கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-20
கலையிழந்த முகத்துடன் மருத்துவமனை மெத்தையில் படுத்துக் கொண்டு ஜன்னல் வழியே வெளியே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ருத்ரா. அவள் எண்ணம் யாவும் ஸ்ரீ மீதே இருந்தது. தாம் தான் அவனை காதலித்து இருக்கிறோம் அவன் தன்னை காதலிக்கவே இல்லையே அவனின் பழக்கத்தை தாம் தவறாக காதல் என்று எண்ணி அவன் மீது ஆசையை வளர்த்துக் கொண்டோமே.. இனி நட்பாக கூட அவன் முன்னாள் சென்று நிற்க முடியாதே என்று எண்ணி சோர்ந்தவளுக்கு கண்ணீரும் வற்றி போய் இருந்தது. இத்துடன் இரண்டு நாட்களாய் மருத்துவமையில் கிடைக்கிறாள். அழுது அழுது ஓய்ந்தவள் மயங்கி சரிய.. அதீத காய்ச்சலில் வாடினாள். உடலில் தண்ணீர் சத்து மிகவும் குறைவாக இருப்பதனால் சலைன் ஏற்ற வேண்டும் என்று அவளை மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்க வைத்து விட்டார்கள். இந்த இரண்டு நாட்கள் முழுவதும் மூன்று வருடங்களாய் ஸ்ரீயை மனதில் நினைத்துக் கொண்டே கடந்த நாட்களை எண்ணி பார்த்தாள். அவனின் பார்வை, அவன் பேசும் விதம் எல்லாம் காதல் என்று தாமாக தான் கருதி இருக்கிறோம் என்று நினைக்கவே அவளின் நெஞ்சம் வலித்தது. அவனிடம் காதலை கூறினாள் உடனே அதை ஏற்றுக் கொண்டு தன் தந்தையிடம் பேச வருவான் என்று அவள் கனவு எல்லாம் கானலாகி போனது. அனைத்திலும் தெளிவாய் நன்றாய் யோசித்து முடிவு எடுக்கும் தாம் ஸ்ரீயை எப்படி தவறாக எண்ணினோம் என்ற குற்ற உணர்வு அவளின் நெஞ்சை அரித்தது. ஆரம்பத்தில் இருந்து அவள் மட்டும் தான் காதலித்து ஒருதலை காதலாக இருந்து இருந்தாள் அவளுக்கு இவ்வளவு நம்பிக்கை இருந்து இருக்காது. அதே போல் இருவரும் ஒன்றாய் காதலித்து இப்பொழுது பிரிய வேண்டும் சூழல் ஏற்பட்டு இருந்தாள் கூட அவர்கள் சேர்ந்த இருந்த நாட்களை எண்ணியாவது அகம் குளிர்ந்து இருப்பாள். ஆனால் தாமாகவே காதல் என்று நினைத்து அபார நம்பிக்கை உடன் அவனுடன் வாழ்வோம் என்று மனதில் பெரிய கனவு கோட்டைகளை கட்டி இருந்தாள். அதை எல்லாம் கிரஷ் என்ற ஒரே வார்த்தையில் முடித்து விட்டான் ஸ்ரீ. நட்பாய் பழகியவனை காதல் என்று நினைத்து விட்டோமே என்று வருந்தினாள். அதே போல் கல்லூரியில் தன்னை பார்க்கும் பொழுது அவன் கண்ணில் இருக்கும் உயிர்ப்பு, மகிழ்ச்சி இத்தனை ஆண்டுகளுக்கு பின் பார்த்த நொடி அதில் சிறிதளவு கூட இல்லையே என்று வருந்தினாள். உண்மையாகவே காதல் இருந்தாள் தானே அது இருந்து இருக்கும்.. அவன் தான் காதலிக்கவே இல்லை என்று கூறி விட்டானே பிறகு எப்படி அது இருக்கும் என தனக்குள்ளே பேசிக் கொண்டாள் ருத்ரா. கண்களும் உடலும் தூக்கத்திற்காக