Loading

அத்தியாயம் 9 :

நிரலிக்கு தூங்கா இரவாகிப்போனது. விடியும் வரை அவளின் பார்வை ஆதியின் மீதே நிலைத்திருந்தது.

எவ்வளவு யோசித்தும் அவளின் சிறு மூளைக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஆதியும் தன்னை காதலித்திருப்பான் என்று அவளால் நினைக்க முடியவில்லை. காதலித்திருந்தால் சந்தியாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கமாட்டான் என்பது அவளின் எண்ணம். ஆதலால் ஆதிக்கும் தன்மீது காதல் என்னும் கோணத்தில் அவள் சிந்திக்கவில்லை.

தான் வேண்டாமென்று விட்டுவிட்டு வந்த ஆதியின் தற்போதைய நிலையையும், அவனின் செயல்களை மட்டுமே ஆராய்ந்தாள். அவனின் நடவடிக்கைகள், பேச்சில் அமிழ்ந்து போனவளால் தனது காதலை சொல்ல வேண்டுமென்கிற எண்ணம் பின்னுக்குச் சென்றது.

அதிகாலை எழும் பழக்கம் கொண்ட நிரலி, எப்போது கண்ணயர்ந்தோம் என்று தெரியாமலே… தினமும் எழும் நேரம் கண் விழித்துவிட்டாள்.

அவள் கண் விழிக்கும் போது ஆதி அறையில் இல்லை. எங்கே என்று தேடியவள் அவன் அறையில் இல்லாததை உணர்ந்து குளியலறைக்குள் நுழைந்து அரை மணி நேரத்தில் புத்தம் புது மலராய் வெளியே வந்தாள். பொழுதும் நன்கு புலர்ந்திருந்தது.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாது பால்கனியில் சென்று நின்றவள் தோட்டத்தினை ரசிக்க ஆரம்பித்தாள். பல நிறங்களில் பூத்திருந்த மலர்கள் மனதிற்கு இதம் சேர்த்தன.

“என்னடா அம்பி உனக்கு கல்யாணம் அகிடுத்துன்னு என்னண்ட கூட சொல்லலையே?” எதிர் வீட்டு மாமி ஆதியிடம் ஆதங்கத்தோடு வினவினார்.

“சொல்லக்கூடாதுன்னு இல்லை மாமி, சொல்ல சந்தர்ப்பம் அமையல.”

பேச்சுக்குரல் கேட்டதும் தான் நிரலியின் பார்வை மலர்களிடமிருந்து நகர்ந்தது.

தோட்டத்தின் நடுவில் நீள்வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த நடை பாதையில் ஆதி மிதமான வேகத்தில் சீராக ஓடிக்கொண்டிருக்க, எதிர் வீட்டு மாமி ஆதியின் முல்லைச்செடியில் பூ பறித்து கூடையில் போட்டபடி அவனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

ஆதி இந்த பகுதியில் வீடு வாங்கி குடி வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகப்போகிறது. இது செல்வந்தர்கள் வாழும் பகுதியென்று கூட சொல்லலாம். ஒருவருக்கொருவர் அறிமுகமின்றி வாழும் மனிதர்களுக்கிடையில், மாமியும் ஆதியும் மட்டும் விதிவிலக்கு. இருவரும் பார்க்கும் நேரங்களில் சீண்டி கிண்டலடித்து பேசுவர்.

மாமிக்கு ஒரு மகன் மட்டும். இரண்டு பேர பிள்ளைகள். ஒரு ஆண், ஒரு பெண். ட்வின்ஸ். மாமியின் மகனும் மருமகளும் விபத்தில் இறந்துவிட குழந்தைகள் இவரிடம் வளர்கின்றன. ஒரு நாள் இரவு மாமியின் கணவருக்கு மூச்சு திணறல் அதிகமாகிவிட, அக்கம் பக்கத்தில் உதவிக்கு அந்நேரத்தில் யாரை அழைப்பதென்று நடு வீதியில் கைகளை பிசைந்துகொண்டு மாமி நிற்க, வேலையை முடித்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பிய ஆதி, அவரின் பதட்ட நிலையறிந்து கேட்காமலே சென்று உதவி செய்தான். அன்று முதல் மாமிக்கு ஆதியென்றால் பிடித்தம்.

