அத்தியாயம் 8
நிரலி அறைக்குள் நுழைந்தபோது, பால்கனியில் நின்று ஆதி அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
அறை நன்கு பெரியதாக அனைத்து விதமான வசதிகளுடனும் இருந்தது. குளியலறை எங்கிருக்கிறதென்று கண்களால் ஆராய,
“உனக்கு ரைட் சைட் டோர் ஓபன் பண்ணு” என்று ஆதியிடமிருந்து பதில் வந்தது.
மௌனமாக தலையசைத்தவள் அதனை திறந்து உள் செல்ல, அது குளியலறை போன்றே தெரியவில்லை. ஒரு பக்க சுவர் முழுக்க வார்ட்ரோப் ஆக்கிரமித்திருந்தது. அதனெதிரில் ஆளுயர கண்ணாடி, அதன் முன்னிருந்த மேசையில் ஆதி உபயோகிக்கும் வாசனை திரவியங்கள், முகபூச்சுகள், ஹேர் ஜெல் என விதவிதமாக இருந்தது.
“ஆண்களுக்கும் நிறைய இருக்கும் போல” என்று நினைத்தவள், அவ்வறைக்குள்ளிருக்கும் மற்றொரு கதவை திறக்க, அது குளியலறையாக இருந்தது.
“ஹோ, அப்போ இது ட்ரெசிங் ரூம் போல… குளிச்சு முடிச்சுட்டு இங்க கிளம்பி தயாராகி வெளிய வர வசதியா இருக்குமுன்னு இப்படி வச்சிருக்காங்க” என்று தானே விளக்கிக்கொண்டவள்,
“ரொம்ப சோர்வா இருக்கு குளிச்சிட்டு வருவோம்” என்று குளியலறைக்குள் சென்றவள், அங்கு தான் உபயோகப்படுத்தும் சோப் புதிதாக ஒன்று இருக்கவும்… சிறு மூளையில் ஏதோ யோசிக்க சொல்லி தூண்ட அவளுக்குத்தான் புரியவில்லை.
குளித்து முடித்த பின்பே ஆடை கொண்டு வரவில்லை என்பதும், தான் கொண்டு வந்த பை கீழவே வைத்துவிட்டு வந்ததும் புரிய, ‘இப்போ எப்படி வெளியே போவது’ என்று நகத்தை கடித்தவாறு ஈர உடலுடன் நின்றிருக்க, துண்டு கூட எடுத்துவராத தன் மடத்தனத்தை எண்ணி தலையிலேயே தட்டிக் கொண்டாள்.
அந்நேரம் குளியலறை கதவு தட்டும் சத்தம் கேட்க,
“இதோ குளிச்சிட்டு வறேன்” என்று குரல் கொடுத்தாள்.
“எப்படி, ட்ரெஸ் தானா உன் கைக்கு வரவரைக்கும் தண்ணியிலே நிப்பியா?” என்று கேட்டிருந்தான் ஆதி. அவனின் குரல் கிண்டலாக ஒலித்ததை போல் தான் அவளுக்கு இருந்தது.
நிரலி மௌனமாக இருக்க,
“உன் ட்ரெஸ் வார்ட்ரோப்பில் இருக்கு, நான் போறேன் நீ வெளியே வா” என்று சொல்லிவிட்டு ட்ரெசிங் அறையை விட்டு வந்த ஆதி மெத்தையில் அமர்ந்து மொபைல் நோண்ட ஆரம்பித்தான்.
குளியலறை கதவினை திறந்து மெல்ல தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தவள், ஆதியின் அரவமின்றி இருப்பதை உணர்ந்து வேகமாக வந்து ட்ரெசிங் ரூம் கதவினை உட்பக்கமாக பூட்டிய பின் மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றி படபடப்பை குறைத்து வார்ட்ரோப் திறந்து பார்க்க, ஒரு பக்கம் முழுவதும் ஆதியின் உடைகள் நிறைந்திருக்க, மறு பக்கம் முழுவதும் அவளுக்கான உடைகள் இருந்தன. அவள் கொண்டு வந்தது இல்லாமல் நிறைய புதிய ஆடைகள் இருந்தன.
