Loading

உயர்ந்து நின்ற கட்டிடத்தின் பணிரெண்டாவது தளத்தில் இருக்கும் அலுவலக அறையில் ஒருவன் கண்ணாடி தடுப்பு சுவர் வழியே நகரத்தின் பரபரப்பை இடுங்கிய கண்கள் வழியே பார்த்தவாறு தேநீர் பருகிக் கொண்டிருக்க,

அந்நெடிய மௌனத்தை இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த மற்றொருவன் கலைத்தான்.

“என்னால உன்னை புரிஞ்சிக்கவே முடியலடா சஞ்சய்…!”

சலிப்பாக வந்தது தருணின் குரல். இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். படித்து முடித்து இணைந்து சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

“நீ என்னை இதுவரை புரிஞ்சிக்கலைன்னு நினைக்குறியா?”

சஞ்சயின் கேள்வியில் தருண் அமைதியாக இருக்க,

“என்னைப்பற்றி முழுசா புரிஞ்சி வச்சிருப்பதால் தான், இத்தனை வருடமாக என்னோடு இருக்கிறாய்.”

சஞ்சய் சொல்லுவது உண்மையும் கூட, எதிலும் நேர்மையை விரும்புபவன், கோபம் எளிதில் வந்துவிடும். இப்படித்தானென்று வரையறுத்து வாழ்பவன். எதையும் முகத்திற்கு நேராக சொல்லும் குணம் உடையவன். தவறென்று தெரிந்துவிட்டால் அவனிடத்தில் மன்னிப்பே கிடையாது. அது யாராக இருந்தாலும் தூக்கி எறிந்திடுவான். அது தந்தையாகவே இருந்தாலும் அவனின் நியாயம் அதுதான்.

ஒருமுறை அவனின் தந்தை ராம் தொழில் விடயமாக வீட்டில் வைத்து ஒரு கிளைன்டிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, தாமதமாக தேநீர் கொண்டு சென்றதற்காக தன் தாயை அடிக்க கை ஓங்குவதை பார்த்தவன், அன்றோடு அவருடன் பேசுவதை நிறுத்தியிருந்தான்.

ராம் கேட்டதற்கு, “உங்கள் மனைவி, அடிப்பதற்கு உங்களுக்கு உரிமையும் இருக்கலாம். ஆனால் வெளி ஆள் முன்பும் அப்படி நடந்துகொள்வது சரியா?” எனக் கேட்டிருந்தான்.

இந்த கேள்விதான் அவன் அவரிடம் பேசிய கடைசி வார்த்தைகள். அவரே பேச முயற்சித்து எதாவது கேட்டாலும் அவனிடத்தில் ம் என்ற ஒற்றை வார்த்தைகூட வராது.

அவரிடம் பேசவே விருப்பமில்லை எனும் போது, அவரின் தொழிலை ஏற்கவும் மனமில்லாது, தனது சொந்த முயற்சியினால் தருணை உடன் வைத்து கட்டுமானத் துறையில் தடம் பதித்து இன்று அது பல ஊர்களில் பல கிளைகளை உள்ளடக்கி விருட்சமாய் வளர்ந்து நிற்கின்றான்.

அப்படிப்பட்டவனே தவறு ஒன்றை செய்துவிட்டு, இன்றுவரை வருந்திக் கொண்டிருக்கின்றான்.

ஆரம்ப காலத்தில் தவறென்று சிந்தனையில் பதிந்த நிகழ்வு இன்று காதலாய் மாற்றம் பெற்றிருந்தது.

சஞ்சயின் மீதே பார்வையை வைத்து அவனின் நிகழ்வுகளை அலசிக்கொண்டிருந்த தருண்,

“பிடிவாதம்…” சஞ்சய்க்கு கேட்குமாறு சத்தமாகவே கூறினான். அதில் சத்தமாக சிரித்த சஞ்சய்,

“டென் பெர்சென்ட் கரெக்ட்” என்றான்.

“இப்போ என்ன செய்யப்போற?”

“தேடனும்…”

“இத்தனை வருடம் கிடைக்காதவள் இப்போ மட்டும் எப்படி கிடைப்பா(ள்)ன்னு நினைக்குற.” தருணிடம் சுத்தமாக நம்பிக்கையில்லை.

“கிடைப்பாள்… கிடைச்சு ஆகணும்.” ஒருவித உறுதி சஞ்சயின் குரலில். முடியாது என்று எல்லோரும் நினைக்கையில், உள்ளுக்குள் முடியுமென்று இறுதி வாய்ப்பாக ஒரு குரல் கேட்குமே, அந்த குரல் அவனிடத்தில். அக்குரலுக்கான அர்த்தம் புரிந்த தருண் அமைதியாக இருக்கையில் அமர்ந்துவிட்டான்.

“என்னடா என்னை புரிஞ்சிக்க முடியலையா?”

“இதைத்தான் ஆரம்பித்திலேயே சொன்னேன்.”

“இந்த விடயத்தில் மட்டும் என்னால் உன்னை கணிக்கவே முடியவில்லை சஞ்சய். கிட்டத்தட்ட த்ரீ மன்த்ஸ், அவள் உன் பின்னாடி சுத்தி சுத்தி வந்து சொன்னப்போலாம் வராத காதல் இப்போ எப்படி வந்துச்சுன்னு எனக்கு தெரியல.”

