Loading

மின்னல் 6

காலை வேளை பரபரப்பு இருந்தாலும் அபிராமி அமைதியாகவே தன்னுடைய வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தார் அவருக்கு தன் பிள்ளைகள் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம் இருந்தது பெற்ற அன்னையாக மகள் நல்ல இடத்தில் திருமணம் ஆகி செல்ல வேண்டும் என்று எண்ணம் மட்டும் இல்லாமல் தன் மகளின் சுமையை மகன் நீண்ட நாட்கள் சுமக்க கூடாது அவனுக்கு என்று ஒரு வாழ்வு விரைவில் அமைய வேண்டும் என்றால் அது மகளின் திருமணத்திற்கு பிறகுதான் எனும்போது அதை முடிந்தவரை விரைவாக நடத்தி முடித்திடவே அவர் எண்ணினார்.

பிள்ளைகள் இருவருமே தங்களது முடிவில் திடமாக இருந்ததோடு இனி இதைப் பற்றி பேச வேண்டாம் என்றும் கூறி விட அபிராமிக்கு மனம் மிகவும் சோர்வுற்றது.

ஜெயப்பிரகாஷும் காலையில் வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருப்பதை கவனித்த அமுதமொழி

“இன்னைக்கும் இன்டர்வியூ இருக்கா அண்ணா?” என்று வினவினாள்.

“இல்லம்மா வேற ஒரு விஷயமா ஒருத்தரை மீட் பண்ண போறேன். இந்த ஐடியா எந்த அளவுக்கு சரியா வரும்னு தெரியல. ஆனா வந்தா நல்லா இருக்கும்.” என்று கூறினான்.

“அப்படின்னா நீ என்னை காலேஜ்ல டிராப் பண்ணிட்டு வண்டி எடுத்துட்டு போ அண்ணா. ஈவினிங் முடிஞ்சா வந்து பிக்கப் பண்ணு. இல்லன்னா நானே வந்துக்குறேன்.” என்று அமுதா கூற அவனுக்கும் அது சரியாகவே தோன்றியது.

ஏனென்றால் அவனுமே சில இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் பொது போக்குவரத்து பயன்படுத்தி செல்வது நேரத்தை அதிகமாக தின்று விடுகிறது.

அமுதாவிடம் “சரி” என்று கூறியவன் தன் அன்னையின் முகம் காலையிலிருந்து வாடி இருப்பதை கவனித்து அவரிடம் சென்றான்.

“உங்களுக்கு ஏதாவது நான் உதவி பண்ணட்டுமா?” என்று சமையலறை வாயிலில் சாய்ந்து நின்றபடி அவன் வினவியதும் அபிராமி அவனை திரும்பியும் பார்க்காமல்,

“நீங்க செய்த உதவி எல்லாம் போதும் பா. போய் அவங்கவங்க வேலையை பாருங்க. எல்லாம் வளர்ந்துட்டீங்க. உங்க முடிவு தான் கடைசி. இங்க நான் ஒருத்தி பேசுறதுக்கு மதிப்பே இல்ல. அப்புறம் இந்த அக்கறை மட்டும் எதுக்கு?” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார்.

“உன் இடத்தில் இருந்து நீ பேசுறது சரியா இருக்கும்மா. ஆனா என் இடத்துக்கு வந்து பாரு. என் அம்மா, தங்கச்சிக்கு செய்றது எனக்கு கஷ்டமா? கிடையவே கிடையாது. நான் சந்தோஷமா செய்வேன். என் தங்கச்சியோட சந்தோஷம், அவ நல்லா படிச்சு வேலைக்கு போறதில இருக்குன்னா, அதை நிறைவேற்றுவது தவிர வேறு என்ன பெரிய விஷயம் எனக்கு இருக்க முடியும்? அவ கல்யாணம் அவ விருப்பப்படி நடக்கும். நான் நடத்தி தருவேன். என் மேல நம்பிக்கை வை. அதே மாதிரி உனக்கு வேண்டியதிலும் நீ சிக்கனம் பாக்காம செய்துக்கோ. நான் உன் பிள்ளை. நான் சம்பாதிக்கிற பணம் உனக்கும் சேர்த்து தான். நீ எனக்கு சுமை இல்லை. புரியுதா?” என்று அவரது தோளில் தன் தாடையை பதித்து அவரது தலையில் செல்லமாக மூட்டினான்.