மற்றவர்களை அளவோடு எட்ட நிறுத்தும் ஆதியும் மாமியோடு அளவற்று பழகினான். மாமியின் பேரக்குழந்தைகள் ஹரி, ஹரிணிக்கும் ஆதி விருப்பமானவன். எப்போதாவது அரிதாக கிடைக்கும் விடுமுறை பொழுதுகள் ஆதிக்கு பெற்றோர்களற்ற அப்பிஞ்சுகளுடன் கழியும்.

காலை நேர ஓட்டத்தை முடித்த ஆதி அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தான்.

“அப்புறம் ஆதி… உன் ஆம்படையாள் எப்படி?” தன் மகனாக நினைக்கும் ஆதியின் மனைவியை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார்.

“அவள் சரியான சைலண்ட் நாட்டி மாமி.”

“அப்போ உனக்கேத்தவன்னு சொல்லு.”

“எனக்கு மட்டுந்தான் மாமி.” முதன்முறையாக ஆதியின் பூரித்த முகம் பார்த்து மகிழ்ந்தார் மாமி.

“இவ்வளவு நாளா எங்கடா ஒளிச்சு வச்சிருந்த இந்த வசீகரத்தை.”

“என் பொண்டாட்டிக்கிட்ட மாமி.” சொல்லியவனின் பார்வை தற்செயலாக தங்களின் அறை பக்கம் செல்ல, பால்கனியில் நிரலி நின்று தங்களின் பேச்சினோடு தன்னையும் கவனிப்பதை அறிந்து… அவளை கீழே வரும்படி சைகை செய்தான்.

அவர்கள் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பது கேட்காவிட்டாலும், அவனின் பூரித்த முகம் கண்டு, “இவருக்கு இவ்வளவு சிரிக்கத் தெரியுமா?” நிரலிக்கு ஆச்சர்யம். ஆதி விஸ்வநாதனிடம் பேசுவதை பார்த்தாள் என்ன ஆவாளோ!

‘அவனையே பார்த்திருந்ததில் ஏதேனும் தவறாக எண்ணிவிட்டானோ’ என்று பதட்டத்துடன் வந்தவளின் தோளைச்சுற்றி கரம் போட்டு தன்னருகில் நிறுத்தியவன்… “இவங்க தான் மிஸஸ்.ஆதிதேவ் மாமி” என்று அவரிடமும், “அவங்க ருக்கு மாமி, எதிர் வீடு” என்று நிரலியிடமும் அறிமுகம் செய்து வைத்தான்.

ஆதி சொல்லிய மிஸஸ்.ஆதிதேவ்… நிரலியின் உயிர்வரை அதிர்வையும், சிலிர்ப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதின் வெம்மை நீங்கிய உணர்வு.

இருவரின் அருகிலும் வந்த மாமி,

“ரொம்ப லட்சணமா இருக்கேடி குழந்தை” என்று நிரலியின் கன்னம் வழித்தவர், “ஜோடி பொருத்தம் அம்சமா இருக்கு” என்க நிரலியிடத்தில் சிறு நாணம். அதனை மறைக்கும் பொருட்டு தலை கவிழ்ந்து கொண்டாள்.

“தேன்க்ஸ் மாமி.” அவர் சொல்லியதுக்கு ஆதி நன்றி கூறினான்.

“சரிடா ஆதி, பிள்ளைங்க ஸ்கூல் போக நேரமாயிடுத்து… அப்புறம் மாமா குதிப்பார்” என்றவர், “ஃபிரியா இருக்கும்போது ஆத்து பக்கம் வந்து போம்மா” என்று நிரலியிடம் கூறினார்.

