Loading

ரிஷி, சஞ்சய் மற்றும் நளினி ப்ரகாஷ் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“மனோவும் ஜானகியும் வீட்டை விட்டு போனதும் நான் நிம்மதியா இருந்தேன். பத்து மாசத்துல நீ பிறந்த. அப்பக் கூட அவங்களையும் உன்னையும் போய் பார்க்கணும்னு எனக்கு தோனலை. நளினியும் அப்பாவும் மட்டும் தான் உன்னை வந்து பார்த்தாங்க. அதுல அப்பாக்கு பயங்கர கோவம். கூட பிறந்த தம்பியை விட இந்த பணம் பெரிசா போச்சுல அதனால நான் இனிமே கம்பெனிக்கு வர மாட்டேன். நீயே பார்த்துக்கனு சொல்லிட்டார். நான் அதுக்கும் ரொம்ப சந்தோஷம் தான் பட்டேன். இனிமேல் நான் தான் அங்க எல்லாம்னு. அதுக்கு அப்புறம் நீ பிறந்த ஒன்றரை வருஷத்துல சஞ்சய் பிறந்துட்டான். மனோவும் ஜானகியும் எந்த விகற்பமும் இல்லாம சஞ்சயை பார்க்க வந்தாங்க. அப்பக் கூட நான் அவங்ககிட்ட முகம் கொடுத்துப் பேசலை. நம்ம வீட்டை விட்டு போனதும் மனோ ஷாம்பவியோட அப்பா ஈஸ்வரோட சேர்ந்து ஏற்றுமதி இறக்குமதி பிஸ்னஸ் பண்ணான். அது நல்ல லாபத்துல போச்சு. நம்ம பிஸ்னஸ் அவங்களதை விட பயங்கர லாபத்துல போச்சு. அதுல எனக்கு தலைக்கனம் வந்துருச்சு. அப்பாவ பார்க்கும் போதுலாம் கர்வமா அவர் முன்னாடி இருப்பேன். பாருங்க உங்க பையனைவிட நான் நல்லா பண்றேனு. அப்ப தான் கேட்பார் பேச்சு கேட்டு என் வாழ்க்கையோட திசையே மாற ஆரம்பிச்சுச்சு.” கூறிவிட்டு, அவர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வந்தார்.

பல வருடங்களுக்கு முன்பு,

ஒரு நாள் ப்ரகாஷ் அவர் அறையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்தான் வரதன், ப்ரகாஷின் பி.ஏ.

“சார் இன்னும் நீங்க வீட்டுக்குப் போகலையா??”

“இல்லை வரதன். கொஞ்சம் வேலை இருக்கு. நீ கிளம்பு.”

“சார் நான் ஒன்னு சொன்னா நீங்க கோவப்பட மாட்டீங்கள??”

“முதல்ல விஷயத்தை சொல்லு.”

“இல்லை சார். இந்த ஆஃபிஸ்கு முரளி சாரும் தான் எம்.டி. நீங்களும் தான் எம்.டி. ஆனால் பார்க்குறவங்களுக்கு அப்படித் தெரியலையே!!!”

“என்ன சொல்ற வரதன்?? கொஞ்சம் புரியற மாதிரி பேசுறியா??”

“சார் நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க. அங்க முரளி சார் அவ்ளோவா எந்த வேலையும் செய்ய மாட்டீங்குறார். சும்மா மேற் பார்வை தான் பார்க்கிறார்
ஆனால் நீங்க பாருங்க எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்றீங்க. ஆனால் ஷேர் மட்டும் சரிக்குச் சரியா?? பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே சார்.”

“என்ன சொல்ற நீ??? நான் பிழைக்கத் தெரியாதவனா??” என்று கோவமாகக் கேட்டார்.

“பின்ன இல்லையா சார். இந்த காலத்துல எந்த முதலாளி வேலை பார்த்துட்டு இருக்காங்க??? எல்லா வேலையையும் நம்பிக்கையா ஒருத்தர்கிட்ட குடுத்துட்டு அவங்க ஜாலியா ஊர் ஊரா சுத்துறாங்க. இப்ப முரளி சார பாருங்க அவர் பொண்டாட்டியோட ஜாலியா வெளி ஊர் போய்ருக்கார். ஆனால் நீங்க இங்க மாடா உழைக்குறீங்க.” என்று கூற, ப்ரகாஷ் யோசனையோடு பார்த்தார்.

“நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்கள் இஷ்டம்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். வெளியே வந்தவன் நேராகச் சென்றது கங்காவின் அலுவலக அறைக்குத் தான்.

“மேடம் நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன். அவரும் யோசிக்க ஆரம்பிச்சிட்டார்.”

“அவனுக்கு நீ பேசுனதுல எதுவும் சந்தேகம் வரலைல???”

“இல்லை மேடம். அவர் என்னை முழுமையா நம்புறார்.”

“குட். இனிமே நீ நான் சொல்ற மாதிரி தான் நடந்துக்கணும் சரியா. உனக்கு அதுக்கு ஏத்த மாதிரி பணம் நான் கொடுப்பேன்.”

“சரிங்க மேடம். நான் உங்கள் விசுவாசி.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். அவன் வெளியே வந்தவுடன் கங்கா,”இந்த ப்ரகாஷ் சரியான லூசு. இப்ப தான் முரளிக்கு குழந்தை பிறந்திருக்கு. அவன், அவன் பிள்ளையையும் குழந்தையையும் பார்க்க போய்ருக்கான். அத கூட புரிஞ்சுக்காத முட்டாளா இருக்கான்.” என்று தனக்கு தானே கூறி சிரித்துக் கொண்டார்.

அவர் நினைத்தை போலவே காய்களை நகர்த்தினார் கங்கா. வரதன் வைத்து ப்ரகாஷின் மூளையை மழுங்கடித்து நிறுவனம் பக்கம் வராமல் பார்த்துக் கொண்டார். ப்ரகாஷும் முதலாளிகள் ஜாலியாக இருக்க வேண்டும் ஊழியர்கள் உழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வரதனின் தப்பான போதனையால் சுய அறிவை இழந்து தகாத பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டார். இரவு நேரம் வீட்டுக்குக் குடித்துவிட்டு தான் வருவார். முதலில் அழுத நளினி பிறகு வெறுத்து அமைதியாகி விட்டார். குடிக்கச் சென்ற இடத்திலிருந்த ஆசாமிகள் மூலம் சூதாட்டப் பழக்கத்தை கற்றுக் கொண்டார். அதன் மூலம் முதலில் நிறையச் சம்பாதித்தாலும் அதன் பிறகு சம்பாதித்ததை விட நிறைய இழந்தார். இதில் சற்று தெளிந்த ப்ரகாஷ் என்ன செய்வதெனத் தெரியவில்லை. இந்தச் சந்தர்பத்தைத் தான் எதிர்பார்த்த கங்கா அவருடைய வேலையை ஆரம்பித்தார். இதனால் வீட்டிலும் கம்பெனிலும் சண்டை வெடித்தது.

ப்ரகாஷ் கம்பெனி பணத்தை எடுத்து தான் சூதாடினார். அதனால் கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதுவரை அவர்கள் அனுப்பிய செக் பவுன்ஸ் ஆனாதே இல்லை. முதல் முறை அப்படி நடந்தவுடன் தங்கள் கம்பெனி பெயர் கெட்டுப் போகக் கூடாதென கங்கா பாட்டி தங்கள் பணத்தை தருவதைப் போல் தந்தார். இந்த பிரச்சனை காரணமாக ப்ரகாஷை நிறுவாகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும், அவரின் பங்குகளை முரளியின் பெயரில் எழுதி தர வேண்டும் என்று கங்கா கூறினார். இதைக் கேட்டு நாராயணனுக்கு கோவம் வந்தது. அவர் கங்கா பாட்டியைப் பார்த்து,”கங்கா என்னமா இது?? பங்கை உங்க பேருக்கு எழுதிக் கொடுத்துட்டா அப்புறம் அந்த கம்பெனிக்கு எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு ஆகிடும்.”

“அதுக்கு நான் என்ன பண்றது அண்ணா. உங்க பையனால நாங்க தான் நஷ்டம் பட்டோம். கம்பெனி காசை எடுத்து சூதாடிருக்கான். ப்ரகாஷ்னால எவ்ளோ லாஸ் தெரியுமா. எல்லாத்தையும் சரி பண்ணது நான். எங்களோட காசை கொடுத்து தான்.”

“சரி மா அவன் பண்ணது தப்பு தான். ஏதோ கோவத்துல நானும் சரியா கவனிக்காம விட்டுட்டேன். எனக்காகக் கொஞ்சம் பார் மா. இதுக்கு வேற வழியில்லாமையா இருக்கும்????”