நிரலி இரவு நேரங்களில் அவளது அறையில் மட்டும் போடக்கூடிய, டீஷர்ட், பாட்டியாலா அண்ட் லாங் ஸ்கர்ட் ஆகியவையும் அதில் அடக்கம்.
தன் விழிகளை அகல திறந்து அதிர்ச்சியாக பார்த்தவளுக்கோ ஏதோ புரிந்தும் புரியாத நிலை.
அதே நிலையில் கைக்கு கிடைத்த ஆடையை உடுத்தியவள், அறைக்குள் வர, ஆதி கண் மூடி படுத்திருந்தான்.
“தூங்கிட்டாங்க போல” என்றவள் மெத்தைக்கு அருகில் வந்து, ஆதிக்கு பக்கத்தில் இரு கைகளையும் ஊன்றி குனிந்தபடி, அவனின் முகத்தின் அருகே தன் முகத்தை கொண்டு சென்று உண்மையிலேயே உறங்கிவிட்டானா என ஆராய, பட்டென கண் திறந்திருந்தான்.
அதில் உடலில் நடுக்கம் படர, ஊன்றியிருந்த கையின் பிடி தளர்ந்து அவன் நெஞ்சின் மீதே விழுந்திருந்தாள்.
அதில் கண் திறந்த ஆதி அர்த்தமாக புன்னகைத்துக் கொண்டான்.
ஆதி அணிந்திருந்த டீஷர்டின் பட்டனில் நிரலியின் காதோர முடி கற்றையாக சிக்கிக்கொண்டது. அவள் எழ முயற்சிக்க, முடி இழுத்ததில் காதோரம் வலி ஏற்பட்டது.
“ஷ்ஷ்” என்ற முனகளுடன் மீண்டும் அவன் நெஞ்சின் மீதே பொத்தென்று அவளின் தலை மோத,
“இப்படி நீ முட்டி முட்டி விளையாட என் இதயம் தான் உனக்கு கிடைச்சுதா… நீ இடிச்ச இடியில் அங்க இருக்கவளுக்கு வலிக்குது” என்றான் ஆதி.
அவனின் பேச்சு புரியாது,
“அச்சோ, சாரி மாமா… நீங்க தூங்கிட்டீங்களான்னு பார்க்க வந்தேன், அப்படியே விழுந்தேட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அவள் அவனின் பட்டனில் மாட்டியிருந்த குழலை எடுக்க முயற்சி செய்ய, அது வருவனாயென்று சண்டித்தனம் செய்தது.
தன்னவளின் மிக அருகாமை, அவளின் வாசம் என கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவனுக்கு கேசத்தின் சிக்கல் சரியாகக் கூடாதென்றே தோன்றியது.
தன் தாடை உரசும் அவளின் உச்சந்தலையில் இதழ் பதிக்க எழுந்த பெரும் ஆவலை கைகளை மடக்கி அடக்கினான்.
குனிந்தே இருப்பதில் அவளுக்கு முதுகும் வலியெடுக்க,
“இது வர மாட்டேங்குது மாமா! சிசர் இருந்தால் கொடுங்க கட் பண்ணிடலாம்” என்றாள்.
“அதுக்குன்னு எவ்வளவு முடியை கட் பண்ணுவ” என கேட்ட ஆதி மெல்ல எழுந்து அமர, அவனின் அசைவில் பட்டனோடு சேர்ந்து அவளின் முடி கற்றையும் சுழல வலி அதிகரித்ததில், அவளின் கண்கள் லேசாக கலங்கி விட்டன.
ஆதி அமர்ந்தும், நிரலி ஒருபக்கமாக சாய்ந்தவாறு குனிந்தும் இருக்க… மெல்ல அவளை தூக்கி தன் மடியில் அமர்த்தினான். அதில் அவளின் இமைகள் குடையென விரிய, அவ்விழிகளில் விரும்பியே மூழ்கி போகும் பேராவல் அவனிடத்தில். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல என்று உணர்ந்தவன், மெல்ல தனது பட்டனிலிருந்து அவளின் முடி கற்றையை பிரித்தெடுத்தான்.
