டீசர்❤️
மந்திரித்துவிட்டதுபோல் அமர்ந்திருந்த தோழியைக் கண்ட சாய் “அடியே அஞ்சலை.. என்னடி பேயு கீயு எதும் அடிச்சுடுச்சா? இப்படி மந்திரிச்சு விட்டதுபோல இருக்க? நானும் வண்டில ஏறினதுல இருந்து பாக்குறேன் இப்படியே இருக்க” என்று வினவ அப்போதும் அவளிடம் பதிலில்லை.
“ஏ உன்னத்தான் அஞ்சு” என்று சளிப்புடன் சாய் அழைக்க, “நாளன்னைக்கு என்னை பொண்ணு பார்க்க வராங்களாம்” என்றாள். “அடப்பைத்தியமே! இதுக்காடி இப்படி இருக்க? நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன்” என்று சாய் கூற “காலைல சாப்பிட்டு முடிக்கவும் அப்பா வந்து பேசினாங்க சாய். யாரோ தரகர் வந்து பேசிருக்காங்க. நல்ல பையன் தான் தெரிஞ்சவங்க கிட்ட விசாரிச்சேன். சொந்த வீடு இருக்கு, நல்ல சம்பாத்தியம் தான். நாளன்னைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க உனக்கு புடிச்சிருந்தா மேல பேசலாம்னு சொன்னாங்க” என்று அனைத்தையும் ஒப்பித்தாள்.
“சரிடா.. இப்ப இதுக்கு ஏன் இப்படி பதட்டமா இருக்க?” என்று அவள் வினவ “இ..இல்லை சாய்.. நா..நான் என்னனு பேச அவர்கிட்ட? என்னத்தை பேசி இது ஒத்துவருமானு நான் முடிவு பண்ணுவேன்? என்னால எனக்கான பார்ட்னர ஒழுங்கா சூஸ் பண்ண முடியுமா? அச்சோ எனக்கு நினைச்சாலே பதட்டமா இருக்கு” என தலையை தாங்கிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
“ஏ கேர்ள்.. ஜஸ்ட் ரிலாக்ஸ். எதுக்கு இவ்ளோ டென்ஷன்?” என்றபடி அவளருகே அமர்ந்தவள் “அஞ்சு.. நீ இவ்வளவு பதட்டம் படுற அளவு இது ஒன்னுமே இல்லை. நீ அப்படியே பிரம்மாண்டமா யோசிக்காத. என்னை பார்க்க வந்ததை பார்த்ததானே? மூனு நாலு பேர் வருவாங்க. அவங்க கூட தனியா பேசும்போது இது கேட்டு தெரிஞ்சுக்கனும் அது கேட்டு தெரிஞ்சுக்கனும்னுலாம் இல்லை. அவங்க பேசுற விதமே நமக்கு உணர்த்தும். நீ கண்டதையும் யோசிக்காம ரிலாக்ஸா இரு” என்று அறிவுரை கூற குழப்பமான மனநிலையுடன் தலையசைத்தாள்.
அவளை அதிகம் யோசிக்கவிடாது வேலையில் ஈடுபடுத்தியவள் மாலை வீட்டை அடையும் நேரம் “இங்கபாரு அஞ்சல.. எல்லாரும் ஒரே போல கிடையாது. நீ குழப்பமாவே இருந்தாலும் உன் உணர்வுகள் என்னிக்குமே உன்கிட்ட பொய் சொல்லாது. கண்டதையும் நினைச்சு பயப்படாம ரிலாக்ஸா இரு” என்றுவிட்டு சென்றாள்.
உள்ளே சென்றவள் குழப்பமான மனநிலையில் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும், அவளுக்குள் இருப்பதன் பெயர் பயம் என்பதை தோழி ஒருத்தியே நன்கு அறிந்திருந்தாள். பயமா? ஆம் பயம் தான். தான் சுற்றியிருந்த கண்டு வந்த கசப்பான திருமண வாழ்வுகளைப் போன்று தனக்கொரு வாழ்வு அமையப்போகிறது என்பதில் உறுதியுடன் இருந்தவள், அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற பயமே அவளை சூழ்ந்திருந்தது.