Loading

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-9

ஞாயிற்று கிழமை அதுவுமாக வெளியே மிகவும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தான் ஸ்ரீ. அடர் நீல நிற சட்டையை உடுத்தி கண்ணாடி முன்பு நின்றவன் பாட்டை முணுமுணுத்தபடியே தலையை வாரிக் கொண்டு இருந்தான். குளித்து முடித்து வந்த அபி அவன் கிளம்பிக் கொண்டு இருப்பதை பார்த்து, “எலி ஏன் டா அம்மணமா ஓடுது?” என நக்கல் பேச்சில் அவனை ஆராயும் பார்வை பார்த்தாள். ஸ்ரீ திருட்டு முழி முழித்தவன் மனதில், “இவ மட்டும் நம்மளை எப்படியாவது கண்டு புடிச்சிறாலே.. அசராத ஸ்ரீ.. சமாளி.. இல்லன்னா வீட்டுல பத்த வச்சிரும் இந்த பரட்டை” என சொல்லிக் கொண்டவன் அவள் பக்கம் திரும்பாமலே, “எலி என்னிக்கு டவுசரு போட்டு பாத்து இருக்க?” என மொக்கையாய் சமாளித்தான். 

“அய்ய ச்சி பே.. நீ இப்படி எல்லாம் கிளம்புற ஆளு இல்லையே.. படத்துக்கு தானே போற? என்னமோ உன் ஆளு கூட போற மாதிரி ஓவர் குஷியா இருக்க? யாரு கூட போற?” என சந்தேகமாய் பார்த்தபடியே கேட்டாள். அண்ணன்கள் மறைவாக செய்யும் காரியத்தை உன்னிப்பாய் கவனித்து மோப்பம் பிடித்து கண்டுக் கொள்வது தங்கைகளின் வேலை ஆயிற்றே.. அதனை சிறப்பாக செய்தாள் அபி. “லூசு தனமா பேசாத.. நான் பிரண்ட்ஸ் கூட தான் போறேன்.” என சமாளித்தவன் அவன் தாய் பக்கம் திரும்பி போயிட்டு வருவதாக கூறி விட்டு அபி தலையிலே நறுக்கென்று கொட்டி விட்டு ஓடினான். இன்று மிகவும் மகிழ்ச்சி உடன் இருந்தான். ருத்ரா படத்துக்கு வருவதாக ஒப்புக் கொள்ள அந்த வார இறுதியிலே செல்ல முடிவெடுத்தார்கள். அவன், ருத்ரா, ஜூலி, ராஜேஷ் மட்டும் தான் என மகிழ்வுடன் இருந்தான். ருத்ராவை அருகே அமர வைத்து படத்தை பார்க்க வேண்டும் என ஆசைபட்டான். நேரிலே சென்று டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்து இருந்ததனால் சீக்கிரமே கிளம்பினார்கள். அனைவருமே கல்லூரிக்கு அருகே இருக்கும் திரையரங்கிற்கு செல்ல திட்டமிட்டு இருந்ததனால் கல்லூரியிலே சந்திக்கலாம் என முடிவு செய்து இருந்தார்கள். பஸ்ஸில் சென்றுக் கொண்டு இருக்க ஜூலி அவள் கிளம்பி விட்டதாக தகவல் கூறினாள். ருத்ரா நேரடியாக கல்லூரிக்கே வந்து விடுவதாக கூறி இருந்தாள். அதனால் ஸ்ரீ வரும் வழியில் பேருந்து நிலையத்தில் இருந்து ஜூலி மற்றும் ராஜேஷ் உடன் வருவான். ருத்ரா கிளம்பி இருப்பாளா? வந்து இருப்பாளா? அவளை காக்க வைக்கிறோமோ? என பலவாறாக யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு பத்து நிமிட பயணமும் நீண்டுக் கொண்டே இருந்தது. 