முதல் முறையாக அவனின் தேகத்தோடு கூடிய அருகாமை உள்ளுக்குள் ஏதோ செய்ய, அவன் முடியை எடுத்துவிட்டதும், காதோரம் தேய்த்துக்கொண்டே வேகமாக ஆதியின் மடியிலிருந்து இறங்கி, “தேன்க்ஸ் மாமா” என்றாள்.
“இப்படி உடனே இறங்குவன்னு தெரிஞ்சிருந்தால் பொறுமையாவே எடுத்திருப்பேன்.” அவனின் பேச்சுக்களும், செயல்களும் சுத்தமாக அவளுக்கு விளங்கவில்லை.
திருதிருவென நிரலி விழித்துக்கொண்டு நிற்க, “சரி தூங்குவோமா” என்றவனின் குரலில் எதையோ நினைத்து பயம் எழ,
“நான் அங்கிருக்கும் சோபாவில் படுத்துக்கிறேன்” என்று நகரப்போனவளை ஒரே தூக்காக தூக்கி தனக்கு பக்கத்தில் படுக்க வைத்தவன் அவளை இடையோடு கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.
புதிதான அவனின் உரசலிலும், அவனது வாசனையிலும் நெளிந்துக் கொண்டிருந்தவளை இன்னும் அதிகமாக இறுக்கிக் கொண்டான்.
“இந்த நாளுக்காக ரொம்ப வருடங்களா காத்திருக்கேன் பேபி” என்று கரகரப்பாக காதோரம் மெல்லொலியில் ஒலித்த அவனின் குரலில் அவள் உணர்ந்தது எல்லாம் அப்பட்டமான காதல்.
ஆதி சொல்லியதில் பனியென உறைந்தவள், ஆதியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் போது அவன் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்தான்.
ஆதியின் உறக்கம் கலையாது மெல்ல எழுந்து அமர்ந்தவள், அவனின் முகத்தையே பார்த்திருக்க… அமைதியான ஆதியின் முகத்திலிருந்து நிரலியால் ஒன்றும் கண்டறிய முடியவில்லை. ஆனால் தனக்கு தெரியாமல் என்னவோ இருக்கு என்று நினைத்தவள், பல நாள் ஏங்கி தவித்த ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்வில் அவனருகே மீண்டும் ஒட்டி படுத்துக்கொண்டாள்.
“உங்க மனசுலயும் நானிருக்கேனா மாமா?” என்று உறங்குபவனிடம் கேட்டவளின் பார்வை ஆதியை தாண்டி, மெத்தைக்கு அருகிலிருந்த சிறு மேசையில் இரவு விளக்கின் அருகில் வீற்றிருந்த புகைப்படத்தில் பதிந்தது.
நிரலி கழுத்தில் ஆதி தாலி கட்டும் தருணம் அழகான நிழற்படமாக சட்டத்தில் இருந்தது.
‘இது இவங்களுக்கு எப்படி’ என சிந்தித்தவள், இருந்த இடத்திலிருந்தே எக்கி புகைப்படத்தை எடுக்க முயற்சித்தாள். அவளின் உடலுக்கும் மேசைக்கும் நடுவில் ஆதி.
“முப்பது வயசுக்கு மேல ஆகியும் நான் கன்னிப்பையனாத்தான் இருக்கேன். என்னை ஏதும் தப்பு தண்டா பண்ண வைக்காமல் நீ அடங்கமாட்ட போலிருக்கே” என்று தூக்கம் கலைந்த வேகத்தில் பேசிய ஆதி, நிரலியை தனக்கு கீழே தள்ளி அவள் அதரங்களை வலிக்க மட்டும் இரு விரல் கொண்டு கிள்ளி வைத்தான்.
“நான் ஏற்கனவே உன் மேல செம கோபத்துல இருக்கேன். இதுல நீ வந்ததுல இருந்து என்னை டெம்ப்ட் பண்ணிட்டே இருக்க!”