“அதுதான்டா எனக்கும் புரியல.” தருணின் கூற்றிற்கு உடனடியாக சஞ்சயிடமிருந்து பதில் வந்தது.

“இங்கப்பாரு சஞ்சய், உன் குற்றவுணர்விற்காக காதல் வரக்கூடாது.” நண்பன் ஏதோ தவறாக உணர்ந்து காதலென்று சொல்லிக்கொள்கிறான் என்று எண்ணிய தருண் எப்படியாவது அவனுக்கு புரிய வைத்துவிட வேண்டுமென்று பேசினான்.

“நிச்சயமா இது குற்றவுணர்வினால் வந்த காதலில்லை தருண்” என்று மெல்லிய குரலில் அழுத்தமாக சொல்லிய சஞ்சய் நண்பனுக்கு தன்னை தனது காதலை புரிய வைக்க வேண்டுமென நினைத்தான். ஆதலால் சஞ்சய் சொல்லியதற்கு மறுத்து தருண் ஏதோ பேச முற்படுகையில் அவனை கை காட்டி தடுத்தான்.

“ஆரம்பத்தில் என்னால் தான், என்னுடைய ஆட்டிட்யூடால் தான் இப்படி ஆனதோ… அவளை நேரில் பார்த்து ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டால் இந்த குற்றவுணர்வு போய்விடும் என்று நினைத்துதான் அவளை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவளின் அழுத முகம், இறுதியாக அவளை நான் கண்ட தோற்றம் என்னை இம்சிக்கத் துவங்கியபோது, அது என்னவென்று எனக்கு ஆராயத் தோன்றவில்லை. அப்பவும் எப்படியாவது அவளை நேரில் பார்த்து சாரி சொல்லிவிட்டால் அவளின் முகம், அவளின் நினைவுகள் என் மனதிலிருந்து மறைந்துவிடும் என்று நினைத்துதான் டிடெக்ட்டிவ் வைத்து அவளை தேடத் துவங்கினேன். ஆனால் எப்போது அம்மா என் திருமணப் பேச்சை ஆரம்பித்தாங்களோ, அந்த நொடி என் கண் முன்னால் மின்னலெனத் தோன்றிய முகம் அவளுடையது. அன்றைய இரவினை கடப்பதற்குள் மனதில் எழுந்த எண்ணங்கள் யாவும் அவளே, அவளின் முகம் தாண்டி வேறொரு பெண்ணின் முகத்தை என்னோடு இணைத்து பார்க்கவே அவ்வளவு வெறுப்பை தந்தது. அப்போதுதான் குற்றவுணர்வைத் தாண்டி அவளிடம் என் மனம் என்றோ சென்றுவிட்டது என்று தெரிந்தது. அவள் மீதான காதல் கொண்ட என் மனம், அவளை தேடுவதற்காக எனக்கே என்னிடம் சொல்லிய காரணம் தான் இந்த குற்றவுணர்வு என்று நன்கு புரிந்தது. அவள் என்னைச் சுற்றி வந்த போது புரியாத காதல், அவள் என் கண்ணை விட்டு மறைந்ததும் புரிந்தது தான் நான் அவளுக்கு செய்த தவற்றிற்கான தண்டனை.”

நீண்டு இடைவிடாது ஒரே மூச்சாக தன்னுடைய மனதை தருணிடம் எடுத்து சொல்லிய சஞ்சய் ஓய்ந்து போனவனாக தொப்பென்று இருக்கையில் அமர்ந்தான்.

சஞ்சயின் முகத்தில் அவ்வளவு வேதனை.

தோழனின் மனம் முற்றிலும் புரிந்ததும், அவனுக்காக ஏதேனும் செய்து அவளை கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தான் தருண்.

“சஞ்சய்.”

எழுந்து சஞ்சயின் அருகில் வந்த தருண், அவனை விளித்தவாறு தோளில் கரம் பதிக்க… தருணை இடையோடு கட்டிக்கொண்டான் சஞ்சய்.

சஞ்சய் அழுகிறான் என்பதை சட்டையில் உணர்ந்த ஈரம் சொல்லியது.

நண்பனுக்காக ஒன்றும் செய்ய முடியாத தன்னிலையை தருண் அறவே வெறுத்தான். அவனுக்கும் இதுநாள் வரை தெரியாதே, அவளை இந்தளவிற்கு நேசிப்பானென்று…! இன்று தானே அவனின் மனமே தருணுக்கு புரிந்தது.

‘வெறும் மன்னிப்பு கேட்பதற்காகவா நான்கு வருடங்களாக ஒரு பெண்ணை தேடுகிறான்’ என்று அவ்வவ்போது மனதில் கேள்வி எழுந்தாலும், சஞ்சயின் குணம் தெரிந்தவன், ‘அவன் இப்படி இல்லையென்றால் தான் ஆச்சரியம்’ என்று மனதில் எண்ணிக்கொண்டான்.

“உனக்கு அழத் தெரியுமென்றே இன்று தான்டா தெரியும்.” தருணின் கண்களும் லேசாக கலங்கி இருந்ததோ…!

