Loading

அத்தியாயம் 39

கடந்த ஒரு வாரமாகவே அம்மா ஏதோ சிந்தனையிலேயே இருப்பதாகத் தோன்றியது சஞ்சய்க்கு!

இங்கே வந்த பின்பு அவரின் மருத்துவ அறிக்கைகளைப் பார்த்து, எதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்கிறாரென அப்பாவிடம் பேசி அம்மாவின் உடல்நிலையை முழுமையாக அறிந்து கொண்டான்.

“ஆங்க்ஸைட்டிக்காக தான் டேப்லெட்ஸ்ன்னா இனி அதை நிறுத்திடலாம்ப்பா.”

சற்றே சிந்தித்த பாஸ்கரன், “அப்டி உடனே நிறுத்தறது நல்லதில்லயே சஞ்சு? உன்னைப் பத்தின கவலைல தான் ‘ஆங்க்ஸைட்டி அட்டாக்’ன்னு தூக்கத்துக்கு மெடிசின்ஸோட தியானம், யோகான்னு செய்ய சொன்னாங்க. இப்போ நீ இருக்க தான்… ஆனாலும்…” என்று தயங்கினான்.

“பரவாயில்ல, மொத்தமா நிறுத்தலைன்னாலும் கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தலாம்.”

“ம்ம்… ஆனா இன்னும் சில நேரம் அவ ஏதோ யோசனைலயே இருக்கும்போது…”

“அப்டி இருக்கும்போது உடனே எனக்கு சொல்லுங்க, நைட் டைமா இருந்தாலும்! ஆனா டேப்லெட்ஸ் வேணாம்ப்பா!” என்று முடித்துக் கொண்டதில் அதற்குமேல் பாஸ்கரன் எதுவும் சொல்லிவிட முடியவில்லை.

இப்போது ஒரு வாரமாக அம்மாவை கவனித்துக்கொண்டே இருந்தவன், இன்று கேட்டுவிட முடிவு செய்து மதிய உணவின் போது ஆரம்பித்தான். “ஓவர் திங்க்கிங் உடம்புக்காகாதும்மா.”

“ஹான்?” என நிமிர்ந்தாள் அனு. “காலைல ரஞ்சியைப் பார்த்துட்டு போனியா?”

“அவன் என்ன சொல்றான்? நீ என்ன சம்பந்தமில்லாம கேட்டுட்டிருக்க?” என பாஸ்கரன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கேட்க,

“என்ன கேட்டான்? என்ன சஞ்சு?” என விழித்தாள்.

“நான்தான் உன்‌ பக்கத்துலயே இருக்கேனே… இன்னும் என்னம்மா கவலை உனக்கு?”

“ச்சச்ச! ஐ’ம் கம்ப்ளீட்லி ஆல்ரைட் சஞ்சு.” என்றவள் உணவில் கவனமானாள்.

அப்பாவும் மகனும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டனர்.

“நான் அப்புறமா என்னன்னு கேட்கறேன் சஞ்சு.” என்று பாஸ்கரன் சொல்ல,

“ஏன் அதை உங்க வைஃப் என்கிட்ட சொல்ல மாட்டாங்களாமா?” எனக் கேட்டவன், தட்டிலேயே கைக்கழுவிக் கொண்டு எழுந்து போய்விட்டான்.

அவனின் திடீர் செயலில் பாஸ்கரன் ஒரு நிமிடம் விதிர்த்துப் போனான். அனுவைப் பார்க்க, அவள் மகன் போன திசையைப் பார்த்தவாறு சின்னப் புன்னகையுடன் சொன்னாள். “சஞ்சுவுக்கு எவ்ளோ கோவம் வருது பாருங்க பாஸ்கர்!”

அவள் முகத்தில் மகனின் கோபத்திற்கான வருத்தமோ, திகைப்போ இல்லை. கனிவுடன் பார்த்திருந்தாள்.

உணவினை வேறொரு தட்டில் எடுத்து வைத்துக்கொண்டே சொன்னாள். “இப்போ நான் போய் அவனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு, என்னத்த நினைச்சு குழம்பிட்டிருந்தேன்னு சொல்லணும். அப்போதான் ஐயாவுக்கு கோபம் போகும்.”

