மின்னல் 5
விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறி வந்த ஜெயபிரகாஷுக்கு மனம் உலைக்களம் போல தகித்தது.
‘என்ன வார்த்தை பேசிவிட்டார்? இதற்குத்தானா அவன் ஓடி ஓடி உழைத்தான்? அன்னை, தங்கை இருவரையும் அவன் பாரம் என்று கருதி இருந்தால் ஆசைகளை தூர வைத்து வாழ்வாதாரம் தேடியும் படிப்பை நாடியும் ஓடி இருப்பானா? வீட்டை விட்டே சென்றிருக்க மாட்டானா?’
மனம் அடங்க மறுத்தது. பக்கத்தில் இருந்த டீக்கடையில் வந்து அமர்ந்தான். அந்த நேரம் அவன் அங்கு வரமாட்டான் என்பதால் கடைக்காரர் விசித்திரமாக நோக்கி,
“என்ன பிரகாஷ் தம்பி இந்த நேரத்துல வந்திருக்க? ஆபிஸ் போகலையா?” என்று கேட்டார் அவன் கையில் டீயை திணித்தபடி.
“ஆறு வருஷமா போயிட்டு தானே இருக்கேன். ஒருநாள் வீட்ல இருக்கேன். கூடாதா?” என்று வெடுக்கென்று கேட்டு விட்டான்.
அவன் அப்படிப் பேசும் ரகமில்லை என்று அவருக்குத் தெரியும். வீட்டில் ஏதோ சூழ்நிலை சரியில்லை போல என்று உணர்ந்து கொண்டவர் தொலைவில் அமுதா வேகமாக நடந்து வருவதைக் கண்டு தன் எண்ணத்தை உறுதி செய்து கொண்டார்.
அவர் அமைதியாக அசையாமல் நிற்பதைக் கவனித்த பின் தான் அவரிடம் பேசிய விதம் அவன் மண்டையில் உறைத்தது.
“தப்பா நினைக்காதீங்க அண்ணா.” என்று அவன் பதில் தருவதற்குள்,
“சாப்பாடு சாப்பிடுற நேரத்துல என்ன அண்ணா டீ குடிச்சிட்டு இருக்க? வா வீட்டுக்கு போகலாம்.” என்று அவன் கையைப் பற்றி இழுத்தாள் அமுதா.
“நீ போ டா அண்ணா அப்பறமா வர்றேன்.” என்று கூறியவன் குரல் சோர்ந்து இருந்தது.
“அம்மாவைப் பத்தி உனக்கு தெரியாதா? எப்பவும் என்னை பொறுமையா இருக்க சொல்லுவ? இன்னிக்கு நீயே கோபப்பட்டா எப்படி?” என்று கடிந்து கொண்டு,
“வா அண்ணா” என்று செல்லம் கொஞ்சினாள்.
அவன் அப்பொழுதும் முகம் வாடி அமர்ந்திருக்க பல வருட பழக்கம் கொண்ட கடைக்காரர்,
“அம்மா அமுதா நீ வீட்டுக்கு போ, கொஞ்ச நேரத்துல தம்பியே சமாதானம் ஆகி வருவாப்ள.” என்று அனுப்பி வைத்தார்.
அண்ணனை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்து வீடு சென்றாள் அமுதா.
“என்ன தம்பி அம்மா கூட சண்டையா? இது எல்லா வீட்டுலயும் உள்ளது தான். வீட்டுல இருக்குற பெண்களுக்கு வெளிக் கஷ்டம் தெரியாது. நாமளும் அதெல்லாம் சொல்லி இருக்க மாட்டோம். நமக்கு திடீர்னு ஒரு நாள் நிறைய கஷ்டம் வரும்போது நாம சொல்லாமலே அவங்க புரிஞ்சு நடந்துக்கணும்னு எதிர்பார்க்க கூடாது தம்பி. ஏன்னா அது அவங்களுக்கு தெரியாது, அதை விட நாம சொல்லவே இல்ல அதான் விஷயம். டென்ஷன் போகற வரை எதையாவது வேடிக்கை பாரு, ரெண்டு டீ சாப்பிடு. அப்பறம் வீட்டுக்கு போ. பழையதை ஓரமா வச்சுட்டு அம்மா கிட்ட நல்லபடியா பேசு. உங்க அப்பா போன இந்த ஆறு வருஷத்துல உன் அம்மா இந்த தெருவைத் தாண்டி அதிகம் வெளில போனதே இல்ல. அவங்களுக்கு உலகம் புரியணும்னு எதிர்பார்க்காத தம்பி.” என்று மூத்தவரான அறிவுரை கூறினார்.