நிரலி சரியெனும் விதமாக தலையசைக்க அவர் தன் வீட்டை நோக்கி வேகமாக நடக்க,

“மாமி நாளையிலிருந்து நீங்க சந்தன மல்லி மட்டும் பறிச்சிக்கோங்க, முல்லை பூ என் பொண்டாட்டிக்கு வேணும்” என்று சத்தமாகக் கூறினான். அதற்கு மாமியும் சிரித்துக்கொண்டே, தலையாட்டிச் சென்றார்.

‘எனக்கு முல்லை பூ தான் பிடிக்குமென்று இவருக்கு எப்படித் தெரியும்?’ மீண்டும் யோசிப்பதை துவங்கிவிட்டாள்.

உன்னை எப்போது நேசிக்கத் தொடங்கினானோ அப்போதே உன் பிடித்தம், பிடித்தமில்லாது அத்தனையும் அவன் தெரிந்துகொண்டான். உன் யோசிப்பு எல்லாவற்றிக்கும் பதில் வேண்டுமானால், உன் காதலை அவனிடம் சொல்… அடுத்த நொடி புரியாத அனைத்தையும் அவன் புரிய வைத்திடுவான்.

தன் நெருக்கத்தோடே மனைவியை வீட்டிற்குள் அழைத்து வந்த ஆதி, சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.

“தினமும் சமைக்க ஒரு அக்கா வருவாங்க, அவங்க வீட்டுல விசேடமுன்னு மூணு நாள் லீவ்.”

ஆதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே “நான் சமைக்கிறேன்” என்று நிரலி கிச்சனிற்குள் சென்றாள்.

‘உன் காதலை எப்போ சொல்லுவ பேபி. ரொம்ப வருசமா காத்திருக்கேன். நீ இப்போ சொன்னால் கூட, நீ யோசிக்கிற எல்லாத்துக்கும் கேட்காமலே நான் பதில் சொல்லிடுறேன்.’ ஒரு பெரு மூச்சுடன் மேலே அறைக்கு சென்றுவிட்டான்.

பிரிட்ஜிலிருந்து பால் எடுத்தவள், அவன் குடிக்கும் பதத்திற்கு தேநீர் வார்த்து சிறு கோப்பையில் ஊற்றி எடுத்துச் சென்றாள்.

கதவில் கை வைக்க, அது தானாக திறந்து கொண்டது. உள்ளிருந்து ஆதியின் மென் குரலில் பாடல் ஒலித்தது.

“உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம், உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்.”

ஆதிதான் வெறும் டிராக் பேன்டுடன், கழுத்தைச் சுற்றி துண்டினை போட்டு வேற்று மார்பை மூடியபடி அறையில் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.

அவனின் குரலில் லயித்தவள், அவன் பாடும் வரிகளில் தன் குழப்பத்தை அதிகரித்துக் கொண்டாள்.

தேடியது கிடைத்ததும். ஆதியின் பாடல் நின்றது. நிமிர்ந்தவன் வாசலிலே நின்றிருந்த நிரலியின் பக்கம் சென்று,

“டீ எனக்கா?” எனக் கேட்டபடி அவளின் கையிலிருந்த தேநீரை எடுத்து சுவைத்தவன் மனைவியை மெச்சுதலாக பார்த்தான். அதனை வாய் வார்த்தையாகவும் கூறினான்.

“தேன்க்ஸ் ஃபார் டேஸ்டி டீ… வெரி நைஸ்.”

அப்போதுதான் அவனிருக்கும் கோலம் கண்ணில் உரைக்க, ஒரு கணம் மெய்மறந்து தன்னவனின் முறுக்கேறிய தேகத்தை பார்வையால் பருகினாள்.

மனைவியின் பார்வை கணவனின் உரிமையான செயலுக்கு தூண்டிலிட, நொடியில் சுதாரித்தவன் கனவிலிருந்து தன்னை மீட்டிருந்தான்.

“ப்ரேக்பாஸ்ட் ரெடியா?”

நிரலியின் உயரத்திற்கு குனிந்து அவளின் காதில் தன் உதடு உரச ஆதி கேட்க, அவன் நெருக்கத்தில்… காதோரம் பட்ட கணவனின் சூடான மூச்சுக்காற்றில் சுயம் பெற்றவள், திணறலுடன் தலையசைத்தாள்.