அவன் உதட்டினை அழுந்த பிடித்ததில் வலியும், தான் சொல்ல வேண்டியதை இவன் சொல்லுகிறானே என்ற எண்ணமும் தோன்ற, ஆதியின் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டு… கீழேயிறங்கி நின்றுகொண்டாள்.
“நானும் தான் உங்க மேல் கோபமா இருக்கேன்… கோபம் கழுத்து வரை இருக்கு”, நிரலி.
“சரி இருந்துக்கோ!” தோளை குலுக்கி சாதாரணமாக சொல்லியவன் “இப்போ என்ன பண்ணிட்டேன்னு இந்த தள்ளு தள்ளுற?” எனக் கேட்டான்.
“நீங்க என்ன பண்ணல… நீங்க பண்ண ஒத்த செயலால், நான் எவ்வளவு வலி வேதனை அனுபவிச்சேன் தெரியுமா? யாரோ பண்ண தப்புக்கு என்னை தண்டிச்சிட்டிங்களே!
ஏற்கனவே அம்மத்தாக்கு என்ன கண்டா ஆகாது. இதுல நீங்க அவங்களுக்கு என்னை திட்டிட்டே இருக்க வசதி செஞ்சு கொடுத்துட்டீங்க. ஒரு விசேடமுன்னா கூட வெளிய போக முடியல, எல்லோருடைய பார்வையும் என்னையே சுத்துது.
என்கிட்ட ஏதோ குறை இருக்க போயித்தான் நீங்க தாலி கட்டுனதும் விட்டுட்டு போயிட்டீங்கன்னு, எவ்வளவு பேச்சு தெரியுமா?
எல்லாம் தெரிஞ்சும் அம்மத்தா என்னை அவ்வளோ பேசுனாங்க. அவங்க பேத்தி வாழ்க்கையை நானென்னவோ திட்டம் போட்டு பறிச்சிக்கிட்ட மாதிரி, தினமும் என்னை திட்டுறதுக்காகவே வீட்டுக்கு வருவாங்க.
இதையெல்லாத்தையும் விட உச்சம்… என் பிரண்ட் கல்யாணத்துக்கு என்னால அவள் பிரண்டா கூட போய் நிக்க முடியல.
நீயே வாழவெட்டி… நீ வந்து, கூட நின்னா எம்பொண்ணு வாழ்க்கை சிறக்குமான்னு கேட்டது வேணா என் பிரண்டோட அம்மாவா இருக்கலாம். ஆனால் அதை பேச வச்சது அம்மத்தா. அவங்களுக்கு ஏன் எம்மேல இவ்வளவு வன்மம் தெரியல.
தாலி கட்டுனீங்க இல்ல, போகும் போது என் கைபுடிச்சி கூட்டிட்டு போயிருந்தால் வரமாட்டேன்னா சொல்லியிருக்க போறேன். அம்மச்சி, தாத்தா மேல கோபமுன்னா அதை அவங்ககிட்ட காட்ட வேண்டியது தானே! இதையெல்லாம் சூர்யா அண்ணா கிட்ட சொன்னால் அவன் எனக்கு மேல வருத்தப்படுறான்னு ஒரு கட்டத்துக்கு மேல் அவன்கிட்ட கூட சொல்லுறதை நிறுத்திட்டேன்.
மனசோட வலியை சொல்றதுக்கு கூட யாருமில்லாமல் எவ்வளவோ தவிச்சிருப்பேன். எத்தனை நாள் இரவு தூங்காமல் அழுதுயிருக்கேன் தெரியுமா?
இதையெல்லாம் நான் தாங்கிட்டு இருந்தேன்னா அதுக்கு ஒரே காரணம்… நான் உங்க,”
பட்டென்று வாயினை வார்த்தைகளற்று நிறுத்தியவள், நொடியில் தன் பேச்சினை சுதாரித்தவளாக சொல்ல வந்ததை தவிர்த்து பேசினாள்.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ வந்து ஒன்னுமே நடக்காத மாதிரி நீங்க நடந்துகிட்டால் நானென்னன்னு எடுத்துகிறது.
நான் சொல்ல வேண்டியதை நீங்க முந்தி சொல்லிட்டால் நீங்க தப்பு எதுவும் பண்ணலன்னு ஆகிடுமா?”