ஏங்க அவளின் கண்கள் இமை மூட மறுத்து விட்டது. மூன்று வருடத்தில் அவள் தனிமையில் இருக்கும் நேரத்தில் எல்லாம் கண்ணை மூடினாலே அவனை நினைத்துக் கொண்டு தானே நேரத்தை கடத்தினாள். இப்பொழுதும் மூடிய இமைகளுக்கு இடையே அவன் தோன்றிட கண்களை மூடாமலே வெறித்துக் கொண்டு இருந்தாள். மருந்து சாப்பிட்ட பிறங்கு தான் அதன் தாக்கம் தாங்க முடியாமல் அவளை அறியாமலே கண்ணயர்வாள். சதாசிவமும் லக்ஷ்மியும் மிகுந்த வேதனையில் வாடினார்கள். அவளின் நிலைமையை கண்டே என்ன நடந்து இருக்கும் என்று ஓரளவு யூகித்து இருந்தார்கள். அன்று காலையில் மிகவும் ஆசையாக அல்லவா கிளம்பி சென்றாள். திரும்பு வருகையில் அழுது வீங்கிய முகத்துடனே இருக்க நடந்ததை புரிந்துக் கொண்டார்கள். பெற்றவர்களின் மனம் தவித்தது. காதலை எதிர்ப்பவர்கள் இல்லை. ஆனால் மகள் வேதனையில் இருப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. இதற்கு தானே இது எல்லாம் வேண்டாம் என்று சொன்னேன் என கடிந்துக் கொண்டார் லக்ஷ்மி. சதாசிவம் ஒரு வார்த்தை ருத்ராவிடம் கேட்கவே இல்லை. மிகவும் கனிவோடு அவளை பார்த்துக் கொண்டார். அதில் தான் ருத்ராவிற்கு இன்னும் நெருடலாக இருந்தது.
மூன்று வருடத்திற்கு பிறகு யுகன் அவர்களை பார்க்க வந்தான். அப்பொழுதும் ருத்ராவை வந்து எட்டி பார்க்கவில்லை.. அவள் நிலையை உணர்ந்து வெளியே சதாசிவம்க்கும் லக்ஷ்மிக்கும் ஆறுதல் கூறி விட்டு சென்று விட்டான். அவள் முன்னே சென்று நின்றாள் எங்கே மீண்டும் தன்னை தவறாக எண்ணி விடுவாளோ.. இப்பொழுதும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வந்து இருக்கிறேன் என்று கூறி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு. அவன் வாசல் உடனே கிளம்பி செல்வதை ருத்ராவும் பார்த்தாள். தன் அப்பா அம்மாவை எவ்வளவு கஷ்ட்டபட வைக்கிறோம் என்ற எண்ணம் அவளை கொஞ்சம் கொஞ்சமாய் தின்றது. யுகன் சொன்னது போல் அவள் மற்றவர்களை பற்றி சிந்திக்கவே இல்லையே.. ஸ்ரீ விடையத்தில் கூட அவன் விருப்பம் தெரியாமல் தாமாக ஒரு முடிவெடுத்து விட்டோமே என்று நினைத்து இன்னும் அழுதாள்.
அவள் அழுது கொண்டு இருக்க டிச்சார்ஜ் படிவத்துடன் அறை உள்ளே நுழைந்தார் சதாசிவம். மகள் அழுவதை எந்த தந்தையால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்?
“அம்மாடி.. அழாத டா… அப்பாக்காக அழாம இரு டா.. உனக்கு உடம்பு சரி இல்ல.. இன்னும் அழுதா இன்னும் உடம்புக்கு ஏதாவது வந்துரும்” கெஞ்சலுடன் கேட்கும் குரலில் வெடித்து அழ வேண்டும் என்பது போல் இருக்க பட்டென்று கண்களை துடைத்துக் கொண்டாள் ருத்ரா.
“சாரி பா.. அழலை..”