மனைவியின் ஒவ்வொரு அசைவையும், முகம் காட்டும் பாவத்தையும் ரசித்தவன் நெஞ்சோடு சேமித்தும் வைத்தான்.

“எடுத்து வை… குளிச்சிட்டு வரேன். சாப்பிடலாம்” என்றவனுக்கு மீண்டும் தலையசைப்பையே பதிலாக தந்தவள் வேகமாக அறையிலிருந்து சென்றுவிட்டாள்.

“மனைவி அப்படிங்கிறதால தானா நெருக்கம் வந்திடுமா?, தீடிரென எப்படி இவ்வளவு உரிமையான நெருக்கம்.” மனதின் கேள்விகளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.

அடுத்த இருபது நிமிடத்தில் கிளம்பி வந்தவன், நேராக உணவு மேசையில் சென்று அமர… அவனுக்கு முன் தட்டினை எடுத்து வைத்த நிரலி… பார்த்து பார்த்து பரிமாறினாள். அவன் கேட்கும் முன்பே காலியாக காலியாக தட்டினை நிரப்பிக்கொண்டே இருந்தாள்.

பசியறிந்து உணவு வைப்பவளை தடுக்க முடியாது வயிறு நிரம்ப உண்டவன்,

“தினமும் இப்படியே சாப்பிட்டேன்னு வை… கூடிய சீக்கிரம் உன் பிள்ளையார் மாதிரி ஆகிடுவேன்” எனக்கூறி கை கழுவ செல்ல…

“பிள்ளையாருக்கு அழகே அவருடைய குண்டு வயிறு தான்” என்று நிரலி முணுமுணுத்தாள். அது அவனின் காதிலும் நன்கு கேட்டது.

“பாருடா உன் ஆளை சொன்னதும் கோவமெல்லாம் வருது” என்றவாறு வந்தவன் அவளின் துப்பட்டாவில் கையினை துடைத்தான். அவனின் உரிமையான அந்த செயல் அவளுக்கும் பிடித்தது.

“என் ஆளு அவரில்லை. நீங்க தான்.” மெல்லொலியில் வாய்க்குள் முனகளாக நிரலி சொல்லிக்கொண்டாலும், அவளுக்கு மிக அருகில் இருந்த அவனுக்கு கேட்கத்தான் செய்தது. ஆதிக்கு மனதில் சாரல் வீசும் மொமண்ட். இதழில் உதித்த புன்னகையுடன் நகர்ந்து சென்றவன் ராகவிற்கு அழைத்து அன்றைய தின பணிகளை கூறினான்.

அதற்குள் நிரலி தானும் உண்டுவிட்டு, பாத்திரங்களை கழுவி வைத்து, உணவு மேசையை துடைத்துக் கொண்டிருந்தவளிடம், அலைபேசி உரையாடலை முடித்துக்கொண்டு வந்தவன்,

“போகலாமா?” என்றான்.

ஆதியை கேள்வியாய் பார்த்தவள், “எதுவும் புரியுற மாதிரி சொல்லமாட்டிங்களா?” எனக் கேட்டாள்.

“கோர்ட்டுக்கு தான்.”

“நான்… அங்க?”

“நீ பிராக்டிஸ் பண்ண வேண்டாமா? லா தான முடிச்சிருக்க?”

ஆதி அவ்வாறு கேட்டதில் நிரலிக்கு எத்தகைய உணர்வினை பிரதிபலிப்பதென்றே தெரியவில்லை.

‘தான் சட்ட படிப்பு படித்திருக்கிறோம் என்பது எப்படித் தெரியும்?’ சிறு மூளை பெரு மூளையை தட்டியது. இப்படி அவள் யோசிப்பதற்கும் காரணமிருக்கிறதே. ஆதி தன் மூச்சு காற்று கூட தனது வீட்டிற்க்கு சென்றுவிட கூடாதென இருந்தானே. இந்த நான்கு வருடத்தில் என்ன நடந்தது, அங்கு யார் எப்படி இருக்கின்றனர், ஏன் மூர்த்திக்கு நீண்ட நாள் காய்ச்சல் கண்ட போது கூட… என்னை வரவழைக்கப் போடும் திட்டமென்று சொல்லி வரவில்லையே!’