மனதளவில் தன்னவன் மீது கோபமில்லை என்றாலும், உறவினர்களின் பேச்சும், கற்பகத்தின் ஏச்சும் அவளை அறியாது அவளுக்குள் ஆதியின் மீது சிறு வருத்தத்தை உண்டாக்கியிருந்தது. சமயத்திற்காக காத்திருந்த நிரலியின் மனம் மொத்தமாக திறந்தது.
முதல் முறையாக நிரலியின் முகத்தில் கோபத்தை காண்கிறான். அதையும் அவனது மனம் ரசிக்கத்தான் செய்கிறது. அவன் ஒன்று நினைத்து செய்ய, அது தன்னவளை எந்தளவிற்கு பாதித்திருக்கென்று இப்போது அவள் பேச்சின் மூலம் தான் அவனுக்கே தெரிகிறது. அவனின் தவறு இப்போது தான் அவனுக்கே புரிகிறது.
‘உடனிருந்திருக்க வேண்டுமோ? மாமா(வேலு) சொல்லியதை மறுத்திருக்க வேண்டுமோ?’
“அப்போது அவள் சிறு பெண். நான் செய்தது சரி தான். அப்போது நான் செய்யாமல் விட்டிருந்தால், பொருத்து செய்ய வீட்டில் அனுமதித்திருக்க மாட்டார்கள். அதோடு எனக்கும் அப்போது கோபம் இருந்ததே! அதைவிட எல்லாம் சரியாக ஆராய்ந்து செயல்பட காலம் தேவைப்பட்டது.”
மனதின் கேள்விக்கு மூளை பதில் சொல்லியது.
கண்களை இறுக மூடி, ஒரே மூச்சாக தன் மனதின் இறுக்கங்களை கொட்டியவளை இமை சிமிட்டாது பார்த்திருந்தவனுக்கு அவள் சொல்ல வந்து சொல்லாது, தடுமாறி பின் தன்னை நிலை நிறுத்தி பேசியது அவனின் கவனத்திலிருந்து தப்பவில்லை.
நிரலி சொல்லாமல் விட்டதும் அவனுக்கு விளங்கியது. அதை நினைத்து மனம் மகிழவும் செய்தது. ஆனால் சொல்லாததற்கு வருத்தமும் ஒருங்கே எழுந்தது.
‘இப்போதும் உன்னால் சொல்ல முடியாதா பேபி?’ மனதின் வருத்தம் முகத்தில் பிரதிபலித்திடாது காத்தான்.
திருமணத்திற்கு முந்தைய நாள் அவனறிந்திட்ட நிரலியின் காதல், சிறகில்லாமலே ஆதியை பறக்க செய்தது. அப்போதுதான் நிரலியின் பார்வைக்கான அர்த்தமே ஆதிக்கு விளங்கியது.
அந்நேரம், நிரலியை தன்னுடையவளாக நொடியில் ஆதியின் மனம் ஏற்றிருந்தது. சந்தியாவால் முரண்டி கொண்டிருந்த இதயம் நிரலியால் சீரானது.
ஏற்பாடு செய்த திருமணத்தால் அலைப்புற்றுக் கொண்டிருந்தவனுக்கு நிரலியின் பார்வையையும், காதலையும் அனுபவித்து வாழ வேண்டுமென்கிற எண்ணம் மனம் முழுக்க வியாபிக்க… அந்நேரத்திலும் ‘சந்தியாவின் மனதில் வீணான கற்பனையை வளர்த்திருந்தால் அவளுக்கு வலியாயிற்றே, அவளும் என் அக்கா மகள் தானே! விடிந்தால் கல்யாணம் என்கிற நிலையில் அதனை நிறுத்துவது குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய அவமானம்’ என்று குடும்பத்திற்காகவும், சந்தியாவிற்காகவும் யோசித்தான்.
சந்தியாவை பற்றி தெரியாததால் அவளின் நலனை மனதில் வைத்து தான் அறிந்து உணர்ந்த காதலை தன் மனத்திற்குள்ளே புதைத்துக்கொண்டு, ‘சந்தியாவின் வாழ்வு தன்னால் வீணாகியதாக இருக்கக் கூடாது’ என்று திருமணத்தை ஏற்க மனதை திடப்படுத்திக் கொண்டான்.
ஆனால் மறுநாள் காலை நடந்ததெல்லாம் அவனின் காதல் கை சேர்ந்திட நடந்திட்ட நிகழ்வுகள்.
அதில் சூர்யாவின் பங்கை நினைத்தவனுக்கு சிரிப்பு வந்தது. முயன்று கட்டுப்படுத்தினான்.
மனதிலிருந்த ரணத்தையெல்லாம் மொத்தமாக தன்னவனிடம் கொட்டி விட்டதால் மொத்த பாரமும் நீங்கியவளாக, சலசலத்துக்கொண்டிருந்த அவளின் மனம் அமைதி அடைந்தது.
ஏதோ ஓர் வேகத்தில் பேசிவிட்டாலும், அவன் என்ன நினைப்பானோ! இப்போது தன்னை என்ன சொல்லப் போகிறானோ என்கிற சிந்தனையோடு நிரலி ஆதியை பார்க்க,
அவனோ, மெத்தையில் சம்மணமிட்டு தொடையில் கை ஊன்றி, முகத்தை உள்ளங்கையில் தாங்கியவனாக அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
ஆதியின் பார்வை ஏதோ கேள்வியை அவள் முன் வைக்க, அவளுக்கு பொருள் புரியவில்லை.
தான் இவ்வளவு பேசியதற்கு ஏதாவது அவன் பக்க நியாயமான காரணம் சொல்லுவானென்று எதிர்பார்த்து, அவளும் சளைக்காது அவனின் பார்வையை எதிர்கொண்டாள். நிமிடங்கள் பல கடக்க, ஒருவரின் பார்வையிலிருந்து மற்றவரின் பார்வை விலகும் வழி காணும்.
ஆதி வாய் திறப்பவனாக இல்லை.
நடந்ததை மாற்ற முடியாது. ஆனால் நிகழ்காலத்தை காதலோடு தனது மனைவியோடு வாழ ஆசை கொண்டான். நடந்தவைகளை சொல்லி புரியவைப்பதைவிட தன்னுடைய காதலே அவளுக்கு அதனை புரிய வைக்க வேண்டுமென்று நினைத்தான்.
அதனால் தான் நிரலி வந்தது முதல் அவளின் மீதான தன்னுடைய காதலை ஒவ்வொரு செயலிலும் அவளுக்கு காண்பித்தான். தனக்குள்ளே உழன்று கொண்டிருந்தவளுக்கு அவனின் செயலுக்கான காரணத்தை உணர முடியவில்லை.
நிரலிக்கும் தெரியும், ஆதியின் அன்றைய செயலுக்கு அவனிடத்தில் தகுந்த காரணமிருக்குமென்று, அதனை அவன் வாய் வார்த்தையாக எதிர் பார்த்தவளுக்கு ஏமாற்றமே!
ஏமாற்றம் தந்த சுணக்கத்தோடு ஆதியை முறைத்துக்கொண்டே, தொம்தொம்மென்று வேக வேகமாக அடியெடுத்து வைத்து மெத்தைக்கு அருகில் வந்தவள் ஆதியின் மறுபுறம் அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டாள். நேரம் சென்றதே தவிர இருவரும் ஒருவரையொருவர் யோசித்தவாறே இருந்தனர்.
ஆதிக்கு தெரியும் அவள் உறங்கவில்லை என்று, ஆதலால் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசினான்.
“பிடிக்குதோ இல்லையோ கல்யாணமென்பது ஒருமுறை தான். பிடிக்கலங்கிறதுக்காக இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளும் ஆளில்லை நான். அதேபோல் தாலி கட்டிய பெண்ணை விலக்கி வைக்கும் ஆண் நானில்லை. உனக்கான காரணத்தை நீதான் அறிந்துகொள்ள வேண்டும்.
இவ்வளவு பேசினியே, நான் தான் ஏதோ கோபம்… அந்நேரம் உன்னை கூப்பிடக்கூடத் தோணல வந்துட்டேன். உனக்கு என்னைப்போல எந்த காரணமும் இல்லை தானே! நீ என்னைத் தேடி வந்திருக்கலாமே! ஏன் வரல?”
ஆதியின் கேள்விக்கு நிரலியால் பதில் சொல்ல இயலவில்லை.
இந்த நான்கு வருடத்தில், ஆதி ஒருமுறையாவது தன்னை வந்து பார்த்திட மாட்டானா? என்னோடு வந்துவிடு என்று அழைத்திட மாட்டானா? நிரலி நினைக்காத நேரமில்லை. ஆனால் ஒருமுறை கூட நாமாவது அவனைத்தேடி செல்வோமேன்று அவளுக்குத் தோன்றவில்லை.
‘அவன் கேட்பது உண்மைதானே எனக்கு ஏன் அப்படி தோன்றவில்லை.’ சுய அலசலில் ஈடுபட்டிருந்தாள்.
‘தானும் சாதாரணப் பெண்ணைபோல் ஈகோவிற்குள் இருந்துவிட்டேனோ!’ நினைக்கும்போதே அவ்வளவு வேதனையாக இருந்தது.
“சண்டை வந்தால் கணவன் தான் முதலில் இறங்கி வரவேண்டுமென்கிற மென்டாலிட்டி கொண்ட சாதாரண மனைவியின் எண்ணப்போக்கில் நாட்களை வீணாக்கிவிட்டேனோ!” நிதர்சனம் புரிய மிகவும் வருந்தினாள்.
‘அவர் அழைக்காவிட்டால், அவர் கட்டிய தாலி போதுமே அவருடன் நான் வந்து வாழ்வதற்கு… அவர் மீதான காதல் மலையளவு இருந்தும் ஏதோ ஓரிடத்தில் தவறிவிட்டேனே!’ ஊமையாக அரற்றினாள்.
ஆதி அவ்வாறு கேட்டதுமே நிரலி அவன் புறம் திரும்பியிருந்தாள். நொடிக்கு ஒருதரம் மாறும் அவளின் முக உணர்வுகளை சரியாக படித்துக் கொண்டிருந்தான். அவளின் வருத்தம் அவனையும் வருந்தச் செய்தது.
‘என்மீது காதலிருந்தும், நீ ஏன் இன்னும் என்னிடம் வரவில்லை… உனக்குத் தோன்றவில்லையா?’ மனதோடு நிரலியிடம் ஆதி கேட்காத நாளில்லை.
“உன்னை வருந்தச்செய்ய நானிதை கேட்கவில்லை. ஆனால் உனக்கும் என்னிடம் கணவனென்ற உரிமை எழாமல் தானே, அங்கேயே இருந்துவிட்டாய்?” அவளின் மனதை தூண்டுவதற்காக வேண்டுமென்றே கூறினான்.
பட்டென்று அவளின் கண்களிலிருந்து நீர் கொட்டியது. உள்ளுக்குள் தன்னவளின் கண்ணீர் கொண்டு வருந்தினாலும் சலனமற்று இருந்தான்.
“உனக்கு என்னிடம் வர வேண்டுமென்று தோன்றவில்லை தானே?”
ஆதியின் இந்த கேள்விக்கு நிரலி விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதில் “இப்போது தான்தான் உன்னிடம் வந்திருக்கிறேன்” என்ற பொருள் பொதிந்திருந்தது. அது ஆதிக்கும் புரிந்ததோ!
“இப்பவும் நீயா இங்கு வரவில்லை. நான்தான் உன்னை வரவைத்தேன்.”
நிரலியின் பார்வைக்கு பதில் கூறியவன் மேற்கொண்டு பேசாது கண்களை மூடி உறங்க முயற்சித்தான். இரண்டு நிமிடங்கிளில் உறங்கியும்விட்டான்.
நிரலிதான் ஆதி பேசியதிலும், சொல்லியதிலும், கேட்டதிலும் குழம்பி உறக்கம் தொலைத்தாள்.
Epi 9
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
12
+1
1
+1
சூப்பர் சண்டை