கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-8
இரவு நேரம் ருத்ரா கடையில் இருந்து சில பொருட்களை வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டு இருந்தாள். இந்த ஏரியா புதிது என்பதனால் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே நடந்து வந்தாள். இந்த கல்லூரியில் சேருவதற்கு ஒரு வாரம் முன்பு தான் இந்த ஏரியாவிற்கு குடி வந்தார்கள். அவர்கள் குடி மாறி வந்த காரணத்தை நினைத்து பார்க்கவே அவளுக்கு இதயம் படபடத்தது. அலைபாயும் எண்ணத்தை கட்டுப்படுத்தியவள் நேரே ரோட்டை பார்த்து நடந்தாள். ஆங்காங்கே ரோட்டோரத்தில் இருக்கும் கடைகள் எல்லாம் மூட துவங்கி இருந்தார்கள். அவர்கள் தெரு பக்கம் சென்றதும் அவளின் கால் அப்படியே நின்றது. இது வரை கூட ஆள் நடமாட்டம் இருக்க அச்சம் இல்லாமல் நடந்து வந்தால். ஆனால், அவளின் தெருவில் ஒரு நாய் குட்டி கூட இல்லை. வெறிச்சோடி கிடந்தது. அவளின் வீடு தெரு முகனையில் இருக்க தனியாளாய் இந்த ஒரு தெருவை கடந்து செல்லவே அவளுக்கு பயம் தொண்டையை அடைத்தது. கையில் இருக்கும் பையை இறுக பற்றிக் கொண்டவள் நிமிர்ந்து பார்க்காமலே விறு விறுவென நடந்தாள். தலையை குனிந்து நடந்தவள் முன்னே கார் வெளிச்சம் பளிச்சென்று அடிக்க கண்ணை சுருக்கிக் கொண்டு நிமிர, காரின் ஹெட்லைட்டும் அணைக்கப்பட்டது. வெள்ளை நிற யுநோவா கார் மீது ஒய்யாரமாய் அமர்ந்து இருப்பவனை பார்த்து அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தாள். யாரை மறக்க வேண்டும் என நினைத்து, தப்பித்து குடும்பத்துடன் இங்கு வந்தாளோ அவனே அவள் கண் முன்னே இருக்கிறான். ருத்ராவின் விழிகள் பயத்தில் பனித்திட, உடல் அப்பட்டமாய் நடுங்கியது. தன்னிச்சையாக இரண்டடி பின்னே சென்றாள். அதில் காரில் இருந்து குதித்து இறங்கினான் அவன். இளக்காரமாய் சிரித்தவன், “என்ன பயமா இருக்கா?” என கேட்டு களுக்கென்று சிரித்தான். பயத்தில் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொள்ள இன்னும் பின்னே சென்றாள் ருத்ரா.
“இந்த பயம் உனக்கு அன்னிக்கே இருந்து இருக்கணும் டி..” என கோவத்துடன் அழுத்தமாய் கூறியவன் அவனின் இடது கன்னத்திலே கையை வைத்து அழுத்தமாய் தேய்த்தான். அவன் செயலில் எச்சிலை கூட்டிய ருத்ராவிற்கு கால்கள் பின்னிக் கொண்டது. அன்று நடந்த சம்பவம் அவள் கண் முன்னே படமாய் ஓட மிரட்சி உடன் அவனை பார்த்தாள். அவளை நெருங்கி அவளின் முடிகற்றை கொத்தாக பற்றி அவன் முகத்தருகே இழுத்தவன், “இப்போ உன் திமிர காட்டு டி.. அன்னிக்கு நீ பண்ண காரியத்துக்கு உன்ன உயிரோட விட்டு வச்சி இருக்கேனேனு சந்தோஷ படு.. ஆனா கண்டிப்பா உன்ன கொல்லுவேன்.. அதுக்கு முன்ன உன்னையும் உன் குடும்பத்தையும் அசிங்கப்பட வச்சி எல்லாரையும் கொல்லுவேன்..” என சீற்றத்துடன் கூறியவனை கெஞ்சலுடன் பார்த்தாள் ருத்ரா. அவனிடம் இருந்து தப்பிக்கவே முடியாது என உணர்ந்தவள், “ப்ளீஸ் எங்களை விட்டுடு.. உன்ன கெஞ்சி கேக்குறேன்.. நான் தெரியாம பண்ணிட்டேன்.. தயவு செஞ்சி என்ன மன்னிச்சிடு.. இனிமேல் உன் வழியில வர மாட்டேன்.. ப்ளீஸ்.. என்னையும் என் குடும்பத்தையும் ஒன்னும் பண்ணாத.” என உயிர் பிட்சை கேட்டாள். அவளின் இரைஞ்சல் அவன் செவிக்கு விருந்தாய் இருந்தது. அவளின் அழுகை குரலும் கெஞ்சும் வார்த்தைகளும் அவனுக்கு இன்பைத்தை குடுக்க பெரிதாய் நகைத்தான்.