அப்படி அனைவரின் மீதும் கோபம் கொண்டு யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல் அனைவரையும் ஒதுக்கி இருந்தவன் அவளைப்பற்றி அனைத்தும் சரியாக அறிந்து வைத்திருக்கிறானே! அவள் இதனை எப்படி எடுத்துக்கொள்வதாம்.

நிரலி பதில் சொல்லாது தன் நினைவில் மௌனமாக நின்றிருக்க,

“இந்த ட்ரெஸ்லே நல்லாத்தான் இருக்க, வா போகலாம்” என்று கை பிடித்து வெளியே அழைத்து வந்தவன், வீட்டை பூட்டிவிட்டு காரில் ஓட்டுனர் இருக்கையில் சென்று அமர்ந்தவன் எட்டி தன் பக்கத்து இருக்கையின் கதவை திறந்து, அவளை அமரச்செய்தான்.

தயக்கத்தோடு ஏறி அமர்ந்தவள், கைகளை பிசைவதுமாக, அவனின் முகத்தை பார்ப்பதுமாக இருக்க, என்ன என்று புருவம் உயர்த்தினான்.

“எக்ஸாம் முடிஞ்சே ரெண்டு வாரம் தான் ஆகுது. இன்னும் ரிசல்ட் வரல!”

“சோ வாட்… பாஸ் பண்ணிடுவல?”

“ம்.”

“அப்புறம் என்ன… நீ பிராக்டிஸ் பண்ண போறது ஏ.டி’கிட்ட, சோ போல்டா இரு… லா படிச்சிட்டு பேசவே தயங்குற. எப்போல இருந்து நீ இவ்வளவு அமைதியான?”

“நமக்கு கல்யாணம் ஆனதுல இருந்து. கொஞ்சம் சத்தமா பேசுனாலும், வாழாவெட்டியா வீட்டோட உட்கார்ந்திருக்கும்போதே இந்த பேச்சு பேசுறியே, உன்னை வந்து அவன் கூட்டிட்டிட்டு போயிட்டாலும் அப்படின்னு அம்மத்தா சொல்லும்போதெல்லாம் என் பேச்சு கொஞ்சம் கொஞ்சமா தொண்டைக்குள்ளே சிக்கிருச்சு.”

சட்டென்று ஆதியின் கைகலிலிருந்த காரின் வேகம் குறைந்தது. அதை கவனியாது நிரலி தன் மனதிலிருப்பதை கொட்டினாள்.

“உங்களுக்குத் தெரியுமா மாமா, என்னை திட்டுவதற்காகவே அம்மத்தா வீட்டுக்கு வருவாங்க.

வேணுன்னே ஏதாவது சொல்லி என்னை பேச வைச்சு திட்டுவாங்க.

ஒருமுறை சூர்யா கை பிடிச்சதுக்கு, புருஷன் கையை பிடிக்க கொடுத்து வைக்கல… அந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கமே இல்லாமல் ஆம்பளை கையை பிடிச்சி சிரிச்சிட்டு நிக்குறா(ள்) பாருன்னு எவ்வளவு பேச்சு தெரியுமா? அதுல மொத்தமா என் பேச்சு நின்னுப்போச்சு. அண்ணாகிட்ட கூட உரிமையா பேச முடியாதபடி ஆகிப்போச்சு.” இதனை சொல்லும்போது ஒருவித மரத்த நிலையில் அவள்.

இதற்கு அவன் என்ன சொல்லுவான். தன்னால் தன் செயலால் அவள் சுயமிழிந்து பலபேரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியிருக்கின்றாளே! காலம் கடந்து வருந்த மட்டுமே முடிந்தது. அதுவரை புன்னகை பூசியிருந்த அவனின் முகம் பாறையாய் இறுகியது. அடுத்தநொடி கார் காற்றை கிழித்து பறந்தது. ஒட்டு மொத்த கோபத்தையும் காரில் காண்பித்தான்.