அவள் நிதானமாக மேலேறுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான் பாஸ்கரன். இவர்கள் இருவரின் உணர்வும் உறவும் எப்படிப்பட்டதென்ற சிந்தனையே அவனிடம்! உறவுகளின் நீட்சியில், உன்னதமான உள்ளன்போடு ஜீவிப்பவர்களின் எண்ண அலைகள் எப்படியாயினும் எங்கே இருந்தாலும் தொடர்பு கொண்டு விடுமாமே! உண்மைதானா? ஆனால் இவர்களின் அன்பில் அவ்வெண்ண அலைகள் மிக நீண்ட கால அசதியில் அறுந்து போகாமல் இருப்பதில்தான் ஆச்சரியமே!

எட்டு வயதில் பார்த்த குழந்தை இன்று இத்தனை பெரிய ஆண்மகனாக வளர்ந்து நிற்பது கண்டு அனுவிற்கு அவனிடம் பழகுவதில் எந்த தயக்கமும் இல்லை. அவனும் கூட அவள் மடியில் ஆண்டாண்டு காலம் துஞ்சியவனைப் போல் எத்தனை இயல்பாக, இலகுவாக பேசுகிறான்!

பாஸ்கரனால் சஞ்சுவைத் தன் வித்தென்று ஏக மனதுடன், ஆத்ம ஆனந்தத்துடன் ஏற்க முடிகிறதுதான்! ஆனால் இந்த நீண்ட கால இடைவெளியால், அவனை ஒருமையில் அழைத்தாலும் ஒரு புது நண்பனைப் போலவே பழக முடிகிறது. அர்ஜூனிடம் போல் சஞ்சுவிடம் ஸ்வாதீனமாகப் பேச முடிவதில்லை; கடிந்துகொள்ள முடிவதில்லை. அவன் எதுவும் தவறாகப் புரிந்து கொண்டுவிடுவானோ என்ற தயக்கம் வந்து தடைப் போடுகிறது. அவனும் கூட தன்னிடம் அப்படித்தான் பழகுவதாகத் தோன்றுகிறது. தங்களின் பந்தம் பலப்பட இன்னும் காலம் எடுக்கும் என்று புரிகிறது.

ஆனால் இந்த அம்மா, மகன் மட்டும் எப்படியப்பா சடுதியில் ஒன்று கூடிவிட்டார்கள் என்ற வியப்புதான் விஸ்தாரமாக வியாபித்திருந்தது பாஸ்கரனிடம்!

அனுவைப் பற்றி இவனுக்கு தெரியும். சதா ‘சஞ்சு’ கானம் பாடிக் கொண்டிருந்தவள்; அவன் ஞாபகத்தில் தான் அவள் நாளின் முதலும் முடிவும்! ஆனால் சஞ்சு? அவன் வயதிற்கு எவ்வித சங்கோஜமும் இல்லாமல் எப்படி அவனால் அனுவுடன் இத்துணை பிணைப்புடன் ஒன்ற முடிகிறது?

அவன் அவனின் தாய் அனுவை அனுதினமும் உபாசித்தவன் என்பது பாஸ்கரனுக்கு தெரியாதே! மூடிய கண்ணாடி ஜன்னலின் பின்னே வழியும் மழையைத் தொட முயலும் குழந்தை, உள்ளிருந்து அதன் குளிர்ச்சியை மட்டும் உணர்வதைப் போல், தன் அம்மாவின் அன்பினை அனுபவிக்கவியலாமல், அவள் தந்துவிட்டு சென்ற ஞாபகங்களோடு மட்டும் பல நாட்களைத் தாண்டி வந்தவன் இந்த சஞ்சய் என்பதும் பாஸ்கரனுக்கு தெரியாதே!

நெடுமூச்சொன்றால் தன் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் பாஸ்கரன்.

அனு கதவைத் தட்டிவிட்டு, மகனின் ‘கம் இன்!’ கேட்டதும் உள்ளே நுழைந்தாள். உணவு தட்டை மேசையில் வைத்துவிட்டு அவனருகே செல்ல, மடிக்கணினி திரையில் இருந்து விலகி உயர்ந்தன அவன் விழிகள்!