அவளின் முடியை இன்னும் அழுத்தமாய் பற்ற வலியில் முனங்கினாள். “பத்தலை.. இது பத்தாது.. இன்னும் கெஞ்சு.. சாவுற வரைக்கும் கெஞ்சு.. நீ கெஞ்சுரத்தை கேக்கும் போது எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு.. இதுக்காகவே உன்ன அடிக்கடி தொந்தரவு பண்ண வரலாம் போலையே..” என கூறியவன் கூந்தலில் இருக்கும் பிடியை அழுத்த, இன்னும் முனங்கினாள்.
“வலிக்குதா? வலிக்கணும்.. இதை விட இன்னும் உனக்கு வலிய குடுக்கணும்.. இது எல்லாம் நீ பண்ணதுக்கு பத்தாது டி..” என கோவத்துடன் கூறியவன் அவளை தரையில் தள்ளி விட கல்லில் மோதினாள் ருத்ரா. தலையில் இருந்து உதிரம் வலிய வலியில் அழுபவள் முகத்தாடையை பிடித்து திருப்பி அவள் கன்னத்திலே பளார் என்று ஒரு அறை விட்டவன், “இனிமேல் ஒவ்வொரு நாளும் உன்ன சித்தரவதை பண்ணுவேன்.. உன் குடும்பத்துல இருக்குற எல்லாரையும் கொல்லுவேன் அவங்க சாவை பாத்து இன்னும் அழு.” என ஆக்ரோசமாய் கூறியவன் அவனின் காரில் ஏறிக் கொண்டு அதனை உயிர்பித்து ருத்ராவை நோக்கி அதிவேகமாய் செலுத்தினான். அதில் கண்களை இறுக மூடியவள், “அம்மா” என்று அலற அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. முகத்தை சுருக்கிக் கொண்டு லேசாய் கண்களை திறக்க அவளின் அம்மா பதட்டமான முகத்துடன் அவளை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது தான் இவ்வளவு நேரம் அவள் கண்டது கனவு என்று புரிந்தது. பட்டென்று எழுந்து அமர்ந்தவள் அவளின் அம்மாவை கட்டிக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தாள். என்ன ஆனாலும் அவன் கூறிய வார்த்தைகளும் அவன் அறையின் வீரியத்தையும் அவளால் இன்னும் உணர முடிந்தது. மெய்யாகவே அறை வாங்கி இருக்கிறாள். அதனால் அவனிடம் வாங்கிய அறையை அவளால் இன்னும் மறக்க முடியவில்லை. அவன் மிரட்டல் காதுக்குள் ஒலிக்க அணைப்பை இறுக்கிக் கொண்டாள். “ஒன்னும் இல்ல மா.. நான் இருக்கேன்ல..” என அவளின் முதுகை நீவியபடியே ஆறுதல் கூறினார் அம்மா. அவளின் நிலையை நினைத்து அவருக்கு கவலையாய் இருந்தது. கடந்த சில மாதங்களாய் இவள் இப்படி தானே இருக்கிறாள். பார்க்காத மருத்துவம் இல்லை, வேண்டாத கோவிலும் இல்லை. அவளின் இந்த நிலைக்கான காரணம் தெரிந்தாலும் அவளை சமாதானம் செய்யும் வழி மட்டும் அவர்களுக்கு தெரியவில்லை.
