது நாட்கள் தாண்டியும் இன்னும் எடுக்காததிலிருந்தே இவனுக்கு யோசனைதான்!
குழந்தை என்று வந்துவிட்டால் உடல் உபாதையால் அவளின் உழைப்பும் காலமும் வீணாகிப் போகுமோ? தான் சற்று பொறுத்திருந்திருக்கலாமோ? என்றெல்லாம் சிந்திக்கும் போதுதான் தோன்றியது.
அம்மாவும் இப்படித்தானே நினைத்திருப்பார்! தற்போது எல்லாவிதத்திலும் தான் தன் மனைவிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்கின்ற முனைப்புதானே அன்று அப்பாவுக்கும் இருந்திருக்கும்!
அனு மெதுவாக அவன் தோள் தொட்டாள்.
“சந்தனா அவ வேலையை எவ்ளோ நேசிக்கறான்னு தெரிஞ்சப்போ!” என்றவன் சில நொடி அமைதிக்கு பின் சொன்னான். “இந்த மன்த் மாரியாத்தா குட் நியூஸ் சொன்னாலும் சொல்லுவாம்மா!”
ஒரு கணம் இன்பமாய்த் திகைத்து நின்ற அனு, பரபரவென அலைபேசியில் நாட்காட்டியைத் தடவி எடுத்துப் பார்த்தாள். ஆமாம்! இந்த மாதம் சந்தனா விடுமுறை எடுத்துக்கொண்டு சோர்ந்து படுக்கவில்லை.
“சஞ்சு!” என்றவளின் விழிகள் மகிழ்ச்சியில் விரிந்தது.
நெஞ்சம் சந்தோஷத்தில் திக்குமுக்காட, ஒரு மனம் இந்த சந்தோஷ கோலாகலத்திற்கெல்லாம் நீ தகுதியானவளா எனக் கேட்க,
சற்றுமுன் மகன் பேசியதிலிருந்து, ‘ஆமாம்! என்னை விட என் பேத்தியை வரவேற்க யார் தகுதியானவர்களாக இருந்துவிட முடியும்?’ என்று நிமிர்வுடன் திருப்பிக் கொடுத்துவிட்டு கர்வமாய்க் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
அனுவிடம் மாற்றம் துவங்கிவிட்டது. இனி அவளின் மிச்ச வாழ்க்கை ஆனந்த விரல்களால் மீட்டப்படட்டும்!
“இனி நீ இதைப் பத்தி நினைச்சு ஃபீல் பண்ணா எனக்கு கோபம் வரும்மா! அப்புறம் என் பொண்ணுக்கு உன்னை அழுமூஞ்சி அனு பாட்டின்னு சொல்லிக் கொடுப்பேன்.” விரல் நீட்டி எச்சரித்தான்.
‘பாட்டி’ என்றதும் அனு முகம் மலர்ந்து சிரித்தாள்.
‘எங்க அனு அத்தையோட ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கும் அக்னி.’ என்றோ மனைவி சொன்னது நினைவிற்கு வந்தது.
காணக் கிடைக்காத பூவைப் போலிருந்த அந்தப் புன்னகையை நீரில் மிதக்கும் விழிகளுடன் பார்த்திருந்தான் சஞ்சய் பாஸ்கர்!
என் உயிரில் இருந்து
பிரிந்த பகுதி இங்கே…
நான் இழந்த சிரிப்பும்
இதய துடிப்பும் மீண்டும் இங்கே…
இசைக்கும்🌿🌼…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
24
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Very nice eagerly waiting for final episode 😊
Thank u 🦋🎈
அனுவின் மீதான பாஸ்கரின் புரிதலான காதல் எப்பொழுதுமே வியப்பான ஒன்று தான்.
பார்வைகளின் அர்த்தங்கள், குரல்களின் அகராதி ✨✨💫
பாஸ்கரிடமிருந்து இன்னும் படிப்பினை பெற வேண்டும் அக்னி.
“பெங்களூரின் சாரல்கள் குழம்பி வாசத்தின் மீது ஏகாந்த காதல் கொண்டன”. 😍😍
“அற்புதமான தங்க அம்மா”
“Arrogant illa vibrant”
என் தங்க அம்மா மா நீ 😍😍
“இனி அனுவின் மிச்ச வாழ்க்கை ஆனந்த விரல்களால் மீட்டப்படும்”
சஞ்சுவின் ஏக்கங்கள் நீர்த்துப்போன விதம் அருமை. விளக்கங்களால் விளங்க வைத்து விலக செய்ய இயலாத ஒன்றல்லவா அவை.
அனுவின் மனநிலையை முற்றிலும் மாற்றும் வல்லமை படைத்த இரு ஜீவன்கள் கணவனாகவும், மகனாகவும்.
//விளக்கங்களால் விளங்க செய்து விலக செய்ய இயலாத ஒன்று// உண்மை🍂🍁 மிகுந்த அன்பும் நன்றியும் சிஸ் 🍃🌷
வரிக்கு வரி உவமையா கவித்துவமா எழுதினா எப்படி. கவிநயமிக்க நாவல் அப்படின்னு இதை சொல்லணும். தங்க அம்மாவை சொல்லிட்டான். எல்லாருடைய பக்க நியாயங்களை அழகியலோட சொல்லியிருக்கீங்க.
ஏது மின்னும் நட்சத்திரத்திற்கு ஈடாக வா😜😜😜 ஹீரோவுக்கு எழுதலாம். ஹீரோ அப்பாவோட காதலுக்கு எழுதியிருக்கிறது பயங்கரம். இன்னைக்கு பாஸ்கரோட காதல் தான் மனசை நிரப்பிடுச்சு. பேத்தி பிறக்குற டைம்ல பாஸ்கருக்கு அமேஸிங்கா. பட் ஐ லவ்டு இட் 🥰🥰🥰
உங்கள் வார்த்தைகள் மனதை நிறைக்கின்றன🍃🌷 பாஸ்கரின் காதல் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 🪶🪻 மிக்க நன்றி சிஸ் 💗🎈