ஜெயபிரகாஷின் சிறுவயது முதலே அங்கே கடை வைத்திருக்கும் அவருக்கு அவனின் குணநலன்களுடன் வீட்டு நிலவரமும் தெரியும்.
தெருவில் குடியிருக்கும் மற்ற வீட்டு ஆண் பிள்ளைகள் போல திருட்டு தம் அடிப்பது, கடை வாசலில் அமர்ந்து போகும் வரும் பெண்களுக்கு மார்க் போட்டு சிரிப்பது என்று வாலிப பருவத்தை வாழாத, பொறுப்புகள் நிறைந்த அவன் மேல அவருக்கு அலாதி பிரியம்.
நம்மை சுற்றி இருக்கும் பலரும் நம்மை நெருக்கமாக எண்ணி இருப்பார்கள். அது, இது போன்ற தருணங்களில் மட்டுமே வெளிப்படும். இங்கும் அப்படித்தான் கடைக்கார அண்ணனின் அறிவுரையும் டீயும் ஜெயபிரகாஷுக்கு ஆறுதல் அளித்தது.
மனம் மெல்ல ஒருநிலை அடைந்தது. சிரித்தபடி சட்டைப்பையில் கைவிட, அங்கே ஒன்றுமில்லை. ஆணியில் இருந்த சட்டையில் பணம் தன்னால் பூக்குமா என்ன? அவன் யோசனையாக நிற்க,
“போயிட்டு வா பிரகாஷ் தம்பி. அப்பறம் காசு கொடுப்பியாம்.” என்று சிரித்து வழி அனுப்பினார்.
முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் வீட்டை நோக்கி வந்தவன் உள்ளம் வீட்டின் நிலவரம் மறந்து மெல்ல தன் கண்ணழகியின் வசம் சென்று நின்றது.
பணக்கார வீட்டுப் பெண், அவளைப் பிடித்துவிட்டது. மனம் அவள் தான் உன் துணை என்று அழுத்தமாக கூறுகிறது. இந்த சூழலில் அவளின் கம்பெனியில் சென்று வேலைக்கு சேர்வது சரி வராத ஒன்று. என்று யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தான்.
“வந்துட்டியா? என் மேல கோவமா?” என்று கண்ணீரை துடைத்தபடி எழுந்து வந்தார் அபிராமி.
“அம்மா பிளீஸ் இப்போதைக்கு இந்த விஷயம் பேச வேண்டாம். அதே போல அமுதா கல்யாண விஷயமும் இப்ப பேச தேவையில்லை.” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அந்த வீட்டில் இருக்கும் ஒற்றை அறைக்குள் புகுந்து கொண்டான்.
அறைக்கு இருபுறமும் இரண்டு கட்டில்கள். நடுவில் ஸ்டீல் பீரோ. ஒரு இரண்டடி கட்டிலில் பிரகாஷும் மற்றொரு மூன்றடி கட்டிலில் அமுதாவும் அன்னையும் உறங்குவர்.
பல நாள் அமுதாவின் உதையும் இடியும் தாங்காமல் அபிராமி நடுவில் உள்ள தரையில் படுத்து விடுவார். காலையில் மகளுக்கு தனி சுப்ரபாதம் ஓடும்.
முதலில் ஹாலில் கட்டில் போட்டு தான் பிரகாஷ் உறங்கினான். ஆனால் அப்போதெல்லாம் அடிக்கடி அமுதா இரவில் பயந்து அழுது அப்பா வேண்டும் என்று அண்ணனை கேட்டு அழுவாள். அதனால் அனைவரும் ஓர் அறையில் உறங்குவது வழக்கமாகி போனது.