அதில் வந்ததை மறந்து அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள். “உனக்கு அப்டியே உங்கப்பா கண்ணு சஞ்சு!”

மென்மையான புன்சிரிப்பொன்று அவனிடத்தில்! “இந்த மாரியாத்தாவும் முதல்ல வந்தப்போ என் கண்ணைத் தான் உத்து உத்து பார்த்துட்டிருந்தா!”

அவனின் விளிப்பிலும் விழிகளிலும் சிரிப்பிலும் சொற்களிலும் பட்டுத் தெறித்தக் காதலை, உள்ளே விரவும் ஆனந்தத்துடன் பார்த்த அனு அவனருகே அமர்ந்தபடி கேட்டாள். “உனக்கு நிஜமாவே சனாவைப் பிடிச்சிருக்குதாப்பா? நல்லவேளை நான் கூட அன்னிக்கு எனக்காக ஏதோ கம்பல்ஷன்ல சரின்னு சொல்றியோ நினைச்சு கவலைப்பட்டேன். அவளை அப்டி கூப்பிடறதைக் கூட ஞாபகம் வச்சிருக்க!”

அவனிடத்தில் சற்று நேரம் மௌனம்!

தன் சிந்தனையிலிருந்து வெளிவந்தவள் அதனைக் கவனித்து அவன் தோள் தொட, “நீ செஞ்சது தப்பில்லையாம்மா?” எனக் கேட்டான் மகன்.

“சனா விஷயத்தைத் தானே சொல்ற?”

“ம்ம்!”

பெருமூச்சு அவளிடம்!

“சனா விஷயம் மட்டுமில்லாம, நான் உன்னை என்‌ வயித்துல பெத்துக்கலைன்னும் உனக்கு என் மேல கோவம் இருக்கலாம்.”

“இதெல்லாம் ஆல்ரெடி பேசியாச்சு. ஐ ஹாவ் நோ மோர் டிஷ்யூ!”

“அழமாட்டேண்டா!” என்றவள், “அப்போ எனக்கு விபரம் போதாது சஞ்சு.” என,

“இப்போ மட்டும்?” என நக்கலடித்தான்.

“அந்தளவுக்கு இல்லை.” என்றவளின்‌ மனம் நிர்மலாவின் திருமணத்தில் ஆரம்பித்து, இவள் கருத்தரிப்பு மையத்தை அணுகியது வரை கேட்ட பல பல பேச்சுக்களை ஒரே நிமிடத்தில் சுற்றி வந்தது. நெருக்கித் தள்ளிய அவர்களின் கடின வார்த்தைகளை எதிர்கொள்ளுமளவிற்கு, தனக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் சிறிதளவேனும் இருந்திருக்கலாம் என சுயபச்சாதாபம் கொண்டாள்.

மாமியாரின் சிறு சொல்லுக்கு முணுக்கென்று கண்களில் நீர் வைக்கும் அல்லது எடுத்தெறிந்து பேசுமளவிற்கு, திருமண பந்தத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மனமுதிர்ச்சியற்ற மருமகள்கள்தான் நம்மில் அநேகம் என்பதே நிதர்சனம்! பிறந்த வீட்டு, புகுந்த வீட்டு சுற்றங்களுக்கிடையே இழுபடும் அவளின் மனக்கலக்கங்கள், குழப்பங்கள், அவற்றை கையாளத் தெரியாமல் மாமியார்தான் வில்லி என்றளவிலேயே நின்றுவிடுகிற புரிதல்! பின்னர் ஒவ்வொருவரையும் புரிந்து, கலக்கம் நீங்கி, அனுசரித்தோ அகம்பாவித்தோ நகரும் வாழ்க்கை!

அனுவும் இதற்கு விதிவிலக்கல்ல! அந்த காலகட்டத்தில் கணினியில் வெற்றிக் கண்டவளுக்கு கண்ணில் பார்க்கும் மனிதர்களிடம் விபரம் போதாதுதான்! ஆனால் அவள் தன் வேலையில் கவனம் செலுத்த வேண்டுமென வீட்டின் உள் அரசியலில் தன் இரு‌ மாமியார்களிடம் அனைத்தையும் விட்டுகொடுத்துதான் போயிருந்தாள்; அவர்களை அனுசரித்துதான் நடந்துகொண்டிருந்தாள். சஞ்சய் விடயத்தைத் தவிர அவள் எதிலும் அவர்களை மீறியதில்லை.

தற்போது அதையெல்லாம் சொல்லி மகனிடம் நற்சான்றிதழ் பெற விரும்பாதவள், அவனிடம் தான் செய்தது தவறென்றே ஒப்புக்கொண்டாள்.

“அப்போ நான் சரகஸிக்கு போனதுக்கு எந்த நியாயமும் சொல்ல விரும்பல. அதை வீட்டுல எல்லார்க்கிட்டேயும் சொல்லாம போனதுதான் நான் செஞ்ச தப்புன்னு அவங்க உன்னை கடைசி வரை ஏத்துக்காதப்போ புரிஞ்சது.”

அழமாட்டேன் என்றவள் இப்போதும் இவளை அழுத்திய பேச்சுக்களை நினைத்தும் பிஞ்சுக் குழந்தை சஞ்சுவை நினைத்தும் உயிர் துடிப்பது, அவள் விரல்களை அழுத்தி மூடி அடக்குவதிலிருந்து புரிந்தது.

மகனைத் தொலைத்த பின்னரும் சுற்றியிருந்த சொந்தங்களெல்லாம் பெரிய பாவம் செய்தவள் என்ற ரீதியில் இவளைக் கொன்று தின்றதும், செய்த பாவத்திற்கு அவளுக்கு அவளே கொடுத்து கொண்ட தண்டனையாக, அவள் கட்டுக்கடங்காத பேரார்வம் கொண்டிருந்த வேலையை உதறியதும் ஞாபகம் வந்தது.

இமைத் துடிக்கக் கேட்டாள். “அம்மாவை மன்னிச்சிடு சஞ்சு!”

“ம்மா! அடிச்சிடுவேன்ம்மா!” என்றவன், அவள் விரல்களை ஒவ்வொன்றாக பிரித்துவிட்டு நீவினான்.

“ஆரம்பத்துல இந்தக் குடும்பத்துல உன்னைத்தான் மூத்த வாரிசா முன்னே நிறுத்தணும்ன்ற ஆவலும் ஆசையுமா இருப்பேன். இப்பவும்தான்! என் ஆசைன்றதை விட அதுதானே நியாயமான நடைமுறை? ஆனா அப்போ அர்ஜூன் பிறந்தப்புறம் அவங்களோட நடவடிக்கைகள் பார்த்து எங்கே உன்னை ஒதுக்கிடுவாங்களோன்ற பயம்தான் முன்னாடி நின்னது.”

அர்ஜூன் பிறந்த பிறகு, பல நேரங்களில் சஞ்சுவைத் தக்க வைத்துக்கொள்ள முடியாதோ என்ற அனுவின் ஆழமான உள்ளுணர்வு, அவளை அவனிடம் அதீதமான, சமநிலையற்ற, வெறித்தனமானப் பிரியத்துடன் பிணைத்து வைக்கவில்லையா?

உன்னுடைய மிகைப்படுத்திய அன்பு குழந்தையைப் பாதிக்கக்கூடும் என்று பாஸ்கரன் கூட ஒரு முறை அவளைக் கடிந்து கொண்டானே! ஆனால் அனைத்தையும் தாண்டி அவளின் அந்த உள்ளுணர்வு ஜெயித்தேவிட்டதென்பது இப்போதும் நெஞ்சத்தை இறுக்கி பிடித்து, வெடுக்கென்ற வலியைத் தந்தது. அதையும் மகனிடம் சொல்லவில்லை அவள்.

“அந்த பயம் என்னை, என் மனசை அரிச்சு எடுத்துடுச்சு சஞ்சு! உங்க பாட்டி வீட்டுல இருக்கற வரைக்கும் உன் தாத்தாவை நினைச்சு! சென்னை போனப்புறம் உன் அத்தையை நினைச்சு! அவ எல்லா விஷயத்துலயும் எல்லா இடத்திலேயும் அவங்கண்ணனுக்கு ஒரு பையன்ற மாதிரிதான் பேசுவா!

ப்ச்! போறா போ’ன்னு அட்லீஸ்ட் அவக்கிட்டயாவது நான் விட்டு கொடுத்து பேசிருக்கலாம்தான். ஆனா என் மனசு? அதை நானே கன்ட்ரோல் பண்ண முடியாத ஸ்டேஜ்ல இருந்தேன் சஞ்சு! அப்போ உன் பேரைச் சொல்லிக்கிட்டு என்னையே சுத்தி வந்தா அந்த குழந்தை!” என்று சந்தனாவின் நினைவில் இவள் முகத்தில் பிச்சிப்பூவை நுகர்ந்தாற் போன்ற விகசிப்பு!

“ஒரு பொண்ணு மனசைக் கலைக்கறளவுக்கு பைத்தியமாகிடலடா நானு! இன்ஃபாக்ட் என் பிள்ளைதான் உசத்தின்னு காட்டிக்க நிர்மலா கிட்ட சண்டை போடுவேனே தவிர, சனாக்கிட்ட நேரடியா, ‘நீ சஞ்சுவைக் கல்யாணம் செஞ்சுக்கறியா?’ன்னு கேட்டதேயில்லை. இந்த விஷயத்துல என் ஆசையை அவ மேல திணிக்கணும்ன்னு நினைச்சு அவளை ஃபோர்ஸ் பண்ணதுமில்லை.”

“ஆனா அவ உன் வார்த்தையைத் பிடிச்சிட்டுதானே மனசுல எதிர்காலமே இல்லாத ஒரு விஷயத்தை நினைச்சிட்டு இருந்திருக்கா?”

“ம்ம்! அதுவே எனக்கு லேட்டா தான் புரிஞ்சது.”

சந்தனா மூலமாக ஏற்கனவே தெரிந்ததையே தான் அனுவும் சொன்னாள். அனுவும் பாஸ்கரனும் சின்னவளுக்கு அறிவுரை சொன்னது, அவளும் பூம்பூம் மாடாகத் தலையாட்டியது என அனைத்தும் சொன்னாள்.

“இப்போ மூணு வருஷத்துக்கு முன்னாடி தான் அர்ஜூன், ‘அவ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கா! இது நல்லதுக்கில்லைம்மா’ன்னு என்னை வார்ன் பண்ணான். அப்புறம் மறுபடியும் அவளைக் கூப்பிட்டு, உங்கம்மா கிட்ட அத்தை புத்தியில்லாம ஏதோ பேசிட்டேன். நாம வேற நல்ல மாப்பிள்ளை பார்ப்போம்ன்னு சொல்ல, ‘நீங்க சொன்னதுக்காக இல்லை. எனக்கே நான் சஞ்சு பொண்டாட்டின்னு மனசுல ஃபிக்ஸ் ஆகிடுச்சு. மாத்திக்க முடியாது அத்தை’ன்னு சொல்லிட்டா!

உங்கப்பாவும் அர்ஜூனும் கூட எவ்வளவோ பேசிப் பார்த்தாங்க. நடக்கறது நடக்கட்டும். ஐ’ம் ஹேப்பி வித் திஸ் லைஃப்’ன்னு சொல்லிட்டு போயிட்டா! அப்புறம் நான்தான் மனசு கேட்காம அவளுக்கு பிடிச்ச பையனா அவங்க செட் ஆர் அவங்க சீனியர் செட்ல பார்க்க சொன்னேன். அர்ஜூனும்ம்…” தன் போக்கில் பேசிக்கொண்டே வந்தவள் மகனின் முகமாற்றத்தைக் கவனிக்க தவறியிருக்க, இப்போது திருதிருப்பாய் அவன் முகம் பார்த்தாள்.

உண்மையில் அர்ஜூன் அவன் கல்லூரி தோழனுடைய அண்ணனைச் சந்தனாவிற்கு பார்க்க முடிவு செய்து அனுவிடமும் கேட்டு அனுமதி வாங்கியிருந்தான். ஒருமுறை அர்ஜூனுடைய பிறந்தநாளின் போது வந்த ‘அவனை’ சந்தனா பேச்சுவாக்கில் இவனிடம் நல்லவிதமாக சொல்லியிருந்தாள். அர்ஜூனுக்கும் அந்த அண்ணனின் தோற்றம், தொழில், பண்பு என அனைத்தும் திருப்திகரம்! அதனால்தான் அவனைத் தேர்ந்தெடுத்தான்.

அவனிடம் பேசி அவனுக்கும் சந்தனாவைப் பிடித்திருந்தால், ஒரு நல்ல நாளில் அவர்கள் வீட்டிலும் பேசிவிட்டு அடுத்தகட்ட நகர்விற்கு போகலாம் என்று நினைத்திருக்கையில் சஞ்சுவின் வருகை! அதில் ‘அந்த அண்ணனிடம்’ பேசுவதைச் சிறிது தாமதித்தான் அர்ஜூன்.

சஞ்சய், “எவன் அவன்?” என ஒற்றைப் புருவத்தை உயர்த்தி பிணக்குடன் கேட்க,

“அஹ்… சஞ்சு! இப்போ எதுக்கு அதெல்லாம்? நாங்க சும்மா பார்த்துதான் வச்சோம். சனா கிட்ட கூட சொல்லலை.” என்று பூசிமெழுகினாள் அவனின் அம்மா.

“ம்ம்! அம்மாவும் பையனுமா சேர்ந்து ஹாஸ்பிடல் டிராமா பண்ணி அவளை ஒத்துக்க வச்சிருப்பீங்க! அதானே?”

“சொல்லிட்டானா?” என இளைய மகனை நினைத்து தலையைச் சொறிந்தாள்.

“அவளுக்கு பிடிச்சவன்னா யாரு அவன்?”

தன்னை மிரட்டுபவனைக் கண்டு இவளும் குரலுயர்த்தினாள். “டேய்! என்ன சும்மா அதையே கேட்கற? இப்போ சனா மனசு குழம்பிப் போய் கிடக்குது. உங்கப்பா வேற அவளைத் தொந்தரவு பண்ண வேணாம்ன்னு சொல்லிருக்கார். இப்போ உனக்கும் பிடிச்சிருக்குதுன்னு தெரிஞ்சப்புறம் அவளை எப்டி கன்வீன்ஸ் பண்றதுன்னு தெரியலை. புள்ள மனசை நாம இஷ்டத்துக்கு அலைக்கழிக்கறதும் எனக்கு பிடிக்கல!”

“இதான் உன் கவலையாம்மா?”

“ம்ம்… ம்ம்! ஆல்மோஸ்ட்…”

“என்னதிது சின்னப் பிள்ளை மிட்டாய் செலக்ட் பண்ற மாதிரி இழுத்துக்கிட்டு?”

அவனின் எரிச்சலில் வேகமாக சொன்னாள். “அதில்லை சஞ்சு. உனக்கும் எனக்கும் பிடிச்சா போதுமா? ரஞ்சிக்கு, பாட்டிக்கு பிடிக்கணுமே… நேத்து வந்த அனு அவங்க சொந்தத்துல பார்க்கறான்னு நினைச்சிட மாட்டாங்களா? அவங்க உனக்கு வேற இடத்துல பார்க்க நினைச்சிருந்தா…”

இதைத்தான் ஒரு வாரமாக மனதில் போட்டு குழம்பிக் கொண்டிருந்தாள். இப்போது மகனின் மனம் தெரிந்ததில் மகிழ்ச்சி!

ஆனால்…

அவன், “அதுக்கு நானென்ன பண்றது?” என விட்டேற்றியாகக் கேட்க, அவன் அம்மா மலங்க மலங்க விழித்தாள்.

“என்னடா இப்டி சொல்ற? உனக்கும் சனாவைப் பிடிச்சிருக்குதே…”

இவன் ஒரு வார்த்தை சொன்னால் அவர்கள் மறுக்கமாட்டர்கள்தானே? இவளுக்கும் கவலையில்லை.

“அதுக்கு? உன் பையனுக்கு வேணும்னா நீதான் போய்க் கேட்கணும்!” என்றவன் எழுந்து போய் அவள் எடுத்து வந்த உணவினை ஒரு கைப் பார்த்தான்.

சின்ன வயதில் கூட அவனுக்கு இந்த பொறாமையுணர்வு வந்ததில்லை. ஆனால் இப்போது ஒவ்வொன்றிற்கும் அம்மா அர்ஜூனுக்கு செய்வது போலவே தனக்கும் செய்யவேண்டும் என்ற பிடிவாதம் வருகிறது. வாய்விட்டு சொல்லமாட்டான். ஆனால் அனு மட்டும் உணர்ந்து கொள்வதைப் போல் இருக்கும் அவன் நடவடிக்கைகள்!

இப்படித்தான் சென்ற வாரம் வந்திருந்த அர்ஜூன் அம்மாவின் மடியில் படுத்தபடியே தூங்கிப் போயிருந்தான். சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த அனுவும் அனிச்சையாய் அவன் தலைக் கோதியபடி இருந்தாள்.

வெளியே போய்விட்டு வீட்டினுள் வந்தவன் கண்ணில் இக்காட்சி தென்பட, “ஃப்ரெஷ் ஆகிட்டு வா சஞ்சு, இன்னிக்கு ரஞ்சிக்கிட்ட கேட்டு இந்த ஊர் ஸ்நாக்ஸ் செஞ்சி பார்த்தேன். சாப்பிட்டு சொல்லுவியாம்!” என்றபோது கூட அம்மாவின் விரல்கள் தம்பியின் சிகைக் கோதுவதை நிறுத்தவில்லை.

அப்போது புகைந்த வயிற்றை சற்று பொறுமைக் காக்க சொல்லிவிட்டு, மறுநாள் மாலையில் விரைவிலேயே வந்து அனு நீள்விரிக்கையில் அமரும் வரைக் காத்திருந்து, பின்னர் போய் அவள் மடியில் தலை வைத்து கண்மூடிக் கொண்டான்.

அவள் என்னவென அவன் முகம் பார்க்க, ஒற்றை விழி திறந்து, “தலைவலிக்குது.” என்றுவிட்டு மீண்டும் கண்மூடிக் கொண்டவன், மில்லிமீட்டர் அளவில் லேசாக தலை சாய்த்துக் காண்பித்தான். அவன் முகத்தையே அளந்து கொண்டிருந்த அனுவிற்கு, தாமாகவே இடக்கை உயர்ந்து அவன் சிகை வருட, துளிர்த்த நீரை இமைகளுக்குள்ளேயே சிறை வைத்துக்கொண்டான்.

மகனின் சிறு பிள்ளை குணம் புரிந்ததில் அவளின் இதழ்கள் மெல்ல விரிந்தது.

தன் கருமுட்டையில் உதித்த நிர்பந்தத்திற்காக, கடமைக்காக, பொறுப்பிற்காக அவன் தங்களை அவனுடன் அழைத்து வந்திருக்கவில்லை என்று புரிந்தாலும், அவனிடம் அவளுக்கிணையான இந்த பேரன்பையும் பெரும் நேசத்தையும் உரிமையையும் கூட எதிர்பார்த்திருக்கவில்லைதான்! ஒருவகையில் மனம் நிம்மதியுற, விழிகளில் சந்தோஷ ஈரம்!

சிறிதுநேரத்தில் அங்கு வந்த பாஸ்கரன் இருவரையும் கேள்வியாய்ப் பார்க்க, “தலைவலியாம்!” என்றாள்.

“சூடா காஃபி போட்டு கொடேன்.”

விழி திறக்காமல் அம்மாவிற்கும் முதல், “நீங்களே போட்டு எடுத்துட்டு வாங்க டாட்!” என்று அப்பாவிற்கும் வேலை ஏவினான் மைந்தன்.

இத்தனை வருடங்கள் விட்டு வைத்த அவள் அன்பினை சொட்டு விடாமல் அனுபவித்துவிட நினைக்கின்றானோ?! எதையும் வெகுளித்தனமாக அணுகும் அனு, மகன் சார்ந்தவற்றை மட்டும் சற்றே ஆழ்ந்து உள்வாங்கினாள். இனியொருமுறை அவன் விடயத்தில் தவறிழைத்து விடக்கூடாதே!

அதனாலேயே தன்னுடனான அவனின் இந்தப் பாசப்பிணைப்பால் நிரஞ்சனா காயப்பட்டு விடாதபடி ஜாக்கிரதையாக நடந்துகொண்டாள். மூவரும் இருக்கும் நேரங்களில் அவளுடன் கூட்டு வைத்துக்கொண்டு தன்னை இயல்பாக எதிர்கொள்ளும் அனுவை அவனும் புரிந்து வைத்திருந்தான். இருவரும் சொல்லிக் கொள்ளாத ஒப்பந்தம் போல் புரிதலுடன் நிரஞ்சனாவுடனான அன்பைப் பேணி பாதுகாத்தனர்.

இப்போதும் அனுவிடம் தன்‌ உரிமையை நிலைநாட்டவும், ‘அர்ஜூனுக்கென்றால் பேசமாட்டாயா?’ என்ற பொறாமையிலுமே அவளைப் பாட்டியிடம் கோர்த்துவிடுகிறான்.

அது புரிந்தாலும் அவர்கள் அனுவை அவள் சொந்தத்தில் பார்க்கிறாளென்று நினைத்துவிடக்கூடாதென, அபிராமியிடம் மகனின் திருமணம் குறித்து பேசுவதற்கு போக அரண்டுபோய் அமர்ந்திருந்தாள் அனுராதா.

இசைக்கும்🩷🪽… 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
21
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. ரஞ்சி சரின்னு சொல்றது இருக்கட்டும். அந்த வன்மா அவியல் எல்லாம் என்ன சொல்வாங்க

    1. Author

      அவிக்கு அவனோட மச்சான் தானே? வன்மா தான் பாவம்😅😅 மிக்க நன்றி சிஸ் 💗🎈

  2. உன்னத அன்பினில் பிணையப்பட்ட உள்ளங்களின் எண்ண அலைவரிசை அறுபடுவதே இல்லை போலும்.

    காணும் காட்சிகள், பேசும் பேச்சுக்கள், செய்யும் செய்கைகள் என்று நொடியும் விடாமல் சஞ்சுவை அணைத்துக்கொண்டே அழைந்துள்ளாள் அனு.

    நினைவிலேயே இதம் தரும் தன் தங்க அம்மாவை தனக்கே தனக்காய் மனதுள் பூட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளான் சஞ்சு.

    “ஒவ்வொருவராக புரிந்து கலக்கம் நீங்கி அனுசரித்தோ அகம்பாவித்தோ நகரும் வாழ்க்கை”. 💫

    வாழ்வின் எதார்த்தம் ஒரு வரியில்.👌🏼✨✨

    கணினி உலகினில் கணினியில் கண் பதித்தவள், மண்ணுலகினில் விழித்திருக்க வேண்டிய விடயங்களில் கவனத்தை குவிக்க மறந்துவிட்டாள்.

    “அதீதமான சமநிலையற்ற வெறித்தனமான பிரியம்” 👏🏼👏🏼

    “நெஞ்சத்தை இறுக்கி பிடித்து வெடுக்கென்ற வலி” 🌿🌿

    “பிச்சி பூவை நுகர்ந்தார் போன்ற விகசிப்பு முகத்தினில்” 🫰🏼🫰🏼

    உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கும் திறன் அபாரம். ✨✨💛

    அத்தியாயங்களை படிக்கும் பொழுது எழும் உணர்வை கூற வார்த்தைகள் இல்லை.🌻

    1. Author

      உங்க ரசனையான கருத்தை ஸ்கிரீன் ஷாட்ல க்ளிக்கிட்டேனாம்🤳 ஒவ்வொரு வரிகளையும் க்வாட் பண்ணி சொல்றது மூலம் என் எழுத்தின் வசீகரம் எனக்கே உணர்த்தப்படுகிறது🍃🌷 மிக்க நன்றி சிஸ் 💗🎈