தருணின் இடையிலிருந்து முகத்தை நிமிர்த்திய சஞ்சய், கண்களை அழுந்த துடைத்து… “டேய் தருண் உனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் தானே, என்ன கேட்டாலும் அந்த கடவுள் தருவாருன்னு சொல்லுவியே… எனக்கு என் நிலாவை தர சொல்லுடா! ஒரே ஒருமுறை கண்ணுல காட்ட சொல்லுடா, பிறகு நான் தொலைக்கவே மாட்டேன். பத்திரமாக பார்த்துக்குவேன்” என்றான்.

அழுது பார்த்திடாத தன் தோழன் இன்று மனம் கலங்கி புலம்புவதை பார்க்க தருணுக்கு அவ்வளவு வருத்தத்தை கொடுத்தது.

“விடுடா… நீ ஃபீல் பண்ணாத, கண்டு பிடிச்சிடலாம்.” சஞ்சயிடம் அவ்வாறு கூறினாலும் எப்படி நிலாவை கண்டுபிடிப்பதென்று தருணுக்கும் பெரும் குழப்பமே…!

ஒரு காலத்தில் அவளின் பெயரை உச்சரித்தாலே கனலை கக்குபவன் இன்று “என் நிலா” என சொல்லியதிலேயே சஞ்சயின் மனதில் அவள் எந்தளவிற்கு வியாபித்திருக்கிறாள் என்று தருணால் புரிந்துகொள்ள முடிந்தது.

அந்நேரத்திலும் தருணுக்கு ஒன்றை நினைத்து இதழ் மெல்ல விரிந்தது.

“என்னிலை உனக்கு சிரிப்பா இருக்காடா?” என்று சஞ்சய் சோகமாக வினவ,

“கெத்தா முரட்டு பீஸா சுத்திக்கிட்டு இருந்த உன்னையும் ஒருத்தி காதலென்று ஆட்டி படைக்கின்றாளே…! சத்தியமா நீ சொல்லும் வரை நீயும் இப்படி காதலில் பித்தாகிப் போவாய் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை” எனக்கூறி இப்போது சத்தமாகவே சிரித்தான் தருண்.

அவனின் சிரிப்பில் சஞ்சயும் நார்மல் மோடிற்கு மாறியிருந்தான்.

“டிடெக்ட்டிவ் என்னடா சொல்றாங்க?”

“கோயம்புத்தூர் முழுக்க சல்லடை போட்டு தேடி பார்துட்டங்கடா… அவளோட முப்பாட்டன் வரலாறு கூட கிடைச்சிருச்சு, ஆனால் நிலாவை பற்றி ஒரு தகவல் கூட கிடைக்கலடா” என தருணின் கேள்விக்கு பதிலளித்த சஞ்சய்,

“நிலா, அவளோட மாமா வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்குத்தான் போறதா சொன்னதாக அக்கம் பக்கத்துல சொல்லியிருக்காங்க, அவள் போன நேரம் பெங்களூருக்கு தான் ட்ரெயின் இருந்திருக்கு. சோ பெங்களூர் ஃபுல்லா தேடியாச்சு. இனி எங்கிருந்து தேடன்னு ஒன்னும் தெரியல” என்றான்.

சஞ்சய் சொல்லியதை உள்வாங்கிய தருண் ஏதோ யோசனையிலேயே இருந்தான்.

சிறிது நேரத்திற்கு பிறகு, “நிலா போன நேரத்துக்கு பெங்களூருக்குத்தான் ட்ரெயின் இருந்தது ஓகே… பட் அவுங்க அதுல போகமா வெயிட் பண்ணி வேற எதாவது ஊருக்கு போயிருக்கலாமே” என தனது சந்தேகத்தைக் கூறினான்.

“டிடெக்ட்டிவ் அப்படி யோசிக்காமல் இருப்பாங்கன்னு நினைக்குறியாடா?”

சஞ்சயின் கேள்வியிலேயே தருணுக்கான பதில் கிடைத்தது.

“அடுத்து திருவண்ணாமலைக்குத் தான் ஒரு ட்ரெயின் இருந்திருக்கு. அங்கையும் சல்லடை போட்டு தேடியாச்சு” என்று சஞ்சய் சலிப்பாகக் கூறினான்.

ஆனால் அவனின் நிலாவை கண்டுபிடிக்க வேண்டுமென்ற வேகம் மட்டும் அவனிடம் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

“திருவண்ணாமலையிலிருந்து வேறெங்காவது போயிருந்தால்?”

“லாஸ்ட் ஒன் அண்ட் ஹாஃப் இயரா அப்படித்தான் தேடிட்டு இருக்காங்க” என்ற சஞ்சயின் மனம் தன்னவளுக்காக ஏங்கி தவித்தது.

“ஐ திங்க், ஷீ இஸ் வெரி நியர் டூ மீ” என்ற சஞ்சய், “எனக்கு அப்படி தான்டா தோணுது” எனக்கூறி இருக்கையின் பின்னால் சாய்ந்து கண்களை மூடினான். மூடிய அவனது விழிகளுக்கு நடுவில் பள்ளி முகம் மாறாத சிறு பிள்ளையின் தோற்றத்தில் அவனது நிலா தோன்றினாள்.

காதல் ஒருவனை பித்தனாக்கும் என்பதை தருண் அன்று தன் நண்பனை பார்த்து உணர்ந்து கொண்டான்.