மகன் பேசுவது மனதிற்கு இதமாக இருந்தது. ஆனால் சிறுவயது முதலே அவர் மனதில் விதைக்கப்பட்ட விஷயங்கள் அத்தனை எளிதில் அகன்று விடாதல்லவா!

அன்னையிடம் விடைபெற்று அண்ணனும் தங்கையும் வண்டியில் அமுதாவின் கல்லூரி நோக்கி புறப்பட்டனர்.

கல்லூரி வாயிலில் அமுதா இறங்கிக் கொண்டபோது “அந்த பொண்ணு யாருன்னு அண்ணனுக்கு காட்டுறயா?” என்று ஜெயபிரகாஷ் வினவ,

“நேத்து ஏதோ மனசு வருத்தத்துல சொல்லிட்டேன் அண்ணா. அவ எல்லாம் ஒரு ஆளே இல்ல. நான் ஈஸியா அவளை சமாளிச்சிடுவேன். நீ கவலைப்படாம உன்னோட வேலைய பாரு.” என்று அவனது தலை முடியை கலைத்துவிட்டு அவள் சிரிக்க,

“டேய் ஒரு முக்கியமானவரை பார்க்க போகணும். தலையை கலைத்துவிடுகிறாயே!” என்று உரிமையாக கடிந்து கொண்டவன்,

“பணக்கார வீட்டு பொண்ணுன்னு சொல்ற, உன்னை மரியாதை குறைவா நடத்துறான்னு சொல்ற, எனக்கு கேட்க கஷ்டமா இருக்கு. எந்த இடத்திலும் உன்னோட சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத. பணம் இருக்கிறதுனால அந்த பொண்ணுக்கு எல்லாமே கிடைச்சிடாது. பணம் இல்லங்குறதுனால உனக்கு எதுவும் கிடைக்காம போகாது. உனக்குன்னு உள்ளது உனக்கு மட்டும் தான். புரியுதா? சுயமரியாதை உனக்கானது. உன்னோட தன்மானத்தை சீண்டினால் எந்த எல்லைக்கும் நீ போகலாம். அண்ணா உனக்கு துணையா இருப்பேன். எதுக்கும் பயப்படாதே.” என்று அவளை கையில் தட்டிக் கொடுத்து கூறினான் ஜெயபிரகாஷ்.

“அண்ணா உன்னை எனக்கு தெரியாதா? நான் உன்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு காரணம் பயம் இல்ல. இவளை என்னால சமாளிக்க முடியும்ன்ற நம்பிக்கை மட்டும் தான். நீ போற வேலை சக்ஸஸ்ஃபுல்லா முடியறதுக்கு என்னோட வாழ்த்துகள்.” என்று சிரித்த முகமாக கூறிவிட்டு கல்லூரிக்குள் சென்றாள் அமுதமொழி.

போகும் தன் தங்கையை பெருமை நிறைந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

இந்த சம்பாஷனைகளையும் அவனது விழியில் தெரியும் அன்பையும் ஒரு ஜோடி விழிகள் கவனித்துக் கொண்டிருந்தது.

அவன் தன் வண்டியை நகர்த்த முயற்சி செய்யும்போது தான் தனக்கு பக்கவாட்டில் ஒரு விலை உயர்ந்த கார் நிற்பதை கவனித்தான். அதை நகர்த்தினால் மட்டுமே அவன் முன்னே சென்று சாலையை அடைய முடியும். அதனால் அதன் ஜன்னல் கண்ணாடியை ஒரு விரல் கொண்டு பதமாகத் தட்டினான்.