“சாரி மா திரும்பவும் தூக்கத்துல கத்திட்டேனா?” என்றவளை பார்த்து மறுப்பாக தலையை அசைத்த அம்மா, “அதலாம் ஒன்னும் இல்ல.. நீ கண்டதை போட்டு குழப்பிக்காம இரு. வா தூங்கு” என அவளை மடியில் கிடத்தியவர் அவள் தலையை பரிவாக வருடி விட்டார். உறக்கம் துளியும் வரவில்லை அவளுக்கு. தாம் விழித்து இருந்தாள் தன் அம்மாவும் விழித்து இருப்பார் என்று அறிந்தவள் கண்ணை மூடி உறங்குவது போல் நடித்தாள். நடிப்பு.. இப்பொழுது எல்லாம் அதை தான் முழு நேர வேலையாக செய்துக் கொண்டு இருக்கிறாள். உள்ளே ஒன்றுமாய் வெளியே ஒன்றுமாய் மற்றவர்கள் முன்னே நடித்து நாட்களை ஒட்டிக் கொண்டு இருக்கிறாள். இதற்கு எப்பொழுது முடிவு கிடைக்கும் என அவளுக்கே பதில் இல்லை. சீற்றத்துடன் இருக்கும் அலையை போல் பொங்கிய உணர்வுகளை உறக்கம் என்ற நடிப்பில் அடக்கி இருந்தாள்.
அடுத்தநாள் கல்லூரிக்கு கிளம்பி வந்தவள் நேராக வகுப்பிற்கு சென்றாள். போன வாரம் இந்நேரம் விளையாட்டு விழாவில் கல்லூரியே களைகட்டி இருந்தது. இப்பொழுது அடுத்த நடக்க இருக்கும் செமஸ்டர் தேர்வை நோக்கி நகர வகுப்பில் கவனம் செலுத்தினாள் ருத்ரா. அவள் வழமையாக இருப்பது போல் வெளியே காட்டிக் கொண்டதனால் ஜூலிக்கு எந்த ஒரு மாற்றமும் அவளிடம் தெரியவில்லை. சகஜமாய் அவளுடன் பேசி மற்றவர்களிடம் வம்பிழுத்துக் கொண்டு இருந்தாள். ஆனால் ருத்ரா முகத்தில் இருக்கும் அமைதியை வைத்தே ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தான் ஸ்ரீ. அவளிடம் கேட்க வேண்டும் என்று மனம் துடித்தாலும் தாம் கேட்பதனால் இன்னும் அவளுக்கு சங்கடம் ஏற்படுமோ என்று விட்டான். அவளின் கவனத்தை ஈர்க்க பேச்சை மாற்றினான்.
“நம்ம எல்லாரும் ஒன்னா படத்துக்கு போலாமா?” என ஸ்ரீ கேட்க கண்களை அகல விரித்த ஜூலி, “டேய் டிரில் மாஸ்டர்.. வாழ்க்கையில முதல் தடவையா உருப்படியா ஒன்னு சொல்லி இருக்க டா.. நான் வரேன்” என குதுகளித்தவள் தலையிலே தட்டினான் ராஜேஷ். “நீ எதுக்கு தான் டி வராம இருந்து இருக்க.. நாங்க சைட் அடிக்க போனாலும் கூடவே தொத்திட்டு வர.. இன்னும் நீ சரக்கு அடிக்காதது தான் மிச்சம்” என்க, “அதை நீங்க பண்ணி இருந்தா அதையும் சாக்கா வச்சி நானும் ட்ரை பண்ணுவேன்.. எனக்குன்னு வாழபழமா வந்து வாச்சி இருக்கிங்களே” என நொடித்துக் கொண்டாள் ஜூலி. ஸ்ரீ அவளை அழுத்தமாய் பார்க்க என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள். அவன் ருத்ராவை கண் காட்ட ஜூலி அப்பொழுது தான் அவளை கவனித்தாள். “ருத்ரா நீ ஏன் அமைதியா இருக்க.. நீ படத்துக்கு வரில்ல?” என்றவளை தயக்கத்துடன் பார்த்தவள், “நான் வீட்டுல கேட்டு சொல்லவா?” என்க அனைவரும் அமைதியாய் அவளை பார்த்தார்கள்.