“நம்ம வீட்டுக்கு போலாம் டா..” என சதாசிவம் கூற சம்மதமாய் தலை அசைத்தவள் எழுந்துக் கொள்ள அவளின் கையை பிடித்து மெல்ல அழைத்து சென்றார். ருத்ராவின் விழிகள் அவர் பிடித்து இருந்த கரங்களிலே படிந்து இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு வீடு வந்து சேர சதாசிவம் அவளை அறையில் படுக்க வைக்க லக்ஷ்மி அவளுக்கு குடிக்க வெந்நீர் காய்ச்ச சென்றார். சதாசிவம் கைகளை பற்றிய ருத்ரா, “அப்பா.. சாரி பா.. தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது.” என திரண்டு வந்த கண்ணீர் உடன் கூற பரிவாக தலையை கோதிய சதாசிவம், “நீ தெரிஞ்சே தப்பு பண்றவ இல்ல டா மா.. சில நேரம் வாழ்க்கை நம்ம கத்துக்க வேண்டிய பாடத்தை காயம் மூலமா உணர்த்தும்.. அதுக்காக நம்ம அப்படியே துவண்டுட கூடாது..” என்று கூறிட அமைதியாய் தலை அசைத்தாள் ருத்ரா.
“அம்மாடி.. நான் அவசரபடுத்துறேன்னு நினைக்காத.. உனக்காக மூணு வருஷம் நாங்களும் வெயிட் பண்ணோம்.. இதை பத்தி பேச இது நேரம் இல்லன்னு நீ நினைக்கலாம்.. ஆனா உன்ன இப்படியே விட்டா நீ இந்த நினைப்புலையே இருந்துருவியோன்னு பயமா இருக்கு.. அப்பா சொல்றதை கேப்பியா?” என ஏக்கத்துடன் சதாசிவம் கேட்க அவரை இமைக்காமல் பார்த்தாள் ருத்ரா. என்ன கூற வருகிறார் என்று புரியாமல் இருக்குமா? ஸ்ரீ வந்து பேசவில்லை என்றால் அவர் கை காட்டும் ஆடவனை திருமணம் செய்துக் கொள்வதாக வாக்கு குடுத்து இருந்தாலே.. தகப்பனாய் அவரின் பயம் என்ன என்று அவளுக்கு புரிந்தது. ஆனால் இன்னும் காயமே ரணமாக வலித்துக் கொண்டு இருக்க இந்த நேரத்திலா என்று யோசித்தாள்.
“அப்பாக்கு வாக்கு குடுத்து இருக்கமா.. உடனே இல்ல.. இன்னும் ஆறு மாசம் கழிச்சி கண்டிப்பா உனக்கு கல்யாணம் நடக்கும்.. ஆனா அதுக்கான சம்மதம் எனக்கு வேணும்..” என சதாசிவம் அவளின் கையை பிடித்துக் கொண்டு கனிவுடன் கேட்க தன்னிச்சையாக அவள் தலை அசைந்தது. அவளால் மறுக்கவும் முடியவில்லை ஏற்கவும் முடியவில்லை.
“அதுக்குள்ளே நீ சரி ஆகிடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. யுகன் தம்பிக்கு உன்ன கல்யாணம் பண்ணி குடுக்கணும்ன்னு எனக்கும் ராமுக்கும் ரொம்ப ஆசை.. நீ ரெஸ்ட் எடு.. கொஞ்சம் கொஞ்சமா நிதர்சனத்தை புரிஞ்சிக்க” என்று கூறிய சதாசிவம் அங்கு இருந்து கிளம்பினார். ருத்ராவிற்கு இன்னும் மனம் வலித்தது. வார்த்தைகளால் அவனை நோகடித்து விட்டு இன்னும் வாழும் காலம் முழுவது எப்படி அவன் முகத்தில் முழிப்போம் என்ற குற்ற உணர்வு. இதில் தன் காதல் வேறு யுகனுக்கு தான் முதலில் தெரியும்.. இப்பொழுது யுகன் அனுபவிக்கும் வேதனையையும் வலியையும் அவள் அனுபவித்துக் கொண்டு இருந்தாள். கண்ணீர் துளிகள் வற்றும் அளவிற்கு அழுது ஓய்ந்தவள் அப்படியே உறங்கி போனாள்.
மாலை பொழுது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்கவும் தான் கண் விழித்தாள் ருத்ரா. வரட்சியான குரலில் உள்ளே வருமாறு ருத்ரா கூற கையில் ஜூஸ் உடன் அவள் அறை உள்ளே நுழைந்தான் யுகன். அவனை கண்டதுமே அதிர்ந்தாள் ருத்ரா.. அன்று அவன் வீட்டில் எதிர் எதிரே பார்த்தவள் தான் அதன் பின் அவன் அவள் கண் முன்னே வரவே இல்லை. இன்று தான் இங்கு வருகிறான்.
“ருத்ரா.. இப்ப எப்படி இருக்க?” என தயக்கத்துடன் யுகன் கேட்டு ஜூஸ்சை அவளிடம் குடுத்தான். லேசாய் கீழே குனிந்தபடியே தலை அசைத்த ருத்ரா ஜூஸ்சை மிடறினாள்.
“ருத்ரா உன் பிரண்ட்ஸ் கிட்ட என்ன ஆச்சுன்னு விசாரிச்சேன்.. நீ பீல்” என்று யுகன் சொல்லி முடிக்கும் முன்பே அவனை தடுத்த ருத்ரா, “நான் அவனை லவ் பண்ணேன் யுகா.. நான் மட்டும் தான் அவனை லவ் பண்ணி இருக்கேன்.. எல்லாத்தையும் தப்பா நினைச்சிட்டேன்.. எனக்கு வலிக்குது யுகா.. சாரி.. அன்னிக்கு உன்ன அப்படி பேசிட்டேன்.. இப்போ உன் வலி என்னன்னு எனக்கு புரியுது.. எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு.. ஆரம்பத்துல இருந்து எல்லாத்தையும் நான் தப்பா நினைச்சிட்டு இருந்து இருக்கேன்” என்று வெடித்து அழ துவங்கினாள். யுகனுக்கு அவளை வாரி அனைத்து நெஞ்சில் சாய்த்து ஆறுதல் படுத்த வேண்டும் என்று தோன்றியது. இன்னொருவனுக்காய் அவள் அழும் வேதனையை விட அவளின் கண்ணீர் துளிகள் அவனின் இதயத்தை ரணமாக்கியது.
“ருத்ரா ப்ளீஸ் அழாத.. ப்ளீஸ் எனக்கு கஷ்ட்டமா இருக்கு.. உனக்கு உடம்பு சரி இல்ல..” என யுகன் கைகளை இறுக மூடிக் கொண்டு அவனை கட்டுப்படுத்திக் கொண்டு கூற கண்களை அழுந்த துடைத்துக் கொண்ட ருத்ரா, “யுகா அப்பா உன் கிட்ட பேசுனாருல?” என அழுத்தமாய் கேட்க கீழே குனிந்தபடி தலை அசைத்தான் யுகன்.
“உனக்கு வேணாம்ன்னா சொல்லு ருத்ரா..” என யுகன் கசந்த மனதுடன் கூற, “உண்மைய சொல்லனும்ன்னா நான் எதையுமே இப்போ யோசிக்குற நினைப்புல இல்ல.. அப்பாக்காக தான் நான் சரின்னு சொன்னேன்.. எனக்கு கொஞ்சம் டைம் குடு யுகா.. நான் என்ன மாத்திக்க ட்ரை பண்றேன்” என கலங்கிய விழிகளுடன் ருத்ரா கூற அவளின் கைகளை இறுக பற்றினான் யுகன்.
“உனக்காக நான் என்ன வேண்ணாலும் செய்வேன் ருத்ரா.. உனக்காக காத்து இருக்க மாட்டேனா.. இந்த ஒரு வார்த்தை எனக்கு போதும்.. முதல் காதல் குடுக்குற வலி என்னனு எனக்கு தெரியும்.. உன்ன நான் வற்புர்த்த மாட்டேன்.. ஆனா ஒன்னு மட்டும் மனசுல வச்சிக்க ருத்ரா நான் உனக்காக எப்போதுமே இருப்பேன்” என்று உறுதியுடன் கூற ருத்ரா பேச்சற்று அவனை பார்த்தாள்.