ருத்ரா வீட்டில் இருந்து கிளம்பிக் கொண்டு இருக்க அவளின் இந்த மாற்றம் அவளை பெற்றவர்களுக்கும் மகிழ்வே.. அவள் கேட்டாள் வேண்டாம் என சொல்லிட மாட்டார்கள். ஆனாலும் அவளுக்கே செல்லலாமா வேண்டாமா என்ற யோசனை இருந்தது. அதனால் தான் சாக்கு போக்கிற்கு வீட்டில் கேட்டு சொல்வதாக கூறினாள். ருத்ரா கிளம்பிய நேரம் அவள் அம்மா அவளிடம் காசு குடுத்து, “தம்பி உன்ன ட்ரோப் பண்றதா சொன்னுச்சு.. பிரண்ட்ஸ் கூட பத்திரமா போயிட்டு வா” என கூற கேள்வியாக புருவம் சுருக்கினாள் ருத்ரா. அதே நேரம் வாசலில் பைக் ஹாரன் சத்தம் கேட்க அவளுக்கு யாரை கூறுகிறார்கள் என்று புரிந்தது. தயக்கத்துடன் தலையை அசைத்து விட்டு கிளம்பினாள். 

வெளியே வந்தவள் ஹெல்மட் அணிந்தவனை பார்த்து, “உங்களுக்கு ஏன் சிரமம் நானே போய்பேன்ல..” என சிறிய குரலில் கூறினாள். தன்னால் அவனுக்கு இவ்வளவு இடையூறு என்ற குற்ற உணர்வு அவளுக்கு. அவனோ அவளுக்கு பதில் சொல்லாமல் வண்டியின் ஆக்சிலரேட்டரை திருவினான். பெரு மூச்சுடன் வண்டியில் ஏறிக் கொண்ட ருத்ரா, “என்ன காலேஜ் பேக் கேட்ல விட்டுடுங்க..” என கூறிட வண்டியை புயல் போல் கிளப்பி இருந்தான். அவனுக்கு தெரியாதா அவள் எதற்காக இப்படி கூறுகிறாள் என்று. மற்றவர்களுக்கு தான் யார் என்று தெரிந்து விடக் கூடாது என்ற எண்ணம். பைக்கை ஒட்டியவனுக்கு முகத்தாடை இறுகியது. பத்தே நிமிடத்தில் வேகமாய் அவள் சொன்னது போல் அவள் கல்லூரி பின் பக்கம் வாசலில் இறக்கி விட்டவன் மறு நொடியே அங்கு இருந்து காற்றை கிழித்துக் கொண்டு கிளம்பினான். நேரே அவன் சென்ற இடம் அருகே இருக்கும் திரையரங்கிற்கு தான். கல்லூரி உள்ளே நுழைந்த ருத்ரா இரண்டாம் வாயிலில் மற்றவர்களுக்காக காத்திருந்தாள். அவள் வந்த சிறிது நேரத்திலே அங்கு வந்தான் கார்த்திக்.  

ஜூலி பேருந்து நிலையத்தில் ஸ்ரீ மற்றும் ராஜேஷ்க்காக காத்திருந்தாள். கைகடிகாரத்தை பார்த்தவள், “இவனுங்க வேற வந்து தொலைய மாட்டிங்குரானுங்க.. என்ன நிக்க வைக்குறதே பொழப்பா வச்சி இருக்கானுங்க” என நொந்துக் கொள்ள அவள் பின் தலையில் தட்டினான் ராஜேஷ். “பைத்தியம் தனியா பேசிட்டு இருக்க..” என்றவாறே நடந்தான் ஸ்ரீ. “சீக்கிரம் வர மாட்டிங்களா? ருத்ரா வந்துட்டா.. வாங்க டா” என ஜூலி நடக்க ஸ்ரீ விறு விறுவென்று முன்னே நடந்தான். அவனை சலிப்பாக பார்த்தபடியே இருவரும் பின்னே நடந்தார்கள். கல்லூரியை நெருங்கும் வேளையில் ருத்ராவை கண்ட ஸ்ரீ அப்படியே நின்றான். அவன் முகம் கடுப்பில் எள்ளும் கொள்ளுமாய் வெடித்தது. 

“அவனுக்கு இங்க என்ன டி வேல…” என பல்லை கடிக்க ஜூலி திருட்டு முழி முழித்தாள். அவள் முழிப்பதே சரி இல்லை என்று உணர்ந்த ராஜேஷ், “என்ன டி ஆச்சு? எதுக்கு கார்த்திக் ருத்ரா கூட நின்னுட்டு இருக்கான்? நம்ம மட்டும் போறது தானே பிளான்?” என கேட்க தடுமாறினால் ஜூலி. “ஆ.. அது வந்து சாரி டா.. நேத்து ருத்ரா கால் பண்ணி கார்த்திக்கும் வரேன்னு சொல்றான்னு சொன்னா.. அவனுக்கு எப்படி தெரியும்ன்னு கேட்டா அவ தான் பேச்சு வாக்குல உளறிட்டாலாம்.. அதான் நானும் வேணாம் சொன்னா நல்லா இருக்காதேன்னு சரின்னு சொன்னேன்” என உள்ளே போன குரலில் கூற ஸ்ரீ அவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்தான். “பிசாசு முன்னவே சொல்லி இருந்தா பிளான் கேன்சல் பண்ணி இருப்பேன்.. இன்னொரு நாள் மாத்தி வச்சி இருக்கலாம்” என கடுப்படிக்க, “லூசு.. ருத்ரா வீட்டுல சரின்னு சொன்னதால தான் அவளே வந்து இருக்கா.. அவங்க மனசு மாறி அப்பறம் வேணாம் சொல்லிட்டா போகவே முடியாது.. நீ இப்படி பண்ணுவன்னு தெரிஞ்சி தான் உன் கிட்ட சொல்லலை..” என்றிட அவளை திட்ட வாயெடுத்தவன் அப்படியே மூடிக் கொண்டான். ருத்ரா இருக்கும் திசையை பார்க்க இருவரும் பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்கள். அவனுக்கு வயிர் எரிந்தது. 

“எனக்குனே வரான்.. அவ கூட பக்கத்துல மட்டும் நான் உக்காரலை மவளே உன்ன உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்.” என கோவத்தில் போங்கியவனை கெஞ்சி சமாளித்து அழைத்து வந்தாள் ஜூலி. அவர்கள் வருவதை பார்த்த ருத்ரா பெரிதாய் புன்னகைத்து கையை அசைத்தாள். ஸ்ரீக்கு அவனை மட்டுமே அவள் வரவேற்பது போல் இருந்தது. இதில் அவனை பணியில் உறைய வைப்பது போல், “ஸ்ரீ இந்த ஷர்ட் உனக்கு நல்லா இருக்கு” என ருத்ரா கூறிட சிறகில்லாமல் பறந்தான். அதில் கார்த்திக் வந்ததனால் இருந்த கோவம் எல்லாம் அவனுக்கு மறந்தே போனது. ஐந்து பேரும் நடக்க ஆரம்பிக்க ருத்ரா ஜூலி உடன் பேசி சிரித்தபடியே நடந்தாள். ஸ்ரீயின் விழிகளும் அவளையையே ரசித்தது. டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைய இப்பொழுது சீட்டில் அமரும் போட்டி… பெண்கள் இருவரையும் நடுவே அமர வைக்க நினைத்தாலும் தன் அருகில் ருத்ராவை எப்படி அமர வைப்பது என்ற எண்ணம் ஸ்ரீக்கு. ருத்ரா பின்னே கார்த்திக் செல்ல போக பட்டென்று அவனின் கையை பிடித்தாள் ஜூலி. அவன் கேள்வியாக பார்க்க, “ஈ.. பாப்கார்ன் வாங்கணும் கூட வரியா? நம்ம எல்லாருக்கும் வாங்கிட்டு போலாம்..” என சமாளிப்பவளை பார்த்து உதட்டுக்குள் சிரித்து சம்மதித்தான். ஸ்ரீ ஜூலிக்கு பெரிய நன்றி மனதில் சொல்லிக் கொண்டான். 

“உனக்கு என்ன பாப்கார்ன் பிடிக்கும்?” என கார்த்திக் கேட்க கடுப்பாக முகத்தை சுளித்தவள், “எதுக்கு அதையும் நீயே திங்கவா?” என கூறி லயனில் நின்றாள். “ஹே அன்னிக்கு ஹாஸ்டல் பசங்க எல்லாம் வாங்கிட்டு வர சொன்னானுங்க அதான்.. உனக்கு குடுக்க கூடாதுன்னு இல்ல.. அதுவும் இல்லாம சாரி..” என தயக்கத்துடன் கூறுபவனை ஏற இறங்க பார்த்து கண்டுக் கொள்ளாமல் அவளுக்கு வேண்டியவற்றை வாங்கினாள். அவள் பணம் குடுக்கும் வேளையில் கார்த்திக் சரியாக பணத்தை குடுத்து அவள் கையை பிடித்து அழைத்து வந்தான். “ஹே.. நானே குடுத்து இருப்பேன்.. எதுக்கு நீ குடுத்த இந்தா காசு” என்று பணத்தை நீட்டியவள் கையை அவள் பக்கம் தள்ளி விட்டு, “அது எல்லாம் வேணாம்.. அன்னிக்கு நடந்ததுக்கு சாரி.. ப்ளீஸ் என்ன அவாய்ட் பண்ணாத.. அவங்க கிட்ட பேசுற மாதிரி என் கிட்டயும் ப்ரீயாவே இரு..” என்று கூறியவனை புரியாமல் பார்த்தாள் ஜூலி. அவன் ஏன் எதற்காக இப்படி கூறுகிறான் அதுவும் இல்லாமல் நாம் எப்போது அவனை ஒதுக்கினோம் என்று யோசித்தாள். 

“ருத்ராவும் நானும் பிரண்ட்ஸ் ஸ்ரீக்கு குறுக்க நான் வர மாட்டேன்.. நீயும் அப்படி யோசிக்காத” என்றவனை பார்த்து கண்களை அகல விரித்தாள் ஜூலி. 

ஜூலி, “உனக்கு எப்படி தெரியும்?” 

“அவன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது.. நீயும் என்ன அவன மாதிரி தானே நினைச்ச?” என கூறியவனை பார்த்து உடனே மறுப்பாய் தலை அசைத்தவள், “ச்ச அப்படி இல்ல..” என சமாளிக்க வந்தவளை இடை வெட்டிய கார்த்திக், “அப்பறம் எதுக்கு தேவையே இல்லாம என்ன ஸ்னக்ஸ் வாங்க கூட்டிட்டு வந்த?” என கேட்டவனை பார்த்து பதில் சொல்ல முடியாமல் நின்றாள் ஜூலி. கார்த்திக் எங்கே ருத்ரா அருகே அமர்ந்து விடுவானே என்ற நினைப்பில் தான் அவனை அழைத்து வந்தாள். அவன் அதனை கண்டுக் கொள்வான் என அவள் எதிர் பார்க்கவில்லை. உள்ளே சென்ற பின் ஸ்ரீ, ருத்ரா, ஜூலி, கார்த்திக், ராஜேஷ் என ஐவரும் வரிசையாக அமர்ந்து சீதா ராமன் திரைப்படத்தை மகிழ்வுடன் பார்த்தார்கள். ஸ்ரீ அருகே அமர்ந்ததில் ருத்ராவிற்கு சொல்ல முடியாத உணர்வுகள் அவளுள் எழுந்தது. தன்னிச்சையாய் விரியும் இதழை அடக்க பெரிதும் கடினப்பட்டு படத்தை பார்த்தாள். ஸ்ரீ நிலைமை சொல்லவா வேணும்.. கவனம் எல்லாம் ருத்ரா மீது இருக்க அவளை திரும்பி பார்க்க முடியாத தவிப்பில் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தான். இருவருக்குள்ளேவும் காதலின் முதல் அத்தியாயம் அங்கே துவங்கியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. டேய் நீ இன்னும் flashback yosikkala thana 😂😂super da