நான்கு வருடங்களாக சஞ்சய் நிலாவை தேடுகிறானென்று தெரியும். ஆனால் நேசத்தால் தேடுகிறானென்று இன்று தான் தெரிந்துகொண்டான். நிலா என்ற பெயரை சொன்னாலே சஞ்சய் கோபம் கொள்வான் என்பதால், அவளைப்பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா என்று வார்த்தைக்காகக் கூட கேட்டுக்கொள்ள மாட்டான். அப்படி கேட்டிருந்தால் நண்பனின் காதல் என்றோ தெரிந்திருக்குமோ…! இவ்வாறு தருணால் நினையாது இருக்க முடியவில்லை.

இன்று கூட தருண் இப்பேச்சினை பேச காரணம் உள்ளது.

சஞ்சயின் அம்மா அவனின் திருமணம் குறித்து தருணிடம் பேசியிருக்க, அதனை நேரடியாக சொல்ல முடியாது சுற்றி வளைத்து நிலாவின் பேச்சினை தொடங்கியிருந்தான். அதனாலே சஞ்சயின் மனமும் தருணுக்கு தெரிய வந்தது.

‘இப்போது அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவேன்.’ மனதில் கேட்டவனுக்கு காலை சஞ்சயின் அம்மா புவனா பேசியது எதிரொலித்தது.

“சஞ்சய் உன் பிரண்ட் தானே தருண், உனக்கு கல்யாணம் ஆகிருச்சுல்ல… உன் நண்பன்கிட்ட நீயாவது எடுத்து சொல்லக்கூடாதா? அவன் பொண்டாட்டி புள்ளைன்னு வாழுறத பார்க்கணுமுன்னு உனக்கு ஆசையில்லையா?”

சஞ்சயின் அம்மா பேசியதை இப்போது நினைத்தாலும், அவரின் நிலையும் வருத்தத்தான் செய்தது.

காதல் வாழ்க்கையில் திளைத்திருப்பவனால், “உன் காதலை துறந்து அம்மா பார்த்திருக்கும் பெண்ணை மணந்துகொள்” என்று அந்நொடி சொல்ல முடியாது போக, சஞ்சயின் அம்மாவிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டினான் தருண்.

தருண் அமைதியாக இருப்பதை கவனித்த சஞ்சய்,

“என்னடா எதாவது யோசனையா?” என்று வினவினான்.

“ஒன்னுமில்லை” என தலையசைத்த தருண் “உன்னை அம்மா சீக்கிரம் வர சொன்னாங்கடா! நீ மீட்டிங்கில் இருக்கும் போது உன் மொபைலுக்கு கால் பண்ணாங்க, நான் தான் அட்டெண்ட் பண்ணேன்” எனக்கூறி அலுவலக அறையிலிருந்து வெளியேறினான்.

எதற்கு என்று அறிந்த போதும், அம்மாவின் பேச்சை தட்டாத பிள்ளையாக அப்போதே வீட்டிற்கு கிளம்பியிருந்தான் சஞ்சய். அம்மாவின் பேச்சை இதுவரை மீறிடாத அக்மார்க் நல்ல பையன் தான் சஞ்சய். தாய் சொல் மீறா தனயன். ஆனால் ஒன்றில் மட்டும் தாய் சொல்லை தட்டியே பழக்கப்பட்டவன். அது அவனின் கல்யாண விடயம்.

இவன் படிப்பை முடித்து தொழில் தொடங்கியது முதல், திருமணம் செய்துகொள்ள கெஞ்சிக் கொண்டிருக்கிறார் புவனா.

“உன் அத்தை அவங்க பொண்ணுக்கு வயசாகுதுன்னு கவலைப்படறாங்க சஞ்சு.”

அன்றே அன்னையின் முன்பே அவனின் அத்தைக்கு அழைத்து,

“உங்க பொண்ணுக்கு வேண்டுமானால் திருமணம் செய்ய சரியான வயதாகியிருக்கலாம். எனக்கு இது இல்லை” என்றவன் “உங்கள் அண்ணனுக்கு மகனே இல்லையென்றால் என்ன செய்திருப்பீர்களோ அதை செய்யுங்கள்” எனக்கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டான்.

மகனின் செயலில் புவனா விக்கித்து நின்றார்.

“நான் இன்னும் ஒன்றுமே சாதிக்கவில்லை, அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்றவனின் மனமோ, ‘இதெல்லாம் நீ உன் நிலவிற்காக சொல்லிக்கொள்ளும் சப்பை காரணங்கள்’ என்று உண்மையை சொல்லியது.

அன்றுதான் அவனும் தன் காதலை உணர்ந்து, குற்றவுணர்விற்காக தேடலை தொடங்கியிருந்தவன் காதலுக்காக தேடலை தொடர்கிறான். அன்று மகனின் மன மாற்றத்திற்காக கோவிலுக்குச் சென்ற புவனா அவன் போக்கில் விட்டுவிட்டு இன்றுதான் மீண்டும் திருமணப்பேச்சை எடுத்திருக்கிறார்.

வீட்டிற்குள் நுழைந்த மகனை சற்று தயக்கத்துடனே ஏறிட்டார் புவனா.

“என்னம்மா திரும்ப பொண்ணு பார்த்து இருக்கீங்களா?”

அன்னையின் தயக்கத்தை உணர்ந்தவன் தானே பேச்சினை துவங்கியிருந்தான்.

அவரின் மௌனமே அது தானென்று அவனுக்கு சொல்லியது.

“உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதாம்மா.” முதல் முறையாக அன்னையிடம் கோப முகம் காட்டுகிறான். ‘வேண்டாமென்று சொல்லுவதை திரும்ப திரும்ப செய்கிறாரே! என்னை புரிந்துகொள்ளாமல்!’ ஆற்றாமை அவனிடத்தில்.

“இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு இதையே சொல்லப் போகிறாய் சஞ்சு?”

“அம்மா பிளீஸ்…”

“பொண்ணு நான் முடிவு பண்ணிட்டேன். நீ வர, தாலி கட்டுற.” அவ்வளவுதான் பேச்சு என்பது போல் எழுந்து சென்ற புவனா,

“இறக்கும் தருவாயில் கூட உன் அப்பாவிடம் நீ பேசாத போதே உன் பிடிவாதத்தை பற்றி, நன்கு தெரிந்துகொண்டேன். ஆனால் நான் உனக்கு அம்மாடா!” என்று சஞ்சய் பார்த்து நேருக்கு நேராகக் கூறினார்.

‘உனக்கிருக்கும் பிடிவாதமே என்னிடமிருந்து வந்தது தான்’ என்று சொல்லாமல் சொல்லிச் சென்றார்.

தொப்பென்று இருக்கையில் விழுந்தவன், கழுத்து பட்டையை தளர்த்திவிட்டு, காலினை அகட்டி, தலையை பின்னால் சாய்த்து இருக்கையில் பதித்தவனாக… சீலீங்கில் சுழலும் மின்விசிறியை வெறித்தான். சுழலும் விசிறியை போன்று நினைவுகளும் பின்னோக்கி சுழன்றன.

நான்கு வருடங்களுக்கு முன்பு,

சஞ்சய் தனது இளங்கலை பொறியியல் படிப்பினை முடித்து, முதுகலை படிப்பான எம்.பி.ஏ இறுதி வருடத்தில் இருந்தான். கோவையில் தான் தனது படிப்பினை மேற்கொண்டான். சென்னை வாசியான அவனுக்கு ஏனோ சென்னையில் படிக்க ஆர்வமில்லாது போனது.

அந்த வருடம் தான் தனது பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி படிப்பிற்கு அடி வைத்திருந்தாள் அவனவள். சஞ்சயின் நிலா.

முதல் நாள் கல்லூரி. எல்லோருக்கும் உரித்தான உற்சாகமும் பரவசமும் அவளிடத்திலும் இருந்தது.

கல்லூரியின் வாயிலில் அவள் தன்னுடைய முதல் அடியை வைத்து, அவ்வளாகத்தை சுற்றி பார்வையை சுழல விட்டாள். பல வண்ணங்கள் நிரம்பியிருந்தன. வண்ணத்துப்பூச்சிகள் கொத்து கொத்தாக ஆங்காங்கே அமர்ந்திருக்கும் தோற்றம். முதல் வருட மாணவர்களின் முதல் நாள் என்பதால் சீனியர்கள் அவர்களை பிடித்து வைத்து ராகிங் என்ற பெயரில் நட்பை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

ஒருவன் நீரில்லா தரையில் நீச்சல் அடித்தான். ஒரு பெண் தலையில் புத்தகத்தை வைத்து சிங்கிளாக ட்ரெயின் ஓட்டிக் கொண்டிருந்தாள். இரு ஆண்கள் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தபடி, மூன்று பெண்கள் காற்றினில் சமைத்தபடி. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்று செய்தபடி சீனியர்களின் முன் நின்றிருந்தனர். அங்கிருக்கும் எல்லா மரத்தடியிலும் ஒரு கேங்க் அமர்ந்து ஜூனியர்களை பிரண்ட்லி ராக் செய்தபடி இருந்தனர். எந்தவொரு செயலும் வரம்பு மீறவில்லை.

அங்கு கண்ட காட்சிகள் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க, எதிர்பார்ப்போடு உள் நுழைந்தாள் நிலா. அவளை தழுவிய காற்று அவனை சென்றடைந்ததோ, நிலா கல்லூரியினுள் கால் பதித்த சமயம், தனது கேங்குடன் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்த சஞ்சயின் பார்வை அனிச்சையாய் அவள் பக்கம் திரும்பியது.

‘யாருடா இந்த பால்வாடி?’ அவளை பார்த்ததும் அவனுள் தோன்றியது இதுதான். பள்ளி பிள்ளையின் முகம் மாறாது இருந்தாள். பார்த்த நொடி அவனின் கவனமும் நண்பர்களிடம் திரும்பியது.

“யாரும் என்னை கூப்பிட்டிடவே கூடாது சாமி.” கடவுளை நோக்கி முணுமுணுத்தவளாக நிலா மெல்ல சென்றுகொண்டிருக்க,

“ஓய் பாப்பா” என்ற குரல் அவளின் நடையை தடை செய்தது. நிலாவை அழைத்தது ஒரு கேர்ள்ஸ் கேங்க்.