இப்போது அவனை பார்ப்பதற்கே அவளுக்கு அச்சமாக இருந்தது. சொல்ல வேண்டுமென்று நினைத்து அவள் சொல்லவில்லை. வலியை கூட பகிர ஆளின்றி மனதில் அமிழ்ந்து  போனது அவனின் கேள்வியில் அவளையுமறியாது வெளியில் வந்திருந்தது.

ஆதிக்கு கற்பகத்தின் மேல் அவ்வளவு கோபம். அன்றிருந்த அந்த கோபத்திற்கு கொஞ்சமும் குறையாது இன்றும் கனன்றது.

‘நிரலி மீது அப்படியென்ன கோபம். அவளைவிட சந்தியா எவ்விதத்தில் உயர்ந்தவள்.’ ஆதியால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அனைவரும் விடையறியும் காலமும் அவன் கைகளில். உண்மை அறிந்தும் மௌனமாய் அவன்.

தான் வந்ததிலிருந்து ஏதாவது பேசிக்கொண்டே இருந்தவனின் இந்த அமைதி நிரலிக்கு என்னவோ போலிருந்தது. சில நிமிடங்கள் அவனையே கண் கொட்டாது பார்த்திருந்தவளுக்கு அவனின் இறுகிய முகம் வேதனை அளித்தது.

“சாரி மாமா! நான் உங்களை கஷ்டப்படுத்த சொல்லல… அது தானா”

கை நீட்டி தடுத்தவன், “அம் ரியலி வெரி சாரி பேபி” என்றான்.

“நான் என்னவோ நினைத்து செய்தது உனக்கு இவ்வளவு வலியையும், வேதனையையும் கொடுக்குமென்று யோசிக்காமல் விட்டுட்டேன். முடிஞ்சா என்னை மன்னிச்சிடு பேபி.”

ஆதி உருக்கமாக தன் தவறுக்கு மன்னிப்பு வேண்ட, அதெல்லாம் அவள் காதில் விழவேயில்லை. அவனது பேபி என்ற வார்த்தையிலேயே சிலிர்த்து அமர்ந்திருந்தாள். அவனின் வருத்தமான நிலையிலும் அவன் வாய் உதிர்த்த பேபி என்கிற வார்த்தையிலிருந்த காதல், இதம், அவ்வார்த்தைக்கு வலிக்குமோ என்று மென்வருடலாக ஒலித்த அவனின் குரலிலிருந்த கரகரப்பினை அவளால் உணர முடிந்தது.

அந்நொடி, ‘தனக்கு அவனின் செயல்களுக்கு பின்னாலிருக்கும் காரணம் எதுவும் தெரியவேண்டாம். இப்போது அவனின் குரலில் தானுணர்ந்த காதல்… கிடைக்கவே கிடைக்காதென்று ஏங்கிய அவனின் இந்த காதல் மட்டும் போதும்.’ அவளின் மனம் சத்தமின்றி மத்தளமிட்டது.

“என்ன பேபி மன்னிக்க மனசு வரலையா?”

அவளின் அமைதியை கண்டு வினவினான். இல்லையென தலையசைத்தவள், “நான் இங்க சாஞ்சிக்கவா?” என்று கேட்டு ஆதியின் தோளினை காண்பித்தாள்.

அடுத்த கணம் தன் கை நீட்டி, தானே தன்னவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான். அவளும் உரிமையாக அவனின் புஜம் பற்றி தோள் சாய்ந்தாள். அவனின் மனதில் நிறைவு. அவளின் மனதில் பேரமைதி. இருவருக்கும், ஒருவரோடு மற்றொருவர் சேர்ந்து வாழ்வதே ஆனந்தம் என்று அந்நொடி விளங்கியது.

அங்கு காதல் பகிரப்படவில்லை. இருவராலும் உணரப்பட்டிருந்தது.

 

Epi 10

ஏந்திழையின் ரட்சகன் 10

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
43
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments