217 views

“இது யார் வீடு?” எனப் பல்லவனுடன் சேர்ந்து அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு வந்த அனுஷியா சுற்றும் முற்றும் பார்த்தவாறு வினவினாள். 

“வெல்கம் ஹோம்… இது என் வீடு தான்…”எனப் புன்னகையுடன் பதிலளித்தான் பல்லவன்.

அனுஷியா, “அ…அது… உங்க வீட்டுல உங்கள தவிற யாரும் இல்லையா?” எனத் தயக்கமாகக் கேட்கவும், அவளின் கேள்வியின் காரணம் அறிந்தவன், “இருக்காங்க… ஆனா இந்த வீட்டுல இல்ல… வேற வீடு இருக்கு…” என்றான் பல்லவன்.

“என்னை ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து விடுறீங்களா? என் கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு… அதை வெச்சி நான் ஏதாவது வேலைக்கு சேர்ந்து அதுல கிடைக்கிற பணத்துல படிக்கிறேன்…” என அனுஷியா கூறவும் புன்னகைத்த பல்லவன், 

“நான் உங்கள ஏதாவது பண்ணிடுவேன்னு பயப்படுறீங்களா?” எனக் கேட்டவனின் குரலில் லேசாக வருத்தம் எட்டிப் பார்த்தது.

“அச்சோ அப்படி எல்லாம் இல்லைங்க…” என உடனடியாக மறுத்த அனுஷியா, “எ…என்ன இருந்தாலும் கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணும் பையனும் தனியா இருந்தா இந்த உலகம் தப்பா தானே பேசும்… அதுவும் இல்லாம எனக்கு இந்த பேச்சு ஒன்னும் புதுசு இல்ல… பழக்கப்பட்டது… ஆனா நீங்க வாழ வேண்டியவர்… உங்களுக்கு மனைவியா வரப் போறவங்களுக்கு இது பிரச்சினையா அமையலாம்ல…” என்றாள் தயக்கமாக.

பல்லவன், “கல்யாணமா? என் வாழ்க்கைலயா?” எனக் கசந்த புன்னகையுடன் கேட்டவன், “நீங்க மட்டும் நேத்து கொஞ்சம் லேட் ஆகி இருந்தீங்கன்னா நான் இன்னைக்கு உங்க முன்னாடி உயிரோட நிட்டுட்டு இருந்திருக்க மாட்டேன்… வாழ்க்கையே வெறுத்து போய் இருக்கேன்…” எனப் பெருமூச்சு விட்டான்.

அனுஷியா இதற்கு என்ன பதிலளிக்க எனத் தெரியாமல் அமைதியாக இருக்கவும், “என் கதை எதுக்கு? உங்கள படிக்க வைக்கிற மொத்தப் பொறுப்பும் இனிமே என்னோடது… அப்புறம் இன்னொரு விஷயம்… இந்த வீட்டுல தங்க நீங்க எதுக்கும் தயங்க வேண்டியது இல்ல… நான் இங்க இருக்க மாட்டேன்… உங்களுக்கு துணையா நான் ஒருத்தங்கள ஏற்பாடு பண்ணி இருக்கேன்… இன்னும் கொஞ்சம் நேரத்துல அவங்க வந்துடுவாங்க… வீட்டு வேலை எல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க… உங்களுக்கு என்ன வேணும்னாலும் அவங்க கிட்ட தயங்காம கேளுங்க…” எனப் பல்லவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

“அவங்க வந்துட்டாங்க போல…” என்றவாறு பல்லவன் சென்று கதவைத் திறக்கவும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி உள்ளே வந்தார்.

“அனுஷியா… இவங்க தான் ஜெயாக்கா… இனிமே இவங்க உங்க கூட இருந்து உங்களுக்கு தேவையான எல்லாம் பண்ணிக் கொடுப்பாங்க… ஜெயாக்கா… இவங்க அனுஷியா… கொஞ்சம் பயந்த சுபாவம்… பார்த்துக்கோங்க…” என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் பல்லவன்.