“என்னையா அக்கா!” நிலாவின் அக்காவில் அவ்வளவு அழுத்தம்.

“உன்னைத்தான் கூப்பிடுறோம் தெரியுதுல, கிட்டவா!”

“உன் பெயர் என்ன?”

“நிலாக்கா.”

“ஏய் இந்தாபுள்ள அக்கா கிக்கான்னு சொல்லி எங்க வயச ஏத்தாம்மா பேசு.” நிலாவின் தலை வேகமாக ஆடியாதோடு, “அப்போ எல்லாரும் உங்க பேரு சொல்லுங்க” என்றாள்.

“சீனியர்கிட்டவே பேர் கேட்பியா!” அந்த பெண்ணின் உரக்க ஒலித்த குரலில் நிலா சற்று பயந்துவிட்டாள் தான். இருப்பினும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“சரி ஏன் பகலில் வந்திருக்க, நிலா ராத்திரி தானே வரணும்.” நிலாவை கிண்டல் செய்துவிட்டதாக எண்ணி கன்னியர்கள் கை தட்டி சிரிக்க, ‘இது காமெடியா?’ என்ற ரீதியில் பார்த்த நிலா,

“பகலிலும் நிலா வானத்தில் இருக்கும் சீனியர்ஸ், சூரியனின் வெளிச்சத்தால் நமக்கு தெரிவதில்லை” என்றாள்.

“இந்தாடி இந்தபுள்ள நம்மள கலாய்ச்சிடும் போல, போக சொல்லிடுவோம்.” ஒருத்தி இன்னொருவளின் காதில் கிசுகிசுத்தாள்.

அதை கண்டு கொள்ளாமல் வேறொரு பெண் நிலாவிடம், “நீச்சல் அடி” என்று தரையை காண்பித்தாள்.

“எனக்கு நீச்சல் தெரியாது சீனியர்ஸ், யாராவது அடிச்சிக்காட்டுங்க” என பட்டென்று சொல்லிய நிலா அவர்களின் முறைப்பிற்கு ஆளாகிய சமயம், யாரோ யாரையோ அடித்த சத்தம் அவ்விடத்தையே அதிர வைத்திருந்தது.

சத்தம் வந்த திசையில் அனைவரின் பார்வையும் நிலைத்தது. நிலாவின் பார்வையும் கூட.

சஞ்சய் தன் கரத்தினை ஒருவனின் கன்னத்தில் இடியென இறக்கினான்.

சஞ்சையை பார்த்ததும் நிலாவின் கண்கள் சாசர் போல் விரிந்தது. அவனின் உருவத்தை ஆழியாய் விழுங்கிக் கொண்டது.

“கியூட்டி பை.” அவளையும் அறியாது வாய் சொல்லியிருந்தது. பார்த்ததும் காதலில் நிலாவும் விழுந்திருந்தாள். மனமும் காதலென்று அடித்து சொல்லியதில், அவனை விட்டு பார்வையை அகற்றாது அப்பட்டமாக சைட் அடித்தாள்.

“ஏன்டா ராக்கிங்கிற பெயரில் பொம்பளை பிள்ளைகளை டீஸ் பண்ணுவிங்களோ” என்று மீண்டும் ஒரு அடி வைத்த சஞ்சய், “இனி இந்த ராக்கிங்க்கு என்னை கூப்பிடாதீங்க” என்று தன் நண்பர்களை எச்சரித்தவன் அங்கிருந்து வகுப்பறை நோக்கி நகர்ந்தான்.

செல்லும் சஞ்சையையே நிலா பார்த்திருக்க,

“இவளுக்கு சஞ்சய் தான்டி கரெக்ட்டு, நம்மளையே சத்தமில்லாம கலாய்க்க பாக்குறா(ள்), சஞ்சய் கிட்ட ஒரு அடி வாங்குனா(ள்) அமைதியாகிடுவாள்” என்று தங்களுக்குள் ஒரு திட்டம் வகுத்த சீனியர் மாணவிகள்,

“அங்க போறான் பாரு ஒருத்தன்” என்று சஞ்சையை கை காட்டி, அவனுக்கு புரோபோஸ் பண்ணிட்டு வா! பயந்து சொல்லாமல்…”

சீனியர் வார்த்தைகளை முடிக்க கூடவில்லை. நிலா சஞ்சய் நோக்கி ஓடியிருந்தாள்.

“என்னடி இந்த ஓட்டம் ஒடுறா(ள்)”

“நமக்கெதுக்கு வம்பு, அவள் நம்மள கோர்த்து விட்டால் சஞ்சய் பிரின்சிகிட்ட கம்பளைன்ட் பண்ணாலும் பண்ணிடுவான்.” நிலா சஞ்சயை நெருங்கியதும் அந்த கூட்டம் அப்பிட்டாகி இருந்தது.

தனக்கு முன்னால் மூச்சிரைக்க வந்து நின்ற நிலாவை வினோதமாக பார்த்த சஞ்சய், என்னவென்று புருவம் உயர்த்தி வினவினான்.

“ஐ லவ் யூ சீனியர்.”

வலது கையால் இதய பகுதியை மூன்று முறை குத்தியவள், எவ்வித மேல்பூச்சுமின்றி நேராக தனது காதலை சொன்னாள்.