“ஓகே ருத்ரா.. நீ கேட்டு சொல்லு ஒன்னும் பிரச்சனை இல்ல..” என முதலில் சூழலை இலகு படுத்த கூறினான் ஸ்ரீ. ஜூலிக்கும் அப்பொழுது தான் ஏதோ சரி இல்லை என்று தோன்றியது. அவளை பற்றி யோசித்த பொழுது தான் அன்று அவள் யாரோ ஒருவருடன் வண்டியில் சென்றது அவளுக்கு நினைவு வந்தது. அதை பற்றி கேட்க வாயை திறக்க அவளின் வாட்டமான முகத்தை கண்டு பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டாள். “ஜூலி நானும் ராஜேஷும் முன்னாடி கிளம்புறோம் நீங்க ரெண்டு பேரும் பாத்து போங்க” என்று கண்ணாலே அவளிடம் சைகை காட்டி விட்டு ராஜேஷை அழைத்துக் கொண்டு சென்றான் ஸ்ரீ. ஜூலி உடன் தனிமையில் இருந்தாலாவது ருத்ரா அவள் மனம் திறந்து பேசுவாள் என்று எண்ணிய ஸ்ரீ தனிமை குடுத்து கிளம்பினான். அவன் சென்ற பின் ஜூலி ருத்ர தோளில் கையை போட்டுக் கொள்ள ருத்ரா அவளை அறியாமல் அவள் தோளில் சாய்ந்தாள். இந்த ஆறுதலை தான் அவள் மனம் எதிர் பார்த்ததோ என்னவோ சட்டென்று அவளையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. ஜூலி ஒன்றும் கேட்கவில்லை. அவள் அழட்டும் என அமைதியாய் அவள் முதுகை நீவி விட்டாள்.
“ருத்ரா.. இப்படியே அமைதியா இருக்காத.. நானா உன் கிட்ட எதுவும் கேட்க மாட்டேன்.. உனக்கா எப்போ சொல்லனும்ன்னு தோணுதோ சொல்லு.. நான் உன்ன தப்பா நினைப்பேன்னு நினைச்சி சொல்லாம இருக்காத.. நம்ம நல்ல friends.. எனக்கு ஸ்கூல் முடிச்ச அப்பறம் கிடைச்ச ஒரு நல்ல friend நீ.. ஸ்ரீயும் ராஜேஷும் இருந்தாலும் உன் கூட இருக்குற பான்ட் வேற.. எதுனாலும் நீ தாராளமா என் கிட்ட பேசலாம்.” என் ஆறுதல் கூற விம்மி அழுதாள் ருத்ரா. வாய் வரை வரும் வார்த்தைகளை அவளால் சொல்ல முடியவில்லை. “இதை பத்தி அப்பறம் பேசவா?” என கண்களை துடைத்துக் கொண்டே கேட்பவளை பார்த்து புன்னகை உடன் தலை அசைத்தாள் ஜூலி. சொல்லாமலே புரிந்துக் கொள்ளும் நட்பு கிடைக்க தாம் குடுத்து வைத்து இருக்க வேண்டும் என நினைத்தாள் ருத்ரா. பழகிய சிறிது நாட்களே ஆனாலும் மூவரும் அவளை நன்றாய் புரிந்துக் கொள்வதை கண்டவளுக்கு மனதில் சொல்ல முடியாத வலி உடன் அமைதி உண்டானது.