“இதை நீங்க சொல்லணுமா தம்பி? எனக்காக எவ்வளவு பண்ணி இருக்கீங்க நீங்க… முதல் தடவை என்னை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைச்சி இருக்கீங்க… என் பொண்ண போல பார்த்துப்பேன்… நீங்க கவலையே படாதீங்க…” என ஜெயா கூறவும் அனுஷியாவின் விழிகள் ஈரமாகின.

தாய்ப் பாசம் இன்றி வளர்ந்தவளுக்கு முதல் முறை தன்னையும் ஒருவர் மகள் போல என்று கூறவும் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“தேங்க்ஸ் மா… அம்மான்னு கூப்பிடலாம்ல…” எனக் கேட்டாள் அனுஷியா தயக்கமாக.

“அதுக்கென்ன கண்ணு… நீ தாராளமா என்னை அம்மான்னு கூப்பிட்டுக்கோ… நீயும் எனக்கு பொண்ணு தான்…” என்றார் ஜெயா.

“சரி அனுஷியா… அப்போ உனக்கு…” என ஏதோ கூற வந்த பல்லவன், “சாரி… அவசரத்துல உனக்குன்னு வந்திடுச்சு…” என்க, “பரவால்ல… நான் உங்கள விட சின்ன பொண்ணு தான்…” என்றாள் அனுஷியா.

லேசாகப் புன்னகைத்த பல்லவன், “உனக்கு காலேஜ் போக தேவையான திங்க்ஸ், இன்னும் என்ன என்ன வேணுமோ அதை எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு கொடு… நான் அப்புறமா வரும் போது எடுத்துட்டு வரேன்…” என்றான்.

முன் பின் அறியாத ஒருவன் தனக்காக இத்தனையும் செய்வதை எண்ணும் போது அனுஷியாவின் மனம் கனத்தது.

“சாரி… உங்களுக்கு ரொம்ப கஷ்டத்தை தரேன்… நான் வேலைக்கு சேர்ந்ததும் உங்க பணத்த எல்லாம் திருப்பி கொடுத்துடுறேன்…” என்றாள் அனுஷியா.

“அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்… இப்போ உன்னோட முழுக் கவனமும் படிப்புல மட்டும் தான் இருக்கணும்…” என்றான் பல்லவன் புன்னகையுடன்.

பின் அனுஷியாவிற்கு தேவையான அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் சில மணி நேரத்திலேயே அனுஷியா கேட்டதற்கும் மேலதிகமாக வாங்கி வந்து குவித்தான்.

அன்று முழுவதும் அங்கே இருந்து அனுஷியாவிற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தவன் ஜெயாவின் கையால் நீண்ட நாட்களுக்கு பின் திருப்தியாக உண்டு விட்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.

***************************************

கிஷோரும் ஹேமாவும் ஹாலில் கோபமாக அமர்ந்து இருக்க, கார் சாவியை ஒரு விரலில் சுற்றியவாறு விசிலடித்தபடி முகத்தில் என்றும் இல்லாத புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்த பல்லவனை இருவரும் சந்தேகமாக நோக்கினர்.

ஆனால் பல்லவனோ அப்படி இருவர் அவன் கருத்திலேயே பதியாதது போல் அவர்களைத் தாண்டி தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டான்.

நேராக குளியலறைக்குள் நுழையப் பார்த்தவன் இடையில் இருந்த கண்ணாடியில் தன்னையே ஒரு தரம் நோட்டம் விட்டான்.

‘என்ன ஒரு நாளும் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்க?’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு, “ஏன்? நான் சந்தோஷமா இருந்தா உனக்கு பொறுக்காதே…” எனக் கடிந்து கொண்டான் பல்லவன்.

‘எதுக்காக அந்தப் பொண்ணுக்காக இவ்வளவும் பண்ணுற? இத்தனைக்கும் அந்தப் பொண்ண உனக்கு நேத்து தான் தெரியும்…’ என்றது மனசாட்சி சந்தேகமாக.

“அது… ஆஹ்… இந்த வீட்டுல இருக்குற பணப் பேய்ங்களுக்கு தண்டத்துக்கும் பணத்தை செலவு பண்ணுறதுக்கு பதிலா ஒரு பொண்ணை படிக்க வைச்சா கொஞ்சம் நன்மையாவது கிடைக்கும்‌…” என்றான் பல்லவன் பதிலுக்கு.

மனசாட்சி மீண்டும் ஏதோ சந்தேகமாகக் கேட்க வர, “என்ன நீ ரொம்ப தான் கேள்வி கேட்குற?” என மனசாட்சியைக் கடிந்து கொண்டான்.

திடீரென அறைக் கதவு தட்டப்படவும் தன்னிலை மீண்ட பல்லவன் சென்று கதவைத் திறக்க, பல்லவனைத் தாண்டி ஓடிச் சென்று கட்டிலில் ஏறி நின்று அவனின் உயரத்துக்கு முறைத்தான் ஐந்து வயதேயான பிரதாப்.

பல்லவனுக்கு இந்த வீட்டில் பிடித்த ஒரே விடயம் இந்த குழந்தை மட்டும் தான். எந்தக் கள்ளங்கபடமும் சிறுவனின் பேச்சில் பல சமயம் தன் கவலைகளை மறந்துள்ளான் பல்லவன். ஆனால் அவனின் தங்கைக்கு அது கூட பொறுக்காது இப்பொழுதெல்லாம் பிரதாப்பை பல்லவனிடம் செல்ல விடுவதில்லை. 

“டேய் வாண்டு… என்னாச்சு? எதுக்காக மாமாவ முறைச்சிட்டு இருக்க?” எனப் புன்னகையுடன் கேட்ட பல்லவனுக்கு அப்போது தெரியவில்லை இந்த சிறுவனின் மனதிலும் அவனின் பெற்றோர்கள் நஞ்சை விதைக்கப் போகிறார்கள் என்று.

“நீங்க வானதி அத்தைய கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” எனக் கேட்டான் பெரிய மனிதன் போல.

அவனின் கேள்வியில் ஒரு நொடி அதிர்ச்சியை வெளிப்படுத்திய பல்லவன், “யாரு கண்ணா உனக்கு இப்படி சொன்னாங்க?” எனக் கேட்டான்.

“அப்பாவும் அம்மாவும் பேசிக்கிட்டாங்க… நான் கேட்டேன்…” என்ற பிரதாப் உடனே கட்டிலை விட்டு இறங்கி வந்து பல்லவனின் காலைக் கட்டிக்கொண்டு, “வானதி அத்தைய கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா… அவங்க ரொம்ப மோசம்… என்னை அடிப்பாங்க…” என்றான் வருத்தமாக.

அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்ட பல்லவன், “என் வாண்டு சொல்லி நான் கேட்காம இருக்க போறேனா? மாமா உங்க வானதி அத்தைய கல்யாணம் பண்ணிக்கல… உனக்காக மாமா ரொம்ப அழகான, அன்பான, உன் கூட டெய்லி விளையாடக் கூடிய ஒரு அத்தைய கூட்டிட்டு வரேன்…” என்றவனுக்கு அவனை அறியாமலே அவனின் மனக் கண்ணில் அனுஷியாவின் முகம் தோன்றி மறைந்தது.

“ஹே… ஜாலி… ஜாலி…” எனப் பிரதாப் உற்சாகமாக பல்லவனின் மடியில் இருந்தபடியே குதிக்க, “ஷ்ஷ்ஷ்…” என அவனின் வாய் மேல் விரல் வைத்து தடுத்த பல்லவன், 

“மாமா உனக்கு விளையாட அத்தைய கூட்டிட்டு வரணும்னா நீ இதைப் பத்தி யார் கிட்டயும் சொல்லக் கூடாது… முக்கியமா உன் அம்மா அப்பா கிட்ட…” என்கவும் வாயை அழுத்தமாக மூடி லாக் போடுவது போல் சைகை காட்டி சிரித்தான் பிரதாப்.

***************************************

நாட்கள் அதன் போக்கில் வேகமாக செல்ல, பல்லவனின் உதவியால் தன் படிப்பை நல்லபடியாக தொடர்ந்தாள் அனுஷியா.

அடிக்கடி வீட்டிற்கு சென்று அனுஷியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்த விரும்பாதவன் இடையிடையே சென்று அவளுக்கு தேவையானவற்றை கேட்டு செய்து கொடுத்தான். 

அனுஷியாவின் மனதிலோ பல்லவன் மீது தனி மரியாதை ஒன்று உருவாகி இருந்தது.

அதே சமயம் சத்யனின் ஆட்களோ அனுஷியாவை யாரின் கவனத்தையும் ஈர்க்காதவாறு ரகசியமாக வலை வீசித் தேடிக் கொண்டிருந்தனர்.

இடைப்பட்ட நாட்களில் ஹேமாவும் ஒவ்வொரு விதமாக பல்லவனின் மனதை மாற்றி தனது நாத்தனாரை அவனுக்கு மணமுடித்து வைக்க திட்டமிட்டும் எதற்குமே பல்லவன் மசியவில்லை.

அன்று மனைவியுடன் தீவிரமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்த கிஷோருக்கு ஒரு அழைப்பு வந்தது.

மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில் ஏகத்துக்கும் அதிர்ந்தான் அவன்.

“என்னாச்சுங்க? ஏதாவது ப்ராப்ளமா?” என்ற ஹேமாவின் கேள்விக்கு, “உன் அண்ணன் எவளுக்கோ தண்டமா செலவு பண்ணிட்டு இருக்கானாம்… போற போக்க பார்த்தா நம்ம ப்ளேன் எதுவும் சக்சஸ் ஆகாது போல…” என்றான் கிஷோர் பல்லைக் கடித்துக் கொண்டு.

ஹேமா, “என்னங்க சொல்றீங்க? யார் அவ?” எனக் கேட்டாள் பதிலுக்கு கோபமாக.

“தெரியல ஹேமா… விசாரிச்சு பார்க்குறேன்…” என்ற கிஷோர் யாருக்கோ அழைத்து ஏதோ கூற, சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு கிடைத்த தகவலில் இருவரின் முகத்திலும் விஷமச் சிரிப்பொன்று உதித்தது.

***************************************

அன்று அனுஷியா கல்லூரியில் இருந்து வரும்போது ஹாலில் தலையை அழுத்தமாகப் பற்றியபடி சோஃபாவில் அமர்ந்து இருந்தான் பல்லவன்.

அதே நேரம் கையில் காஃபியுடன் வந்த ஜெயா, “இந்தாங்க தம்பி சுக்கு காஃபி… தலைவலிக்கு நல்லா இருக்கும்…” என்றவாறு அதனைப் பல்லவனிடம் கொடுக்க, “தேங்க்ஸ் கா…” என அதனை வாங்கியவன் அப்போது தான் வாசலில் நின்றிருந்த அனுஷியாவைக் கவனித்தான்.

“என்னாச்சு அனுஷியா? ஏன் அங்கயே நின்னுட்ட?” எனப் பல்லவன் கேட்கவும் தான் உள்ளே வந்தவள், “இல்ல இப்போ தான் வந்தேன்…” என்றாள்.

காஃபியை ஒரு மிடறு குடித்தவன், “காலேஜ் எல்லாம் எப்படி போகுது? எந்தப் பிரச்சினையும் இல்லல்ல…” எனக் கேட்டான் பல்லவன்.

“இல்லைங்க… எல்லாம் ஓக்கே தான்… இதெல்லாத்துக்கும் சேர்த்து நான் எப்படி உங்களுக்கு கைமாறு பண்ண போறேன்னே தெரியல…” என்றவளின் கண்கள் கலங்கின. 

பல்லவன், “ஹேய்… எதுக்குமா கைமாறு அது இதுன்னு பேசிட்டு இருக்க? நான் இந்த நிமிஷம் உயிரோட இருக்க காரணமே நீ தான்…” எனக் கூறவும் அனுஷியா ஏதோ கூற வர, அதற்குள் அங்கு வந்த ஜெயா, “சரி சரி போதும் ரெண்டு பேரும் பேசினது… வாங்க சாப்பிடலாம்… இன்னைக்கு தம்பிக்கு பிடிச்ச மீன் குழம்பு பண்ணி இருக்கேன்….” என்றார்.

அதனைக் கேட்டதும், “நிஜமாவாக்கா? அப்போ இன்னைக்கு ஒரு வெட்டு தான்… அனு… நீயும் இப்பவே சாப்பிடு… அப்புறம் நான் மிச்சம் வைக்கலன்னு சொல்லக் கூடாது… அக்கா நீங்களும் சாப்பிடுங்க…” என உற்சாகமாக கூறியவன் டைனிங் டேபிளில் முதல் ஆளாக சென்று அமர்ந்தான்.

பல்லவனின் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்டதும் அனுஷியாவின் முகமும் மலர்ந்தது.

மூவரும் சாப்பிட்டுக்கொண்டே பேச, பல்லவனின் முயற்சியால் அனுஷியாவும் தன் கூட்டை விட்டு வெளியே வந்து எந்தத் தயக்கமும் இன்றி பேசத் தொடங்கினாள்.

அனுஷியா தன்னை மறந்து ஜெயாவிடம் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, அவளையே கண் எடுக்காமல் நோக்கினான் பல்லவன்.

இவ்வளவு நேரமும் அவனின் மனதில் இருந்த கவலைகள் அனைத்தையும் அவளின் புன்னகையில் மறக்கத் தொடங்கினான்.

***************************************

மறுநாள் பல்லவன் வீட்டிற்கு கூட செல்லாது தன் ஆஃபீஸிலேயே தீவிர சிந்தனையில் அமர்ந்திருக்க, அவனின் கைப்பேசி விடாமல் ஒலி எழுப்பியது.

சலிப்புடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறு முனையில் ஜெயா, “தம்பி… அனுஷியா பாப்பா இன்னும் வீட்டுக்கு வரல தம்பி… வழமையா காலேஜ் முடிஞ்சதும் இந் நேரம் நேரா வீட்டுக்கு வந்திருப்பா… அப்படியே ஏதாவது வேலையா இருந்தாலும் என் கிட்ட கால் பண்ணி சொல்லிடுவா… ஆனா இன்னைக்கு இம்புட்டு நேரம் ஆகியும் வீட்டுக்கு வரல தம்பி… ஃபோன் வேற ஸ்விட்ச் ஆஃப்னு வருது…” என்றார் பதட்டமாக.

“அக்கா… நீங்க டென்ஷன் ஆகாம இருங்க… நான் அவ எங்கன்னு பார்த்து கூட்டிட்டு வரேன்… நீங்க அவ ஃப்ரெண்ட்ஸ் நம்பர் ஏதாவது இருந்தா எனக்கு அனுப்பி வைங்க…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்த பல்லவன், ‘எங்க போய்ட்ட ஷியா?’ என மனதுக்குள் பதட்டமாகக் கேட்டவன் அனுஷியாவைத் தேடி விரைந்தான்.

அதே நேரம் ஒரு பாழடைந்த வீட்டில் இருட்டறையில் கை கால்கள் எல்லாம் கட்டப்பட்டு வாயைத் துணியால் மூடி உடலில் ஒட்டுத் துணி கூட இன்றி தரையில் மயங்கிக் கிடந்தாள் அனுஷியா. 

அவளின் நெற்றியில் லேசாக இரத்தக்கறை படிந்து இருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்