அந்த கண்ணாடி சீரான வேகத்தில் கீழே இறங்கிய போது ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமித்து இருந்த வண்டுவார்குழலி சினேகமாக அவனை நோக்கி புன்னகைத்து “எனக்கு முன்னாடியும் ஒரு கார் நிக்குதுங்க. அது நகர்ந்தா தான் நானும் போக முடியும். நகர்த்த மாட்டேங்குறாங்க. ப்ளீஸ் வெயிட்.” என்று தன்மையாக பதில் அளித்தாள்.

குழலியை கண்டவுடன் மனதிற்குள் எழுந்த பனிச்சாரல் அவன் முகத்தில் பளிச்சென்று பிரதிபலித்தது.

அதிலும் அவனுக்கு கோபமாகவோ எரிச்சலாகவோ பதில் கூறாமல் சூழ்நிலையை நிதானமாக விளக்கிய அவளின் தன்மை மேலும் மேலும் அவளின் மேல் காதலை பெருகச் செய்தது.

அவன் பதில் கூறாமல் தலையை மென்மையாக அசைத்து வைத்தான். அவன் கண்களில் இருந்த ரசனை அப்பட்டமாக வெளியே தெரிய குழலி புரியாமல் அவனை ஒரு பார்வை பார்த்தாள். ஏற்கனவே ஓட்டுனர் பக்கத்து ஜன்னலை திறந்து வைத்து அவள் எதிரில் இருந்த காரை நகரச் சொல்லிக் கொண்டிருந்தபோதுதான் இவர்களது பேச்சை கேட்டிருந்தாள். அந்த பேச்சு அவன் மீது ஒரு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி இருந்தது.

அதேபோல அவன் தங்கை அவனிடம் காட்டிய பாசத்தை கண்டதும் அவளின் மனதின் மூலை முடுக்கு எங்கும் தன்னுடைய தங்கை தன்னிடம் அப்படி இல்லையே என்றார் வருத்தம் வந்து ஒட்டிக்கொண்டது.


தனக்கு கிடைக்காதது அடுத்தவருக்கு கிடைத்திருக்கிறது என்ற பொறாமை இன்றி, எனக்கு தான் கிடைக்கவில்லை அவருக்காவது கிடைத்திருக்கிறது என்ற நிறைவை அவள் மனம் சுமந்து இருந்தது.

அந்த மரியாதை காரணமாகவே அவள் அவனுக்கு சூழ்நிலையை விளக்கி இருந்தாள். ஆனால் அவன் கண்ணில் தெரியும் ரசனை அவளுக்குள் சின்ன குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

முன்னால் இருந்த காரை அந்த மனிதர் எடுத்துக் கொண்டு நகர்ந்ததும் குழலியின் வாகனமும் சீரான வேகத்தில் அங்கிருந்து நகர்ந்து சென்றாலும் பக்க கண்ணாடி வழியாக அவனைப் பார்த்து ஒரு மென்னகையை சிந்தி விட்டே கிளம்பினாள்.

அவளது எதிர்பாராத சந்திப்பில் ஜெயப்பிரகாஷின் மனம் உள்ளே குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. 

‘எப்பவும் தங்கச்சியை நாமே கொண்டு வந்து விட்டிருக்கலாமோ முன்னாடியே இவளை பார்த்திருக்க வாய்ப்பு அமைஞ்சிருக்குமோ’ என்று மனம் ஏதேதோ சிந்திக்க துவங்கியது.


ஆசை கொண்ட மனத்தை அறிவு தலையில் குட்டி அடுத்த வேலையை பார்க்கச் சென்றால்தான் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்பதை அவனுக்குக் கூறியது.

பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் வண்டிக்கு தேவையான பெட்ரோலை நிறைத்துக் கொண்டு அடுத்து அவன் சென்ற இடம் முதல் நாள் குழலின் அலுவலகத்தில் அவன் பார்த்த அந்த வயதான சப் காண்ட்ராக்டரை தான்.

அவரைப் பார்க்க வேண்டும் என்று அவரது அலுவலகத்தில் கூறிவிட்டு அவன் காத்திருக்க யார் என்றே தெரியாத ஒருவன் எதற்கு வந்திருக்கிறான் என்ற யோசனையுடன் அவரும் அவனை சந்திக்க சம்மதித்தார்.

“வணக்கம் சார். என் பேரு ஜெயபிரகாஷ். நாலு வருஷமா xxxxx கம்பெனியில அக்கவுண்டிங் செக்சன்ல வேலை செய்தேன். நேத்து நீங்க வந்திருந்த அதே ஆபீஸ்க்கு நானும் ஒரு இன்டர்வியூக்காக வந்திருந்தேன். அப்பதான் நீங்க பேசியது என் காதுல விழுந்தது. உங்களோட அந்த யூனிட்டை அந்த கம்பெனிக்கு விலைக்கு கொடுக்கறதாக நீங்க பேசியதை கேட்டதும் எனக்கு ஒரு ஆர்வம். ஏற்கனவே பல கம்பெனி வைத்திருக்கிற அவங்களுக்கு அதை கொடுக்கறதை விட ஏதாவது செய்து மேலே வந்துடனும், சாதிக்கணும் என்ற எண்ணத்தோடு இருக்கிற எனக்கு அதை கொடுக்க உங்களுக்கு சம்மதமா? முழு தொகையையும் உடனே என்னால கொடுக்க முடியாது. ஆரம்பத்தில் ஒரு தொகையும் பேங்க் லோன் போட்டு கொஞ்சமும் மீதியை தவணை முறையில் தான் தர முடியும். இதோ இந்த பைல்ல என்னை பத்தின எல்லா விபரமும் இருக்கு.

நான் வந்து கேட்டதும் உங்களால உடனே தூக்கி கொடுக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். அதே நேரம் எனக்குமே பணத்தை அரேஞ்ச் பண்ண கொஞ்சம் டைம் வேணும். நீங்க யோசிங்க. ‘நான் இதுக்கு சரியா இருப்பேன். நான் பணம் கொடுக்கிற முறை உங்களுக்கு வசதி படும்’ அப்படின்னா மட்டும் அதிலேயே என்னோட போன் நம்பர் இருக்கு. என்ன கூப்பிடுங்க.” என்று நிதானமாக தான் வந்த விஷயத்தை விளக்கினான்.

அவன் வயதை ஒத்த ஒருவனுடன் தான் நேற்று அந்த அலுவலகத்திற்கு சென்றிருந்தார் பெரியவர். அவன் நடந்து கொண்ட முறைக்கும் இன்று இவன் பேசும் முறைக்கும் உள்ள வித்தியாசமே இவனுக்கு இருக்கும் பக்குவத்தையும் தெளிவையும் அவருக்கு எடுத்துரைத்தது. ஆனால் அவன் சொல்லும் பணக்கணக்கு தான் அவரால் உடனே சரி என்று சொல்ல முடியாமல் சிந்திக்க வைத்தது.

அவனுடைய கோப்பை நிதானமாக வாசித்தார் அவர். வாசித்து முடிக்கும் வரையும் ஜெயப்பிரகாஷ் எதுவும் பேசாமல் அமைதியாக காத்திருந்தான்.