அமுதாவுக்கு எல்லாமே பிரகாஷ் தான் என்றால் அவனுக்கு எல்லாமே அவளாக இருந்தாள். கல்லூரி நாட்களில் கூட எந்த பெண்ணையும் மனதில் ஏற்றாமல் குடும்பம் ஒன்றே பெரிதென இருந்தவன் மனதினுள் இன்று அவனது டஸ்கி பியூட்டி புகுந்து ஆட்டிப் படைத்தாள்.
பார்த்து முழுவதுமாக அரை நாள் ஆகவில்லை. ஆனால் அவள் ஏதோ ஜென்ம ஜென்மமாய் அவனுடன் பயணிப்பது போன்ற உணர்வில் சிக்கித் தவித்தது அவன் மனம்.
அவன் மேலே சுழலும் மின் விசிறியை பார்த்தபடி படித்திருக்க, அவன் கால் அருகில் வந்து அமர்ந்தாள் அமுதா.
“அண்ணா… அண்ணா…” என்று இருமுறை அழைத்தும் அவன் கவனியாதது கண்டு திகைத்தாள்.
இரவில் நல்ல உறக்கத்தில் இருந்தால் கூட அமுதாவின் ‘அண்ணா’ என்ற குரலுக்கு சட்டென்று விழித்து என்னவென்று கேட்கும் குணமுடையவன் என்பதால் அவளது கண்கள் ஆச்சரியத்தைக் காட்டியது.
முட்டியில் லேசாக தட்டி அழைக்க, எழுந்து சுவரில் சாய்ந்து அமர்ந்தான்.
“வேலை விஷயம் என்ன ஆச்சு அண்ணா? அம்மா பேசியதில் அதை கேட்க மறந்தே போயிட்டேன்.” என்று இழுத்தாள்.
அவள் குரலில் அத்தனை தயக்கம், “ஏன் மா இப்படி தயங்குற? நான் உன்னை தப்பாவா நினைக்க போறேன்?” என்று வருத்தம் கலந்த குரலில் கேட்டான் ஜெயபிரகாஷ்.
“ஐயோ அண்ணா, நான் தயங்கியது அங்க வேலைக்கு சரின்னு சொல்லிட்டியோ என்று தான். உன்கிட்ட பேச எனக்கு என்ன தயக்கம்?” என்றாள் வேகமாக.
“செலக்ட் பண்ணிட்டாங்க டா. ஆனா நான் தான் ரெண்டு நாள் யோசிக்க டைம் கேட்டேன்.” என்று அவனும் சிந்தனையுடன் கூற,
“சொல்றேன்னு தப்பா நினைக்காத. அந்த ராங்கி ரங்கம்மா இன்னிக்கு கூட என்கிட்ட வம்பு இழுக்க வந்தா. நான் தான் ஒதுங்கி போனேன். நேத்து காலேஜ்ல எல்லாரும் மாஸ் கட். நான் மட்டும் கிளாஸ் அட்டென்ட் பண்ணியதால எல்லாருமே என்னை திட்ட தான் செய்தாங்க. ஆனா அவ ரொம்ப அவமானமா பேசிட்டா.” என்று கூறியபோது அவள் கண்களின் ஓரம் கரித்தது.
“என்ன டா? இதுவரை நீ அந்த பொண்ணு பத்தி சொன்னதே இல்லையே!” என்று நகர்ந்து தங்கை தோளில் ஆதரவாக கரம் பதித்தான்.
“அண்ணா இந்த வீட்டுக்காக நீ எவ்வளவு செய்யற! காலேஜ்ல இது மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் நான் உன்கிட்ட வந்து நிற்க முடியுமா சொல்லு. இவளை இதுவரை சாதாரணமா சமாளிச்சேன். நேத்து மாஸ் கட் பண்ணிட்டு அந்த மாஸ் ஹீரோ படத்துக்கு போயிட்டு, அப்படியே நைட் பார்ட்டி இருக்குன்னு எல்லாரையும் இவ வர சொன்னா. எங்கிட்டயும் வரதான் சொன்னா. ஆனா எனக்கு தான் விருப்பம் இல்ல. இன்னிக்கு வந்து, ‘தானா போக தான் வக்கில்ல, அதான் நான் காசு கொடுத்து கூட்டிட்டு போறேன்ல, ஒட்டிக்கிட்டு வர கூட உனக்கு வலிக்குதா?’ அது இதுன்னு என்னென்னவோ பேசிட்டா. அந்த நேரம் அம்மா கால் பண்ணவும் போதும்ன்னு தோணுச்சு, கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.” என்று விளக்கம் கொடுத்தாள்.