சற்று திகைத்தாலும், ‘இது சீனியர் யாராவது சொல்ல சொல்லியிருக்கலாம்’ என நினைத்த சஞ்சய் பார்வையை அவ்விடம் முழுக்க சுழற்ற,

“சீனியர், ஐ செட் சீரியஸ்லி. லவ் அட் 1ஸ்ட் சைட். அம் லவ் வித் யூ.” அசராது தனது கண்களை நேருக்கு நேர் பார்த்து சொல்லியவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காது “மெண்டல்” என்ற ஒற்றை வார்த்தையில் அவளை கடந்திருந்தான்.

அதன் பிறகு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிலா சஞ்சயிடம் தனது காதலை பலவிதமாக பல முறை சொல்லி பார்த்தாள்.

தருண் கூட நிலாவை சந்தித்து “சஞ்சய் கிட்ட அதிகம் வைத்துக்கொள்ளாதே, அவனை மறந்திடு” என்று சொல்லியிருக்கிறான். அவள் கேட்பதாக இல்லை.

மனதில் அவன்மீது கொள்ளை கொள்ளையாக காதலிருக்க, அவனிடம் சிறு பார்வை கூட இல்லாதது அவளின் காதல் மனதை வலிக்க செய்தது. அதனால் ஒரு முடிவுடன், சஞ்சயிடம் சென்றவள் அங்கிருக்கும் பிற மாணவர்களை கருத்தில் கொள்ளாது,

“சீனியர் எனக்கு எப்போ ஓகே சொல்லுவீங்க” என கத்தினாள். கிட்டத்தட்ட மிரட்டும் தொனி. மாணவர்கள் அனைவரும் சஞ்சய், நிலாவை பார்த்து ஏதேதோ தங்களுக்குள் கிசுகிசுக்க அவமானமாக உணர்ந்த சஞ்சய் அப்போதே நிலா மீது முதல்வரிடம் புகார் அளித்தான்.

நிலாவிற்கு பெற்றோரில்லை. வேண்டாவெறுப்பாக அத்தையிடம் வளர்கிறாள். முதல்வர் அவளின் அத்தையை வரவழைத்து பிடிபிடிவென்று பிடித்துவிட, அன்றே நிலாவின் படிப்பு முடிந்ததோடு அல்லாமல், இரவென்றும் பார்க்காமல், இதுதான் சமயமென்று நிலாவை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார் அத்தை.

அதனை அறிந்த சஞ்சய்க்கு குற்றவுணர்வு வருத்த, தனக்கும் அவளை கண்டதும் மனதில் காதல் தடம் பதித்திருப்பதை காலதாமதமாக புரிந்துகொண்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தன்னவளை தேடுகிறான்.

நினைவிலிருந்து மீண்ட சஞ்சய், மௌனமாக கண்ணீர் வடித்தான்.

நாட்கள் உருண்டதே தவிர, சஞ்சயின் பிடிவாதம் சற்றும் குறையவில்லை. புவனா அவனுக்கு மேல் பிடிவதாமாக இருந்தார்.

ஒருநாள் சஞ்சய் அலுவலகத்தில் இருக்கும் நேரம், தருண் அலைபேசியில் அழைத்திருந்தான். அவன் சொல்லிய செய்தியில், இதயம் தடதடக்க, கண்களில் அருவியென கண்ணீர் கொட்ட… காரில் விறைந்தவன் மலைக்கோவிலிற்குள் அதீத பரபரப்புடன் நுழைந்தான்.

எதிர்பட்ட தருணிடம், “எங்கு” என்று கேட்ட சஞ்சய் பொறுமையற்றவனாக நான்கு திசைகளிலும் பார்வையை அலசினான்.

தருண் கை காட்டிய திசையில் சஞ்சயின் நிலா பெண் அமர்ந்திருந்தாள். விழி மறைத்த நீரை அழுந்த துடைத்தவன், அவளின் எதிரில் சென்று நின்று தன் கைகளை அகல விரித்து, தன்னவளை நோக்கி வாவென்று தலையசைக்க…

“சீனியர்” என்ற கூவலோடு சஞ்சயின் நெஞ்சில் தஞ்சம் புகுந்திருந்தாள் அவனின் நிலா.

அங்கு அவன் மன்னிப்பு கேட்கவில்லை. அவளும் அதை எதிர்பார்க்கவில்லை. இடைப்பட்ட நாட்களில் ஒருவரின் நினைவோடு மற்றவர் வாழ்ந்ததால் புதிதாக பார்க்கும் எண்ணமின்றி காதலால் கை சேர்ந்தனர். அதுமட்டுமில்லாமல் சஞ்சயின் நான்கு வருட தேடலை நன்கு அறிந்திருந்தவளுக்கு அவனின் இப்போதைய நிம்மதியை முக்கியமென பட்டது.

“ஐ ஸ்டில் லவ் யூ சீனியர்.” அவனின் அணைப்பில் இருந்தபடியே கூறினாள்.

“லவ் யூ டூ நிலா.” சஞ்சயின் குரலில் அத்தனை காதல். நிமிடங்கள் கடந்தும் அவர்களின் அணைப்பு நீடித்தது.

“சரிசரி… தாலி கட்டிட்டு இதெல்லாம் அப்புறம் செஞ்சிக்கலாம்.” புவனாவின் குரலில் சட்டென்று விலகிய சஞ்சய் “அம்மா” என்று அதிர,

“உனக்கு நான் பார்த்த பெண்ணே நிலா தான்டா” எனக்கூறி மேலும் அவனை அதிர வைத்தார் அவனின் அன்னை.

“எனக்கும் இங்கு வந்த பிறகுதான்டா தெரியும். அம்மா கல்யாணம் சொல்லக்கூடாதுன்னு சொல்லித்தான் உன்னை கூப்பிட சொன்னாங்க” என்ற தருணை அடுத்து,

“நிலா தான் என் மருமகளென்று முடிவுசெய்து நான்கு வருடங்களாகிறது” என்ற புவனா தனக்கு நிலா எப்படி அறிமுகமெனக் கூறினார்.

அத்தை வெளியில் போ என்றதும் எங்கு போவதென்று தெரியாது ரயில் நிலையம் வந்தவள், எப்படியோ திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள். அன்று பௌர்ணமி என்பதால் சிவாலயம் வந்திருந்த புவனாவால் நிலாவை சந்திக்க நேர்ந்தது.

ஏதோவொரு உந்துதலில் அவரிடம் அனைத்தையும் கூறியவள் கண்ணீர் வடிக்க, “ஒருவயது பெண் பிள்ளையை எப்படித்தான் வெளியில் அனுப்ப மனம் வருகிறதோ” என்று நிலாவின் அத்தையை புவனா கடிந்து கொண்டிருக்கும்போது, அவரின் அலைபேசி ஒலித்தது.

திரையில் ஒளிர்ந்த புகைப்படத்தைக் கண்டு நிலா உறைந்து சிலையென இருக்க,

மகனிடம் பேசி முடித்த புவனா நிலாவை தொட்டு உலுக்கி என்னவென்று கேட்க, அவள் அலைபேசியை சுட்டிக்காட்டினாள்.

“என் மகன்” என்று அவர் சொல்ல…

“அத்தை” என்று கண்ணில் நீர் இறங்க கூறியவள் நான் சொல்லிய சீனியர் சஞ்சய் என்று சொல்ல, ஒரு நொடி புவனாவிற்குமே ஒன்றும் புரியவில்லை.

‘தன் மகனால் ஒரு பெண்ணுக்கு இந்நிலையா’ என்று மனதோடு வருந்தியவர், அவனால் நிராதரவாக நிற்கும் நிலையில் கூட, அவனின் அன்னையான தன்னை அவள் அத்தை என்றழைத்ததிலே… நிலாவின் காதலின் ஆழத்தை உணர்ந்தவர் அவளை தன்னோடு சென்னை அழைத்து வந்துவிட்டார்.

சிவாலயத்தில் நிலாவை கண்டதால், இவள் தான் என் மருமகளென்று அந்த சிவனே ஆசி வழங்கியதாக நம்பினார். அன்றே நிலா தான் தன்னுடைய மருமகளென்று முடிவெடுத்தவர், தங்களது ட்ரெஸ்டிலே தங்க வைத்ததோடு அவள் படிப்பினை தொடரவும் வழி வகை செய்தார்.

நடைந்ததை அறிந்ததும் அன்னையை அணைத்துக் கொண்டவன், “முன்பே சொல்லியிருக்கலாமே!” என்று ஆதங்கமாக வினவ, “உன் காதல் உனக்கு புரிய வேண்டாமா” என அசால்ட்டாக பதிலளித்து இருவரையும் கோவிலினுள் ஏற்பாடு செய்திருந்த மணவறைக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் காதலோடு அருகருகே அமர்ந்திருக்க, அவர்களின் ஆசியை குறித்து பல்வேறு மந்திரங்கள் ஓதி ஐயர் தாலியெடுத்துக் கொடுக்க, தன் நிலாப்பெண்ணின் பார்வையோடு தனது காதல் பார்வையை கலக்கவிட்டவன்… அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான்.

அக்கினியை வலம் வரும்போது, நிலாவின் கையில் அவன் கைகோர்த்து கொடுத்த பிடியின் அழுத்தம், “இனி நானெப்போதும் உன்னை விடமாட்டேன்” என்று அவன் சொல்லுவதாக அவளுணர்ந்தாள்.

உணர்ந்த தருணம், சற்று எம்பி சஞ்சயின் கன்னத்தில் அழுத்தமாக தன் முத்திரையை பதித்திருந்தாள் சஞ்சயின் நிலா. மறுநொடி அவனும் தன் தடத்தை அழுத்தமாக அவளின் நெற்றியில் பதித்திருந்தான்.

சஞ்சயின் கண்கள் தேடி அலைந்த நிலா இன்று அவனின் கை சேர்ந்தது.

முற்றும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    1. புவனா தான் கல்பிரிட்😉😉😉🤩🤩…நாலு வருசமா பையனை தேட விட்டுட்டாங்க..அவங்க எதிர்பார்த்ததைப் போல சஞ்சயும் அவன் காதலை உணர்ந்துட்டான்..தருண் சிறந்த தோழன்..சிறப்பான படைப்பு சிஸ்..நிலா தைரியமா காதலை சொன்னது புடிச்சுது.. வாழ்த்துக்கள் சிஸ்..