“சரி உங்களுக்காக அண்ணா. நீங்க பங்க குடுக்க வேண்டாம். அதுக்கு பதில்ல நான் அவனுக்காக குடுத்த காசை திருப்பி குடுங்க.” என்று கூற, அவருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை.

“எனக்கு ஒரு இரண்டு நாள் டைம் தான் மா. நான் யோசிச்சு சொல்றேன்.” என்று கூறி அப்போதைக்கு பிரச்சனையை தள்ளி போட்டார். கங்கா பாட்டியும் இவர்களுக்கு பங்குகளைத் தருவதை விட வேறு வழி இல்லாததால் தைரியமாகச் சென்றார்.

நாராயணன் எதுவும் யோசிக்கவில்லை தன் இரண்டாவது பையன் மனோவை அழைத்தார். இதற்கு ப்ரகாஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

“அப்பா இப்ப எதுக்கு அவனைக் கூப்பிடுறீங்க??”

“பின்ன நீ பண்ண வேலைக்கு யாரும் நமக்குக் கடன் கூட தரமாட்டாங்க. அதை விட எனக்கு யார்கிட்டயும் கடன் வாங்க விருப்பமில்லை. இதுக்கு மேல உன் பேச்சைக் கேட்டு நான் அமைதியா இருந்தா எங்க அப்பா ஆரம்பிச்ச கம்பெனி எனக்கு இல்லாமையே போய்டும். அதனால் நீ அமைதியா இருந்தா உனக்கு நல்லது.” என்று கடுங் கோபத்துடன் கூற, ப்ரகாஷ் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

மனோஹர் ஈஸ்வருடன் வந்தார். நாராயணன் நடந்த எல்லாவற்றையும் கூற, மனோக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன் அண்ணன் ஏன் இப்படி ஆனார் என்று. ஆனால் அதை யோசிக்கும் நேரம் இதுவல்ல என்று முடிவெடுத்து என்ன செய்யலாமென யோசித்தார். அப்பொழுது தான் ஈஸ்வர்,”மனோ ரொம்ப யோசிக்காத அவங்க நமக்கு குடுத்த காசை திருப்பி குடுத்துறலாம்.”

“எப்படி டா குடுக்க முடியும்?? என்கிட்ட அவ்ளோ அமவுண்ட் இல்லை. இப்ப தான் கைல இருந்த காசு எல்லாத்தையும் போட்டு வீடு வாங்கினேன். சரி அதை வித்துரலாம்.” என்று மனோ கூற, நாராயணனும் நளினியும் பதறினார்கள்.

“இல்லை இல்லை அதலாம் வேண்டாம். வேற வழி எதாவது இருக்கானு பார்க்கலாம்.” என்று நாராயணன் கூற, அதுக்கு மனோ,”இல்லை அப்பா எந்த வழியும் இல்லை நமக்கு.”

“ஏன்டா வழியில்லாம?? நான் இருக்கேன். நான் பார்த்துக்கிறேன்.”

“என்னடா சொல்ற நீ??”

“ஆமா பணத்தை நான் தரேன். நீ திருப்பி தரணும்னு இல்லை. அதுக்கு பதில்ல உன் பையனுக்கு என் பொண்ண கல்யாணம் பண்ணி வைச்சுடு அது போதும்.” என்று ஈஸ்வர் கூற, நாராயணன், நளினி மற்றும் மனோஹருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுக்கு என்ன பேசுவதெனத் தெரியவில்லை. மனோ அவரை அணைத்துக் கொண்டு,”டேய் கண்டிப்பா ஷாம்பவி என் மருமகள் தான் அதுக்கு நான் பொறுப்பு. ஆனால் நீ பணத்தை திருப்பி வாங்கிக்கோடா.”

“ஆமா பா அவன் சொல்றது சரி தான்.”

“இல்லை பா. நீங்க என்னை உங்க மகனா நினைச்சா பணத்தைத் திருப்பி தர வேண்டாம்.”

“சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் நீ தர பணத்துக்கு நம்ம கம்பெனி ஷேர்ஸ உன் பேர்ல எழுதிடலாம். இது தான் ஃபைனல். நீ இதுக்கு ஒத்துக்கிட்டா நான் உன்கிட்ட இருந்து வாங்கிக்குறேன்.” என்று நாராயணன் கூற, வேறு வழியில்லாமல் தலை ஆட்டினார் ஈஸ்வர்.

இதை அறிந்து கொண்ட கங்கா பயங்கரமாகக் கோவம் கொண்டார். அவர் நகர்த்திய காய்கள் அனைத்துக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது. இப்பொழுது எல்லாம் புதுசாக செய்ய வேண்டும். இதுவரை தன் மேல் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இனியும் சந்தேகம் வரமால் நடந்து கொள்ள வேண்டும். உடனே எதுவும் செய்து மாட்டிக் கொள்ள கூடாது என்று யோசித்து அமைதி காத்தார்.

நாட்கள் நகர்ந்தன. நாராயணன் குடும்பத்தாருக்கு அந்த நிறுவனத்தில் பாதி பங்கு உள்ளது. அந்த பாதியில் பாதி ஈஸ்வர் பெயருக்கு எழுதப்பட்டது. மிச்ச பாதி மனோஹர் பெயரில் எழுதப்பட்டது. இதை கேள்விப்பட்ட ப்ரகாஷ் மிகுந்த கோவம் அடைந்தார். ஆனால் அவரால் எதுவும் பேச முடியவில்லை. நிறுவனம் முன்னை விட நன்றாகவே லாபம் பார்த்தது. ப்ரகாஷ் மருத்துவரின் துணை கொண்டு மதுப் பழக்கத்திலிருந்து முழுதாக வெளி வந்தார். அவரது கெட்ட சகாக்களை விட்டு ஒதுங்கி வந்தார். அவருக்கு அந்த நபர்களை விட நிறுவனத்தின் முதலாளி பதவி முக்கியம். இதில் பெரிதாக அதிர்ந்தது கங்கா தான். அவரின் ஒட்டு மொத்த ப்ளானும் சொதப்பி விட்டது.

நாட்கள் அதன் போக்கில் சென்றன. ஈஸ்வர் மற்றும் மனோ பெயரில் ஷேர்ஸ் இருந்தாலும் அவர்கள் கம்பெனி பக்கம் சென்றதில்லை. அதனால் ப்ரகாஷும் அமைதியாக அவரின் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு ரிஷி. ஆனால் ஒரு நாள் திடீரென அப்பா கம்பெனிக்கு வந்தார். அங்க எல்லாத்தையும் பார்த்துட்டு பின்னாடி இருக்கிற நம்ம ஃபேக்ட்ரிக்கு போனார். அங்க என்ன நடந்துச்சுனு தெரியலை. அப்பா கோவாமா மனோ வீட்டுக்குப் போனார். அப்புறம் என்ன நடந்துச்சுனு தெரியலை அடுத்த நாளே அப்பா மனோவோட கம்பெனிக்கு வந்து இனிமே மனோ தான் கம்பெனிய பார்த்துக்க போறதா சொன்னார். என்னை அவன் கீழ வேலைப் பார்க்கச் சொன்னார். எனக்கு கோவம் வந்து நான் அதுக்கு அப்புறம் கம்பெனி போகலை. ஒரு மாசம் அவங்க என்ன என்னமோ கம்பெனில பண்ணாங்க. வக்கீல்லாம் அடிக்கடி வந்துட்டு போனாங்க. என்ன நடக்குதுன்னே புரியலை. நான் கோவமா இருந்ததுனால அதைப் பத்தி பெரிசா எடுத்துக்கலை. அப்புறம் ஒரு நாள் மிட் நைட்ல எனக்கு ஒருத்தன் கால் பண்ணி நீங்க சொன்ன மாதிரியே உங்க தம்பி குடும்பத்தை கொலை பண்ணிட்டோம். அதுல உங்க அப்பாவும் உங்க தம்பியோட நண்பனும் கூட செத்துட்டாங்க அப்புறம் உங்க தம்பி பையன் மட்டும் ஹாஸ்பிட்டல்ல உயிருக்கு போராடிட்டு இருக்கானு சொன்னான். எனக்குத் தூக்கி வாரி போட்டுருச்சு. நீ யாருனே தெரியாதுன்னு சொன்னதுக்கு. அவன் உடனே எனக்கு ஒரு வீடியோ அனுப்புனான். அதுல நான் ஒருத்தன்கிட்ட மனோவ கொலை பண்ண சொல்லி இருக்கிறேன்.” இதைக் கேட்டதும் ரிஷி,சஞ்சய் மற்றும் நளினிக்குப் பயங்கர அதிர்ச்சி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்