“நாலு வருஷம் வேலை பார்த்ததா சொன்னீங்க தம்பி. ஆனா இங்க ஆறு வருஷம் வேலை பார்த்ததுக்கான டாக்குமெண்ட்ஸ் இருக்கே?” என்று அவர் யோசனையோடு வினவ,

“காலேஜ் படிக்கும் போதே அப்பா தவறிட்டாரு சார். குடும்பத்தை நான் தான் பார்த்துக்க வேண்டிய சூழ்நிலை. படிப்பையும் விட்டுவிடாமல் கிடைத்த வேலையை செய்துட்டு இருந்தேன். அக்கவுண்ட்ஸ் மேல ஆர்வம் இருந்தாலும் நான் வேலை பார்த்த பல கம்பெனியில இந்த மிஷினரி எல்லாம் அவங்க எப்படி பயன்படுத்துறாங்கன்னு நான் கூடவே இருந்து பார்த்திருக்கேன். வேலை செய்யும் முறையில் இருந்து எப்படி அதை நிர்வாகிக்கணும் என்பது வரைக்கும் நான் பார்த்து புரிஞ்சுகிட்டு இருக்கேன். அந்த தைரியத்தில் தான் கொடுக்க முடியுமான்னு உங்க கிட்ட வந்து கேட்கிறேன். நம்பிக்கை இல்லாத எதையும் நான் துவங்க மாட்டேன். நான் ஏற்கனவே வேலை பார்த்த இடங்களில் என்ன பத்தி விசாரிக்கணும்னாலும் நீங்கள் விசாரிக்கலாம்.” ஒவ்வொரு வார்த்தையும் பளிச்சு பளிச்சென்று அவனிடமிருந்து வெளிவந்ததை ஆர்வமாக கவனித்தார் அந்த பெரியவர்.

அவனிடம் தென்படும் தன்னம்பிக்கையும் தைரியமும் ‘இதை என்னால் செய்துவிட முடியும்’ என்ற உறுதியும் அவனுக்கு கொடுத்து பார்த்தால் என்ன என்ற எண்ணத்தை அவருக்குள் விதைத்தது.

“சரி தம்பி ஆரம்பத்துல முழுசா கம்பெனிய உன் பெயருக்கு தர முடியாது. வேணும்னா லீஸ் மாதிரி போட்டுக்கலாம். உனக்கும் அதிக பண செலவு ஆகாது. எனக்கும் கம்பெனி சும்மா இல்லாம நேரத்துக்கு ஆர்டர் எல்லாம் போகும். மிஷனரியும் தொடர்ச்சியான பயன்பாட்டுல இருக்கும். உனக்கு இது சரியா வரும்னு இந்த லீஸ் முடியும்போது தோணினா அப்ப மொத்தமா பணம் கொடுத்து இந்த பிசினஸ வாங்கிக்கோ.” என்று அவனுக்கும் அவருக்கும் சாதகமான ஒரு முடிவை தன்னுடைய இத்தனை வருட அனுபவத்திலிருந்து அழகாக கூறினார் அந்த பெரியவர்.

‘இப்படி ஒரு வழி இருப்பதை யோசிக்காமல் போனோமே!’ என்று ஒரு நொடி சிந்தித்த ஜெயப்பிரகாஷ் ‘இது இன்று தான் கற்ற பாடம்.’ என்று எடுத்துக்கொண்டு அவருடைய முடிவுக்கு தன் சம்மதத்தை தெரிவித்தான்.

“சரிப்பா நீ போயிட்டு தேவையான டாக்குமெண்ட், பணம் எல்லாம் ரெடி பண்ணிட்டு நெக்ஸ்ட் வீக் வா” என்று அவனை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

தான் நினைத்த வேலை நினைத்ததை விட இத்தனை சுலபமாக முடியும் அதுவும் தனக்கு சாதகமாக முடியும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.

‘அவளைப் பார்த்துவிட்டு வந்த யோகம்’ என்று மனதின் ஓரத்தில் தோன்றினாலும், இது மாதிரியான மூட எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்று அவன் பகுத்தறிவு அவனை இடித்துரைத்தது.

மின்னும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
24
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. பிரகாஷ் அவளோட உயரத்துக்கு தன்னுடைய உயரத்தை வளர்த்திக்க நினைக்கிறான் சூப்பர் 👌👌