“அந்த பொண்ணு கூட்டிட்டு போய் தான் நீ அதெல்லாம் பார்க்கணும்னு இல்ல டா” என்று தலையை வருடிய அண்ணனிடம்,
“அண்ணா ஆசைக்கும் அவசியத்துக்கும் ஆடம்பரத்துக்கும் பேதம் பார்க்க எனக்கு தெரியும். ஆசை வர்றது இயல்பு தான். ஆனா நம்ம வீட்டு சூழ்நிலைக்கு அவசியமா என்று தான் அண்ணா எனக்கு பார்க்க தோணுச்சு. அவசியமா படல. அதான் போகல.” என்று கூறி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“நான் அந்த கம்பெனிக்கு வேலைக்கு போகல டா.” என்று கூறினான் ஜெயபிரகாஷ்.
“என்ன அண்ணா சொல்ற? ஏன்? என்னாலயா?” என்றாள் அவசரமாக.
“இல்ல டா. உன் அண்ணியால!” என்று அவன் கண் சிமிட்ட,
“அண்ணா… அப்படியா? சொல்லவே இல்ல!” என்று சத்தமாக பேச ஆரம்பிக்க அவள் வாயை அடைத்தான் பிரகாஷ்.
“ஷ்… சும்மா இரு. கத்தாத. அவளும் அங்க இருந்தா. இன்னிக்கு தான் பார்த்தேன். பார்த்ததும் முகம் பளிச்சுன்னு மனசுல பதிஞ்சு போச்சு.” என்று நெஞ்சை நீவியபடி கூறினான்.
அமுதா அவன் யாரோ நேர்முகத்தேர்வுக்கு வந்த பெண்களில் ஒருத்தியைக் கண்டு மையல் கொண்டு, அவன் வேலையை அவளுக்காக விட்டுக் கொடுக்கிறான் போல என்று தானாகவே எண்ணிக் கொண்டாள்.
மிட்டாய் என்றால் கூட சாக்லேட் இல்லாமல் கடலை மிட்டாய் சாப்பிடும் தன் அண்ணன், அந்த கம்பெனி முதலாளி மேல் காதல் கொண்டிருப்பான் என்று அவள் எண்ண சாத்தியமில்லை அல்லவா!
ஆனால் அந்த உயர்தர சாக்லேட் சிலை மேல் தான் அவனுக்கு காதல் வந்திருந்தது. அதுவும் பார்த்தவுடன்.
வெயிலின் பிரகாசம் கண்டு சாக்லேட் உருகும் என்று நாம் கேள்விப்பட்டது உண்டு. ஆனால் இங்கே அதற்கு நேர்மாறாக அந்த சாக்லேட் சிலை கண்டு இந்த ஜெயபிரகாஷ் உருகினான்.
அங்கே வேலைக்கு செல்வதில்லை என்று உறுதிபட முடிவு செய்தபின் அடுத்து என்ன என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்து நின்றது. வேலைக்கு செல்லாமல் காதல் வானில் சிறகு விரிக்க அவன் ஒன்றும் கோடிகளில் புரளும் கோடீஸ்வரன் அல்லவே!
அப்படியான கோடீஸ்வரியை தன் காதல் மனதை உணர வைத்து அவனிடம் ஈர்க்க நற்குணங்கள் மட்டுமே போதுமானது. ஆனால் அவளது குடும்பமும் சம்மதிக்க பொருளாதார உயர்வு வேண்டும் என்று எண்ணினான்.
எண்ணியதை செயல்படுத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவனுக்கு தெரியவில்லை எதிர்பாராத விதமாக அவளை மறுநாளே அவன் சந்திக்கப் போகிறான் என்று.
– மின்னும்
அவ்வளவு உயரத்தில் இருப்பவளும் இப்படி குடும்ப சூழ்நிலையில் சிக்கித் தவிர்க்கணும் எப்படி வாழ்க்கையில் வந்து பெறப் போகிறார்கள்???